பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 avril 2012

எண்ணப் பரிமாற்றம்அன்புடையீர்,

வணக்கம். காலங் காலமாய் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே கவலைப் பட்டு வந்த மனித இனம், தற்போது தன்னையும், தான் வாழுகின்ற பூமியையும் காப்பாற்றுவது எப்படி என்று கவலைப்படும் நாள் வந்து விட்டது ! 

சுய நலத்தின் உச்சத்தில், தூய்மையைப் பற்றிச் சிறிதும் எண்ணாது வாழ்ந்து வந்த நாம், நமக்காகவேனும் சுற்றுச் சூழலைக் கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்காளாகி விட்டோம்.

நமது வீட்டைக் கூட்டி, பக்கத்து வீட்டருகே குப்பையை திரட்டி வைத்த வழக்கம் இன்னும் போகவில்லை.(வளர்ந்த நாடுகளும் தங்கள் கழிவுகளை ஏதோ ஒரு போர்வையில் வளரும் நாடுகள் தலையில் கொட்டுகின்றன) சுகாதாரத்தைப் பேணுவது தினம் குளித்து சுத்தமான உடை உடுத்துவதோடு முடிந்துவிடுவதில்லை. நாம் போகுமிடமெல்லாம் சுத்தம் நம்மைத் தொடர வேண்டும். நம் ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம் அங்கேதான் இருக்கிறது.

பெருகி வரும் நோய்க்கிருமிகள் இப்போது சாதாரண மருந்துகளுக்கெல்லாம் பயந்து ஓடுவதில்லை ! புதுப் புது வியாதிகள். அவற்றோடு போட்டியிட இயலாமல் கூட்டம் கூட்டமாய் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.

கடவுளுக்கு அடுத்து மருத்துவரை உயிர் கொடுக்கும் தெய்வமாக நினைத்த காலம் மலையேறி விட்டது.பொது மக்களுக்கு, நோய்-மருந்து பற்றிய அறிவு அதிகப்பட்டு விட்டது, எல்லோருக்கும் எல்லாம் தெரிந்து விட்டதனால் மருத்துவர் பால் மதிப்பு போய்விட்டது என்று முழுக்க முழுக்கச் சொல்வதற்கில்லை!என்னதான் வைத்திய வசதிகள் முன்னேறி, பெருகி இருந்த போதிலும் பெரும்பாலான மருத்துவர்களின் குறிக்கோள் பணமும், புகழுமாக மாறி விட்டது வருத்தத்திற் குரியதே! புனித சேவை எனபது மாறி, வருமானத்துக்கு வழிவகுக்கும் தொழிலாகி விட்டது மருத்துவம்.

ஒரு மருத்துவத் தம்பதி, தங்கள் பதினைந்து வயதுச் சிறுவன், உலகிலேயே மிகக் குறைந்த வயது சர்ஜென் என்றுகின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டுமென அவனைத் தங்கள் மருத்துவமனையில் சிசேரியன் செய்ய வைத்தார்கள் என்றால், புகழ் போதை எந்த அளவு போக வைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அறுவை சிகிச்சையின்போது கத்தரிக் கோலையோ, பஞ்சையோ உடலுக்குள் வைத்துவிட்ட செய்திகள் ஏராளம். தவறான மருந்தைக் கொடுத்து, நோயாளியின் வேதனையைக் குறைப்பதற்குப் பதிலாக, மற்றுமொரு வியாதியையோ அல்லது ஆபத்தையோ வரவழைக்கும் மருத்துவர்களை எங்கும் சந்திக்கிறோம்.

நோயாளியின் சிரமங்களைக் கேட்டறிந்து, தனிப்பட்ட அவரது பழக்க வழக்கங்கள், பரம்பரை, அவருடைய சூழல் எல்லவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து அளிக்கும் வைத்தியமே பலன் அளிக்கும். இப்போதைய மருத்துவர்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருப்பதில்லை. வரிசையாக அமர்ந்திருப்போரின் பட்டியலில், அந்த நேரத்தில் ஊரில் பரவியிருக்கும் கிருமியால் வந்திருக்கும் நோயைச் சார்ந்த அறிகுறிகள் தென்பட்டால், அதற்கு கணணி காட்டும் மருந்துகளை எழுதிக் கொடுப்போரே அதிகம். நோய் சடுதியில் தீர்வதும், நீடிப்பதும், வியாதியே வேறாக இருப்பதும் அவரவர் தலையெழுத்தைப் பொறுத்தது !

இந்தப் பிரச்சனைகளிலெல்லாம் மாட்டிக்கொள்ளாமல் நாட்களை நல்ல முறையில் நடமாட்டத்தோடு கழிக்க வேண்டுமென்றால் வருமுன் காப்பதே நல்லது. அதற்கு சுத்தமான பழக்கங்களும், சுகாதாரமான சூழ்நிலையும், எளிய உடற்பயிற்சியும், கொஞ்சமாக இருந்தாலும் சத்தான உணவும், தூய மனமும் இருந்தால் போதும். பரம்பரை நோய்களும், நம்மை மீறி வரும் வியாதிகளும் கூட ஓரளவே நம்மைப் பாதிக்கும். இதற்கும் மேல் இறைவன் சோதித்தே ஆக வேண்டுமென்று முடிவு செய்துவிட்டால், அதை மாற்ற எந்த மனிதனுக்கும் சக்தி இல்லை !

திருமதி சிமோன்
மருத்துவமும் வருமுன் காத்தலும்உடல் நலம் குறைந்ததும் மருத்துவரை நாடுகிறோம். அவர் மீது கொண்ட நம்பிக்கையால், இன்னும் சொல்லப் போனால் அவர் மருத்துவக் கல்வி மீது கொண்ட நம்பிக்கையால் அவர் கூறுவதை இம்மி அளவும் குறையாது நிறைவேற்றுகிறோம். ஆனால் சில வேளைகளில் அவரும் மனிதர்தான், அவரும் தவறக் கூடும் என்பது நிரூபணமாகிவிடுகிறது. அதற்காக அதற்கெனப் படித்தவர்களை அணுகாமலும் இருக்க முடியாது. மாறாக உடலின் செயல்பாட்டை அறிந்தால், அதன் தொடர் இயக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காரணிகளை அறிந்து களைந்தால் நோயையும் தள்ளிப் போட இயலும் - மேற்சொன்ன சூழ் நிலைகளில் கவனமாகவும் இருக்க முடியும்.

