பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 29 avril 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                          

அன்புடையீர்,

வணக்கம். பல பிரச்சனைகளுக்கும், போராட்டங்களுக்கும் நடுவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை விடவும், நமது வாழ்க்கையே சிக்கலாக உள்ளது என்பதுதான் உண்மையாக இருக்கிறது. பெரும்பாலான கணவன்-மனைவியரிடையே பிரிக்க இயலாத, பிரிக்கக் கூடாததான உறவில் சேர்ந்திருப்பதே தண்டனையாக உள்ளது. மலர்க் குவியல் போல அழகு சிந்தும்  குழந்தைச் செல்வங்கள் சுமக்க விரும்பாத சுமையாகக் கருதப்படுகின்றன. போற்றி வந்தச் சென்றத் தலைமுறை, தவிர்க்கப்பட வேண்டிய உறவாகக் கருதப்படுகின்றது.  இப்படி உலக வாழ்வின் ஆதாரமான குடும்ப வாழ்வு ஆட்டம் கண்டு ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.

நமது சச்சரவுகளும், மோதல்களும் ஒருபுறம் இருக்கட்டும்! அது தாறுமாறானதாக இருந்தாலும், ஒரு தலைமுறையோடு ஒழிய வாய்ப்பிருக்கிறது. ஆனால் வாழ்க்கைச் சுழற்சியின் அடிப்படையான அடுத்தத் தலைமுறையைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது எல்லோருடைய கடமையும் அல்லவா?

அவசரமான, பளு நிறைந்தப் பாதையில் எந்த அளவுக்குப் பொறுப்புக்களைக் கழற்றி விடுகிறோமோ, அந்த அளவு அது புத்திசாலித்தனம் என்கிற மனப்பான்மைதான் அடிப்படையாக இன்று உள்ளது. இதை 'take it easy policy' என்ற போர்வையில், எல்லாவற்றையும் கடந்த நிலையில் வாழ்க்கையைப் பார்ப்பது போன்ற மாயையை உண்டாக்குகிறார்கள். உண்மையில் இவர்கள் பற்றற்று, மனத்தால் விலகி அனுபவங்களைப் பார்ப்பதில்லை. தன்னை எது கட்டுப்படுத்தி விடுமோ என்ற பயத்தில் அதிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள்!

இதுவே துணிந்து திருமணம் என்னும் கட்டுக்குள் அடைபடவும், குழந்தை என்ற வாழ்நாள் பொறுப்பை ஏற்கவும் தடுக்கிறது. என் வாழ்வு, என்  சுகம்,என் இன்பம் எனத் தன் மயமாகச் சிந்திக்க வைக்கிறது. துன்பங்களை அல்லது மன பாரத்தைத் தவிர்க்கிறோம் என்று கூறி, கடமைகளைத் தட்டிக் கழிக்கிறார்கள். இந்தப் பாதைக்  கருவறையின் கதவைச் சாத்தி, மன பந்தத்தை நீக்கி, வெறும் உடல் உணர்வில் முடிகிறது.

ஒரு படி மேலே போய், தவறி உருவானதை மனசாட்சியின்றி அழிக்கவும் துணிகிறது. குழந்தை அல்லது தாயின் உடல் நிலைக் கருதித் தவிர்த்தால் அதைப் புரிந்து கொள்ளலாம். பாதிக்கப் பட்ட பெண்ணொருத்தி தான் மனமறிந்து செய்யாத குற்றத்திற்காக  தண்டனை அனுபவிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகையில் மாற்று வழி தேடலாம். இதில் கூட சம்பந்தப்பட்ட ஆண் மனசாட்சியோடு நடந்து கொண்டால் இந்நிலை தவிர்க்கப்படக்கூடியதே ஆனால் வாழ்க்கை வசதிக்காக, இன்னபிறக் காரணங்களுக்காக ஓர் உயிர்க் கொலை என்பது ஏற்றுக்கொள்ள இயலாததாய் இருக்கிறது. 'கருவைச் சுமப்பவள் பெண். எனவே குழந்தை வேண்டுமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுக்க வேண்டியது அவள் உரிமை' என்றொரு வாதம்.சுமப்பவள் அவள் என்பதால், ஓர் நுண்ணுயிரை அழிக்கும் உரிமையையும் அவளிடம் கொடுத்து விட முடியுமா?  தாய்மை அடையும் எத்தனை இளம் பெண்களுக்குத்  தக்கக் காரணத்தோடு மட்டுமே  இவ்வளவு பெரிய முடிவு எடுக்கும் முதிர்ச்சி இருக்கும் என்று சொல்ல முடியும்?

