பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 12 mars 2011

இன்றைய அறிமுகம்



நெல்சன்  மண்டேலா



                       உலக  மக்களால் இன்றளவும்  பெரிதும்  மதிக்கப்படும்  தலைவர்களில் ஒருவரும்,  நிறவெறிக்கு  எதிராகப்  போராடி நீண்டகாலம்  கொடுஞ்சிறையில்  வாடிய  தென்  ஆப்பிரிக்க  முதல் குடியரசுத் தலைவருமான  நெல்சன் மண்டேலா  கறுப்பர் இன மக்களின் விடிவெள்ளி  ஆவார்.
                        மண்டேலா 18-7-1918  அன்று  தென் ஆப்பிரிக்காவில் குளு என்னும்  கிராமத்தில்  பிறந்தார் இவரது தந்தைக்கு நான்கு  மனைவிகள்  பதின்மூன்று  பிள்ளைகள். இந்தப்  பெரிய  குடும்பத்திலிருந்து  முதன்முதலில்  கல்விகற்கப்  பள்ளிக்குச் சென்ற ரோபிசலா மண்டேலா  வுக்கு  இவரது  ஆசிரியரால்  நெல்சன்  என்னும் பெயர்  சூட்டப்பட்டது.
                        இளமையில் கல்வியோடு  சண்டைக்கலையையும்  பயின்ற  மண்டேலா  தொடக்
கத்தில்  குத்துச்சண்டை  வீரராக மக்களால் அடையாளம்  காணப்பட்டார்; கல்வியறிவைப்  பெறுவதில்  பெரிதும்  நாட்டம் கொண்ட இவர் ஜோகன்ஸ்பர்க்கில்  சட்டக்கல்வியும், லண்டன்  மற்றும்  தென் ஆப்பிரிக்கா பல்கலைக்கழகங்களில்  மேற்கல்வியையும்  தொடர்ந்தார்.
                          1948  ஆம்  ஆண்டில் தென்னாப்பிரிக்காவின்  ஆட்சி  அதிகாரங்களைப்  பொறுப்  பேற்ற அரசு, வன்முறை  நடவடிக்கைகளைக்  கட்டவிழ்க்கத்  தொடங்கியது. இனவாதமும்,  அடக்குமுறையும்  அரசின்  ஆதரவுடன்  அரங்கேறுவதை  அறிந்த மண்டேலா  அரசின்  இன  வாத  கொள்கைகளுக்கு  எதிராக; மகாத்மா காந்தியின்  கொள்கைப்படி  அறவழிப்  போராட்  டங்களைத் தலைமையேற்று  நடத்தினார். இனவெறித் தாக்குதல்களுக்கு  ஆளாகிய கறுப்பின  மக்களுக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்காகக்  குரல்  கொடுத்தார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுக் கட்சியின்  தலைவராகப் பொறுப்பேற்று  இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். அதன்விளைவாக, 1956
 டிசம்பரில்  தேசத்துரோகக்  குற்றம் சாட்டப்பட்டு மண்டேலாவும் அவரது   150  தோழர்களும்  கைது செய்யப்பட்டு மிகக் கடுமையான  எச்சரிக்கைகளின்  பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
                           1958 ஆம் ஆண்டு மண்டேலா,வின்னி மடிகி லேனா என்பவரை  மணந்தார். வின்னி மண்டேலா, தலைவரின் கொள்கைகளுக்காகப்  போராடி வந்தார்.,ஆண்டாண்டு  காலமாகத்  தொடர்கின்ற  ஆட்சியாளர்களின்  அடக்கு முறைகளுக்கும்  வன்கொடுமை களுக்கும்  எதிரில் அறவழிப் போராட்டம் தோல்வியடைந்ததால், ஆயுதப் போராட்டமே  இறுதிவழி  என உணர்ந்த  மண்டேலா 1961  ஆம் ஆண்டு  ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின்  ஆயுதப்படைத் தலைவர் ஆனார்; வெளிநாட்டு நட்புச் சக்திகளிடமிருந்து பணம் மற்றும்  இராணுவ  உதவிகளைப் பெற்றுத் தென்னாப்பிரிக்க  அரசின் இராணுவத்தின் மீதும்  இராணுவத்  தளவாடக் கிடங்குகள் மீதும்  கொரில்லா போர்முறைத் தாக்குதல்களை  ஒருங்  கிணைந்து  நடத்தினார். 
                           இனவெறிக்கு எதிரான இவரது  போர் நடவடிக்கைகள் மனித உரிமைகளை  மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்க அரசும் இவர்மீது  பயங்கரவாத முத்திரை குத்தி  மண்டேலா அமெரிக்க நாட்டுக்குள் நுழைவதற்குத்  தடை விதித்தது   2008 சூலைவரை   இத்தடை  நீடித்தது  5-8-1962  அன்று, மண்டேலா தென்னாப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாகக் குற்றம் சாட்டி போலிசாரால் கைதுசெய்யப்பட்டார். 12-6-1964  அன்று அவருக்கு  ஆயுள்தண்டனை  விதிக்கப்பட்டது. அப்போது அவர்வயது 46 தென்னாப்பிரிக்க அரசு பல  ஆண்டுகள்  அவரைத்  தனிமைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்தது. மனைவியைச்  சந்திப்பதற்கும்  தடைவிதிக்கப்பட்டது. 
                           மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற  கோரிக்கை உலகம் முழுதும்
எழுந்தது. மண்டேலாவை  விடுதலை செய்யும்படி வற்புறுத்தி  மண்டேலாவின் மனைவி;  வின்னிமண்டேலா  தலைமையில் ஆர்ப்பாட்டங்களும்; ஊர்வலங்களும் தொடர்ந்து  நடந்து  வந்தன. தென்னாப்பிரிக்காவில்  ஆட்சி மாற்றம் ஏற்பட்டுப்  புதிய அதிபராக டிகிளார்க்  பதவிக்கு  வந்தார்.  மண்டேலாவின்  விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது.  அதிபர் டிகிளார்க்  அறிவித்தவாறு  1990  ஆம் ஆண்டு பிப்பிரவரித்  திங்கள் 11 ஆம்  
நாள் மாலை நெல்சன் மண்டேலா27 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர்  விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர்வயது 71.

