பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 21 mai 2010

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம். இன்னும் சில ஆண்டுகளில் தமிழ் அழிந்துவிடும் என்ற புள்ளி விவரத்துக்கும், மூவாயிரம் ஆண்டுகளாக எத்தனையோ எதிர்ப்புகளையும், அழிவுகளையும் மீறி, செழித்து நிற்கும் தமிழ் அழிவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நம்பிக்கைக்கும், நிகழ் கால பிற கலாச்சாரங்களின் தாக்கத்தால் இது நடக்குமா என்ற ஐயத்துக்கும் நடுவே நாம் வாழ்ந்து வருகிறோம்.

அடுத்தத் தலைமுறைக்கு இச்செல்வத்தை எப்படி கொண்டு செல்வதென்பது தமிழ் ஆர்வலர்களின் ஓயாத சிந்தனை என்றால் அது மிகையாகாது. அதற்கான பல முயற்சிகளில் பலரும் முயன்ற வண்ணம் உள்ளனர்.

சுவிசு நாட்டின் அட்லிஸ்வில் நகர் முருகானந்தா தமிழ்ப் பாடசாலையின் திருக்குறள் மகாநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் கிடைத்தது. கடின, இணைந்த உழைப்பில் உருவான அந்த விழா அனைவரையும் கவர்ந்ததுடன், தக்க முறையில் செயல்பட்டால் வருங்காலச் செல்வங்கள் தமிழ் மொழியிலும், தாய்நாட்டுக் கலைகளிலும், அதே நேரத்தில் புலம்பெயர்ந்த நாட்டின் மொழியிலும் பிரகாசிப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் இருந்தது. பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், குழந்தைகள், பெற்றோர் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.

பங்கேற்ற பிரான்சு கம்பன் கழகத்தினர் தங்கள் கவியரங்கத்தின் மூலம் விழாவிற்குச் சிறப்பு சேர்த்தனர்.

கடந்த மாதம், உடல் நலம் காக்க ஒரு சில குறிப்புகளைப் பார்த்தோம்.இம்முறை, உடல் நலத்துக்கான உணவு வகைகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

-- இராசேசுவரி சிமோன்

இன்றைய அறிமுகம் -- விவேகானந்தர்

19 ஆம் நுாற்றாண்டில் தோன்றிய சமயத் தலைவரும், அத்வைத வேதாந்தத் தத்துவத்தின் இருப்பிடமுமான விவேகானந்தர் 1863 சனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில், வங்காளத்தைத் தாய் மொழியாய்க் கொண்ட விசுவநாத தத்தர் -  புவனேசுவரி தேவி தம்பதியருக்கு நரேந்திரர் என்ற பெயரில் தோன்றினார்.

இறை நம்பிக்கை-வாழ்வில் காணும் வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வுகள் இவை இரண்டுக்கும் இருக்கும் முரண்பாடு அவரைச் சிறு வயது முதலே சிந்திக்க வைத்தது. பிரம்ம சமாஜ உறுப்பினராகி, அது திருப்தி தராததால் வெளியேறினார்.

1881 இல், இராமகிருட்டிண பரம அம்சரின் சந்திப்பு நரேந்திரரின் வருங்காலத்தை நிர்ணயித்தது. பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் இவற்றின் அவசியத்தை உணர்ந்து, அவரது சீடராக விளங்கியவர் குருநாதரின் மறைவுக்குப் பின், 1886இல் துறவு பூண்டு, விவேகானந்தர் என்னும் பெயர் பெற்றார்.