அதுவும் இந்த விஞ்ஞான யுகத்தில் கூட குழந்தைப் பிறப்பும், அதன் ஆயுளும் முழுதாக மனிதரின் கைகளில் இல்லாத நிலையில், நமக்கு அழிக்கும் உரிமை இல்லை என்றே தோன்றுகிறது!

திருமதி சிமோன் 


அழகுப் பெட்டகங்கள்

                                                               
               (நேபால் விமான விபத்தில் மறைந்த குழந்தை நட்சத்திரம்  'தருணி ')

இந்த அழகு முகம் மறைந்துவிட்டது என்ற செய்தி நம் உள்ளத்தை ஊடுருவித் தாக்கவில்லை? ஒரு பூவைப்போல அசைந்தாடி கவனத்தைக் கவர்ந்த புதையல், இனி இல்லை என்ற உண்மை இதயத்தை வலிக்கச் செய்யவில்லை? இந்த அருமைக் குழந்தையை அறிந்தவர்கள், உறவினர் எப்படித் தவித்திருப்பார்கள் என்ற எண்ணம் ஏக்கத்தின் ஊடே தோன்றவில்லை? இந்த அழகுப் பெட்டகத்தை ஈன்ற அந்த முகமறியா தாயும், தந்தையும் எப்படித் துடித்திருப்பார்கள் என்ற உண்மை மனதைப் பிழிய வில்லை?

ஈர நெஞ்சம் கொண்ட யாரும் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது. கையறு நிலையில் விதியைச் சபிக்காமல் இருக்க முடியாது. இறைவனுக்கு ஏன் கருணை இல்லாமல் போயிற்று  என்ற கேள்வி பிறக்காமல் போகாது. யாருக்கோ, என்றோ வந்த சோகம் என்று வாளாவிருக்க முடியாது!

எவருடைய குழந்தையோ இந்த பூமியில் இல்லாமற் போன வெறுமை இத்தகைய வலிமைக் கொண்டது என்றால், நம் உதிரத்தில் தோன்றிய, நமது இன்பத்தின் சான்றான, வழித் தோன்றலை, குடும்ப விளக்கை இழக்கும் பாரம் எத்தகையதாக இருக்கும்?

பெற்று, அதன் முகத்தைப் பார்த்தப் பின்தான் அது நம் குழந்தைய?! உருவானப் பிறகு, அதற்கு உலகைப் பார்க்கும் உரிமை இல்லையா? அந்த உரிமையைப் பறிக்க நாம் யார்?

அதுவும் அந்தக் கொலைப் பாதகத்தைச் செய்வது அதைத் தாங்கி நின்றவளையும் எப்படி மனதாலும், உடலாலும் பாதிக்கும் என்பதை இந்நினைவு தோன்றுமுன் எண்ணிப் பார்ப்பது நலம்.


தவறான கருக்கலைப்பின் விளைவுகள்:

கரு, கருப்பையில் ஒட்டுமுன் கலைப்பது சுலபம். ஆனால் அதற்கான  மருந்தோ  அல்லது கலைக்கும் முறையோ தாய்க்கு எமனாக மாறலாம்.

ஹார்மோன் மருந்துகளை அதிக அளவில் உட்கொண்டால், ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு, கரு ஒட்டாது வெளியேறும்.

சில உணவு வகைகள், வைட்டமின் ஏ, ஈ போன்றவற்றை மிக அதிக அளவில்  உண்டால்  சமச் சீரற்றத் தன்மை உருவாகி, கரு வெளியேறும்.