1. மூளை ஒரு நாளைக்கு பத்து லட்சம் தடவை சிந்தனைகளை முறைப்படுத்துகிறது. இதற்கு நூறு பில்லியன் நரம்பணுக்கள் உதவுகின்றன. இவற்றின் உழைப்பு பாதிக்கப்படும்போது அதன் விளைவு நோயாக உடலில் வெளிப்படுகிறது. சாதாரணமாக நரம்பணுக்கள் உணவில் கிடைக்கும் விட்டமின்களைப் பொறுத்தே வேலை செய்கின்றன. இது வரை வந்த மாத்திரைகள் அனைத்தும் மூளையின் நரம்பணுக்களை வலுப்படுத்தவே உபயோகிக்கப்படுகின்றன. எனவே முறையான உணவு மூலம் நரம்பணுக்களைச் சரிவர பராமரித்தாலே வியாதிகளினின்றும் விடுபடலாம்.

சில எளிய வழிகள்:

     ௧. மாவுச் சத்து, வைட்டமின்கள்,அமினோ அமிலங்கள், தாது உப்புகள் கொண்ட எல்லாக் கீரைகளும், பழங்களும் நல்லது.
     ௨. இனிப்பு அசிடிச்சொளைன் என்ற பொருளை மூளையில் உற்பத்தி செய்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கும். முடிந்தவரை இயற்கை இனிப்புகளை உண்பது வேறு பல சிக்கல்களைத் தடுக்கும்.
         ௩. வாரத்தில் 150 மணி நேர உடற்பயிற்சி மூளைக்குத் தேவை.
     ௪. புதிது புதிதாகக் கற்பது மூளையை சுறுசுறுப்பாக்கும். இசை கேட்பதைவிட இசைக் கருவிகள் வாசிப்பது பயனுள்ளது.
        ௫. தூக்கமின்மை நினைவாற்றலைப் பாதிக்கிறது. இதனால் அவரவருக்குத் தக்கபடி போதுமான தூக்கம் அவசியம்.

மது, புகையைத் தவிர்த்து, அதிக மாமிசத்திற்குப் பதில் மீன் சேர்த்துக் கொள்ளலாம். மஞ்சள் கரு, ஐஸ் க்ரீம் அதிகம் உண்ணாமை, தாவர எண்ணெய், தானியங்கள், கொட்டை வகைகள் போன்ற கொழுப்பு குறைந்த உணவுகள்  உடலில் தீயக் கொழுப்புச் சேரவிடாமல் காக்கும்.

2 . சோர்வு, தலை வலி ரத்தச் சோகையின் அறிகுறியாகவும் இருக்கலாம். இது சத்துக் குறைவால் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், முக்கியப் பற்றாக்குறை இரும்புச் சத்துதான். முருங்கை, பீட்ரூட், நூல்கோல்,கீரை வகைகள் பலனளிக்கும்.உரிய நேரத்தில் கவனியாவிடில்,தைராய்டு, புற்றுநோய் உண்டாகலாம்.

3 . அல்சர் எனப்படும் குடல் அழற்சி, அல்லது குடற்புண் ஓயாது பரபரப்பு அடைதல், மனக் கவலை கொள்ளல், அதிக கார, மசாலா உண்ணல் மூலம் ஏற்படலாம். ஹெலிக்கோ பாட்டர் பைலோரி எனும் நுண்கிருமி நீர் அல்லது உணவு மூலம் வயிற்றில் தங்குவதாலும் உண்டாகலாம். இரைப்பையில் சுரக்கும் சீரண அமிலம் அதிகமாகி, சிறு குடலை அடையும் போதுஅங்கே அல்சர்வரும். புகை பிடிப்பது, தலை வலி, மூட்டுவலி மாத்திரைகளை நாட்கணக்கில் சாப்பிடுவதும் அல்சரை வரவழைக்கலாம். மாத்திரைகளை அளவு (dose) மீறி எடுத்துக் கொள்ளும்போது, அது வயிற்றை அடைந்த மாத்திரத்தில் அந்த இடத்தை புண்ணாக்கிவிடலாம்.


சாப்பிடும் நேரத்தில் வயிற்று வலி வருவது அல்சரின் அறிகுறி. நாட்பட்ட அல்சர் இரைப்பை-குடல் சேருமிடத்தில் அடைப்பை ஏற்படுத்தி, சாப்பிட்டது வாந்தியாக வெளி வந்து விடும். அல்சர் உள்ள இடத்தில் ரத்தக்குழாய் வெடித்து ரத்தக் கசிவும் ஏற்படலாம். 5 % பேருக்கு புற்று நோய் வரலாம்.

வாய்ப் புண் கிருமித் தொற்றால் ஏற்படவில்லை என்றால் அது குடல் புண்ணின் அறிகுறியாக இருக்கும். எனவே மிதமான உணவுப் பழக்கமும், அமைதியான மனநிலையும் அவசியம். வாய்ப்புண் வந்ததுமே தயிர், பழங்கள், தண்ணிச் சாறு (பருப்பு+கீரை+தேங்காய்+தக்காளி+நெய் கலந்தது) சாப்பிட சுகம் தெரியும்.

வாய்ப்புண்ணும் சரி, சாதாரணசலதோஷமும் சரி ஐந்து நாட்கள் இருக்கும். அதற்கு மேற்பட்டால்தான் அது ஏதோ வேறு ஒரு கோளாறின் வெளிப்படை என்று அர்த்தம்.

