சாதிகளை ஒழித்திடவே முடியாதா? சமயத்
சண்டைகளை நிறுத்திடவே இயலாதா? இங்கு
நீதிகளை நிலைநாட்டல் நடவாதா? நல்ல
நெறிகளையே வளர்த்திடல்கை கூடாதா? என்றும்
வாதிகளாய் நின்றதினிப் போதாதா? வாழ்வில்
வடலுாரார் துாயநெறி சேராதா? இன்பம்
மோதிவிளை யாடவழி தோன்றாதா? நாடு
முன்னேற இயலாமை ஓடாதா தோழா?
எல்லோரும் ஒற்றுமையாய் இணைந்து வாழ்ந்தால்
எழில்மேவும் சமுதாயம் இனிதே பூக்கும்!
நல்லோரின் நன்னெறியில் வாழ்க்கை சென்றால்
நலம்மேவும் பொற்காலம் இங்கே தோன்றும்!
வல்லோரின் நல்லறிவு வளரும் வண்ணம்
வழிகளையே வகுத்திடுவோம் மணக்கும் நாடே!
பொல்லாரும் தீயாரும் திருந்தி வாழும்
புதுநெறியைப் படைத்திடுவோம் கருணை யோடே!
விழிதன்னைக் காக்கின்ற இமையைப் போன்று
விளைபயிரைக் காக்கின்ற வேலி யாக
மொழிதன்னைக் காக்கின்ற நாடே ஓங்கும்!
மூளுகின்ற தீதெல்லாம் தானே நீங்கும்!
வழிதன்னை எப்பொழுதும் மேன்மை யாக
வடித்திட்டால் நிலையாக இன்பம் தேங்கும்!
பழிதன்னைத் தருகின்ற வினைகள் ஓயப்
பண்பென்னும் மலர்ச்சோலை செழித்தல் வேண்டும்!
ஒன்றுக்கும் உதவாமல் வீட்டுக் குள்ளே
உண்ணுவதும் உறங்குவதும் வாழ்க்கை யாமோ?
இன்றைக்கே எப்படியோ வாழ்ந்தால் போதும்
என்றிங்குத் திரிபவர்கள் மாந்த ராமோ?
நன்றிக்கே என்னபொருள் என்றே கேட்கும்
நட்பறியா நெஞ்சங்கள் உயரப் போமோ?
என்றைக்கும் கடமையுடன் உழைத்(து) உயர்ந்தால்
எழில்பொங்கும் சோலையென மின்னும் வாழ்வே!
--கவிஞர் கி. பாரதிதாசன்--