பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 27 janvier 2013

எண்ணப்பரிமாற்றம்

                                                                


அன்புடையீர்,

வணக்கம். உள்ளத்து உணர்வுகளையும், எண்ணச் சிதறல்களையும், கற்பனை வளங்களையும் எடுத்தியம்பாமல் மனிதப் பிறவியால் அமைதி காண முடியாது. அது இயலுமென்றால் உலகில் பேதங்களோ, முரண்பாடுகளோ, வன்மமோ அல்லது சண்டையோ இருக்காது. அவரவருக்குத் தோன்றுவதை வெளிப்படுத்துவதாலேயே பிரச்சனைகள் தோன்றுகின்றன. ஆனால் அதற்காக மனித குலம் மவுனம் சாதித்தால், ஒரு வகையில் உலகம் இருண்டு விடும். பேதங்களே வாழ்வுக்குச் சுவை கூட்டுகின்றன.

வெளிப்படுத்துவதிலும் மனிதன் கண்ட வகைகள் தன்னிகரற்றவை. இசையோ, நாட்டியமோ,சிற்பமோ,ஓவியமோ அதில் தானும் கரைந்து, நம்மையும் அதில் பிணைத்து விடுவது அவன் திறமைக்குச் சிகரமாக அமைந்து விடுகின்றது. இதில்  கண்ணால் காண்பதை உணர்வுடன் ஒன்றி காணும் வகை  ஆக்குவது ஓவியம். வரைந்தவனது கருத்து, அதில் அவன் பெற்ற உணர்வு, ஆழ்ந்து அதை ரசிக்கும் மனிதனையும் தொற்றிக்கொண்டு விடுகிறது.

தீட்டியவன் யாரென்றே தெரியாதபோதிலும், ஓர் அழகிய கவிதையில் மெய் மறந்துபோவதைப் போல சித்திரங்கள் நம் இதயத்தை ஆட்கொள்கின்றன. உலகத்து முன் உடல் மறைந்தாலும், தான் தீட்டிய ஓவியத்தின் வழி அவன் சிரஞ்சீவி ஆகிறான். தன்னில் ஒரு பாகத்தை, ஏன், தன்  முழுமையை பதிவு செய்துவிட்டே மறைகிறான்.

வான் வெளியில் ஒளிரும் அத்தனை மீன்களையும் இனம் காண இயலாதெனினும், மிளிரும் ஒருசில கண்கவர் சுடர்களைக் கண்டு களிப்போம்!

திருமதி சிமோன் 

ஓவியத்தில் இறைமை



     இறைச்சங்கமம்                             
 இறைவனும் மனிதனும்                                                            கண்ணனும்கோபியரும்  
    (மைக்கலாஞ்சலோ)


இறைவன் மனிதனைப் படைப்பதும், காப்பதும் பெரிதல்ல. ஏனெனில் மாயையில் உழலும் மனிதனுக்கு அது புரியப் போவதில்லை! தன்  மயமாகச் சிந்தித்து, தானே எல்லாமாய் நினைத்து, தன்னிலேயே நிறைவு காணும் அவனுக்கு இறைவனே உண்மையை உணர்த்தினாலன்றி, தான் ஒரு கைப்பாவை என்பது புரிய வழியில்லை. அது புரிந்தபின் தான் தன்னைப்பற்றிய உணர்வை ஒழித்து, தன்னை இயக்கும் சக்தியைப் பற்றி எண்ணி, புரிந்து,அனுபவித்து,ஏற்று,இணைய விரும்பி தன்னையே இழப்பான்! அந்தச் சங்கமத்திற்காகவே, உலக இன்பங்களில் மூழ்கிக் கிடப்பவனுக்கு இறைவன் கை கொடுக்கிறான். நீக்கமற நிறைந்து ஆட்கொள்கிறான்.

