பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 10 août 2011

இலக்கியத்தில் சமையல்

 
சமைத்தல் என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்துதல் என்பது பொருள். அவித்தல், வேகவைத்தல்,வறுத்தல், சுடுதல், வற்றலாக்குதல், பொரித்தல், வேகவைத்து ஊறவைத்தல் ஆகியன சமையலின் முறைகள்.   சமையல் அறை வீட்டின் வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலையில் அமைக்கபடுகிறது.     கோவில்களில் சமையல் செய்யும் இடம் 'மடைப்பள்ளி' என்று அழைக்கப்படுகிறது.
இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளைக் கூறும் நூல்  மடைநூல்  எனப்பட்டது.  இதைப் பற்றிய குறிப்புகளைச் சிறுபாணாற்றுப்படை , மணிமேகலை,பெருங்கதை ஆகியவற்றில் காணலாம். சமையல் செய்பவர் 'மடையன்  ' எனப்பட்டனர்.    

நளபாகம்
:
மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூறுவது  நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் என்பவராவார்.  நளன் சமையல் கலையில் வல்லவன். அவனது பெயரிலிருந்தே இப்பயன்பாடு உருவாகியுள்ளது. தாங்கள் வாழ்ந்த நிலம், தங்களின் குலம் இவற்றைப் பொருத்து,  தமிழர்கள் உணவு முறை இருந்தது. பெரும்பாலோர் சோறு, மரக்கறி, புலால், மது விரும்பி உண்டனர் என்றும் தங்களைப் பாடிய புலவர்களுக்கு அரசர்கள் மதுவுடன் விருந்தளித்தனர் என்றும் இலக்கியம் கூறுகிறது.    எடுத்துக்காட்டாக நல்லியக்கோடன்  என்ற அரசன் தன்னைப் பாடிய புலவனுக்குப் புத்தாடை உடுத்தி ,  விருந்துக்கு முன்பாக நுரையை உடைய சோற்றுக் கஞ்சித் தேறல் (இது இக்காலத்தில் வழங்கப்படும் சூப் போன்றது) வழங்கிப் பிறகு விருந்து படைப்பான் என்பதையும்   
சுடர்கான் மாறிய செவ்வி நோக்கித்
திறல்வே னுதியிற் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூ ரெய்தி
னுறுவெயிற் குலைஇய வுருப்பவிர் குரம்பை
யெயிற்றிய ரட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை யாயமொ
டாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர்
நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி
நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து ...(சிறுபாண்
171-180 )

உலக்கைப்பூண் தேய நன்றாகக் குத்திச் சமைத்த வெண்பொங்கல் சோற்றுக்கு நண்டுக் குழம்பு ஊற்றி உழவர் தம் விருந்தினரை உபசரிப்பர் என்பதையும்  
சிறுபாணாற்றுப்படை பாடல் வழி அறிகிறோம்.   
இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள வேறு சில சமையல் செய்திகளை இங்கே தந்துள்ளேன் . 

காடி:
காடி என்றால்  ஊறியது , புளிக்க வைக்கப்பட்டது  என்று பொருள். சங்கத் தமிழர்கள் ஊறுகாயைக்   காடி என்று கூறினர். அகநானுற்றுப் பாடல் ஒன்று நம் பழந்தமிழர்கள் மாங்காய் ஊறுகாய் தயாரித்த முறையைக் கூறுகிறது.            
                              
                           'எழில் தகை
வளியொடு   சினைஇய வண்தளிர் மாஅத்துக்
கிளிபோல் காய கிளைத்துணர் வடித்து
புளிப்பதன் அமைத்த புதுக் குடமலிர் நிறை
வெயில் வேரின்     நிறுத்த'          என்று.
 
உயர்ந்து வளர்ந்த மாமரக் கிளைகளில் கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கும் கிளி மூக்குப் போல் வளைந்த மாங்காய்களைப்  பறித்து அவற்றைப்     புதுப் பானைகளில் இடுகின்றனர்.அவை கெட்டுப் போகாமல் இருக்கவும் புளிக்கவும் 'புளிப்பதன்' சேர்த்து, ஊறுகின்ற நீர் காய்வதற்காக வெயிலில் தூக்கி வைக்கின்றனராம் . 'புளிப்பதன்' என்பது உப்புப் போன்ற பொருள். தற்பொழுது ஊறுகாய் தயாரிக்க 'வினிகர்' சேர்ப்பதுப் போலச் சங்கத்தமிழர் 'புளிப்பதனைச்' சேர்த்தனர்.     
கூத்தாடும் மகளிர் ஆடுகளத்தில் ஆடுவதற்காகக் கொண்டு வரப்பட்ட, வாரால் இறுக்கிக் கட்டப்படிருக்கும் மத்தளத்தைப்    போல அந்த ஊறுகாய்ப் பானைகள் காட்சியளிப்பதாகப் பெரும்பாணாற்றுப் பாடல் வருணிக்கிறது.   
புளித்த கூழ் , புளித்த  கள்  இவை 'காடி' என்றே அழைக்கபட்டன.                                   

பண்ணியம்:

பலகாரம் என்பது சங்ககாலத்தில் பண்ணியம் என்று அழைக்கப் பட்டது. இதற்கு,    பண்ணப்பட்டது  அல்லது சமைக்கப் பட்டது என்று பொருள். இச்சொல் பிற்காலத்தில் பணியாரமாக மாறிவிட்டது.
அப்பம் சுட்ட முறைமையைக் கீழ்வரும்    பெரும்பாணாற்றுப்படை   பாடல்  விவரிக்கிறது:
கார் அகல் குவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்...      
கரியசட்டியில் இனிப்புப் பாகொடு பால் கலந்து பிடித்து அழகான வட்டமாக அப்பம் சுடப்பட்ட நிகழ்வை இவ்வரிகள் விளக்குகின்றன.  கடை வீதிகளில் அப்பங்களை வியாபாரம் செய்பவர்கள் கூவியர்  என்ற சொல்லால் குறிக்கப்பட்டனர். 

பாசவல்:
நெற்பொரி இடியல் எனப்படும் இதனைப் 'பாசவல்' என்கிறது சங்க இலக்கியம். ஆற்றில் நீராடச் செல்லும் பெண்கள், வாய் நிறைய அவலை அமுக்கிக் கொண்டு ஆற்றில் குதித்து நீராடியதாகப் புறநானுறு குறிப்பிடுகிறது.     இதோ அந்தப் பாடல்:
கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
பாசவல் முக்கி தண்புனல் பாயும்.    

மோர்க் குழம்பு:
பின்வரும் குறுந்தொகைப் பாடலில் , கூடலூர் கிழார்  , தலைவி, தலைவனுக்கு  மோர்க் குழம்பு  செய்ததைச் செவிலித்தாயின் கூற்றாகக் காட்டுகிறார்.  
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅது உடீஇக்
குவளை யுண்கண் குய் புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டெலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.

இவ்வண்ணம் தமிழ் இலக்கியங்களில் சமையல் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. அவற்றை எல்லாம்  எடுத்துக் கூற இடம் போதாது.


 திருமதி.   லூசியா லெபோ.