கரு முழுதும் வெளியேறாது, அதன் பிசிறுகள் தங்கினால், உதிரப் போக்கு நிற்காமல்  இருக்கும்.

கருக்கலைப்பின் போது சுகாதாரம் மிக மிக அவசியம். இல்லையேல் தொற்றுக் கிருமிகள் மூலம் நோய்ப்பட வாய்ப்புள்ளது.

கர்ப்பப்பை வலுவிழந்து போய் விடச் சாத்தியக் கூறு உள்ளதால், பிறகு என்றைக்குமே கருத் தரிக்க வாய்ப்பில்லாமல் போகலாம்.

இறந்த பிண்டம் வயிற்றில் இருக்கும்போது ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படும்.

தாயின் ரத்தம், உறையும் தன்மை இழப்பதன் மூலம் மரணம் சம்பவிக்கலாம்.

கரு கருப்பையில் ஒட்டிய பிறகு, 12 வாரங்கள் வரை சட்ட பூர்வ கருக்கலைப்புச் செய்யலாம்.  ஆனால் பொதுவாக 7ஆவது வாரத்தில் கருவின் இதயத் துடிப்பு வளர்ச்சியுறுகிறது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் அது உலகில் நடமாடத் தன் முதலடியை எடுத்து வைக்கிறது என்றுதானே அர்த்தம்? ஒரு வேளை 12 ஆவது வாரத்தில் பல்வேறு காரணங்களால் அது நின்று போக வாய்ப்புள்ளதாம். அதனால் தான் 7-12 வாரங்களில் ஸ்கேன் எடுக்கச் சொல்கிறார்கள். 'மன வளர்ச்சிக் குறைபாடு' இருந்தாலும் இதன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.

இதற்குப்பின் செய்யப்படும் கருக்கலைப்புகள் தாயின் உயிருக்கு எந்த விதமான ஆபத்தையும் கொண்டு வரலாம்.

இதை விட முக்கியமானது-தாய்மைக்கு இருப்பிடமான பெண்மை, மனதார இந்தக் கொடுமையை ஏற்காது. அவள் மனதில் முள்ளாக நெருடி, என்றும் குற்ற உணர்வை ஏற்படுத்தும்.

இன்பத்தில் சரிசமமாக பங்கு கொள்ளும் ஆணும், மனசாட்சி உள்ளவனாக இருந்தால் என்றேனும் அந்த முள் குத்தும்!

திருமதி சிமோன்

மழலைக் கவிதை


                                                           


மழலை முத்தம்:

அன்னை மடியின் அழகு மழலைத்  தருமே அமுதமுத்தம்
இன்பத்  தேனை இதயங் களிக்க வருமே இனிமைசத்தம்
செண்டு போல செழித்தக் கன்னம் கரும்பைத் தெவிட்டவைக்கும்
வண்டு விழியும் வண்ண உடலும் பெருமை வரவாக்கும்!


அசையும் தென்றல்:

அசைந்துவரும் தென்றலென அருகில் வந்தே
    ஆசையோட ணைக்கவிடு சின்னச் சிட்டே!
இசைந்துதரும் முத்தமென்ற இனிமை ஒன்றே
     இசைக்குமின்ப கீதமென்றன்  மனதுக் குள்ளே!
திசையெங்கும் பேரின்பம் தோன்றும்! உள்ளம்
     திகைக்கின்றேன் நீயில்லா நொடியில்! நானும்
வசைபாடும் இவ்வுலகை மறப்பேன், உன்னை
     வாயாரச் சீர்பாடி மகிழும் போதே!


குழந்தைச் சிரிப்பு:

வண்ண வண்ணப் பூக்களுமே
   வடிவாய் இங்கு  மணம்பரப்பும்
எண்ண எண்ணத் தொலையாத
    எழிலும் எங்கும் நிறைந்திடுமே
சின்னச் சின்ன விழிகாட்டிச்
     சிறுகை கொண்டு சிலிர்த்திடவே
என்னை, உன்னை மறந்திடவே
     எழிலாய் மழலைச் சிரித்திடுமே!


