பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 31 décembre 2012

எண்ணப் பரிமாற்றம்

                                                               அன்புடையீர்,

வணக்கம். "பிறக்கின்றப்  புத்தாண்டு உயிர்களுக்கெல்லாம் இன்பத்தை மட்டுமே வழங்கட்டும்".

 வாழ்க்கையின் நீண்ட பயணத்தில் மனித மனம் அந்தரங்கமாகத் தேடும் ஓர் உணர்வு "காதல்". இருவரை இணைத்து, வேற்று நினைவின்றி, தனக்குள் அந்த உறவின் இனிமையிலேயே மூழ்க வைக்கும் சக்தி கொண்டது காதல்.சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஓர் தருணத்தில், இரு உள்ளங்களில் ஏற்றி வைக்கப்படும் அந்த தீபம் என்றும் அழிவதில்லை! காதலுக்குத் தோல்வியில்லை; துளிர் விடும்போதே அது அமரத்துவம் பெற்று விடுகிறது. நினைவின் ஆழத்தில் பதிந்து போன பந்தம், மரணத்தை வெல்லும்! துரதிர்ஷ்டவசமாக அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை! நட்பு,பாசம்,பக்தி போன்றவற்றிலும் தன்னிழப்பு, நிறைவு ஏற்பட்ட போதிலும்,  உணர்ச்சிப் பெருக்கு, ஆழ்ந்த அன்பு, நெருங்கிய பிணைப்பு, பரிவு, அக்கறை, நெஞ்சுருகும்  பரிதவிப்பு போன்ற எண்ணற்றத்  தன்மைகளைத் தன்னகத்தே கொண்டது காதல். மன நெகிழ்வில் சுயநலம் துறக்கவும், தன்னை மறந்துத் தன் துணை பொருட்டு எல்லா உயர்வுகளையும், இன்பங்களையும் துச்சமாக எண்ணவும், அந்த ஒருவருக்காக, அவர்  நலனுக்காகத்  தன்னையே, ஏன் அந்த ஒருவரையே கூடத் தியாகம் செய்யவும் வைக்கின்ற பெரும் சக்தி அது.

அது வெறும் விருப்பு அல்ல, I love music  என்பது போல. வெறும் பாலியல் ஈர்ப்பு அல்ல, கவர்ச்சி மட்டுமே கொள்ள. காமம் அல்ல, உடலாசை தீர்ந்ததும் விலகிச்  செல்ல! விருப்பு,கவர்ச்சி,ஆசை எல்லாம் இருந்தும் அவற்றை மீறிய அன்பும்,பண்பும் கொண்டு கரைக்குள் அடங்கி சலசலக்கும் வற்றாத நதி!

காதலைப் பாடாத கவிஞன் இல்லை. அதைத் தொடாத இலக்கியம் இல்லை. 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று சொல்லாத இளையோர் இல்லை. எனினும் அந்த வார்த்தை உயிரில் கலந்து வந்ததா என்பதை அவர்கள் வாழ்க்கைக் காட்டிக் கொடுத்து விடும். காதலர் வாழ்வில் கருத்து வேறுபாடோ அன்றி சச்சரவோ இருக்காது என்பது இதன் பொருளல்ல. இரு வேறு இடங்களில் பிறந்து, மாறுபட்ட சூழ்நிலைகளில் வளர்ந்து, தனிப்பட்ட குணங்களைக் கொண்ட இருவர் அன்றாட வாழ்வின் அலைக்கழிப்புகளால் தடுமாறும்போது, அதன் எதிரொலி செயல்களில்  பிரதிபலிக்கத்தான் செய்யும். ஆனால் புற நடவடிக்கைகளுக்கு அப்பால் அங்கே 'காதல்' பரிதவித்துக் கொண்டிருக்கும். மீண்டும் சம்பந்தப்பட்டோர் இணைந்த பின்னர், நடந்தவற்றின்  சுவடு கூட அங்கே இருக்காது!

இந்தக் காதல் ஒரு காலத்தில் புனிதமாகப் பார்க்கப்பட்டது. "காதலின் புனிதம்" மாறாதிருந்தபோதும், பார்க்கும் பார்வை மாறி வருகிறது. 'எதிர் துருவங்கள் கவரும்', 'பஞ்சும் நெருப்பும்  அருகில் இருந்தால் பற்றிக் கொள்ளும்' என்பதான   மலிந்தக் கருத்துக்கள் போக, தற்போது காதல் 'பௌதிக மாற்றம்' என்ற அளவுக்குத்  தாழ்வை நோக்கித் தள்ளப்படுகிறது. அதனால் 'பசிக்கு உணவு தேடும் மனப்பான்மை' வளர்கிறது. அதன் விளைவுகள்,சமூக வாழ்வையே பாதிக்கும் பல பிரச்சனைகளாக உருவெடுக்கின்றன.

