பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 mai 2011

எண்ணப்பரிமாற்றம்

Afficher l'image en taille réelle


அன்புடையீர்,

2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கம்பன் கழக மகளிரணி, எங்கள் செயற்குழு உறுப்பினர்களின்  ஒருங்கிணைந்த  , கரம் கோத்த உழைப்பினாலும் அறிவார்ந்த செயல்பாடுகளாலும் இன்று தனது இரண்டு ஆண்டுகளுக்கு மேலான ஆக்கப்பூர்வமான நிகழ்வுகளை நிறைந்த மனதோடு நினைவு கூறுகிறது. நாங்கள் ஆர்வத்தோடு நட்ட தளிர் வேரூன்றி விட்டதை மகிழ்வோடு கண்டு களிக்கிறோம்.

கடந்த    28 -5 -2011 அன்று நாங்கள் நடத்திய "மகளிர் விழா" வின் பூரண வெற்றி எங்கள் உற்சாகத்திற்கு மேலும் நீர் வார்த்திருக்கிறது . அரங்கம் நிரம்பி , மக்களுக்கு வெளியே நிற்கும் நிலை ஏற்பட்டதற்கு வருந்தினாலும் , அவர்களது ஆதரவினைப் பெற்றுவிட்ட ஆனந்தம் எங்களை சூழ்ந்திருகிறது . குழந்தைகளையும் , பெண்டிரையும் கருத்தில் நிறுத்தி அவர்கள் திறமைகளை வெளிக்கொணரவும் , சமுதாயப் பிரச்சனைகளை பல்வேறு கோணத்தில் ஆராய்ந்து மக்கள் முன் படைக்கவும் நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளே இந்த வெற்றியைத் தந்திருக்கிறது என்றால்அது மிகை அல்ல.   

இந்தக் குறிக்கோளுக்காக எங்களோடு ஒத்துழைத்த அனைவரையும் நாங்கள் நன்றியோடு நினைவு கூறுகிறோம் . இனி வரும் காலங்களிலும் அவர்களது ஒத்துழைப்பு நிச்சயம் எங்களுக்கு உண்டு என்றும் நம்புகிறோம் . அதையே வேண்டுகிறோம். 

"அன்னை தெரேசா "வை எங்கள் இலட்சிய நாயகியாகக் கொண்டுள்ள மகளிரணி , அவர்களது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய இந்த வேளையில், அவர்கள் பாதையில் சேவை புரியவும் முடிவெடுத்திருக்கிறது என்பதை களிப்போடு தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் மீது   நம்பிக்கையும் , அன்பும் கொண்டவர்களின் உதவியால் இந்த எண்ணம் நிச்சயம் செயலாக உருப்பெறும் என்பதில் ஐயமேதும் இல்லை .

நன்றி.

திருமதி. சிமோன்                                            

    

இன்றைய அறிமுகம்


புத்தர் பெருமான், "உலக வாழ்க்கைத் துன்பங்களுக்குக் காரணம் ஆசையே! ஆசையை ஒழித்துவிட்டால் துன்பங்களை நீக்கி மன அமைதியும் ஆனந்தமும் அடைய முடியும் . தீமைகளைத் தவிர்த்து , நன்மைகளைச் செய்துவந்தால் ஆசை அகன்று விடும் " என்னும் தத்துவத்தைப் போதித்தவர் .இவர் போதனைகளைப் பின்பற்றுவோர் "பௌத்தர்கள்  "      என்று அழைக்கப்படுகின்றனர்.  

புத்தர் , நேபாளத்தில் கபிலவஸ்து அருகில் 'லும்பினிக் ' நகரில் கி .மு566 இல்    மேத்திங்கள் முழுமதி நாளில் சாக்கிய நாட்டு மன்னர் 'சுத்தோதனார்'- மாயாதேவி' தம்பதியினருக்கு மகனாய் உதித்தார் . பெற்றோர் இவருக்கு "சித்தார்த்தர்  " எனப் பெயரிட்டனர் . யசோதரை என்னும் இளவரசியை மணந்து , இராகுலன் என்ற மகனைப் பெற்ற அவரது வாழ்க்கை அவருடைய 29 ஆம் அகவையில் பெரும் மாற்றம்  கண்டது. 
நகர் உலா சென்ற ஒரு நாளில் வயது முதிர்ந்த ஒருவரையும், நோயாளி ஒருவரையும் பிணம் ஒன்றையும் காண நேர்ந்த      சித்தார்த்தர், மனித வாழ்க்கையின் பிணி, மூப்பு, சாக்காடு, துன்பம்   இவற்றைப் பற்றியும் அதன் காரணங்களைப் பற்றியும் ஆராயத் தொடங்கினார்.துறவறம் பூண்டார் . வைசாலி-அலாரா, இராஜ கிரகம் உருத்திரிகா ஆகியோரிடம் பாடம் கேட்டார் . 'உருவேலா' என்னும் இடத்தில் தவம் மேற்கொண்டார் .  

