பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 15 décembre 2010

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

இப்போதுதான் வருடம் பிறந்தது போல இருந்தது. அதற்குள் வருடக் கடைசிக்கு வந்துவிட்டோம். இதனால்தான் காலத்தைச் சுழலும் சக்கரம் என்கிறார்கள். யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வருடத்தின் இறுதியில் இருப்பவர்கள் எப்போதும் அந்த ஆண்டின் வரவு செலவு, நல்லது கெட்டது இவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது வழக்கம். நாமும் வாழ்க்கையின் இந்த ஓராண்டுக் கணக்கை, நிகழ்வுகளை, வெற்றிகளை, தோல்விகளை, துன்பங்களை, ஏக்கங்களை அலசிப் பார்ப்போம். அது   லாபமாகவும் இருக்கலாம், நட்டமாகவும் இருக்கலாம். சுக துக்கம் சுழல் சக்கரம் என்பார்கள். மேடு பள்ளங்களைச் சரி செய்துகொண்டு அடுத்த ஆண்டு ஓட்டத்துக்கு நம்மைத் தயார் செய்து கொள்வோம். இறைச் சித்தம் அல்லது பலரும் சொல்லும் விதி என்ற ஒன்று இருந்தாலும் வாழும் நாட்களில் நம் செயல்பாடுகளைத் திறம்படச் செயல்படுத்த நமக்குத் தேவை உடல், உள்ள நலன்கள். இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.  இதில் ஏதாவது ஒன்று பாதிக்கப்படுமாயின் நாம் முடங்கிப் போய்விடுகிறோம். நமது உடல் நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் பகுதியில் மருத்துவத் தொடர்புடைய சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

லூசியா லெபோ

இன்றைய அறிமுகம்

  
கியூரி  அம்மையார் :

மேரி ஷிலேடோவ்ஸ்கா கியூரி  அம்மையார் உலகப் புகழ் பெற்ற சிறந்த விஞ்ஞானி. இவர் பௌதிகயியல் (Physics), வேதியியல் (Chemistry) - இரண்டு நோபல் பரி சுகளை வாங்கிய முதல் பெண்மணி ஆவார். பாரி ஸ்  பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரி யரும் இவரே. மேரி கியூரி  1867 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் பள்ளி ஆசிரி யர்களாகப் பணியாற்றியவர்கள். இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பாரி ஸ்  நகரத்துக்கு வந்து அறிவியல் துறையில் பல பட்டங்கள் சோர்போன் (Sorbonne) பல்கலைக் கழகத்தில் பெற்றார். அத்தருணத்தில் பியர் கியூரி  (Pierre Curie) யுடன் ஒரே சோதனைச் சாலையில் வேலை செய்தார். இவர்களுக்கு 1895 -இல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். பௌதிகயியலில் தன் கணவர், மகள் இரேன் ஜோலியோ கியூரி , மருமகன் பிரெடிரி க் ஜோலியோ கியூரி  இவர்களுடன் நோபல் பரிசைப்   பகிர்ந்து கொண்டார். ஒரே குடும்பத்தில் அனைவரும் நோபல் பரிசு  பெற்ற பெருமையும் இவர்களையே சாரும். ஆனால் வேதியியலில் தனியாக 1911 -ஆம் ஆண்டு முதல் பெண்மணியாக நோபல் பரிசைப்  பெற்றார்.

மேரி கியூரி யின் ஆய்வு :

1896 -ஆம் ஆண்டு என்றி பெக்கரல் என்பவர் யுரேனியத்திற்கு வெளிசக்தி எதுவுமின்றி தன்னந்தனியாக கதிர் அலைகளைப் பரப்பும் சக்தி உண்டு என்பதைக் கண்டுபிடித்தார். இதன் அடிப்படையில் மேரி கியூரி , பிட்ச்பிலண்ட் (pitchblende) , சாக்கோலிட் (chacolite) என்ற யுரெனியக் கனிமங்கள் இரண்டில் ஆராய்ச்சி நடத்தியதில், யுரேனியம் தவிர பொலோனியம் (Polonium) , ரேடியம் (Radium) என்ற பொருட்கள்  யுரேனியத்தைக் காட்டிலும் கதிர் அலைகளை அதிக அளவில் வெளிப்படுத்தும் என்று கண்டறிந்தார். 

மேரி கியூரி யின் புதிய கண்டுபிடிப்பான கதிர் இயக்கத்தன்மை (radiography)  விஞ்ஞான உலகில் திருப்பத்தை அளித்தது. இதன் மூலம் அணு என்பது ஒரு பொருளின் மிகச்சிறிய பாகம் என்பது அல்ல என்றும் ஒரு அணுவின் கதிர் அலைகள் புதிய பொருட்களையும் உண்டாக்கும் என்றும் நிருபிக்கப்பட்டன. மேலும் அணுவில் அதிக அளவு சக்தி அடங்கியிருக்கிறது என்பதும் மருத்துவத் துறையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதையும் காண்கிறோம்.
கதிர் அலைகள் சம்பந்தப்பட்ட தம்முடைய ஆராய்ச்சியின்போது பாதுகாப்புச் சாதனம் எதனையும்; உபயோகப்படுத்தாததால் அவர் உடல் பாதிக்கப்பட்டு 1934 -ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.

கியூரி  அம்மையாருக்குக் கிடைத்த பெருமைகள்:
இரண்டு நோபல் பரி சுகளைத் தவிர டேவி பதக்கம் (Davy medal), மெட்டச்சி பதக்கம் (Matteucci medal), இலியட் கிரஸ்ஸன் பதக்கம் (Elliott Cresson medal) போன்றவற்றையும் பெற்றார்.
பிரஞ்சு லெழியோன் தொன்னர் (French Legion of Honor) பெற்றார்.
பல நாட்டுப் பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கி இவரைக் கௌரவித்தன.
புகழ் பெற்ற பாந்தேயோனில் (Paris Panthéon) அடக்கம் செய்யப்பட்ட முதல் பெண்மணி இவரே ஆவார்.
போலந்து நாடு இவருடைய படத்தை நாணய நோட்டில் அச்சிட்டுக் கௌரவித்தது. பிரான்சில் 500 யுரோ நோட்டில் இவர் படம் அச்சடிக்கப்பட்டது.
இவருடைய பெயரைத் தாங்கிய  பல்கலைக்கழகங்களும்  நிறுவனங்களும் ஐரோப்பிய நாடுகளிலும்  அமெரிக்காவி லும் உள்ளன.

சுகுணா சமரசம்

பழமொழிகளும் மருத்துவமும்

கடம்பு:

கடம்பு மரத்திலான கட்டிலில் படுத்துறங்கினால், உடல்வலி, குளிர் சுரம், மூட்டுப் பிடிப்பு, கண்ணோய், தொண்டைப் புண், வயிற்றுவலி, மனச்சோர்வு ஆகியன குணமாகும். ஆகவே  'உடம்பை முறித்துக் கடம்பில் போடு” என்னும் பழமொழி உருவாயிற்று.

வெங்காயம்:

'வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை” என்றொரு பழமொழியுண்டு
இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
சிறுநீர்ப் பெருக்கும்; கோழையை நீக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் ஆற்றல் அதிகம் உண்டு. இதனால்தான்  வெங்காயத்தை,  அனைத்து உணவு வகைகளைச் செய்கின்றபோதும்  அதிகம் பயன்படுத்துகிறோம். வெங்காயத்தின் பூ, தாள், கிழங்கு, விதை ஆகிய எல்லாமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. 

வல்லாரை:

வல்லாரையை உண்டால் நினைவாற்றல் பெருகும் என்பர். இது வாய்ப்புண், கழிச்சல், குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, சுரம், இளைப்பு, தொண்டைக் கம்மல், யானைக் கால், விரைவீக்கம், நெரிகட்டி, மேகப்புண், நரம்பு நோய் போன்ற பல நோய்களுக்கு மருந்தாகும்.  'வல்லாரை இருக்க எல்லாரும் சாவதேன்” என்னும் பழமொழி இதன் மருத்துவச் சிறப்பைக் குறிக்கிறது.

ஆவாரை:
பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாட்டை நீக்கும். உடல் சூட்டைத் தணித்து, மேனியைப் பொன்னிறமாக மாற்றும். மேலும் நீரழிவு நோயை ஆவாரையின் பு+ கட்டுபடுத்தும். இதன் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் 'ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ?” என்று கூறியிருக்கிறார்கள்.

சுக்கு:

நமது பெரியோர்கள் 'சுக்கிற்கு மிஞ்சின மருந்துமில்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சின கடவுளும் இல்லை” எனப் பழமொழியில் இதன் சிறப்பை  எடுத்துரைத்துள்ளனர்.பித்தம், வாயு, வயிற்றுப் பொருமல், அஜீரணம், வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்ற நோய்களை முற்றிலும் விரட்டும் தன்மை கொண்டது சுக்கு. நோய்கள் உடலைத் தாக்கா வண்ணம் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலுக்கு அளிக்கும் குணம் சுக்கிற்கு உண்டு. 

மிளகு:

'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட விருந்து உண்ணலாம்”-
மிளகு உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்குவதில் சிறந்தது.  பகைவன் வீட்டில், நஞ்சு கலந்த உணவை அளித்தாலும்; உணவிலுள்ள நச்சுகளைப் போக்கும் என்பதே இப்பழமொழியின் பொருள். பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கு மிளகு பயன்படுகிறது. பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர்.

புற்று நோய் (Cancer) - சிறு விளக்கம்

உலகில் பல உயிரி னங்களையும் படைத்த இறைவன், அவற்றின் கூடவே நோய்களையும் தந்து,  தன்னுடைய இருப்பை உணர்த்திக் கொண்டிருக்கின்றார். மனித இனத்தைப் பொருத்தவரை, சாதாரண 'தலைவலி” முதல் 'எய்ட்ஸ்” போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் வரை எண்ணில் அடங்கா எத்தனையோ நோய்கள். இதில் 'புற்று நோய்” என்பது இன்று மனித இனத்தை பயமுறுத்திக் கொண்டிருக்கும்  கொடிய நோய் ஆகும்.

புற்று நோய் என்பது கிருமிகளால் பரவும் தொற்று நோயன்று. நம் உடலிலுள்ள உயிரணுக்களின் தான்தோன்றித்தனமான செல்கள்தான் இதற்குக் காரணம். புற்றுநோய் என்பது ஒரே தன்மையுள்ள நோயுமன்று. உயிர் அணுக்கள் கட்டுக்கடங்காமல் எந்த வடிவில் பெருகினாலும் அது புற்றுநோய் எனப்படுகிறது. இந்நோய்க்கெனத் தனியான அடையாளங்கள் கிடையாது.
பாலினச் செல்களாகிய 'விந்து அண்டம்” என்ற இணைவிகள் மரபுப் பண்புகளைப் பெற்றோர்களிடமிருந்து வழித் தோன்றல்களுக்கு எடுத்துச் செல்கின்றன. இவ்விணைவிகளில் காணப்படும் ஒரு பொதுவான பொருள் 'குரோமசோம்கள்” எனப்படும். இதில் நியுக்ளிக் அமிலம் மற்றும் புரதம் என்று இரு வேதிப் பொருட்கள் உள்ளன. உயிரி யல் ஆய்வின்படி இந்த நியுக்ளிக் அமிலம்தான் மரபுப் பண்புகளை எடுத்துச் செல்கிறது. இந்த நியுக்ளிக் அமிலம்,  டி. என். ஏ (டிஆக்ஸி  ரி போ நியுக்ளிக் அமிலம்), ஆர். என். ஏ (ரி போ நியுக்ளிக் அமிலம் ஆகும்).
குரோமோசோம்களில் நிறைய துகள்கள் அடங்கியிருக்கும். இவை 'ஜீன்கள்” எனப்படும். இந்த ஜீன்கள் தாறுமாறாகச் சிதறி கிடக்காமல் ஒரு நூல் இழையில் சீராகக் கோர்க்கப்பட்ட மாலை போல் இருக்கும். ஜீன்கள் ஒன்றைப்போலவே ஒன்று இருக்காது. ஒவ்வொன்றும் ஒரு உடலமைப்பை உருவாக்குவதிலேயோ, ஒரு சாயலை ஏற்படுத்துவதிலேயோ முனைப்புடன் இருக்கும். எல்லாம் ஒன்றிணைந்து உடலினை உருவாக்கும்.

டிஆக்சி ரிபோ நியுக்ளிக் அமில (டி.என். ஏ) மூலக் கூற்றில்தான் ஒவ்வொரு உயிரணுவின் செயல்முறை பற்றிய குறிப்பு உள்ளது. இந்தக் குறிப்பில் ஒரு சிறிய மாறுதல் ஏற்பட்டாலும், அது உயிரணுவின் செயல் முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிடும். அதன் விளைவுதான் உயிரணுப் பெருக்கம். ஒரு ஜீனிலுள்ள புரோட்டீன் உருவாக்கக் குறிப்பிலுள்ள ஒரு அமினோ அமிலத்தில் ஏற்படும் ஒரே ஒரு சிறு மாறுதல், பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இம்மாதிரி  மாறுதலைடைந்த ஜீனினால் மற்ற ஜீன்களும் கடும் மாறுதலை அடைகின்றன. இந்த ஜீன்களால் உருவாக்கப்படும் உயிரணுதான் புற்றுநோய் உயிரணுக்களை உற்பத்திசெய்து பெருக்கமடையச் செய்கின்றது.

புற்று உயிர் அணுவில் உள்ள குரோமசோம்களில் புற்றுநோய் ஜீன்கள் காணப்படுகின்றன. இவை சாதாரண உயிரணுவைப் புற்று உயிர் அணுவாக மாற்றுகின்றன. இவை கோடிக்கணக்காகப் பெருகிப் புற்று(நோய்)க் கட்டியை உருவாக்குகின்றன. வரம்பும், ஒழுங்கான உருவ அமைப்பும் இல்லாத புற்று உயிர் அணுவின் வளர்சிதைவு மாற்றத்துக்குப் பிராணவாயு (ஆக்ஸிஜன்) தேவையில்லை. சாதாரண உயிர் அணுக்களின் வளர்சிதை மாற்றம் பிராணவாயு இன்றி நடைபெறாது. மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை உடலில் உள்ள செல்கள் வளர்சிதை மாற்றம் அடைகின்றன.
புற்று உயிர் அணுவை மூடியுள்ள மெல்லிய திரை போன்ற உறை, சாதாரண உயிரணுக்களை மூடியுள்ள மெல்லிய திரையிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். அயல் பொருட்களினால் பாதிப்படையாமல் பாதுகாப்பதற்காகப் பாதுகாப்பு மூலப் பொருள் அடங்கிய மென்திரையே, புற்று உயிரணுவை மூடியிருக்கும்;. இம்மூலப் பொருள் அடங்கிய உறை புற்று உயிரணுக்களின் தற்காப்பாகச் செயல்படுகின்றது. 

புற்றுநோய் பரவும் விதங்கள்:

-    இரத்த நாளங்களின் சுவர்களில் தோன்றி இரத்த ஓட்டம் மூலமாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுதல்
-    ஊனீர் ஓட்டத்தில் கலந்து, ஊனீர்ச் சுரப்பிகளுக்கும் பரவுதல்
-    ஒரு திசுவில் தோன்றி மற்ற திசுக்களுக்கு நேரடியாக ஊடுருவிச் சென்று பரவுதல்

புற்று நோயானது, உடலின் எல்லா பாகங்களையும் தாக்கக் கூடிய நோயாகும். சொpமான மண்டலத்தில், வாய் முதல் ஆசனவாய் வரையிலும், சுவாச மண்டலத்தில், மூக்கு, மூச்சுக்குழல், நுரையீரல் போன்ற பகுதிகளிலும், சிறுநீரகம் தொடர்பான உறுப்புக்களிலும், தோல், எலும்பு மஜ்ஜை, இரத்தம், மூளை, பெண்களுக்கு மார்பகம், கருப்பை போன்ற உறுப்புக்களிலும் எங்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புற்ற நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், நூறு விழுக்காடு குணப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆரம்ப நிலையில் கவனிக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டால், நோய்முற்றி மரணம் ஏற்படும் நிலை உருவாகும். இந்நோய் உண்டான இடத்தை மட்டும் பாதிக்காமல்,  நாட்கள் செல்லச் செல்ல உடலின் மற்ற பாகங்களிலும் பற்றிப்படரும் தன்மை கொண்டதால், ஆரம்ப நிலையிலேயே கவனித்தல் மிகமிக அவசியம். நோயை அதிகம் வளரவிட்டுச் சிகிச்சையை மேற்கொண்டால், முழுவதும் குணமாக்குவது  கடினம். நண்டின் வளையை ஒரு பக்கம் அடைத்தால் அது மறுபக்கமாக வழி ஏற்படுத்திக் கொண்டு வெளியேறும். இந்நோயும் அத்தன்மை கொண்டதால் ஆங்கிலத்தில் Cancer (கேன்சர்) எனப்பட்டது. கரையான் புற்றினை வெட்டி அப்புறப்படுத்தினால் அது முன்பைவிட வேகமாக வளர்ந்துவிடும். அதனால் தமிழில் சித்தர்கள் இந்நோயைப் 'புற்று” என்றனர்.

புற்றநோய்க கட்டியானது தொட்டால் கடினமாகவும் கீழே உள்ள திசுக்களில் ஒட்டி ஊடுருவி இருப்பதால், அசைக்க முடியாமலும் இருக்கும். புற்றுநோயைப்பற்றிய விழிப்புணர்வும், தெளிவும்; ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமிக அவசியம். ஏறக்குறைய உலகின் எல்லா நாடுகளிலும் இவ்விழிப்புணர்வு மக்களுக்கு அளிக்கப்படுகின்றது.
பிரான்சு அரசு 50 வயதைக்கடந்த பெண்களுக்கு மார்பகத்திற்கான பரி சோதனையையும், 50 வயதைக்கடந்த ஆண், பெண் இருபாலாருக்கும் குடல் புற்றுநோய்ப் பரி சோதனையும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்துகொள்ள, சமூகப் பாதுகாப்பு மையங்கள் மூலம் வலியுறுத்துகிறது. இப்பரி சோதனைகள் செய்துகொள்வதன் மூலம், எந்தவிதமான பாதிப்புகளும் கிடையாது. மாறாக, நோய்க்கான அறிகுறி இருந்தால், உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு, உரி ய சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிசெய்கிறது. இதை அலட்சியப்படுத்துவதற்கோ இதில் வெட்கப்படுவதற்கோ எந்த அவசியமும் இல்லை.

