பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 31 mai 2015

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம். படத்தைப் பார்த்ததுமே எதைப் பற்றிய எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ளப்போகிறோம் என்று புரிந்திருக்கும். 

முதலில் அழகு என்பது எது என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் நல்லது. பார்க்கும் கண்களை விட, உணரும் மனமே அழகை ரசிக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அதனால்தான் எந்த ஒரு உயிருக்கும் ஏதோ ஒரு கவர்ச்சியும், அதை ஆழ்ந்து அனுபவிக்கும் ரசனை இன்னொரு உயிருக்கும் உண்டாகி ஒன்றையொன்று ஈர்க்கிறது.

மனிதத் தேவைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உள்ளது பசியும், உணவும். சாதாரண வயிற்று, உடற் பசிக்கு மேலாய் மனிதனை மட்டும் பணம், பதவி, புகழ் என்கிறப் பசிகள் ஆட்டிப் படைக்கின்றன. அவற்றுக்குத் தீனி போட எதையும் செய்ய முன்வருவான் அவன்.  மற்றவர்களை மட்டுமல்ல, தன்னையே கூட அதற்காக வருத்திக்கொள்ளத் தயங்க மாட்டான். 

பிறர் முன் தனக்கென ஓரிடம் குறிப்பிட்டுச் சொல்லும்படி தேவை என முயல்வது தவறில்லை. அது அறிவாலா, ஆற்றலாலா, குணத்தாலா, பண்பாலா அல்லது வெறும் அழகுத் தோற்றத்தாலா என்பதைப் பொறுத்தே அத்தனி மனிதனின் தரம் நிர்ணயிக்கப்படும். எந்தத் தகுதியும் அவன் 'உள்ளிருந்து' வெளிப்படும்போது அது அழியாததாய், பிறருக்கு பயன்படுவதாய், எல்லோரையும் மகிழ்விப்பதாய் அமையும். மற்றவர் மனதில் நீங்கா இடத்தையும் பெற்றுத் தரும். ஓர் மகாத்மா,  வள்ளலார், அன்னை தெரெசா என அகத்தால் வென்றவர்கள் பலர். 

புற அழகுக்கு என்றும் ஓர் மதிப்புண்டு. அதை மறுப்பதற்கில்லை. புறக்கணிப்பதற்கும் இல்லை. இருக்கும் அழகை கண்ணுக்கிதமாய் வெளிக்காட்டுவதும், அதற்கான சில முயற்சிகளை மேற்கொள்வதும் தொன்றுதொட்டு கலையாகப் பேணப்பட்டும் வருகிறது. ஆனால் அதன் எல்லையை வரையறுத்துக் கொண்டால் நல்லது என்பதை உணரும் தருணத்தில் நாம் உள்ளோம் என்று தோன்றுகின்றது. 

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் வளர்ச்சி என்பது நின்று போய் நாம் உண்ணும் உணவின் சக்தி அதிகமாகவும் செலவழிக்கும் சக்தி குறைவாகவும் ஆகும்போது இடுப்பு, வயிற்றுப் பகுதிகளில் சதை போடுவது தவிர்க்க இயலாதது. பல வருடங்களாக உண்டு வந்த உணவளவைக் குறைப்பதோ, சூழ்நிலைகளாலோ அன்றி இயலாமையாலோ போதுமான அளவு உடற்பயிற்சி செய்வதோ எல்லோராலும் முடிவதில்லை. எனினும் ஓரளவு கவனமும், கட்டுப்பாடும் கடைப்பிடித்தாலே நிலைமையைக் கைமீறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால் இளைய தலைமுறை ஒடிந்து விழுவதைப் போன்ற உடலழகை விரும்பி மேற்கொள்ளும் செயல்பாடுகள் பின்னர் தங்களையே, தங்கள் உடல் நலத்தையே பாதிக்கக் கூடும் என்பதை அறிந்து அவற்றை செய்கிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. கட்டுப்பாடு என்ற பேரில் மிகக் குறைந்த அளவு உண்ணும் பெண்களால் பிறகு விரும்பினாலும் சரியான அளவை உண்ண  முடிவதில்லையாம்! வாழ்க்கையின் நீண்ட பயணத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைத் தாண்டி மீளப் போதிய சக்தியை காலம் கடந்து எங்கிருந்து பெற முடியும்?