தனது 36 ஆம் வயதில் "நைரஞ்சனா" ஆற்றுக்  கால்வாயில் புனித நீராடி , "கயா" என்னும் இடத்தில "போதி" மரத்தடியில் (அரசமரம் ) அமர்ந்து கடும் தவம் புரிந்தார். அங்கு அவருக்கு "ஞானப் புத்தொளி " தோன்றியது . அன்று முதல் அவர் "புத்தர் " (ஒளி பெற்றவர்), "ததாகதர் " (உண்மையை அறிந்தவர் ), "சாக்கிய முனிவர் " என்று அழைக்கப்பட்டார் . தன்  ஆசையையும், தான் , தனது என்ற அகந்தையையும் வென்ற "நிர்வாண நிலை"யை  அடைந்தார். 

45 ஆண்டுகள் தன் கொள்கையைப் போதித்த புத்தர் தமது 80 ஆவது வயதில் இந்தியாவில் உத்திரப்பிரதேசம்  'குஷி' நகரில் இறைவன் திருவடி சேர்ந்தார் . அவர் தன்னை ஒரு தேவன் என்றோ , கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை . தான் 'புத்த நிலையை அடைந்த மனிதன்' என்றும், மானிடர் அனைவரும் அந்நிலையை அடைய முடியும் என்றும் தெளிவாக வலியுறுத்தினார் . பௌத்த சமயம் இந்தியா , நேபாளம் ,திபெத் , ஸ்ரீலங்கா , சீனா, ஜப்பான்,தாய்லாந்து மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் பரவியது.  

"அட்டசீலம்" (எண்வகை வழிகள் ) மூலம் ஆசைகளை ஒழித்து,  துன்பத்திலிருந்து விடுபடலாம் என்றார் புத்தர்.
  •  நல்ல நம்பிக்கை: ஏழ்மை , நோய், மூப்பு, இறப்பு  ஆகியவற்றிளிந்து விடுபடல் வேண்டும் என்ற நம்பிக்கை கொளல். 
  • நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டு ஒழிக்கவும், சினத்தை அகற்றவும் ஒருவருக்கும் தீமை செய்யாமல் இருக்கவும் தீர்மானித்தல்.
  •  நல்ல வாய்மை: பயனற்றதும், கடுமையானதும் , பொய்யானதுமான சொற்களைக் கூறாதிருத்தல் 
  • நற்செய்கை : பிறரைத் துன்புறுத்தாமலும் (அஹிம்சை) , களவாடாமலும், நன்னெறி தவறாது இருத்தல்.
  •   நல்வாழ்கை: பிச்சை எடுத்து வாழ்தல். 
  • நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.
  • நற்சாட்சி: சிற்றின்ப ஆசையையும் , துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடன் இருத்தல்.
  • நல்ல தியானம்: குறிக்கோளை அடைய மனம் ஒருவழிப்பட்டு சிந்தித்தல் .          
  வே. தேவராஜ்


                                   

இரண்டாமாண்டு மகளிர் விழா

  
அன்னை தெரேசா நூற்றாண்டு விழா நிகழ்வுகள் 

கம்பன்    கழக மகளிரணி நடத்திய இரண்டாமாண்டு "மகளிர் விழா" கார்ழ் லே கோனேஸ் நகரில் கடந்த  28 -05 -2011 சனிக்கிழமை பிற்பகல் தொடங்கி வெகு சிறப்பாக நடந்தேறியது.   

இந்தியன் வங்கி அதிகாரி திருமிகு இராஜன் , திருமதி உஷா இராஜன் இணையர் மங்கள விளக்கேற்றி இனிதே விழாவைத் தொடங்கி வைத்தனர். மகளிரணி துணைத்தலைவி திருமதி சரோஜா தேவராஜ் இறை வணக்கம் பாட,செல்வி அனுஷ்யா தமிழ் வேந்தன் தமிழ்த்தாய் வாழ்த்தை தன்இனிய குரலில் பாடி சுவை ஊட்டினார் .

