பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 30 juin 2013

எண்ணப்பரிமாற்றம்

                                                      

அன்புடையீர்,

வணக்கம். உலகமும், அதிலுள்ள சீவராசிகளும் ஒரு நியதிக்குள் அடங்கிச் செயல்படுகின்றன. 'நியதி' வடச்சொல் என்று முரள்வோர் 'வரைமுறை அல்லது விதி' என்று இதனைக் கொள்ளலாம். எனினும் அந்தப் பொது விதிக்கு புறம்பாக நடக்கும் ஆயிரமாயிரம் செயல்களைக் கண்கூடாகக் காண்கிறோம். அவற்றுக்கு நமது பார்வையில் பொருளோ, காரணமோ தென்படுவதில்லை. அதற்காக அவைகளுக்குக் காரணமும், பொருளும் இல்லை-இருக்காது என்பது பேதைமை! நமது புலன்களுக்கு எட்டாத ஏதோ ஒன்றின் பரிமாணமா கவே அந்தப் புற விளைவுகள் காணப்படுகின்றன. அதனைக் கண்டு மலைத்துப் போகத்தான் நம்மால் முடிகிறது.

பொதுவாக உலகத்தின் சிறந்த படைப்பு மனிதன் என்று நாமே சொல்லிக்கொள்கிறோம். இதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை.  ஏனெனில் இவனால் முடியாதது எதுவுமே இல்லையோ என்று எண்ணுமளவுக்கு ஒவ்வொருத் துறையிலும் இவன் அடைந்த வெற்றிகள் கணக்கில் அடங்காதவை. அதே நேரத்தில் இவனால் எந்த அளவுக்குக் கீழே போக முடியும் என்பதற்கும் இவனே எடுத்துக்காட்டாக விளங்குகிறான்.

புறவிளைவு ஓர் உயர்ந்த லட்சியத்தின் வெளிப்பாடாகவும்,பிறரால் எளிதில் கைக்கொள்ள இயலாததாகவும் இருந்தால் அது மனித குலத்திற்குக் கிடைத்த பெரும் செல்வமாக நிலைத்து விடுகிறது. கோடிக்கணக்கான மனிதர்களில் கரம் சந்த் காந்தியால்தான் உடைகளைத்தூக்கி எறிந்து விட்டு, ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு தன்னை எதிர்த்தோரிடையே, அவர்களது நாட்டில், அவர்களையே நாணமுறச் செய்யும் வகையில் நடமாட முடிந்தது. அந்த உள்ள நேர்மை, சத்தியத்தின் பிரதிபலிப்பு இன்றளவும் பிரமிக்க வைப்பதாய், பின்பற்ற முடியாததாய் நின்று மனதால் வழிபட வைக்கிறது.

ஆனால்  பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்கும் அடுத்தப் பக்கம் நமக்குத் தெரிவதில்லை. அந்த முகம் பலவீனம் கொண்டதாய், பொறமை படைத்ததாய்  பிறரைப் பழி வாங்கும் வன்மம் கொண்டதாய், திரையின் பின் ஒளிந்து நாடகமாடுவதாய் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்! அதைக் கண்டுணரும் சக்தி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அத்தகு அறிவு இருந்தாலும், ஒன்றும் செய்வதற்கில்லை. அதனால்தான் ஒரு ஞானிக்கு  வள்ளலாரைக் காணும் வரை, தெருவில் சென்று கொண்டிருந்தவர்களை விலங்குகளுக்கு உதாரணமாகக் காட்டத்தான் முடிந்தது. அந்த மாக்களை மக்களாக மாற்ற அவர் முயலவில்லை. ஏனெனில் அவர்களும் ஓர் குறிப்பிட்ட 'விதி'க்குள்தான் செயல்படுகிறார்கள் என்பதை அவர் உணர்ந்திருந்தார் போலும்!

உலகில் இனிப்பின் தன்மையைக் காட்ட, கசப்பின் அவசியம் உண்டு என்பது  போல, உயர்ந்தோரின் இயல்பை உணர்த்த மாற்றோரின் இருப்புத் தேவையான ஒன்றே! எல்லோருமே தரத்தால் உயர வேண்டும் என்பதுதான் குறிக்கோள். அதுவே படைப்பின் சிகரமாகவும் இருக்கும் என்றாலும்,அது அவரவர் தகுதி, தன்னை உயர்த்திக் கொள்ள அவர்கள் கொள்ளும் முயற்சி இவற்றைச் சார்ந்தே இருக்கும். சுய பரிசோதனையும், குற்றங்காணில் திருந்தும் உறுதியும்  ஒவ்வொருவருக்கும் ஏற்படும் வரை, இந்த ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்யும்! அதுவரை  இந்த நுட்பத்தை உணர்ந்தவர்கள், அமைதி காத்து வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை!