இறைவன் நமக்குக் கொடையாகக் கொடுத்த இவ்வுடலைப் பேணிக்காப்பது நமது கடமை. 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”. எந்த வயதாக இருந்தாலும் சரி
ஊக்கம் பெறுவோம்! உடல் நலம் காப்போம்!
உலகுக்கு  உழைப்போம்! உயர்வினைக் காண்போம்!

சரோசா தேவராசு

காளான்

தாவரங்களின் பரிணாம வளர்ச்சியில் ஆரம்பக் காலத்தில் தோன்றிய பூ ஞ்சை உயிரி னம் காளான் ஆகும். இவை தமது இனப் பெருக்கத்திற்குத் தேவையான விதைகளைப் பூக்கள் போன்ற வடிவில் உற்பத்தி செய்து கொள்கின்றன. பல தரப்பட்ட சூ ழ்நிலைகளிலும் காளான் வளரக்கூடியது. பெரும்பாலும் மழைபெய்து முடித்ததும் வெயில் அதிகம் படாத இடங்களில் இது வளரும். இயற்கையாக வளரும் காளான்களைப் பிடுங்குவர். சில வகை காளான்களை  உண்ணலாம். சிலவகை, போதை தரும். சிலவகை, பயங்கர விஷம். எல்லாமே ஒன்றுபோலவே தோன்றும். ஆகவே, கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டு ம்.
கோடை காலத்தை அடுத்து வரும் மழைக்காலம் முடிந்ததும் அதாவது குளிர் ஆரம்பிப்பதற்கு முன்பாகப்  பிரான்சில் பல காடுகளில் சிலர் குடும்பங்களுடன் சென்று காளான்களைப் பிடுங்கிச் சேர்ப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆதி மனிதர்களால் உண்ணப்பட்ட இயற்கை உணவு காளான். பண்டைய காலங்களில் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அரச வம்சத்தினர் தமது அழகை மெருகூட்டுவதற்காகக் காளானைத் தினமும் உணவில் சேர்த்து வந்தனர்.
காளானின் மருத்துவ குணங்களை அறிந்த சாதாரண மக்களும் தற்போது தமது உணவில் இதைச் சேர்த்துக் கொள்கிறார்கள். இது ஒரு சிறந்த சைவ உணவு.

காளானில் நார்ச்சத்து, புரதச்சத்து அதிகமாகவும், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து மிக குறைவாகவும் உள்ளது. அன்றாடம் நமக்குத் தேவைப்படும் புரதத்தைக் காளானால்மட்டும் பூ ர்த்தி செய்ய இயலாது. ஆனால் இறைச்சி, மீன், பால், வெண்ணெய்  போன்றவற்றில்  காணப்படும் புரதத்தைப் போன்று காளான் புரதமும் தரத்தில் சிறந்து விளங்குகின்றது. பல தாது உப்புகளும் விட்டமின் B ,D, K உம் உள்ளன.

நோய்க்கு மருந்தாகும் காளான் :
காளான்களுக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் குணமும், ரத்த சோகை நோய் வராமல் தடுத்து வாழ்வு காலத்தை அதிகரிக்கும் குணமும் உண்டு.
காளான் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு.
நீண்ட நாட்களாகக் குணமாகாத காயங்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.
பெண்களின்  மலட்டுத்தன்மையை நீக்குவதுடன் கருப்பை தொடர்பான நோய்களையும் குணமாக்குகின்றது. மேலும் பெண்களின் மார்புப் புற்றுநோயைக் கட்டுபடுத்தவும் செய்கின்றது.

உடல் எடையைக் குறைக்கும் காளான்
அதிக சக்தி கொண்ட உணவை எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் குறைந்த சக்தியை அளிக்கக்கூடிய காளான் போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதால் உடல் குண்டாவதைத் தவிர்க்க முடியும் என்று டாக்டர் செஸ்கின் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

காளான்கள் பல நாடுகளில் முறையாகப் பயிர் செய்ய படுகிறது.
எளிதாகக் கிடைக்கக்கூடிய மரத்தூள், தவிடு போன்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தி நம் வீடுகளிலேயே இதைப் பயிர் செய்யலாம். நம் தேவையைப் பு+ர்த்தி செய்வதுடன் குறைந்த காலத்தில் வருமானம் பெறவும் முடியும்.

காளானிலிருந்து காளான் சூப், காளான் கட்லட், காளான் சம்பல், காளான் சான்ட்விச் மற்றும் பல சுவையான உணவு வகைகளைத் தயாரிக்கலாம்.

லெயா

இணையமெனும் இனியவலை

புத்தகங்களில் காணக் கிடைக்கின்ற பல அரிய செய்திகளைக் கணிணித் தொழில்நுட்பம், இணையத்தின் வழியாகக் குழந்தைகளுக்கு வழங்குகின்றது. கற்றலில் உதவி செய்கின்ற ஊடகமாகவும் இது விளங்குகின்றது.
இணையத்தைப் பிள்ளைகளுக்கு அறிமு
கப்படுத்துவது தொடர்பாகப் பெற்றோருக்கு அச்சம் இருந்துவருகிறது. ஆபாசக் காட்சிகளை அல்லது ஆபாச விடயங்களைப் படித்துத்  தம் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என்பதே அந்த அச்சம்.  இதனால் தம் பிள்ளைகளுக்கு இணைய வசதி வழங்கத் தயங்குகின்றனர். இதிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளப் பல வழிகள் உள்ளன. அவ்வாறான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் இணையம் என்னும் பெருங்கடலில் ஒரு சிறு துளியே இந்த ஆபாச இணைய தளங்கள். அவற்றைப் புறக்கணிப்போம். இதைக் கடந்து எத்தனையோ இணைய தளங்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்கவும் உற்சாகபடுத்தவும் உள்ளன.

இணைய தளங்களில் கூறப்படும் செய்திகள் அனைத்துமே நூறு விழுக்காடு  உண்மையானது என்றோ சரி யானது என்றோ சொல்ல முடியாது. எனவே ஒரு குறிப்பிட்ட செய்தியைப்பற்றிப் பல இணைய தளங்களைப் பார்த்து மாணவர்கள் உறுதி செய்து கொள்வது நல்லது.

தற்பொழுது இணைய வசதி இல்லாத வீடுகளே இல்லையெனச் சொல்லலாம். எல்லா வயதினருக்கும் ஏற்ற தளங்கள் பல உண்டு. பள்ளி மாணவர்கள் இணையத்தைச் சரி யாகப் பயன்படுத்தினால் உலகையே அறியலாம். இதைப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு பெற்றோரையும் 
ஆசிரியர்களையும் சார்ந்தது.  இந்தப் பொறுப்பைத் தட்டிக் கழித்தால் பிள்ளைகளின் வளாச்சி தடைபடும். அவர்களின் நடவடிக்கைகளில் பங்கு கொண்டு அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தினால் அவர்கள் உற்சாகத்துடன் தமது அறிவை நல்ல முறையில் எளிதாகவும் விரைவாகவும் வளர்த்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு குழந்தையும் அடுத்த குழந்தையிலிருந்து வித்தியாசமானது.  எனவே பெற்றோர் தமது குழந்தையின் தனிபட்ட உணர்வையும் ஆற்றலையும் புhpந்துகொள்ளும் தன்மையையும்; கருத்தில் கொண்டு அதற்கேற்பக் கணினியின் நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.  உங்கள் அனுபவங்கள் வாயிலாக சரியான ஒழுங்கு முறைகளை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். அவற்றை மீறினால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றியும் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். கணினியைப் பயன்படுத்துவதற்கான நேரத்தை வரையறை செயவது மிகவும் அவசியம்.  இல்லாவிட்டால் பிள்ளைகள் அதிலேயே மூழ்கிபோய் வெளியுலக தொடர்பு, குடும்ப  சமூக செயல்பாடுகளிலிருந்து  விலகி கணினிக்கு அடிமையாகும் அபாயம் உண்டாகும்.

பிள்ளைகள் கணினியைப் பயன்படுத்தும்போது, தொடக்கத்தில் உங்களால் முடிந்தவரை உடனிருப்பது நல்லது. அப்படி அருகில் இருக்க முடியாவிட்டால் நீங்கள் அடிக்கடி நடமாடக் கூடிய பொதுஅறையில் கணினியை வைக்க வேண்டும். அவர்களுடைய சின்னச் சின்ன ஆர்வங்களைத் தட்டிக் கொடுத்து அவர்களை உற்சாக படுத்த வேண்டும்.

குழந்தைகள் சுதந்திரமாகச் சிந்திக்கவும் செயற்படவும் ஆரம்பிக்கும் வயதில்
இணையத்தைப் பாடசாலைத் தேவைகளுக்காகப்  பயன்படுத்தலாம். உதாரணமாக  கலைக்களஞ்சியங்களைப் பார்ப்பதற்குப் பழக்கலாம் . வயது உயர உயரப்  பிள்ளைகள்  பல்வேறு  பத்திரிகைகள், கட்டுரைகள் வாசிக்கலாம். இவ்வயது குழந்தைகளில் பெரும்பாலானோர் இன்டர்நெட்  chat  எனப்படுகின்ற மற்றவர்களுடன் உரையாடிக் கொள்ளும் முறையை விரும்புகின்றனர். தங்கள் வயதில் இருக்கும் மற்ற பிள்ளைகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின்  விருப்பு வெறுப்புகளை அறிய இந்த உரையாடல் வழி வகுக்கிறது.  இவர்களுக்குரிய நல்ல chat  சேவைகளைப் பல நிறுவனங்கள் வழங்குகின்றன.
மற்றும் நண்பர்கள் உறவினர்களுடன் ஈமெயில் தொடர்புகளையும் ஏற்படுத்தச் சொல்லிக் கொடுக்கலாம்.

 பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கணினி விளையாட்டு மென்பொருள் உற்பத்தியாளர்களின்,  கவர்ச்சியான விளம்பரங்களால் குழந்தைகள் ஈர்க்கப்படலாம். இணையம் மூலமாக இவ்வகையான பொருட்களையும் வாங்கவும் வசதிகள் உள்ளன. உங்கள் அனுமதியின்றி இணையம் ஊடாகப் பொருட்களை வாங்க அனுமதிக்க வேண்டாம்.
இணையத்திலிருந்தே சில கணினி விளையாட்டுக்களைப் இறக்கமும் (download) செய்து  கொள்ளும் வசதியும் உண்டு. பல விளையாட்டுக்கள் குழந்தைகளுக்குப் பொருத்தமானவையாக இருந்தாலும் சில அளவுக்கு மீறிய வன்முறைத்தன்மை கொண்டவை. இவை குழந்தைகளைப் பாதிக்கும். எனவே விளையாட்டுகளைத் தேர்ந்தெடுப்பதில் விழிப்பாக இருக்க வேண்டுமென்று அவர்களுக்குத் தெளிவாக விளக்கிச் சொல்லுங்கள்.
   
15 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் கல்வி சம்பந்தப்பட்ட தேடல்கள், பொதுஅறிவு மற்றும் உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வதற்கும் ஆராய்வதற்கும் இணையம் இவர்களுக்குப் பெரும் துணை புரிகின்றது. ஆசிரி யர் பள்ளியில் சொல்லி கொடுத்ததற்கு மேற்கொண்டு பல விடயங்களை  அவர்கள் தெரி ந்து கொள்ளலாம். ஆர்வ மிகுதி காரணமாகக் குருவை மிஞ்சிய சீடனாகவும் வழியுண்டு.

மேலும், தங்களுடைய மேற்படிப்புக்குக்கு எவ்வகையான துறையைத் தேர்ந்தெடுப்பது, எந்தப் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகள் சிறந்தவை போன்ற  விடயங்களைத் தீர்மானிப்பதற்கும் இணையத்தின் துணை தேவைப்படுகின்றது. இன்றைய உலகின் வேலை வாய்ப்பானது பெரும்பாலும் கணினியைச் சார்ந்தே உள்ளது. குறிப்பாக  வெளி நாட்டில் வேலை செய்ய விரும்பும் பிள்ளைகள்  சர்வதேச மொழிகளில் ஏதாவது ஒன்றில் தேவையான பயிற்சி இருக்குமானால்  ஈகொமர்ஸ் என்ற துறையிலிருந்து வேலை வாய்ப்பைப் பெற வாய்ப்புண்டு. 
பல்வேறு உலக மொழிகளைக் கற்றுக்கொள்வது மாணவப் பருவத்தில் மிகவும் எளிது. அந்தந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஆசிரி யர்களிடம் கற்றுக் கொள்வதுதான் மிகுந்த பயன்தரும். அதற்கு உதவும் தளம்  
http://www.myhappyplanet.com/

   விடுமுறைக்குச் சுற்றுலா  செல்வதற்கு முன் இடத்தைத் தேர்ந்தெடுத்தல், ஒரு பொருளை வாங்கும் முன்பாக அதுபற்றிய செய்திகளை இணையம் வழியாகக் கண்டறிதல் போன்ற    பொறுப்புகளைப் பிள்ளைகளிடம் ஒப்படையுங்கள். பிறகு அவர்களின் ஆய்வு முடிவுகள் பற்றிக்  குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து விவாதித்து  முடிவெடுக்கலாம். ஆரோக்கியமான குடும்பச் சூ ழலையும் பிள்ளைகளின் தன்னம்பிக்கையையும் இது வளர்க்கும். மேலும் அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும் நன்கு புரி ந்து கொள்ள  இது   சிறந்த வழி.
   
உங்கள் பிள்ளைகளுக்குக்  கவிதை, கதை, கட்டுரை, ஓவியம் வரையக்கூடிய திறன் இருந்தால் அவர்களை இணைய தளத்தின் வழியாக  வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தலாம். பிற்காலத்தில் தங்களுக்கென்று  தனியாக வலைப்பதிவு ஒன்றை உருவாக்க அவர்களை உற்சாகபடுத்தலாம்.

கணினி தொழில் நுட்பமானது கல்விக்கும்,  வாழ்க்கைக்கும் உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சிறந்த குடும்பம், முறையான கல்வி நல்ல நண்பர்கள், போன்ற பல காரணங்கள் ஒரு குழந்தையுடைய ஆரோக்கியமான  உளவளர்ச்சியினைத் தீர்மானிக்கின்றன. எனவே  கணினிக்கு அடிமையாகும் ஆபத்திலிருந்து நம் பிள்ளைகளைக் காத்துக் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் சிறந்த குடிமக்களாக அவர்கள் உருவாகத் துணை செய்வோமே!

லூசியா லெபோ

mardi 16 novembre 2010

எண்ணப்பரிமாற்றம்


அன்புடையீர்,
31 10 2010 அன்று பிரான்சு கம்பன் கழகம் தன் 9 -ஆம் ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி அனைவர் பாராட்டுதல்களையும் பெற்றது. கம்பன் கழகத் தலைவர் திரு. பாரதிதாசனின்  மரபுக் கவிதை பயிற்சிப் பட்டறையில் தன்னைத் தயாரித்துக் கொண்ட திருமதி அருணா செல்வம் அவர்களின் கவிதைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது விழாவின் சிறப்பம்சம் ஆகும்.
'தீமையால் பெரிதும் திகைக்கச் செய்பவர் கூனியே, சூர்ப்பணகையே, இராவணனே”     என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம் விழாவின் முத்தாய்ப்பாய் அமைந்ததில் ஐயமில்லை. அடுத்த ஆண்டு எதிர்கொள்ள இருக்கும் 10 -ஆம் ஆண்டு விழாவை நிறைவாக நடத்திட அனைவரும் தோள் கொடுப்போம்.
நவம்பர் 14 இந்தியாவில் குழந்தைகள் தினம். நவம்பர் 20, உலகக் குழந்தைகள் தினம்.
இந்த   இரு பெரும் விழாக்களைக் கொண்டாடும் நேரத்தில் நமது தமிழகத்தில் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளை நினைத்து உள்ளம் கொதிக்கிறது. குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைத் தட்டிக்கேட்க - அவற்றைக் களைய நாம் ஏதாவது முயற்சி செய்கிறோமா? 
வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான்.
நல்ல சமுகம் அமைக்க வேண்டுமானால், நாளைய இந்தியாவுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டுமானால் குழந்தைகள் குறித்தான விழிப்புணர்வு வருவது காலத்தின் கட்டாயமாக இன்று இருக்கிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தை பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்களே அவர்களது எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். எனவே குழந்தை பருவம் முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்டு. தங்களது குழந்தைகள், மற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மற்றும் அன்புடன் பழகுவதற்கும் நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

நம் வீட்டுக் குழந்தைகளைக் கண்ணை இமை காப்பது போலக் காக்கும் நாம் அண்டை வீட்டுக் குழந்தையின் நலனிலும் கொஞ்சம் அக்கறை செலுத்தலாம் அல்லவா..
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழிக்கேற்ப நம் சுற்றுப் புறத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளின் நலனிலும் அக்கறை செலுத்த முற்படுவோம். அப்போதுதான் குழந்தைகள் வளமான வாழ்வு வாழும் சூழ்நிலை ஏற்படும். நேரு கண்ட கனவும் பலிக்கும்.

லூசியா லெபோ

இன்றைய அறிமுகம் - பண்டித ஜவகர்லால் நேரு


பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் 1889ஆம் ஆண்டு செல்வந்தர் மற்றும் வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவருபராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக உத்திர பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார். உருது மொழியில்  'ஜவகர்லால்”என்ற சொல்லுக்கு 'சிகப்பு நகை” என்று பொருள். நேரு மற்றும் அவரின் இரு சகோதரிகளுமான, விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணாவும், ஆனந்தபவன் என்ற பெரியமாளிகையில்  இந்திய உயர் குடிமக்களால் அவசியமாகக் கருதப்பட்ட ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர்.  நேரு இங்கிலாந்து சென்று தம் உயர் கல்வியை தொடர்ந்தார்.
1912 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியதும் வழக்கறிஞர் ஆனார். கமலா கவுல் என்ற காஷ்மீரி பிராமணப்பெண்ணை, 1916 பிப்ரவரி 8 இல் மணந்தார். அவர்களுக்கு இந்திராபிரியதர்சினி என்ற மகள் பிறந்தாள், பின்னாளில் அவர் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார்

1919 இல் ஜாலியன்வாலாபாகில் போராட்டக்காரர்களை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது, இந்த சம்பவம் நேருவைக் கொதிப்படையச் செய்தது . அவர் தன் சக்தியை எல்லாம் சுதந்திர இயக்கத்திற்காக அர்ப்பணித்தார். நேரு, மிக வேகத்தில் காந்தியின் நம்பிக்கைக் குரிய வரானார். முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு உலக வரலாற்றின் காட்சிகள்(1934), சுயசரிதை, (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார். இந்த படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்கு பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திரஇயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய அரசியல் கௌரவம் மகாத்மா காந்திக்கு அடுத்தப்படியாக மதிக்கப்பட்டது.