இன்னொரு மாயை 'சிக்ஸ் பாக்'. அருந்த வேண்டிய நீரின் அளவைக் குறைத்து, சர்க்கரை, உப்பையும் குறைத்து,  அதிக புரதத்தை மட்டும் ஏற்பதால் கல்லீரல், சிறுநீரக பாதிப்புக்குள்ளாகும் நிலையை வருந்தித் தானே வரவேற்க வேண்டுமா? பாதியில் இம்முயற்சியைக் கைவிடுபவர்கள் நிச்சயம் பாதிப்புக்குள்ளாவார்களாம்! அதிக உடற்பயிற்சி காரணமாக வலி நிரந்தரமாக வழியுண்டாம். மாவுச்சத்து, பால் போன்றவற்றைத் தவிர்ப்பதால் உணவின் விகிதம் மாறுதலுக்குட்பட்டு பிரச்சனைகள் தோன்றுமாம். அழகின் பெயரால் இந்த அழிவை உடலுக்குத் தர வேண்டுமா?!

அளவான சத்துள்ள உணவு, வயதுக்கேற்ற உடல் உழைப்பு, ஆரோக்கியமான மன நிலை, தெளிந்த எண்ணங்கள், புன்னகை ததும்பும் இனிய பேச்சு இவையே இனிய தோற்றத்துக்கான  அடிப்படை. இவற்றை  வெல்ல எந்த நவீன கண்டுபிடிப்பும் உலகில் இல்லை!

திருமதி சிமோன் 

அழகும், ஆபத்தும்!

அழகை மிகைப்படுத்த வேண்டும் என்றக்  காரணத்துக்காகச் செய்யும் செயல்கள் பல உடலுக்குக் கேட்டையே தருகின்றன.

வருடக்கணக்கில் நாம் பரம்பரை பரம்பரையாக நமது நாட்டுச் சூழலுக்கும் பழக்கத்துக்கும் உரியதான ஓர் உணவு முறையைப் பின்பற்றி வரும்போது, அதை மாற்றினால் நமது உடலே தன் எதிர்ப்புணர்ச்சியை சிறு சிறு முறைகளில் வெளிப்படுத்துகிறது (வயிறு கனத்துப் போதல், சிறு நமைச்சல், பொருட்படுத்தக் கூடிய வலி, வயிறு போகுதல் இப்படி). என்றாவது ஒரு நாள் இது போன்று நடந்தால் தவறில்லை. ஆனால் தொடர்ந்து வயிற்றை சோதித்தால், அதன் விளைவுகள் எதுவாகவும் இருக்கலாம்.

தமிழனுக்கு அரிசி உணவு பழகிப்போன ஒன்று. 'விரைவு உணவு' (பாஸ்ட் புட்) என்னும் பேரால், குறைந்த அளவு-உடலை இளைக்க வைக்கும் என்ற கற்பனையில் தொடரும்போது சிறுநீரகங்களை நாமே செயலிழக்க வைக்கிறோம். இதே போல் தான் தண்ணீருக்குப்  பதில் குளிர் பானங்கள் பருகுவதும். அவற்றில் சக்தியைக் காட்டிலும்,  ரசாயனங்களே  அதிகம்.இதில் உடலைப் பளபளக்க வைக்கும் என்ற நம்பிக்கை வேறு! 'சிகரெட் உயிருக்குக் கேடு' என்று குறித்து விற்பனைக்கு வருவது போல அமெரிக்காவில் ஹாம்புர்கேர் பல விரும்பத்தகாத விளைவுகளைத் தரலாம் என்று போர்டே மாட்டியுள்ளார்களாம்!

முக அலங்காரத்திற்கென விற்கப்படும் கிரீம்களும், தலைக்குக் கருமை தரும் சாதனமும் தோல் எரிச்சல், சிவப்பு, தடிப்பாதல், முகம் பிறகு சிறிது சிறிதாக உடலில் கொப்பளங்கள் தோன்றுதல் என வெளிப்படுகின்றன. வெளி அடையாளங்களே இவ்விதம் என்றால் ரத்தத்தில் அவை என்னென்ன மாற்றங்களைத் தருமோ, அவை எப்போது எப்படி எதிரொலிக்குமோ! சில முகப் பவுடர்கள் கூட தோலின் இயற்கைத் தன்மையைப் பாழாக்குகின்றன.