                          மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா  சார்பாக, பிரதமர் வி.பி.சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலா  விடுதலையானதும்  பிரதமர் வி.பி. சிங் ,அவருக்கு எழுதிய பாராட்டுக் கடிதத்தில்,"உங்களது  சுதந்திரப்  போராட்டத்திற்கு  இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும்." என்று குறிப்பிட்டிருந்தார். உலக சமாதானத்துக்காக நெல்சன் மண்டேலா ஆற்றிய சேவைகளைப்  பாராட்டி, உலகின் பல நாடுகளும் பல்வேறு விருதுகளை வழங்கிக்   கௌரவித்தன. இந்திய அரசும்  1990 ஆம்  ஆண்டு  அவர் சிறையில் இருக்கும்போதே  "பாரத ரத்னா" என்னும் உயரிய  விருதினை வழங்கிச் சிறப்பித்தது. 1993 ஆம்  ஆண்டில் உலக சமாதானத்திற்கான "நோபல்
பரிசு" மண்டேலாவுக்கு  வழங்கப்பட்டது  குறிப்பிடத்தக்கது.
                            மண்டேலாவின் தியாகம் வீண்போகவில்லை. அமைதியான முறையில் புதிய தென் ஆப்பிரிக்கக் குடியசு மலர்ந்தது. 10-5-1994  அன்று நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக் காவின்  முதல் குடியரசுத் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப் பட்டார். தென்னாப்பிரிக்கக் கறுப்பின மக்களின் நலனுக்காகப் பாடுபட்டுக் குடியரசு ஆட்சியை மலரச் செய்த மாபெரும் தலைவர் திருமிகு. நெல்சன் மண்டேலாஅவர்கள்,தென்னாப்பிரிக்காவில்",ஊச்டன்தோட்டம்"
 இல்லத்தில் தனது முதுமைக்காலத்தில்  அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவரது  தியாகமும் புகழும் உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை!
                               