4 . உள் ஆடைகள் சுத்தமின்றி இருந்தால் அங்கே வியர்வை தங்கி அல்லது வீரியமான சோப்புக்களால் நன்றாக அலசப்படாதத் துணிகளால் எக்சமா,காளான் தொற்று, சொரியாசிஸ், வேனில் கட்டி போன்றவை ஏற்படும். ஈரம் காயாத உள்ளாடைகள் அணிவதும் தவறு. சிறு நீரகப் பாதிப்புள்ளவர், சர்க்கரை வியாதி உள்ளவர் இதில் வெகு கவனமாக இருக்க வேண்டும்.

5. தலைச் சுற்றல் - அதிகக் கொழுப்பு, ரத்த அழுத்தம், க்ளுகோஸ் சரி அளவு இல்லாதது,புகை, மதுப் பழக்கம், எய்ட்ஸ், தைராய்டு, மஞ்சள் காமாலை, வைரஸ், வைட்டமின் 'பி' குறைவு, ஹோர்மோன் குறைபாடு இவை சிறு நரம்புகளைப் பாதிக்க, ஏற்படலாம். காதில் நீர் கோர்த்தல், அழுக்கு சேரல் கூட தலையைச் சுற்ற வைக்கும். மிக்றேன் என்று சொல்லப்படும் ஒற்றைத் தலைவலி பிடிவாதக்காரர், ஓய்வில்லாதவர், நேரத்திற்கு உணவருந்தாதவர், கருத்தடை மாத்திரை உட்கொள்பவருக்குஅதிகமாக வரும். மன இறுக்கம் இன்றி, வாழ்க்கையை இலகுவாக எதிர் கொள்வது, கலகலப்பாக இருப்பதே பாதி குணம் தரும்.


6 . மூக்கின் சுவாசப்பாதையில் 'ஆல் பாக்டரிஎபிதீலியம் ' என ஒரு பகுதி.காற்று அதன் நுண்ணிய நரம்புகளில் படும்போது மணத்தை உணருகிறோம்.மூக்குப் பொடி போடுவதால், அல்லது சிமென்ட் கலந்த காற்றையே தொடர்ந்து சுவாசித்தால் பாதிப்பு ஏற்படும்.சதை வளர்ந்து அல்லது கட்டி வந்தும் பாதிக்கப்படலாம்.


7 . காதில் சுரக்கும் மெழுகு போன்ற திரவம் செவித்திறனுக்கு முக்கியம். காதைத் துடைக்க, அத்திரவத்தைத் துடைத்து எடுப்பது கூடாது. நீண்ட நேர தொலை பேசியும், இயர்போன் பாடல்களும் காதுகளுக்குத் தரப்படும் தண்டனையே ! மூக்கிலும் காதுக்குத் தொடர்புடைய நரம்பு ஒன்று உள்ளது. விரல் விட்டு அதை பழுது படுத்திவிட்டால், காது வேலை செய்யது.


8 .இருமலுக்குக் காரணம், தொண்டையில் தூசு படல், உடலுக்கு ஒவ்வாத பொருள், ஆக்சிஜன் தேவைப்படல் ஆக இருக்கலாம்.வயிற்றில் அதிக அமிலம் சுரந்து தொண்டைக்கு வருவதும் ஒரு காரணம். வாயால் சுவாசியாது இருப்பது பெரும்பாலும் நல்லது.


9 . இன்காண்டிநேன்ஸ் என்பது தும்மினால், இருமினால் சிறுநீர் வெளிப்படல். சாதாரணமாக பிரசவம் ஆன பெண்களுக்கு ஏற்படலாம். (சர்க்கரை வியாதி இருந்தால் அடிக்கடி நீர் பிரியும்.) வளர விட்டால் வாழ்நாள் பூராவும் மாத்திரை சாப்பிடவேண்டி இருக்கும். உயிர்கொல்லி அல்ல.ஸ்ட்ரெஸ் காரணமாகலாம். நரம்புத் தளர்வும், மூளைக்கும் சிறு நீரகத்திற்கும் தொடர்பின்மையும் கூடக் காரணம். பொதுவாக அதிக பட்சம் மூன்று மணி நேரத்திற்குள் சிறு நீர் கழித்து விட வேண்டும். அதிகம் அடக்கினால், பிறகு தசைகள் இறுகி, அந்த உணர்வு ஏற்படாது. அதே நேரம் சிறு நீர் உடலிலேயே நீண்ட பொழுது தங்கி இருப்பது நல்லதல்ல.


இறுதியாக உடல் நலத்துக்கு முக்கியமான ஓர் அறிவுரை: தனிமையில் இருப்பவர்களுக்கும், தானுண்டு, தன் குடும்பம் உண்டு என்று இருப்போருக்கும் அடிக்கடி சலதோஷம் பிடிக்கும். பிறரோடு கலந்து, மனம் விட்டுப் பழகி, உதவும் மனநிலை உள்ளவர்களுக்கு இருக்கும் மன நிம்மதியும், பொறுப்புணர்ச்சியும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் !திருமதி சிமோன்ஒமேகா 3


