பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 15 février 2012

எண்ணப் பரிமாற்றம்

                                  


அன்புடையீர்,

வணக்கம்.  உலகம் தன் பூரண எழிலோடு வண்ண மலர்ச் சோலையாய் விளங்கி வந்த நேரம்! அமைதியை இனிமையாகக் கலைத்து, இளந்தளிர்களினூடே தவழ்ந்து சலசலக்கும் தென்றல்! அதனுடன் போட்டியிட்டு தன் நீர்பரப்பின் ஓட்டத்தில் ஓசையிடும் அருவி! அதன் ஆவேச ஒலியைச் சற்றே தணித்து, தென்றலோடு இணைந்து இலயத்தோடு நடை பயிலும் நதி! பூக்களில் தேனருந்தி ரீங்கரிக்கும் வண்டு! சூழல் தரும் போதையில் கொஞ்சும் கிளி! இணை தேடி அழைக்கும் குயிலின்  ஏக்கக் குரல்! தன்னை மறந்து தோகை விரித்தாடும் மயில்!

ஆதி மனிதனை மட்டும் இயற்கை மவுனமாயிருக்க விடுமா! இப்படித்தான்  அவற்றோடு அவனும் குரல் கொடுக்க ஆரம்பித்திருப்பான்! மகிழ்ச்சியையும், காதலையும் வெளிப்படுத்த ஆரம்பித்த ஓசை, நாளடைவில் உள்ளத்து உணர்ச்சிகளை, அலை மோதும் ஆசைகளை, ஏமாற்றத்தை, எதிர் பார்ப்பை நம்பிக்கையை, தாபத்தைக் கொட்டும் "இசை" ஆகப் பரிணமித்திருக்கும்!

தமிழன் எதிலுமே ஆழ்ந்து சிந்தித்து கற்பனையின் எல்லையைத் தொடுபவன். இந்த மானுட வாழ்வுக்குப் பின் ... அவன் தொட்ட எல்லை கருணை வடிவான பரம்பொருள் ஆனது. அது அவன் மனதை நிறைத்து, எல்லாம்  ஒன்று என்ற பரந்த எண்ணத்தையும், எல்லாம் எல்லோருக்கும் என்ற விரிந்த நோக்கையும் அளித்தது. அச்சிகரத்தில் தான் படைத்த இசையையும் இறைவனுக்கே சமர்ப்பித்தான். எனவே அது தன்னால் உருவாக்கப்பட்டது என்று தனது சந்ததிகளுக்கு அறிவிக்கவும் மறந்து போனான்!

தமிழனின் நாடி நரம்புகளில் பாய்ந்த குருதியில் கலந்த தமிழிசையை, ஆழ்கடலின் ஆழத்தை அறிய விரும்பும் ஆசையில், கடலலையின் ஈரத்தைத் தொட்டிருக்கிறோம். அது வெறும் கடல் நுரையாய் இருக்காது என்றே நம்புகிறோம்!

திருமதி சிமோன்

கர்னாடக இசை

     

மனிதன் என்றுமே அன்றாடத் தேவைகளுக்காக போராடிக்கொண்டிருந்தாலும் , அவைகளின் நிறைவேற்றத்தில் மட்டுமே திருப்தி கொள்பவன் இல்லை! அவன் ஆன்ம நிறைவுக்கானத் தேடல் ஒரு புறம் அவனை அலைக்கழித்துக் கொண்டே இருக்கும், அது நிறைவேறும் வரை!  அந்த உந்துதல், மனம் அமைதி காணும் இடத்தில் முடிவு பெறும். அதற்கான முதலும் முடிவுமாக பிறந்தவையே எல்லாக் கலைகளும்! அவற்றில் ஊனுருக்கி, உள்ளம் உருக்கும் கர்னாடக இசை பற்றி:

 முதலில் தமிழ் நாட்டில் பெயரின்றி உலவி வந்த இசை வடிவம், மகாராஷ்டிர மன்னர்களால் ஆதரிக்கப்பட்டு வளர்ந்தபோது 'தென்னிந்திய இசை' என்று அங்கீகரிக்கப்பட்டபோதும், "கர்நாடக இசை" என்றே வழங்கப்பட்டது. வளமான, பலவித நுணுக்கங்களைக் கொண்ட, உலக மிகப் பழமையான பாரம்பரிய இசை இது. தென்னிந்தியர்களைப் பொருத்தமட்டில் இது வெறும் ஒரு மகிழ்விக்கும் கலை அல்ல. மனித உணர்வுகளைச் சமனப்படுத்தி, இறைவனை அடையும் மார்க்கத்தினை காட்டும் உயரிய வழி!

சாம வேத காலத்தில் இதன் அடிப்படை உருக்கொண்டதாகக் கூறுகிறார்கள். ரிக் வேத சமயத்தில் கோவிலில் பாடும் சங்கீதமாக ஞான உயர்வடைந்தது. யஜுர் வேதச் சூழலில் 3  முதல் 7  இசைக் குறிப்புகளைக் கொண்டு வீணையின் நாதமும் ஒரு சேர நிலைத்தது!

16  ஆம் நூற்றாண்டில் இந்துஸ்தானி இசையும், பெர்சியன், முஸ்லிம் இசைகளும் பரவியபோது, விஜய நகரப் பேரரசர்  இதை தஞ்சாவூரில் வளர்த்தார். கீர்த்தனை எனப்படும் பாடல்கள் இது முதல் உருவாகின.  18  ஆம் நூற்றாண்டில் மைசூர், திருவனந்தபுர மன்னர்களும் இந்தப் புனித இசையைப் பராமரித்தனர். 19  ஆம் நூற்றாண்டிலிருந்து "சபா" என அழைக்கப்படும் குழு சென்னையில் கர்னாடக இசையைப் பாதுகாத்து வருகிறது ! "கர்னாடக இசை விழா" ஒவ்வொரு வருடமும் மார்கழி-தை மாதத்தில் சென்னையில் நடைபெறுகிறது. பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் இசை விழா கொண்டாடப்படுகிறது.

கர்னாடக இசை,சுருதி-சுவரம்(ச,ரி,க,ம,ப,த,நி)-ராகம்-தாளம் இவற்றின் கலவையாக உள்ளது. எளிதாகக் கண்டுபிடிக்கக்கூடிய தத்துவ எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டது.

