பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 15 août 2011

எண்ணப் பரிமாற்றம்


Afficher l'image en taille réelleஅன்புடையீர்,

இந்த உலகில் என்று வந்து விழுந்து
விட்டோமோ அன்றிலிருந்தே உணவு
என்பது உயிர் வாழவும், உடலை வளர்க்
கவும் இன்றியமையாததாகி விட்டது.
ஆனால் அதை எப்படி, எப்போது, ஏன்,எதற்காக
உண்ணவேண்டும் என்பதில் ஏற்படும் அறியாமையிலும்,
குழப்பத்திலும் தான் நலம் கெட்டு, பற்பல நோய்களுக்கும் 
இரையாகி வருந்துகிறோம்.

விரும்புவதை உண்பதை  உடலுக்கு உடல் உள்ள 
வித்தியாசங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. அதனால்
ஒருவர் சாப்பிடுவது மற்றவருக்கு விஷமாகிறது.
மருத்துவரிடம் சென்றாலொழிய விளக்கம் கிடைப்ப-
தில்லை. மருத்துவர்களும் மனிதர்கள்தான் என்பதால்
பல வேளைகளில் அவர்களாலும் உரிய காரணத்தைக்
கண்டுபிடிக்க முடிவதில்லை!

எனவே, யாருக்கு உடல்   சொந்தமோ, அவர்களே
தங்கள் வயிறு எதை ஏற்கிறது, எதை புறம் தள்ளு-
கிறது என்பதைக் கண்டுணர்வது அவசியமாகிறது.
எந்த உணவு, எதைக் கொண்டுள்ளது, அதன் பயன்-
பாடு என்ன என்பதை தெரிந்து கொண்டால் நம்
வயிறு ஏன் அதைத் தவிர்க்க விழைகிறது என்பதும்
புரிந்து விடும். ஜீரணிக்க இயலாத ஒன்றை ருசிக்காக
உண்பதை விடுத்து, கவனமாக இருந்தால் வாழ்வில்
சுகமும் கூடும், சுவையும் கூடும்.

சிற்சில சுவைகளின் தன்மை பற்றியும், உணவுப்
பொருட்களின் கூட்டுப் பொருள்கள் பற்றியும்
தரப்பட்டுள்ள விளக்கங்கள் பயனுள்ளவையாக
இருக்கும் என்று நம்புகிறோம்.

திருமதி சிமோன்

உணவும் சுவையும்

    தற்போதுள்ள   குடும்பச்  சூழலில் கணவனும் 
மனைவியும் வேலை செய்ய வெளியே சென்று விடுவதால்
சுலபமான முறையில் விரைவில் சமைக்கக்கூடிய உணவு 
வகைகள் அல்லது முறைகள் தேவைப்படுகின்றன.அதை
உத்தேசித்து சில எளிய வழிகள் கடைபிடிப்பதன் மூலம்
உடலுக்குத் தேவையான சக்திகளை இழக்கும் அபாயம்
உள்ளது.

   இதைத் தவிர்க்க,  முதலில் சுவைகளின் பயன்களை
அறிவது நல்லது:

காரம்: உடலுக்கு உஷ்ணத்தை அளிப்பது. உணர்ச்சிகளை
             குறைக்க-கூட்ட பயன்படுவது. உதா:கோபம்,பயம்,
             ஆசை போன்றவை.
கசப்பு: உடலின் உதவாத கிருமிகளை அழிப்பது. சக்தியை 
             மிகுதியாக்குவது.
இனிப்பு: உடல் தசையை அதிகமாக வளர்ப்பது.
புளிப்பு: இரத்தக் குழாய்களின் அழுக்கை நீக்குவது.
துவர்ப்பு: உடலிலிருந்து ரத்தம் வெளியேறும் போது,
                 உறையச் செய்து, ரத்தம்  வீணாகாமல் காக்கிறது.
உப்பு: நினைவாற்றலை அளிக்கக் கூடியது.

மேற்கூறியவற்றிலிருந்து, ஒரே வகை உணவு உடல்  நிலை
பாதிக்கப்படக் காரணம் ஆகலாம் எனப் புரியும். உதாரணமாக
இனிப்பை மட்டுமே உண்பவர்கள் பருமனாக, ஆனால்
சக்தி அற்றவர்களாக, மந்தமானவர்களாக, எல்லா வியாதி-
களுக்கும் இடம் அளிக்ககூடியவர்களாக இருப்பதில் வியப்பு 
ஏதுமில்லை. 