 இந்தியா சுதந்திரம் பெற்றதும்  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். ஆகஸ்ட் 15 1947 புதுடில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி பெருமை நேருவுக்கு கொடுக்கப்பட்டது. அன்றுமுதல் தன் வாழ்வின் இறுதிவரை சுதந்திர இந்தியாவை கட்டியெழுப்பும் பணிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மூன்று முறை ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து அவற்றை செவ்வனே நடத்தினார்.


குழந்தைகள் மீதும், ரோஜா மலர்கள் மீதும் நேரு அளவு கடந்த பற்றுதலை கொண்டிருந்தார். நேருவின் ஆட்சியில் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் தொழிற்நுட்ப கல்லூரிகளும் எய்ம்ஸ் போன்ற சர்வதேச தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் துவக்கப் பட்டன. தனது அலுவலக பணிகளுக்கு மத்தியிலும் குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். குழந்தைகளால் அவர் நேரு மாமா  என செல்லமாக அழைக்கப்பட்டார்.
குழந்தைகளை அவர் மிகவும் நேசித்ததால்தான் அவரது பிறந்தநாளை (நவம்பர் 14ஆம் நாள்) நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். மே மாதம் 27 ஆம்நாள் நேரு அவர்கள் இறைபாதம் அடைந்தார்கள்


லெயா

lundi 15 novembre 2010

நேருவின் பொன்மொழிகள்:

 • வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

 • விளைவுகளை வைத்துதான் செயல்களின் சிறப்பை மதிப்பிட முடியும்.

 • சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்

 • என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல; என்ன செய்கிறாய் என்பது தான் முக்கியம் .ஆகவே உறுதியான உள்ளமும்,நன்னடத்தையில் வலிமையும் நேர்மையான போக்கும் கொண்டவர்களுக்கு இந்த வையகம்,அளிக்கும் ஏராளமான நல்ல சந்தர்பங்களை எண்ணிப்பார்.

வந்தனை செய்ய வேண்டிய சிந்தனை :

-    இறைவனிடம் வேண்டும் உதடுகளைவிட, சமயத்தில் உதவும் கரங்கள் புனிதமானவை

-    பிறர் குற்றங்களில் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால், பிறர்  நிறைவுகளில் உனக்கு வருத்தம் ஏற்படுவது இயல்பு.

-    அன்பு குறைந்திருக்கும்போது குற்றங்கள் பெரிதாகத் தெரிகின்றன.

-    விளக்கு எரிந்தால் அதன் எண்ணெய் குறையும். உன் மனம் எரிந்தால் உன் எண்ணம் தேயும்.

நம் தேசியகீதத்துக்குக் கொடுக்கபட்ட விளக்கம்

 நம் தேசியகீதத்துக்கு தமிழில் கொடுக்கபட்ட விளக்கம் ஒன்றை இணையத்தில் உலாவரும்போது பார்த்தேன். இணையத்தில் சுட்ட அந்த விளக்கம் இதோ:

 ஜன கன மன அதிநாயக ஜய ஹே
- மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

பாரத பாக்ய விதாதா -
இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்த குஜராத மராட்டா த்ராவிட உத்கல பங்கா
ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் - பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.

புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் - சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.

பகவான் கிருஷ்ணனின் ராஜ்ஜியம், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறப்பிடம் - குஜராத் மாநிலம் உன்னுடையது .

வீர சிவாஜியின் பிறப்பிடம், தற்கால இந்தியாவின் தலைவாசல் - மராட்டிய மாநிலம் உன்னுடையது .

பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் - திராவிட பீடபூமி உன்னுடையது.

பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் - உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.

இந்திய விடுதலையின் பிறப்பிடம், நூதன இந்தியாவின் மூளை, பெரும் ஞானிகள் பிறந்த தேசம் - பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .

(இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.)

விந்த்ய ஹிமாசல யமுனா கங்கா
வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் - விந்திய மலை உன்னுடையது.

மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் - இமய மலை உன்னுடையது.

இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் - கங்கையும் யமுனையும் உன்னுடையவை.

இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.

உச்சல ஜலதி தரங்கா
 
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.

தவ சுப நாமே ஜாஹே -
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

தவ சுப ஆஷிஷ மாஹே -
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா
-
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.

ஜன கன மங்கல தாயக ஜய ஹே -
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா -
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.

ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! -
வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

இணையமெனும் இனிய வலை

             

இணைய இதழ்களுக்கு போட்டியாக இணையத்தில் உலாவரும் வலைப்   பூக்கள்    பற்றி பார்க்கலாமா தோழிகளே?

வலைப்பதிவு என்றால் என்ன?

தன் படைப்புகளை தானே இணையத்தில் பதிப்பிக்கும் வசதி ஆங்கிலத்தில் ப்ளாக்கிங் (blogging) என்றழைக்கப்படும். Weblog என்ற  பெயர் முதன் முதலில் 17 12 1997இல் ஜாண் பார்சர் என்பவரால் உருவாக்கப்பட்டது. இச்சொல் பிறகு இரண்டாக உடைக்கப்பட்டு we blog என்று மாறி பயன்பாட்டுக்கு வந்தது.

வலைப்பூவா வலைப்பதிவா ?

ஆரம்ப பதிவர்கள் பிளாக்குகளை தமிழில் வலைப்பூ   என்று அழைத்தனர். பின்னர் பெரும்பாலானவர்கள் வலைப்பதிவு என்ற பெயரையே பயன் படுத்தியதால் அந்த பெயரே நிலைத்துவிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி நாள் (31.08) அன்று உலக வலைப்பதிவாளர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 தாய்மொழியாம் தமிழில் தம் எண்ணங்களை, படைப்புகளைப் மின்குதிரை மேலேற்றி உலகம் முழுமைக்கும் கொண்டு செல்ல உதவும் ஊடகமே வலைப்பதிவு. மிக அடிப்படையான கணினி அறிவு, இணையத்தொடர்பு வசதி இருந்தால் நம் எழுத்துக்களை மின்னெழுத்துக்களால் பதிக்க முடியும். ஆர்வமும் உழைப்பும் மட்டும் இருந்தால் போதும்.

அயல் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் தமிழ் ஆர்வத்திற்கு ஒரு வடிகாலாகவே வலைப்பதிவுகளை பயன்படுத்த ஆரம்பித்தனர்.

வலைப்பதிவில் என்ன எழுதப் படுகிறது?


வலைப்பதிவில் டைரிக்குறிப்பு போல அன்றாட அனுபவங்களை எழுதலாம். என்னவெல்லாம் நம் உள்ளத்துக்கு வெளியே கொட்ட விரும்புகிறோமோ, நம் கருத்துக்கள் எதையெல்லாம் பகிர்ந்துகொண்டால் நமக்கும் வாசிப்பவருக்கும் பயன்தருமோ அதை எல்லாம் எழுதலாம். தாம் சார்ந்த துறையைப்பற்றி எழுதலாம். அறிவியல், தொழில்நுட்பம் பற்றி எழுதலாம். கதை, கவிதை,கட்டுரை போன்ற தங்கள் படைப்பாக்கமும் செய்யலாம். நிகழ்வுச் செய்திகளைப் பற்றி விவாதிக்கலாம், சுவையான சமையல் குறிப்புகூட தந்து அசத்தலாம். திரைப்பட விமர்சனங்கள் செய்யலாம். எழுத்தில் எழுதக் கூடிய எதையும்  எழுதலாம். இதனால் தமிழில் எழுதும் ஆர்வமும் திறமையும் வளர்கிறது. பலருடைய திறமைகளை, கருத்துக்களை, எண்ணங்களை அறியும் வாய்ப்பு கிடைக்கிறது. தங்கள் சொந்த பெயரால் எழுத விருப்பமில்லாதவர்கள் புனைபெயரால் பதிவு செய்யலாம். தனிப்பட்ட தகவல்களை பொதுவில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

வலைப்பதிவு என்பது  இணையதளத்தைப் போலன்றி நேரடியாக வாசகரையும் எழுதுபவரையும் உடனுக்குடன் தொடர்புறுத்தும் ஒரு ஊடகம்.
வலைப்பதிவை வாசிப்பவர் உடனே அந்த படைப்புக்கான விமர்சனத்தை தெரிவிக்க  முடியும். எனவே வாசகரும் வலைப்பதிவரும் நேரடித் தொடர்பில் இருக்கின்றனர். இதனால் வாசகரே விரைவில் வலைபதிவராகும் வாய்ப்பும் உண்டு.
இதுதவிர இணைய வளர்ச்சியால் வலைப்பதிவுகளில் ஒலி, ஒளிக் காட்சிகளையும் காட்சிப் படுத்த முடிகிறது. இதனால் எழுத்துப் படைப்புகள் தவிர புகைப்படப் பதிவுகள், குரல் பதிவுகள், திரைப்பதிவுகள் என வலைப்பதிவுகளில் பன்முகத் திறமைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது.


. இடுகையின் வாழ்நாள் :

ஒரு இடுகையின் வாழ்நாள் அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதைப் பொருத்தது. இதைத்தான் எழுதலாம். என்ற எல்லை இல்லாத ஊடகம் என்பதால் எதை வேண்டுமானாலும் எழுதினால் வாசகர்களை பெற இயலாது. வலைப்பதிவை நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் தினச் செய்திகளையோ, மற்றவர்கள் பதிவுகளில் வெளியான கருத்துக்களையோ தன் பதிவில் பதிவு செய்து இடத்தையும் நேரத்தையும் வீணடிப்பவர்கள் சிலர். எதையோ நினைத்து தேடப்போய் எதையோ வாசிக்க நேர்ந்து விடுவதால் நேரவிரயம் ஆகிறது. பிறந்ததும் இறந்துவிடும் பதிவுகள் தேவையா?

நுட்பம், துறைசார் பதிவுகளுக்கு வருகையாளர்கள் குறைவு. போதிய ஊக்கமும் வரவேற்பும் கிடைப்பதில்லை.

 நமது வலைப்பதிவுகள் நிலைத்து இருக்க வேண்டுமானால் நாம் தரும் தகவல் செறிவுடன் சுவையாக எழுதப்பட வேண்டும். பார்வையாளர்களின் எண்ணிக்கை பெரிதல்ல சரியான பார்வையாளர்களை அடைவதுதான் முக்கியம்.

நம் எழுத்து பலரையும் ஈர்க்கும் ஒன்றாக இருந்தால் நம் வலைப்பதிவில் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்பு இருக்கிறது.

பின்னூட்டம் என்பது ஒரு பொழுதுபோக்காக, போதையாக தற்போது மாறிவருவது வருந்தத்தக்கது..

மற்றவை மறு சந்திப்பில் பார்ப்போமா?
- லூசியா லெபோ

குழந்தை இலக்கியம் - சிறுவர் இலக்கியம்:

பல வகை இலக்கியங்களுள் குழந்தை இலக்கியம் பழைமையான ஓர் இலக்கியமாகக் காணப்படுகின்றது.
ஒரு மரம், செடியாக இருக்கும்போது, தினமும் நீர் ஊற்றி, மண்ணை கிளறிவிட்டு, உரம் இட்டு  ஆடுமாடுகள் கடித்துவிடாதவாறு வேலியிட்டு பாதுகாத்து அக்கறையுடன் வளுர்க்கிறோம். இவை எல்லாம் இல்லாவிட்டால் அந்த செடி ஓரளவு மரமாக வளரலாம். ஆனால் நல்ல பயன்தரும் மரமாக அது திகழ்வதில்லை.
குழந்தைகளும் அப்படிப்பட்டவர்களே. அவர்களுக்கு ஆரோக்கியமான உணவளித்து, ஒழுக்கங்களைக் கற்பித்து நல்லறிவு பெறச் செய்யவேண்டும். இவற்றையெல்லாம் அக்கறையுடன் செய்யாவிட்டால் சிறுவர்கள் மனிதர்களாகலாம். ஆனால், நல்ல குடிமக்களாகவும் சான்றோர்களாகவும் திகழ முடியாது. கற்றல் என்பது வெறும் எழுத்தறிவை மட்டுமல்ல, நற்பண்பை அறிதலையும் குறிக்கிறது. இவ்விரெண்டையும் பெற்றால்தான் வாழ்க்கை பயனுள்ளதாக அமையும்.
இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்.  வருங்கால சமுதாயத்தை உருவாக்கித் தாங்கி நிற்கும் தூண் போன்ற அவர்கள்  நற்பண்புடையவர்களாகத் திகழ  வழிவகுப்பது சிறுவர் இலக்கியமே. பெரிய இலக்கியங்களைப் பிற்காலத்தில் படித்து பயனடைய வேண்டுமானால், அவர்கள் சிறுவர் இலக்கியத்தைப் படிக்க பழக வேண்டும். சிறுவர் இலக்கியத்தைப் புறக்கணித்தால், வருங்காலத்தில் பிற இலக்கியங்கள் புறக்கணிக்கப்படும்.
உலகில் குழந்தை இலக்கியங்கள் எங்கெல்லாம் செழுமையுடன் உள்ளதோ அங்கெல்லாம் சிறந்த சமூக உருவாக்கம் நிகழ்கின்றது என்பது கண்கூடு.

சிறுவர் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் சிறுவர் இலக்கியம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. பாடதிட்டத்தினை தாண்டி ஏராளமான விடயங்களைக்  கற்றுக்கொள்ள இது உதவுகிறது.
அன்று குருகுலம் இருந்தது.  பெரிய குடும்பத்தில்  வயது வித்தியாசம் உள்ள அண்ணா, அக்காக்கள் இருந்தார்கள். .இன்றைய நடுத்தர குட்டி குடும்பத்தில் வளரும் சிறுவர்களுக்குத் தோன்றும் கேள்விகள் - வாழ்க்கைப் பாடங்கள், தற்கொலை, பொறாமை, கொடுமைகள், அன்றாட காமன்சென்ஸ், உள் இறுக்கங்கள், மன அழுத்தம் போன்றவற்றை சமாளிப்பது எப்படி என்று எல்லாம் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ள இன்று யாரும் இல்லை. அவர்களின் மனதுக்குள்ளே அவை புதைந்து போகிறது. பள்ளிச்சிறுவர்களை அவர்களின் அடுத்த வயதுக்கு தயார் செய்யும் பொறுப்பை இலக்கியத்தின் வாயிலாக சொல்லி கொடுக்க வேண்டும்.

வளர்ந்து வரும் ஊடகத்தின் தாக்கம் ஏராளம். குழந்தைகள் உலகத்தை இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், கம்ப்யூட்டர் விளையாட்டுகளும் மிகுதியாக அபகரித்துக்  கொண்டிருக்கிறது. அர்த்தமற்ற வீடியோ விளையாட்டுகளை வெறித்துப் பார்த்தபடி குழந்தைகள் முட்டாள் பெட்டிமுன் அமர்ந்திருக்கிறார்கள். இன்று தொழிநுட்ப ரீதியில் உலகம் முன்னேறிவிட்ட நிலையில் ‘கார்ட்டூன்’ மூலமான சித்திரங்களும், நாடகங்களும் குழந்தைகளின் மனதைப் பெரிதும் கவர்ந்திழுக்கின்றன. கார்ட்டூன்கள் சிறார்களின் கற்பனை வளத்தை பெருக்குவதாக இருந்தாலும், வேகமாக மாறும் காட்சிகளாலும் நிறங்களாலும், கண்கள் சீர்குலைந்து போகின்றது.
இதனை தாண்டி புத்தகங்களோடு பழக்கம் கொள்ள நாம் ஊக்கம் கொடுக்க வேண்டும். நாம் என்ன செய்கின்றோமே அதனை நிச்சயம் குழந்தைகளும் செய்வார்கள். சீரியல் பார்த்துக் கொண்டு நேரத்தை கடத்துபவர்களா நீங்கள், உடனே அதைக் குறைத்துக் கொண்டு புத்தகம் ஒன்றினை எடுத்து  படித்து பாருங்கள், குழந்தையும் படிக்க துவங்கிவிடும்.

 பேச்சுவார்த்தையே தேவையில்லை என்று வன்முறைக்கும்பல்கள் அதிகரித்துப் போனதற்கு பழைய அற்புத நேயமிக்க கதைச்சொல்லிகள் இல்லாமற் போனதே காரணம். பாட்டி சொல்வது அவள் கேட்ட கதையா  அல்லது அவளுடைய சொந்த சரக்கா என்று தெரியாது. அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் சத்திய வாக்காகத் தோன்றும். கதை சொல்லும் பாட்டிமார்களை நாம் இழந்துவிட்டது ஒரு பண்பாட்டு இழப்பு.

எழுதப்படாத வாய்மொழி மரபில் பிள்ளைகளுக்காக நம் முன்னோர்கள் உருவாக்கியது ஏராளம்.   தாலாட்டில் தொடங்கி குழந்தைகளுக்கு ஊட்டப்படும் கதைகளும் பாட்டுகளும் உலகின் வேறெந்த நாட்டை விடவும் நம்  பண்பாட்டில் அதிகம்.

ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போதே தமிழில் கற்கப்படும் முதல் நூல். தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான்.

பெரிய நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும்  நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் 'ஆத்திசூடி”, 'கொன்றைவேந்தன்” ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இவற்றில் 'ஆத்திசூடி” மிகச்சிறிய வாக்கியங்களாலும் 'கொன்றைவேந்தன்” சற்றுப்பெரிய வாக்கியங்களாலும் ஆகியவை. 'இன்னதைச்செய்” அல்லது 'இன்னதைச் செய்யாதே”, 'இப்படிச்செய்தால் நல்லது”, 'இப்படியெல்லாம் செய்தால் தீமை” என்ற பாங்கில் அவை அமைந்திருக்கும்.

இளஞ்சிறார்கள் மிக எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின் ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல் யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சமுதாயத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் இவற்றையெல்லாம் நீதிகளாகக் கற்று, கேட்டு வந்த காலங்களில், தமிழ் சமுதாயத்தில்; குற்றச்செயல்களின் விகிதம் இன்றைய நிலையைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்தது என்பதில் ஐயமில்லை.

பஞ்சதந்திர கதைகள்,மாயாஜால கதைகள்,நீதி கதைகள் தெனாலிராமன் கதை, பரமார்த்த குருகதை, விக்கிரமாதித்தன் கதை, சிபி சக்கரவர்த்தி கதை என நாம் கேட்டறிந்த கதைகள் எத்துணை சிறந்த இலக்கியம் படித்தாலும் மனதின் ஒரு மூலையில் குழந்தை பருவத்தை நினைவூட்டி கொண்டிருப்பவை.
குழந்தைகளுக்கான நாவல்கள், குழந்தை நாடகங்கள், குழந்தைக் கவிதைகள்,புதிர்கள், படக்கதைகள்  சுற்றுலா கட்டுரைகள், மகான்களின் வாழ்க்கை வரலாறு, சுயசரிதை,விஞ்ஞான சம்பந்தமான தொகுப்புகள் இவையாவும் சிறுவர் இலக்கியத்தில் அடங்கும்.