காதலிக்கும்போது, பசி, தூக்கம் குறைவதும், இதயத் துடிப்பு அதிகரிப்பதும், அமைதியும், அதே நேரத்தில் புத்துணர்ச்சியும், இணைய வேண்டுமென்ற தாகமும், இன்பமும் ஒரு சேர எழுவதும் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தத்தான் செய்யும். எது முன் வந்தது என்ற ஆராய்ச்சி 'கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா' என்பதற்கு ஒப்பானதுதான்.

உள்ளத்தில் ஏற்படும் நுண்ணுணர்ச்சி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு  இருவரிடையே உருவாகும் மன நெருக்கத்தை, மனித வாழ்வில் இறைவனோடு இணையும்  பேரின்பத்திற்கு முதற்படியாக, மண்ணுலகில் தன்னை ஈந்து  பெறும் இன்பத்தை, அதற்குரியப்  பீடத்தை விட்டு அகற்றுவது, நாகரிகச் செம்மையில் படியும் கறைக்கு ஒப்பாகும். காதலை விடுத்து, பொருள்,பதவி,சாதி,மதம் ஆகியவற்றில் மோகம் கொள்ளும்போது ஏற்படும் பௌதிக மாற்றத்தை அறிந்து, அவற்றைக் களைந்தால், உலகமாவது நிம்மதியாக இருக்கும்!

திருமதி சிமோன்     

காதலின் தேடல்


நான் நாடுகிறேன்:  உன் தழுவலை..... 
                                        உன் முத்தத்தை.....
                                        உன் இதயத்தை.....
                                        உன் கதகதப்பை .....
                                        உன் மென்மையை .....
                                        உன் மிருதுவான  வார்த்தைகளை .....
                                        உன் காதலை.....
சுருக்கமாக "உன்னை"!


ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி,
இருவர் எனும் தோற்றம் இன்றி, பொரு  வெங் 
கனற்கு ஏயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார் 
புனற்கே புனல் கலந்தாற் போன்று! - நளவெண்பா 


வண்டுவந்து மெல்லமெல்லத் தேடித் தேடி 
மனம்பிடித்த மலர்தன்னில் அமர்தல் போலக் 
கண்டுவந்த கட்டழகன் கண்கள் தாமும் 
கருதில்பொன் மேனிதனில் மோதி அங்கே 
மண்டியவா றிருந்திடவும், நடந்த கால்கள் 
மறுத்திடவும், படையளவும் தயங்கி நிற்க 
ஒண்டொடியின் புன்னகைக்கு உயிரை விட்டு 
உடற்கூடு கால்தூக்கிப் போட்டுப் போகும்! - கண்ணதாசன்


கனவெல்லாம் நனவாகி வந்தாய் - என்
கவிதைக்குப் பொருளெல்லாம் தந்தாய்!
நினைவெல்லாம் நீயாக நெய்தாய் - ஆயின்
நெஞ்சத்தை ஏன்துளை செய்தாய்?

பசிதாக உணர்வெல்லாம் கொன்றாய் - மனப்
பசியென்னும் எரிமூட்டு கின்றாய்!
இசைதோயக் குரல்மீட்டும் போதில் - ஏனோ
ஏக்கத்தின் ஒலிகூட்டு கின்றாய்?

கண்காணும் எழிலாகி நின்றாய் - என்
கைதேடும் பொழுதெங்கு சென்றாய்?
மண்காணும் பொருள்யாவும் நீயாய்க் - கண்டு
மருள்கின்ற மயல்கூடும் பேயாய்!

பக்திக்குச் சிலையாகக் கண்டேன் - என்னைப்
பலியாக்கி விலையாகக் கொண்டாய்!
முக்திக்குத் துணைதேடி வந்தேன் - என்
மனதுக்குள் இருள்கூடி நொந்தேன்! - (யாரோ)

                             
                    மலரும் வண்டும்

இரைக்கென உயிர்கள் இரவும் பகலும்
உரைக்க இயலா ஒன்றிய உணர்வும்
தேடும் விழியும் தேர்ந்த முறையும்
நாடும் வழியும் நால்வகைக் கொண்டு
அல்லல் உறுவது அகில இயற்கை!
எல்லா இனமும் இயல்பென அறியும்
சின்ன மலரின் சிறுதேன் துளிகள்
வண்ண வண்டினை வலிந்து ஈர்க்கும்!              