அதே போல அதிக காரம் குடலில் புண்ணை உண்டாக்கியும்,
உப்பு அந்த ரணத்தை அதிகப் படுத்தியும் கேடு விளைவிக்கும்.
அதிகப்படியான உப்பை வெளி ஏற்ற இயலாது சிறுநீரகம் 
கோளாறு செய்யும். புளிப்புச் சுவையும் (முக்கியமாக "புளி")
ஜீரண உறுப்புகளில்  அரிப்பை ஏற்படுத்தும். 

உணவு பற்றிய விழிப்புணர்வு

1 . வெளி நாடுகளிலிருந்து ஆப்பிள் வரவழைத்தால்
      அது கெடாமல் இருக்க மெழுகு பூசுவார்கள்.
      அளவுக்கதிகமாக பளபளப்புடன் இருந்தால்,
      தோலைச் சீவிவிடுதல்  நலம். இல்லையேல் 
      கான்சர், வயிற்றுப்போக்கு, வாயுத்தொல்லை,
      குடல் அழற்சி போன்றவை ஏற்படலாம்.

2 . பழங்களைப் பழுக்க வைக்க மெதில் ப்ரோமைட்
      எனும் வேதியப் பொருள் பயன்படுத்தினாலும்
      தொல்லையே!

3 . எந்த விரும்பாத சம்பவத்தை மறப்பதற்காக
      மது அருந்துகிறார்களோ அதே விஷயத்தை
      மது நீண்டகாலம் நினைவில் நிறுத்துகிறது
      என்கிறது ஒரு ஆய்வு.

4  வெங்காயம் கெட்ட கொழுப்பை அகற்றி இதய 
      நோய்,ரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது.
       இதிலுள்ள 'குர்செடின்' பார்வை குறைபாடு 
       ஏற்படாமல் காக்கிறது.வயிற்றுப் புற்று நோய் 
       வெங்காயம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு
       வருவது குறைவு என்று 89 ஆம் ஆண்டு
       'அமெரிக்க நேஷனல் கான்செர் இன்ஸ்டிடூட்'
       அறிவித்தது. வெங்காயத்திலுள்ள குரோமியம்
       சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை
       அளவைக் குறைக்க உதவுகிறது.
     
5 . காலை எழுந்ததும் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது 
      உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும்.

6 . கார்போஹைடிரேட் அதிகமுள்ளவைகளை எந்த
       அளவு, எவ்வளவு நேரம் சூடாக்குகிறோம் என்-
       பதைப் பொறுத்து, அதிலுள்ள 'அக்ரிலாமைட'
       என்ற ரசாயனம் வெளியேறும். காப்பிக்கொட்டை 
       உட்பட பொரிக்கிற, ரோஸ்ட் செய்கிற பொருள்கள் 
       இதில் சேரும். வத்தல், வடாம் போன்றவை 
       வெயிலில் காய வைத்து விடுவதால் ஈரத்தன்மை
       இழந்து விடுகின்றன. மாவுப் பொருட்களைப் 
       பொரிக்க அதிக நேரம் எடுக்கும். அப்போதுதான்
       'அக்ரிலாமைடு' வெளியேறுகிறது. நீரில் 30 நிமிடம் 
       ஊறவைத்துப் பொரித்தால்,  அந்த வெளியேற்றம்
       பெரிதும் குறையும். எல்லாக் கிழங்குகளுக்கும்
       இது பொருந்தும்.

7 . டயோச்ஜெனின் என்ற பைடோஈச்ட்ரோஜென்
      கூட்டுப் பொருள் வெந்தயத்தில் இருப்பதால்,
      பெண்களுக்கு மாத விலக்கு நேரங்களில் வரும்
      வயிற்றுக்கோளாறுகள், அந்தச் சமயத்தில் ஏற்படும்
       எரிச்சல் உணர்வு ஆகியவற்றுக்கு தீர்வு தருகிறது.
       மார்பக வளர்ச்சியினை முறைப்படுத்தும். 'வீக்கம்,
       பசியின்மை மற்றும் வயிறு தொடர்பான கோளாறு-
       களுக்கு இது பக்க விளைவு இல்லாத நல்ல மருந்து
       என ஜெர்மனி அங்கீகரித்துள்ளது. 