இதயநோய் அமெரிக்க ஆண்களுக்கு மிக அதிகமாகவும், கிரீன்லாந்து எக்சிமோக்களுக்கு  மிகக்குறைவாகவும் வருவதாக  ஆராய்ச்சி முடிவு ஒன்று தெரிவிக்கிறது. காரணம் இரத்தத்தில் ஒமேகா 6-இன் அளவு அமெரிக்கர்களுக்கு 80%, பிரெஞ்சுக்காரர்களுக்கு 65%, ஜப்பானியர்களுக்கு 50%, எக்சிமோக்களுக்கு 22% இருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. மாறாக ஒமேகா- 3 உடலுக்கு நன்மை பயக்கும்.
  மீன் குறைவாக உண்ணும் விவசாயியைக் காட்டிலும் மீன் அதிகமாக சாப்பிடும் மீனவருக்குப் பக்கவாதம் வரும் வாய்ப்பு 33% குறைவு என்றும் தெரிவிக்கிறது. மீன் உணவில் ஒமேகா- 3 அதிகம் உள்ளது. எனவே  நம் உணவு முறையைத் திட்டமிட இந்தக் கொழுப்பு அமிலங்கள் பற்றியும் அவை காணப்படும் உணவுகள் பற்றியும் அறிந்துகொள்வது  அவசியம்.
நம் உடல் ஆரோக்கியத்திற்குக் கார்போஹைடிரேட்(மாவுச்சத்து), புரதம், கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுப் பொருட்கள் என்னும் ஐந்து வகையான ஊட்டச்சத்துகள் தேவை.இவற்றில் முதல் மூன்றும் அதிக அளவிலும் பிந்தைய இரண்டும் சிறிய அளவிலும் தேவைப்படுகிறது.அடிப்படையாக இரண்டு வகைக் கொழுப்புகள் உள்ளன. அவை
1. நிறை செறிவுற்ற கொழுப்பு (Saturated)
பெரும்பாலும், நிறை செறிவுற்ற கொழுப்பு திட வடிவிலேயே உள்ளனஇவை விலங்குளிடமிருந்தே பெறப்படுகின்றனஇந்த நிறை செறிவுற்ற கொழுப்புகள் இரத்த நாளங்களில் எளிதாகப் படிந்து விடுகின்றன. இதனால் உயர் இரத்த அழுத்தமும் இதயத் தாக்கும் ஏற்படுகின்ற வாய்ப்பு அதிகரிக்கின்றன.
2. நிறை செறிவுறாத கொழுப்பு (Unsatuarated)
இவை  சாதாரண நிலைமைகளில் திரவப் பதார்த்தங்களாகக் காணப்படுகின்றன. இவை அநேகமாக தாவர உற்பத்திப் பொருட்களிலிருந்து கிடைப்பனவாகும். (தாவர எண்ணெய்களில் திரவ வடிவிலே இருக்கின்ற நிறை செறிவுறாத கொழுப்பு செயற்கை முறையில் ஹைட்ரஜனேற்றம் செய்யப்படும் போது நிறை செறிவுற்ற கொழுப்பாக மாறித் திட வடிவை அடைகிறது).மேலும்  மீனினங்களிலுள்ள எண்ணெய்களிலும் இவ்வகைக் கொழுப்பு உள்ளது.
இந்த நிறை செறிவுறாத கொழுப்புகளில்  மனித உடலுக்கு மிக அத்தியாவசியமான கொழுப்பமிலங்கள் (Essential Fatty Acids) உள்ளன - குறிப்பாக ஒமேகா-3, ஒமேகா-6 இவற்றை மனித உடலினால் தயாரித்துக்கொள்ள முடியாதென்பதால் உணவின் மூலமே இவை பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். இவை நமது  உடலைச் சிறப்பான  ஆரோக்கியநிலையில் வைத்துப் பேண உதவுகின்றன.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம்:
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இயல்பான வளர்ச்சிக்கும் உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதன என 1930 -களிலிருந்தே கருதப்பட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாகத்தான் அவற்றின்  நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதுஒமேகா- 3, இரத்தத்தின் ஒட்டும்  தன்மையைக்  குறைத்து, மீள்தன்மையை  அதிகரித்து, இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. சிறிய அடைப்பு இருந்தால்கூடஇரத்தச் சிவப்பணுக்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து  இரத்த ஓட்டம் உறுப்புகளைச் சென்றடைய உதவுகிறது.  
ஒமேகா – 3  -இன் பயன்கள்:
நரம்புகளை வலிமைப்படுத்துகிறது. கண், மூளை, செயல்பாடுகளுக்குப் பயன்படுகிறது. பக்கவாதம் வருவதைத் தடுக்கிறது.
ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் காக்கிறது. இதனால் இதய நோய்கள், மாரடைப்பு தவிர்க்கப்படுகின்றன.
மூளைச் செயல்பாடு, நினைவாற்றல், புத்திசாலித்தனம் இவற்றை வளர்க்கிறது.
மனச்சோர்வு, மற்றும்  மனநோய்களின் சிகிச்சைக்குப் பயன்படுகிறது.
ஒமேகா - 3 உள்ள உணவுகள்  :
முதன்மையானவை மீன்கள். அதுவும் சாமன் (salmon) , துனா (tuna), சர்டின் (sardine), ஹெர்ரிங் (herring), மாக்கரல் (macquerelle)  வகை மீன்களில் அதிக அளவு ஒமேகா – 3 உள்ளது. இந்த வகை மீன்களை (வறுக்காமல்) உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது.  வாரம் ஒரு முறை இந்த மீன்களை உண்டால் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 44% குறைகிறது.
ஒமேகா – 3 பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ், சோயா பீன்ஸ், வெள்ளைப்பூண்டு, பிரொக்கோலி, காலிப்ளவர், பழவகைகள், பசுமையான இலைகளுள்ள காய்கறிகளிலும் உள்ளது.  குறிப்பாக சணல் விதை எண்ணையில்  ஒமேகா – 3 செறிந்துள்ளது. பொடித்த சணல் விதைகளை 2 மேஜைக்கரண்டி சூப் () பருப்புகளுடன் கலந்து  தினமும் சாப்பிடுவது நல்லது.
ஒமேகா – 6  கொழுப்பு அமிலம்:
இதன்  குணங்கள்  ஒமேகா  - 3 க்கு எதிர்மாறானவை. இது நம் உடலில் அதிகம் இருந்தால் மூளை, இதயம் இவற்றிலுள்ள இரத்தகுழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. நம் உடலின் தோல் பாதுகாப்பு, முடி வளர்ச்சி இவற்றுக்கு இது தேவை.தானியங்கள், முட்டை, கோழி, சோள எண்ணெய், பருத்தி விதை, சூர்யகாந்தி, சோயாபின்ஸ் எண்ணெய் இவற்றில் இது உள்ளது
 
அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சாகும்  என்பதால், நம் உடலுக்குத் தேவையான அளவு அறிந்து, தினசரி உணவில் மேற்கூறிய அத்தியாவசியமான ஒமேகா  கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவை உட்கொள்வோம்.
  