                                                                                                                             -  வே.தேவராசு                                 

எண்ணப்பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம். "மகளிர் தின" வாழ்த்துக்களுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இந்த மகிழ்ச்சி உள்ளார்த்தமானதா எனில்  உடன் இசைய இயலவில்லை. வெறும் ஒரு தினத்தை ஒதுக்கிவிடுவதால் அந்த நாள் நினைவுறும் மாற்றம் வந்துவிடப்போவதில்லை. அந்த அளவுக்கேனும் மதித்திருக்கிறார்கள் என மகிழ்வுறலாம். அவ்வளவே! ஊன்றிப்பார்த்தால் நலிவுற்றவர்களுக்கே இம்மாதிரி நாட்கள் ஒதுக்கப்பட்டி ருப்பதைக் காணலாம்."குழந்தைகள்","தொழிலாளர்கள்" ஏனையோரும் இந்த ரகமே!

சமுதாயத்தில் இன்னும் இவர்கள்  நிலை உயர்த்தப்பட வேண்டியவர்கள்   
 என்பதையே இது காட்டுகிறது. அதாவது சமூக மாற்றம் தேவை! அது எப்படிக்கிடைக்கும் என்பதை ஆலோசிப்பதை விடுத்து, ஒரு நாளை ஒதுக்கிவிட்டதோடு வாளாவிருத்தல் சுயநலத்திற்கு ஒப்பானதே. பொதுவாக  பெண்களை மதிக்க வேண்டும்; குழந்தைகளிடம் அன்பு காட்ட வேண்டும்; ஏழைகளிடம் பரிவு கொள்ள வேண்டும் என்பதோடு நிறுத்திக் கொள்வதில் பயனில்லை.

இந்த மாற்றம் வர, மனித மனங்கள் மாற வேண்டும். அதற்கு விரிந்து பரந்தநோக்கும், நேயமும் வேண்டும். தான், தனது என்ற குறுகிய வட்டத்தை  
உடைத்தெறிய வேண்டும். இந்நிலை வர கீதையில் காணப்படும் கீழ்கண்ட வரிகள் நிச்சயம் உதவும்:

"எதை நீ கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு? எதை நீ படைத்தாய் அது வீணாவதற்கு? எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடைய தாகிறது".

அகன்ற பார்வையும், அணைக்கும் கரங்களும், அனைவரையும் சமமாகக் 
 காணும்
 விவேகமும்  வந்துவிட்டால்   வாழ்வில் சமத்துவமும் தன்னால் பிறக்கும்.

துன்பத்தில் உழல்பவர்க்கோ, மனவலிமை கிடைக்க வாழ்வை வேறொரு
நோக்கில் காணும் பக்குவத்தை வரும் வரிகள் தரலாம்:

"நான் வலிமை கேட்டேன். கடவுள் வலிமை பெற துன்பத்தைக் கொடுத்தார்.
நான் ஞானத்தைக் கேட்டேன். அவர் அதைப் பெற சிக்கலைக் கொடுத்தார்.
நான் செல்வத்தைக் கேட்டேன். அவர் உழைக்க அறிவும் ஆற்றலும் தந்தார்.
நான் துணிவைக் கேட்டேன். அவர் கடந்து வர அபாயங்களைக்  கொடுத்தார்.
நான் அன்பைக் கேட்டேன்.  அவர் அன்பு காட்ட வாய்ப்பளித்தார்.
நான் கேட்டது எல்லாம் எனக்குக்  கிடைத்து விட்டன".