8 . வேக வைத்த உணவுகள் இரைப்பையில் நான்கு மணி
      நேரம் தங்கி ஜீரண நீர்களுடன் பிசையப்பட்ட பின்
       சிறு குடலுக்கு தள்ளப்படும். ஆனால் இயற்கை
       உணவான பழங்கள், காய்கறிகளில் 80 % தண்ணீர்
       ஆனதால், சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் இரைப்-
       பையை விட்டு வெளியேறிவிடும். எனவே இரண்டு
       வகைகளையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது
       உகந்ததல்ல. மாறாக விருந்துகளில் உணவுடன்
       பழங்களைப் பரிமாறுவது வழக்கம். சுவையான
       உணவை அதிகம் உண்டபின், பழங்களையும்
       சாப்பிட்டால், முறையற்ற ஜீரணம் ஏற்பட்டு உணவு
       இரைப்பையை விட்டு விரைவில் வெளியேறி,
       வயிறு உபாதை குறையும் என்பதற்காகவே இந்த
       ஏற்பாடு. இரு வகை உணவுகளின் சக்திகள் உடலில்
       சேர வேண்டுமானால் தனித்தனியே உண்பதே
       சாலச் சிறந்தது.

9 . வெங்காயம்,பூண்டு,உப்பு போன்றவை கிருமி நாசினி-
      கள் என்பதால் அவை  காற்றிலுள்ள நச்சுத்தன்மையை
      கிரகிக்கும். எனவே உப்பைத் திறந்து வைக்கவோ,
      வெங்காயம் , பூண்டுகளை உரித்து வைக்கவோ
      வேண்டாம்.

10 . கறிவேப்பிலை:ஜீரண சக்தியை அதிகரிக்கும். பித்தம்,
        வாயு, கபத்தை நீக்கும்.

11 . இஞ்சி: ஞாபக சக்தியைப் பெருக்கும். கல்லீரலைச் 
        சுத்தம் செய்யும். கிருமிகளை ஒழிக்கும்.

12 . பூண்டு: இரத்த அழுத்தத்தை சீராக்கும்.இதய அடைப்-
        பை நீக்கும். தொண்டை சதை வளர்ச்சியைத்
         தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

13 . காரெட்: இதிலுள்ள பீட்டா கரோட்டின் நோய் எதிர்ப்பு
        சக்தியைத் தருகிறது.

14 . ஆரஞ்சு: இதன் இண்டர்பெறான் தொற்று கிருமிகளின்
        எதிரி.

15 . பருப்பு வகை: இது வைட்டமின் ஈ மூலம் வெள்ளை
        இரத்த அணுக்களை தூண்டிவிடுகிறது.

16 . கோதுமை: வைட்டமின் பி.4  நரம்பு மண்டலம், மூளை,
         மண்ணீரல் ஆகியவற்றைத் திறம்பட செயல்படுத்து-
         கிறது. தைமஸ் சுரப்பி செயல் பட உதவுகிறது.

17 . தேநீர்:மக்னேசியம் எதிர்ப்பு செல்கள் அழியாமல்
         காக்கிறது.

18 . பால் பொருட்கள்: கால்சியம் உடல் வளர்ச்சிக்கும்,
        எலும்புகளின் பலத்திற்கும் உதவுகிறது.

19 . கோஸ்: இதன் க்ளுடோமைன் குடல் புண்களை ஆறு
        மடங்கு வேகத்தில் ஆற்றும். தொற்றுக் கிருமிகள்
        அழியும்.

20 . இறால்,மீன்,நண்டு: அழிந்த செல்களால் நோயும்,
        நோய்த் தொற்றும் வராமல் காக்கும்.உடலியியல் அடிப்படையில்
நோய்  தீர்க்கும் வழி  முறைகள்.
அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக :


jeudi 11 août 2011

இணையமென்னும் இனிய வலை

இ புத்தகங்கள் அல்லது மின் புத்தகங்கள் 

கடைவீதி , நூலகம் சென்று  புத்தகங்களைத் தேடி அலையாமல் வீட்டில் இருந்தபடியே கணினியில் நாம் விரும்பும் புத்தகங்களைத்  தெரிவு செய்து படிக்கும்  வசதி தற்பொழுது இருக்கிறது. அப்படி நமக்குக் கிடைக்கும் புத்தகங்கள்தாம் இ புத்தகங்கள் அல்லது மின் புத்தகங்கள் ஆகும். 