மழலையின் வெளியுலகு:

அன்னைக் கைகளில் அன்புக் குழந்தையின்
முன்னைச் சுகமே முற்றும் மறந்திட
பிள்ளைக் கனியது பேதமைத் துறந்திட
தள்ளும் வழியே படிப்பு!


பேதைமை, உண்மையும் பேரெழில் வண்ணமும்
தீதறு சொல்லுமாய்த் தீண்டிடும் செல்வமே!
உன்மன வானில் உவப்பினை நல்கவே
இன்பந் தருமோ உலகு!

திருமதி சிமோன்குழந்தை 
குழவின் குரலோ குயிலினை வெல்லும்
மழவின் நடையோ மயிலினம் தோற்கும் 
மழலைச் சிரிப்போ மனதினை அள்ளும்
குழந்தைச் செயலே குறும்பு.
                               கவிஞர் வே. தேவராசு
முன்னை வினைவந்து முந்தியே தள்ளிட 
அன்னை வயிற்றில் ஐயிரண்டுத் திங்களாய்த்
தன்னை மறந்துத் தலைகீழ்த் தவமிருந்து 
மின்னலாய்த் தாக்கிய மெல்லடியில் ஊர்ந்தேஇம்  
மண்ணில் பிறந்த மகவும் சிறுபோழ்தில் 
"என்னே இதுநானெங் கேயிருக் கின்றேன்? 
பின்னே யுமிங்கே பிறந்தேனே!"என்றயர்ந்(து) 
அன்னியப் பட்டே அழுகின்ற(து) ஈங்கே!
                               சரோசா தேவராசு


ஆரி ராரோ ஆரி ராரோ
ஆரோ ஆரோ ஆரி ராரோ 
தென்னன் தமிழே! தென்றல் காற்றே! 
மன்னும் அழகே! மலரும் பொழுதே! 
மூன்றாம் பிறையே! முன்னோர்த் தவமே!
தோன்றும் கதிரே! தொல்மணித் திரளே! 
பட்டுப் பூவே! பனியின் துளியே! 
கட்டிக் கரும்பே! கனகச் செப்பே!
மொட்டே! மலரே! மோனத் தெழிலே! 
சிட்டாய் வந்தென் சிந்தை நிறைந்தாய்! 
கண்ணின் மணியே! களிப்புறு வண்டே! 
பொன்னின் அணியே! பொருந்தும் கலையே!
மானே! மயிலே! மழலைக் கிளியே! 
தேனே! சுவையே! தெவிட்டா அமிழ்தே! 
முத்துச் சரமே! முல்லைக் கொடியே! 
கத்தும் குயிலே! கம்பன் கவியே! 
வண்ணத் தமிழே! வளரும் புகழே!
அன்னை அருளே! அற்புதப் பொருளே 
ஆரி ராரோ ஆரி ராரோ 
ஆரோ ஆரோ ஆரி ராரோ

கருக்கலைப்பு - ஒரு கண்ணோட்டம்

                                                                 

கருக்கலைப்பு என்பது கருவை அல்லது முதிர்கருவை கருப்பையிலிருந்து முற்றாக அகற்றி விடுவதாகும். (சில சமயங்களில் தானாகவே இவ்வாறான நிலை ஏற்படும் பொழுது  அது  கருச்சிதைவு  எனப்படும்). இது பொதுவாக வேண்டுமென்றே செய்யப்படும்  கொடூரம் . இந்த சிசுக் கொலைகள் உலகெங்கும்  நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. . கருக்கலைப்பு இன்றைய மருத்துவத்துறையின் வளர்ச்சிக்கேற்ப நவீன சாதனங்களின் உதவியுடன் பல்வேறு முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் மலிந்து போயிருக்கும் கருக்கலைப்புக்கு பல்வேறு காரணங்கள் பல்வேறு தரப்பினரால் கூறப்பட்டாலும்  ஆய்வுகளின்படி, கருக்கலைப்புக்களில் 95 வீதமானவை குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காகவே செய்யப்படுகின்றன. பாலியல் வல்லுறவு, குழந்தைகள் ஊனமாகப் பிறப்பதற்கான அறிகுறிகள், குழந்தை பிறப்பதினால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம்    போன்றவையாலும் கருக்கலைப்புக்கள் செய்யப்படுகின்றன.கருக்கலைப்பிற்கு ஒரு சில நியாயமான காரணிகள் இருந்தாலும் அநேகமானவை சுயநலத்திற்காக செய்யப்படுகின்றதென்பதே உண்மை.