குழந்தை இலக்கியத்தின் பண்புகள்

குழந்தைகளுக்கான தரமான இலக்கியங்களில் குழந்தைகளின் களங்கமில்லாத மனம் பிரதிபலிக்கப்பட வேண்டும். ஏனெனில் குழந்தை உள்ளத்துக்குத் திருப்தி தரக்கூடிய பாடல்கள் தான் இலகுவில் குழந்தைகளைக் கவர்ந்திழுக்கின்றன.வியப்பான, எளிய உணர்ச்சிகளை இனிய முறையில் எதுகை மோனை நிரம்பிய செய்யுள்களில் பாடினாலே குழந்தை பாடல்கள் சிறக்கும்.

சிறுவர் இலக்கியம் மொழி நடையிலும், பொருளிலும், நூல் அமைப்பிலும் வளர்ந்தோர் இலக்கியத்தில் இருந்து வேறுபட்டது. வயதைப் பொறுத்து மொழி எளிமையாக அமைய வேண்டும்.
 சிறுவர்களுக்கு ஏற்ற அவர்களுக்கு ஈர்ப்பான விடயங்கள் அவர்களை கவரும் வகையில் அழகான பெரிய எழுத்துக்களுடனும், பொருத்தமான படங்களுடனும் எழுத்து பிழைகளின்றியும் அமைதல் சிறப்பானது.

இந்த இலக்கியம் எழுதுவது அவ்வளவு எளிதன்று. பொறுமை, பொறுப்பு, புலமை என்பன இவ்விலக்கியம் படைக்கத் தேவை.

 குழந்தை எழுத்தாளருக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைப்பதில்லை. சிறப்பான குழந்தை இலக்கியகாரர்கள் பலர் தமது துறைகளைத் துறந்து மனம் சலித்து வெளியேறிய சம்பவங்களும் உண்டு.

குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்றால் அதனை ஆணிவேராக இருந்து வளர்த்தெடுத்தவர் திரு. அழ.வள்ளியப்பா அவர்கள். 
குழந்தைகளைக் கண்டால் தாமும் ஒரு குழந்தையாக மாறிவிடும் அளவிற்குக் குழந்தை உள்ளம் படைத்தவர் இவர்.

பூவண்ணன், தூரன், ஆர். வெங்கட்ராமன் ஆகியோரும் சிறந்த குழந்தை எழுத்தாளர்கள் ஆவர்.
அம்புலிமாமா, கோகுலம், பூந்தளிர், அரும்பு போன்ற சிறுவர் இதழகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. இவற்றில் சில இணையதளங்களிலும் வருகின்றன என்பது வரவேற்கதக்கது.

     காக்கையையும் குருவியையும் பசுவையையும் நாயையும் தன்னோடு இணைத்துக்கொண்ட பாரதியின் தேசத்தில், மற்றவர்களின் துன்பத்தில் ஏமாற்றத்தில் சந்தோஷம் கொள்வது போன்ற பொருள் உடைய ஆங்கில நர்சரி ரைம் தேவைதானா?

நமது சிறுவர் இலக்கியங்களில் வாழும் கலையை போதிக்கும் எவ்வளவோ வார்த்தைகள்.
    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
    ஆலயம் தொழுவது சாலவும் நன்று
    தாயிற் சிறந்த கோயிலுமில்லை
    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
    ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்
    ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்
    மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
    அறம் செய விரும்பு ஆறுவது சினம்
    கூடிவிளையாடு பாப்பா
    வானரங்கள் கனி கொடுத்து மந்தியுடன் கொஞ்சும்”

 நமது சிறுவர் இலக்கியங்களைக் கற்றுக்கொடுக்கும் போது உற்சாகம் வரவழைப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் வாழ்க்கை நெறி இங்குதானே இருக்கிறது?
திருக்குறளையும், ஆத்திச்சூடியையும், உலகநீதியையும் கொன்றைவேந்தனையும் பாரதியின் பாப்பா பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தொடக்க வகுப்புகளில் கற்பிக்கலாமே? வளரும் தலைமுறையினரை வாழும் நெறிக்கு அழைப்போமா!

நூலகமும், புத்தகப்பண்பாடும் என்ற தலைப்பில் குழந்தை எழுத்தாளர்கள், ஓவியர்கள் அமைப்பு 5, பிப்ரவரி 2010 நடத்திய சர்வதேச கருத்தரங்களில், 'புத்தக வாசிப்பு மூலம் மனிதர்களின் மதிப்பை குழந்தைகள் அறிந்துகொள்ள முடியும், மேலும் நமது பண்பாடு, சமயம், பொருளாதாரம், நமக்கான அறிவியல் ஆகியவை குறித்து சமூக அமைப்புகள் குறித்தும் அறிந்துகொண்டு புதிய சிந்தனைகளை உருவாக்க முடியும்.”என்றார் அப்துல் கலாம். 
 புத்தகங்களை சுமையாக நினைக்கும் நிலையினை மாற்றி புத்தகங்களை சுவையாக நினைக்கும் சூழ்நிலையை நம் பிள்ளைகளுக்கு உருவாக்குவோம்.

லூசியா லெபோ

samedi 16 octobre 2010

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. ஆனால் நம் மனம் கூறுகிறபடி வாழ்வதை, பிறர் எப்படி நோக்குகிறார்கள் என்பதே நமது வாழ்க்கையாக நமக்குக் கூறப்படுகிறது. பொதுவாக ஒருவன் இறந்த பிறகு அவனைச் சுற்றியுள்ள கூட்டத்தையும், அவர்களது அவனைப் பற்றிய விமர்சனத்தையும் பொறுத்ததே அவன் புகழ் என்பார்கள். இது மிக மோசமான கணிப்பு என்று ஒவ்வொரு முறை இதைக் கேள்வியுறும்போதும் எனக்குத் தோன்றும். இல்லையேல் இன்று மகாகவியாகவும், சீர்திருத்த, முன்னேற்றக் கருத்துகள் கொண்டவராகவும் போற்றப்படுகிற பாரதியார் அன்று உயிரோடு இருந்தபோது ஏழ்மையிலும், இறந்தபிறகு எண்ணக்கூடிய அளவிலான மக்கள்தொகையையும் கொண்டிருப்பாரா?

சமூகம் என்கிற நாலு பேரில், ஒருவர் தன் கருத்துகளை நியாயமான நேர்மையான முறையில் வெளிப்படுத்தி, அது தவறாக இருக்கும் பட்சத்தில் மன்னிப்புக் கோருபவராக இருப்பதே அரிது. பெரும்பாலோர் மௌனம் சாதிக்கவும், வலுவான பக்கத்தைச் சார்ந்து நிற்பதையுமே வழக்கமாகக் கொள்கின்றனர். இதில் பெரும்பான்மை என்பதற்காக அது சரியானதாகவும் இருக்கும் என்று எப்படிக் கூறமுடியும்?

நுாற்றாண்டுகள் பல கழிந்தும், மனிதன் எத்தனையோ விதங்களில்
முன்னேறியும், “வாழும் வகை” என்ற ஒன்றை மட்டும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. மனிதனுக்கு மனிதன் அது மாறுபடுகிறது. எந்த சீவராசிக்கும் இல்லாத சிக்கல். அறிவிருக்கும் ஒரு காரணத்தினாலேயே பலவிதமாக வாழ்வைப் பின்னிச் சிக்கலாக்கி விடுகிறான். இதிலிருந்து மீட்சி என்பது பற்றி எண்ணுகையில் தோன்றியவற்றையே கீழே தந்திருக்கிறேன்.

இராசேசுவரி சிமோன்

இன்றைய அறிமுகம் - வடலுார் அருட்பிரகாச வள்ளலார்

அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணையான இவா், 1823 ஆம் ஆண்டு அக்டோபா்த் திங்கள் ஐந்தாம் நாள், தென்னார்க்காடு மாவட்டம், கடலுாருக்கு அருகே “மருதுார்” என்னும் சிற்றுாரில், திரு இராமையா-திருமதி சின்னம்மா இணையருக்கு ஐந்தாவது கடைசி மகவாகப் பிறந்து, இராமலிங்கம் எனப் பெயரிடப்பட்டார்.

பிறந்த ஆறாவது மாதத்திலேயே தந்தையை இழந்தார். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, குடும்பம் சென்னைக்குக் குடியேறியது. அண்ணன் சபாபதி, புராணச் சொற்பொழிவுகள் செய்து, குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். சிறுவயதில், இராமலிங்க அடிகளார் கல்வியில் நாட்டமின்றிக் கந்த கோட்ட முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதோடு, பாடல்களும் இயற்றிப் பாடினார்.

பள்ளிக்கும் போகாமல், வீட்டிலும் தங்காமல் சுற்றி வந்த தம்பிக்குச் சாப்பாடு போடக் கூடாதெனத் தன் மனைவிக்குச் சபாபதி உத்தரவிட்டார். இதன் பின்னர், வீட்டிலேயே தங்கிப் படிக்கச் சம்மதித்த அடிகளார், சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் முருக வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஒரு நாள், முகம் பார்க்கும் கண்ணாடியில் முருகன் காட்சி கொடுத்தததைக் கண்டு பரவசப்பட்டுப் பாடல்கள் பாடினார்.

ஒரு முறை அண்ணன் சபாபதிக்கு உடல்நலக்குறைவு காரணமாகச் சொற்பொழிவு ஆற்ற இயலாமையால், தம்பி இராமலிங்கரிடம் தனக்குப் பதிலாகச் சென்று, ஏதாவது பாடல்களைப் பாடிவிட்டுத் தன்னால் வர இயலாத நிலையையும் விளக்கிவிட்டு வருமாறு கூறினார். அதன்படியே இராமலிங்கர் சென்று மனமுருகச் சில பாடல்களைப் பாடினார். அங்கிருந்தோர் அவரிடம் ஆன்மீகச் சொற்பொழிவாற்றுமாறு வேண்ட, மிகுந்த தயக்கத்துடன் தனது பேச்சைத் தொடங்கினார். ஆனால், அது இரவு நெடுநேரம் வரை நீடித்து, மக்களின் மனத்தை ஆனந்தப் பரவசப்படுத்தியது. ஒன்பது வயது சிறுவனாக அவர் ஆற்றிய இந்த முதல் ஆன்மீகச் சொற்பொழிவே மிகவும் அற்புதமாக அமைந்தது.

பலரின் வற்புறுத்தலுக்காகத் தனது சகோதரியின் மகள் “தனக்கோட்டி”யை மணந்த அடிகளார், இல்லறத்தில் நாட்டமின்றி அமைதியையும், கடவுளையும் நாடி, உள்ளத்தில் தேடலோடு சென்னையிலிருந்து புறப்பட்டுச் சிதம்பரத்தை அடைந்தார். அங்கே “கருங்குழி” என்னும் சிற்றுாரில் தங்கிய போதுதான், எண்ணெய் என நினைத்துத் தண்ணீரை ஊற்றி விளக்கெரியச் செய்த அதிசயம் நடந்தது.

1865 இல் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி, மக்களுக்கு நல்ல கொள்கைகளை வழி வகுத்துக் காட்டினார். 1867 ஆம் ஆண்டு வடலுாரில் “சமரச சுத்த சன்மார்க்க தருமசாலை” என்னும் அமைப்பை நிறுவி, மக்கள் அளித்த பொருளுதவியால், எவ்விதப் பாகுபாடுமின்றிப் பசித்து வருபவர்களுக்கு மூன்று வேளை உணவளிக்க ஏற்பாடு செய்தார்.

தனது சக்தியினால், மக்களுக்கு நன்மை தரும் பல அற்புதங்களையும் செய்து காட்டிய இராமலிங்க அடிகளை மக்கள் “வள்ளலார்” என அழைக்கலாயினர். வள்ளலாரின் புகழ் நாடெங்கும் பரவ, அவரைச் சுற்றி மக்கள் கூட்டம் பெருகியது. தனிமையை நாடிய வள்ளலார் “மேட்டுக்குப்பம்” என்னும் ஊரில், “சித்தி வளாகத் திரு மாளிகை” என்னும் இடத்தில் தங்கினார். இதன் முன்பு இவர் ஆற்றிய உரையே “பேருபதேசம்” எனப்படுகின்றது.

ஒளி வடிவாக இறைவனைக் கண்ட வள்ளலார், சத்திய தருமசாலைக் கருகிலேயே, “சமரச சுத்த சன்மார்க்க சபை”யை அமைத்தார். 1827 சனவரித் திங்கள் 25 ஆம் நாள் தைப்பூசத்தன்று, “முதல் ஒளி வழிபாட்டு விழா” தொடங்கியது. சத்திய தருமசாலையில் “அன்னதானமும்”. சத்திய ஞான சபையில் “தைப்பூச விழா”வும் வள்ளலார் நினைத்தது போல், அவரருளால் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தனது அறையில் எரிந்து கொண்டிருந்த திருவிளக்கைச் சித்த வளாகத் திருமாளிகை முன்பு வைத்து “அனைவரும் இனி ஒளி வடிவாக இறைவனை வழிபடவேண்டும்” என உபதேசம் செய்தார்.

1874 ஆம் ஆண்டு தைத்திங்கள் 19 ஆம் நாள், அனைவருக்கும் அருளாசி வழங்கிய வள்ளலார், இரவு 12 மணிக்குச் சத்த வளாகத் திருமாளிகை அறைக்குள் சென்று, தனது சீடர்களை வெளிப்புறமாகப் பூட்டிவிடச் சொன்னார். பின்னர் அறையைத் திறந்து பார்க்கையில் அறை வெறுமையாக இருந்தது. அன்று முதல் வள்ளலார் நம் கண்களுக்குத் தோன்றாமல் அருட்பெருஞ்சோதியாகி, அருவமாக அருளாசி வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

வள்ளலாரின் கொள்கைகள்
 • கடவுள் ஒருவரே! எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நேசித்தல் வேண்டும்.  மூட நம்பிக்கைகளை வளர்க்கும் சாதிச் சமயச் சடங்குகள் யாவும் பொய்யே. துன்பப்படும் உயிர்களுக்கு உதவுவதே இறை வழிபாடு. பசித்தவர்களின் பசியைப் போக்கும் ஜீவகாருண்யப் பண்பே இறைவனை அடையும் வழி.
 • ஆண்களைப் போலவே பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. சுய நலத்திற்காக அல்லாமல் பொது நலத்திற்காகவே இறைவனை வேண்டுதல் வேண்டும்.
 • பசித்திரு! தனித்திரு! விழித்திரு! ... என்பது போன்று மனிதச் சமுதாயத்தை ஆரோக்கியமாக வெளிப்படுத்தும் கொள்கைகளையே அவர் வலியுறுத்தினார்.
 • சிறந்த பகுத்தறிவாளரும், ஆன்ம நேயம் உடையவரும், சமுதாயச் சீர்திருத்தவாதியுமான வள்ளலார் 19 ஆம் நுாற்றாண்டின் மிகப் பெரிய தமிழ்ப் பற்றாளர், தமிழ்ப் புலமை பெற்றவா்.
வள்ளலார் இயற்றிய நுால்கள்
 • திருவருட்பா (1 முதல் 6 திருமுறைகள்)
 • பேருபதேசம்
 • அகவல்
 • வடிவுடைமாலை
 • தனிப் பாடல்கள்.
வள்ளலாரின் எழுத்துக்கள் யாவும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உணர்த்துவதோடு, புரட்சிகரமான சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகளை இனிய தமிழில், எளிய நடையில் அமையப் பெற்றதாகவும் உள்ளது.

-- சரோசா தேவராசு

தேவையற்ற துறவு

(இறைவனே இல்லையென்று வாதிடவோ, முற்றும் துறந்த ஞானிகளை விமர்சிக்கவோ, உலகிலுள்ள இலட்சக்கணக்கான துறவியரைக் குறைகூறவோ, அவர்கள் மேல் மதிப்பும் அன்பும் கொண்டவர்களை அவமதிக்கவோ எழுதப்பட்டது அல்ல. இது குறித்து மனதுள் எழுந்த எண்ணங்களைப் பரிமாறும் தனிப்பட்ட ஒரு உரத்த சிந்தனையே!)

   இயற்கையோடு இயைந்தும், முரண்டும் கால்போன போக்கில் வாழ்ந்து வந்த மனிதன் தன்னால் புரிந்து கொள்ளவும், அடக்கவும் இயலாத அதன் மறுமுகத்தைக் கண்டு ஆரம்பத்தில் மிரண்டிருப்பான். அமைதியாக, சலசலத்துக் கொண்டிருக்கும் ஆற்று நீர் திடுமென வெள்ளமாகி புரண்டு வரும்போது எங்கே ஓடுவது? எரிமலைக் குழம்பாக, நெருப்புக் கோளங்களாகத் தகிக்கும்  பூமியில் எங்கே வாழ்வது? ஸ்திரமானதாகத் தான் நம்பியிருக்கும் இந்த நிலம் திடீரென்று பாளம் பாளமாக வெடித்து, பிளந்து எல்லாவற்றையும் விழுங்குகிறதே! இதை எப்படித் தடுப்பது? எவ்விதம் கட்டுப்படுத்துவது என்று குழம்பியிருப்பான். தன்னால் எதுவும் செய்வதற்கில்லை என்று நிதர்சனமானபோது பயம் ஆட்கொண்டிருக்கும். யார் தன்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்ற முடியும்? பாய்ந்து வரும்வெள்ளத்தின் வேகமும், நெருப்பு மழையின் சீற்றமும் தணிகையில், அது எதற்கோ அல்லது யாருக்கோ பயந்து அடங்குவது போலில்லை? ஏதோ ஒன்று அதை செயலிழக்க வைக்கிறதோ! அது எதுவாக இருக்கும்? எதுவாகத்தான் இருக்கட்டுமே! தன்னைவிடச் சக்தி வாய்ந்த அதன் கருணைக் கடாட்சம் தனக்கு வேண்டும். அது தன் மீது கோபப்படாமல், தன்னை அழிக்காமல் பாதுகாக்கவும், சுகமளிக்கவும், இன்பம் நல்கவும் மட்டுமே வேண்டும். அதற்காக அதை அடிபணிய, ஆராதிக்க, அவசியமானால் அன்பளிப்பு வழங்க நேர்ந்தாலும் அதில் தவறேயில்லை! இப்படித்தான் மனிதக் கூட்டத்தில் “கடவுள்” படைக்கப்பட்டிருப்பார்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இவன் “நாகரிகம்” அடைய அடைய, இவனது பிரச்னைகளும், கவலைகளும், துன்பங்களும் பலவிதங்களில் உருவாகி பூதாகரமாக இவனைச் சூழ, ஒரு உண்மையை இவன் உணர்ந்து கொண்டான். இயற்கை மட்டுமல்ல - வாழ்வே சில வேளைகளில் தன்னைக் கைவிட்டுத் தான் அநாதையாக, குடும்பமோ, உறவினரோ, நண்பரோ நெருங்க முடியாத வெற்றிடம் ஒன்றில் தனித்து, ஆதரவு வேண்டித் தவிப்பதை!  முக்கியமாக மரணம். மீண்டும் அம்மாபெரும் அமானுஷ்ய சக்தியிடம் தஞ்சமடைவது மனஆறுதலை அளிப்பதறிந்து, அவன் நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்தவும், அதைச்சார்ந்த தன் செயல்களை விரிவுபடுத்தவும் முனைந்ததன் பலன் பிறந்தது “மதம்”.