திருமதி சைமன்

இணையமெனும் இனியவலை


மின்னஞ்சல் - தொடர்ச்சி


மின்னஞ்சல் என்றால் என்ன? மின்னஞ்சல் அனுப்ப நமக்கெனத் தனியாக ஒரு கணக்கைத் திறப்பது, அதற்கான கடவுச்சொல் பற்றியெல்லாம் சென்றமுறை பார்த்தோம்  மின்னஞ்சல் வழியாக உங்கள் தொடர்புகளை மேம்படுத்திக் கொள்ள சில வழிமுறைகளை இங்குப் பதிவு செய்கிறேன்


ஒரே ஒரு இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு இன்றைய இணையச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதிருக்க  உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான தொடர்புக்கென ஒன்றும்  இணைய தேடல்களுக்கு ஒன்றுமாக வைத்துக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் அக்கவுண்ட்களை வெவ்வேறு நிறுவன சர்வர்கள் மூலமும் வைத்துக் கொள்ளலாம் மிகவும் முக்கியமானது எந்த மின்னஞ்சலுக்கு எந்தக் கடவுச்சொல் என்பதை மறந்துவிடலாகாது

  நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல்  சுருக்கமாக, தேவையான விபரங்களை மட்டும் தெளிவாகச் சொல்லட்டும். இதன் மூலம் உங்களுக்கும் இ-மெயில் அனுப்பப்பட்டவருக்கும் மின்னஞ்சல் வழி அனுப்பப்பட்ட செய்தி தெளிவாக இருக்கும்

  h r u?(how are you? ) போன்ற குறிப்புச் சொற்களை உறவினர், நண்பர்களிடம் மட்டுமே பயன்படுத்துங்கள்.

மின்னஞ்சலை சரியான முகவரிக்கு அனுப்புகிறீர்களா என்பதில் கவனமாக இருங்கள் ஏதோ நினைவில் தொடர்பில்லாத ஒருவருக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல் கால விரையத்தையும் ஏன் சில சமயங்களில் பிரச்சனைகளையும் தோற்றுவிக்க வாய்ப்புண்டு

நீங்கள் அனுப்பிய அஞ்சலை உரியவர் பார்த்தாரா.. அதற்கான பதில் எப்பொழுது வரும் என்று  யோசித்தே காலம்  கரைவதற்குப் பதில், நீங்கள் அனுப்பும் மெயிலிலேயே உங்களிடமிருந்து விரைவில் பதில் எதிர்பார்க்கிறேன் என்றோ  முக்கியமான செய்தியெனில்  தொலைபேசியில் அந்த நபரைத் தொடர்பு கொண்டோ அறிந்து கொள்ளுங்கள்.


மெயிலின் subject பகுதியில் சரியான வாக்கியங்களில் மடலின் பொருளைத் தெரிவியுங்கள். பொருள் பகுதியை மட்டும் படித்து மெயிலைப் பார்க்கலாமா.. வேண்டாமா.. எனத் தேர்ந்தெடுப்பவர்கள் பலர் உண்டு.


பொதுவாக மின்னஞ்களில்  எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் யாரும் கண்டுகொள்வதில்லை. அதுவும் நீங்கள் ஆன் லைனில் இருந்து மின்னஞ்சலைத்  தயாரிக்கும்பொழுது இண்டர்நெட் நேரத்தைக் குறைப்பதில்தான் உங்கள் கவனம் செல்லும்.  தெரிந்தவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப இது பொருந்தும் . முன்பின் தெரியாதவர்களுக்கு மெயில்களை அனுப்பும் பொழுது எந்தப் பிழைகளுமின்றி அனுப்புங்கள்.