தொகுப்பு:லூசியா லெபோ.

டீ டைம்ஒரு மனிதனின் செய்கை மற்றொரு மனிதனுக்கு விசித்திரமாக இருக்கலாம் என்று சொல்வார்கள். காபி, டீ விஷயத்தில் இது உண்மை என்று உணர்ந்தேன்.நான் வெளிநாட்டுக்கு வந்த புதிது- பால் கலந்து காப்பி, டீ நான் அருந்துவதைக் கண்ட என் வெள்ளைக்கார  நண்பி என்னைக் கேலி செய்தாள். நம்மூர்ப் பழக்கம் அவளுக்கு விசித்திரமாக இருந்தது. பால் சேர்த்து இவற்றைக் குடிப்பதைக் காட்டிலும் அவற்றைக் குடிக்காமல் இருப்பதே மேல் என்றும் பால் சேர்ப்பதால் குறிப்பாக டீ, தன் மருத்துவக் குணங்களை இழந்து விடுவதாகவும் கூறினாள்(எதிர்த்தாத்து மாமி தயாரிக்கும் ஸ்டிராங் டிக்காஷன் காப்பி பற்றி அவளுக்கு எப்படித் தெரியும்?)..
சென்ற ஆண்டு விடுமுறையில் நானும் என்னவரும் தாயகம் சென்றபொழுது ஒரு வாரம் கேரளா சுற்று பயணம் சென்றோம் டாக்ஸ்சியில். வழி நெடுக ஓங்கி வளர்ந்த ரப்பர் மரங்களும் பச்சை நிறக் கம்பளம் விரித்தது போன்ற தேயிலைத் தோட்டங்களும்தான். எங்கள் விருப்பத்தை அறிந்த ஓட்டுனர் எங்களை ஒரு தேயிலை தோட்டத்துக்கும் தேயிலை பதனிடும் தொழிற்சாலைக்கும் அழைத்துச் சென்றார்.அங்கு நான் தெரிந்துகொண்ட செய்திகள் என் நண்பியின் கருத்தைஉறுதிப் படுத்தின. இதுபற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.    
"மூன்று நாட்கள் உணவு கிடைக்காவிட்டால் கூடப் பரவாயில்லை, ஒரே ஒரு நாள் கூடத் தேநீர் பருகாமல் இருக்க இயலாது" என்பது சீனப் பழமொழி. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பச்சைத் தேயிலை சீனாவில் பயன்பட்டு வந்துள்ளது. இச்செய்தியை 4700 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவை ஆண்ட பேரரசர் ஷினாங், எழுதிய நூலான The Divine Farmer's Herb-Root  Classic  உறுதிப்படுத்துகிறது . பச்சைத் தேயிலையின் சிறப்புகளை பற்றி இதில்  கூறியுள்ளார். சீன மக்கள் தினமும் தேநீர் பருகும் பழக்கத்தைக் கொண்டதால், தேயிலையைப் பயிரிடத் தொடங்கினர். தற்பொழுது 35 நாடுகளில் தேயிலை பயிரிடப்பட்டாலும் இந்தியா, இந்தோனேஷியா, கொரியா, இலங்கை, நேப்பாளம், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள்தாம் முன்னணியில் உள்ளன.  பச்சைத் தேயிலை விதைகள், ஜப்பானின் புத்தத் துறவிகள் (710 - 794) சீனாவிற்கு விஜயம் செய்த பொழுது அறிமுகப்படுத்தப்பட்டன.ஜப்பானி
ன் தேயிலைத் தொழிற்சாலை, துறவி ஈசாயால் (Eisai), 1191 -இல் துவங்கப்பட்டது.
   