எந்த நேரத்தில் மதம் தோன்றியதோ, இவனுக்குப் பிடித்தது மதம். ஒன்றல்ல, பல மதங்கள். அவற்றில் பல பிரிவுகள்... விதவிதமான உருவங்கள்... அதற்கானச் சின்னங்கள். பின்பற்ற வழிமுறைகள். அவைகளில் பாகுபாடுகள். இவற்றில் நேர்ந்த குழப்பங்கள். ஒன்றுக்கொன்று முரண்பட்டு, பேதங்களில் வளர்ந்து, சமுதாயத்தின் மென்னியை நெருக்கிக் கொண்டிருக்கின்றன இம்மதங்கள்.

கடவுள் பெயரால் பண்படவும், அமைதியாக வாழவும், ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடன் அன்பில் உறவை வளர்க்கவும் வேண்டியவன், தன்னியல்புக்கு ஏற்றவாறு மதத்தை வளைத்தான். இவனுக்கு எதிலும் சுயநலமும், தன்னிறைவும் வேண்டும். விளம்பரம் வேண்டும். ஆதாயமின்றி அடி கூட எடுத்துவைக்க மாட்டான். உயிர் பிரியும் ஒருவனுக்கு நீர் வார்க்கக்கூட “புண்ணியம்” என்ற “வரவு” வேண்டும். (இதற்காகவே கடவுள் கையிலும் ஒரு பேரேட்டைக் கொடுத்து விட்டான்)   மற்ற எதற்காகவும் கிடைப்பதைவிட, கோவிலுக்கு அதிக நன்கொடை கிடைப்பதன் காரணமும் இதுவே! எந்த நற்செயலும் “கணக்கு” போடப்பட்டு “வட்டி”யோடு திரும்பக் கிடைக்காது என்று கூறிப் பாருங்கள். பெரும்பாலான உதவிக்கரங்கள் முடங்கிப் போகும்.

இவனைப் புரிந்துகொண்டு, தன் குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து ஆன்ம உயர்வை இவன் அடைய உபதேசித்த எந்தப் போதகரின் அறிவுரையும் இவன் காதுகளில் ஏறவில்லை! தன்னைப் போலவே தன் மதமும் உயர்ந்தது என்ற இறுமாப்பும், அதைப் பின்பற்றாதவர் அறிவிலிகள் என்ற இகழ்ச்சியும், விமர்சிப்பவர் எதிரிகள் என்ற வன்மமும் வளர்ந்தன. ஒருவரையொருவர் அழித்துக்கொள்ளவும் சளைக்காத வெறி.

மோயீசன் தன் மக்களுக்குக் கடவுள் பெயரால் வெளியிட்ட பத்து கட்டளைகளும் நல்வழிப்படுத்தியிருந்தால், உலகம் என்றோ ஒளிமயமான பாதையில் செல்ல ஆரம்பித்திருக்கும். கண்ணனின் கீதோபதேசம் மன ஆழத்தைத் தொட்டிருந்தால், அவனவன் தன் கடமையைச்  சீர்படச் செய்து பலன் எதிர்பாராத பக்குவப்பட்டிருப்பான். புத்தனின் பற்றற்ற வாழ்வினைப் பின்பற்றியிருந்தால், ஆசைகள் அழிந்து, பிறர் நலம் பேணத் தோன்றியிருக்கும். முகம்மது நபிகளின் சமத்துவமும், சகோதரத்துவமும் பரவியிருந்தால் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்றாகியிருக்கும். கிறிஸ்துவின் “பகைவனுக்கும் அன்பு செய்யுங்கள்” என்ற அருள்மொழி உள்ளத்தில் ஊடுருவியிருந்தால் காணுமிடமெங்கும் களி நடம் புரிந்திருக்கும்.

நாமோ இந்த உன்னதர்களின் பெயரால் வேறுபடவும், தனித்தனிக் குழுக்களாகப் பிளவுபடவும், துவேஷத்தை வளர்த்திடவும் துணிந்துவிட்டோம். சற்றே யோசித்துப் பார்த்தால், நாம் யாரை மதித்துப் போற்றுகிறோமோ, இறைபீடத்தில் அமர்த்தி வணங்குகிறோமோ, அவர்களுக்கே நாம் செய்யும் அவமரியாதை இது என்பது விளங்கும். அவர்கள் போதனையைக் கடைப்பிடிப்பதை விட்டுவிட்டு, அவற்றைப் பரப்புவதற்காக உழைக்கிறேன் என்ற பெயரில் சில சம்பிரதாயங்களை நிறைவேற்றிக் கொண்டிருப்பதால் என்ன லாபம்?

கடவுளும் மதமும், அதைக் கட்டிக் காக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்ட பிறகு, சாமானியனுக்கும் இந்த உயர்ந்த கோட்பாடுகளுக்கும் நடுவே உள்ள இடைவெளியை இட்டு நிரப்ப அல்லது பாலமாகச் செயல்படத் துறவிகள் என்ற இடைத்தரகர்கள் இன்றியமையாதவர்களானார்கள்.

இவர்களில் முதன்மையானோர், உண்மையிலேயே ஞானத்திலும், அறிவிலும், பண்பிலும் சிறந்தவர்கள். இந்த மனித மந்தையின் முறையற்ற வாழ்வினின்று, இருள்சூழ் அறியாமையிலிருந்து அவர்களை மீட்க வேண்டுமென்ற ஆவல் கொண்டவர்கள். பாமரனுக்கும் புரியும் வண்ணம் சீரியக் கொள்கைகளை எடுத்தியம்பியவர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களது சாத்வீக முறை இங்கே அடிதடியில் உழன்று கொண்டிருக்கும் சுயநலக் கும்பலுக்கு, செவிக்கு இன்பம் தந்தபோதிலும் உரிய பலன் தரவில்லை.

தவமியற்றி, சித்தத்தை ஒருங்கிணைத்து வெற்றி கண்டும், மறுபுறம் தன்னையே உணர்வுகளின் வட்டத்துக்குள் அடக்கி ஆளும் திறன் பெறா வகையினர் உண்டு. நம் இதிகாசங்கள் கூறுவதுபோல் தங்கள் செப,தவத்தால் செயற்கரிய செயல் செய்யும் இவர்கள், ஒரு மேனகையின் எழிலுக்கோ அல்லது துாண்டப்படும் கோபத்திற்கோ இரையாகிப் போவார்கள். துறவறம் என்ற பெயருக்கே களங்கம் ஏற்படுத்தும் பசுத்தோல் போர்த்திய புலிகளும் இங்கு ஏராளமாக உண்டு.

கடவுள் என்ற மாபெரும் சக்தியை நம்புகிற மனிதனுக்கு அதன்பால் அன்பைவிட, பக்தியை விட, பயமே மேலோங்கி நிற்கிறது. தன் நடத்தையில் உள்ள கோளாறுகளை இவன் அறிவான். அதிலிருந்து விடுபட வேண்டுமென்பது அறிவுக்குப் புரிந்தாலும், செயல்பட முடியா தன் இயலாமையும் இவனுக்குத் தெரியும். தன்னைச் சுற்றிலும் மண்ணாகவும், பொன்னாகவும், பெண்ணாகவும், இன்னபிற செல்வங்களாகவும் நின்று தன்னைக் கவர்ந்து, அதை அடைய வேண்டி இவன் செய்யும் வரையறை மீறிய செயல்கள் தன்னை அழித்து விடுமோ என்ற அச்சம் சதா இவனைத் துளைக்கிறது. ஏதாவதொரு பரிகாரம் செய்து அதிலிருந்து தப்பிக்க எண்ணுகிறான். எனவே இறைவனுக்குத் துாது விடுவதுபோல துறவிகளை நாடித் தஞ்சமடைகிறான். தன் மனப் போராட்டத்திற்கு அப்போதைய மருந்தாக யாருடைய பேச்சோ, செயலோ உள்ளதோ, அவர்களைத் தன் பாதுகாவலனாக ஏற்றுக் கொள்கிறான்.

மனிதன் கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கியபின் தங்களுக்கொருத் தலைவனை, தங்களை வழி நடத்தக் கூடியவனை, குணத்திலும் பண்பிலும் சிறந்தவனைத் தேர்ந்தெடுத்து, அவன் கட்டளைப்படி வாழ்ந்தது தவிர்க்க இயலாதது. பலதரப்பட்ட குணநலன்களால் வேறுபட்டு, வக்கிரத்தால் வலுவுள்ளோரின் ஆளுகைக்கு எளியோர் பலியாகாதிருக்க அது அவசியமுமாயிற்று. நாளடைவில் அந்த அமைப்பே தனி மனித வழிபாட்டையும், சர்வாதிகாரப் போக்கையும் உருவாக்கியிருப்பது புரிந்துகொள்ளக் கூடி யது.

இதே நிலை இங்கும் உருவாயிற்று. துறவியர் சிறப்பும், புகழும், பலமும் பெற்றதோடு அவர்கள் சொல்லை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையும், செயலை விமர்சனம் செய்யாத, செய்யக் கூடாத சூழ்நிலையும் உண்டாகிவிட்டது.

இந்த இடத்தில் “துறவு” என்றால் என்ன என்றறிய முற்படுவது சாலப் பொருந்தும். அகராதிப்படி “உலகைத் துறப்பது”. விளக்ககொண்ணா பரம்பொருளை, எல்லாவற்றையும் இயக்குகிற சக்தியை அறிய முற்படும் முயற்சியில் தடைகளாக விளங்குபவைகளைத் துறப்பது. உலகில் உள்ள எல்லாவற்றையும் அனுபவித்தாலும் இறுதியில் மிஞ்சுவது தனிமையும், தன்னிரக்கமும், வெறுமையும்தான் என்பதை உணரும்போது இந்தத் தேடல் மனித குலத்தின் முடிவுறாத இலக்காகிவிடுகிறது.

தன்னைப்போலல்லாது, இதையறிய ஒரு துறவியால் முடியும் என்ற எண்ணத்தில் அதை ஓர் அடிப்படைத் தகுதியாக மனிதன் ஆக்கிவிட்டான். இவனால் இயலாத ஒன்றைச் செயலில் செய்பவர்கள் என்பதற்காகவே அவர்கள் மீது ஒரு பரவச உணர்வும் இவனுக்கு உண்டு. இன்று அதனாலேயே பல கோளாறுகள் துறவறத்தில் ஏற்படுகின்றன! ஞானத்தால் முற்றும் கனிந்து அல்லது அனுபவத்தால் அறிந்து துறவறம் மேற்கொள்வது வேறு. பெற்றோர் விரும்பி அல்லது மற்றோர் கணித்து, சிறு வயதிலேயே இத்தகு மடங்களில் சிறார்களை விட்டு, ஞானத்தை ஒரு அறிவாக, பாடமாக ஊட்டுவது வேறு. அங்கு மனதில் ஒட்டுவதுதான் ஒட்டும். இப்படித்தான் வாழவேண்டுமென்று கடிவாளமிட்டதாலேயே உணர்வுகள் கட்டுப்படுவதில்லை!

“யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்அதனின் அதனின் இலன்”  -  துறவு பற்றிய வள்ளுவர் விளக்கம் இது.எந்தெந்தப் பொருளின் பற்று நீங்கியவனாக இருக்கிறானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை! ஆசையைத் துறக்கச் சொல்லும் புத்தனின் தத்துவமே இதுவும்! துன்பமற்று வாழ, எதையும் “நீ, உனது” என்ற பார்வையில் நோக்காதே. உனக்குச் சொந்தம் என்று நீ எண்ணினால், அதை இழக்கச் சம்மதிக்க மாட்டாய். இழந்தால் சோகம் வரும், இழக்கக் கூடாதென்ற வேகமும், அதனால் கோபமும் வரும். மனம் பேதலித்து தவறுசெய்வாய். அதன் பலனாக துன்பம் நேரும் அல்லது உனக்குச் சொந்தம் என்று நீ எண்ணிய ஒன்று, உன்னைத் தனக்குச் சொந்தமாக எண்ணாவிட்டாலும் துன்பம் நேரும். ஆக துன்பத்தைத் தவிர்க்கப் பற்றற்று இருந்துவிடு. அதாவது தாமரையிலைத் தண்ணீராக வாழக் கற்றுக்கொள்.

மிக அற்புதமான அறிவுரை. ஆனால் சராசரி மனிதனுக்குக் கடைப்பிடிக்க
மிகக் கடினமான அறிவுரை. இதன்படி வாழ்ந்தால் துன்பப்படமாட்டோம் சரி. ஆனால் வாழ்க்கையில் சுவையோ, இனிமையோ இருக்குமா? இந்தச் சின்ன, குறுகிய வாழ்வில், மனித உணர்வுகளோடு மனிதனாக வாழாமல் இந்த வாழ்வுக்கே உரிய அனுபவங்களைத் துறந்துவிட்டு, எதைச் சாதிக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறதல்லவா? பற்றொன்று இல்லாவிடில் தாய் தன் மகவையோ அன்றி ஓர் ஆண் தன் குடும்பத்தையோ காப்பதற்காகச் செய்யும் தியாகங்களை எதிர்பார்க்க முடியுமா?  மனப்பற்றுகளை அறுத்தபின் ஞானியர் அனைவரும் வலியுறுத்தும் “அன்பு” எங்கிருந்து ஊறும்? வரண்ட நிலத்தில் களையோடு பயிருமல்லவா விளையாது போகும்?

இதற்கு வேறு சில மாபெரும் மனிதர்கள் மாற்றுவழி ஒன்றைக் கடைப்பிடித்துள்ளனர். மனதை விசாலப்படுத்தி, “தான், தனது” என்பதற்கு அப்பால் உயிர்களை நேசிக்கும் பக்குவம் அது.  அன்பால் உள்ளார்ந்த பற்றும், துயர் கண்டு துடிக்கும் தவிப்பும், அதை நீக்கிப் பெறும் நிம்மதியும், துன்பம் நீங்கிய முகம் கண்டு கொள்ளும் மகிழ்வும் கொண்ட வழி அது.  “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோறி ரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுஉளம் பதைத்தேன்
 நீடிய பிணியால் வருந்து கின்றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
 ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்” என்ற வள்ளலார் காட்டிய வழி. அண்ணல் காந்தியும், அன்னை தெரசாவும் வாழ்ந்து பார்த்த வழி.

வீட்டில் தொல்லை தரும் உறவுகளை, சண்டையிடும் அண்டை வீட்டுக் காரனை, செல்லுமிடங்களில் எல்லாம் ஏதோவொரு வகையில் எதிர்ப்புக் காட்டும் அயலானைத் தவிர்க்க இயலா அன்றாட வாழ்வில், சகிப்புத் தன்மை தேவைப்படும் சமுதாயச் சூழலைத் துறக்க முடியாத சாமான்யன்  சற்றே முயன்றால் இந்த வழியினைப் பின்பற்றுவது கைகூடும். பூப்பறிக்கும் நேரத்தில் முள் குத்துகிறதென்று மலரையே புறக்கணிப்பதற்கொப்பானது, துன்பப்படாமலிருப்பதற்காக பற்றைத் துறப்பதும். “வாழ்க்கை” சேற்றில் செந்தாமரையாக மலர்ந்திருக்கிறது. இரண்டையும் ஒரு சேர நோக்கக் கற்பதே அனுபவம். இந்த முதிர்ச்சியை வளர்த்துக் கொள்வதே அறிவின் பயன்.

உணவின் பல்சுவைகள் ஏற்று ருசிப்பதுபோல, பலதரப்பட்ட குணமுள்ளோரின் தன்மைகளைப் புரிந்து கொண்டு விட்டால், வாழ்வு ஒரு ரசமான புதினமாகும். அதில் வரும் பாத்திரங்கள் உங்கள் யூகத்திற்கேற்ப நடந்து மகிழ்வூட்டலாம் அல்லது திடீர் திருப்பமாக, மாறாக நடந்து வெறுப்பூட்டலாம், எதிர்பாராத நேரத்தில் இணைந்தாற்போல் வியப்பளிக்கலாம். எனினும் சுவைக்கோ பஞ்சமிருக்காது.

சுற்றங்களைத் தள்ளி, உலகை வெறுத்து, துறவின் பெயரால் தனித்து சின்னஞ்சிறு தீவாக ஒடுங்குவதைக் காட்டிலும், உறவுகளை ஒட்டி, அவர்கள் சாய்ந்து கொள்ளத் தோள் கொடுத்து, சுமை வலி தந்த போதும், அதில் சுகம் காணப் பழகினால், எங்கோ தேடிக் கொண்டிருந்த  சொர்க்கத்தில் பாதங்கள் பதிந்துவிட்ட உணர்வைப் பெறலாம்!

இராசேசுவரி சிமோன்

உருப்படியாய் நாமென்ன செய்தோம்?

பார்புகழும் பௌத்தமதச் செம்மல்! நல்ல
  பண்புடைய உலகமகான் புத்தர், இங்கே
சோர்ந்தவுளந் தனைக்கண்டு நொந்தார்!
   சூழ்ந்துழலும் கொடுமைமிகு நிலையைக் கண்டு
நீர் வழியும் கண்களுடன் மனையை விட்டு
  நிம்மதியை நாடிமனம் துறவு பூண்டார்!
சீர்பெறவே நன்னெறியைக் கண்டார்! சான்ற
  சித்தார்த்தன் நல்லறத்தின் தந்தை யன்றோ!

கன்னிமரி பெற்றெடுத்த செல்வம்! நல்ல
  கற்பகமாய் வந்துதித்த தங்கம்! நாளும்
தன்னுயிர்போல் மன்னுயிரைக் காத்து நின்று
  தரணியிலே நற்கருமம் செய்தார்! ஆனால்
தன்னறிவு சிறிதுமிலாப் புல்லர் கூட்டம்
  தந்தகொடும் துயருக்கே எல்லா உண்டோ?
எண்ணரிய நம்பாவம் அனைத்தும் தாங்கி
  ஏசுபிரான் சிலுவையிலே மாய்ந்தார் அய்யோ!