வாடும் மலராய் வனிதை அவளைக்
கூடும் வண்டாய்க் கோமகன் தன்னை
உருவகம் கொள்ள உவமை தந்தத்
தருணம் எதுவோ தர்மம் தானோ?
காதல் சுவையைக் காமப் பசியாய்
சாதல் மீறியச் சாதனை ஒன்றை
மாற்றிய தேனோ மாறும் உலகில்
ஆற்றும் செயலும் ஆணா திக்கமோ?! - திருமதி சிமோன்

இலக்கியம் காட்டும் காதல்

                                                          

 சங்க இலக்கியங்களை அகம், புறம் என இரு வகைகளாகப் பகுத்திருந்தனர் பழங்காலத் தமிழர்கள் . இத்தகைய பகுப்புமுறைமை வேறு எந்த மொழியிலேயும் இல்லை என்றே சொல்லலாம். அகத்தில் காதலையும் புறத்தில்  வீரத்தையும் சிறப்பித்துக் கூறியுள்ளனர்.அக்காலத்துப்  புலவர்கள்  மிகவும் உற்சாகமாகக்  காதலைப் பாடி இருப்பதால் சங்க காலத்தில் காதலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது தெரிகிறது.அதனால்தான் அகம் சார்ந்த பாடல்களே புறம் சார்ந்த   பாடல்களைவிடவும் அதிகமாக  இருக்கின்றன.எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு ஆகிய ஐந்தும் அகம் பற்றியவை. பத்துப்பாட்டு நூல்களுள் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை,  ஆகியவை அகநூல்கள் ஆகும்.  நெடுநல்வாடை அகமா புறமா என்ற பட்டி மன்றம் இன்றும் / இன்னும் நிறைவு பெறவில்லை!

அகம் என்பது உள்ளத்தே நிகழும், வெளியே புலப்படுத்த முடியாத உணர்வை,  இன்பத்தைக்  குறிப்பதாகும்.(உடல் - உறுப்பு இவற்றைவிட உணர்வுகளுக்கே முதன்மை கொடுத்து அகப் பாடல்கள் பாடப் பட்டுள்ளன).அதாவது தலைவன் - தலைவியரின் காதல் வாழ்வையும் மணவாழ்வையும் குறிப்பதாகும்.  இவற்றில் கூறப்படும் உணர்வுகள்  எக்காலத்துக்  காதலர்களுக்கும் பொருந்தும் என்பதால் ஒரு சில காட்சிகளைக்  காண்போம்:

"இம்மை மாறி மறுமையாகினும்
 நீயாகி யரெம் கணவனை
யானாகியர்நின் நெஞ்சுநேர் பவளே "

"யாயும் ஞாயும்  யாரா கியரோ
எந்தையும்  நுந்தையும் எம்முறைக் கேளிர் 
யானும் நீயும்  எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை  நெஞ்சந் தாங்கலந் தனவே"

காதல் வாழ்வில் அவனில் அவளும், அவளுள் அவனும் கலந்து கரைகின்ற தன்மையைக்  காட்டும்  குறுந்தொகைப் பாடல்கள் இவை:

மழை என்ற தலைவனுக்காக நிலமங்கை காத்திருக்க, மழை வந்ததும் எங்ஙனம்  அவற்றை பிரித்து பார்க்க முடியாதோ அதுபோல அன்புடைய  நெஞ்சங்கள் ஒன்று கலந்தனவாம். இவ்வழகிய கருத்தைப்  பாடிய கவிஞனின் பெயர் தெரியாததால் அவரது கவிதை வரியாலேயே அவர் செம்புலப் பெயல்  நீரார் என்று அழைக்கப் படுகிறார்.

பிளவுபடாத பொருந்திய காதலில் ஓருயிர் ஈருடல் என்ற  காதலர்களின் நிலையை,
"இருதலைப் புள்ளின்  ஒருயிரம்மே" (அகநானூறு 12)
"நினக்கு யான்
உயிர் பகுத்தன்ன மாண்பினனே" (நற்றிணை  128) பாடல்கள் வழி அறிகிறோம்.

கன்னி மாடத்தில் நின்ற சீதையை "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" முதல் பார்வையிலேயே காதலில் விழுந்ததாகக்  கம்பர்   பாடுகிறார்.

"ஓதிமம்  ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையல் ஆகும்
சீதையின் நடையை நூக்கிச்  சிறியதோர் முறுவல் செய்தான்
மாதவள் தானும் அங்கு  வந்து நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப்  புதியதோர் முறுவல் செய்தாள் "

கம்பனின் காட்சிப் படைப்பு இது.வனவாசம் சென்ற ராமனும் சீதையும் கோதாவரி ஆற்றுக்குப்   பக்கத்தில் அமர்ந்து ஒருவர் மற்றொருவரைக் கண்டு  மகிழும் காதல் வரிகள் இவை. அன்னத்தின் நடையை சீதையின் ஒய்யார நடையுடன்  ஒப்பிட்டு ராமன் சிரிக்க, கம்பீரமாக நடக்கும் யானையின் நடையைத்  தன் தலைவனின் நடையுடன் ஒப்பிட்டு மகிழ்கிறாள் சீதை.

பிறன்மனை நயத்தலையும்  பரத்தையர் உறவையும் பெருங்குற்றமாகச் சொல்லும் வள்ளுவர் அன்புடைய காமம்  சமுதாயத்துக்குத்  தேவை என்கிறார்.