இந்தியா முழுதும் கால் நடையாகப் பயணம் செய்தவர், 1892 டிசம்பர் 24இல் கன்னியாகுமரி வந்த போது, கடலில் இருந்த பாறையில் மூன்று நாட்கள் தியானம் மேற்கொண்டு, இந்தியாவைப் பற்றிச் சிந்தித்தார். வேதாந்தத்தின் உயிரோட்டமான உண்மைகள் மக்களைச் சென்றடையவில்லை, வறுமையும் - அறியாமையும் அவற்றைத் தடுக்கின்றன என்று கண்ட அவர், மேலை நாட்டினர் அந்த உண்மைகளை ஏற்கும் நிலையில் இருப்பதை உணர்ந்து, அவற்றை அவர்களுக்கு அளித்து பொருளீட்ட தக்கத் தருணத்தை எதிர் நோக்கி இருந்தார்.

1893, செப்டம்பர் 11ஆம் நாள், சிகாகோ அகில உலக அனைத்துச் சமயப் பேரவை அதற்கு வழி வகுத்தது. இந்து மதத்தின் சார்பாக “சகோதர சகோதரிகளே” என்று தொடங்கி அவர் ஆற்றிய பேருரை இந்தியர்களின் மனித நேயத்தைப் பறை சாற்றியது. 17 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில், விவேகானந்தர் மட்டுமே 6 முறை சிறப்புரை ஆற்றினார். நான்கு ஆண்டு காலம் வெளிநாடுகளில் தங்கி நியூயார்க்,லண்டன் போன்ற நகரங்களில் வேதாந்த மையங்களை அமைத்தார்.

1897இல் இந்தியா திரும்பி இராமகிருட்டிண மடத்தை நிறுவினார். வளமான இளைஞர்கள் கைகளில்தான் நாட்டு முன்னேற்றம் அடங்கியுள்ளது எனக்கருதிய அவர் அவர்களுக்கு விழி! எழு! உழை! எனக் கட்டளையிட்டார். எண்ணற்ற அவரது ஆழ்ந்த கருத்துகளில் ஒரு சில

 1. மனிதர் இயல்பில் தெய்வீகமானவர். இதை வெளிப்படுத்துதலே வாழ்வின் சாரம்.
 2. உலகக் குறைகளைப் பற்றி வருந்து. பேசாதே! பேசி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே! ஏனெனில் குற்றங்குறைகள் பலவீனத்தால் விளைபவை.
 3. சிந்தித்து செயலாற்று!
 4. நன்மை-தீமை, அறிவு-அறியாமையின் கலவையே பிரபஞ்சத்தின் இயல்பு.
 5. உலக தீமை பற்றி வருந்துமுன், உன் உள்ள நச்சு எண்ணம் பற்றி வருந்து. உள்ளம் ஒழுங்கானால் உலகம் ஒழுங்குபடும்.
 6. பக்தி பாசாங்கைவிட நாத்திகம் மேல்.
 7. எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே!
 8. தன்னம்பிக்கை இல்லாதவன் நாத்திகன் என்பது புதுமதம்.
 9. நீ நினைப்பதைப் போலவே மாறுகிறாய்! புனிதமானதை தியானிப்பது மன அழுக்குகளை எரித்து, உயர்த்தும்.
 10. ஆற்றலை ஒருமுகப்படுத்து.
 11. புது சக்திகளை உருவாக்க முடியாது. மனவலிமை கொண்டு மிருக சக்தியை வெளிப்படுத்துவதற்கு பதில் ஆன்ம சக்தியை வெளிப்படுத்து.
 12. பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனை தெய்வமாக்கவும் முயல்வது மதம்.
 13. சொந்த மனம்தான் உலகை அழகாகவும், அவலட்சணமாகவும் ஆக்குகிறது. எனவே எல்லாவற்றையும் சரியாக புரிந்து கொள்ள முயற்சி செய்.
 14. இப்போது அனுபவிப்பது முன்வினைப் பயன் என்றால், எதிர்காலம் நமது கையில் என்று பொருள். வீசும் காற்றை பயன்படுத்துவது கப்பலின் கையில்தான்!
 15. பிறரால் படைக்கப்பட்ட ஒன்றை என்னால் அழிக்க முடியாது. ஆனால் என் விதியைப் படைப்பவன் நான் எனும் உறுதி கொள்.
 16. வீரமில்லா விவேகம் கோழைத்தனம். விவேகமில்லா வீரம் காட்டுமிராண்டித்தனம்.
 17. வாழ்வைச் சோலையாகக் காணும் காதலன் மனநிலை தேவையில்லை! வாழ்க்கைப் போர்க்களத்தில் அஞ்சாத வீரனின் மனநிலையே நமக்கு வேண்டும்.
 18. சுயநலம் துறப்பதே துறவு. காவி அணிவது அல்ல.
 19. பயன் எதிர்பாராத கடமையே தொண்டு.
 20. எங்கே பெண்களுக்கு மேன்மையான இடம் இல்லையோ அங்கே உயர்வுக்கான நம்பிக்கையே இல்லை!
 21. துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