தொடர்ந்த தமிழிசையினை செல்விகள் ஜெயராஜா ஜெநோலியா , குலேந்திர ராஜா தேஜஸ்வினி , கவீந்திரன் சுஜிதா, ஹரிஹரன் அஜீனா, தமிழ்வேந்தன் அனுஷ்யா ஆகியோர் நல்ல தமிழ் உச்சரிப்புடன் ஒருமித்தக் குரலில் சிறிதும் பிசிறின்றி மிகவும் அற்புதமாக அளித்து தங்கள் குரல் வளத்தால் அனைவர் பாராட்டையும் பெற்றனர்.

பின்னர் "இளமயில்" செல்வி சாரநாயகி கோபாலகிருஷ்ணன் ,  தனது நளினமான   பரத நாட்டியத்தால் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளித்தார் .
 
 பன்மொழி அறிஞரும்  சிறந்த கல்வியாளருமான திருமதி சுசீலன் இராதிகா தேவி அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்க, மகளிரணி செயலர் திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால் அனைவரையும் அன்புடன் வரவேற்றார் . திருமதி இராதிகா தேவி தன் தலைமை உரையில் "பிள்ளைகள் தங்கள் வயதான பெற்றோரை அன்பு செலுத்திப் பாதுகாக்க வேண்டும்" என்ற கருத்தை வலியுறுத்தினார்.

"தியாகச்சுடர்" அன்னை தெரேசா" என்னும் தலைப்பில் கவிஞர்கள் லினோதினி சண்முகநாதன், சரோஜா தேவராஜ், அருணா செல்வம் ஆகியோர் தமிழ் மணக்க "கவி மலர்" சூட்டியபின் "அமைதியின் ஆலயம் அன்னை தெரேசா" என்ற தலைப்பில் மகளிரணி பொருளாளர் திருமதி லெபோ லூசியா அவர்கள் அன்னை தெரேசாவின் அன்பு, தொண்டு, கருணை , இறைபக்தி பற்றிய செறிவான சிறப்புரையை வழங்கினார்கள். 

மகளிரணி திங்கள் தோறும் நடத்தும் கருத்தரங்குகளில் இடம்பெற்ற சிறப்புச் சொற்பொழிவுகள், கவிதைகள், சென்ற "மகளிர் விழா" நிகழ்வுகளில் சில பகுதிகள்   தாங்கிய  "மலர்" ஒன்று திருமதி உஷா இராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து திருமதி சுசீலா இராதிகா தேவி, நம் பாரம்பரியக் கலைகள் தொடர்ந்து பரிமளிக்கும் என்ற நம்பிக்கையை   ஊட்டிய செல்விகள் பிருந்தா நடராஜா , பானுஜா நடராஜா, அனுஷ்யா தமிழ் வேந்தன் ஆகியோரின் "வீணை இசை" எல்லோரையும் கிறங்கச் செய்தது.     .

  முத்தைப்பான "சொற்போர் அரங்கம்", குடும்பத்தில் விரிசல் உண்டாகக் காரனும் பலவாக இருப்பினும் , 'தான் எனும் ஆணவம் ','பொருளாதாரம் ',  கடமைகள்', 'சுற்றம்' இவையே பெரும்பாலும் அடித்தளமாக அமைகின்றன என்னும் கனமான தலைப்பில் விரிவுரைக்கப்பட்டது . முறையே கவிஞர் லினோதினி சண்முகநாதன், கம்பன் இதழ் ஆசிரியர் கவிஞர்  அருணா செல்வம், கம்பன் மகளிரணித் துணைச் செயலர் திருமதி சுகுணா சமரசம், கம்பனே மகளிரணி செயற்குழு உறுப்பினர் திருமதி பிரபாவதி அசோகன் தங்கள் ஆழமான கருத்துக்களைத் தேவையான எடுத்துகாட்டுகள்,கதைகள் ,பாடல்கள் மூலம்வலியுறுத்த , செயலர் திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால் தலைமை ஏற்று , ஒரு குடும்பம் எதனை பிரச்சினைகள் வந்தாலும் விட்டுகொடுத்தல்    மூலம் அவற்றை சமாளிக்கலாம் என்ற நடைமுறை அறிவுரையும் அளித்தார். அனைவரையும் சிந்திக்க வைப்பதாக இந்நிகழ்ச்சி அமைந்து சிறப்படைந்தது  .

அடுத்து 'கி போர்டு ' வாசித்த செல்வன் சரண் கோபாலகிருஷ்ணன் தன் பிஞ்சு விரல்களின் விளையாட்டால்இசை மழை பொழிந்து அனைவரையும் கவர்ந்தான்.  