  அலுவலக கடிதங்களில் அதற்கென உள்ள வரைமுறையைப் பயன்படுத்துவது நல்லது. மெயிலில் சரியான சொற்கள், எழுத்துக்களை இலக்கணப் பிழையின்றி எழுதியிருக்கிறீர்களா எனச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். word மற்றும் Gmail போன்ற பிரபலமான எல்லா இமெயில் சேவைகளும் check spelling என்ற வசதியைக் கொண்டுள்ளன. இந்த வசதியைப் பயன்படுத்தி நம் பிழைகளைத் திருத்தி அனுப்பலாம்

நீங்கள் இந்தியாவிலும், நிறுவன மேலாளர் வேறு நாட்டிலும் இருந்தால் இருவருக்குமான நேர வித்தியாசம் அறிந்து சரியான நேரத்தில் அனுப்புங்கள்.


மின்னஞ்சலுடன் சில கோப்புகளை(பைல்களை) அனுப்ப வேண்டியிருந்தால் பெறுபவரிடம் அதற்கான வசதிகள் (குறிப்பாக ஒரு மெகாபைட்டுக்கும் அதிகமாக அனுப்பும்பொழுது ) உண்டா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள் அல்லது இலவச கோப்பு பரிமாற்ற இணைய தளங்கள் (Free file hosting ) மூலம் அனுப்புங்கள்.

செய்தியை அனுப்பும் முன் கோப்புகள்  உங்கள் மின்னஞ்சலுடன்  இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்த்து அனுப்புங்கள்.


BCC (Blind Carbon Copy)  உபயோகித்தல்

 ஒரு இமெயிலை பலருக்கு அனுப்ப வேண்டி இருந்தால் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்களின்  முகவரிகளை To பகுதியில் போடுவதைத் தவிர்த்துவிடுங்கள் ஒருவரின் அனுமதி இன்றி அவரின் முகவரி  மற்றவருக்குத் தெரிவது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே To பகுதியில் நன்கு தெரிந்தவர்களின் முகவரியையோ அல்லது உங்களுடைய முகவரியையோ நிரப்புங்கள்,  BCC பகுதியில் மற்ற முகவரிகளையும் குறிப்பிடுங்கள்.



மின்னஞ்சலைப் பார்த்ததும் பதில் கொடுக்கும் பழக்கம் மிகவும் நல்லது


பதில் கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை :


ஒரு நாளைக்கு பல நூறு மெயில் பார்ப்பவர்களுக்கு, எந்தச் செய்திக்கு இந்த பதில் என குழப்பம் ஏற்படும். இதைத் தவிர்க்க நீங்கள் அனுப்பும் செய்தி எதற்கு பதில் என்பதை மெயிலுடன் இணைத்து அனுப்புங்கள். ;


உங்களுக்கு வந்த மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்க விரும்புகையில் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் Reply / Reply All என இரண்டு வசதிகள் உண்டு. இதில் எதனைப் பயன்படுத்துவது?  மெயில் அனுப்பியவருக்கு மட்டுமே பதில் அனுப்ப வேண்டும் எனில் ரிப்ளை பட்டனை அழுத்தி பதில்  எழுதி அனுப்பவும். ரிப்ளை ஆல் பட்டனை அழுத்தினால் அந்த கடிதத்தில் உள்ள அனைத்து இமெயில் முகவரிகளுக்கும் பதில் போய்ச் சேரும். இதனால் வீண் குழப்பம் ஏற்படலாம்


Forwarding to all
சிலர் தங்களுக்கு வந்த கடிதங்கள், படங்கள், துணுக்குகள் இவற்றை  மற்றவர்களுக்கு பார்வேர்ட் செய்வார்கள். இந்தப் போக்கு தேவையற்ற ஒன்று. இது  உங்கள் நண்பர்களுடைய இமெயில் முகவரிகளை மற்றவர்களிடம் அவசியம் இன்றிக் கொண்டு சேர்க்கும். இதில் பெரும்பாலும் ஸ்பாம் மெயில்களே அதிகம் பார்வேர்ட் செய்யப்படும்.