காதல் பற்றிய  குறள்கள்:

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

மலரினும் மெல்லிது காமம்   சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

உள்ளக் களித்தலும் காண  மகிழ்தலும்
கள்ளுக்குஇல்  காமத்திற்கு உண்டு .

காதலனை நெஞ்சில் குடிவைத்திருக்கும் காதலி சூடாக எதையும் சாப்பிடுவதில்லையாம்.இதை
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும்  வேபாக் கறிந்து  - குறள்வழி  அறிகிறோம்.

அக மரபின் தொடர்ச்சியாக வருவது பக்தி மரபு . பக்தி என்பது  காதலின் ஓர் உன்னத வெளிப்பாடாகும். அன்பினால் இறைவனை அடையத் துடிக்கும் ஆன்மா தன்னைப் பெண்ணாகவும் இறைவனைத்  தலைவனாகவும் கொண்டு அன்பு செலுத்தும் நிலை நாயக - நாயகி பாவம் எனப்படும். நாயன்மார்களும் ஆழ்வார்களும் நாயக-நாயகி பாவத்தில் பல பாடல்களைப் பாடியுள்ளார்கள்.
தலைவனுடைய பெயரையும் நிலையையும் ஊரையும் கேட்டு, அதைச் சொல்லிச் சொல்லி அவன் மேல் பித்தாகிறாள்  தலைவி. தலைவியின் ஒருதலைக் காதலான பக்தியைத் தாய் கூறுவது போல நாவுக்கரசர் பாடியுள்ளார்.இதோ அந்த தேவாரப் பாடல்:

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னே அவனுடைய ஆரூர்  கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள்தன்  நாமம் கெட்டாள்
தலைப்பட் டாள்நங்கை தலைவன் தாளே

கோதை என்ற ஆண்டாள் அவளுக்காக செய்யப்பட திருமண ஏற்பாடுகளை மறுத்துத்  திருவரங்கம் கோவிலில் உறையும் திருவரங்கனையே தன்  மணாளனாக வரித்துக் கொண்டவள்.இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் நூல்களை எழுதினார். கண்ணனுடன் கொண்ட தோழமை, கண்ணனைப்பற்றிய அவளுடைய கனவுகள் பற்றிய கருத்துகளை இவை விவரிக்கின்றன.

"ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்" என்கிறார்  பாரதியார்.
காதல் என்ற வார்த்தை காமம் சம்பந்தப்பட்டது, உடல் அவயங்களுடன் தொடர்புடையது என்று உலகம் நினைத்துக் கிடந்த காலத்தில், உண்மையான காதல் என்னும் உணர்வு பரம திருப்தியானது  சாதிக்கக் தூண்டுவது என்று பாடுகிறார் பாரதி.

காதலினால் மானுடர்க்குக்   கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக்  கவலை தீரும்
காதலினால்  மானுடர்க்குக் கவிதை உண்டாம்
கானம் உண்டாம் சிற்பம் முதல் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே
மேலும் காதல் சாவைக்கூட இனிதாக்கிவிடும் என்கிறார்.
அவர் எழுதிய 'கண்ணமா  என் காதலி',  'கண்ணன் என் காதலன்''
ஆகிய கவிதைகள் முழுக்க முழுக்க  நாயக-நாயகி  பாவனைகள்தான்.

பாரதிதாசன்:காதல் படுத்தும் பாட்டை, 
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்.என்கிறார்.
இவரின் காதல் பாடல்கள் பல, சமூக சீர்த்திருத்தங்களை வலியுறுத்துகின்றன.
காதல் அடைதல் உயிரியற்கை - அது
கட்டில் அகப்படும் தன்மையதோ - அடி
சாதல் அடைவதும் காதலிலே - ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்று கண்டாய்.

இலக்கிய வானில் காதல் சிறகை விரித்து உயரப் பறந்தவர்கள் தமிழர்கள் என்பது வெள்ளிடை மலை.

லூசியா லெபோ

காதலின் தன்னிழப்புகாதல் எத்தனைத்  தூய்மையானதாக இருந்த போதிலும், சம்பந்தப்பட்ட இருவரைத் தவிர மற்றவர்களால் ஏனோ புரிந்து கொள்ளப் படுவதில்லை. நட்பு, பாசம், பக்தி எல்லாம் உணர்வு பூர்வமாகப்  பகிர்ந்துகொள்ளப் பட்டாலும் இது மட்டும் பலரால் விமர்சிக்கப் படுவதற்கும், புறந்தள்ளப் படுவதற்கும் எல்லோரும் இதற்கு ஆட்படாததும் ஒரு காரணமாகலாம். ஆனால் 'காதல் சுவை' மட்டும் எல்லோரையும், எந்தக் காலத்திலும் கவர்கிறது. அதனால் தான்  சரித்திரக் காதலர்களும், இலக்கியக் காதலர்களும் என்றும் நினைவில் நிறைந்து நிற்கிறார்கள்! அதிலும் கூட சமுதாயப் பிரதிபலிப்பு பளிச்சிடுகிறது. எல்லோராலும் போற்றப்படுகிறக்  காதல் கதைகளில் எல்லாம் ஒன்று காதலர் சேர முடியாமல் பிரிக்கப் படுகிறார்கள் அல்லது உலகை விட்டு மறைந்தே போகிறார்கள்.சமூக ஏற்றத் தாழ்வோ  அல்லது உறவோ இவர்களுக்குத் தடைச் சுவராக நிற்கிறது. உலகின் எந்த பாகமானாலும் இந்த மனோபாவமே பெரும்பாலும் நிறைந்திருப்பது மனித குலத்தின் மனோவியாதியா அல்லது வக்கிரமா என்று தெரியவில்லை.