திருமதி சிமோன்

விதி மாற்றும் இயற்கை

                                                            

உயிரினங்கள் வாழ இன்னின்ன அடிப்படைத் தன்மைகள் வேண்டும் என்பது பொதுவான ஒரு விதி. ஆனால் நாம் நினைக்கின்றத் தன்மைகள் அல்லாமல்  வேறுபட்ட நிலையினைக் கொண்டிருக்கின்ற பல உயிர்களை இயற்கை உற்பத்தி செய்து கொண்டுதான் இருக்கிறது. அவற்றில் சில வேண்டுமானால்  பிழைபட்டப் படைப்புகளாய் இருக்கலாம். பெரும்பாலானவை இயற்கையின் விசித்திரங்களே! அவற்றில் ஒரு சில:

1. பாம்பு நாக்கு மூலம் வாசனையை உணர்கிறது.
2. கரப்பான் தலைத் துண்டிக்கப்பட்டு ஒன்பது நாட்கள் வரை வாழ இயலும்.
3. பட்டாம்பூச்சி கால்களால் உணவை ருசிக்கிறது.
4. பூச்சிகளின் ரத்தம் மஞ்சள் நிறமுடையது.
5. பச்சோந்தியின் நாக்கு அதன் உடலை விட இரண்டு மடங்கு உடையது.
6. முதலை 300 ஆண்டுகள் கூட வாழும்.
7. பூனையின் பார்வை மனிதனை விட எட்டு மடங்கு கூர்மையானது.
8. ஒட்டகம் ஒரு கிலோமீட்டர் அப்பாலுள்ள நீரையும் கண்டுகொள்ளும்.
9. கரையான் ஒரு நாளில் 30,000 முட்டைகள் இடும்.
10.நத்தைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரைத் துயில் கொள்ள முடியும்.
11.மரங்கொத்தி ஒரு நொடியில் 20 முறைத் தொடர்ந்து கொத்த முடியும்.
12.பனிக்கரடிகள் இடக்கை வழக்கமுள்ளவை .
13.முதலைகளால் நாக்கை நீட்ட முடியாது.
14.பூனை, ஒட்டகம், ஒட்டகச் சிவிங்கி போன்றவை வலது-வலது, இடது-இடது   
     கால்கள் என நடக்கும்.
15.காண்டா மிருகக் கொம்புகள் கடினமான மயிரிழைகளால் ஆனவை.
16.அனப்லஸ் என்ற மீனுக்கு 2 கண்களில் 4 விழித்திரைகள் உண்டு.
17.உண்ணி பனிக்கட்டியில் ஓராண்டுக்கு மேல் உறைந்திருந்து, பனிக் கரைந்த 
     பின் வெளி வந்து நடமாடும்.
18.கடும் வெப்பத்தில் நீர் யானை உடலில் இளஞ்சிவப்புத் திரவம் ஒன்று சுரந்து 
     குளிர்ச்சி தரும்.

மனித உடலிலும் இது போன்றத் தனிப்பட்ட சிறப்புகள் பல உள்ளன:

1. கண்களைத் திறந்துகொண்டு தும்ப முடியாது. தும்பும்போது இதயம் ஓர்
     மில்லி செகண்ட் நின்று பின் இயங்குகிறது.
2.மனிதக் காதுகள் 130 டெசிபெல் அளவு இரைச்சலைத்தான்
   பொறுத்துக்கொள்ள முடியும்.
3.முடியில் நரம்புகள் இல்லாதக் காரணத்தால் வெட்டும்போது       
     வலிப்பதில்லை.
4.உடலை அமைதிப்படுத்த, மூளை 11 வகை ரசாயனங்களை உடலெங்கும் 
    அனுப்புகிறது.
5.அழுவதைவிடச் சிரிக்கும்போது குறைவானத்  தசைகளையே பயன் 
    படுத்துகிறோம்.
6. கைரேகை போல நாக்கு ரேகைகளும் வெவ்வேறு வகையாக உள்ளன.
7. மனித விழிகள் பிறந்ததிலிருந்து வளர்வதில்லை.
8. சராசரி மனித விழி 200° வரைத் திரும்பும்.
9. குழந்தைகள் 6 மாதம் வரை மூச்சு விட்ட வண்ணம் உணவை 
    விழுங்குவார்கள்.
10. பிறந்து 2 முதல் 6 வயது வரை மூட்டுகள் திடப்படுகின்றன.
11.குழந்தை பிறந்து 8 மாதங்கள் வரை அழும்போது கண்ணீர் வராது.