இந்தியப் பெருமைகளை,ஆன்மீக நெறிகளை உலகறியச் செய்த விவேகானந்தர் 1903 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 4ஆம் நாள் புகழுடம்பு எய்தினார்.

இந்தியா அவரது பிறந்த நாளை “இளைஞர் தினம்" எனக் கொண்டாடுகிறது.

-- சரோசா தேவராசு

நடிப்பு

துணை இயக்குனர் முதல் லைட்பாய் வரை பாராட்டியது கோகுலுக்கு மேகத்தில் பறப்பது போல் இருந்தது. அதுமட்டுமல்லாமல் படத்தின் இயக்குனர் அவனிடம் பேச வேண்டும் என்று சொல்லி ஆள் அனுப்பியதும் இறக்கை மேலும் பெரியதாகியது.

'கோகுல் நீ இன்னைக்கி நடிச்சது ஒன்னும் பிரமாதம் இல்ல. அடுத்த திங்கக்கெழம தேவன் சாருகூட நடிக்கறது தான் பெரிய விசயம். அது இந்த மாதிரி சாதாரணம் கெடையாது. அவர் பெரிய நடிகர். இந்த மாதிரி சான்ஸ் எல்லாருக்கும் கெடைக்காது. அதனால ஒழுங்கா நடி. நீ செய்யிற தப்பால் அவர் டென்ஸனா ஆயிடக்கூடாது. இன்னும் நாலுநாள் தான் இருக்கு. நல்லா நடிச்சி பார். ஒரே டேக்குல ஓ கே ஆயிடனும் என்ன . . டேக்கேர் பாய். .”
சென்றுவிட்டார்.

கோகுலன் வானத்திலிருந்து இன்னும் கீழே இறங்கவில்லை.
தேவன் சார்கூட நடிக்க போறேனா? தமிழுலகத்தின் தலைசிறந்த நடிகர் தேவன்சாருடனா. . அவனால் நம்ப முடியவில்லை. துணை இயக்குனரிடம் ஓடினான். அவர் காட்சியை விளக்கிச் சொன்னார்.
'கோகுல் நீ காதல்ல தோல்வி அடைஞ்சிட்ட. நாலுநாளா சாப்பிடாம தூங்காம மனசாலும் ஒடம்பாலும் தெம்பு இல்லாம இருக்கிற. அந்த எபெக்ட நீ நல்லா காட்டி நடிக்கணும். அப்போ தேவன் சார் உன்ன பாத்துட்டு ஒனக்கு புத்தி சொல்லுவாரு. இதுதான் சீன். டயலாக்கு இந்த தாளுல இருக்குது. இத நீ சரியா நடிச்சிட்டா ஒனக்கு நல்ல பேர் கெடைக்கும். வாழ்த்துக்கள்.”
அவர் கொடுத்த ஸ்கிரிப்டை வாங்கியதும் கோகுல் ஒரு முடிவெடுத்தான்.
இத்தனைப் பேரிடம் பெற்ற பாராட்டு ஒன்றும் பெரிய விசயமில்லை. பெரிய நடிகர் தேவன். நம் நடிப்பைப் பார்த்து அவர் பாராட்ட வேண்டும்.
இந்த சீன் ஒரிஸனலாய் வரணும். அவர் மனமாறப் பாராட்ட வேண்டுமென்றால் நாம் கதையில் வரும் கேரக்டராகவே மாறிட வேண்டும்.
முடிவெடுத்தான். நான்கு நாட்களாகச் சாப்பிடவில்லை. முகம் கருத்தது. கண்கள் குழிவிழுந்தன. முகத்தை தாடி மூடியது. ஸ்கிரிப்டை நன்கு பேசிப் பார்த்து வைத்துக் கொண்டான்.
நான்காம் நாள் ஸ்டுடியோவில் பார்த்தவர்கள் என்னாச்சி? ஏதாச்சி என்று அவனை நலம் விசாரித்தார்கள். அவன் தான் எடுத்த சபதத்தைச் சொன்னான். அதைக்கேட்டு அவன் நடிப்பதற்கு முன்னே அவனைப் பாராட்டினார்கள்.