சப்த சுவரங்களின் பெயர்களும் அதன் தமிழ் பெயர்களும்

ஸ் - ஸட்ஜம் - குரல்
ரி - ரிஷபம் - உழை
க - காந்தாரம் - கைகிள்ளை
ம - மத்தியமம் - துத்தம்
ப - பஞ்ஜமம் - இளி
த - தைவதம் - விளரி
நி - நிஷாதம் - தாரம்

ஸ, ப -- ப்ருக்ருதி சுவரங்கள் (மாறுதல் இல்லாதது)
ரி, க, ம, த, நி -- விக்ருதி சுவரங்கள் (மாறுதல் உள்ளது)

ஸ -- ஸட்ஜம்
ரி1 -- சுத்த ரிஷபம்
ரி2 -- சதுச்ருதி ரிஷபம்
க1 -- சுத்த காந்தாரம்
க2 -- அந்தர காந்தாரம்
ம1 -- சுத்த மத்தியமம்
ம2 -- ப்ரதி மத்தியமம்
ப -- பஞ்ஜமம்
த1 -- சுத்த தைவதம்
த2 -- சதுச்ருதி தைவதம்
நி1 -- கைசிக நிஷாதம்
நி2 -- காகலி நிஷாதம்

சப்த சுவரங்களும் மிருகங்களின் ஒலியும்.....

ஸ -- மயிலின் ஒலி
ரி -- மாட்டின் ஒலி
க -- ஆட்டின் ஒலி
ம -- சிரவுஞ்சத்தின் ஒலி
ப -- குயிலின் ஒலி
த -- குதிரையின் ஒலி
நி -- யானையின் ஒலி

கட்டமைப்பு: வர்ணம்,கிருதி (பல்லவி, அனுபல்லவி, சரணம்), கீதம், சுவரஜதி, ராகம், தானம், பல்லவி, தில்லானா.


வாத்தியக் கருவிகள்: வீணை, வயலின், சித்திர வீணா, நாதஸ்வரம், மிருதங்கம், தம்புரா, புல்லாங்குழல், கதம், கஞ்சீரா, மோர்சிங், ருத்திர வீணா, மண்டலின், தவில், சுருதிப் பெட்டி.


முன்னரே முடிவு செய்யப்படாத கணநேர நிகழ்வுகள் இதில் உண்டு. ராக ஆலாபனை, நிரவல், கல்பனாஸ்வரம், தனி ஆவர்த்தனம் போன்றவை சுவையைக் கூட்டுகின்றன.

இசை அமைப்பாளர்கள்: தியாகராஜர் (தெலுங்கு) 1759  - 1847
                                                   முத்துஸ்வாமி தீட்சதர்(சமஸ்க்ரிதம்) 1776 -1827
                                                    சியாமா சாஸ்திரி 1762 -1827

"Trinity of Carnatic Music " சார்பில் அருணாச்சலக் கவி முதல் கோபாலக்ருஷ்ண பாரதி, சுப்ரமணிய பாரதி, பாபநாசம் சிவன் (தமிழ்-சமஸ்கிருதம்) வரை பலர் ஈடுபட்டுள்ளனர்.


தனக்கெனத் தனி கௌரவத்தையும், இடத்தையும் பெற்றுள்ள கர்னாடக இசை சினிமாவிலும் ஊடுருவி பாடல்கள் தரத்தை உயர்த்தியுள்ளது.


திருமதி சிமோன்

    

இன்றைய அறிமுகம் - தியாகையர்


இசையால் இறைவனை வசமாக்கி, அவனில் கரைந்து, அவன் அருளில் மூழ்குவது என்பது மனதுக்கு இசைவான ஒரு இனிய அனுபவம்.

கர்னாடக இசை மூலம் இறை வழிபாடு செய்யும் "நாத யோகி"களாக விளங்கியவர்களில் ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர், புரந்தர தாசர், மீரா பாய், கபீர்தாஸ், குருநானக், தியாகையர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் .

தியாகராஜ சுவாமிகள் (1767 - 1848 ) திருவாரூரில் திவ்விய நாத பஜனை செய்யும் ஒருவருக்கு மூன்றாம் மகவாகப் பிறந்தார். தன் எட்டாம் வயதில் திருவையாறில் உபநயனம் செய்விக்கும்போது , தந்தையிடம் காயத்திரி மந்திரம்,ராம தாரக மந்திரம் போன்றவற்றை உபதேசம் பெற்றார். அன்று முதல் பூஜை செய்து வரலானார்.  தாயிடம் ராமதாசர், புரந்தரர் கீர்த்தனைகளைக் கற்றார். சமஸ்கிருதக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்ததோடு ஜோதிடமும் கற்றார்.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜியிடம் அரசவை வித்வானாக இருந்த வேங்கட ரமனையாவிடம் சங்கீதம் கற்றார். அரசவையில் பாடி பாராட்டும் பெற்றார். தினமும் ராம நாம ஜபம் செய்யும் வழக்கமுள்ள இவர், ஒரு நாளைக்கு லச்சத்து இருபத்தையாயிரம் வீதம் தனது 38  வயதுக்குள் 96  கோடி ராம நாமம் உருவேற்றினார். அப்படி ஒரு முறை உள்ளம் உருகி ஜெபிக்கும்போது கதவு தட்டிய சத்தம் கேட்டது. திறந்து பார்த்தபோது ராம லக்ஷ்மணர் விசுவாமித்திரர் நடத்திய யாகத்துக்குச் செல்லும் காட்சியைக் கண்டார். "ஏல நீ தயராது" என்ற புகழ் பெற்ற பாடலை அவர் பாடியது இச்சந்தர்ப்பத்தில்தான் !

தந்தை இறந்தபின் சொத்துக்களைப் பறித்துக்கொண்டு சகோதரர்கள் அவரை விரட்டி விட்டனர். ராம விக்ரகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு கூரை வீட்டில் குடியேறிய தியாகையர் உஞ்ச விருத்தி செய்து காலம் கழித்தார். ஒரு முறை சீடன் ஒருவனைக் கோபித்தபோது, 'ராம நாமத்தை உச்சரிக்கும் வாயால் கோப வார்த்தைகளைப் பேசக் கூடாது' என்ற மனைவியின் பேச்சைக் கேட்டு தவறை உணர்ந்தவராய், "சாந்த முலேக சவுக்கியமுலேது"  என்றப் பாடலைப் பாடினார். மனைவியின் தூண்டுதல் பேரில் "சம்போ மகாதேவ", "சிவே பாஹிமாம்" போன்ற மற்றக் கடவுளரையும் துதிக்கும் பாடல்களை இயற்றினார்.