தொகுப்பு: திருமதி சிமோன் 

வியப்புச் செய்திகள்


                                                                 


பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனைவிட ஐக்யூ (நுண்ணறிவுத் திறன்) அதிகமாக இருப்பவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டனில் வசித்துவரும் நேகா ராமு எனும் 12 வயதுச் சிறுமி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் உள்ள ஒரு தனியார் அமைப்பு,  நுண்ணறிவுத் தேர்வை நடத்தியது. அந்தத் தேர்வில் நேகா, 162 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.  விஞ்ஞானி ஐன்ஸ்டீன், இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங், பில்கேட்ஸ் இவர்களின் ஐக்யூ 160 தானாம். 

நம் அனைத்து உணர்வுகள், உணர்ச்சிகள், செயல்களை உள்வாங்கி அலசி ஆராயும் மூளைக்கு உணர்ச்சி கிடையாது. வலி உணராது. மூளையில் ஏதேனும் அறுவைசிகிச்சை செய்யும்போதுகூட, நோயாளிக்கு வலி துளியும் இருக்காது.

மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே கொட்டாவிப் பழக்கம் இருந்துவருகிறது. உடல் சோர்வினாலோ, களைப்பினாலோ அல்லது தூக்கம் வரும்போதோ கொட்டாவி விடுவதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இவை மட்டும் கொட்டாவிக்கான காரணங்கள் இல்லை. நமது உடலே இயற்கையாக, அதிகமான பிராணவாயு நமக்குத் தேவைப்படும் போதோ அல்லது உள்ளே சேர்ந்திருக்கும் கரியமில வாயுவை வெளியேற்றும் போதோ கொட்டாவி விடச் செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கருவில் வளரும் 11 வார சிசுகூடக் கொட்டாவி விடுகிறதாம்.


 காதல் உணர்வு மனிதனுக்குள் பாயும்போது மூளையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்கின்றன அது மூளையின் எந்த பகுதியில் இருந்து செயல்படுகிறது? அது எப்படி செயல்படுகிறது என்பது  பெரும் புதிராகத்தான் இருந்து வந்தது.இந்த புதிரை லண்டன் பல்லைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி செமிர் ஜெகி தனது நீண்ட கால ஆராய்ச்சி மூலம் முறியடித்துள்ளார்.

மனித மூளையில் ´காதல் வங்கி´ (லவ் பேங்க்) என்ற ஒன்று அதிவேகமாகச் செயல்படுகிறது.மூளையில் உள்ள புட்டமன், இன்சுலா ஆகிய பகுதிகள்தான் காதல் வங்கி என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏற்படும் ரசாயன மாற்றம்தான் ஆண்-பெண் ஜோடிகளை காதல் வானில் சிறகடித்து பறக்க வைக்கிறது. காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது, பாராட்டும் போது, பரிசு கொடுத்து வாழ்த்தும் சமயங்களில்… காதல் வங்கியில் சேமிப்பு பல மடங்கு அதிகமாகிறது. அப்பொழுது  மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். படபடப்பு, டென்ஷன், கவலைகள் மாயமாகும். வாழ்க்கையில் எத்தகைய தோல்விகள் வந்தாலும் அதை தைரியமுடன் எதிர் கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து தடைகளை அடித்து நொறுக்கும் அனாயச துணிச்சல் கிடைக்கும். இந்த மாதிரியான காதலர்கள் கடைசி வரை பிரியமாட்டார்கள்.காதல் வங்கியில் சேமிப்பு அதிகமாக இருக்கும் தம்பதிகளின் வாழ்க்கை வெற்றி நடைபோடுகிறது.

காதல் ஜோடிகள் ஒருவரை ஒருவர் வெறுக்கும் போதும்,திட்டிக்கொண்டிருக்கும் போதும், சந்தேகப்படும் சமயங்களிலும் காதல் வங்கியில் சேமிப்பு மெல்ல மெல்ல குறைந்து விடும். இந்த சேமிப்பு முற்றிலும் குறைந்து பூஜ்ஜிய நிலையை எட்டும்போது… காதல் வங்கியானது வெறுப்பு வங்கியாக மாறி விடுகிறது.இந்த´வெறுப்பு வங்கி´ மனித மூளையில் செயல்படும்போதுதான் ஒருவித பயம், நடுக்கம், கவலை, படபடப்பு போன்றவை ஏற்படுகிறது. வெறுப்பு வங்கி ஒரு மனிதனிடம் தொடர்ந்து செயல்பட்டால் மனநிலை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும் பேராபத்து உள்ளது.காதல் வங்கியில் ´பூஜ்ஜியம்´ இருப்பு உள்ளவர்களின் வாழ்க்கை சீரழிகிறது. கடைசியில் விவகாரத்தில் போய் முடிகிறது.