அந்த சுகானுபவத்தை வார்த்தைகளை விட ஓவியங்கள் அற்புதமாக வெளிப்படுத்துகின்றன. தந்தையும், தாயுமாகி அணைப்பது மட்டுமல்லாமல் இங்கு வாழும் வரை நீயும் ஆணென்றும், பெண்ணென்றும் பேதம் கண்டு மயங்காதே என்றுணர்த்தும் இறைமையை மனிதனோடு இணைக்க மதங்களும், உண்மையும் போராடுகின்றன.



                                                          
                                                                     சிவன் பார்வதி
                                                                (அர்த்தநாரீஸ்வரர்)


சிவனின் திருவிளையாடல்களும், கண்ணனின் லீலைகளும், ராமனின் ஏகபத்தினி விரதமும், உயிர்களிடத்துக் கொண்ட அன்பும் நாம் இங்கு வாழும் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணங்களே அன்றி வேறென்ன?



                                                          
                                                                       ராமர் சீதை
                                                               மணியம்  செல்வன்  


பூமியில் இருக்கும் வரை, தன்னைப் போலவே பிறரையும் எண்ணும் பக்குவம் வேண்டும், தன்னிடம் உள்ளதை பிறருக்கீயும் மனித நேயம் வேண்டும், தன்னையே இழக்கவும் துணியும் தியாக உள்ளம் வேண்டும் என்பதை இயேசுவின் வாழ்க்கை தெள்ளத்தெளிய உணர்த்துகிறது. மனிதர்களுக்காகத் துறக்கும் மனநிலையே பின்னர் கடவுளுக்காக உலகைத் துறக்கும் திடத்தை அளிக்கிறது.



                                                          
                                                      இயேசுவின் கடைசி உணவு


இறைவனைப் பற்றும் மனம் அடுத்து எதையும் எதிர்கொள்ளும் திடத்தைப் பெறுகிறது.புறநோக்கில் இன்பமோ-துன்பமோ, ஏற்றமோ-தாழ்வோ, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை முற்றிலும் கையளித்தபின் எல்லாமே சமமாகிறது. ஒரு கன்னி, தாயாகச் சம்மதிக்கும் மன நிலையும் இதையே குறிக்கிறது.



                                                           
                                                                     கன்னித்தாய்


மைக்கலாஞ்சலோ: 1475-1564இல் வாழ்ந்த இத்தாலிக்காரரான இவர் ஓவியர், சிற்பி, கட்டிடக் கலைஞர், கவிஞர் எனப் பன்முகம் கொண்டவர். கடிதம், வரைபடம், நினைவுக் குறிப்புகள் என்று ஏராளமாக எழுதியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டின் சரித்திரத்தில் முதன்மை இடம் பெற்றவர். வாழும் காலத்திலேயே இவர் வாழ்க்கை வரலாறு இரண்டு முறை எழுதப்பட்டது. 23ஆ வது வயதில் இவர் செதுக்கிய 'பியெட்டா' (இறந்த இயேசுவின் உடலை ஏந்தித் துயருடன் விளங்கும் மாதா) சிற்பம் 180 ச.மீ. உள்ள புகழ் பெற்று சாதனை படைத்தது. இன்னும் தாவீது, மோசேஸ் சிலைகளும் இவர் புகழை உலகில் நிலை நிறுத்துகின்றன.Sistine Chepel விதானத்தில் அவர் ஓவியங்கள் வரைய 4 ஆண்டுகள் பிடித்தன.  செயின்ட் பீட்டர் பசிலிக்கா கவிமாடம் (dome) வடிவமைக்கப்பட்டதும் இவரால்தான். ஆனால் அது முடிக்கப்படுமுன் அவர் மரணமடைந்தார்.