நிறைவாக இடம்பெற்ற "தமிழாக்கப் போட்டி" மகளிரணித் துணைத்தலைவி திருமதி சரோஜா தேவராஜ் அவர்கள் தயாரிப்பில் நடத்தப்பட்டது . திருமதி சுகுணா சமரசம் உடன் நடுவராக செயல்பட, விழாவுக்கு வந்திருந்த பார்வையாளர்களில் பாத்து மகளிர் கலந்து கொண்டு பிறமொழி நீக்கி தமிழ் பேசும் ஆர்வம் இருந்ததால் , தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்சமில்லை என்று நிரூபித்தனர்.  போட்டிக்கு தேந்தெடுக்கப்பட்ட கருத்துக்கள் அரிய,பயனுள்ள கருத்துக்களாக இருந்தன.    

கம்பன் கழகத் தலைவரின் துணைவியார் , மகளிரணியின் செயற்குழு உறுப்பினர் என்பதற்கு மேலாய் ஆர்வத்துடன் உழைக்கும் திருமதி குணசுந்தரி பாரதிதாசன் அவர்கள் தன் நன்றி உரையை கவிதையாக நவின்று, தன் பேச்சுத் திறமையை நிலை நாட்டினார்.

விழா நிகழ்வுகள் அனைத்தையும் தன் இனிய குரலாலும், அழகுத் தமிழாலும் தொகுத்து வழங்கிய துணைப்பொருளாளர் திருமதி கோமதி சிவஹரியால் விழா மேலும்  மெருகேறியது.      

கம்பன் கழகம் பொங்கல் விழாவில் நடத்திய "கோலப்போட்டி", "ஓவியப்போட்டி" களில் வெற்றி பெற்ற பெண்களுக்கும், சிறுவர், சிறுமியருக்கும் மகளிரணி பரிசுகள் வழங்கி நிறைவு கொண்டது. 

   குளிர்பானம், காபி , சிற்றுண்டி என சுவையான உணவும் பரிமாறப்பட்டது  மொத்தத்தில் கம்பன் கழக மகளிரணியின் "இரண்டாம் ஆண்டு மகளிர்விழா " வெற்றியைக்கண்டது என்பதில் சந்தேகமில்லை!             


-தாமரை-  

சிறு கதை

                                        
 அறிந்தும் அறியாமலும் 

"டேய் முரளி. .உன் சித்தி போன் பண்ணினா . .  அவளோட வண்டி நடக்கலை. உன்னை கொஞ்சம் அனுப்ப சொன்னா. . நானும் சரின்னுட்டேன் . போய் கொஞ்சம் பார்த்திட்டு வாடா" இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கும்மகனை எழுப்பினாள் கமலம்.