பெண்களின் மார்புக் கச்சைகள் மிக இறுக்கமாக இருந்தால் சீரணக் கோளாறு, மூச்சு விடுதலில் சிரமம் முதற்கொண்டு கான்சர் வரை ஏற்படுத்தும்.

இறுக்கமான ஜீன்ஸ் உடைகள் பெண்களுக்கு உராய்வை ஏற்படுத்தி புண்ணாக்கியும், ஆண்களுக்கு அளவுக்கு அதிகமான பிடிப்பால் ஆண்மையைக் குறைத்தும் செயல்படுகின்றன. (அந்தக் காலத்தில் நிலக்கரி சுரங்க வேலையில் அழுக்கு பட்டாலும் தெரியாது, உழைக்கும் என்பதற்காகக் கண்டு பிடித்ததைப் போட்டுக் கொண்டு வலம் வந்தால் ஏன் இதெல்லாம் ஏற்படாது?)

இல்லாத உயரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் 'ஹை ஹீல்ஸ்' பெண்களின் இடுப்பு எலும்பு, முழங்கால், கணுக்கால் எலும்புகளை நாளடைவில் பாதிக்கும்.

மேற்கண்டவற்றை உபயோகிக்கும் பிரபலங்களை, சினிமா நட்சத்திரங்களைக் கண்டு நாமும் பின்பற்ற விரும்பி அவர்களைப் போல் ஆக விழைகிறோம். ஆனால் அந்த நட்சத்திரங்கள் ஒளி  இழந்த பிறகு எந்த நிலையில் உள்ளார்கள் என்று நமக்குத் தெரியப் போவதில்லை; தெரிந்துகொள்ள ஆர்வமுமில்லை.  அப்படியே நம்மையும் நாம் விட்டு விட முடியாதல்லவா? நமது வருங்காலம், முக்கியமாக 40க்கு மேல் ஆரோக்கியமாக விளங்குவது நம்மைப் பொறுத்தமட்டில் அத்தியாவசியமானது அல்லவா!  

திருமதி சிமோன்

jeudi 30 avril 2015

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம். பரந்து, விரிந்த இந்த உலகு மிக அழகானது. கண்ணுக்கெட்டிய வரை மெல்லிய நீலத் துகில் போர்த்தியது போன்ற வானம், அது கரு மேகத் திரையிட்டிருந்தாலும் அதிலும் ஓர் கவர்ச்சி,  கூச வைக்கும் தன் கதிர்களால் புத்துணர்ச்சியூட்டும் கதிரவன், மேனி தழுவிச் செல்லும் இளங்காற்று, அசைந்தாடி மனதை ஈர்க்கும் செடி,கொடிகள், தன் பிரம்மாண்டத்தால் மலைக்க வைக்கும் அகண்டு கிளை பரப்பிய மரங்கள், ஆங்காங்கே தங்கள் நிறத்தாலும், மணத்தாலும் மயங்கச் செய்யும் மலர்கள், ஓசையின்றி நழுவிச்  செல்லும் நீரோடைகள், சலசலத்து ஓடி, பேரோசையுடன் வீழ்ந்து புரளும் அருவிகள், அணைக்க வருவது போல் அலைக்கரங்களை நீட்டும் ஆரவாரக் கடலலைகள் என எல்லாமே மனிதனுக்கு பிரமிப்பையும், மனதுக்கு இதத்தையும், மகிழ்ச்சியையும் தரவல்லவை!
(தொடர்ந்து படிக்க 'Plus d'infos' பட்டனை அழுத்துக!)