லியோனார் தே வைன்சி:இயேசுவின் கடைசி விருந்து, மோனலிசா போன்ற உலகப் புகழ் பெற்ற ஓவியங்களை வரைந்தவர். 1452-1519 இல் இத்தாலியில்  வாழ்ந்த இவர், ஒரு மேதை. இவருக்கில்லாத திறமை ஒன்றுமில்லை எனலாம். ஓவியர், விஞ்ஞானி, சிற்பி, இசை,கட்டிட, தோட்ட வல்லுநர், கவிஞர், வேதாந்தி, எழுத்தாளர், புதுமை விரும்பி என இவரது சிறப்புகள் ஏராளமானவை. பொறியியல், வேதியல்,உடலியல்,உலோக வேலை, தோல் வேலை,தச்சு வேலை என்று பல துறைகளில் கால்பதித்திருக்கிறார். விமானம்,நீர் மூழ்கிக் கப்பல்,சண்டைத் தளவாடங்கள் பற்றிய முன் சிந்தனைச் சிற்பி. இவ்வளவிருந்தும், லத்தீன், கணிதம் பற்றிய முறையான கல்வியின்மையால், சம கால அறிஞர்களால் புறக்கணிக்கப் பட்டார். இவர் வரைந்த ஓவியங்களில் 17 மட்டுமே தப்பி உள்ளன.



                                                         


மணியம்-செல்வன்: தி.வி.சுப்பிரமணியம் (1924-1968) 'கல்கி' பத்திரிக் கை கிருஷ்ணமூர்த்தி மூலம் உலகுக்கு அறிமுகமானார். கல்கியின் தொடர்களான 'சிவகாமியின் சபதம்', 'பொன்னியின் செல்வன்' அவரை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. கல்கி எடுத்த 'பார்த்திபன் கனவு' திரைப்படத்தின் ஆர்ட் டைரெக்டர் அவரே. சில திரைப்படங்களுக்கு உடை வடிவமைப்பாளராகவும் திகழ்ந்தார். ஒரே மகனான மணியம் செல்வன் (1950-) தந்தையைக் குருவாகக் கொண்டு, அவர் அடியொற்றியே அவர் பாணியிலேயே புகழ் பெற்றுள்ளார்.ஆனந்த விகடன் இதழில் வைரமுத்து எழுதிய'கருவாச்சி காவியத்திற்காக' இவர் தீட்டிய ஓவியங்கள், இவருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்று தந்தன.


ஓவியப் பதுமைகள்

        




மேற்கும்-கிழக்கும்    

                                                   அஜந்தா மகளிர்                          

மோனலிசா


இயற்கையின் அழகுப் பெட்டகம் பெண்மை என்றால் மிகையாகாது. எந்தக் கலையும் அவளைத் தவிர்த்து நிறைவுறுவதில்லை . வாழ்க்கையில் எப்படியோ,  கலைஞன் என்ற நிலையில் மனிதனால் அவளை விடுத்து சிந்திக்க வேறு கருப்பொருள் இல்லை! தன் அன்பாலும், பண்பாலும், கனிவாலும் அவன் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றப் பெண்ணின் உறவை, உருவை அவனறியாமல் தன் படைப்பில் நிரந்தரமாக்கி விடுகிறான். அங்கு நிறமோ, உயர்-தாழ் நிலையோ பொருட்படுத்தப் படுவதில்லை. அழகு ஆராதிக்கப்படுகிறது.