மக்களிடை நிலவிவரும் தீய கொள்கை
  மாண்டிடவே நபிநாதன் மண்ணில் தோன்றித்
தக்கதொரு ஞானவருள் குர்ஆன் ஒன்று
  தந்துபுவி காத்துநலந் தந்தார்! மாந்தர்
எக்குடிய ராயிருப்பின் அல்லா வன்றி
  எப்போதும் நன்மையிலை அறிவீர் என்ற
பக்தியுடன் இச்லாத்தார் போற்று கின்ற
  பரம்பொருளாம் நாயகனார் சொல்லிப் போந்தார்!

நாட்டிற்கே சுதந்திரமே வேண்டு மென்றால்
  நயமாக நாமதையே பெறுவோம்! மேலும்
காட்டிடுவோம் நம்பலத்தை மாற்றா னுக்கே
  கண்ணியஞ்சேர் அகிம்சைவழி பாதை யென்றே!
பாட்டினிலே பாரதியார் பாடிப் போந்த
  பண்புமிகு காந்திமகான் நீதி சொன்னார்!
ஏட்டினிலே அவர்பெருமை கூறப் போகின்
  எழுத்தெல்லாம் அன்பென்ற வடிவங் காட்டும்!

கருணையுள்ள புத்தர்,ஏசு, நபி,நல் காந்தி
  கடமையுடன் நற்தொண்டு செய்தார் மண்ணில்!
உருப்படியாய் நாமென்ன செய்தோம் நாட்டில்?
  உண்மையிலே செயலில்லை! பேச்சே கண்டோம்!
ஒருவனுக்கும் ஒருநன்மை செய்தோம் இல்லை!
  ஒற்றுமையும் நம்மிடத்தில் துளியும் இல்லை!
வறுமை,பிணி நமைவிட்டே நீங்கிப் போக
  வழியுண்டோ? உலகோரே, உணர்வீர் இன்றே!

--கவிஞர் தே. சனார்த்தனன், புதுவை.

இணையமெனும் இனிய வலை

 அரசியல், சமூகம், இலக்கியம், சமையல், பெண்கள், மருத்துவம், ஆன்மீகம், வணிகம், சோதிடம், பல்சுவை என பல தலைப்புகளில் செய்திகளை தன்னில் உள்ளடக்கி வெளிவரும்  இணைய இதழ்களில் கீழ்க்கண்டவை பலராலும் வரவேற்பு பெற்றவை.
திண்ணை :
வீட்டில் திண்ணை வைத்துக்கட்டுவது தமிழா் மரபு. இந்த திண்ணையில் உட்கார்ந்து பல செய்திகள் அலசப்படும். அதுபோல இலாப நோக்கமின்றி நடத்தப்படும்  இம்மின்னிதழில் கலை, அரசியல், கதை, கட்டுரை இலக்கியம், கவிதை எனப்  பலவற்றையும் படிக்கலாம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்பிக்கப்படுகிறது. பழைய மின்னிதழ்களில் இதுவும் ஒன்று.

தட்ஸ் தமிழ்:
இலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப்போல வெளிவருகிறது. இதில் பலதுறைச் சார்ந்த செய்திகளும் இலக்கியமும் இடம் பெற்றுள்ளது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம் ஆகிய 6 மொழிகளில் வெளிவருகிறது. மேலும் திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம்.

வார்ப்பு:
தமிழ்க் கவிதைக்கோர் இணைய இதழ். 1998 இல் 'நிக்குமோ நிக்காதோ” என்ற பெயரில் வந்த இம்மின்னிதழ் பிறகு 'வார்ப்பு” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில் செய்திகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அறிவுமதி, கனிமொழி போன்ற கவிஞர்களின் கவிதைகள் இதில் வெளிவந்துள்ளன. புதிதாக வெளிவந்துள்ள தமிழ் நுால்களைப் பற்றிய விமர்சனத்துடன் கூடிய தகவல்களை இந்த இதழில் உள்ள 'நூலகம்” என்ற இணைப்பின் வழியாக காணலாம்.

பதிவுகள்:
2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் வ.ந. கிரிதரன் . மாதந்தோறும் வெளிவரும் மின்னிதழ். இதன் நோக்கம் 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்” என்பதாம்.  கவிதை, சிறுகதை, நாவல், நூல் விமர்சனம், அறிவியல். . .இலக்கியம் சார்ந்த செய்திகளைப் படிக்கலாம். இலவசமாக கிடைக்கின்ற இவ்விதழில் ஆக்கங்களை வெளியிடவும், பார்வையிடவும் கட்டணம் ஏதுமில்லை. உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளை இலவசமாகப் பிரசுரித்து உதவுகிறது. மேலும் விக்கிபீடியா (தமிழ் தகவல் களஞ்சியம்), மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் இணைப்புகளையும் வழங்குகிறது.

மரத்தடி:
கதை, கட்டுரை, கவிதை வெளியிடுகிறது. இது ஒரு இலவச மின்னிதழ். ஆனால் மரத்தடி குழுமத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே இதில் தங்கள் படைப்புகளை இட முடியும். விரும்பும் எவரும் இதில் உறுப்பினர் ஆகலாம்.

தமிழகம் நெட்:
மாதந்தோறும் வெளிவரும் இம்மின்னிதழைப் பொள்ளாச்சி நசன் நடத்தி வருகிறார். தமிழறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், தமிழறிஞர்களின் புகைப்படங்கள், நூல் மதிப்புரை, இலக்கிய நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை இதில் காணலாம். ஆங்கிலம் வழியாக தமிழ் கற்பிக்கின்ற பணியையும் இவ்விதழ் செய்துவருகிறது.

தமிழ்கூடல்:
தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு பயன்படும் வகையில் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் சான்றோர்கள் பற்றிய சுருக்கமான தகவல்களைக் கொண்ட பட்டியல் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன கட்டுரை, இலக்கியம், அரசியல். .  இடம் பெற்றுள்ளன.கவிதைகளை மரபுக் கவிதை, புதுக் கவிதை, கைக்கூ கவிதை என்று வகைப்படுத்தி வெளியிடுகிறது.

நிலாச்சாரல்:
கதைகள், கவிதைகள், சுவடுகள், பூஞ்சிட்டு என்னும் சிறுவர்பகுதி, பலசுவை பகுதி, இலக்கியச் செய்திகள் முதலியன இவ்விதழில் வெளிவருகின்றன. இது ஒரு வார இதழ்.

தமிழோவியம்:
கட்டுரை, கவிதை, சிறுகதை, திரை விமர்சனம். . .ஆகியவற்றை எடுத்தியம்பும்  வார இதழ் இது. தமிழ் ஈ புக் என்ற இணைப்பின் மூலம் தமிழில் வெளிவருகின்ற மின் நூல்களை காண முடியும்.  விசை, தலித் முரசு, கூட்டாஞ்சோறு, புதுவிசை, தாகம், தமிழ்ச் சான்றோர் பேரவை. . . போன்ற பல்வேறு சிற்றிதழ்களை அழகாக யுனிகோடில் வெளியிடுகிறது கீற்று என்னும் இணையதளம்.

சிப்பி : ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் இயங்கும் இவ்விணையதளத்தில தமிழ் பகுதியில்  காலச்சுவடு, அமுதசுரபி, கலைமகள், மஞ்சரி, தலித், பெண்ணே நீ. . .போன்ற சிற்றிதழ்களைப்   படித்து மகிழலாம்.

விகடன் குழுமம் - ஆனந்த விகடன், அவள்விகடன், சுட்டிவிகடன், ஜீனியர்விகடன், நாணயம்விகடன், மோட்டார்விகடன், சக்திவிகடன் ஆகிய இதழ்களைக் கொண்டது.இவற்றைப் படிக்கச் சந்தா கட்டவேண்டும்.

குமுதம் குழுமம் - தீராநதி, குமுதம், சிநேகிதி.மங்கையர் மலர், கல்கி, தமிழன் எக்ஸ்பிரஸ் ,  இவை அனைத்தையும் பணம் செலுத்திப் படிக்க இயலும்.

விகடன், குமுதம்  - அச்சிதழாகவும் இணைய இதழாகவும் ஒரே நேரத்தில் வெளிவருபவை.

இலங்கைத் தமிழா் குறித்த செய்திகளை  ஈழ நாதம்  ஈழ முரசு மற்றும் யாழ் இணையம் வழியாகவும் அறியலாம். தமிழ் முரசு சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் மின்னிதழ். மலேசியா இன்று - மலேசியச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவருகிறது.

புதுச்சேரி  - புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தமிழிலக்கியத் திங்கள் மின்னிதழ்.

இதைத்தவிர தமிழ் சினி டைரக்டரி சௌத் இந்தியன் சினிமா வழியாக  தமிழ்த் திரைப்படச் செய்திகளை அறியலாம்.

இது வரையில் இணையத்தைத் தொடாத இதழ்களும்  இணைய இதழ்களாக வந்தால் பன்னாட்டு வாசகர் வட்டத்தைப் பெறமுடியும்.

இணைய இதழ்களுக்குப் போட்டியாக இணையத்தில் உலா வருபவை வலைபூக்களாகும் இதுபற்றி அடுத்த சந்திப்பில் பார்ப்போமா தோழிகளே!

லூசியா லெபோ

குடிமைப் பயிற்சி

சந்திப்புகள் நடத்த மற்றும் சங்கம் அமைக்கச் சுதந்திரம்-

எல்லோரும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், மற்றவர்களைத் தொந்தரவு செய்யாவண்ணம் மற்றும் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு இருப்பின், சந்தித்துக் கொள்ள, சங்கம் அமைக்க உரிமையுள்ளது. சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு சங்கத்திலும் வணிக மன்ற கூட்டணியிலும் அல்லது கட்சியில் எவ்வித பயமும் இன்றி உறுப்பினராகச் சேர எல்லோருக்கும் அனுமதி உள்ளது.

அபிப்பிராய சுதந்திரம்-கருத்தை வெளிப்படுத்துவதில் சுதந்திரம்-

பத்திரிக்கைத் துறைகள், ஊடகங்கள் மற்றும் தனிமனிதன் பேச, எழுத மற்றும் பிரசுரிக்க எந்தத்தடையும் இல்லை. ஒவ்வொருவருக்கும் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த எந்தத் தடையும் இல்லை. எல்லோரும் தங்களுடைய அரசியல் மற்றும் சங்கங்கள் அமைக்கும் உரிமைகளைச் சுதந்திரமாகச் செயல்படுத்தலாம்.

ஆனால் இந்தச் சுதந்திர உரிமையின் பயன்பாடுகள் மற்றவர்களை மதிக்கும்படியாகவும், சமயம் மற்றும் கொள்கைகள் இல்லாமலும் மற்றும் அவதுாறு பரப்பும் வகையில் இல்லாமலும் இருத்தல் வேண்டும்.  இனவெறி, சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடிய மிகப்பெரியக் குற்றச் செயல் ஆகும்.

வெளியில்   நடமாடச் சுதந்திரம்-

பிரஞ்சு நாட்டு குடிமகன்களுக்கு பிரான்சு நாட்டு எல்லைக்குள்ளும் மற்றும் ஐரோப்பியாவிற்குள்ளும் எந்தவிதத் தடையுமின்றிச் சுதந்திரமாக வெளியில் நடமாட உரிமை உள்ளது. ஐரோப்பியப் பிரஜைகள் அனைவரும் ஐரோப்பிய அங்கத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் நடமாட மற்றும் ஸ்தாபனம் நிறுவ சுதந்திரம் உள்ளது. சட்டப்படி முறையாக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவரும் சுதந்தரமாக நடமாடலாம். இதற்கென்று எந்த ஒரு தனிப்பட்ட உள்நாட்டு பாஸ்போர்ட் கிடையாது.

--தொடரும்--

samedi 11 septembre 2010

எண்ணப் பரிமாற்றம்

உலகக் கம்பன் கழகச் சரித்திரத்தில் முதன்முறையாக, முன்னோடியாக ஆரம்பிக்கப்பட்ட “பிரான்சு கம்பன் கழக மகளிரணி” தன் முதலாம் ஆண்டைச், செவ்வனே செயலாற்றிய மகிழ்வுடன் நிறைவுறச் செய்துள்ளது. தொய்வுறாத மனமும், ஆக்கச் செயல்களில் விழைவும் கொண்ட எங்கள் ஆர்வத்தைப் பயனுறும் வகையில் ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

உளந்திறந்த பாராட்டும், உழைப்பும், பொருளும் பங்காக அளித்த பாங்கும், நுாலகம் வளர புத்தகங்கள் நன்கொடையாகத் தந்து அளித்த உற்சாகமும் என்றும் எங்கள் நினைவில் மங்கா இடம் பெற்றிருக்கின்றன. தொடர்ந்த ஆதரவு, என்றும் எங்கள் முயற்சிகளுக்கு துணை நிற்குமென்ற நம்பிக்கையோடு,  இரண்டாம் ஆண்டுக்கான எங்கள் கடமைகள் தொடர்கின்றன.

இந்திய ஒற்றுமையைச் சீரழிக்க அரசு ஒரு வலிமையான ஆயுதத்திற்கு
 கூர் சீவ உள்ளது அறிந்து மனம் நொந்து போகிறது. சாதிவாரியாக மக்கள்  பட்டியல் தயாரிக்க உள்ளார்களாம்! சாதாரண குடிமக்களுக்குத் தீமையெனத் தோன்றும் ஒன்று அரசியல்வாதிகளுக்குத் “தெரியாமல்” போவது ஏனென்று புரியவில்லை. நாட்டுப்பற்று உள்ளவர்கள் கடவுளை இனி நாட்டுக்காகவும் வேண்டிக்கொள்ள வேண்டியதுதான்!

கவிஞர் கி. பாரதிதாசன் அவா்களுடையக் கவிதை இந்தப் பொருமலையும், இதற்கானத் தீர்வையும் காட்டுகிறது.

--இராசேசுவரி சிமோன்--

இன்றைய அறிமுகம் -- அருட்சகோதரி எம்மானுவெல்

அன்னை தெரசாவின் வழியில் இறைவனின் முகத்தை ஏழைகளின் சிரிப்பில் கண்டவர்.  16-11-1908 ஆம் ஆண்டு பெல்ஜியம் தலைநகரான புருக்சேலில் பிறந்து, சிறு வயதில் தந்தையை இழந்து மனதால் வெறுமையுற்ற மதலேன் சென்கின், வளர்ந்த பிறகு மடத்தில் சேர்ந்து, துா்ப்பாக்கிய நிலையில் உள்ள குழந்தைகளுக்குச் சேவை செய்ய எண்ணினார்.

அருட்சகோதரியாக எம்மானுவெல் என்று பெயர் மாற்றம் பெற்றவர், இலக்கிய, தத்துவப் பேராசியராகத் துனீசியா, துருக்கி, எகிப்து நாடுகளில் பணியாற்றினார்.

1971இல், பணி ஓய்வுக்குப் பிறகு, தன் வாழ்வை அழுக்கு, நோய், ஏழ்மை நிரம்பியச் சேரிகளில்-ஏழைகளுக்கு உதவுவதில் உள்ள இன்பத்தை உணர்ந்தவராய்க்-கழித்தார். பழைய செருப்பும், உடையும், புன்னகையும் அணிந்து அஞ்சாநெஞ்சத்துடன் உழைத்து ஆதரவற்றவர்களுக்கு வீடும், பள்ளியும், மருத்துவ நிலையமும் ஏற்படுத்தித் தந்த அவரது அன்பு பலரது வாழ்வை மலர்வித்தது. இவ்வாறு 22 வருடங்கள் ஓயாது உழைத்து, 85% குழந்தைகளுக்குக் கல்வியறிவு அளித்து, வன்முறையைக் குறையச் செய்து  பெண்களின் விடுதலைக்கு வழியும் வகுத்தார்.

தனது 74 ஆம் வயதில்,  “மீண்டும் பூஜ்யத்தில் ஆரம்பித்தல்” என்ற கொள்கையோடு அவா் உருவாக்கிய இயக்கம் உலகெங்கும் பரந்து எகிப்து, லிபான், பிலிப்பைன்சு, சூடான் ... என 60,000 குழந்தைகளுக்கு மேல் பராமரிக்கிறது.

1993 இல் கிட்டத்தட்ட தன்னுடைய 30 ஆண்டு சேவைக்குப்பின் பிரான்சு திரும்பிய அவர், “நீ வாழ வேண்டுமானால் பிறரை நேசித்தே ஆக வேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தி, கோவில்கள் தங்கள் செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டுமெனக் கோரினார்.

தனது அயரா உழைப்புக்கிடையில், பல நுால்களை எழுதினார்.

தன் 99 ஆம் வயதுவரை அளப்பரியாச் சக்தியுடன் செயல்பட்ட இந்த அம்மையார், “என்றும் முன்னேற்றம்” என்ற தாரக மந்திரத்துடன் கடமையை ஆற்றி 20-10-2008 இல் இறையடி எய்தினார்.

எகிப்து தன் குடியுரிமையை அளித்து நன்றி பாராட்டியது. பெல்ஜியக் கத்தோலிக்கப் பல்கலைக் கழகம் முனைவர் பட்டம் வழங்கி மகிழ்ந்தது. பிரான்சு மருத்துவக் கல்விக் கழகம் தங்கப் பதக்கம் கொடுத்து கௌரவித்தது.

பெல்ஜிய நாட்டின் அதி உயர் விருதுகள் இரண்டும், பிரான்சு நாட்டின் மிக உயா்ந்த விருதுகள் மூன்றும் இவர் பெருமைக்குப் பெருமை சேர்ப்பவை.

--தமிழரசி--

இயலாமையும் இன்புறும் வழியும்

சாதிகளை ஒழித்திடவே முடியாதா? சமயத்
 சண்டைகளை நிறுத்திடவே இயலாதா? இங்கு
நீதிகளை நிலைநாட்டல் நடவாதா? நல்ல
 நெறிகளையே வளர்த்திடல்கை கூடாதா? என்றும்
வாதிகளாய் நின்றதினிப் போதாதா? வாழ்வில்
 வடலுாரார் துாயநெறி சேராதா? இன்பம்
மோதிவிளை யாடவழி தோன்றாதா? நாடு
 முன்னேற இயலாமை ஓடாதா தோழா?