பாரதியைவிட இந்த அவல நிலையைக் கனன்ற நெஞ்சோடு எடுத்துரைத்தவர் வேறு யாருமில்லை:

"இங்கு புவிமிசைக் காவியங்கள்  எல்லாம் 
   இலக்கிய மெல்லாங் காதற் புகழ்ச்சி அன்றோ?
  நாடகத்தில், காவியத்தில் காதலென்றால் 
    நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பார்,
  ஊடகத்தே, வீட்டினுள்ளே, கிணற்றோரத்தே 
    ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார் 
   பாடை கட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார் 
     பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க 
   மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து 
      முறை தவறி இடரெய்திக் கெடுகின்றாரே!"

கிரேக்கம்,எகிப்து,அமெரிக்கா,ஐரோப்பியா,அரேபியா,இந்தியா உள்ளிட்ட நாடுகளின் புகழ் பெற்ற காதலர்களின் கதைகள் பெரும்பாலும் சோகத்தில் தான் முடிவடைகின்றன.  மனிதனைத்  துன்ப உணர்வுகளே ஆழமாக பாதிப்பது இதன் அடிப்படையாக இருக்கலாம். ஆனால் இந்தக் காதல் என்னவோ துன்பத்திலும் நிலைத்து நின்று வென்று விடுகிறது! காதலிப்பவரைப்  பிரிந்தாலும், இழந்தாலும் அவர்களுக்காகவே வாழ்ந்தும், இறந்தும் காதலை வாழ வைத்துவிடுகிறார்கள்.

 இறந்த மனைவியின் நினைவுக்காக, 20 வருடங்கள் முனைந்து, 20,000 வேலையாட்கள், 1,000 யானைகள் கொண்டு தாஜ்மஹாலைக் கட்டியதுமின்றி, அவள் நினைவாகவே மகன் சிறையில் அடைத்தும்,அவள் கல்லறையைக் கண்டவாறே கடைசி நாட்களைக் கழித்த ஷாஜஹானை விடவும் உலகத்திற்குக் காதலின் மேன்மையை யாரால் உணர்த்த முடியும்?

இங்கிலாந்து அரசி விக்டோரியா  காதல் கணவர் இறந்த பின் 40 ஆண்டு காலம், தன் முடிவு வரும் வரை கறுப்பு நிற உடையே அணிந்து துக்கம் காத்தார். எனினும் அவர் செவ்வனே ஆற்றியக் கடமைகளே, இங்கிலாந்தை 'சூரியன் மறையாத நாடு' எனப் புகழ் பெற வைத்தது.

காதல் மணம்  புரிந்த கியூரி அம்மையார்,கணவர் இறந்த பின்னரும் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்து, பெளதிகத்தில் நோபல் பரிசை 1911இல் பெற்றார்.

இவ்வண்ணம் காதலிப்பவர்கள் இணைந்து வாழ்ந்தாலும், சேர்ந்தே மறைந்தாலும்,  பறிகொடுத்து  நின்றாலும் காதலால், காதலுக்காக  மட்டுமே வாழ்கிறார்கள்! அவர்கள் தன்னை இழப்பது  காதலில்  மட்டுமே!

திருமதி சிமோன்காதல் விசித்திரம்:


காதல் திருமணம் செய்துகொண்ட பெற்றோர்களே தங்கள் பிள்ளைகள் காதலில் விழுந்து விட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பிள்ளைகளின் தேர்வு குறித்து சந்தேகம் ஒருபுறம் இருக்க உற்றார் சுற்றத்தாரின் வாய்க்குப் பூட்டு  போட முடியாதே என்ற அச்சம்தான் முக்கிய காரணமாகும்.பெரியவர்கள் இப்படி நினைக்கக் காதல் பறவைகளின் வித்தியாசமான  எண்ண அலைகளின் விளைவு : உள்ளார்ந்த  உண்மையான காதலர்கள் தங்கள் காதல்  நிலைத்து நிற்கப்     பொது இடங்களில்  உள்ள கதவு, வேலி , பாலம் இவற்றில் 'wish locks" அல்லது 'Love padlocks" பொருத்தி வந்தனர்.  இந்த வழக்கத்தின் தோற்றத்துக்குச்  சரியான ஆதாரங்கள்  இல்லை. ஆனால், இரண்டாம் உலகப் போருக்கு முன்பாகச் செரிபியாவில் உள்ள  Vrnjačka Banja என்ற இடத்தில்  வாழ்ந்த  Nada என்ற இளம் ஆசிரியை செரிபியன் உயர் அதிகாரியான Relja ஐக்  காதலித்தாள். இருவரும் காதலில் திளைத்து இருந்த சமயத்தில்   போர் நிமித்தம் கிரீஸ் சென்ற  Relja அங்கு ஒரு பெண்ணைக் காதலித்தான் ;  Nada வுக்குக்  கொடுத்த வாக்குறுதிகளை மறந்தான். இதனால் நிலை குலைந்த  Nada நோயுற்று மரணத்தைத்  தழுவினாள் .  அது முதல் அந்த ஊரில் காதல் வயப்பட்ட பெண்கள் தங்கள் பெயருடன் காதலன் பெயரையும் பூட்டுகளில் எழுதி அந்தப் பூட்டை Nadaவும்  Relja வும் அடிக்கடி சந்தித்துக்கொண்ட    Most Ljubavi பாலத்தில் பிணைத்தனர். இதனால் தங்கள் காதல் வெற்றி பெறும் என நம்பினர்.

இந்த வழக்கம் ஐரோப்பியாவிலும் உலகின் பல நாடுகளிலும்  பரவலாக இருந்து வருகிறது.2000 லிருந்து இந்த வழக்கம் அதிகரித்து உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தலை நகரான பாரிஸில் Pont des Arts, Passerelle Léopold-Sédar-Senghor ஆகிய பாலங்களில் இத்தகைய பூட்டுக்கள் நிறைய பொருத்தப் பட்டன. பாலத்தின் அழகை இவை கெடுப்பதால் 2010 இல் தடை  விதிக்கப்பட்டு பிறகு அங்கிருந்து நீக்கப்பட்டன. காதலர்கள் சும்மா இருப்பார்களா ! தற்பொழுது இந்த பூட்டுக்கள் Pont de l'Archevêché என்ற பாலத்தில் தோன்ற ஆரம்பித்துள்ளன.

மாஸ்கோவில் Vodootvodny கால்வாயின் மேல்  பாலத்தில்  அமைக்கப் பட்ட இரும்பு மரங்களில் பூட்டுக்களைக் காதலர்கள் பொருத்தி வந்தனர். 
இத்தாலி: ப்ளொரான்ஸின் உலக புகழ்பெற்ற    Pont Vecchio பாலத்தில் 5500 பூட்டுக்கள் பொருத்தப்பட்டு இருந்தனவாம். பாலத்தின் அழகை இவை குறைப்பதாலும் துரு , கீறல் , சிராய்ப்பு  போன்ற பாதிப்புகள் பாலத்துக்கு உண்டாவதாலும் இவை அகற்றப்பட்டனவாம்.
அயர்லாந்து: டப்ளின் நகரில் உள்ள  Ha'penny Bridge இல் சமீப காலத்தில் இத்தகைய பூட்டுக்கள் பொருத்தும் வழக்கம்  தோன்றியுள்ளதாம். இதைக் கைவிடுமாறு நகரசபை கேட்டுக் கொண்டுள்ளது. 
தென் கொரியாவில் நாம்சன் அல்லது செயோல் கோபுரத்தின் வேலிகளில்   பூட்டுக்களைப்  பொருத்துவதே மனத்துக்கு விருப்பமான செயலாக அந்நாட்டுக் காதலர்கள் நினைக்கிறார்களாம்.

ஜெர்மனி: Hohenzollern Bridge  - ஜெர்மனியில் உள்ள முக்கியமான பாலம்.   தற்காப்புக்காக இண்டாம்  உலகப் போரின் பொழுது தகர்க்கப்பட்டாலும் மறுபடியும் கட்டியெழுப்பப்பட்ட மிக நீளமான இரயில் பாலம் ( 409.19 மீட்டர் ). இதையும் விட்டு வைக்கவில்லை காதல் ஜோடிகள்.இந்த பாலத்தில் அமைந்துள்ள நடைபாதை வேலிகளில்  2008 முதல் பூட்டுக்கள் பொருத்தத் தொடங்கினர்.இப்பாலங்களின் கீழே ஓடும் ரயில்களால் உண்டாகும் மின்காந்த சக்தி இந்த பூட்டுக்களில் தங்கி தங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

Uruguay: தென் அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள  நாடு . இதன் தலைநகரம் Montevideo. இங்கே உள்ள ஒரு நீரூற்றின் முன் ஆங்கிலத்தில் உள்ள வசனம்   இதோ:
"The legend of this young fountain tells us that if a lock with the initials of two people in love is placed in it, they will return together to the fountain and their love will be forever locked."