கமீலியா சினென்சிஸ் (camellia sinensis) என்ற பச்சைத் தேயிலைச் செடியின் மூன்று முக்கிய வகைகள் இந்தியாவிலும்  சீனாவிலும் விளைகின்றன. பச்சைத் தேயிலையில் 700 -உக்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் உள்ளன. இதில் உள்ள கேட்ச்சின்(catchins), பாலிபினால்(polyphenol), எபிகேல்லோகாட்ச்சின் கெல்லட் (EGCG) போன்றவை மருத்துவக் குணமுடையவை.மேலும் அமினோ அமிலங்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும் ஆண்டி ஆக்சிடன்ட் நிறைய உள்ளன. இந்தத் தாவரத்தின் இலைகளிலிருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. டீயில் வைட்டமின் பி, சி, ஈ, கே; பொட்டாசியம், துத்தநாகம், மாங்கனீசு ஆகியவையும் உள்ளன. கலோரி இதில் துளியும் இல்லை.  
தேயிலைகளைப் பறித்த பிறகு அவை நொதியாவதை( ferment) தடுக்க உலர்த்தப் படுகிறது. இதற்கு இயந்திரங்கள் பயன் படுத்தப்படுகின்றன.தேயிலையின் தேர்வு , தூளாக்கப்படும் முறை, தயாரிப்பு இவற்றின் அடிப்படையில் டீ வகைப்படுத்தப்படுகிறது.
 சில்வர் டிப்ஸ் டீ:
இந்த வகை டீ தயாரிக்கத் தேயிலையின் மொக்குகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மொக்குகள் வெண்மையாக வெள்ளி நிறத்தில் இருப்பதால் இப்பெயர் பெற்றது. கிரீன் டீக்கு அடுத்ததாக இதில் தேயிலையின் சத்துக்கள் மிகுதியாக உள்ளன. சுவை மிக்கது.
 கிரீன் டீ:
தேயிலைச் செடியின் முதல் இரண்டு துளிர் இலைகளும் அவற்றுடன் இணைந்த மொக்கும் பறிக்கப்பட்டு, தயாரிக்கப்படும் டீ இது. பச்சைத் தேயிலை ஃபெர்மெண்டேஷன் செய்யாமல் காய வைக்கப்படுகின்றது. இதனால் தேயிலையின் இயற்கையான தன்மை, நிறம் பாதுகாக்கப்படுகின்றன. தேயிலையில் உள்ள பெரும்பாலான சத்துக்கள் இதில் இருக்கின்றன. இது சிறிது துவர்ப்பாக இருக்கும். 
டஸ்ட் டீ:
துளிர், மொக்குகள் தவிர்த்து ஏனைய இலைகளைப் பறித்து இயந்திரத்தில் பக்குவப்படுத்தி இந்த டீத்தூள் தயாரிக்கப்படுகிறது.தேயிலை சுமார் ஒன்றரை மணி நேரம் முழுமையாக ஆக்சிடேஷன் செயப்படுவதால் பச்சை நிறத்தில் இருக்கும் தேயிலை பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும்.பெரும்பாலானவர்கள் அருந்தும் டீ இது.இதில் காபீன் அதிகமாக இருக்கும். இதனால் இந்த டீ குடித்ததும் புத்துணர்வு தூண்டப்படும். இதில் கலப்படம் அதிகம் அதனால் பல்லில் கறை படுவது போன்ற பல நோய்கள் வர வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கிறார்கள்.அனைத்துச் சத்துக்களும் க்ரீன் டீயில் அதிகபட்ச அளவிலும் டஸ்ட் டீயில் குறைந்தபட்ச அளவிலும் உள்ளன.
ஒலாங் டீ :
கிரீன் டீ போன்று முதல் இரண்டு துளிர் இலைகளும் அவற்றுடன் இணைந்த மொக்கும் பறிக்கப்பட்டு, குளிர்ந்த காற்றும் வெப்பக் காற்றும் மாற்றி மாற்றிப்  பாய்ச்சப்பட்டுப் பதப்படுத்தும் ஆக்சிடேஷன் முறையைப் பின்பற்றி (அதிகபட்சம் 20 நிமிடங்கள்) தயாரிக்கப்படுகிறது.கைகளால் நசுக்கித் தயாரிக்கப்படுவதால் இதன் விலை அதிகம். கிரீன்டீயைவிடச் சத்து இதில் சற்றுக் குறைவுதான்.
தேயிலைத் தூளில் உயர் தரம், நடுத்தரம், மலிவு என்று விலை அடிப்படையில் பல ரகங்கள் இருக்கலாம். ஆனால், எல்லாத் தேயிலைகளுக்கும் மூலப்பொருள் ஒன்றேதான்.
தேயிலை தயாரிக்கப்படும் விதத்தைக் கொண்டு அதன் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. இது தவிர தேயிலையுடன் இஞ்சி, எலுமிச்சை, பாதாம் போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டும் டீ வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த துணைப் பொருட்களின் சத்தும் தேநீருடன் சேரும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
தேநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்:
 • எல்.டி.எல்(LDL) மோசமான கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
 • பாக்டிரியா மற்றும் இன்ப்ளுயன்சா வைரசுகளை அழிக்கிறது.
 • இரத்தக் கட்டிகள் உருவாவதைக் குறைப்பதால் மாரடைப்பு,பக்கவாதம் போன்றவை தவிர்க்கப்படுகின்றன.
 • இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது .
 • மூளையில் ஆல்ஃபா அலைகளைத் தூண்டி மனத்துக்கு அமைதி தருகின்றது.
 • வயது முதிர்வைத் தாமதப்படுத்தும் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் இதில் அதிக அளவில் உள்ளது.
 • நீரிழிவுச் சிக்கல்வராமல் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
 • இதய நோயைத் தவிர்க்கும் ஃப்ளவனாயிட்ஸ் (Flavonoids) தேநீரில் நிறைந்திருக்கிறது.
 • காஃபின், தியோபுரோமின், தியாஃபிலின் போன்ற அல்கலாய்டுகள் டீயில் உள்ளன. இவை மனித உடலுக்குப் புத்துணர்வைத் தருபவை. சிகரெட் புகைப்பதால் உடலில் படியும் நிகோடின் அளவை தியோபுரோமின் குறைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
 • மாச்சா வகையைச் சேர்ந்த பச்சைத் தேயிலையில் உள்ள வைட்டமின்கள் சி,பி,இ மற்றும் ப்ளோரைடு பல் சொத்தையைத் தடுக்கிறது.
 • புற்று நோயை எதிர்க்கும் தன்மையைத் தருகிறது.
 • எச் ஐ வி நோயாளிகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
 • உடல் எடையைக் குறைக்கப் பலரும் இதை விரும்பி அருந்துகின்றனர்.