"ஏம்மா, அந்த சிடுமூஞ்சி சித்திய பாத்தாலே எனக்கு புடிக்காதுன்னு தெரியுமில்லே ? நான் வீட்லே இல்லேன்னு சொல்ல வேண்டியதுதானே!நான் போவமாட்டேன் போ!" மேலும் இழுத்துப் போர்த்திக்கொண்டான் முரளி! 
"டே,அவளேப்பத்தித்   தெரியுமில்லே ? நீ வெளியே போயிருக்கேன்னா. . புள்ளைங்களை வளக்கிற லட்சணம் இதுதானா? காலைலே எங்க ஊர சுத்தப் போயிட்டான்னு என்கிட்ட கத்துவாடா !நீ போய் என்னதான்னு பாத்திட்டு வந்திடு . என்  தங்கமில்லே . .     போர்வையை இழுத்தவாறே மகனிடம் கெஞ்சினாள் கமலம்.       
"இதுங்களுக்கு வேற வேலையே இல்ல . . வண்டி ஒடலேன்னா ஆட்டோவுல போவ வேண்டியதுதானே! எல்லாத்துக்கும் நான் போவணும். அதுவும் அந்த சித்தியை  பாத்தாலே எனக்கு  புடிக்கலே . எல்லாரையும் ஏதாவது  கொறை சொல்லிக்கினே திரியும். இருவத்தொன்னாம் நுற்றாண்டில் பொறந்து வந்த பட்டிக்காடு. எந்தப்பொண்ணும் எந்த ஆம்பிளயோடும் பேசக்கூடாது. ஆம்பிளையை பாத்தாக்கூட அவ தப்பான பொண்ணுன்னு முடிவு பண்ணிடறது. தவறிப்போய் ஏன் ப்ரெண்டுங்க யாராவது ஒரு அலோ  சொல்லிடட்டுமே . . அவ்வளவுதான். என் தலையும் அந்தப்பொண்ணோட தலையும் ஒண்ணா சேர்த்து உருட்டப்படும். அது மட்டுமா? அன்னைக்கு முழுசும் எனக்கு அறம் பாடப்படும். சரியான பட்டிக்காடு. சந்தேகப்பிராணி . பாவம் சித்தப்பா. இந்தச்  சித்திக் கொடுமையினாலே குனிஞ்ச தல நிமிராத பொண்ணுமாதிரி ஆயிட்டார்.   அவருக்காகத்தான் எல்லாத்தையும் பொருத்துக்கிறேன். அவன் பாட்டுக்கு சித்தியை திட்டிக்கொண்டே  கிளம்பினான்.      
"வா முரளி. காலைலே ஒன்பது மணிக்கு போன் பண்ணினேன் .நாலு தெரு தள்ளியிருக்கிற வீட்டிலிரிந்து வர ஒனக்கு ஒரு மணி நேரும் ஆயிருக்கு. என் வண்டிய மெக்கானிக் எடுத்துக்கிட்டு போயிட்டான். இன்னைக்கு சண்டே . நாளான்னிக்கு சௌமியாவுக்கு பிறந்த நாள் . அவளுக்கு துணி எடுக்கணும். கிப்ட் வாங்கணும் . பத்து வயதாகிறதா? அவ எல்ல பிரேண்டையும் கூப்பிடணுமாம். ஒன் சித்தப்பா அவர் தங்கச்சி வீட்டுக்கு போயிருக்கிறார். ஏதோ பிரச்சனையாம். காலையிலேயே போன் பண்ணிட்டா. நெறைய வேலையிருக்கு வா, ஒன் வண்டிலேயே போயிடலாம்.    
சித்தி பேசிக்கொண்டே வண்டியில் ஏறி உட்கார்ந்தாள் . முரளி வாய்திறக்காமல் வண்டியைக்  கிளப்பினான். நாலைந்து கடை ஏறி இறங்கி குழந்தைக்குத் துணி எடுத்தாள், மளிகைப் பொருட்கள் வாங்கினாள்.

வெயில் கொளுத்தியது.ஏதாவது ஜூஸ் குடிக்கலாம் என்று ஒரு ஓட்டலுக்குள் நுழைந்து அமர்ந்த பிறகுதான் பார்த்தாள்,எதிர் வரிசையில் அவள் ஆபிசில் வேலை செய்யும் கோகுலன் ஒரு பெண்ணுடன் சிரித்து பேசியவண்ணம் ஐஸ் கிரீம் சாப்பிடுவதை!   

அந்தப்  பெண்ணை உற்று நோக்கினாள். அவள் அவன் மனைவி கிடையாது. ஆனால் அவன் மனைவியைவிட இளமையாக அழகாக இருந்தாள்.அவள் அவனுடன் பேசிச் சிரித்தது இவள் காதில்   ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது  போல இருந்தது. அதைப் பொறுக்க முடியாமல் சட்டென்று எழுந்து "வா நாம இளநீர் குடிக்கலாம்" என்று அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வெளியே நடந்தாள்.  

முரளி கோபத்துடன் அவளைப் பின்தொடர்ந்த்தான். அவனும் தன் சித்தி எதிர் வரிசையில் இருந்தவர்களைப் பார்த்து முகம் சுருக்கியதைக் கவனித்தான். இன்றைக்கு சித்தி வைக்கு அவலாக இவர்கள் கிடைத்துவிட்டார்கள் என்று அவனுக்கு அப்போதே புரிந்து போயிற்று.  

அவ நினைத்ததைப் போலவே கையில் இளநீரை வைத்துக்கொண்டு, அதைக் குடிக்காமல் அவர்களைத் திட்டித் தீர்த்தாள். "ஏன் இப்படி நாடு  கெட்டுப் போய்விட்டது? பெண்கள் ஏன் அடுத்தவள் புருஷன் மேல் ஆசைப்படுகிறார்கள்?ஆண்கள் புத்தி சபலம் கொண்டது என்று தெரிந்தும் அவர்களைக் கெடுப்பதே இந்தப் பெண்கள்தான். . பெண்ணுக்கு பெண்தான்எதிரியே. ஆண்கள் நல்லவர்களாக வாழ நினைத்தாலும் பெண்கள்தான்  அவர்களை மயக்கி விடுகிறார்கள் "   
அவள் அவர்களைத் திட்டத்திட்ட இளநீரே சூடாகி இருக்கும். முரளி எதுவும் பேசாமல் குடித்தான். பிறகு எப்படியோ வண்டியில் ஏறி அமர்ந்தாள். கையில் துணிக்கடைப் பைகள், மளிகைச் சாமான் பைகள்,
காய்கறிப் பை என்று ஏகப்பட்டது இருந்தது. எல்லாவற்றையும் பிடித்துக்
கொண்டு, கட்டியிருந்த சிபான் புடைவையும் வழுக்கிவிடாதவாறு யமகா
வில் எது எங்கே விழுந்து விடுமோ என்று பார்த்துப் பார்த்துப் பிடித்துக்
கொண்டு வீடு வந்து சேரவே போதும் போதும் என்றாகிவிட்டது மஞ்சுளா
விற்கு. வீடு வந்ததும் முரளிக்கு வாங்கிய டீசர்டைக் கொடுத்ததும் அவன்
விட்டது போதுமடா சாமி என்று வீட்டிற்கு ஓடினான்.