சந்தன மரம் தனித்து வளராது. நீர், தாது உப்புக்களைத் தானாக பூமியில் இருந்து உறிஞ்சாது.தன்னை அடுத்துள்ள மரங்களில் தன்னுடைய வேரை ஊடுருவச் செய்து அவற்றிலிருந்து சத்துக்களைத் திருடிக்கொள்ளும். இது ஒரு ஒட்டுண்ணி மரம்.இந்த மரத்தின் அருகில் சென்றால் எந்தவிதமான வாசனையும் வராது.முதிர்ந்த மரங்களின் தண்டுப் பகுதியை அறுக்கும்போதுதான் வாசம் வெளிவரும்.

விலங்குகளில் ஊமையானது ஒட்டகச்சிவிங்கி .இதனால் சாதாரண ஒலியைக்கூட எழுப்பமுடியாது.

மீன்களுக்கு உமிழ்நீர் சுரப்பிகள் கிடையாது.


தொகுப்பு: லூசியா லெபோ

கவிதைப் புதிர்

                                                         

இந்த மாதம் 08/06/2013அன்று நடந்த "மகளிர் விழா" அனைவரின் ஒத்துழைப்புடன்  வெற்றிகரமாக நடந்தேறியது. பலரின் பாராட்டினைப் பெற்ற விழாவில், மக்களையும் பதில் தேடத் தூண்டிய 'கவிதைக் கேள்வி-பதில்' கீழே.கம்பன் கழக மகளிரணித் துணைத் தலைவி (திருமதி சரோசா தேவராசு) வினாத் தொடுக்க, கழகப் பொருளாளர் (திரு தணிகா சமரசம்) விடை பகர் கிறார்.


கேள்வி 1 :


இருபாலின் கூட்டுறவில் இன்னுயிர்கள் தோன்றி
உருவான பூவுலகில் உள்ளதிணையி ரண்டாம்!
இருபாலின் கூறுகளும் எண்ணரிய பண்பும்
இருதிணைக்கு மொத்தாலும் எந்தமுரண் பாட்டில்
அருமையென அல்திணையில் ஆணினமும், ஓங்கிப்
பெருகும் உயர்திணையில் பெண்ணினமும் காணும்
ஒருபெரும் உண்மையாம் ஒற்றுமையை ஆய்ந்தே
விருந்தாகத் தந்திடுக வெல்லுதமிழ்ப் பாட்டால்!


பதில் :


முன்னித் தமிழை முறையாய்ப் பயிலாமல்,
எண்ணம் மழுங்கி, எழுத்துத் தடம்மாறச்
சின்னக் கவியும் செதுக்க இயலாமல்,
என்னை யறிந்தோர் எதிரில் நிலைமாறக்
கண்ணும் கலங்கக் கவலை கறைமீற,
என்னுள் துளிர்த்த எளிமை நடைகொண்டு
என்னைக் குழப்பும் இவர்பா பதிலென்று
மண்ணின் மனிதர் மயங்கும் அழகென்பேன்!


கேள்வி 2.


உள்ளத்தைத் தெளிவாக்கும்! உலகைக் காட்டும்!
உயர்வான சிந்தனையை உரக்கத் தூண்டும்!
அள்ளித்தான் பருகிடவே ஆற்றல் கூட்டும்!
ஆன்றோரின் மொழிபேசும்! அறிவைக் காக்கும்!
பள்ளத்தில் பாய்ந்துவரும் வெள்ளம் போலே,
பல்சுவையின் விருந்தாகிப் பரிம ளிக்கும்!
இல்லத்தில் ஒளியூட்டும் விளக்காய் மின்னும்!
இணையதளம் வரும்வரையில் இருந்தார் யாரோ?