திரு மதிவாணன் இரங்கற் கவிதை


சிரிப்பினிலே அணையுமொரு இனிமை கொஞ்சும்
சினந்தோரை உறவென்று கனிந்து மிஞ்சும்
உரிமையிலே தனக்கென்று சொந்தம் கொள்ளும்
உவகையிலே உலகனைத்தும் தனதாய் எண்ணும்
தரிப்பதுவும் எளிமையதாய்த்  தன்னைத் தாழ்த்தும்
தகைமையிலே எல்லாரின் மனமும் வாழ்த்தும்
வரித்தவரை வாரியிந்த வையமும் வாழ
வழியின்றி வந்தவழி அனுப்பி வைக்கும் !

மனம்போன போக்கெல்லாம் மனிதர் வாழும்
மன்பதையில் வாழ்வோரை மதித்துப் போற்றும்
இனம்காணல் கானலதே ! எனது என்ற
இறுமாப்பில் எள்ளுவோரின் நடுவே நின்று
தனம்தேடி அலையாமல் நட்பு நாடி
தன்வருத்தம் புறந்தள்ளி வாழ்ந்த அன்பு
நினதுசொந்தம் ! எங்களுள்ளம் தனிலே என்றும்
நிலைத்தேகி மதிவாணன் நன்றே வாழ்வார் !

வெற்றிபெற்ற வாழ்வெனவே மக்கள் சாற்றும்
மேன்மையெதும் பெறவேண்டா ! நல்லோர் உள்ளம்
பற்றிநிற்கும் பரிவினிலே பகிரும் பாச
பந்தத்தில் ஒட்டிநிற்கும் உறவே போதும் !
கற்றவரைக் கடந்துள்ளே உறையும் நாளும்
கூத்தனவன் அருள்தனையே நிறையாய்ப் பெற்ற
நற்பேறு பெற்றவராம் நண்பர் நித்தம்
நாம்பயில உலவிவந்தக் கவிதை அன்றோ !

திருமதி சிமோன்

இளங்கோவடிகள் தீட்டும் எழிலோவியங்கள்

(பிரஞ்சு-இந்தியக் கலை-இலக்கியப் பண்பாட்டுக் கழகம்
அத்திஸ்-மோன்ஸ் நகரில் 25.04.2015 அன்று நடத்திய
 'சிலப்பதிகார விழாவில்' ஆற்றிய உரையின் சுருக்கம். )

ஓவியமா? காவியமா?(காப்பியமா?)
இதில் எதைப்பற்றிப்  பேசுவது! இதுதான் என்னுள் தோன்றிய கேள்வி .ஓவியத்துக்கும் கவிதைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.இவை இரண்டுமே நுண்கலைகளாகும்.
தான் வரைந்த காட்சியைக்  காண்பவர்களின் கண்ணில் நிறுத்தும் திறம் படைத்ததால் கண்ணுள்  வினைஞர் என்று ஓவியனைக்  குறிப்பிடுகிறது இலக்கியம். கோடு , புள்ளி, வண்ணங்கள் கொண்டு அழகிய சித்திரத்தைத்  தூரிகை கொண்டு  ஓவியன் தீட்டுகிறான். கவிஞனோ  தேர்ந்தெடுத்த சொற்களை ஓசை நயம்படக்  கவிதையாக வடிக்கிறான்.உவமை அணிகள் கொண்டு அவற்றை மேலும் அழகுபடுத்துகிறான், மெருகேற்றுகிறான். தொல்காப்பியத்தின் உரை ஆசிரியராகிய பேராசிரியர் 'கவி, கண் காட்டும்' என்கிறார்.
"painting is mute poetry and poetry a speaking picture" என்பார்கள். அதாவது ஓவியம் பேசாத கவிதை, கவிதை பேசுகின்ற ஓவியம்.
சிலப்பதிகாரம் என்னும் எழுத்தோவியத்தில் இளங்கோவடிகள்  தீட்டியுள்ள    ஓவியங்களில் ஒருசிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன்.
(தொடர்ந்து படிக்க 'Plus d'infos' பட்டனை அழுத்துக!)