தாளில் அச்சிட்டுள்ள புத்தகங்கள் போலவே செய்திகளை, கருத்துக்களை, கணினியில் தட்டச்சு செய்து, அதைக்  கோப்பாக மாற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். இவை இணையத்தில் குறிப்பிட்ட முகவரியில் சேமிப்புக் கிடங்கில் சேர்ப்பிக்கப்படும். அந்தக் கோப்பைப் பார்வையிடச் சொடுக்கும் பொழுது அந்தக் கோப்பு செயல்படும் பக்கங்களாக மாறிக் கணினித் திரைக்கு வருகிறது. இப்படித்தான்  மின் புத்தகங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு சிலவற்றைத் தரவிறக்கம்(download) செய்து சேமித்து வைக்க  இயலாது.  இவற்றை ஆன் லைனில்தான்  படிக்க முடியும். ஏனையவற்றைத் தரவிறக்கம் செய்து நம் கணினியில் சேமித்து வைத்துத் தேவைப்படும் போது படிக்கலாம்.    

தற்போது வெளிவரும் பெரும்பாலான இ-புத்தகங்கள், கையேடுகள் போன்றவை PDF கோப்புகளாக  வருகின்றன.. PDF என்பது Portable Document Format என்பதன் சுருக்கம் ஆகும். இதன் சிறப்பு என்னவென்றால் இந்தக் கோப்பில் உள்ள வாக்கியங்களை எந்தக் கணினியிலிருந்தும் படிக்கமுடியும். அதற்குத் தேவை PDF reader என்ற மென்பொருள். இது இருந்தால் போதும். இலவசமாகவே இது கிடைக்கிறது. .நமது கணினியில் தமிழில் ஒரு எழுத்துருவைப் பயன்படுத்தி ஒரு ஃபைலை உருவாக்குவோம்.  அதே ஃபைலை மற்றொரு கணினியில் படிப்பதற்காகத் திறந்தால் சதுர வடிவமாக எழுத்துக்கள் படிக்க முடியாதவாறு இருக்கும். இந்தக் கணினியில் தகுந்த தமிழ் எழுத்துருவை நிறுவினால் மட்டுமே நம்மால் அந்தக் கோப்பில் உள்ள வார்த்தைகளைப் படிக்க முடியும். இந்தச் சிக்கலைக் களைவதர்க்குத் தான் PDF பயன்படுகிறது. உங்கள் பைலை PDF கோப்பாக மாற்றிவிட்டால் எந்தக் கணினியிலும் திறந்து படிக்கமுடியும்.அது மட்டும் அல்லாமல் எளிதாக ப்ரிண்ட் செய்யவும்  முடியும்.

இ புத்தகத்தின் பயன்பாடுகள்:
 

அதிகப் பக்கங்கள் கொண்ட நூல்களைக் கையடக்க வடிவில் சுருக்கிவிட முடியும். எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.

  • அச்சிடப்படும் புத்தகங்களில் வண்ணப் படங்களைக் கொண்டு அதிகப் பக்கங்களை இணைக்க இயலாது.ஏனெனில் அதிகப் பொருட்செலவு ஆகும். இதனால் புத்தகத்தின் விலையும் அதிகமாகும். ஆனால் மின் புத்தகங்களில் இந்தச் சிக்கல் கிடையாது. எவ்வளவு படங்களையும் இணைத்து வெளியிடலாம்.
  • மின் புத்தகங்களில் உள்ள பக்கங்களைத் தேவைக்கேற்பப் பெரிதாக்கிப் பயன்படுத்த முடியும்.
  • உலகின் எப்பகுதியிலும் எந்த நேரத்திலும் இணையத்தில் தேடுபொறிகளைக் கொண்டு நூல்களைத் தேடிப்பார்த்துப் பயன்படுத்த முடியும்.
  • மின் புத்தகங்களில் உள்ள தகவல்களை ஆவணமாக நீண்ட காலம் பயன்படுத்த முடியும்.அச்சிடப்பட்ட நூல்கள் தட்ப வெப்ப காரணங்களால்  விரைவில் சிதைந்து விடுகின்றன.
  • அச்சிடப்பட்ட நூல்கள் அச்சுப் பிரதிகள் இல்லாத சூழ்நிலை (out of print) ஏற்பட வாய்ப்புள்ளது.
தமிழில் மின் புத்தகங்கள் இணையத்தில் இலவசமாக படிக்கக் கிடைக்கிறது.