ஓரளவுக்கு ஆக்சாலிக் அமிலம் இருப்பதால், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தேநீர் என்பது இயற்கை பானம். இதில் பால் சேர்க்கும்போது அதில் உள்ள வேதிப் பொருட்கள் தேநீரில் உள்ள சத்துக்களை முறித்துவிடும். எந்த வகை டீத்தூளாக இருந்தாலும், தண்ணீரில் டீத்தூளைப் போட்டு கொதிக்கவிடக் கூடாது. மாறாக, டீத்தூளை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொண்டு அதில், நன்கு கொதித்த வெந்நீரை ஊற்ற வேண்டும். இரண்டு - மூன்று நிமிடங்களில் டீத்தூளின் சாறு வெந்நீரில் கலந்துவிடும். பிறகு வடிகட்டி அந்த நீரை அப்படியே அருந்தலாம். சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. தேவையானால் எலுமிச்சை சாறு சேர்த்தும் குடிக்கலாம்.
சுடுதண்ணீர் மட்டுமே காய்ச்சத் தெரிந்த கணவன்மார்கள் இனிமேல் டீ தயாரிக்கவும் தெரியும் என்று பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.
டீ ஒரு ஆண்டி ஆக்சிடென்ட் என்று முன்பு குறிப்பிட்டு இருக்கிறேன். அதுபற்றிச் சில செய்திகள்.
திசுக்கள் திண்ணமாய்ச் செயலாற்றிட இரு வெவ்வேறு ஆக்சிடென்ட் சமமாய்ச் செயல்பட வேண்டும். ஒன்று ப்ரி -ஆக்சிடென்ட் மற்றொன்று ஆண்டி ஆக்சிடென்ட். திசுக்களுக்குப் பிராண வாயுவை வாரி வழங்குபவை ப்ரி-ஆக்சிடென்ட். திசுக்களில் நடக்கும் பல வேதியல் மாற்றத்தால் வெளியாகும் ப்ரி-ராடிக்கல்(free Radical) ,உடலின் ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும் பலம் வாய்ந்தவையாகும். இவற்றை வெளியே தள்ளும் சக்தி ஆண்டி-ஆக்சிடெண்டுக்கு மட்டுமே உண்டு. இந்த ப்ரி ராடிகல்கள் நம் உடலில் அதிகமானால் நோய்கள் நொடியில் வரும்,முதுமை முந்தி வரும். எனவே ஆண்டி ஆக்சிடென்ட் மிகுந்துள்ள பச்சைக் காய்கள், பழங்கள், உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா,பேரிச்சம் பழம்,பால், பச்சை டீ இவற்றை உண்டு பயன்பெறுவோம். இந்தியாவில் உண்ணப்படும் 14 பழங்களில் 'ஏழைகளின் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் கொய்யாவில் (100 கிராம் கொய்யாவில் 496 மில்லி கிராம்) அதிக அளவு ஆண்டி ஆக்சிடென்ட் இருக்கிறதாம்.

தேயிலையிலிருந்து cream, deoderont தயாரிக்கும் ஆராய்ச்சிகள் நடந்து  வருகின்றன.

டீ குடித்துக்கொண்டு தொகுத்தவர் லூசியா லெபோ 


jeudi 26 avril 2012

மனிதன் கண்ட மருத்துவ முறைகள்

                                                                  பரவலாக             உலகில் உயிர்களின் தோற்றத்திற்குப் பிறகு அவற்றின் உணவு முறையாலும் காலநிலை மாற்றங்களினாலும் நோய்களும் தோன்றின. தனது உடலில் ஏற்படும் கோளாறுகளினால் துன்பமடைந்த உயிரினங்கள் அவற்றிற்குத்  தீர்வைக் காணும் வழிமுறைகளைத் தேடினநோய் தீர்க்கும் வழிமுறைகளே மருத்துவம் எனப்படுகின்றது நாய், பூனை போன்ற விலங்குகள் தங்களது உடல்நிலை,சரியில்லாதபோது சிலவகைத் தாவரங்களை உண்பதை நாம் பார்த்திருக்கின்றோம். மனிதனும் தன்னைச் சுற்றியுள்ள இயற்கைச் சக்திகளையும் தாவரங்களையுமே  தனது  மருத்துவத்திற்கான காரணிகளாகப் பயன்படுத்தினான். மருத்துவக்  குணம் கொண்ட தாவரங்கள் மூலிகைகள் எனப்பட்டனமூலிகைகளைக் கண்டறிவதிலும் அவற்றைச் சரியான முறையில் கையாண்டு நோய் தீர்க்கும் கலையிலும் இந்தியர்களே முன்னோடிகளாகத் திகழ்ந்துள்ளனர். மூலிகை மருத்துவத்தைத் தொடர்ந்து உலகில் இன்றுவரை பல்வேறு மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப் பட்டன, இன்னும் கண்டுபிடிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒருசில மருத்துவ முறைகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.

மூலிகை மருத்துவம்:
                                     இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்திச்  செய்யப்படும் முறையாகும். இந்தியா, சீனா, திபெத் ஆகிய நாடுகளில் தோன்றி வளர்ந்தது.

சித்த மருத்துவம்:
                                   பண்டைய சித்தர் பெருமக்களால் கண்டறியப்பட்ட  மருத்துவ முறையாகும்.சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த முறையே யோகாக் கலையாகும்; தமிழ் மண்ணில் தோன்றிய நாகரிகம், பண்பாடு,கலை, இவற்றில் வேர் ஊன்றித் தமிழர்களின் உணர்வோடு தழைத்தோங்கி வளர்ந்தது.

ஆயுர் வேதம்:
                                இந்தியாவில் தோன்றி  மருத்துவ உலகின் முன்னோடியாகத் திகழ்வது. எல்லா விதமான சிகிச்சை முறைகளும் கையாளப் படுகின்றன. அன்றாட வாழ்க்கை முறையோடு மூலிகைகள், யோகா, தியானம், அரோமாவாசனைகளைப் பயன்படுத்தும்  முறைகளையும் வைரம் போன்ற கற்களையும் மணிகளையும் பயன்படுத்தும் முறைகளையும் கொண்டது. நோய் வந்ததற்கான காரணம்,அதற்கான அறிகுறிகள், குணப்படுத்தும் முறை இவற்றோடு நாடிகளைச் சமன்படுத்துதல்,செரிமான சக்தியைத் துண்டுதல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல் உடற்பயிற்சி முதலியவற்றின் மூலம் நோயைக் குணமாக்கும் முறையாகும்.

இயற்கை மருத்துவம்:
                                 உணவுப் பொருள்களினால் உடலில் ஏற்படும் நச்சுத் தன்மையை வெளியேற்றி உடலைத் தூய்மைப் படுத்தி உடலின் உள்ளுறுப்புகள் அவற்றின் இயல்பு நிலை மாறாமல் பாதுகாத்து உடற்பயிற்சி, உணவுப்பழக்கம் இவற்றோடு ஒளி, நீர்,வெப்பம் மற்றும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை மட்டும் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மருத்துவ முறை.