அன்று நாள் முழுவதும் தன் கணவனிடம் இதே பேச்சு!  காலையில் அந்தாளைப் பார்த்தால் வணக்கம் கூட சொல்லக்கூடாது. அழகான பெண்கள் கிடைத்தால் உடனே கட்டிய மனைவியை மறந்து விட எப்படித்
தான் இந்த ஆண்களுக்கு எண்ணம் வருகிறதோ... இந்த பொம்பளைங்களையும் சும்மா சொல்லக்கூடாது. ஆண்களிடம் எப்படிப்
பழக வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல்...ச்சே! என்ன சென்மங்களோ!

மறு நாள் அலுவலகத்தில்...  "குட் மோர்னிங் மேடம்" என்ற கோகுலனுக்கு
பதில் வணக்கம் சொல்ல மனம் வரவில்லை மஞ்சுளாவிற்கு. பேசாமல்
முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றாள். இவள் குணம் ஓரளவு தெரிந்ததால்
அவன் யோசனையுடன் நகர்ந்தான்."குட் மோர்னிங் மஞ்சு, எப்படி இருக்கிறீங்க  
நேத்து ஷாப்பிங் வந்தீங்களா! நான் உங்களைப் பார்த்தேன், ஆனால் நீங்க
என்னைக் கவனிக்கலை". உடன் வேலை செய்யும் மேனகா சிரித்தபடி
சொன்னாள். "ம்" என்று தலையை மட்டும் ஆட்டிவிட்டு தன வேலையை
கவனிக்க ஆரம்பித்தாள் மஞ்சுளா. அவளுக்கு எல்லோரிடமும் சிரித்து
கலகலப்பாகப் பேசும் மேனகாவைக் கண்டாலே பிடிக்காது." சிரிப்பைக் காட்டி எத்தனைப் பேரை வளைத்துப் போட்டாளோ! இவளிடம் என்ன
பேச்சு வேண்டி இருக்கிறது!"

"என்ன மேனகா, உங்களுக்கும் குட் மோர்னிங் சொல்லலையா? ரொம்ப
களைப்பா இருக்கும். நேற்று பூரா அந்தச் சின்னப் பையன் கூட ஓட்டம்
இல்லையா?" கோகிலன் சொல்லவும், "வாயை மூடுங்க சார், என்ன பேச்சு
பேசுறீங்க!" என்றால் மேனகா கோபத்துடன்.

"ஏன்? நான் உண்மையைத்தான் சொல்றேன்! நேத்து என்னோட திருமண
நாள். ஏன் மனைவி, தங்கைகள் என்று குடும்பத்தோட ஓட்டலுக்கு போயிருந்தோம். அப்போ அவங்களும் அந்தப் பையனும் வந்தார்கள்.
என்னைப் பார்த்ததும் அச்சப்பட்டுக்கொண்டு பார்க்காதது போல போய்விட்டார்கள். அந்தப் பையனோடு வண்டியிலே என்னம்மா ஒட்டி
ஒரசிக்கிட்டு...சேச்சே!  என் மனைவி அதைப் பார்த்திட்டு இனிமே அவகூட
பேச்சே வச்சிக்காதீங்கன்னு சொன்னா! இவ என்னமோ பத்தினி வேஷம்
போடுறா!"

"கோகுலன் வாய மூடுங்கள். அவன் அவங்களோட அக்கா பையன். அவனோடயா சேர்த்து வச்சி பேசுவீங்க? ஒருத்தரை சந்தேகப்பட ஒரு
வரைமுறை இல்லையா? மேனகாவின் வார்த்தையில் கோபம் கொப்பளித்தது.