 மேற்குலக நாடுகளில் நிலவுகின்ற, தற்பொழுது நம் நாட்டிலும் புகுந்துள்ள உடன் வாழ்வு (Living Together), தற்காலிக திருமணம், Life partner, Boy/Girl friend போன்ற சீர்கேட்ட இவ் வாழ்க்கை முறைகளின் விளைவாகவும்  இந்தக் கருக்கலைப்பு வீதம் அதிகரித்து வருவதாக சமூகவியலாளர்கள் கூறுகின்றனர்.
 

 பிரிட்டன்  1967 ஆண்டிலும் ஐக்கிய அமெரிக்கா , ஐரோப்பா 1973 ஆம் ஆண்டிலும் சிங்கப்பூர் அதற்கு அடுத்த ஆண்டிலும் கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளன.2007 இல் போர்த்துக்கல் இதை அமுல்படுத்தியது .

கருக்கலைப்பை ஒத்துக் கொள்ளாத நாடுகள் பல இருக்கின்றன . சிலி, எல்சால்வடார், மெல்ட்டா, வாடிகன் சிட்டி மற்றும் நிக்குராக்வா போன்றவையே அவற்றில் சில.கொலம்பியாவிலும் கருக்கலைப்பு சட்ட விரோத செயலாகும். எகிப்து, ஈரான், ஈராக், ஜப்பான், குவைத், சவுதி அரேபியா, துருக்கி, எமிரேட்ஸ் உட்பட பல நாடுகளில் கருக்கலைப்புக்குத் தடையில்லை. ஆனால் கருக்கலைப்பு கணவனின் அனுமதியுடன் தான் நடக்க வேண்டும் என்கிறது சட்டம்.
  
இந்தியாவைப் பொறுத்தவரை  1971 முதல் கருக்கலைப்பு சட்டரீதியாக ஒத்துக் கொள்ளப்பட்டது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இது சட்டமாக்கப்பட்டது.

இந்தியாவில் பெண் சிசுக் கொலையே அதிகமாகச் செய்யப்படுகின்றது. இந்தியாவில் தலைவிரித்தாடும் வரதட்சணைக் கொடுமையால் பெருமளவில் பெண் சிசுக் கொலைகளே புரியப்படுகின்றன. ஒவ்வொரு  ஆண்டும் 10 இலட்சம் பெண் சிசுக்கள் கருவறுக்கப்படுகின்றன. அதாவது தினந்தோறும் 2500 சிசுக்கள் அழிக்கப்படுகின்றன. 2007, 2008ஆம் ஆண்டுகளின் பொருளாதார ஆய்வுகளின்படி,  பெண் சிசுக் கொலைகள்  சீனாவில் 45 விகிதமாகவும் இலங்கையில் 58 விகிதமாகவும் காணப்படுகின்றது.

  பீஜிங்:சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் 1971ம் ஆண்டு முதல் ஒரு குழந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நகரப் பகுதிகளில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம். கிராமப் பகுதிகளில் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் 2வது குழந்தை பெற்றுக் கொள்ளலாம். மீறினால் தண்டனை என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் அங்கு 1971 முதல் 2010 வரை 33 கோடி கருக்கலைப்புகள்  செய்யப்பட்டுள்ளன என்று சீன நல்வாழ்வுத்துறை இணைய தளம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளதுஇதன் எதிரொலியாக அந்நாட்டில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகமானது, பணிபுரிபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

இலங்கையில் தற்பொழுது   நாள்தோறும் ஆயிரம் கருக்கலைப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக சமூக  சேவைகள் அமைச்சர்   பீலிக்ஸ் பெரேரா 09 2013 அன்று தெரிவித்துள்ளார்.