இத்தாலி நாட்டினரான லியனார்டோ டாவின்சிக்கு  புகழைத்தேடித்தந்த ஓவியம் மோனலிசா .  நான்கு ஆண்டுகள் (1502 - 1506) ஆயிற்றாம் இந்த ஓவியத்தை வரைய.போப்ளார் பலகையில் வரையப்பட்ட எண்ணெய்  வண்ண ஓவியம் இது. மறுமலர்ச்சி காலத்தில் முதலாம் பிரான்சுவா என்ற பிரெஞ்சு மன்னனுக்கு இந்த ஓவியம் விற்கப்பட்டது.பல நூற்றாண்டுகளாக பிரெஞ்சு அரசின் Royal collection -  ன் கீழ் உள்ளது.தற்பொழுது பிரான்ஸ் நாட்டில், பாரிஸ் நகரிலுள்ள உலக புகழ் மிக்க லூவ்ர் அருங்காட்சியகத்தில்  வையக்கப்பட்டுள்ளது.எந்த திசையிலிருந்து பார்த்தாலும் அதிலுள்ள முகம் நம்மையே பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற மனக்காட்சியை ஊட்டக்கூடியது.  மந்திரப் புன்னகையுடன் காட்சி அளிக்கும் அப்பெண்ணின் ஓவியத்தில் புருவங்களோ கண் இமைகளோ இன்றி வரையப்பட்டு இருக்கும். இப்பெண்ணின் சோகம் கலந்த புன்னகையின் மர்மம் என்னவோ?  இப்பெண்ணின் உண்மை பெயர். Lisa del Giocondo. இத்தாலி மொழியில் மோனா  என்றால்    மேடம் என்று ஆங்கிலத்தில் அழைப்பதைப் போன்ற மரியாதையான சொல்.அவருடைய உண்மையான பெயருடன் சேர்ந்து மோனலிசா ஆனது. இந்த ஓவியம் பற்றி  சுவாரசியமான பல  தகவல்கள் உண்டு.இந்த ஓவியம் திருடு போனதாகவும் பிறகு கண்டெடுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்வர். இது ஒரிஜினல் இல்லை. நகல்தான் என்று சொல்பவர்களும் உண்டு.


                                                                   
                                                                             
                                                                 ரவி வர்மா


ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848- அக்டோபர் 2, 1906):  நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப்  பாணி ஓவியக்கலைக்குள்  புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.நம் இதிகாசங்களில் உள்ள பல நிகழ்ச்சிகளையும் அவர் ஓவியங்களாக வரைந்திருக்கிறார்.சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம்  ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் உதவியுடன்  அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் பயின்றார்.

இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய்  வண்ண ஓவியங்களைப் பற்றி சில உத்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ரவிவர்மா விரும்பினார். தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர் 1868  இல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையயும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அதன் மூலம் தாமும் அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார். அந்நாளில் அவர் சென்னை ஆளுனராகிய பக்கிங்க்ஹாம் கோமகனாரை வரைந்த ஓவியம் அவருக்குப் புகழ் தேடித்தந்தது. ஆயில்யம் திருநாள் மகாராஜா, ரவிவர்மா தம்மை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக 'வீரஸ்ருங்கலா' என்னும் உயரிய விருதை அளித்துக் கௌரவித்தார். மஹாராஜா மூன்றாம் சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரவிவர்மா பரோடா சமஸ்தானத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பத்து ஆண்டுகள் தங்கினார். அவரது பெரும்பாலான சிறந்த ஓவியங்கள் அங்குதான் படைக்கப்பட்டன.

1873  இல் வியன்னாவில்  நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப்பெற்றார். தென்னிந்தியப் பெண்களை இந்துக்கடவுளரின் உருவகங்களாகப் படைத்தார். நவம்பர் 24 2002 இல் டில்லியில்  நடந்த ஓவிய ஏலத்தில் அவரது யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் 56 லட்சம் ரூபாய்க்கு  ஏலம் போனது.


                                                                                                                            
                                                                   
                                            உலக சமாதானம் வேண்டுகிற முஸ்லிம் பெண் 
                                                                          (அதிக விற்பனை)



                                                                                                                                                                                                     
 ராஜஸ்தான் அழகி                                                                                     தஞ்சை அழகி


                                                             
                                                                 லேடி ஹாமில்டன்


                                                                                   
    நாணமும் நகையும்                                                                             கனியும்கன்னியும்


                                                                                    
      இன்றைய இளமை                                                                             நாளைய புதுமை 

தமிழ்த் தாயின் ஓவியப் புதல்வர்கள்


                                                       








                                                மாலி


ஆரம்ப காலங்களில் விகடனுக்கு வரப்பிரசாதமாக அமைந்த நகைச்சுவை ஓவியர்கள், கார்ட்டூனிஸ்டுகள் வரிசையில் மாலி, ராஜு, கோபுலு ஆகியோர் வைரங்களாக ஒளி வீசியவர்கள்.