இவரது பக்திப் பாடல்கள் மக்களைக் கவரவே இவர் புகழ் பரவலாயிற்று. இதைக் கண்டு பொறாமை கொண்ட  இவரது மூத்த சகோதரன் இவர் எழுதி வைத்திருந்த சுவடிகளை எரித்ததுமின்றி ராம விக்ரகத்தை காவிரியில் எறிந்து விட்டான்.  மிக வருந்திய தியாகையர் ராமனிடமே முறையிட,கனவில் ஆற்று மணலில் விக்ரகம் புதைந்துக் கிடப்பதைக் கண்டார்.  மகிழ்ச்சி மீதூர "தொரிகிதுவோ" (நீ எப்படி மீண்டும் கிடைத்தாயோ) எனப் பாடினார் !

சரபோஜி மன்னன் தன்னைக் குறித்துப் பாடக் கேட்டபோது மறுத்து, "நிதி சால சுகமா? ராமுனி சந்நிதி சேவசுகமா?"  என இவர் பாட, சரபோஜியே மாறுவேடத்தில் நின்று அதை ரசித்தாராம் ! இதைப் போலவே திருவிதாங்கூர் மன்னர் சுவாதி திருநாளில் அழைக்க, பாட மறுத்த பக்திமான் இவர். திருப்பதி, காஞ்சி, மதுரை போன்ற இடங்களில் இவரது இசை மழைப் பொழிந்துள்ளது.  இறந்த ஒருவனை கீர்த்தனைப் பாடி உயிர் பெறவும் செய்துள்ளார் !

பத்து நாட்களுக்கு முன்பே தாம் இறைவனை அடையப் போவதாகக் கனவு கண்டார்.  இதனை "கிருபை நெல" என்ற கிருதியில் விவரித்தார்.பகுள பஞ்சமி தினமொன்றில் பஜனைகளைக் கேட்டவாறே நாத ஜோதியாய் இறைவனில் கலந்தார் இவரது குருவின் சமாதிக்கருகில் தகனம் செய்யப்பட்டார். பெங்களூர் நாகம்மா என்பவர் ஆயிரத்து தொள்ளாயிரத்து  இருபத்தி ஐந்தாம் ஆண்டு திருவையாறில் இவருக்காகக் கட்டிய சமாதியில் இன்றும் "தியாகராஜ ஆராதனை" தூயக் கலைவிழாவாக நடைபெறுகிறது.

வால்மீகி தியாகராஜராக அவதரித்தார் என்று நம்பப்படுகிறது. ராமாயணத்தை வால்மீகி 2400  சுலோகங்களில் பாடினார். தியாகராஜர் 2400  கீர்த்தனைகளில் ராம சரிதத்தைப் பாடியுள்ளார். தியாக பிரம்மம் என்று இவர் போற்றப்படுகிறார். சங்கீத மும்மூர்த்திகளில் இவர் ஒருவர். தென்னிந்திய இசையை நிலைக்கச் செய்தவர். அபூர்வ ராகங்களையும், இலக்கணங்களையும் இயற்றியவர். இவரது பாடல்கள் திறமையும் கற்பனையும் நிறைந்தவை. ஒரே ராகத்தில் பல கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். 

இவரது பக்தி மேலீட்டால் நாரதர் சன்யாசி வேடத்தில் தோன்றி, "ஸ்வரார்ணம்" என்னும் சங்கீத கிரந்தத்தை அளித்ததாகவும் கூறுகிறார்கள். ஒரு முறை திருடர்களிடம் அகப்பட்டுக் கொண்டபோது,ராம இலக்குவர் சேவகர் வடிவில் வந்து காப்பாற்றினார்களாம் ! இத்தகு தெய்வ தரிசனம் பெற்ற ஒருவர் என்பதாலேயே இத் தெய்வீக இசையும் அவரிடம் குடிகொண்டது போலும் !

பிரகலாத பக்தி விஜயம், நௌகா சரித்திரம் போன்ற இசை நாடகங்களும் படைத்துள்ளார். பல கிருதிகளை இயற்றியதோடு, அவைகளை சங்கதிகள் மூலம் அழகாக்கினார். இவரது பாடல்கள் பக்தி ரசத்தில் உள்ளம் உருக்கும் உருப்படிகள் கொண்டவை. 

இந்திய இசை வரலாற்றில் அதிக சீடர்கள் பெற்றவர் என்கிறப் பெருமையும் இவருக்குண்டு !

தணிகா சமரசம் 

நினைவில் நிற்கும் முகங்கள்

எந்தக் கலையாக இருந்தாலும் அதன் எல்லையைக்  கடந்தவர்கள் ஒருசிலராகத்தான் இருப்பார்கள். அவர்களைக்  காலமும், சரித்திரமும் என்றும் மறப்பதில்லை. ஏனெனில் அக்கலைக்கு அங்கீகாரமும், வளர்ச்சிப் பாதையும் அவர்கள் வித்திட்டவை. தெய்வீக இசையான கர்னாடகக்  கலைஞர்களின் முகப் பொலிவினைக் காணும்போது, அந்த அழகு இசை தந்த வரமோ எனத் தோன்றுகிறது.


 

எம்.எஸ். சுப்புலட்சுமி (1916 - 2004 )  "பாரத ரத்னா" பட்டம் வாங்கிய ஒரே இசைக் கலைஞர்(1998 ). "ராமன் மக்சய்சே " விருது பெற்ற முதல் இந்தியர் (1974 )

 தாய் சண்முகவடிவாம்பாள் வீணையிலும், பாட்டி அக்கம்மாள் வயலினிலும் தேர்ந்தவர்கள். முதலில் இவர்களிடம் பயின்று, பின்னர் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரிடம் கற்றார். பிறகு பண்டிட் நாராயண் ராவ் வியாசர், டாக்டர் நெடுனுரி கிருஷ்ண மூர்த்தி (சமஸ்கிருதம், தெலுங்கு), காரைக்குடி சாம்பசிவ ஐயர், மழவராயனேண்டல் சுப்பராம பாகவதர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ஆகியோரால் பட்டைத் தீட்டப்பட்டார்.

13  வயதில் முதன்முதல் சென்னை மியூசிக் அகாடெமியில் பாடினார். பின்னர் பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் பாடியுள்ளார்! திரைப் படங்களிலும் நடித்துள்ளார். இந்திய கல்சரல் அம்பாசடர் ஆக வெளி நாடுகளுக்கு பயணித்துள்ளார்.