சரியான நேரத்தில் பிரபல நடிகர் தேவன் வந்ததும் ஸ்பார்ட் சுறுசுறுப்பாகியது. டைரக்டர் ஸ்டார்ட் சொல்ல தேவனுடன் கோகுல் சொன்னபடி நடித்தான். சீன் அவன் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே முடிந்தது. தேவனைத் தவிர அனைவரும் அவனைப் பாராட்டினார்கள். தேவன் பாராட்டாதது கோகுலனைப் பாதித்தது. சீன்கள் முடிந்ததும் தேவன் தயாராகிக் கிளம்பினார்.

கோகுலனுக்கு இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவரிடம் ஓடினான். 'என் நடிப்பு எப்படிசார் இருந்தது” என்று வாய்விட்டு கேட்டான்.

அவர் அவனைத் தீர்க்கமாகப் பார்த்தார். 'உன்னைப் பத்தி டைரக்டர் சொன்னார். இந்தக் காட்சிக்காக நாலு நாளாய்ச் சாப்பிடாமல் இருந்துதான் நடிச்சியாம். தப்புப்பா. இது இல்ல நடிப்பு! ஒருத்தன் எப்போதும் போலவே இருந்து கொண்டு நடிப்புத் திறத்தை ரத்தத்துல ஊறவச்சி உணர்ச்சியில புழிஞ்சி மொகத்துல பாவனையைக் கொண்டு வருவதுதான் உண்மையான நடிப்பு. விஸம் குடிச்சவன் போல நடிக்கணும்ன்னா வெஸம் குடிச்சிட்டு வந்து நடிப்பியா? இனிமேல இப்படி செய்யாதே. நடிப்பு என்றும் நடிப்பாக மட்டுந்தான் இருக்கணும். நடிப்பை வாழ்க்கையாக்காதே. அடுத்த முறை சரியா நடி. பார்க்கலாம்.”

கிளம்பிவிட்டார். நடிப்பின் உச்ச நடிகர் தான் நரம்பில் ஊறிய நடிப்புத் திறத்தை ஓதிவிட்டுச் சென்றது கோகுலனுக்கு மட்டுமல்லாமல் அங்கே கூடியிருந்த அனைவருக்கும் புரிந்தது.

-- அருணா செல்வம்

சமையல் குறிப்புகள்

பச்சை பயறு - பாசி பருப்பு

இந்தியா , சீனா, பங்களா தேசம் ஆகிய இடங்களில் பச்சை பயிறு அதிக அளவில் பயிரிடப் படுகிறது. முழுமையாக பச்சை நிறத்தில் இருக்கும்போது பச்சை பயிறு என்றும் தோல் நீக்கி உடைத்ததை (மஞ்சள் நிறம்) பாசிப் பருப்பு என்றும் அழைக்கிறோம்.

