அன்புடையீர்,
வணக்கம்.
இயல்பாக மதிக்க வேண்டிய சக உயிருக்கு, மனித இனத்தின் சரி பாதிக்கு
அதற்குரிய மதிப்பைப் பெற்றுத் தர வேண்டி மகளிர் தினம், அன்னையர்
தினம், பாட்டிகள் தினம் என்று எத்தனையோ தினங்களை ஒதுக்கி
நினைவுறுத்தினாலும் உலக நடப்பு வேறாகத்தான் இருக்கிறது. பெண் உயிர் வாழ,
மானத்தோடு உலவ, தனக்குரிய இடத்தைப் பெற, தனக்குள்ளச் சிறப்பை வெளிப்படுத்த
இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறாள்.
மனிதனின் மாபெரும் வீழ்ச்சி இது. விஞ்ஞானம்,இலக்கியம் என்று அறிவால் எத்தனை
உயர்ந்தாலும் உணர்ச்சிகள் என்ற அளவில் அவன் இன்னும் கற்காலத்தைத்
தாண்டவில்லை என்பது எவ்வளவு அவமானத்துக்குரியது!
வேலைக்குச்
சென்றால் அங்கே சம ஊதியம் இல்லை; உயர்வு இல்லை. வேலைக்கு அனுப்பாமல்
அவர்களைக் காக்கவும் இன்றைய ஆணுக்குத் திறனில்லை. இத்தனைக்கும் வீட்டிலும்,
வெளியிலும் யாருக்கும் சளைக்காத வகையில் உழைப்பவள் அவள். பெண்மைக்கே உரிய
இடர்களும், குழந்தை வளர்ப்பு போன்ற பொறுப்புகளும் அவளை
பலவீனப்படுத்தினாலும் அவற்றைத் தாண்டியும் சாதனைப் படைக்க அவளால் முடியும்.
இப்புறப்
போராட்டங்களைக் கூட ஒதுக்கி விடலாம். ஆனால் பெண்மையை நுகர் பொருளாய்
எண்ணும் போக்குத்தான் ஆணினத்தைத் தலைக்குனிய வைக்கிறது. பெண்களின்
மனதிலிருந்து அவர்களுக்குரிய இடத்தை அழிய வைக்கிறது. காதலுக்கிருந்த
புனிதம் மறைந்து வெறும் மிருக இச்சையாக அது மாறிப் போயிற்று. இன்னும்
சொல்லப்போனால் அவை கூட இணக்கம் கொண்ட பிறகே, உறவு நிகழ்கிறது. 'பலாத்காரம்'
என்ற இழி செயலை மனசாட்சி கொண்ட ஒரு மனிதன் எவ்வாறு செய்ய இயலும் என்று
புரியமாட்டேன் என்கிறது. ஒருத்தி மறுத்து, வெறுத்து, போராடி, களைத்து,
நடைப்பிணமாகி விட்ட பிறகு அவளைத் தழுவி அவன் பெறும் இன்பம் தான் என்ன?
அப்படி என்ன வெறி? அவன் உணர்வுகளை அவனாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை
என்றால் அந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவன் தன்னையே எவ்வாறு மதிக்க முடியும்?
கண்ணாடியில் எப்படி தன் முகத்தைத் தானே காண்பான்? அவனால் வேறு எதைத்தான்
சாதிக்க முடியும்? அவன் உயிர் வாழ்ந்துதான் என்ன பயன்?
இதை
விடக் கேவலம் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி அவளைப் பல விதங்களிலும்
துன்புறுத்துவது. உண்மையானக் காதல் பெண்ணைப் போற்றும். தெய்வ நிலையில்
அவளைக் காணும்.அவளுக்காக எந்தத் தியாகத்தையும் ஏற்க வைக்கும். ஒருத்தியைக்
காதலிப்பது ஒருவனின் உரிமை. அவளிடம் அதை வெளிப்படுத்துவதும், மன்றாடுவதும்
இயற்கை. ஆனால் அவள் விரும்பாத போது வற்புறுத்த என்ன நியாயம் இருக்கிறது?
அவள் முகத்தில் ஆசிட் ஊற்றுவதும், அவள் வாழ்வைக் குலைப்பதும் எந்த வகையில்
ஆண்மைக்குரியது? இதில் ஒருசிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்களாம்.
இதனால் இவர்கள் அவள் மீது கொண்டது உண்மையான அன்பு என்று தெரிவிக்கிறார்களா!
ஒரு கோழையாக, தான் செய்த தவறுக்கானத் தண்டனையைப் பெறப் பயந்து சமூகத்தின்
கண்களிலிருந்து ஓடி ஒளியும் புகலிடமாக ஏன் அவர்கள் அதைச் செய்திருக்கக்
கூடாது?
இதற்கு ஆணாதிக்க
மனப்போக்கை வளர்க்கும் சமுதாயமும் பொறுப்பேற்றுத்தான் ஆக வேண்டும். பெண்
உடலை விளம்பரப்படுத்தி, எங்கோ நடக்கும் இந்த வக்கிரங்களை பெரிது படுத்தி,
அல்லது நியாயப்படுத்தி வெளியிடும் பத்திரிக்கைகளும், ஊடகங்களும் ஒரு
வகையில் தண்டனைக்குரியவை. கடுமையான முறையில் இச்செயல்களைச் சாட,
சட்டமியற்றாத அரசாங்கமும் இதில் அங்கம் வகிக்கிறது. இதில் பெண்ணையே
'அவள்தான் பிறரைக் கவர்ந்து இந்நிலைக்கு ஆளாக்குகிறாள்' என்று குற்றம்
சாட்டுவோரும் உண்டு. ஒரு பெண்ணின் இளமைக் குறுகுறுக்கும் கண்களும், குறு
நகை புரியும் இதழ்களுமே கவரத்தான் செய்யும். அதற்காக பனித்துளி சுமந்து,
தென்றலில் ஆடி, ஒளி வீசும் நிறத்தால், மணத்தால் மனங்கவரும் மலர்கள்
அனைத்தையும் பிய்த்து மண்ணில் எறிந்து விடலாமா?!
அன்றும்
காதலும், காதல் தோல்வியும் அதன் வலியும் இருந்தன. ஆனால் அதை ஓர் உடலாசை
என்று கருதாமல், உள்ளத்தின் ஓர் உன்னத உணர்வாக மதித்ததால், அதற்கான
புனிதம் போற்றப்பட்டது; காக்கப் பட்டது. இன்று பெற்ற குழந்தையையே சொந்தம்
என நினைப்பது தவறு; அது ஓர் தனிப்பட்ட உயிர்; பருவத்தில் ஏற்படும்
ரசாயன மாற்றங்களே பெண்ணையோ, ஆணையோ விரும்ப வைக்கிறது என்ற வரைமுறைகள் மனித
உறவுகளை மலிவாக்கி விட்டன. விளைவு, அனாதை, முதியோர் இல்லங்களும்,சமூகக்
குற்றங்களும் மலிந்து விட்டன.
திருமதி சிமோன்