"ஏன் அவங்க எல்லோரையும் வரைமுறை பார்த்தா சந்தேகப்படறாங்க?

 அவன் அவங்க அக்கா பையன்னு நீங்க சொன்னதால தெரியுது. எல்லாருக்கும் தெரியுமா? அவங்க எல்லாரையும் விஷம் கலந்து பார்க்கும்
போது அவங்க செய்யறத மட்டும் மற்றவங்க நல்ல கண்ணோட்டத்தோட
பார்ப்பாங்களா?"

கோகுலன் பைலை எடுத்துக்கொண்டு நகர்ந்தார், அங்கே நின்று கொண்டிருந்த மஞ்சுளாவைப் பார்த்தும் பார்க்காதவர் மாதிரி. மேனகா
மஞ்சுளாவைக் கண்டதும் என்ன செய்வதென்று தெரியாமல் அசட்டுச்
சிரிப்புடன் நெளிந்தாள். தன் தவறை முதன் முறையாக உணர்ந்த
மஞ்சுளா அவளைப் பார்த்து சிநேகமாய் புன்முறுவல் பூத்தாள்.

அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் தவறென்பது தவறுதான்.
எதுவுமே தனக்கென்று வரும்போதுதான் நன்மைகளும், தீமைகளும்
விளங்கும்.

அருணா செல்வம்


மதி விருந்து


பழிச் செயலும் அறச் செயலும் :

துன்பத்தை விளைக்கவல்ல செயல் கடமை
 சொல்லியுள்ளார் பழிச்செயல்கள் என்றுமேலோர்
இன்பத்தைக் காக்கவல்ல செயல்கள் எல்லாம்
 ஈதல் இசைபட வாழ்தல் இரண்டாலாகும்
அன்புக்கே அடிப்படை இச்செயல் கடமை
 அறமென்றார்  பேரறிஞர் அருந்தவத்தால்
நன்குத் தன்னறிவு நிலைஅறிந்து மக்கள்
 நலம் நாடி சிந்தித்து முடிவுகண்டு.

மெய்ப்பொருளே நான்  :

வேதத்தை  யான்படித்த தில்லை ஆனால்
 வேதத்தின் உட்பொருளாய் என்னைக்கண்டேன்
வாதத்தில் யான் கலந்து கொண்டதில்லை
 வாதிப்போர் அனைவருக்கும் பொருளாய் உள்ளேன்
பேதித்த அண்டங்கள் உயிர்கட்கெல்லாம்
 பிறப்பிடமாய்க் கருப்பொருளாய் என்னைக் கண்டேன்
சோதிப்போர்  புலனறிவால் என்னைக் காணார்
 சுயநிலையை அகத்துணர அவர் நான் ஒன்றே.

வெறுப்பொழித்தல் :

விருப்பத்தை ஒழித்துவிட முயல வேண்டாம்
 வெறுப்பை ஒழித்தாலதுவே மேன்மை நல்கும்
விருப்பமே சீவனது இயக்கச் சான்று
 வெறுப்பு அறிவின் குறையை விளக்கும் ஆடி
விருப்பத்தை ஒழித்து விட்டால் வாழ்வு ஏது?
 விளைவறிந்து முறையோடு அளவாய்க் கொள்ளும்
விருப்பமே வாழ்வை வளமாக்கும் சிற்பி
 விருப்பம் அளந்தே விரும்பி வெறுப்பொழிப்பீர்!

வேதாத்திரி மகரிஷி


ஓம் சக்தி

அம்மா உன்றன் அடிமலர் பணிந்தேன்
ஆன்ம பலத்தை அளித்திட வேண்டும்!
இன்பம் வரினும் இன்னல் வரினும்
ஈந்தவள் நீயென இருந்திடல் வேண்டும்!
உள்ளத் தினுள்ளே உண்மை ஒளியை 
ஊட்டியே என்னை உணர்த்திடல் வேண்டும்!
எத்தனை உழைத்தும் என்றும் வாடும்
ஏழையின் வாழ்வில் ஏற்றம் வேண்டும்!
ஐம்புலன் காத்திடும் ஆற்றலும் வேண்டும்!
ஒன்றே குலமெனும் ஒப்பிலா மந்திரம்
ஓங்கியே உலகில் ஒலித்திடல் வேண்டும்!
ஔவை வேண்டிய அருந்தமிழ் மூன்றும் 
அக்கம் மகிழ்ந்தெனக்கு அருளிடல் வேண்டும்!