 அக்கு பங்க்சர்:
                              சித்தர்கள் வளர்த்த வர்ம அறிவியலோடு சீனாவில் தோன்றிய மருத்துவமுறை. மனித உடலில் உள்ள முக்கியமான புள்ளிகளில்,மயிரிழை போன்ற மிகவும் மெல்லிய ஊசிகளைக் கொண்டு குத்தி நரம்புகள் மற்றும் தசைகளைத் தூண்டுவதால் அவற்றை ஊக்கப்படுத்தி முறையாகச் செயல்படவைத்து நோயைக் குணப்படுத்துதல் அக்குபங்க்சர் எனப்படும்.

அக்குபிரஷர்:
                          இதுவும் அக்குபங்க்சர் போலவே உடலின் முக்கியப் புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து நோயைக் குணப்படுத்தும் முறையாகும்..  தொடுசிகிச்சை முறையும் அக்குபிரஷர் போன்றே நம் உடலின்  சக்தி ஓட்டப் பாதையில் உள்ள முக்கியமான புள்ளிகளைத் தொட்டு அவற்றின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு நோயைக் குணப்படுத்துவதாகும்;

யுனானி மருத்துவம்:
                              யுனாநிமுறை மருத்துவம் நான்கு கோட்பாடுகளைக் கொண்டது.மனித உடலில் உள்ள இரத்தம்,இரைப்பை,மஞ்சள்  மற்றும் கரும் பித்தநீர், கபம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. சித்த மருத்துவத்தோடு கிரேக்க மருத்துவ முறையும் கலந்த மருத்துவ முறையாகும்;

ரெய்கிஎன்னும் ப்ராணிக் மருத்துவம்:
                          பிரபஞ்சத்தில் பரவியுள்ள காஸ்மிக்,ஜீவாதார சக்தியை உடலுக்குள் கொண்டுவந்து, உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் முறை.காஸ்மிக் சக்தியைத் தங்கள் உள்ளங்கையில் கொண்டுவந்துத் தங்களுக்குத் தாங்களே குணப்படுத்திக் கொள்ளலாம்,தொடுதலின் மூலம் மற்றவர்களையும் குணப்படுத்தலாம்;


ஹோமியோபதி:
                            எந்த ஒரு பொருளுக்கு உடலில் நோயை உண்டாக்கக் கூடிய தன்மை உள்ளதோ அந்தப் பொருளுக்கே அந்த நோயைக் குணப்படுத்தும் தன்மையும் உண்டு என்னும் இயற்கையின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதே ஹோமியோபதி மருத்துவ முறையாகும்.

அலோபதி என்னும் ஆங்கில மருத்துவம்:
                          இன்றைய உலகில் அலோபதி மருத்துவமே எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படுகின்ற மருத்துவ முறையாகும்; கிரேக்க தத்துவஞானியான  ஹிப்போகிரேட்ஸ் ஆங்கில மருத்துவத்தின் தந்தையாகக் கருதப் படுகிறார்;
நோய்க் குறிகளை அகற்றுவதும் நோய்க்கான காரணிகளை அகற்றுவதும் இதன் நோக்கமாகும்.அலோபதி சிகிச்சை முறையில்
மருந்துகள், அறுவை சிகிச்சை, நோய்க் கடுமையைத் தணித்தல் ஆகிய முறைகள் பின்பற்றப் படுகின்றன.புதிய புதிய மருந்துகளின் கண்டுபிடிப்புகளும் உறுப்பு மாற்று அறுவை சிக்கிச்சைகளும் அழகுக்கான அறுவை சிகிச்சைகளும் செயற்கை முறைக் கருத்தரிப்பு முறைகளும் இன்றைய அலோபதி மருத்துவத்தின் சிறப்புகள். .எலும்பியல்,நரம்பியல், மகப்பேறு, குழந்தைநல மருத்துவம்,இயன்முறை மருத்துவம்  போன்று பல்வேறியல்ககளைக் கொண்டு மனித உடலின் ஒட்டுமொத்த உறுப்புகளின் இயல்புகளையும், அவற்றில் வரக் கூடிய நோய்களையும் ஆராய்ந்து அதற்கேற்ற முறையில் தேவையான சிகிச்சையை அளிப்பதே அலோபதி மருத்துவத்தின் நோக்கமாகும். இம்மருத்துவத்திற்கு உதவியாக இன்று பல்வேறு துணை மருத்துவ முறைகள் தோன்றியுள்ளன. 'ஸ்டெம் செல்' பற்றிய ஆராய்ச்சிகளால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு வரும் பரம்பரை வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்பது மிகப் பெரிய வரப் பிரசாதமாகும். எவ்வளவோ நன்மைகள் இருந்தாலும் அலோபதி மருத்துவம் அதிகப் படியான  பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதே உண்மை. இருந்தாலும் உடனடியான அவசரத் தேவைக்கு அலோபதி மருத்துவமே கைகொடுக்கின்றது.  
            மேற்கண்ட மருத்துவ முறைகளோடு 'காந்த' சிகிச்சை , மலர்சிகிச்சை,வர்மசிகிச்சைமுறை போன்று பல்வேறு சிகிச்சை முறைகள் அங்கங்கே நடைமுறையில் உள்ளன. பாட்டி வைத்தியம், கைவைத்தியம் போன்ற எளிய வைத்திய முறைகள் நம் அன்றாட வாழ்வில் கையாளும் மருத்துவ முறைகளாகும்.எது எப்படி இருந்தாலும் நாம் நமது உணவுப் பழக்க வழக்கங்களாலும் உடல் பயிற்சிகளாலும்  வாழ்க்கை முறைகளாலும் மருந்துகள் அவசியமில்லாத நோயற்ற வாழ்க்கை வாழ்வதே மகிழ்ச்ச்சியான வாழ்க்கையாகும்.
     சரோசா தேவராசு