எல்லோரும் ஒற்றுமையாய் இணைந்து வாழ்ந்தால்
 எழில்மேவும் சமுதாயம் இனிதே  பூக்கும்!
நல்லோரின் நன்னெறியில் வாழ்க்கை சென்றால்
 நலம்மேவும் பொற்காலம் இங்கே தோன்றும்!
வல்லோரின் நல்லறிவு வளரும் வண்ணம்
வழிகளையே வகுத்திடுவோம் மணக்கும் நாடே!
பொல்லாரும் தீயாரும் திருந்தி வாழும்
 புதுநெறியைப் படைத்திடுவோம் கருணை யோடே!

விழிதன்னைக் காக்கின்ற இமையைப் போன்று
 விளைபயிரைக் காக்கின்ற வேலி யாக
மொழிதன்னைக் காக்கின்ற நாடே ஓங்கும்!
 மூளுகின்ற தீதெல்லாம் தானே நீங்கும்!
வழிதன்னை எப்பொழுதும் மேன்மை யாக
 வடித்திட்டால் நிலையாக இன்பம் தேங்கும்!
பழிதன்னைத் தருகின்ற வினைகள் ஓயப்
 பண்பென்னும் மலர்ச்சோலை செழித்தல் வேண்டும்!

ஒன்றுக்கும் உதவாமல் வீட்டுக் குள்ளே
 உண்ணுவதும் உறங்குவதும் வாழ்க்கை யாமோ?
இன்றைக்கே எப்படியோ வாழ்ந்தால் போதும்
 என்றிங்குத் திரிபவர்கள் மாந்த ராமோ?
நன்றிக்கே என்னபொருள் என்றே கேட்கும்
 நட்பறியா நெஞ்சங்கள் உயரப் போமோ?
என்றைக்கும் கடமையுடன் உழைத்(து) உயர்ந்தால்
 எழில்பொங்கும் சோலையென மின்னும் வாழ்வே!

--கவிஞர் கி. பாரதிதாசன்--

அறிஞர்களின் அருள்வாக்கு

ஸ்ரீ சத்ய சாயிபாபா

பற்றற்றத் தன்மையைச் சிறிது சிறிதாகப் பழகிக்கொள். ஏனெனில் மிகவும் நேசிக்கிற அனைத்தையுமே விட்டுவிட வேண்டிய வேளை ஒன்று வரும்.

பறவையின் சுமையால் கிளை ஆடலாம். அதனால் பறவை நிலைகுலைந்து விடுவதில்லை. ஏனெனில் அது தன் பாதுகாப்புக்குத் தன் சிறகுகளையே நம்பியிருக்கிறது. அத்தகைய நம்பிக்கையைப் பெற வேண்டும்.

ஸ்ரீ அன்னை

முழுமையின் பாதையில் முன்னேற விரும்புபவன் இடர்கள் பற்றிக் குறை கூறலாகாது. அது பலவீனத்தின் அறிகுறி.

இன்னல்களை எதிர்பார்க்காதே. அது அவற்றை வரவழைக்கவே செய்யும். இன்னல்களை வெல்வதற்கான வலிமை ஒரு புன்முறுவலில்தான் உள்ளது.

துறவுக்கும் அடிமைப்படலாகாது. வருவதை ஏற்றுக் கொள்ளவும், இழக்கவும் சித்தமாக இருக்க வேண்டும்.

அமிர்தானந்தமயி

தங்களுடைய ஆசைகள் உடனடியாக நிறைவேற வேண்டும் என்ற பேராவலாலும், பொறுமையின்மையினாலும் மக்கள் குருடர்களைப்போல் நடந்து கொள்கின்றனர். இதனால் அவர்கள் தெளிவான கண்ணோட்டத்தை இழக்கின்றனர். அது பேரழிவில் முடிகிறது.

ரஜனீஷ்

இளகிய மனநிலையில், சுதந்திரமாக, வெளிப்படையாக, புதிய அனுபவங்கள் பெறத் தயாராக, புதுமைகளைக் கண்டறியும் ஆவலுடன் இருங்கள். அந்த உலகுக்காக இதையோ, இந்த உலகிற்காக எதையுமோ துறக்க வேண்டாம். எங்கே இருந்தாலும், என்னவாக இருந்தாலும் “நீங்கள்” வாழ வேண்டும்.

மனிதனைத் தவிர வேறெந்தப் பிறவியும் மரணத்தைக் கண்டு பயப்படுவதில்லை. மனதில் பயமிருந்தால் வாழ்வில் சந்தோஷம் எங்கிருந்து வரும்?

யோகி ராம்சுரத் குமார்

கடவுளை விட மேலானது நம்பிக்கை. மனதில் நம்பிக்கை இருந்தால் அது ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்கும். மரத்தைப் பராமரிக்க வேரில் நீர் விட்டால் போதும். ஒவ்வொரு இலைக்கும் நீர் விடவேண்டியதில்லை. வேர் கிளைகளுக்கும், இலைகளுக்கும் வேண்டியதைத் தந்து காப்பாற்றும்.

இணையமெனும் இனிய வலை

இணைய இதழ்களால் என்னென்ன வசதிகள் என்று பார்ப்போமா?

உலகின்  எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளையும், செய்திகளையும்  உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது. சில பத்திரிகைகள் முக்கியமான நேரங்களில்,  உதாரணமாக தேர்வு, தேர்தல், இயற்கைகேடுகள் முதலானவற்றை வெளியிடுவதால் உடனுக்குடன் செய்தியை தெரிந்துகொள்ள முடிகிறது.

நாளிதழ்களில் ஒருநாள் வெளியான தகவல் அன்றைய நாளிதழ்  கிடைக்கவில்லை என்றால் தேடிப்பெறுவது சிரமம். ஆனால் இணைய இதழ்களில் தகவல்களைச் சேமித்து வைக்கலாம் அல்லது தேவைப்படும்பொழுது தேடிக் கண்டுபிடிக்கலாம். -  சுலபமாக பக்கங்கள் தாவவும் முந்தைய நாள் இதழ்களைப் பார்க்கவும், மற்றவர்களுக்குச் செய்திகளை அனுப்பவும்  வசதிகள் இருக்கின்றன.

பாதுகாத்து வைக்கும்போது அச்சேற்றப்பட்ட இதழ்கள் நாளடைவில் பழுப்பாகி எழுத்துக்கள் மங்கிவிடுகின்றன.  பழைய இதழ்களை சேர்த்துவைக்க இடவசதியும் தேவை. இணைய இதழ்களில் இந்தச் சிரமங்கள் இல்லை.

ஒரு நாளிதழை உருவாக்க ஏற்படும் இடப்பற்றாக்குறை, நியுஸ் பிரிண்ட் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள்  இணைய இதழில் கிடையாது.

அச்சு ஊடங்கங்களுக்கு இருக்கும் நிர்பந்தங்கள் ஏதும் இதற்கு இல்லை.

அச்சு இதழ்களை எத்தனை பேர் வாசிக்கிறார்கள் என்ற கணக்கு தோராயமாகத்தான் இருக்கும்.
இணைய இதழ்களை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதை மிகத்துல்லியமாக கணக்கிட்டு சொல்லும் வகையில் தொழில்நுட்பம் இருக்கிறது. உதாரணமாக  27 .11. 2008 தினமலர் இணையத்தில் மும்பை பயங்கர செய்தி 12 மணி நேரத்தில் 5 இலட்சம் பேர் படித்தனர் என்று இந்த புள்ளி விபரம் சொல்கிறது.

மேலும் இணைய இதழை தினமும் எத்தனை பேர், எந்தெந்த நாடுகளிலிருந்து வாசிக்கிறார்கள், ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எத்தனை பேர் வாசித்தார்கள், எந்த பகுதியை அதிகம் விரும்பி படிக்கிறார்கள் என்றும் கூறமுடியும். இந்தக் கணக்கு, விளம்பரங்கள் பெற உதவியாக இருக்கும். இந்தப் புள்ளி விபரங்களை வைத்துத்தான் விளம்பரத் தொகையும் நிர்ணயம் செய்கிறார்கள்.

படைப்பாளியே தன் படைப்பு வெளிவந்ததா என்று அறிய பத்திரிக்கை அல்லது இதழை காசு கொடுத்து வாங்கித்தான் பார்க்க வேண்டியுள்ளது. இணைய இதழில்  இந்தச் சிக்கல் இல்லை.

வளரும் பருவத்தினர் கைப்பேசிக்காக (மொபைல்), செலவிடும் அளவுக்கு  புத்தகத்துக்கோ பத்திரிக்கைகளுக்கோ செலவழிக்க விரும்புவதில்லை.
பழைய புத்தகங்களையோ, வாடகை நூல்களையோ பயன்படுத்துகின்றனர் அல்லது இணைய இதழை வாசிக்கவே விரும்புகின்றனர்.

காசு கொடுத்து பல இதழ்களை வாங்கிப் படிக்க முடியாது.  இணைய இதழ்கள் வருவதால்தான் இன்று நம்மால் பல்வேறு இதழ்களையும் படிக்க முடிகிறது

தமிழ் இணைய இதழ்களில் பிரபலமானவர்களது படைப்புகள் இல்லாமல் புதியவர்கள் படைப்புகள் அதிக அளவில் இடம் பெறுகிறது.

இணைய இதழால் மிக இலகுவாக, விரைவாக படைப்பாளிகள், ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
ஆசிரியர் கடிதம், மக்களின் கருத்துக்கள், உணர்வுகள், பிரதிபலிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முடியும். பின்னூட்டம் (மின்னூட்டம்) இதற்கு வழிவகுக்கிறது. (பலர் பின்னூட்டம் கொடுக்க விரும்பினாலும் அதைச் செயல்படுத்தும் வழி அறியாது இருக்கிறார்கள். தமிழ் எழுத்துரு  இல்லாவிட்டாலும் ஜி மெயிலில் தமிழில் டைப் செய்யும் வசதி இருக்கிறது.)

சில மின்னிதழ்கள் பிற இணைய தளங்கள் மற்றும் மின்னிதழ்களுக்குச் செல்ல இணைப்பு வழங்குகின்றன.

காசு செலவு செய்யாமல் இணைய இதழை நடத்தும் வாய்ப்பை இணைய நிறுவனங்கள் தர முன்வந்துள்ளன. இதனால் நிறைய செலவு செய்து கொஞ்ச வாசகர்களை அச்சு மூலம் அடைவதைவிட, சில ஆயிரம் வாசகர்களைச் செலவே இல்லாமல் அடைந்துவிட முடியும்.


இணைய இதழ்களால் பல நன்மைகள் இருந்தாலும் முற்றிலுமாக அச்சில் வரும் இதழ்களைப் புறக்கணிக்க முடியாது.

இணையத்தொடர்பு, சாதாரண மக்களையும் மிகவும் குறைந்த செலவில் அடையும் வாய்ப்பு ஏற்படுமாயின் அச்சு ஊடகம் பாதிக்கப்படும்.  அதற்கு வெகுகாலம் பிடிக்கும். அதுவரை அச்சு ஊடகங்களின் தேவையும் இருந்து கொண்டிருக்கும்.

‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்’ என்றார் பாரதி. இணையத்திற்குச் சென்றாலே பன்னாட்டு கலைச்செல்வங்களைப் பற்றிய அறிவு நமக்கு கிட்டும்.

தோழிகளே, இணைய இதழ்கள் சிலவற்றை அடுத்தமுறை உங்களுக்கு
அறிமுகபடுத்தலாம் என்றிருக்கிறேன்.

- லூசியா லெபோ

பெண்களே பெண்களுக்கு -- 2

தற்போது தலைமுறை இடைவெளியால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நிறைய மாற்றங்கள் வந்த பின்பும் இரு தலைமுறையினரின் பழக்க வழக்கங்களில் எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை!  மேலும் மாற்றங்கள் நல்லவையாக இருந்தால் வரவேற்கலாம்.திருமணம்வரை பிரச்னைகள் பெரிதாக வர வாய்ப்பில்லை. திருமணமாகிய பின்பு இன்னொரு குடும்பத்திற்கு வாழ வந்தவள் அங்குள்ளவர்களை பழகி புரிந்து கொள்ள முயல வேண்டும். ஆரம்பத்தில் அவ்வாறு செயல்படாது, பின் தங்களோடு இணைந்து வாழ முற்படாத அவளை அவர்கள் ஒதுக்கி வைக்க முனையும்போது பிளவுதான் வளர்கிறது. அந்த தொல்லைகளை மனதில் வைத்துக் கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தி பழி தீர்த்துக் கொள்வதால் குடும்பம் இன்னும் பிரிந்துதான் போகும்.

மாமனார் மாமியார் தன் கணவனைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, இவ்வுலகில் வாழ ஒரு தகுதியுள்ள மனிதனாக்கி, தன்னையும் அவனுக்கு வாழ்க்கைத் துணைவியாக்கினார்கள் என்பதை மறந்து-வயதான காலத்தில் அவர்களால் எதுவும் செய்ய இயலாத நிலையில் அவர்களைத் தொல்லையாகக் கருதி முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு யோசனை தருபவர்களும் பெண்களே!  தொலைபேசி மூலம் மற்ற பெண்களைப் பற்றி வம்பு பேசி அவர்கள் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவதும் அவா்களே! தனக்கு வேண்டாதவர்களைச் சந்திக்கும்போது, குதர்க்கமாகப் பேசி அவர்கள் மனதைப் புண்படுத்தி அதைப் பார்த்து ரசிப்பவர்களும் பெண்கள்தான்.

இவைகளையெல்லாம் குடும்பங்களில் நடக்கும் சாதாரண நிகழ்ச்சிகளாக நினைக்கிறோமே தவிர, இதனால் சம்பந்தப்பட்ட பெண்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்ப்பதே இல்லை. எத்தனையோ பெண்கள் தங்கள் சொந்த வீட்டிலேயே சுதந்திரமின்றி நடைப்பிணமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சொல்வார்கள். ஆனால், பெண்களே பெண்களுக்கு எதிரியாகி, தங்களினத்தை அழிப்பதும், அடிமைப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் முறையற்ற செய்கள் என்பதை ஏனோ உணர்வதில்லை. பெண்களே பெண்களை புரிந்துகொள்ளாததை நினைத்தால் வேடிக்கையாக மட்டுமல்ல, வேதனையாகவும் உள்ளது. மற்றவர்களால் தாங்கள் பாதிக்கப்படும்போது, நெஞ்சம் கசிந்துருகி கண்ணீர் விடும் பெண்கள், மற்றவர்களை அதே நிலைக்கு ஆளாக்க எப்படித் துணிகிறார்கள் என்பது புதிராகத்தான் இருக்கிறது.

இதில் ஆண்களுக்கு சம்பந்தமே இல்லையா? நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலும் ஆண்கள் வீட்டு விஷயங்களில் கலந்து கொள்வதில்லை. அப்படியே கலந்து கொண்டாலும் அநேகமாக பெண்களின் போக்குப்படியே எதையும் செய்வார்கள். ஆனால் ஏதேனும் தவறாகிப் போனால் உடனே பழியைப் பெண்கள் மீது சுமத்திவிடுவார்கள் அல்லது ஒதுங்கிக் கொள்வார்கள். அவர்கள் துணிந்து நல்லது கெட்டதுகளை அலசி ஆராய்ந்து, தவறு செய்தவர்களுக்கு அதைப் புரிய வைத்து, வீட்டில் சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் நிலவச் செய்தால் எவ்வளவோ பிரச்னைகள் காணாமல் போகும். வீட்டில் உள்ள இருவருக்கிடையில் பிரச்னை வரும்போது மூன்றாமவர்தானே நியாயத்தைப் புரிந்துகொள்ளவும் அதை நிலைநாட்டவும் முடியும்?

இதுவரை பார்த்த அளவில், பெண்கள் அனைவருமே மோசமானவர்கள்தானா, இரக்க குணமே அவர்களிடம் கிடையாதா என்று தோன்றலாம். இயற்கையில் நல்லவர்களான அவர்கள் தங்களையறியாமல் செய்யும் தவறுகளே இவை. ரோசா மலரைப்போல மென்மையாக மணம் வீசும் அவர்கள் சில சமயங்களில் முள்ளாகத் தைத்துக் காயப்படுத்தி விடுகிறார்கள். இறைவனால் தாய்மை என்ற வரத்தைப் பெற்றவர்கள் நல்ல குணங்களும், பண்புகளும் உடையவர்களே! தங்களிடமுள்ள அரிய பண்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் இனத்திற்குத் தாங்களே எதிரியாகும் நிலையினை மாற்றி பெண்குலத்தின் பெருமையையும், அதே வேளையில் உரிமையையும், சுதந்திரத்தையும் நிலைநிறுத்த வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் இன்னொருத்தியைப் பார்க்கும்போது “இவளும் நம்மைப்போல ஒரு பெண்” என்று நினைத்தால் போதும். எந்தப் பிரச்னைக்கும் இடமில்லை!

வெளியில் சென்று “பெண்களுக்கு சமஉரிமை வேண்டும். சுயமரியாதை, கௌரவம் வேண்டும்” என்று போராடுவதற்குமுன், நாம் விரும்பும் சுதந்திரத்தையும், உரிமைகளையும் நம் வீட்டிலுள்ள பெண்களுக்கு வழங்கி    அவர்களை மகிழ்வித்து நாமும் மகிழ்வோம். ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். பெண்குலத்தின் பெருமையைத் தாங்களும் உணர்ந்து மற்றவர்களையும் உணரச் செய்தால் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சியும், மறுமலர்ச்சியும், வளமும் நிச்சயம் சிடைக்கும்.

பெண்களைப்பற்றி இத்தனை உரிமையுடனும், வேதனையுடனும், ஆதங்கத்துடனும் ஏன் எழுதினேன் என்றால்-அவர்களைப் போல

“நானும் ஒரு பெண்”

-விமலா துருவோ

குடிமைப் பயிற்சி

மத சார்பற்ற குடியரசு

உணா்வு சுதந்திரத்தை அளிக்குமென குடியரசு உறுதி கூறுகிறது.
ஒரு மதத்தைப் பின்பற்றுவதும், பின்பற்றாமல் இருப்பதும் அவரவரின் சுதந்திரமே! மதத்தைப் பொருத்தவரை நாடு நடுநிலையாக இருக்கிறது. எந்தவொரு மதத்திற்கும் முக்கியத்துவமோ அல்லது அதனை வளர்க்க ஊதியமோ நாடு தருவதில்லை. மேலும் எந்தவொரு நபரும் எந்தவொரு மதத்தையும் பின்பற்றும் சுதந்திரத்தை அளிக்கிறது.