பதில் :


எழுத்தினால் சித்திரங்கள் செதுக்கி வைத்து,
ஏடுகளில் வரிவரியாய் அடுக்கி வைப்பர்;
விழித்தவுடன் மாணவர்கள் பள்ளி செல்ல
வீதியெங்கும் சுமந்துகொண்டு விரைந்து செல்வர்;
பகுத்தறிவு பெற்றவரும் தேடிச் சென்றுப்
பயனுடைய செய்திகளைப் படிப்பர்; காலம்
அழித்தவைகள் இவ்வுலகில் கோடி! என்றும்
அறிவுபெற வழிகாட்டும்! வாழும் நூல்கள்!


கேள்வி 3.


காலத்தால் முந்தியதும், கலைபலவும்
போற்றியதும், கல்வி கேள்வி
சீலத்தால் உயர்ந்ததுவும், செம்மொழியால்
சிறந்ததுவும், செல்வம் ஓங்கி,
ஞாலத்தில் புகழ்கொண்ட நந்தமிழர்
குலப்பெருமை, நாளும் மெல்ல
மூலத்தை மறப்பதுவும், முன்னேறத்
தவிப்பதுவும் முறையோ? சொல்வீர்


பதில் :


ஞாலம் முழுதும் ஆய்ந்தாலும்
நடக்கும் உலக வாழ்வினிலே
சீலம் தேடி அலைந்தோமால்
சிரிப்பார் மக்கள் வெகுளியென!
மூலம் காணத் துடிக்காமல்,
முடிந்த வாழ்வை நினைக்காமல்
காலம் செல்லும் வழிதனிலே
கருத்தைக் கேட்டால் பதில்சொல்வேன்!


"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்" என்றார் பாரதியார். அதனைச் சிரமேற்கொண்டு மகளிரணியின் உறுப்பினர் (திருமதி குமுதா சௌரிராசன்) மொழி பெயர்த்தக் கவிதை:

Victor Hugo (1802-1885)

Demain dès l'aube.

Demain, dès l'aube, à l'heure où blanchit la campagne,
Je partirai. Vois-tu, je sais que tu m'attends.
J'irai par la forêt, j'irai par la montagne.
Je ne puis demeurer loin de toi plus longtemps.

Je marcherai les yeux fixés sur mes pensées,
Sans rien voir au dehors, sans entendre aucun bruit,
Seul, inconnu, le dos courbé, les mains croisées,
Triste, et le jour pour moi sera comme la nuit.

Je ne regarderai ni l'or du soir qui tombe,
Ni les voiles au loin descendant vers Harfleur,
Et quand j'arriverai, je mettrai sur ta tombe
Un bouquet de houx vert et de bruyère en fleur.


   நாளை விடியலில்

நாளைக்  காலை விடியலிலே
   நன்றே ஒளிரும் வயல்வழியே
சாலை தனிலே தொடங்குகின்றேன்
   சற்றும் நில்லா என்பயணம்!
வேளை முழுதும் எனக்கெனவே
   வேண்டிக் காத்து நின்றிருப்பாய்
சோலை, மலையும் தாண்டியுன்னைச்
   சேர வேண்டி வருகின்றேன்!

என்னால் தாளாக் காலமெல்லாம்,
   இனியும் இருக்கும் தொலைதூரம்!
என்னில் மூழ்கி நான்நடப்பேன்!
   எந்தன் கண்ணில் பதியாமல்
ஒன்றும் ஒலியும் சூழாமல்
    உறவும் இன்றித் தனிமையிலே
நன்றாம் ஒருநாள் வருமென்றே
   நடப்பேன் சோர்ந்தே சோகமதில்!

மெல்ல மறையும் மாலையதை
   மேலே அசையும் பாய்மரத்தால்
வல்ல ஹார்ப்ளர் கப்பலதை
   மீண்டும் காண மனமில்லை!
கல்லால் ஆன அறைதனையே
   கடுகி நானும் அடைகையிலே
நல்கும் மணத்தை இதழ்பரப்பும்


   நற்பூக் கொண்டே உனைநிறைப்பேன்!