அயர்லாந்தில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் சவிதா ஹாலப்பனவர், அங்கு அவருக்கு கருக்கலைப்பு மறுக்கப்பட்டதால்  காலமானார்.தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கண்டறியப்பட்டால், அச்சூழலில் கருக்கலைப்பை அனுமதிக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.   ஐரோப்பாவில் கருக்கலைப்புச் செய்யும் பெண்களில்  அதிகமானவர்கள் 25 வயதிற்கும் குறைந்தவர்கள். ஆபிரிக்காவில் 26% பெண்கள் 20இற்கும் குறைந்த வயதில் கருக்கலைப்புச் செய்கின்றனர். அமெரிக்காவில்   35% பெண்கள் 45 வயதை அடையும் முன்பு ஒரு முறையேனும் கருக்கலைப்பிற்குள்ளாகி விடுகின்றனர்.


 உ லகம் முழுவதிலும் நடைபெறும் கருக்கலைப்புகளில் பாதி கருக்கலைப்புகள் பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படுகின்றன. பிரசவத்தின்போது நடைபெறும் உயிர் இழப்புகளைவிட, பாதுகாப்பற்ற வகையில் செய்யப்படும் கருக்கலைப்புகளில் உயிர் இழப்புகள் அதிகம். பெண்களின் கல்வியறிவின்மையும்  விழிப்புணர்ச்சி இல்லாமையுமே இதற்கு காரணமாகும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது.  இன்று கொலை செய்யப்படுவது குழந்தையல்ல! அது நாளைய ஞானி, விஞ்ஞானி, வழிகாட்டும் தலைவன், தலைவி, கவிஞன், சிந்தனையாளன் சிறந்த படைத்தலைவன் என்பதை நினைவில் கொண்டு சிந்திப்போம்.

தொகுப்பு:
லூசியா லெபோ. 
 

இன்றைய அறிமுகம்


மறை(ற)க்கப்பட்ட மாவீரன் மருதநாயகம்.

மருதநாயகம், ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலை போராட்ட வீரன்,தமிழன்.இருந்தும் நம்மவர்களால் மறக்கப்பட்ட,மறைக்கப்பட்ட மாவீரன்,இவரை பற்றி பள்ளிப் பாட புத்தகங்களில் கூட வரலாறு இல்லை எனபது வருத்தத்துக்குரிய செய்தி.

 நமது தமிழக வரலாற்று ஆய்வாளர்களின் முடிவுப்படி (இவரின் பிறந்த ஆண்டு துல்லியமாக தெரியாத காரனத்தினால்) இவர் 1720-திற்கும்1730 திற்கும் இடைப்பட்ட காலகட்டதில் ராமநாதபுரம் மாவட்ட பனையூரில் ஹிந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்து பிறகு இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறியதாகவும் பிறகு மதுரையை ஆண்ட காரணத்தால் மருதநாயகம் என்றும், இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப்,என்றும் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் அறியப்படுகிறார்.

இளமைமுதல் மருத்துவர், தையல் தொழிலாளி, படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திறமைகள் கொண்டு இருந்தாலும் போர்களத்தில் இருந்த ஈடுபாடு காரணமாக தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் சிறிது காலத்துக்கு பணிபுரிந்தது இவரின் முதல் ராணுவ அனுபவம்.பிறகு புதுச்சேரி சென்று பிரெஞ்சுபடையில் சாதாரண ராணுவ வீரனாக சேர்ந்து தன்னுடைய அறிவால்,தலைமைபண்பால்,போர்நுட்பதால் பிரெஞ்சுதளபதிகளின் கவனத்தை கவர்ந்து முக்கிய பதவிகளை  பெற்றார். 