அடைந்த சிறப்புகள்:
"எடின்பர் இன்டர்நேஷனல் பெஸ்டிவல் ஆப் மியூசிக் & ட்ராமா-1963  
"கார்னெகி ஹால், நியூ யார்க், யு என் ஜெனரல் அச்செம்ப்லி-1966
ராயல் ஆல்பர்ட் ஹால், லண்டன்-1982
பெஸ்டிவல் ஆப் இந்திய இன் மாஸ்கோ-1987


"பத்ம பூஷன்"  - 1954
சங்கீத் நாடக் அகாடமி அவார்ட் - 1956
சங்கீதக் கலாநிதி - 1968  (முதல் பெண்மணி)
பத்ம விபூஷன் - 1975
காளிதாஸ் சம்மான் - 1988
இந்திரா காந்தி அவார்ட் - 1990
திருமலை திருப்பதி தேவஸ்தான ஆஸ்தான வித்வான்
இதன்றி பல பல்கலைகழகங்களின் "கௌரவப் பட்டம்" இவரை நாடி வந்தன.
இவரது வெண்கலச் சிலை 2006  இல் நிறுவப்பட்டது.

சாதனைகள்:

வெங்கடேச சுப்ரபாதம் (எச்.எம்.வி. ரெகார்ட்) மூலம் இவர் குரல் ஒலிக்காத இல்லம் தமிழ் நாட்டில் இல்லை! இதன் ராயல்டி தொகை வேதப் பாடசாலைக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் மூலம் அளிக்கப்படுகிறது.

200  சாரிட்டி நிகழ்ச்சிகள் மூலம் ஒரு கோடி ரூபாய் தானமாகக் கொடுத்துள்ளார்.

அவரது அழகு முகமும், இனிய குரலும் கர்னாடக இசைக்குக் கிடைத்த மறக்க முடியாத வரப்பிரசாதம்!

டி.கே.பட்டம்மாள்:(1919 - 2009 )


1947  ஆகஸ்ட் பதினைந்து நள்ளிரவு பாரதியின் "விடுதலை" கீதம் இவரது இனிய குரலில் தான் நாடெங்கும் ஒலித்தது.

முதல் தரப் பாடகி எனப் பெயர் பெற்றவர். முதல் தமிழ் சினிமாப் பாடகி!
குறிப்பிட்ட ஒருவர் என்று சொல்லமுடியாதபடி பலரிடம் கற்றார். முறைப்படி கற்காத போதே, பள்ளி டிராமாவில் இவர் பாடியப் பாட்டைக் கேட்டு கிராமபோன் கம்பனி ஒன்று இவரைப் பாட வைக்க, அறிமுகமானார்.

நாட்டுப் பற்று, பக்தி மிகுந்த பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார். இவரால் பாரதியின் பல பாடல்கள் உயிர் பெற்றன! காந்தி பற்றிய இவரது பாடல்கள் அவர் குரலில் பலரை அழ வைத்தன.

                                                                     

                                                          
                                                       எம்.கே. தியாகராஜ பாகவதர் 

காலம் - 1910  - 1959  சிறந்த சினிமா நடிகர், இயக்குனர்,தயாரிப்பாளர், எல்லவற்றையும் விடச் சிறந்த கர்னாடக இசைக் கலைஞர்.

சிறு வயதிலேயே இந்து மதப் பாடல்களை, பஜனைப் பாடல்களைப் பாடுவதில் தேர்ந்திருந்தார். இவரது குரலைக் கேட்டு கே.ஜி. நடேச ஐயர் "ஹரிச்சந்திரா" என்ற திரைப்படத்தில் வாய்ப்புக் கொடுத்தார். தன்னை இன்னும் நன்றாக உருவாக்கிக்கொள்ள விரும்பி ஆறு வருடங்கள் தியாகராஜர் மதுரை பொன்னுசாமி ஐயங்காரிடம் (வயலின்) இசை கற்றார்.

உச்ச ஸ்தாயில் பாடுவதில் வல்லவர். கர்னாடக அடிப்படையில் பக்திப் பாடல்கள் பல இன்னும் அவரை நிலை நிறுத்தியுள்ளன. பாபநாசம் சிவனுடன் பல பாடல்கள் பாடியுள்ளார்.

1920 இல் பாடி,  நாடக நடிகரானார்.  1934 இல் "பவளக்கொடி" திரைப்படம் அமோக வெற்றி அடைய, மொத்தம் 14  படங்கள் நடித்ததில் ஆறு பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது.  '44 இல் "ஹரிதாஸ்", பாட்டுக்காக சென்னையில் ஒரே தியேட்டரில் மூன்று வருடங்கள் ஓடியது. தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் இவரே.

துரதிர்ஷ்டவசமாக, லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கில் '44 இல் சிறைப்படுத்தப் பட்டார். மூன்று வருடங்களுக்குப் பிறகு நிரபராதியென விடுதலையானார்.
எனினும் அவர் புகழ் வாழ்வு அத்துடன் அஸ்தமித்துப் போனது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பொது சென்னை கவெர்னர் கேட்டுக்கொண்டதற் கிணங்க, மேடைகளில் பாடி, பெரும் தொகையை வசூலித்து பிரிட்டிஷாரிடம் அளித்தார். மகிழ்ச்சி அடைந்த அரசு "திவான் பகதூர்" என்ற பட்டத்தை அளிக்க முன் வந்த போது, அதை மறுத்து விட்டார். 
குறுகிய காலத்தில் தன் குரலால் எல்லோரையும் மகிழ்வித்த அந்தக் கலைஞர்,   
மின்னி மறையும் நட்சத்திரமாகவே விரைவில் மறைந்தும் விட்டார்.


திருமதி சிமோன்

இன்னிசை நாதம்

மொழி புரிகிறதோ இல்லையோ, இசை உள்ளத்தில் உணர்ச்சிகளை உருவாக்கி
பதனப்படுத்தி, இனம் புரியா இலயத்தில் தன்னை மறக்கச் செய்கிறது. அதற்கு வித்திடும் கலைஞர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். இத்தலைமுறையில் அவர்களில் ஒரு சிலர்:நித்திய ஸ்ரீ 


தாய் லலிதா சிவகுமார் இவருடைய முதல் ஆசிரியை. டி.கே. பட்டம்மாளுடைய மாணவியும், பேத்தியுமான இவர் இசைக் குடும்பத்தில் பிறந்த அதிர்ஷ்டக்காரர். தாய் வழிப் பாட்டன் பாலக்காடு மணி அய்யரான மிருதங்க வித்வான்.