   சில இணைய முகவரிகள் இதோ:

மிகவும் பிரபலமான 'மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்'
http://pm.tamil.net/
ஏராளமான மின் புத்தகங்களுக்கு  இது தான் முன்னோடி திட்டம்.

தமிழ் இணைய பல்கலைக் கழகம்.
http://www.tamilvu.org/library/libindex.htm
தமிழ் நூல்கள், இலக்கியம், அகராதிகள், கலைக்களஞ்சியம், சுவடி தொகுப்பு இவற்றை பார்க்க இந்த இணையம் பெரிதும் பயன்படும்.
 
 சென்னை நூலகம் :http://www.chennailibrary.com/ebooks/ebooks.htmlபதிவர் பிகேபி
: http://www.pkp.in/mydrive/mydrive/Tamil%20E%20Books/
சமையல் குறிப்புகள்,  இலக்கியம் கட்டுரை என்று பலவும் இதில்  pdf format ல் கிடைக்கிறது.

மேலே  குறிப்பிட்ட இணைய தளங்களுக்குச் சென்று புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள். மின் புத்தகங்கள் பற்றிய மட்டற்ற செய்திகளை அடுத்த முறை பகிர்ந்துகொள்வோம்  .
 
திருமதி. லூசியா லெபோ

 

mercredi 10 août 2011

இலக்கியத்தில் சமையல்

 
சமைத்தல் என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்துதல் என்பது பொருள். அவித்தல், வேகவைத்தல்,வறுத்தல், சுடுதல், வற்றலாக்குதல், பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் ஆகியன சமையலின் முறைகள்.   சமையல் அறை வீட்டின் வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலையில் அமைக்கபடுகிறது.     கோவில்களில் சமையல் செய்யும் இடம் 'மடைப்பள்ளி' என்று அழைக்கப்படுகிறது.
இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளைக் கூறும் நூல்  மடைநூல்  எனப்பட்டது.  இதைப் பற்றிய குறிப்புகளைச் சிறுபாணாற்றுப்படை , மணிமேகலை,பெருங்கதை ஆகியவற்றில் காணலாம். சமையல் செய்பவர் 'மடையன்  ' எனப்பட்டனர்.    

நளபாகம்
:
மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூறுவது  நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் என்பவராவார்.  நளன் சமையல் கலையில் வல்லவன். அவனது பெயரிலிருந்தே இப்பயன்பாடு உருவாகியுள்ளது. தாங்கள் வாழ்ந்த நிலம், தங்களின் குலம் இவற்றைப் பொருத்து,  தமிழர்கள் உணவு முறை இருந்தது. பெரும்பாலோர் சோறு, மரக்கறி, புலால், மது விரும்பி உண்டனர் என்றும் தங்களைப் பாடிய புலவர்களுக்கு அரசர்கள் மதுவுடன் விருந்தளித்தனர் என்றும் இலக்கியம் கூறுகிறது.    எடுத்துக்காட்டாக நல்லியக்கோடன்  என்ற அரசன் தன்னைப் பாடிய புலவனுக்குப் புத்தாடை உடுத்தி ,  விருந்துக்கு முன்பாக நுரையை உடைய சோற்றுக் கஞ்சித் தேறல் (இது இக்காலத்தில் வழங்கப்படும் சூப் போன்றது) வழங்கிப் பிறகு விருந்து படைப்பான் என்பதையும்   
சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்
திறல்வே னுதியிற் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி
னுறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை
யெயிற்றிய ரட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை யாயமொ
டாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர்
நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி
நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து ...(சிறுபாண்
171-180 )

உலக்கைப்பூண் தேய நன்றாகக் குத்திச் சமைத்த வெண்பொங்கல் சோற்றுக்கு நண்டுக் குழம்பு ஊற்றி உழவர் தம் விருந்தினரை உபசரிப்பர் என்பதையும்  
சிறுபாணாற்றுப்படை பாடல் வழி அறிகிறோம்.   
இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள வேறு சில சமையல் செய்திகளை இங்கே தந்துள்ளேன் . 