ஔரங்கஜேப் பின் மறைவுக்கு பின் மொகலாய பேரரசு சரியாய் ஆரம்பித்த கால கட்டம், குறிப்பாக தெனிந்தியாவில் கர்நாடக நவாப்,ஹைதராபாத் நிஜாம்,ஆற்காடு நவாப்,போன்ற சிற்றரசுகள் தோன்ற தொடங்கி ஆற்காடு நவாபாக யார்முடிசூட்டி கொள்வது என்ற போட்டியில் ஒரே ரத்த உறவுகளான சாந்தா சாஹிபும்,முஹம்மது அலியும்,முறையே பிரெஞ்சு படை,ஆங்கிலேயப்படையினரின் ஆதரவில் மோதி கொள்ள தொடங்கின.
மருதநாயகம் பங்குகொண்ட பிரெஞ்சுபடையின் உதவியால் ஆரம்பத்தில் பல வெற்றிகளை பெற்றாலும் சிலதுரோகத்தின் காரணமாக 1751 இல் ஆற்காட்டில் நடந்த போரில் வீழ்த்தப்பட்ட சாந்தா சாஹிப் திருச்சியில் நத்தர்ஷா தர்கா அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.

கவனிக்க:: (ஔரங்கஜேப் அவர்கள் பல நவாபுகளை நியமித்தார். நவாப் என்றால் பிரதிநிதி என்று அர்த்தம். இவருக்கு மேல் நிஜாம், நிஜாம் என்றால் அதிபர் என்று அர்த்தம். ஹைதராபாத் நிஜாமின் கீழ்தான் கர்நாடக நவாபும், ஆற்காடு நவாபும் செயல்பட்டனர்.)

ஆற்காட்டை தலைநகராக கொண்டு வேலூரில் இயங்கிய ஆற்காட்டுநவாபின் அரசு எல்லாவகையிலும் முதன்மையாக இருந்ததால் இவர்களிடம் அனுமதி பெற்றுதான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேய வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.  ஆற்காட்டு போரின் தோல்விக்குப்பின் பிரெஞ்ச்காரர்களின்  செல்வாக்கு தமிழகத்தில் குறைந்ததால் அவர்கள் புதுவை,காரைக்காலுடன் தங்களின் ஆதிக்கத்தை நிறுத்திக்கொண்டனர்.மேலும் பிரெஞ்ச்தளபதிகளுடன் மருதநாயகத்துக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணத்தால் மருதநாயகம் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார். தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர்.

 விதியின் வசத்தால் அப்போது மருதநாயகம் ஆங்கிலேயர் சார்பாக ஒரு போரை சந்தித்தார் எதிர்அணியில் இருந்தவர் மைசூர் சிங்கம்  ஹைதர் அலி.(தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகமும் பின்னணி என்பது உண்மை).ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிலேயர்கள் பூரித்தனர்.

திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.

1752ல்(இன்றைய) கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது.மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர்.

மதுரையில் இருக்கும் கான்சா மேட்டுத் தெரு, கான்சாபுரம், கான்பாளையம் போன்ற பகுதிகள் அவர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் கூமாப்பட்டிக்கு அருகே உள்ள கான்சாஹிபுரம், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மற்றும் தேனி மாவட்டம் பெரிய குளம் அருகிலுள்ள கான்சாஹிப்புரம் அல்லது மம்சாபுரம் ஆகியன,மற்றும் இன்று பரபரப்பாக பேசப்படும் பெரியாறு அணைக்கட்டிலிருந்து, பாசன நீரை மதுரைக்கு கொண்டு வர அன்றைக்கு திட்டமிட்டவர் இவர்தான். வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில், அணைக்கட்டு ஒன்றை கட்டினார். திருநெல்வேலியில் உள்ளமேட்டுக் கால்வாய் திட்டத்தை உருவாக்கி அதை வடிவமைத்தார்.