அரிய தகவல்கள்


நீண்ட காலம் உயிர் வாழக்கூடிய விலங்கு  ஆமை.கடலில் வாழும் ஆமைகள் முட்டை இடுவதற்கு மட்டும் கடலை ஒட்டிய நிலப் பகுதிக்கு இரவு நேரத்தில் வருகின்றன.முட்டையிலிருந்து  வெளிவரும் குஞ்சுகளின் மனத்தில் நிலத்தின் அமைப்பு, அங்கு நிலவும் காந்தப்புலம், அங்கு வீசும் நறுமணம் ஆகியவை பதிந்து விடுவதால், இந்தக் குஞ்சுகள் வளர்ந்து இனப்பெருக்கத்துக்குத் தயாராகும்போது, தாங்கள் பிறந்த கடற்கரைப் பகுதிக்கே மீண்டும் முட்டையிட வருகின்றன. இந்த வியக்கத்தக்க செயல்பாட்டை ‘Natal Homing' என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.
(தொடர்ந்து படிக்க 'Plus d'infos' பட்டனை அழுத்துக!)

mardi 31 mars 2015

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம். "மனச் சோர்வு" (Depression) - இன்றைய யுகத்தின் தவிர்க்க இயலாத சொற்றொடர்! ஆண்-பெண் பேதமின்றி, வயது வித்தியாசமின்றி எல்லாரையும் ஆட்டிப் படைக்கிறது. மருத்துவ உலகில் வெகு சாதாரணமாக, சுலபமாக சூட்டப்படும் ஓர் நோயற்ற, பயங்கரமான விளைவுகளை அளிக்கக் கூடிய நிலை! இதனால் பாதிக்கப்பட்டோர் உடலால் வலியையோ, துன்பத்தையோ உணர்வதில்லை. மன வலிமையற்று, இடர்களைத் தாங்கவொண்ணாமல் துவண்டு போகிறார்கள். இவர்களுக்கு மருந்தே தன்னம்பிக்கையும், உற்சாகமும்தான்.

இன்றையக் காலச் சூழல், படிப்பிலும், வேலையிலும் போட்டியிட்டு வெற்றி காண்பதில் மட்டுமே அடங்கி உள்ளது. அவை இரண்டிலும் வாகை பெற வெறும் அறிவும், உழைப்பும் மட்டுமே இருந்தால் போதாது. இவை பிரகாசிக்க, சந்தர்ப்பமும் கிட்ட வேண்டும். அது எல்லாருக்கும் கிடைத்துவிடும் என்பதற்கு உத்தரவாதமில்லை. 

முன்பும் இவ்வாறு படிக்க விரும்பியும் முடியாமல், ஆசைப்பட்ட வேலை கிடைக்காது கிடைத்த வேலையில் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்! அவர்கள் அனைவரும் எப்படி இந்த மனச்சோர்விலிருந்து தப்பித்தார்கள்?

ஏனெனில் போதுமென்ற மனதை, உறவுகளுக்காக விட்டுக் கொடுத்து தியாகம் செய்யும் பண்பை, சூழ்நிலை மாறினால் அதற்கேற்பத் தன்னைப் பக்குவப் படுத்திக் கொள்ளும் திடத்தை, காத்திருக்கும் பொறுமையை, அறிவு சார்ந்து முடிவெடுக்கும் நேர்மையை அவர்கள் கொண்டிருந்தார்கள்.

இன்று வீடுகளில் இவற்றைப் போதிக்க, பெற்றோருக்கு நேரமில்லை. பள்ளிகளில் விஞ்ஞானத்திற்கும், கணிதத்திற்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம், நற்போதனைகளுக்கில்லை. சமூகத்தில் ஓர் இலட்சியவாதியாக உலவ, உதாரணங்கள் இல்லை. வரலாற்றைப் படிக்கவோ, ஓர் புத்தனை, காந்தியை, இயேசுவை பிரதிபலிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தூண்டவோ கூட இங்கே யாருக்கும் நேரமோ, அது பற்றிய சிந்தனையோ இல்லை.

சிறு வயது முதல் இங்கே ஓர் குழந்தை காண்பது - சம்பாதித்து பணம் சேர்த்து, சுய நலமாய் தங்கள் தேவைகளை வளர்த்து நிறைவேற்றிக் கொள்வதைத்தான். விளையாட்டு முதற்கொண்டு அவர்கள் அறிவது மற்றவர்களைப் பின்தள்ளி விட்டு, முன்னேறுவதை மட்டும்தான். உலகப்  பரிமாண வளர்ச்சியில் வெற்றி பெறும் இனமே நிலைக்க முடியும் என்கிற எண்ணம் மட்டுமே விதைக்கப்படுகிறது.