Nits என்ற டச்சு பாப் குழுவினர் 2012 ஆம் ஆண்டு வெளியிட்ட Malpansa என்ற தங்கள் ஆல்பத்தில் Love Locks என்ற பாடலைப் பாடிக் காதலர்களுக்கு  மகிழ்ச்சி ஊட்டியுள்ளார்கள்.

தொகுப்பு: லூசியா லெபோ.

பழங்காதலின் பல (பழ) மொழிகள்

                                                             

1.  காதல் கண்களிலிருந்துதான் ஆரம்பமாகிறது. - ரஷ்யா

2.  ஒரேயொரு கடைக்கண் பார்வையில்  காதல் நடப்படுகிறது. - அரேபியா

3.  பொறாமை இல்லாமல் காதல் இல்லை. - பிரெஞ்சு

4.  தூக்கம் வந்தால் தலையணை தேவையில்லை, காதல் வந்தால் அழகு           தேவையில்லை - பாஷ்டோ

5.  காதல் இதயம் எப்போதும் இளமையாக இருக்கிறது - ஹீப்ரூ

6.  காதலிக்கப்படுவதை விட காதலிப்பது மேல் - ஈஸ்டோனியன்

7.  காதலைத் திருட முடியாது. ஆனால் அது திருடர்களை உருவாக்குகிறது. -  ஸ்வீடிஷ்

8.  காதலை மறுக்கலாம் யாராலும் வெறுக்க முடியாது. - தமிழ்

9.  காதலர்களின் கோபம் காதலைப் புதுப்பிக்கிறது - லத்தீன்

10. காதல் குடிசையிலும் கொலு மண்டபத்தைப் போலவே வாழ்கிறது - ஆங்கிலம்

11.  காதல் மலர் திருமணத்தில் கனியாகிறது - பின்னிஷ்

12. காதல் அச்சத்தை வெளியே துரத்துகிறது - செக்

13.  காதலில் இருக்கும்வரை, உலகில் எதுவும் வருத்தமுறச் செய்யாது - ஹங்கேரியன்

14.  காதல் முள்ளில்லாத ரோஜாக்களையே பார்க்கிறது - ஜெர்மன்

15.  காதல் இதயத்திலிருந்து கண்வழி வெளிப்படுகிறது - தமிழ்  

mercredi 5 décembre 2012

உங்கள் எண்ணங்கள்

உங்கள் எண்ணங்கள்
எங்கள் வளர்ச்சியைத் தீட்டும் வண்ணங்கள்
 
த்தம் பின்னூட்டங்களப் பலரும்  பொதுவாகவே பதிந்துள்ளனர். ஒவ்வொரு கட்டுரையின் இறுதியில் பின்னூட்டம் இட வழி உள்ளது. பொதுப் பின்னூட்டங்களைத் தொகுத்து இகே தருகிறோம்.

__________________________________________________________________________________


1) உங்கள் கருத்து :
அன்புக்கும் மதிப்புக்குமுரிய சகோதரிகளுக்கு,
வணக்கம்.தாங்கள் அனுப்பிய வலைப்பூ மிகமிகச் சிறப்பு.பல கருத்துமணிகளைக் கொண்ட களஞ்சியமாகக் கருத்துவிருந்து நல்கியது.சகோதரிகளின் உழைப்புக்கும் தமிழ்ப்பற்றுக்கும் தலைவணங்குகிறேன்.பெருந்தன்மையா
கக் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள செயேந்திரருக்கும் இடம் வழங்கியுள்ளீர்கள்.போலித் துரவிகளை இனங்கண்டு ஒதுக்கித் தள்ளவேண்டியது சகோதரிகளின் முதற்கடமை என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
மாதந்தோறும் மலரும் இந்த வலைப்பூ தமிழ்ச்சோலையில் தனித்த சிறப்புப் பெறும்;வரலாறு சமைக்கும் என்பதில் ஐயமில்லை.வாழ்க தங்கள் தமிழ் உள்ளம்.
அன்புச் சகோதரன்,
மறைமலை
maraimalai

  1) எங்கள் பதில் :
அன்புடைய பேராசிரியர் அவர்களுக்குப்
பணிவு வணக்கம்.

தங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது.
தங்களைப் போன்ற தமிழ்ச் சான்றோர்களின்
நல்  வாழ்த்துகள் எங்கள்  உளத்துக்கு உரம் ஊட்டுகின்றன.
நன்றி, நன்றி நனி நன்றி!

செயேந்திரர் பற்றய குறிப்பபைத்   தந்தது
அவர் மேல் உள்ள பற்றினாலோ பாசத்தாலோ அல்ல !
நடு  நிலைமையில் இருந்து செய்தி தர வேண்டிய
கடப்பாடே காரணம்.