இவரது ஆட்சிக் காலத்தில்தான் வட இந்தியாவிலிருந்து சௌராஷ்டிர மக்கள் அதிகமாக மதுரைக்கு வருகை தந்தனர். அவர்களின் உழைப்புக்கு உறுதுணையாக திட்டங்களை வகுத்து நிதியுதவியும் செய்தார். இதனால் உழவுத்தொழிலுடன், நெசவுத்தொழிலும் செழித்தது.நவீன இயந்திரங்கள் இல்லாத அக்காலத்தில் கொடைக்கானல் மலையடிவார பாதைகளை சிறப்பாக அமைத்து முதலில் சாலை அமைக்கப்பட்டது மருதநாயத்தின் ஆட்சியில்தான்.அப்போது சிறப்பாக செயல்பட்ட தொண்டி துறைமுகத்தையும், தூத்துக்குடி துறைமுகத்தையும் மதுரையுடன் இணைக்கும் வகையில் தேசிய வர்த்தக சாலைகளை உருவாக்கினார். மேலும்  திருநெல்வேலி, கம்பம் போன்ற தொலைதூர ஊர்களுக்கும் மதுரையிலிருந்து எளிதாக செல்ல சாலைகளை அமைத்தார்.

இதைப்பற்றி கர்னல் வில்லியம் புல்லர்டன் என்ற ஆங்கிலேயர்(“A VIEW OF THE ENGLISH INTERESTS IN INDIA”) என்ற தன்னுடைய நூலில் “மருதநாயகத்தின் ஆட்சியின் கீழ் நிர்வாகம் மிகவும் சுறுசுறுப்பாகவும், பலன் தரத்தக்கதாகவும் செயல்பட்டது. அவரது நீதி சார்பற்று இருந்தது. அவரது செயல்பாடுகளை,நடவடிக்கைகளை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்று பின்பற்றினார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

ஏற்கனவே மருதநாயகம் தெற்கு சீமையின் கவர்னராக நியமிக்கப்பட்டதில் இருந்து பொறாமையில் இருந்த ஆற்காட்டு நவாபினால் சிறந்த நிர்வாகத்தினால் மருதநாயகம் அடைந்து வந்த புகழையும் ஜீரணிக்க இயலவில்லை.இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது.(இன்று ஆற்காடு இளவரசராக சென்னையில் வலம் வரும் இளவரசர் முகம்மது அலியின் முன்னோர்கள்தான் ஆற்காடு நவாபினர்). திருச்சி பகுதியில் மருதநாயகம் கப்பம் வசூலிக்க தடை என ஆற்காடு நவாப் கூற எதிர்த்து ஆங்கிலேயர்களிடம் முறையிட்டார் மருதநாயகம் முறையிட பிரச்சனையை சுமூகமாக தீர்க்க விரும்பிய ஆங்கிலேயர்கள், மருதநாயகத்திடம் திருச்சிதானே..போனால் போகட்டும் உனக்கு மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் கப்பம் வசூலிக்கும் உரிமையை தருகிறோம் என்றனர்.

அடுத்த கட்டமாக ஆற்காடு நவாப், வரவு & செலவுகளை மருதநாயகம் ஒழுங்காக சமர்ப்பதில்லை என்றும், தன்னை நலன் விசாரிக்க வந்த மருதநாயகத்தை, “என்னை கொல்ல சதி செய்தார்” என்று அதிரடியாக புகார் கூறினார். இப்படி மருதநாயகதுக்கும்,ஆற்காட்டு நவாபுக்கும்,இடையே ஏற்பட்ட பனிப்போரில் குளிர் காய்ந்த ஆங்கிலேயர் ஆற்காட்டு நவாபுக்கு ஆதரவான நிலை எடுக்க, ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கிய  மருதநாயகம்! நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-? இவர்கள் யார்-? அன்னியர்கள்தானே? இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் தூண்டியது!

மருதநாயகத்துக்கு கோபம் பீறிட்டது, கொதித்து எழுந்தார். தன் ஆற்றலையும், தியாகங்களையும் மறந்து விட்டு ஆங்கிலேயர்கள் நடந்து கொண்டதை அவரால் பொறுக்க முடியவில்லை. விளைவு????அடுத்த பகுதியில் நிறைவுறும்.

அப்துல் தயுப்.