1987  முதல் பாடுகிறார். 1990  இல் ஏ.ஐ.ஆர். பரிசும், "A" கிரேடு ஆர்டிஸ்ட் ராங்கும் பெற்றவர். "பாரத் கலாச்சார்" , 'யுவ கலா பாரதி' என்னும் பட்டத்தைத் தந்தது.
1994 இல் தமிழ் நாடு வெல்பேர் அசோசியேஷன் "இன்னிசை மாமணி" பட்டத்தால் கௌரவித்தது. "பெஸ்ட் கான்செர்ட் அவார்ட்", "பெஸ்ட் ப்ரோமிசிங் ஆர்டிஸ்ட்" என பலசிறப்புகள் வந்தடைந்தன !

வட நாட்டிலும், வெளி நாட்டிலும் சங்கீதக் கச்சேரிகள் பல செய்துள்ளார். பல ஆல்பங்கள் வெளியிட்டுள்ளார். பல சினிமாக்களிலும் இவர் குரலைக் கேட்கலாம் ! கோவையில் "பாபநாசம் சிவன் - எ. லெஜென்ட்" என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம்! 


சுதா ரகுநாதன் 


சென்னை வாசி. எம். ஏ. எகனோமிக்ஸ் பரிசு வாங்கி முடித்தவர். "அவுட் ஸ்டான்டிங் ஸ்டுடென்ட்" என்று இவர் வாங்கிய பட்டத்தை வெகு நாள் யாரும் பெற முடியாமல் இருந்தது. 

கர்னாடக இசையை, பாடகியான அம்மாவிடமே கற்றார்! 1977 இல் வித்வான் பி.வி. லட்சுமணன் ஆசிரியராக, மத்திய அரசின் உதவித் தொகைப் பெற்று, பயின்றார். பத்ம விபூஷன் சங்கீத கலாநிதி டாக்டர் எம்.எல் .வசந்தகுமாரியுடன்  முதல் கச்சேரி அரங்கேறியது.

பிரசார் பாரதி, சென்னை "டாப் ரேங்க் ஆர்டிஸ்ட்" என்ற பட்டத்தை வழங்கியது.
ஆல் இந்திய ரேடியோவும், தூரதர்ஷனும் முக்கியப் பங்களிப்பை இவருக்கு அளிக்கத் தவறுவதில்லை!

இது வரை 80 லட்ச ரூபாய்களை ஏழைகளுக்காக தந்துள்ளார். "சமுதாயா பவுண்டேசன்" என்னும் அமைப்பை 1999  ஜூலை ஆரம்பித்துள்ளார்.

இவர் உயர உயர ஏழைகளையும் உயர்த்த முற்படுவார் என்று நம்பலாம்.
                                                           
                                                                             

                                                             பி. உன்னி கிருஷ்ணன்


கேரளா 1966 இல் இந்த இசை வித்தகனைப் பெற்றது. சென்னை பல்கலைக் கழகத்தில் பி.காம். படித்து, '87  முதல் '92  வரை பாரிஸ் கண்பெக்ஸனரி லிமிடெட் கம்பெனியில் வேலை பார்த்துப் பின் முழு நேரப் பாடகரானார்.

12  வயதில் மேடையேறிய இவர் சேஷாத்ரியிடம் பாடம் கற்றார். "வீணை தனம்மாள் பாணி" யைப் பின்பற்றி சங்கீதக் கலாநிதிகள் டி.பிருந்தா, டாக்டர் தி.விஸ்வநாதன் ஆகியோரோடு பாடினார்.

சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல கர்நாடிக் பாடல்களைப் பாடியுள்ளார். பெர்மனென்ட் ஜட்ஜ் ஆக ஏர்டெல் "சூப்பர் சிங்கர்" டி.வி. ஷோவில் 
2006 -2008 -2010 -2011 இருந்திருக்கிறார். ஆசியாநெட் ஸ்டார் சிங்கர் 2008 . இதே வருடம் 'நோவேல் ஜாஸ் கான்செர்ட்' ஒன்றை திருவனந்தபுரத்தில் நடத்தினார்.

பெற்ற விருதுகள்:

தேசிய விருது பின்னணிப் பாடகர் 1994 . - கலைமாமணி தமிழ் நாடு - யுவ கலா பாரதி பாரத் கலாச்சார் - தேசிய விருது (உயிரும் நீயே) - நாத பூஷணம் தமிழ் நாடு - பெஸ்ட் ராகா அவார்ட் மியூசிக் அகாடமி - இசைப் பேரொளி அவார்ட் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் '98  - ஏ கிரேட் ஆர்டிஸ்ட் ஆல் இந்திய ரேடியோ 

அமெரிக்கா, லண்டன்,ஆஸ்ட்ரேலியா, நியுசிலாந்த்,சவுத் ஆப்ரிகா, பார் ஈஸ்ட்,
மிடில் ஈஸ்ட் போன்ற இடங்களில் கச்சேரிகள் நடத்தியுள்ளார்.

இவரது விருப்பம் திரைப்படங்களில் கர்னாடக இசையில் பாடுவதே! மாறி வரும் விருப்பத்திற்கேற்ப பழமையைப் புதுமையில் புகுத்த வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். எளியோருக்கு கர்னாடக இசை கடினமானது. ஆனால் இளையோர் இதில் ஆர்வமாக உள்ளனர். பல சிரமங்களுக்கிடையில் இசை கேட்க வரும் அவர்களுக்கு அதைச் சுவையாகத் தருவது நமது கடமை என்பது இவர் கருத்து. 

திருமதி சிமோன்    

இசைக் கருவிகள்


இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற அரும் சாதனம் இசை.மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலத்திலேயே இசைக்கத் தொடங்கிவிட்டான்.  விலங்குகளை வேட்டையாடி உண்டவன் அந்த விலங்குகளின் தோலை மரக்கிளைகளில் தொங்கவிட்டிருந்தான். காய்ந்த அந்தத் தோல்களில் கிளைகள் உரசும்போது ஒலி உண்டானது. இதுவே தோல்கருவிகள் தோன்ற அடிப்படையாயிற்று.  காடுகளில் உள்ள மூங்கில் மரங்களில் வண்டுகள் துளைகளிட்டன. அந்தத் துளைகள் வழியாகக் காற்று புகுந்து வெளியேறும்போது குழல் இசை பிறந்தது.
குழலும் யாழும் முரசும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களால் பயன்படுத்தப்பட்டதை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இதோ பரிபாடல் வரிகள்:
 "எழுபுணர் யாழும் இசையுடன் கூடக்
  குழலளந்த நிற்ப முழவேழுன் தார்ப்ப"     

 பொதுவாக இசைக்கருவிகளை நரம்பு வாத்தியங்கள், காற்று வாத்தியங்கள், தாள வாத்தியங்கள் எனப் பிரிக்கலாம்.