மருத நாயகம் -தொடர்ச்சி

  
images.jpg

ஆற்காடு நவாபுக்கு மட்டுமல்ல… உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்ட கையோடு,போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டிய சமயம் வந்ததை உணர்ந்து 1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது,கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியுடன்,பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் சேர்த்து தன் கோட்டையில் பறக்கவிட்டதன் மூலம் எதிரிக்கு எதிரி நண்பன்!என்ற முறையில் பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக தக்காணத்தை ஆண்ட நிஜாம் அலிமருதநாயகத்தை தனது கவர்னராக அங்கீகரிக்க இது ஆற்காடு நவாபையும்,ஆங்கிலேயருக்கும் திகைப்பை ஏற்படுத்தியது.
புயல் உருவானது! போர் மேகங்கள் சூழ்ந்தன!
 இருதரப்பும் தங்கள் ஆதரவு பலத்தை பெருக்க திட்டங்களை வகுத்து அதன்படி குறுநில மன்னர்களை வளைக்க  மருதநாயகத்துக்கு சவால் சிவகங்கையிலிருந்து உருவானது. மருதநாயகத்திற்கு கட்டுப்பட சிவகங்கை சமஸ்தானம் மறுத்தது. சிவகங்கை, திருபுவனம், பார்த்திபனூர் ஆகியவை தனக்குட்பட்டவை என்ற மருதநாயகத்தின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது, சிவகங்கையின் மன்னராக முத்து வடுகையர் இருந்தாலும், அவரை இயக்கி மறைமுக நிர்வாகியாக இருந்தவன் தாண்டவராயன் என்பவன்!  ஆற்காடு நவாபுக்கும், மருதநாயகத்திற்கும் இடையேயிருந்த பூசலை பயன்படுத்திக் கொண்டு, ஆற்காடு நவாபின் உதவியை பெற்றான்.
சிவகங்கை மன்னர் முத்துவடுகையர், தனது தளபதி தாண்டவராயனிடம், பேசாமல் மருதநாயத்திடம் அவர் விரும்பும் பகுதிகளை கொடுத்து விடுவோம்! என்று கூற தாண்டவராயன் திருபுவனத்தில் ஆட்சியாளராக இருந்த தாமோதரனையும் சேர்த்து கொண்டு கூட்டணி சேர, கோபத்தின் உச்சிக்கு சென்ற  மருதநாயகம் திருபுவனத்தையும், பார்த்திபனூரையும் தாக்கினார். சிவகங்கை அரண்மனைக்கு தீவைத்தார். நிலைமை முற்றுவதை அறிந்த சிவகங்கை மன்னர் முத்துவடுகையர் குலை நடுங்கி ஆற்காடு நவாபிடம் உதவி கோர, ஆற்காடு நவாபின் வேண்டுகோளை ஏற்று, ஆங்கிலேயப்படை திருபுவனம் வந்தது. மருதநாயகத்தின் அதிரடி யுத்தத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத அவர்கள் ஓடி ஒளிந்தனர். அடுத்தடுத்து இரண்டு போர்களிலும் மருதநாயகம் வென்று திகிலூட்டினார். நிமிர்ந்து உட்கார்ந்தனர் ஆங்கிலேய தளபதிகள்! விழிகள் மிரள யோசித்தனர்.
ஆங்கிலேயப் படைக்கு தலைமையேற்ற பிரஸ்ட்டன் திணறினார். அவரும், கான்சாஹிபும்(மருதநாயகம்) முன்னாள் நண்பர்கள்! அதனால் மருதநாயகத்தின் வீரமும்,குணமும், சினமும் தெரியும்! அவர் பயந்தபடியே  மூலக்கரை கொத்தளம் அருகே நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வாள் முனையில் நூற்றுக்கணக்கானோரை சீவித் தள்ளினார் மருதநாயகம்! உடைந்த வாள்களும் வீரம் பேசின!  ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன் சுடப்பட்டு படுகாயப்பட்டு பின்னர் உயிர் துறந்தார்.
பிரஸ்ட்டனை பெரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நிலை குலைந்தார். மருதநாயகம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடும் செய்தியும், அதன் வெற்றிகளும் மைசூர்மன்னர் ஹைதர் அலிக்கு எட்டியது. அவர் பழைய பகையை மறந்து மண்ணுரிமை போரில், தனது நிலைக்கு மருதநாயகம் வந்ததை வரவேற்று வாழ்த்து செய்தி அனுப்பினார்.
ஆற்காடு நவாபுக்கு பயம் வட்ட துவங்க  சிவகங்கை சீமையின் நரியான தாண்டவராயன் ஆற்காடு நவாபுக்கு,மருதநாயகத்தை போரினால் வெல்லமுடியாது,தந்திரம் தான் ஒரே தீர்வு என்று கூறிதுரோகிகளை விலை பேசினான்!
இறுதியாக மதுரையில் மருதநாயகத்தின் கோட்டை நாலாயிரம் வீரர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிரடி1763 பிப்ரவரி மாதம் மருதநாயகம் ஆங்கிலேயர்களின் கொடியை தனது பீரங்கி வாயிலில் வைத்து வெடித்து சிதற செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். தொடங்கியது 'மதுரை போர்'!
மதுரை போர் உக்கிரமடைந்தது! நாட்கள் பல கடந்து, வாரங்களாக நீடித்தது முற்றுகை! மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டு, உணவு, ஆயுதங்கள், மருந்துகள் என காக்கா, குருவி கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. மருதநாயகம் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஆங்கிலேயர்கள் தூது அனுப்ப, மண்டியிட மாட்டேன் என்றார் மாவீரன் மருதநாயகம்.