மின்னஞ்சல் வழி அனுப்பும் எல்லா செய்திகளையும் பதிவு செய்திட முடியும். எனவே ரகசிய தகவல் பரிமாற்றங்களுக்கு இது ஏற்றதல்ல.முக்கிய இமெயில்களை பேக்கப் செய்து வைத்துக் கொள்வது நல்லது. இவையும் சில டாகுமெண்ட்களைப் போல முக்கியமானவையே

கவனிக்க வேண்டியவை:

உங்கள் இல்லம் இல்லாமல்  இன்டர்நெட் மையங்களிலோ அல்லது உங்கள் அலுவலகத்திலோ உங்கள் மின்னஞ்சல்  அக்கவுண்ட்டினைப் பயன்படுத்துபவராக இருந்தால் பயன்பாட்டிற்குப் பின் உங்கள்  அக்கவுண்ட்டை முறையாக மூடிவிட வேண்டும். இல்லையேல் அடுத்து அந்த கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் இமெயிலைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில்  அந்தக் கம்ப்யூட்டரின் காஷ்   மெமரியைக் காலி செய்துவிடுவது நல்லது. இதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools> Internet Optionsஅங்கு இருக்கும் Clear History>" “Delete Cookies" and “Delete Files"என்ற மூன்று பட்டன்களிலும் கிளிக் செய்து ஓகே போடுங்கள்.

குறுக்கு வழியில் பணம் கிடைக்கும் என்று வருகிற மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம்

ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலை 30 பேருக்கு அனுப்புவதால் உங்களுக்குப் புண்ணியம் வந்து சேரும் என்று கூறும் இமெயில்களை உடனே அழித்துவிடுவது நல்லது. உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நேர விரயம்தான் ஆகும்.

உங்கள் நண்பரின் மின்னஞ்சலிலிருந்து சில பிஷ்ஷிங் இமெயில்கள் வரும். நண்பர் தானே என்று திறந்து அந்த செய்தியில் கூறியபடி செய்திட வேண்டாம். சில வைரஸ்கள் இது போல உங்கள் நண்பரின் கம்ப்யூட்டரில் அமர்ந்து கொண்டு அட்ரஸ் புக்கில் முகவரிகளைத் திருடி உங்கள் நண்பரின் இமெயில் முகவரியிலிருந்து வருவது போலவே பிஷ்ஷிங் மெயில்களை அனுப்பும்.


மின்னஞ்சலில் முறையாக ஸ்கேன் செய்திடாமல் எந்த அட்டாச்டு பைல்களையும் திறக்க வேண்டாம். இதில் அதிகக்  கவனம் தேவை

ஜிமெயிலில் (Gmail)  தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?


முதலில் ஜிமெயிலில் உங்களுக்கென்று ஒரு மின்னஞ்சல் கணக்கை திறவுங்கள் உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கின் பயனர் திரையின் வலப் பக்கம் மேலே உள்ள Settingsஐச் சொடுக்கிப் பின்னர் வரும் திரையில் Gmail display language-ல் தமிழைத் தேர்வு செய்து கீழே Save Changes எனும் பொத்தானை அழுத்திச் சேமித்தால் உங்கள் ஜிமெயில் கணக்கு முழுவதும் தமிழில் இருக்கும்.

அம்மா என்று  தமிழில் தட்டச்சு செய்ய ammaa  என்று டைப் செய்து space பட்டனைத் தட்டினால் அந்தச் சொல் தமிழில் வரும்


 லுhசியா லெபோ

அமைதி நிலவ


மன அமைதி நிலவ.....

எல்லோரையும் மன்னித்து விடு. ஆனால் உன்னை மட்டும் மன்னிக்காதே.
- ஷின்ட்டோ

இருட்டி விட்டதை எண்ணி கலங்காதே. இருள் வந்தால்தான் நட்சத்திரங்களை ரசிக்க முடியும். - சார்லஸ் எ பைர்ட்.

நல்ல விசயங்களை யாரும் கிசுகிசுப்பதில்லை. - ரஸ்ஸல்

நல்லது அல்லாதது என்று எதுவும் இல்லை, ஒப்பிட்டு பார்க்கும்வரை. - தாமஸ்.