காடி:
காடி என்றால்  ஊறியது , புளிக்க வைக்கப்பட்டது  என்று பொருள். சங்கத் தமிழர்கள் ஊறுகாயைக்   காடி என்று கூறினர். அகநானுற்றுப் பாடல் ஒன்று நம் பழந்தமிழர்கள் மாங்காய் ஊறுகாய் தயாரித்த முறையைக் கூறுகிறது.            
                              
                           'எழில் தகை
வளியொடு   சினைஇய வண்தளிர் மாஅத்துக்
கிளிபோல் காய கிளைத்துணர் வடித்து
புளிப்பதன் அமைத்த புதுக் குடமலிர் நிறை
வெயில் வேரின்     நிறுத்த'          என்று.
 
உயர்ந்து வளர்ந்த மாமரக் கிளைகளில் கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கும் கிளி மூக்குப் போல் வளைந்த மாங்காய்களைப்  பறித்து அவற்றைப்     புதுப் பானைகளில் இடுகின்றனர்.அவை கெட்டுப் போகாமல் இருக்கவும் புளிக்கவும் 'புளிப்பதன்' சேர்த்து, ஊறுகின்ற நீர் காய்வதற்காக வெயிலில் தூக்கி வைக்கின்றனராம் . 'புளிப்பதன்' என்பது உப்புப் போன்ற பொருள். தற்பொழுது ஊறுகாய் தயாரிக்க 'வினிகர்' சேர்ப்பதுப் போலச் சங்கத்தமிழர் 'புளிப்பதனைச்' சேர்த்தனர்.     
கூத்தாடும் மகளிர் ஆடுகளத்தில் ஆடுவதற்காகக் கொண்டு வரப்பட்ட, வாரால் இறுக்கிக் கட்டப்படிருக்கும் மத்தளத்தைப்    போல அந்த ஊறுகாய்ப் பானைகள் காட்சியளிப்பதாகப் பெரும்பாணாற்றுப் பாடல் வருணிக்கிறது.   
புளித்த கூழ் , புளித்த  கள்  இவை 'காடி' என்றே அழைக்கபட்டன.                                   

பண்ணியம்:

பலகாரம் என்பது சங்ககாலத்தில் பண்ணியம் என்று அழைக்கப் பட்டது. இதற்கு,    பண்ணப்பட்டது  அல்லது சமைக்கப் பட்டது என்று பொருள். இச்சொல் பிற்காலத்தில் பணியாரமாக மாறிவிட்டது.
அப்பம் சுட்ட முறைமையைக் கீழ்வரும்    பெரும்பாணாற்றுப்படை   பாடல்  விவரிக்கிறது:
கார் அகல் குவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்...      
கரியசட்டியில் இனிப்புப் பாகொடு பால் கலந்து பிடித்து அழகான வட்டமாக அப்பம் சுடப்பட்ட நிகழ்வை இவ்வரிகள் விளக்குகின்றன.  கடை வீதிகளில் அப்பங்களை வியாபாரம் செய்பவர்கள் கூவியர்  என்ற சொல்லால் குறிக்கப்பட்டனர். 

பாசவல்:
நெற்பொரி இடியல் எனப்படும் இதனைப் 'பாசவல்' என்கிறது சங்க இலக்கியம். ஆற்றில் நீராடச் செல்லும் பெண்கள், வாய் நிறைய அவலை அமுக்கிக் கொண்டு ஆற்றில் குதித்து நீராடியதாகப் புறநானுறு குறிப்பிடுகிறது.     இதோ அந்தப் பாடல்:
கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கி தண்புனல் பாயும்.    

மோர்க் குழம்பு:
பின்வரும் குறுந்தொகைப் பாடலில் , கூடலூர் கிழார்  , தலைவி, தலைவனுக்கு  மோர்க் குழம்பு  செய்ததைச் செவிலித்தாயின் கூற்றாகக் காட்டுகிறார்.  
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅது உடீஇக்
குவளை யுண்கண் குய் புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டெலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.

இவ்வண்ணம் தமிழ் இலக்கியங்களில் சமையல் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. அவற்றை எல்லாம்  எடுத்துக் கூற இடம் போதாது.


 திருமதி.   லூசியா லெபோ.