ஆங்கிலேயர்கள் அணியில் இருந்த இந்தியப்படையினர் போரில் ஈடுபடுவது குறித்து குழம்பிக் கொண்டிருக்க, இந்திய வீரர்களின் குழப்பத்தை பயன்படுத்தி மருதநாயகம் நடத்திய தாக்குதலில் பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர்.படு தோல்வியடைந்தது ஆங்கிலேயப்படை. வைகை நதி சிவந்தது! போர் தற்காலிகமாக நின்றது.
கோட்டையில் மருதநாயத்துக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படை தளபதிகளும் உறுதியோடு நின்றார்கள். அவர்களில் ஒருவர் மார்ச்சந்! அவருக்கும் மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. எனினும் அவரே சிறந்த தளபதி என்பதை உணர்ந்த மருதநாயகம் அவருக்கு முன்னுரிமை கொடுத்தார்.ஒருவாரம் கழித்து 15.09.1763ல் மீண்டும் போரை தொடங்கினர் ஆங்கிலேயர். அப்போதும் தோல்வி.
இறுதி யுத்தம்
தங்கள் படையை பலப்படுத்தி 31.01.1764 ல் மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு ஆங்கிலேய அதிரடிப் படையுடன் ஆங்கிலேயர்கள் மீண்டும் மதுரைக்கு வந்தனர். இவர்கள் தொண்டி துறைமுகத்தில் இறங்கினர். மதுரையை சுற்றியிருந்த குட்டி, குட்டி அரசுகளான பாளையக்காரர்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் வளைக்கஆங்கிலேயர்களையும், ஆற்காட் நவாபையும் ஆதரிப்பவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்வதற்கு சமம் என்றும், தனக்கு பாளையக் காரர்கள் சிற்றரசர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கடிதம் மருதநாயகத்தால் அனுப்பப்பட்டது,
"நானும், நீயும் வேறல்ல. நமது படையும், நாடும் வேறல்ல" என்று சகோதர உணர்வோடு ஹைதர் அலி கடிதம் எழுதி தனது ஆதரவை வழங்கினார். (நன்றி : C. Hayavadana Rao, History of Mysore)
பிப்ரவரி 1764ல் ஹைதர் அலி, சுலைமான் என்ற தளபதியின் கீழ் ஒரு பெரும்படையை மருதநாயகத்துக்காக அனுப்பி வைத்தார். போதாக் குறைக்கு 19.02.1764ல் பிரெஞ்சுப் படைகளும் வந்து சேர்ந்தது.
உற்சாகத்தின் உச்சிக்குப்போன மருதநாயகம்,போருக்கு ஆயத்தமானார். அவரது நிலப்பரப்பின் முக்கிய எல்லைகளில் படைகள் முன்னிறுத்தப்பட்டது. வடக்கே நத்தம், தெற்கே பாளையங்கோட்டை பகுதிகளில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், அகழிகள், மணல் மேடுகள் என தற்காப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
மீண்டும், மீண்டும் ஆங்கிலேயர்கள் சளைக்காமல் மதுரையை குறிவைத்து போரிட்டனர். நவீன ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தனர். 1764 ஜூன் மாதம் தொடர்ந்து நடைபெற்ற போரில் ஆங்கிலப்படை தோல்வியை சந்தித்தது. ஆங்கிலேயர்கள் புறமுதுகிட்டு ஓடியதோடு, சமாதானக் கொடியையும் ஏற்றினர். செய்தி கேட்டு அலறினார் ஆற்காட் நவாப்!
அதே நேரம் மதுரை மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டதாலும், போரினால் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவினாலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. கோட்டையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அது மருதநாயகத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியது.
போரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும், வஞ்சகங்களையும் கையாண்டனர்.
சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் மூலம்கான்சாஹிபின் அமைச்சர்களில் ஒருவரான பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர். மேலும் சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.
மருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் இவர்களிடம் அவதூறு கூறப்பட்டது. அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப் மருதநாய கத்தை பிடித்துக் கொடுத்தால், பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரம் நடந்தது. திட்டம் தயாரானது.
அது ரமலான் மாதம் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். 13.10.1764 அன்று கோட்டைக்குள் தனியறையில் அவர் தொழுதுக் கொண்டிருந்த போது துரோகிகள் நுழைய, தனது நம்பிக்கைக்குரியவர்கள் என்பதால் அவர் தயார் நிலையில் இல்லை. அவர்கள் பாய்ந்து மருதநாயகத்தை அமுக்கி பிடித்தனர். அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொழுத நிலையில் இருந்த மருதநாயகத்தை சிறைபிடித்தனர்.