இதன் பலன், எதைச் செய்தாவது உச்ச நிலை அடைய வேண்டும் என்ற வெறி, கூடக்குறைய எல்லார் மனங்களிலும் நிரம்பி இருக்கிறது. அதில் தோல்வியுறும்போது ஒன்று சுய கழிவிரக்கத்தையோ அல்லது அதற்குக் காரணமானவர்களைத் துன்புறுத்தும் வன்மத்தையோ பெறுகிறார்கள். தேர்வில் தோற்றவன் தற்கொலை செய்து கொள்கிறான். தன்னை ஒருத்தி ஏற்கவில்லை என்பதற்காக அவளையே அழிக்கிறான். இதற்கு முன்னேற வழியின்றித்  தன்  வாழ்வை முடித்துக் கொண்டான் என்று   பரிதாபப்படுவதிலோ அன்றி காதலித்தவள் (அவன் கொண்டது காதலே அல்ல. ஒருத்தியை உளமார நேசித்திருந்தால், அவளையே நசித்தழிக்க எப்படி மனம் வரும்?) கிடைக்காத ஏக்கத்தில் புத்தி பேதலித்து விட்டான் எனச்  சமாதானம் சொல்வதிலோ அர்த்தமும் இல்லை, நியாயமும் இல்லை. 

"பெரிய பாறை மீது யாரும் மோதிக்கொள்வதில்லை. சிறிய கற்களே இடற வைக்கின்றன" என்றார் அபிரகாம் லிங்கன். வாழ்க்கையில்  வெயிலும், மழையும் எவ்வளவு இயற்கையானதோ அவ்வளவு வெற்றி தோல்வியும், இன்ப துன்பமும் இயற்கையானது. அவற்றை எதிர்கொள்ளும் பக்குவத்தில்தான் தரமும், உயர்வும் உள்ளன. சில நேரங்களில் உள்ளமே உடைந்தது போன்ற  நிலை வரலாம். அவ்வேளைகளில் நிதானமாக பிரச்னையை அணுகி, பல கோணங்களில் அதை  ஆராய்ந்து, நம்மால் செய்யக்கூடியது ஏதேனும் இருந்தால் உடனடியாகச் செய்து அதிலிருந்து மீளலாம். செய்வதற்கு எதுவுமே இல்லாதபோது அதை காலத்தின் அல்லது கடவுளின் கைகளில் விட்டு விட்டு மன அமைதியைத் தேடுவதே சிறந்தது.

சிக்கல்களை தீர்வு காணாமல் புறந்தள்ளுவதோ, அவைகளை சுமந்த வண்ணம் வாழ முயல்வதோ மன பாரத்தைத்தான் ஏற்றும். அடிபட்ட வேதனையில் மருந்திடாமலோ, நடக்க முயற்சிக்காமலோ புலம்பிக்கொண்டிருப்பது எந்த வகையில் உதவும்? காலே இல்லாதவன் என்ன செய்வான்!?

மனதை  வசத்தில் வைத்திருப்பது ஞானிகளின் வேலை மட்டுமல்ல. நமது வாழ்க்கையை நமக்கோ அல்லது பிறருக்கோ பயனுள்ள முறையில் நடத்திச் செல்ல வேண்டுமென்றால், மனதையும், அதில் தோன்றும் எண்ணங்களையும், அனுபவங்களால் ஏற்படும் உணர்வலைகளையும் ஓர் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

இப்படி நம்மை நாமே வென்று விட்டால் சிதையும் மனமும் சீராகும்! எதற்கும் அஞ்சாதத் திடமும் கைகூடும். உறுதியடைந்துவிட்ட  உள்ளத்தில் பிறக்கும் அமைதியும், பெருமிதமும், இன்பமும், உலகைத் தனதாக நோக்கும் ஆண்மையும் வாய்த்தப்  பிறகு இங்கு நம்மை வெல்ல யாருமில்லை!

திருமதி சிமோன்