 உயிரும், உணர்ச்சியும் கொண்ட சித்திரங்களால் கர்நாடக சங்கீத வித்வான்களை    நம் கண்முன் நிறுத்தியவர் ‘விகடன்’  ஓவியர்  மாலி.
இவருக்கு முன் தமிழிதழ்களில் இத்தகைய சித்திரங்கள் வரவில்லை என்றே தோன்றுகிறது.

“ மாலி என்றழைக்கப்படும் மகாலிங்கம் விகடனில் ஒரு சகாப்தம். ஆனந்த விகடன் என்பது என்ன மாதிரியான பத்திரிகை, அதன் காரக்டர் என்ன என்பதில் தொடங்கி இன்று நம் கையில் தவழும் விகடனுக்கான அஸ்திவாரம் அமைத்தவர் மாலிதான்” என்கிறார் ‘கோபுலு’

 அவர் சித்திரம், அரசியல் கார்ட்டூன் மற்றும் போட்டோ (நிழற்படம்) நேர் காணல் என்று பல்வேறு துறைகளில் மிளிர்ந்தது . அவர்  புதிய இளம் சித் திரக்காரர்களை ஊக்குவித்தார் . அவர் காலத்தில் விகடனில் சாமா, ரவி, சேகர், ராஜு,தாணு, சித்ரலேகா மற்றும் கோபுலு என்று பலர்   வரைந்து வந்தனர்.



                                                          
                                                                          சில்பி


இயற் பெயர் பி.எம்.சீனிவாசன்.  கும்பகோணம் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸிலிருந்து படிப்பை முடித்து வந்த இவரை ஆனந்த விகடனுக்கு அழைத்து வந்தவர் அப்போதைய புகழ் பெற்ற ஓவியர் மாலி. தேவன் அவர்களின் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடருக்கு வரைந்ததின் மூலம் அந்த தொடருக்குத் தனி சிறப்பை ஏற்படுத்தியவர்.இவர் மிகுந்த கடவுள் பக்தி கொண்ட ஆசாரமான மனிதர்.குறிப்பாக கோவில்கள்,தெய்வத்திரு உருவங்களையும் வரைவதில் இவரை போன்றவர்களைப் பார்க்க முடியாத அளவு இவரின் ஓவியங்கள் தனிப்பட்ட அளவில் இருக்கும்.அதனாலேயே இவரின் ரசிகர்களால் ‘இறையருள் ஓவியர்’ என்று புகழப்பட்டார்.

                                                                           

                                                         
                                                                      கோபுலு


1924 இல் தஞ்சாவூரில் பிறந்த கோபாலன் என்கிற கோபுலு.இவர் 1930-1940 களில் பிரபலமாய் இருந்த கார்டூனிஸ்ட் மாலி யின் மூலமாக ஆனந்த விகடன் பத்திரிகையில் இணைந்தார்.

இவர் கார்டூனிஸ்ட் ஆக மட்டுமல்லாமல் கதாசிரியர்களின் பாத்திரங்களுக்கு இன்றும் உயிர் தரும் அளவுக்கு ஓவியங்கள் வரைந்துள்ளார். உதாரணமாக ஜெயகாந்தனின் சாரங்கன், கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானாமோகனாம்பாள்,மற்றும் சாவியின் வாஷிங்டனில் திருமணம். எல்லாவற்றிலும் தலைமுறைகளை கடந்து இவரின் ஓவியங்கள் நம் கண் முன்னே நிற்கின்றன.அந்தகால ஆனந்த விகடனின் அட்டைப்பட நகைச்சுவை துணுக்குகளுக்கு இவர் ஓவியங்கள் பெரிதும் துணை நின்றன.கோபுலு ஒரு மேதை என்பதற்கு,சுமார் 60 வருஷத்திற்கு முன்பு கல்லாடம் என்ற புத்தகத்திற்கு முன் பக்க,பின்பக்க அட்டைகளில் அவர் வரைந்திருந்த ஓவியம் சான்று. கணினி,போடோஷாப் என்ற எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் சிலையின் முன்பக்கம்,பின்பக்கப் படங்களை இவர் வரைந்த விதமே சொல்லும் கோபுலு அவர்களின் சிறப்பை. இவர் கலைமாமணி விருது (26/11/1991) உட்பட பல விருதுகள் பெற்று உள்ளார்.