அந்த மாவீரன் அப்போது நம்பிக்கை துரோகிகளின் முகத்தை பார்த்து "என்னை கொன்று விடுங்கள், எதிரிகளிடம் ஒப்படைத்து விடாதீர்கள்" என்று கூற  எதிரிகளிடம் அடிமைப்படுவதை, அவர் அப்போதும் விரும்பவில்லை. ஆம். மாவீரர்கள் மண்டியிடுவதில்லை! 700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி, ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி! அவரது மகனும், மனைவியும் திருச்சி சிறையில் பூட்டப்பட்டனர். அடுத்தநாள் மதுரை கோட்டையில் ஆற்காடு நவாபின் கொடி ஏற்றப்பட்டது.
சிறைபிடிக்கப்பட்ட மருதநாயகத்தை சித்ரவதைப் படுத்தி ஆற்காடு நவாபை பார்த்து தலை வணங்க சொல்ல முடியாது என மறுத்தார் மருதநாயகம்! உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி! ஆனாலும் மானமும், வீரமும் அவருக்கு உரமேற்றின.
மருதநாயகத்துக்கு என்ன தண்டனை? என விவாதிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், கோபமடைந்த ஆற்காடு நவாப் அவரை தூக்கிலிடுங்கள் அல்லது என்னை கொல்லுங்கள் என குரல் கொடுத்தார். ஆங்கிலெயர்களிடம் இருந்த நேர்மை, இரக்கம், கூட ஆற்காடு நவாபிடம் இல்லை. வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் வரலாற்று பெருவீரனை தூக்கிலிட ஆணையிட்டனர்.
15.10.1764 இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்! அன்று மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கிலிட கொண்டுவரப்பட்டார், மருதநாயகம். அவர் அப்போதும் கலங்கவில்லை. அந்த காட்சிகளை வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கும்போது, 2007ல் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட காட்சிகள் நம் மனதில் நிழலாடுகின்றன.
மருதநாயத்தின் முகத்தில் பயம் இல்லை. விழிகளில் கலக்கமில்லை. தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்துறக்கிறோம் என்ற பெருமிதம் தெரிந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் பூரிக்கின்றன.
தூக்கிலிடப்பட்டதும் அவர் மரணிக்கவில்லை. மாறாக கயிறு அறுந்து விழுந்தது! அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும், வீரத்தனமும் அல்லவா கலந்திருந்தது! எனவே, எடை தாங்கவில்லை!
புதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டார், அப்போதும் உயிர் பிரியவில்லை. "நான் யோகாசனம் பயின்றவன். கழுத்தை உப்ப வைத்து, பல மணிநேரம் மூச்சை அடக்கும் ஆற்றல் கொண்டவன்" என்று தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம். எதிரிகள் குலை நடுங்கினர்.
இறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடு துயரில் மூழ்கியது! அன்று இரவு சில ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாகவும் செய்தி பரவியது. அதன் பிறகு எங்கே; மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர்.
தலை, கால், கை என பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட அவர் உடல் பல்வேறு ஊர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது. ஆம், செத்த பிறகும் மருதநாயகத்தின் உடலை கண்டு ஆங்கிலேயர்களும், துரோகி ஆற்காடு நவாப் முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர். வெட்டப்பட்ட உடல்களை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளனர்!
அவரது உடலின் ஒரு பாகம் மதுரையருகே அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இப்போதும் அவர் நினைவிடம் உள்ளது. அவரது தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், இன்னொரு கை பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், இன்னொரு கால் பாளையங்கோட்டையிலும், உடல் மதுரையிலும் அடக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டாண்டுகள் ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்தவன், உயிர்தியாகியாகி  மீள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்தான்…! தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா? நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறதே?
மறை(ற)க்கப்பட்ட மாவீரன் மருதநாயகத்தின் சரிதம் நிறைவடைந்தது.
அப்துல் தயுப்.