இதில் புரத சத்து அதிகம் உள்ளது. ஒரு அவுன்ஸ் மாமிசத்தில் உள்ள புரத சத்து அரை கப் பச்சைப் பயறில் உள்ளது. ஆண்கள், பெண்கள், சிறுவர், குழந்தைகள், கர்ப்பிணிகள் அனைவருக்கும் ஏற்ற உணவு. முளை கட்டிய பயறு மிகுந்த ஊட்டச் சத்து நிறைந்தது. எனவே நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த சக்தியை மீண்டும் பெற இதைக் கஞ்சி ஆகத் தயாரித்துக் கொடுக்கலாம். முளை கட்டிய பயிற்றைத் தக்காளி வெங்காயம் சேர்த்துச் சலாதாகவும் சாப்பிடலாம்.

பாசிப் பருப்பில் சில உணவுகள் தயாரித்துப் பயனடைய தன் கைப் பக்குவத்தை நமக்குக் கொடுத்திருப்பவா திருமதி குணசுந்தரி பாரதிதாசன் அவர்கள்.


பொங்கல் :

பச்சரிசி - 3 டம்ளர்
பாசி பருப்பு - 1 டம்ளர் (விருப்பமென்றால் பாதிக்குப் பாதிக்கூடச் சேர்த்துக் கொள்ளலாம்)
1 டம்ளா அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து குக்கரில் 5 அல்லது 6 விசில் வரும்வரை வேக வைக்கவும்.
நெய்யில் முந்திரி பருப்பு வறுத்துச் சேர்க்கவும்.
மிளகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை - நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.
வெண்ணெய் கொஞ்சம் உருக்கி ஊற்றி சிறு தீயில் வைத்து அடிபிடிக்காமல் கிளறவும்.

கோஸ் கூட்டு :

கால் கிலோ கோஸை அரியவும்.
100 கிராம் பாசிப் பருப்பை வேக வைக்கவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
2 வெங்காயத்தை அரிந்து சேர்த்து வதக்கவும்.
கோஸ் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்;
வெந்த பருப்பைச் சேர்த்து இறக்குமுன் விருப்பப்பட்டால் தேங்காய் துருவிச் சேர்க்கலாம்.

தட்டை:

வேகவைத்த பாசிப் பருப்பு 1 கப்
அரிசி மாவு 2 கப்
பச்சை மிளகாய் 4 (அரைத்தது)
தேங்காய்த் துருவல் 1 டேபிள் கரண்டி
தூள் செய்த வேர்க்கடலை 1 டேபிள் கரண்டி
வெண்ணெய் அரை டீக்கரண்டி
எள்ளு, பெருங்காயம், கருவேப்பிலை கொஞ்சம்
உப்பு தேவைக்கேற்ப

மேற்கூறிய எல்லாவற்றையும் கலந்து கெட்டியாகப் பிசையவும். மெல்லியதாகத் தட்டிக் குச்சியால் லேசாகக் குத்தி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

பாசிப் பருப்புப் பாயசம் :

1 டம்ளர் பாசிப் பருப்புக்கு இரண்டரை டம்ளர் தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு, கொஞ்சம் வெண்ணெய் சேர்த்துக் குக்கரில் 6 - 8 விசில் வரை வைக்கலாம்.
(பாசிப் பருப்பு நன்றாக வெந்திருக்க வேண்டும். இல்லையென்றால் மத்தால் கடையலாம்)
வெந்த பருப்பை அடி கனமான பாத்திரத்தில் மாற்றவும்.
1 டம்ளர் பருப்புக்கு 2 டம்ளர் சர்க்கரை சேர்க்கவும்.
சர்க்கரை நன்றாகக் கரைந்ததும் தேவையான அளவு பால் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
ஏலக்காய் சேர்த்து முந்திரி, திராட்சை இவற்றை நெய்யில் வறுத்து மேற்கூறியதுடன் சேர்க்கவும்.