பிரான்சு நாட்டில், மற்ற மக்களாட்சிகளில் உள்ளதுபோல் இல்லாமல், மதசார்பின்மை என்பதை சகித்துக் கொள்ளாமல்-அதை ஒரு கொள்கையாகவே கருதுகிறது. அதைவிட ஒரு படி அதிகமாகவே அது கருதுகிறது. மதசார்பின்மை என்பது ஒரு பொது கருத்தாக இருந்தாலும், மதம் என்பது ஒரு தனி நபர் விருப்பத்திற்கு உட்பட்டது. இன்னும் அமலில் இருக்கும் 1905 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சட்டத்தின்படி தேவாலயத்திற்கும், அரசிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

1946 ஆம் ஆண்டு மதசார்பின்மை அரசியல் சட்டமைப்பின் கொள்கையானது. 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட சட்டத்தின்படி எந்தவொரு மனிதரும் அவர் பின்பற்றும் மதத்தை வெளிப்படுத்தும் எந்தவொரு சின்னத்தையோ அல்லது உடையையோ வெளிப்படையாக பள்ளியிலோ, கல்லுாரியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ அணியக்கூடாது.

உணர்வு சுதந்திரம்--எந்த ஒரு மனிதனும் தன்னுடைய மதம் சம்பந்தமான கருத்து உட்பட, எந்த ஒரு சட்ட ஒழுங்கையும் பாதிக்காவண்ணமுள்ள ஒரு கருத்தை வெளியிடக் கவலைப்படத் தேவையில்லை. ஒரு மதத்தை அல்லது ஒரு நம்பிக்கையை, பின்பற்றவோ அல்லது அதனை பின்பற்றாமல் இருக்கவோ, மதம் மாறவோ ஒவ்வொரு மனிதனுக்கும் பிரான்சு நாட்டில் அனுமதி உண்டு.

--தொடரும்--

dimanche 15 août 2010

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

கலிகாலத்தில் உலகம் அழியுமென்பார்கள். கடந்த சில வருடங்களாக உலகில் ஏற்பட்டு வரும் அழிவுகளும், நோய்களும் அதற்கு முன்னோடியோ எனத் தோன்றுகிறது. செய்தித்தாள்களிலும், தொலைக் காட்சிகளிலும் தினம் காணும் செய்திகள் அந்நாட்களில் ஏதோ ஒரு நேரத்தில் நடக்கும் அசம்பாவிதங்கள். மனிதனும் தன்னால் இயன்ற அளவு தனிமனித வாழ்க்கையையும், குடும்பச் சூழலையும், சமூகத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான்!

ஆனாலும் கடைசி மனிதன் வாழும்வரை, வாழ்வு மீது பற்றும், அதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும், அதற்கான செயல்பாடுகளும் தொடரத்தான் செய்யும். இது கடவுளுக்கும் அல்லது இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே நடக்கிற போராட்டம். தோல்வி மனிதகுலத்திற்கே என்று திட்டவட்டமாகத் தெரிந்தாலும்கூட அவனது முயற்சி முடங்காது.

தமிழுக்குச் சமீபகாலமாக ஏற்படும் சரிவினைப் போக்க, அதன் பழம்பெருமை குன்றாது நிலைக்க வைக்க தமிழ் ஆர்வலர் நடத்துகிற போராட்டமும் இத்தகையதே! குடும்ப அமைதிக்காகச் சில விட்டுக் கொடுத்தல்களும், சமூக நலனுக்காகச் சில தியாகங்களும் எத்துணை அவசியமோ அந்த அளவுக்கு இங்கே பொறுமையும், இடைவிடா உழைப்பும் தேவை. மொழி, இனம் பற்றிய எண்ணமே ஏற்படாத அளவு பணம் பண்ணும் கலை வளர்ந்துவிட்ட நாளில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையை ஒரு சிலரே செய்தாக வேண்டிய சூழல்.

கம்பன் கழகம் அந்த ஒரு சிலரில் ஒன்றாகத் தன் தமிழ்ப் பணியை இன்னொரு கோணத்தில் அணுக ஆரம்பித்துள்ளது. “ வளரும் தலைமுறைக்குத் தமிழை அறிமுகப்படுத்துங்கள், தமிழில் பேசுங்கள், தமிழ் கற்றுக் கொடுங்கள், நமது பாரம்பரியக் கலாச்சாரத்தைச்  சொல்லிக் கொடுங்கள்” என்று மேடைக்கு மேடை கூறியாயிற்று. ஏற்கனவே ஒரு தலைமுறை இந்த வட்டத்திலிருந்து சற்றே விலகிவிட்ட காரணத்தால், அவர்களுக்கு விருப்பம் இருந்தபோதும் செயலாற்ற இயலவில்லை. எனவே அந்தப் பொறுப்பை நாங்கள் எடுத்துக் கொண்டுள்ளோம்.

ஒவ்வொரு மாதக் கடைசி சனிக்கிழமையன்றும் இளையோருக்குத் திருக்குறளைப் பிரெஞ்சு, தமிழ் மொழிகளில் விளக்க உத்தேசித்துள்ளோம். இதன் மூலம் உலகப் பொதுமறையான வாழ்வியல், தமிழர் பண்பாடு, தமிழ் மூன்றும் வளர வாய்ப்பு உள்ளது. இலவசமாகக் கிடைக்கும் இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி, இளைஞர் மனதில் தமிழெனும் ஒளியேற்ற வேண்டுகிறோம். நன்றி

இராசேசுவரி சிமோன்

இன்றைய அறிமுகம் - அருள்மிகு இராமகிருட்டிண பரமஅம்சர்

18-2-1836 முதல் 16-8-1886 வரை வாழ்ந்த 19 ஆம் நுாற்றாண்டின் சிறந்த ஆன்மீகவாதி. இயற்பெயர் கதாதர் சாட்டர்ஜி. மேற்கு வங்கத்தில் பிறந்த இவர் சிறுவயதில் படம் வரைவதிலும், களிமண் சிலை செய்வதிலும், இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், ஆன்மீக விஷயங்களைப் பற்றிப் பேசுவதிலும் அக்கறை காட்டினார். பள்ளிப் படிப்பு வெறும் பொருள் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது எனப் பள்ளி செல்ல மறுத்தார்.

17 வயதில் குடும்பம் வறுமையுற, கல்கத்தா தட்சணேசுவர் காளி கோயிலில் புரோகிதராக இருந்த அண்ணன் இராம்குமாருடன் தங்கிப் பணி செய்தவர், அண்ணன் இறந்ததும் பூசாரியானார். கல்லுக்குப்  பூசை செய்கிறோமா அல்லது உண்மையிலேயே தெய்வத்தை வணங்குகிறோமா என்று குழம்பி, காளியிடமே காட்சியளித்துத் தன் குழப்பத்தைப் போக்க வேண்டினார். கோயிலருகே பஞ்சவடியில் தியானம் செய்தார். பின்னர் பொறுமையிழந்து காளி கையிலிருந்த வாளினால் தன்னையே கொலை செய்து கொள்ள முயன்றபோது சுயநினைவு இழந்து விழ, ஒரு பேரானந்த ஒளி தன்னை ஆட்கொண்டதாகப் பிறகு குறிப்பிட்டுள்ளார்.

இதன்பின்னர் அவர் நடவடிக்கைகள் அசாதாரணமாக இருக்க, பித்தம் பிடித்து விட்டது-திருமணம் செய்தால் சரியாகிவிடும் என்று தாயார் நினைத்தபோது, அவரே கமார்புகூரின் அருகிலுள்ள செயராம்பாடி ஊரில் இருக்கும் சாரதாமணி என்னும் பெண்ணே தான் மணம் புரிய தகுந்தவள் என்று கூறினாராம்! ஆனால் மணந்த பிறகு, எல்லாப் பெண்களையும் காளி அவதாரமாகவே நினைத்த அவர் அவளையும் அவ்விதமே அலங்கரித்து அவள் காலில் விழுந்து வணங்கினார்.

பைரவி பிராம்மணி என்ற பெண்மணியிடம் தாந்தரிக சாதனைகள் கற்றார். தோதாபுரி என்பவரிடம் அத்வைத வேதாந்தம் கற்று 6 மாதங்கள் நிர்விகல்ப சமாதியில் திளைத்ததாகக் கூறப்படுகிறது. அவ்வேளையில் சீதை, இராதை போன்றோரைக் கண்டதாகவும் சொல்லப்படுகிறது. இயேசு, நபிகள் ஆகியோரைக் கண்டதாக அவரே கூறியுள்ளார். இச்சாதனைகளைக் கேள்வியுற்று பலர் அவரைக் காண விழைந்து சென்றனர். அவர்களுள் விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். இராமகிருட்டிணரைத் தன் குருவாகவே அவர்  ஏற்றுக்கொண்டார்.  இராமகிருட்டிணரின் கூற்றுகளை மகேந்திரநாத் குப்தா என்பவர் குறிப்பெடுத்து, அந்த வேதாந்த கருத்துகள் “இராமகிருட்டிணரின் அமுத மொழிகள்” என மொழிபெயர்க்கப்பட்டன. கடைசிக் காலத்தில்  தொண்டைப் புற்று வந்து அவதியுற்ற இராமகிருட்டிணருக்குக் காசிப்பூரில் அவருடைய சீடர்கள் சிகிச்கையளித்தனர்.

அவா் பொன்மொழிகள்--

 1. எல்லா மதமும் ஒரே இறைவனை அடையும் பல வழிகள்.
 2. பூரண இறையருள் பெற்ற பின் போதனை செய்.
 3. உள்ளத்தைத் துாய்மையாக்கு. சத்தியம் பேசுதலே சிறந்த தவம்.
 4. எளிமையும், சத்தியமும் ஈசன் அருளைப் பெற வைக்கும்.
 5. பெண்ணாசை, பொன்னாசை வற்றினால் ஆன்மா வேறு, உடல் வேறு என்பது தெளிவாகும்.
இராசி சிமோன்

அச்சுறுத்தும் அண்மைக்காலம்

 1. இன்னும் 150 ஆண்டுகளில் இந்தியாவில் தென்மேற்குப் பருவமழையே இருக்காது என்கிறது வானிலை ஆய்வு மையம்.
 2.  2015 முதல் மழை பெய்வது கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து பூமி மணல் நிறைந்த பாலைவனமாகி விடுமாம்.  கடல் நீர் ஆவியாகி மழை பெய்தாலும் உஷ்ணத்தால் அத்துளிகள் மண்ணைத் தொடுவதற்குள் மீண்டும் ஆவியாகி விடுமாம்!
 3.  ஒவ்வொரு வருடமும் வினாயகர் சதுர்த்திக்குப் பிறகு 65 டன்னுக்குக் குறையாமல் கழிவுகள் மெரினா கடற்கரையில் மட்டும் அகற்றப்பட வேண்டி உள்ளது. இந்தியா முழுதுக்குமான நீர் நிலைகளின் கதி பற்றி நாமே கணக்குப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்!
 4. 2030 ஆம் ஆண்டில் உலகில் பாதிப் பேருக்குத் தண்ணீர் கிடைக்காது. நீரை மையமாக்கிப் போர்கள் எழக்கூடும்.
 5. இன்னும் 50 ஆண்டுகளில் தென்னிந்தியக் கடலோரப் பகுதிகள் சில வரைபடத்தில் இல்லாது போக வாய்ப்புள்ளது.
 6. பூச்சிக் கொல்லிகள், பிளாஸ்டிக் பொருட்கள், அழகு சாதனங்கள், சில மருந்துகள் தயாரிக்க ஈஸ்ட்ரோஜன் (பெண்தன்மை தரக்கூடியது) போன்ற வேதிப் பொருட்கள் தேவை. ஆனால் அவை ஆண்கள் உடலில் சேரும்பொழுது ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. பெண் குழந்தைகள்  உடலில் சேரும்போது அவர்கள் சிறு வயதிலேயே பூப்பெய்துகின்றனர்.
 7. உலக நீரிழிவு நோயாளியரில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் இந்தியர்.
 8. தமிழக இளைஞரில் மது, புகை பிடிப்போர் 30 சதவிகிதத்தினர்.

இணையமெனும் இனிய வலை

அன்புச் சகோதரிகளே, இந்த முறை  தாயகம் சென்றபோது தமிழக முதல்வர் நடத்திய செம்மொழி மாநாட்டிலும் அதனுடன் இணைத்து உத்தமம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இணைய மாநாட்டிலும் பங்கு பெறும் வாய்ப்பு கிட்டியது. இணைய மாநாட்டில்  ஆராய்ச்சிக் கட்டுரைகள் படித்த சிலரையும்   வலைப்பூக்கள் , இணையதள அமைப்பாளர்கள் சிலரையும் சந்தித்துப் பேசியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

கணிணியின் பயன்பாடுகளில் முக்கியமானது   இணையவலை, இணையதளமாகும்..
கல்வி, உலக நடப்புகள், அறிவியல், அரசியல், பொருளாதாரம், மொழி, வரலாறு, ஆன்மீகம், மருத்துவம், சமையல், விளையாட்டு, பொழுதுபோக்கு, வங்கிக் கணக்குகளைக் கையாள்வது, கடிதப் போக்குவரத்து, கருத்துப் பரிமாற்றம், பொருட்களை வாங்குவது... என்று இதில் பேசப்படாத செய்திகளே இல்லையெனலாம். எனவே, உலகமே குக்கிராமமாகக் காட்சியளிக்கிறது.
இந்த இணையத்தின் பயன்பாடுகளில் சிலவற்றை உங்களுக்குத் தொகுத்துத் தொடராகத் தரலாம் என நினைக்கிறேன்.

முதலில் என் நினைவிற்கு வந்தது இணைய இதழ்கள் - மின்னிதழ்கள்.

காரணம், என் மனத்திரையில் ஓடிய பசுமையான காட்சி :

என் இளவயதில், தமக்கையின் நச்சரிப்பும் கெஞ்சலும் கொஞ்சலும் பொறுக்காமல் எதிர் வீட்டு மாமியிடமிருந்து ஆனந்தவிகடன், குமுதம், பேசும்படம் (இவ்விதழ்களுக்குத் தடா எங்கள் வீட்டில்) இவற்றைக் கடனாக வாங்கி  என் தந்தையின் கண்ணில் படாதவாறு அவர்களுக்குத் தருவது.  இந்த அனுபவம் உங்களில் சிலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இன்றோ நான் அந்த இதழ்களைப்பெற எவர் தயவையும் நாடுவதில்லை. அதிகப் பைசாவும் செலவு செய்வதில்லை. மாறாக இணையத்தில் வெளிவரும்  இணைய இதழ்கள் - மின்னிதழ்களைப் படிக்கிறேன்.

இணைய இதழ்கள் மின்னிதழ்கள் என்றால் என்ன?

இந்த அவசர உலகில் ,அதுவும் கணவன் மனைவி இருவரும் பணிக்கு ஓடும் காலை வேளையில் பொழுது ஏது பத்திரிகை, புத்தகங்களைப் பார்க்க,  படிக்க. உள்ளுர்த் தொலைக்காட்சிகள், தேசியத் தொலைக்காட்சிகள் ஆகியவற்றுக்கு அடுத்து இணையத்தின்  மூலமாகவே செய்திகளை அறிவதாக  அமெரிக்கர்கள் கூறுகிறார்கள். எனவே, அங்கு செய்தித் தளங்கள் வரிசையில் இணையம் 3 ஆம் இடத்திலுள்ளது.

வளர்ந்துவரும் கணிணி, தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தால் இன்று தினத்தந்தி, தினகரன், தினமலர், தினமணி, தமிழ் முரசு, மாலைமலர்;. . . மின்தாள் வடிவில் வருகின்றன. அதாவது அச்சில் எப்படி இருக்குமோ அதைப் போலவே(ஒரு சில பத்திரிகைகள்) அந்தந்தப் பக்கங்களின் லே-அவுட் மாறாமல், விளம்பரங்கள் மாறாமல் வெளிவருகின்றன. இதனால் காகித இதழ் போலவே உணர்வு ஏற்படுகிறது.  இணைய இதழ்களை இரண்டாக வகைப்படுத்தலாம்.  ஒன்று  நாளேடுகள் (செய்தித் தாள்கள்), மற்றது, வார, மாதத் தமிழ் இதழ்கள். (உ.ம்)  திண்ணை, கீற்று, விகடன், குமுதம், பதிவுகள் . . .  . 

முதலில் இணைய இதழ்கள்  ஒவ்வொன்றுமே தமக்கு உரித்தான எழுத்துரு (font)     ஒன்றைப் பயன்படுத்தின. தற்பொழுது பெரும்பாலும் இதழ்கள் யுனிகோட்(  ஒருங்குறி) எழுத்துருவிலேயே வருகின்றன.

யுனிகோட் என்றால் என்ன?

உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொதுவான குறியீட்டுமுறை. மொழி என்னும் தடையைத் தொழில்நுட்பம் தகர்த்தெறிந்து கண்டறிந்த முறை. தனித்தனி மென்பொருள் தேவையில்லை. கணிணியில் தற்காலிகமாகச் சில மாற்றங்கள் செய்தால்போதும்.

கணிணியைப் பயன்படுத்தத் தெரிந்த எவரும்  இந்த இணைய இதழ்களைப் படிக்க இயலும். பணி, வேலைகளுக்கிடையே சலிப்பு, சோர்வு ஏற்படும்போது ஒரு மாற்றத்துக்கு இணைய இதழ்களைப் புரட்டுபவர்களும்  உள்ளனா்.

இந்தத் தமிழ் இணைய இதழ்கள் பல சுவையான செய்திகளைப் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குத் தந்து கொண்டிருக்கின்றன. மேலும் மலேசியா, சிங்கபூர் , கனடா, அமெரிக்கா , இங்கிலாந்து, ஆத்திரேலியா, சீனா, சப்பான் ஆகிய நாடுகளில் நடைபெறும் செய்திகளை அந்தந்த நாட்டிலிருக்கும் செய்தியாளர்களே திரட்டி அனுப்புகிறார்கள்.

தன்மை:

பெரும்பாலும் தமிழ் இணைய இதழ்கள் பொழுதுபோக்கு நோக்கத்துக்காகவே உள்ளன.
ஆழமான பொருள் நிறைந்த உள்ளடக்கங்கள் கொண்ட உயர்தர இதழ்களும் உண்டு. இத்தகைய இதழ்கள் எண்ணிக்கையில் குறைவு.

படிப்பவர்களின் மனத்தில் தீய எண்ணங்களை உருவாக்கும் படம், கதை, கட்டுரை, செய்திகளைக் கொண்ட இதழ்களும் உண்டு. சமூகச் சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும்  இணைய இதழ்களைத் தவிர்க்க வேண்டும். அதற்காக ஆவண செய்ய வேண்டும்  குறிப்பாக நம் இளைய தலைமுறை  இணையத்தில் உலவும் போது  விழிப்பாக இருக்க வேண்டும்.

இணைய இதழ்களால் என்னென்ன வசதிகள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போமா தோழிகளே.

- லூசியா லெபோ