                                                       
                                                               ஆதிமூலம் 

                                                                          
ஆதிமூலம் (1938 - 2008) அவர்கள் ஓவியர் மட்டுமல்லாது சிறுபத்திரிக்கை வட்டாரத்திற்கும் ஒரு சிறந்த நண்பர் ஆவார். அறுபதுகள் முதல் அவர் தனது ஓவியங்களை சிறுபத்திரிக்கைகளுக்கும் பத்திரிக்கைகளின் அட்டைப் படத்திற்கும் வழங்கி வந்தார்.

கோட்டோவியம் என்பது இந்திய ஓவியத்திற்கான அடையாளம் என்றொரு கண்டுபிடிப்பை அறுபதுகளில் உணர்வதற்கு முன்னரே பேனாவும் மையும் கொண்டு 1953ம் ஆண்டு காந்தியை கோட்டோவியமாய் வரையத் தொடங்கியவர் . அதன் பிறகு ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னரே அவர் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து காந்தியை சிற்பமாகவும் ஓவியமாகவும் வரைந்த ராய் செளத்ரி, தனபால் போன்றோரிடத்தில் ஓவியம் பயின்றார். காந்தியின் சித்தாந்தம் மீதும் கொள்கைகளின் மீதும் அவர் மிகப் பெரும் மரியாதை வைத்திருந்தார்.

கோட்டோவியத்தின்பால் அவருக்கு ஈர்ப்பு ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்று பிக்காஸோவின் ஓவியங்களின்பால் அவருக்கு இருந்த நாட்டம். தனது கட்டுரை ஒன்றில் தியோடர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார்: ‘காந்தியை பல கலைஞர்கள் தனது படைப்புகளில் வெளியிட்டுள்ளனர். கார்ட்டியர் ப்ரஸான் புகைப்படத்திலும், மேற்கில் டாவிட் லோ தனது கார்ட்டூன் சித்திரங்களாலும், நந்தலால் போஸ், சந்தான ராஜ் போன்றவர்கள் தங்களது ஓவியங்களாலும் சித்தரித்த போதும்கூட ஓவியர் ஆதிமூலம் அளவிற்கு காந்தி என்ற ஒரு உருவத்தை ஒரு அடையாளக் குறியீடாகக் கொண்டு எண்ணற்ற ஓவியங்களை வரைந்தவர் எவரையும் எனக்குத் தெரியாது’.

கோட்டோவியத்தின் மூலம் மண்ணின் அடையாளங்களை வரைந்து மக்களை இன்புறச் செய்தவர் ஓவியர் ஆதிமூலம். மீசை, தாடி, வாள், தலைப்பாகையுடன் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் அரசர்கள், ஐயனார் உருவங்கள், தாயும் சேயும் என அவரது கோடுகளின் வீச்சில் புதிய வெளிப்பாடு கொண்ட உருவங்கள் எண்ணிலடங்காதவை. தங்கு தடையின்றி பயணிக்கும் கோடுகள் அவரது ஓவியத்தின் முக்கிய அம்சம். அதன் ஓட்டத்தை தடைசெய்யாதிருக்கவேண்டி அவர் அவற்றை ஒரு நாளும் திருத்தி அமைத்தது கிடையாது. 1964 முதல் 1996 வரை அவர் வரைந்த கோட்டோவியங்கள் ‘Between the Lines’ என்ற பெயரில் 1997 ம் ஆண்டு புத்தமாக வெளிவந்தது. “The Art of Adimoolam” என்ற புத்தகம் 2007ல் வெளிவந்துள்ளது.
அவர் வரைந்த உருவமற்ற ஓவியங்கள் பல, சர்வதேச அளவில் புகழ் பெற்றவையாகும்.