பணம் என்பது சாதனையின் மடத்தனமான அளவுகோல். எனினும் வேறு பொதுவான அளவுகோல் நம்மிடம் இல்லை. - சார்லஸ்

கோபப்படும் நேரத்திலும் பாவம் புரியாதீர். - பைபிள்

சுருக்கமாக உரையாடு நிறைய செயல் படு. - சிவானந்தா

பிறரை பாராட்டுவதில் சிக்கனம் காட்டாதீர். - சடேபின்

முதல்வனாக இரு. அல்லது முதல்வனோடு இரு. - அல்லேக்சாண்டர் போப்

சிறிய செயல்களில் உண்மையுள்ளவனாக இருந்தால் பெரிய செயல்களுக்கு அதிகாரியாகலாம். - இயேசு

உலகத்திற்கு நீ வழங்குவது அதிகமாகவும், உலகிடமிருந்து ஏற்பது குறைவாகவும்  இருக்கட்டும். - வால்ட்டர் 

நீங்களும் நன்கு வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விடுங்கள். - ஸ்கில்லர் 

நல்ல செயல்களின் மூலம் பிறருக்கு வழிகாட்டியாக இரு. - இங்கர்சால் 

காலத்தின் மதிப்பு தெரிந்தால் வாழ்க்கையின் மதிப்பு தெரியும். - நெல்சன் 

கடந்த கால சோதனையின் சுருக்கம்தான் அனுபவம் என்பது. - ரஹேல்ப்ஸ்  
 

mercredi 2 mars 2011

குடிமைப்பயிற்சி


கடந்த மூன்று மாதங்களாக தவிர்க்க இயலாத காரணங்களால் தடைப்பட்ட இக்கட்டுரை  தொடர்கிறது.

குடிமைப்பயிற்சி :

ஆண், பெண் இருபாலரும் சொந்த  சாமான் சொத்துக்களை வாங்க முழு சுதந்திரம் உள்ளது என சட்டம் உறுதி செய்கிறது. வம்சாவழி  மற்றும் நன்கொடைக்கான சட்டங்கள் சமத்துவ கொள்கையின் அடிப்படையில் ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

தனி நபர் சுதந்திரம் :

தனிநபர்சுதந்திரபாதுகாப்புஒவ்வொருவருக்கும்  கீழ்கண்ட சுதந்திரங்களை  வழங்குகிறது.

தங்குதலுக்கான சுதந்திரம் (எனக்கு எங்கு விருப்பம் உள்ளதோ அங்கு நான் தங்கிக்கொள்வேன்.)
  
விருப்பம் உள்ளவர்களோடு வாழ சுதந்திரம் (எனக்கு யாரோடு விருப்பம் உள்ளதோ அவரோடு தங்கிக்கொள்ள எனக்கு சுதந்திரம் உள்ளது. வெவ்வேறு பாலின ஜோடி சேர்க்கையாக  இருந்தாலும் சரி, ஒரே பாலின ஜோடி சேர்க்கையாக இருந்தாலும் சரி).

மணந்து கொள்ளவும் அல்லது மணந்து கொள்ளாமல் இருக்கவும், குழந்தை பெற்றுகொள்ளவும்  அல்லது  குழந்தை பெறாமல் இருக்கவும் சுதந்திரம் .

உங்கள் வீட்டில் அனுமதி இன்றி நுழைய முடியாது. (சட்ட வரம்பை கடக்கும்போது மட்டும் இது பொருந்தாது.) உங்கள் பொருட்கள் அனைத்தும்  பாதுகாப்பாக இருக்கும்.

பணி சம்பந்தமான ரகசியம் மற்றும் கடித போக்குவரத்து ரகசியங்கள் (கடித மற்றும் தொலைபேசி கருத்து  பரிமாற்றங்கள் ) பாதுகாக்கப்படும். 

-தொடரும்-