போலித் துறவிகள் புறந்தள்ளப்பட வேண்டியவர்கள் என்னும்
தங்கள் கோட்பாடு எங்களுக்கும் உடன்பாடே.

தொடர்ந்து தங்கள் நல்லாதரவுகளைப் பெற விழைகிறோம்.
அன்புடன்
உங்கள் சகோதரிகள்
ராஜி சிமோன்    லூசியா லெபோ

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

2)உங்கள் கருத்து :
அம்மை யீர்
நன்றி.
பிரான்சு நாட்டின் தமிழர்கள், அங்குள்ள தமிழின் நிலை,  ஆகியயவையும் இடம் பெறச் செய்யுங்கள்.
திருவள்ளுவன் இலக்குவனார்
thiru2050@gmail.com 

  2) எங்கள் பதில் :
அன்புடையீர்
வணக்கம்
தங்கள் பின்னூட்டம்
எங்கள்  வளர்ச்சிக்குத் தருகிறது நல்லூட்டம்.
பிரான்சு நாட்டின் தமிழர்கள், அங்குள்ள தமிழின் நிலை,  முதலியன
இனி மெல்ல மெல்ல இடம் பெறும்.
தங்கள் பரிந்துரைக்கு நன்றிகள்.

தொடர்ந்து தங்கள் நல்லாதரவை  வேண்டும் 


உங்கள்  சகோதரிகள்
ராஜி சிமோன்    லூசியா லெபோ.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

3)உங்கள் கருத்து :
 அன்புச் சகோதரிகள் ராஜி சிமோன் ,லூசியா லெபோ.
அன்புடையீர்! வணக்கம்!
பிரான்சுகம்பன் மகளிரணி விழா நிழற்படங்கள் அழகாக இருக்கின்றன. உங்கள்
அச்சிட்ட மலர்களை எங்களுக்குஅஞ்சலில் அனுப்பி பகிர்ந்துகொள்ளலாமே.
மியம்மா வாழ் தமிழ் ஆசிரியைகள் சார்பாக அன்பு விண்ணப்பம். இம்மாத மலர்
சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்.
அன்புடன்,
சோலை.தியாகராஜன்.
www.facebook.com/solai.thiyagarajan
Yangon,Myanmar


  3) எங்கள் பதில் :
திருமிகு சகோதரர்
சோலை.தியாகராஜன்.அவர்களுக்கு
அன்பு வணக்கம்.

தங்கள் பின்னூட்டம் வந்தது
மகிழ்ச்சி தந்தது!
பின்னூட்டத்துக்கும் பாராட்டுகளுக்கும்
மிக்க நன்றிகள் .!

மியம்மா வாழ் தமிழ் ஆசிரியைகள் அறிமுகம் பெற விழைகிறோம்.
மலர்கள் பகிர்தல் பற்றிப்  பிரான்சு கம்பன் கழகத் தலைவர்
கவிஞர் கி பாரதிதாசனிடம் எடுத்துரைப்போம்.
அவர் ஆவன செய்வார்.

தொடர்ந்து தங்கள் நல்லாதரவுகளை நாடும் சகோதரிகள்  


உங்கள்  சகோதரிகள்
ராஜி சிமோன்    லூசியா லெபோ.

 xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

4) உங்கள் கருத்து :
சிறு பிழை திருத்தம்,10000 மாணவர்களுக்கு 2000 ஆசிரியர்கள் என்று இருக்கவேண்டும்.சிரமத்துக்கு மன்னிக்கவும்.நன்றி. 
அன்புடன் அப்துல் தயுப்.  

4) எங்கள் பதில் :
பிழை திருத்தத்துக்கு நன்றி நண்பர் அயூப் அவர்களே!

அன்புடன்
பெஞ்சமின் லெபோ 

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
 
5) உங்கள் கருத்து :
 தொடர்ந்து உங்கள் வலைப்பூக்கள் மலர்ந்து
வருவது கண்டு மகிழ்ச்சி. பாராட்டுகள்.
தொடர்க உங்கள் நற்பணி.

அன்புடன்
நாக.இளங்கோவன்
அன்புடையீர்
வணக்கம்!
நன்றி ஐயா!
தங்கள் நல்லாதரவைத் தொடர்ந்து நாடும்
உங்கள் சகோதரிகள்

ராஜி சிமோன் லூசியா லெபோ
6) உங்கள் கருத்து :
வணக்கம்
மிக நல்ல தகவல்கள்.
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மேடைப்பேச்சை 1954-ல் இலங்கையில் கேட்டேன்.
தகவலுக்கு நன்றி
 சிவா பிள்ளை
pillaisiva@gmail.com


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

7) உங்கள் கருத்து :

வாழ்த்துகள். முகநூலில் பக்கம் தொடங்கலாமே. அதில் என் பக்கம் Annan Pasupathy டுவிட்டரில் @PasupathyAnnan
அ.பசுபதி
karuppannan.pasupathy@gmail.com