சரோசா தேவராசு
  

சிந்தனைக்கு


மனதை அடக்கி ஆள வேண்டுமென்று அடிக்கடி சொல்லக் கேட்கிறோம்.
முதலில் மனம் செயல்படும் விதத்தை அறிவது இதற்கு அவசியமாகிறது.

வெளிமனம், உள்மனம், ஆழ்மனம் என மூன்று பிரிவுகளாக செயல்படும்
மனதை ஒருமுகப்படுத்துவது எளிதானதாக இல்லாமற் போவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

வெளிமன செயல்பாடு                                          உள்மன செயல்பாடு

பார்த்தல்,பேசுதல்,செயல்படுதல்.      எல்லாவற்றையும் கவனித்து சில
                                                                  வற்றை மட்டும் கிரகித்தல்.

ஒன்றை உடனே அடைய                   நிதானப்படுத்துவது.
விரும்புவது.

புரியாது, அறியாது கவலைப்படல்.    கவலை நீங்க தைரியம் அளித்தல்.

மீண்டும் தவறுவது, மறைப்பது.          உண்மையைக் காட்டிக்கொடுப்பது.

எல்லாவற்றையும் நம்புவது.                சிந்திப்பது.

பழையதை மறப்பது.                             தேவைப்படும் நேரத்தில் பழையதை
                                                                      வெளிக்கொணர்வது.

அனைத்தையும் உள்மனத்திடம்           உள்மனக் குறைகளை ஏற்று பதில் கூறல்.
ஒப்புவிப்பது.

சிந்திக்கும் திறன் மிகக்குறைவு.           சிந்தித்தே பதில் அளிப்பது.

     வெளி மன செயல்பாடுகள் தன்னிச்சையாக எப்படி உள்மனதிற்கு அனுப்பப்
படுகிறதோ அதுபோல உள்மனதால் முடியாதச் செயல்கள் ஆழ்மனதிற்கு
சென்றுவிடுகின்றன. சிந்தனையின் கட்டுப்பாட்டில் அவை அமைதியாக
இருக்கும். இன்பமோ , துன்பமோ சுமை அதிகரிக்கும்போது அவை எது தடுத்
தாலும் நிற்காது, உள், வெளி மனங்களை புறத்தேத் தள்ளி, செயல்பாட்டில்
இறங்கிவிடும்.

கருத்து: துரை பா. வேலவன்     

குடிமைப்பயிற்சி


சமூக உரிமைகள் -

கீழ்கண்ட உரிமைகளை 1946 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் தரப்படும்:

- வேலைக்கு செல்வதற்கான உரிமை,
- பந்த் நடத்துவதற்கான உரிமை,
- உடல் பேணலுக்கான  மருத்துவ பாதுகாப்பிற்கான உரிமை,
- படிப்பிற்கான உரிமை ( 16 வயது வரை கட்டாயமாக பள்ளிக்கு செல்ல வேண்டும்.)

ஒற்றுமை  மற்றும் குடும்ப வாழ்க்கை -

 குடும்பத்தில் கணவனும் மனைவியும் விட்டுக்கொடுத்தும், ஒருவருக்கொருவர் 
மதித்து நடத்தல் வேண்டும்.

ஒவ்வொருவரும் மற்றொருவரின்  முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும்.

கல்யாணம் மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு நடைபெற வேண்டும்.

பெற்றோர்களும் இதற்கு அவர்களுடைய மனப்பூர்வமான சம்மதத்தை 
தெரிவித்திருக்க வேண்டும்.

தங்கள் குழந்தைகளின் நலனிற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும். மேலும் 
அவர்களை ப் பொறுப்பாகப்  பார்த்துக்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு -

பாதுகாப்பே பிரஞ்சு நாட்டின் தலையாய கடமையாகும். மனித உடலை ஒரு
பொருளாகவோ அல்லது ஒரு சாமானாகவோ கையாளப்படுவதை இந்நாடு 
ஒருபோதும் அனுமதிக்காது. 

உடல் ரீதியான வன்முறை, பாலிய கொடுமை சட்டப்படிக் குற்றமாகும்.
அதே போன்று கட்டாயப்படுத்தி வேலையை வாங்குதல், அடிமைப் படுத்துதல்,
மனித உடலில் கள்ளக்கடத்தல் செய்தலும் பிரஞ்சு நாட்டின் சட்டத்திற்கு 
புறம்பானது.

-தொடரும்-   

dimanche 22 mai 2011

பிரான்சு கம்பன் மகளிரணி விழா

பிரான்சு கம்பன் மகளிரணி விழா
அன்னை தெரேசா நூற்றாண்டு விழா