நரம்பு வாத்தியங்கள்:   மேலை நாட்டு இசையில் இவற்றை கார்டோபோன்ஸ் (chordophones)  என்று அழைப்பர்.
 
                    
                                                                     
                                                                             யாழ்

இது மீட்டி வாசிக்கக்கூடிய நரம்புக்கருவி. இதுவே தமிழர் வாசித்த முதல் இசைக்கருவி. இது யாளி என்ற பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்படிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இதில் உள்ள ஒவ்வொரு நரம்பும் ஒவ்வொரு சுரத்துக்குச் சுருதி கூட்டப்படிருக்கும். சுத்தசுரங்களே இதில் வாசிக்க முடியும். இதன் வடிவம், வாசிக்கப்படும் நிலம், அதில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை இவற்றின் அடிப்படையில் இது  வகைப்படுத்தப்பட்டது .  யாழ் தற்போது செல்வாக்கிழந்து வழக்கொழிந்தும் விட்டது. பல  நூற்றாண்டுகளில் இதன் உருவத்தில் மாறுதல்கள் அடைந்து வீணையாக மாறியதாகக்  கருத்தும் உண்டு.   
                                                                               வீணை 

யாழைக் காட்டிலும் வாசிப்பதற்குச் சுலபமானதும் அதே சமயத்தில் ஒலிக்கும் நாதம் அற்புதமாகவும் இருந்ததால், வீணையின் வரவு யாழின் செல்வாக்கைக் குறைத்தாலும், வீணையும் யாழும் சேர்ந்தே பல நூற்றாண்டுகள் இருந்திருக்கின்றன எனக் கருதப்படுகின்றது.இந்திய இசையின் பல நுட்பங்களையும் தத்துவங்களையும் இக்கருவியின் மூலம்  வெளிப்படுத்தலாம். பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி.. 17- நூற்றாண்டில்தான்  அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை  ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது.
வீணையின் அமைப்பு:
 தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி  முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும். யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.வீணை  பலா மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.
வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள-சுருதித் தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்கச் சிலர் விரல்களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொண்டு மீட்டுவர். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தரையில் அமர்ந்து மடியில் வீணையை  வைத்து வலது தொடையால் தாங்கிக்   கொண்டு தன்னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி, கீழ்த் தண்டிலுள்ள மீட்டுக் கம்பிகளை வலக் கையால் மீட்டுவார்.வீணைக்கு உகந்த பக்கவாத்தியங்கள் தம்புராவும் தவிலுமாகும்.
சிட்டிபாபு, எஸ்.பாலச்சந்தர், வீணை தனம்மாள்  , வீணை காயத்ரி, ஆர்.பிசுமானி ஐயர் - புகழ்பெற்ற வீணை இசைக்கலைஞர்கள் 
                                                              வயலின் (பிடில்)


  இக்காலத்தில்   நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார்.தென்னிந்திய இசை முறைமையான கர்நாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர்.ஏனைய இசைக்கருவிகளைவிட இதில் வாய்ப்பாட்டு நன்றாக வாசிக்கக்கூடும். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல.இதை இசைப்போர் பல மாதிரியான மிடற்றிசையின் ஏற்றத்தாழ்வுகளையும் பற்பல இசையமைப்புகளையும் நன்றாய் அறிந்திருக்க வேண்டும்.  

குன்னக்குடி வைத்தியநாதன், தி.என்.கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், நாகை முரளிதரன், டாக்டர்.எல்.சுப்பிரமணியம் ஆகியோர் சிறந்த வயலின் மேதைகளாவர்.


                                   

                                                                        தம்புரா 

 பொதுவான இசைக்கருவி கம்பிகட்டப்பட்ட தம்புரா ஆகும், இது ராகம் இசைக்கும் நேரம் முழுவதும் நிலையான தொனியில் (ரீங்காரம்) இசைக்கப்படும். இந்தப் பணியைப் பாரம்பரியமாகத் தனியாகப் பாடுபவரின் மாணவர்கள் செய்கின்றனர். இது சலிப்படையவைக்கும் பணியாகத் தோன்றினாலும், உண்மையில், இதைப் பெறும் மாணவருக்கான வாய்ப்பு பெருமையானது மற்றும் அரிதானது. தம்புராவைப் பயன்படுத்திக் கொண்டு பாடி வரும்போது, ஒவ்வொரு சுவரமும் அதன் தானத்தில் வருகின்றதோ  என்பதை இசைப்போர் தெரிந்துக்கொண்டு பாடி வரலாம். பாடுவோர் பாடி நிறுத்தியிருக்கும் காலத்தில் இத்தம்புராவின் ஆதார சுருதி ஒலியானது “சீவா” வின் தொடர்பால் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருப்பதால் அவர் பாடிக்கொண்டிருப்பதைப் போலுள்ள ஓர் உணர்ச்சியையும்  அது உண்டாக்குகின்றது.
(இதில் நான்கு தந்திகள் இருக்கின்றன.இந்த நான்கு தந்திகளின் ஒலிகளும் தனித்தனியே பிரிந்து ஒலிக்காமல் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் போது, பிரதான மெட்டின் மேல் நான்கு தந்திகளுக்கும் மெட்டிற்கும் இடையே துண்டு நூல்கள் செலுத்தி வைத்துக் கொள்ளப்படும். இதற்கு “சீவா” என்று பெயர்). இது வண்டின் ஒலிபோல ரீங்காரத்துடன் தொடர்ந்து ஒலியாக கேட்கப் பெறும். இந்த “சீவா” என்ற ரீங்கார ஒலியினால் நன்றாக சுருதி சேர்க்கப் பெற்ற தம்புராவானது  “ரிகரிக” என்று ஒலித்து செவிப்புலனாகும். இது மிகவும் இனிமையாக இருக்கும். தம்புராத் தந்திகளின் சுருதி நன்றாக சேர்ந்திருப்பதற்கு இங்குக் கூறப்பெற்ற “ரிகரிக” என்று ஒலிக்கும் சிறப்பே குறிகாட்டியாகும்.
                                                          காற்று வாத்தியங்கள்
மேலை நாட்டு இசையில் காற்றுக் கருவிகளை ஏரோபோன்ஸ் (aerophones) என்பர். பண்களை இனிமையாக இசைக்கும் கருவி குழல். கொன்றை மரக் காயைக் குழலாக உருவாக்கி இசைத்தல்; ஆம்பல் கொடியின் தண்டினைக் (stem) குழலாக உருவாக்கி இசைத்தல்; இவை தமிழர் இசை மரபின் தொடக்கநிலைக் குழல் வகைகளாகக் கொள்ளலாம்.குரலிசைக்கு (vocal music) நிகரான எல்லா இசை நுட்பங்களையும் இசைக்க வல்ல சிறந்த கருவியாகப் பழந்தமிழர் இதனை உருவாக்கினர். குழலை, தனித்து இசையைப் பெருக்கும் கருவியாகப் பயன்படுத்தினர். யாழ், முழவு முதலான பிற கருவிகளோடு இணைத்தும் இசைத்தனர். பாட்டிசைக்குப் பக்க இசை வழங்கவும் பயன்படுத்தினர்.கூட்டு இசை நிகழ்ச்சியில் குழல் இசை வழி யாழிசையும், யாழிசை வழி தண்ணுமை என்னும் தாள இசையும், தண்ணுமை இசைவழி முழவும் சேரும் பாங்கைச் சிலப்பதிகராம் இவ்வாறு கூறுகிறது:


குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தன்ணுமைப்
பின்வழி நின்றது முழவே . . .


 மூங்கிலால் உருவாக்கப்படுவது குழல் கருவி. இதில் எட்டுத் துளைகள் இருக்கும். பொதுவாகக் கருவியின் நீளம் 15 அங்குலமாக இருக்கும். சுற்றளவு 3 அங்குலமாக இருக்கும். குழலின் இடப்பக்கத் துவாரம் அடைத்திருக்கும். வலப் பக்கத் துவாரம் திறந்திருக்கும். வாய் வைத்து ஊதும் முதல் துளை "முத்திரை" அல்லது "முத்திரைத் துளை" எனப்படும். மீதி ஏழு துளைகள் மேலும் ஏழு விரல்கள் பண் அமைப்பிற்கேற்ப மூடித் திறக்கும். அப்பொழுது பண்ணிசை காற்றில் இனிமையாக மிதந்து வரும். பழந்தமிழர் உருவாக்கிய இக் கருவி இக்காலத்தில் புல்லாங்குழல் என அழைக்கப்படுகிறது.

                                  

இது நாதஸ்வரம்நாதசுரம்நாகசுரம்நாகஸ்வரம்நாயனம் என  பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா,இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி  வழக்கில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது.

தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால் பொதுவாக எல்லாவகையான நன் நிகழ்வுகளிலும் இதற்கு இடம் உண்டு. வசதியான பெரிய கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். ஏனையவற்றில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது. தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாதஸ்வரம் சிறப்பிடம் பெறுகின்றது.
நாதஸ்வரம் பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ இடைக்கால இலக்கியங்களோ கல்வெட்டுகளோ    இந்த இசைக்கருவி தொடர்பான தகவல் எதையும் தரவில்லை.17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதசங்கிரகம்  என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்ற போது இக் கருவியையும் நாகசுரம் என்ற பெயரில் பட்டியல் இடுகின்றது. இதுவே தற்போதைய நிலையில், கிடைக்கின்ற வரலாற்றுக் குறிப்பு எனலாம்.இது வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய்  போன்றது. எனினும் இது ஷெனாயை விட அளவில் பெரியது. இது வன்மரத்தினால் செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படும் விரிந்த அடிப் பகுதியையும் கொண்டது. இதன் பாகங்கள் வருமாறு:


  • வட்டவடிவமாக விரிந்து காணப்படும் அணைசு.
  • உள் கூடான நீண்ட மரக்குழலால் ஆன உடல்
  • உடலின் மேற் பொருத்தப்படும் கெண்டை (செப்புத் தகடு)
  • அவ்வப்போது வைத்து இசைக்கப்படும் சீவாளி.

உடலின் மேற்பாகத்தில் 12 துளைகள் உள்ளன. மேலிருந்து வரும் 7 துளைகளும் இசைப்பதற்கு ஏற்றவை. மற்றைய ஐந்தையும் அவ்வப்போது மெழுகால் அடைத்தும் திறந்தும் கொள்வார்கள். நாதசுவரத்தின் நீளம் சுமார் 2.5 அடி..நாதசுரத்திற்குச்.சுருதிக் கருவியாக விளங்குவது ஒத்து என்ற நாதசுவரத்தைப் போன்றவடிவமுள்ள ஒரு கருவி. இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான் வெளிவரும். இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்பி வருவார். இன்று இந்தக்கருவிக்குப் பதிலாக சுருதிப்பெட்டி  பயன்படுத்தப்படுகின்றது.நாதஸ்வரத்துக்குத் தாளக் கருவியாக அமைவது தவில்  (அல்லது தவுல்) என்ற தோற்கருவியாகும்.  நாதஸ்வரக் கலைஞர், ஒத்து வாசிப்பவர், தவில் வித்துவான், தாளக் கலைஞர் (ஜால்ரா) ஆகிய நால்வரும் ஒன்று சேர்ந்த இசைக்குழுவைப் பெரியமேளம் என அழைப்பர்.
நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரிபாரி. திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்.

டி.என்.ராஜரத்தினம் பிள்ளை,திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை, காரைக்குறிச்சி அருணாசலம் பிள்ளை, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், அளவெட்டி என்.கே.பத்மநாதன், தேசூர் டி.எஸ்.டி.செல்வரத்தினம், மன்னார்குடி எம்.எஸ்.கே.சங்கரநாராயணன், காஞ்சி எஸ்.சண்முகசுந்தரம் - நாதஸ்வரம் இசைப்பதில் சிறந்த விற்பன்னர்கள்.  