இளம் ஓவியர்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாது அவர்களது கண்காட்சியை தொடங்கி வைக்கச் சென்றபோதெல்லாம் ஒரு சிறிய தொகையை அவர்களை ஊக்குவிப்பதற்காக அளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். தமிழ் நாட்டின் மூத்த ஓவியரான ஆதிமூலம் சனவரி 15ம் நாள் நம்மைவிட்டு மறைந்தார். இதுதமிழகத்துக்கும் ஓவியச் சமூகத்துக்கும் ஒரு மீளாத் துயர்தரும் சம்பவம். தமிழ் நாட்டு ஓவியர்களுக்குள் இருக்கும் குழுக்கள் பலவற்றிற்கும் இடையே ஒரே அளவு நட்பு பாராட்டியவர் என்ற பெருமையும் அவரைச் சாரும். தமிழக ஒவிய உலகின் அடையாளமாகவும், குரலாகவும் இருந்த அவரது இடத்தை நிரப்புவது கடினம்.



                                                                   
                                                                    ஜெயராஜ் 


மாறிவரும் நவநாகரீக உலகத்திற்கு ஏற்ற முறையில் அதே சமயம் ஆபாசம் என்று முகம் சுளிக்க வைக்காத அளவிற்கு இளம் பெண்களை வரைந்து பெயர் பெற ஆரம்பித்தவர் ஓவியர் ஜெயராஜ். பிரபல எழுத்தாளரான குமுதம் முன்னாள் உதவி ஆசிரியர் ஜ.ரா.சுந்தரேசன், பாக்கியம் ராமஸ்வாமி (அவரது பெற்றோர் பெயரில்) எழுதிய சீதாப்பாட்டி - அப்புசாமி கதைக்கு, இவர் வரைந்த சீதாப்பாட்டி - அப்புசாமி உருவங்கள் தமிழ் பத்திரிகை உலகின் சாகாவரம் பெற்ற பாத்திரங்கள் என்றால் மிகை ஆகாது. சிறுகதை, தொடர்கதை, சித்திரக்கதை என்று எந்த வடிவில் இந்த கதை, எந்த பத்திரிகையில் வந்தாலும் அதற்கு ஜெயராஜ் மட்டுமே ஓவியம் வரைய வேண்டும் என்கிற ஒரு கட்டாயத்தை தன்னுடைய தனி திறமையால் ஏற்படுத்திக்கொண்டவர் ஜெயராஜ்.                                        
                                                   


CCF21012013_00006.jpg   
அரஸ் 
                  


1980களின் இறுதியான காலகட்டங்களில் இளம் தலைமுறையினரின் பிரதிபலிப்பாக ஓவிய உலகில் புயலென நுழைந்து புகழ் பெற்றவர் அரஸ்.ஒரு படத்தைப் பார்த்தால், அது இந்தத் தொடருக்கு வரைந்தது என்று கூறலாம். அந்த அளவுக்கு குறிப்பிட்ட தொடருடன் ஒன்றி இவரின் ஓவியங்கள் இருக்கும் உருவங்கள்,வண்ணங்கள் என்றில்லாமல், texture-லும் வித்தியாசம் காண்பித்தவர். குறிப்பாக ஆனந்த விகடனில் மதன் எழுதிய 'வந்தார்கள் வென்றார்கள்' என்கிற சரித்திர தொடருக்கு இவர் வரைந்த ஓவியங்கள் கூடுதல் சிறப்பு சேர்த்தன என்று சுஜாதா அவர்களே பாராட்டி உள்ளார் எனபது இவரின் திறமைக்கு ஒரு சான்று.