ஆண்கள் மட்டுமே நாதஸ்வரம் வாசித்து நாம் பார்த்திருக்கிறோம். எம்.எஸ். பொன்னுத்தாய் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாதசுவரக் கலைஞர்.இவரே முதலாவது பெண் நாதசுவரக் கலைஞர் ஆவார். திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் பிறந்தவர். மதுரையில் நடேசபிள்ளை என்பவரிடம் 9 வது வயதில் நாதசுவரக் கலையைப் பயின்று தமது 13 ஆவது வயதில் அரங்கேற்றம் செய்தார்.1990 ஆம் ஆண்டு கலைமாமணி பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. 23 தங்கப் பதக்கங்கள், கலை முதுமணி, நாத கான அரசி போன்ற  பல்வேறு பட்டங்களும் பெற்றுள்ளார். இவரது கணவர் விடுதலைப் போராட்ட வீரர் சிதம்பரம் முதலியார்.எம்.எஸ்.பொன்னுத்தாய் அவர்கள் 17 01 2012 அன்று காலமானார்.அவருக்கு வயது 87.
                                            தாள வாத்தியங்கள்

வரம்பு கடந்து ஒடும் ஆறுகள் போன்றன பாடலும் ஆடலும். இவற்றை ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்தும் கரைகள் போன்றவை தாளங்கள்.பழந்தமிழர் பல்வேறு வகைத் தாளங்களைக் கண்டறிந்தனர்.தாள நுட்பங்களைப் பயின்ற இவர்கள் இவற்றைக் கருவிகளில் முழக்கி இன்புற்றனர்.தாளக் கருவிகள் அனைத்தையும் பொதுவாக முழவு என்றனர் பழந்தமிழர்.இது தோற்கருவி வகையைச் (percussion instruments) சேர்ந்தது. மேலை நாட்டு இசையில் தோற் கருவிகளை மெம்பிரானோபோன்ஸ் (membranophones) என்பர்.
பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கணப்பறை, தண்ணும்மை, முரசு, தூம்பு, சிறுபறை, மொந்தை போன்ற தாளக் கருவிகளை நம் பழந்தமிழர் பயன் படுத்தினர் என்பதைச் சிலப்பதிகாரம் வழியாக அறிகிறோம். காலகட்டத்தில் இவற்றில் பல அழிந்து போயின.

                                                       தண்ணுமை  (மிருதங்கம்) :

 


தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு  நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக  காலத்திலும் இருந்தற்கான  ஆதாரங்கள் உள்ளன.'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே 'மிருதங்கம்' என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது.
பெரும்பாலும் பலாமரக்  குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலப் பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும்.
மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.  கச்சேரியில் மிருதங்கத்தின் பிரதானமான வேலை என்பது பாடுபவருக்கோ வாசிப்பவருக்கோ துணையாக இருப்பதே. தனி ஆவர்த்தனம் என்கிற கட்டத்தில்தான் மிருதங்க வித்வானின் முழுத் திறமையை  வெளிப்படுத்தும் வாய்ப்பு அமைகிறது.பரதநாட்டியத்தின் முக்கியமான தாளக் கருவி மிருதங்கம். இக்கருவி இசை நட்டுவனாரின் நட்டுவாங்கத்திற்குப் பக்க பலமாக இருக்கும். உறுதுணையாகவும் இருக்கும்.
மிருதங்கக் கலைஞர்களில் மிகச்சிறந்தவர்கள்: தஞ்சாவூர் நாராயணசாமி அப்பா, புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, கும்பகோணம் அழகநம்பியா பிள்ளை, தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர், பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர், குற்றாலம் சிவவடிவேலு பிள்ளை, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் எனலாம்.    
தவில்:


          
 
தவில் என்பது  நாதஸ்வரதிர்க்குத்  துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும்.கர்நாடக இசைக்கும் கிராமிய இசைக்கும்  இது பயன்படுத்தப்படுகிறது.  விழாக்காலங்களிலும் திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால்  இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில், வலது பக்கம் இடது பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும். தவில் வாசிப்பவர் ஒரு தோல் கயிற்றால்  தனது தோளின் மீது தவில் கருவியை மாட்டி முழக்குவார். வலது பக்கம் வலது கையாலும் இடது பக்கம் விரல்களாலும் முழக்கப்படும். எல்லா விரல்களிலும் கவசங்கள் அணியப்பட்டிருக்கும். இடது கையில் 'Portia' மரத்தால் செய்யப்பட்ட குச்சியை பயன்படுத்துவர்.
 தவில் வாசிப்புக்கும் மிருதங்க வாசிப்புக்கும் சில அடிப்படை வேறுபாடுகள் உண்டு. முதல் வித்தியாசம் மிருதங்கம் ஸ்ருதி வாத்யம். தவிலை ஒரு ஸ்ருதியோடு இணைக்க முடியாது. மிருதங்கத்தில் ஸ்ருதியோடு இணைந்து ஒலிக்கும் சாப்பு, மீட்டு போன்ற சொற்களை வாசிக்கும் போது காதுக்கு இனிமையாக ஒலிப்பது போல, தவிலில் வாசிக்க இயலாது. இதனால் தவில்காரர்களுக்கு ‘விவகாரம்’ என்று குறிக்கப்படும் லய நுணுக்கங்கள் அவசியமாகிறது. வாத்தியத்தின் ஒலி மட்டுமே ரசிகர்களை கவர முடியாமல் போகும் போது, கணக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் வெவ்வேறு கோவைகள் (patterns) கேட்போரின் கவனத்தை தக்க வைக்க உதவுகின்றன. தவில் வாசிப்பு மிருதங்க வாசிப்பை விட பல மடங்கு நுட்பமாய் விளங்குகிறது.
 தவில்  வாசிப்பதில் மிகச்சிறந்த கலைஞர்கள்: நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மலைக்கோட்டை பஞ்சாபகேச பிள்ளை, திருமுல்லைவாயில் முத்துவீரு பிள்ளை, கும்பகோணம் தங்கவேல் பிள்ளை, நாச்சியார்கோயில் இராகவ பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, நீடாமங்கலம் ஷன்முகவடிவேலு பிள்ளை. 
    
                                                                             கடம்

இது மிக எளிமையான தாள கருவி. இது ஒரு பெரிய மண் பானையாகும். இதை வாசிப்பவர் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்து இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார்.   மிருதங்கத்தைப்போல இன்றியமையாத இசைக் கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகிறது. வாய்பாட்டுக் கச்சேரிகளுக்கு இடையிலும் தாள வாத்தியக் கச்சேரிகளிலும் கடத்தின் பங்கு ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்படுகிறது.  

தொகுப்பு: லூசியா லெபோ