பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 27 mars 2012

எண்ணப் பரிமாற்றம் அன்புடையீர்,

உலக வாழ்க்கையை நினைத்தால் பயமாகவும், கவலையாகவும் உள்ளது. நமக்காக அல்ல. நமது சந்ததியருக்காக! எங்கு  நோக்கினும், அமைதி இன்மையும், வன்முறையும் ஆட்சி புரிகின்றன. நாடுகளுக்கு இடையே பகையும் போரும் இருந்தது போக வீடுகளுக்கிடையே போராட்டம் வெடிக்கிறது. விட்டுக் கொடுத்தலும், தியாக மனப்பான்மையும் அரிதாகிவிட்டன. உணர்வுகளை மதிப்பாரில்லை. 

வசதியாக வாழ வேண்டும் என்று நினைப்பது இயற்கை. அதற்காக உழைப்பது கடமை. ஆனால் பிறர் பொருளைக் கவர்ந்தேனும் தான் நினைத்ததை அடைய விழைவது எந்த விதத்தில் நியாயம்? தனக்குப் பிடிக்காததை காரணக் காரியத்தோடு விளக்குவது உரிமை. தான் விரும்பாததை அழிப்பது என்ன நியாயம்? தவறு நேர்ந்தால் தட்டிக் கேட்பது நேர்மை. தவறு செய்தவர்களையே இருந்த இடம் தெரியாமல் செய்வது என்ன நீதி?

தன் சுகத்திற்காக பிறர் நலனைக் கெடுக்கத் துணியும் இந்த அராஜகம் எப்படி முளை விட்டது? துடிக்க வைத்துப் பார்க்கும் அரக்க மனம் எப்படி கிளை பரப்பியது? இன்று சமுதாயத்தைப் புரட்டிப்போடும் சுயநலம் எப்படி வேருன்றியது?

மனிதன் தன் அறிவையும், ஆற்றலையும் சமூக வளர்ச்சிக்குப் பயன்படுத்தியவரை, எல்லாம் ஒழுங்காகத்தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.தன்னிறைவு ஏற்பட்டவுடன், கிடைக்கும் நேரத்தையும்,  மற்ற வளங்களையும் ஆன்ம வலிமை கெடாதவகையில் உபயோகப்படுத்தி இருக்க வேண்டும். அங்கே தான் பெருந்தவறு செய்துவிட்டோம். உல்லாச வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெருக்கி, அதை அடைவதை உலக சாதனையாக பெரிது படுத்தி விட்டோம்.

இளைஞர்களின் மனம் உலக நாட்டங்களில் மூழ்கவும், அதிலேயே இன்பங் காணவும் அடித்தளம் அமைத்துவிட்டோம். சிறிது சிறிதாக இந்நிலை வளர்ந்து இன்று மாற்ற முடியாத எல்லைக்கு வந்து விட்டோமோ என்று தோன்றுகிறது.


வெளிவரும் புத்தகங்களை எடுத்துக் கொள்வோம். மொழியின் தரம் பற்றிப் பேச வேண்டாம். எத்தனை அறிவார்ந்த நூல்கள் வெளிவருகின்றன? எத்தனை மக்களுக்கு அறிவுரை கூறுகிறோம் என்ற போர்வையில் வெறும் வார்த்தை ஜாலங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றன? சாமானியரிடையே வட்டமிடும் வார, மாத இதழ்களை எடுத்துக் கொண்டால் எத்தனை உபயோகமுள்ள, தரமான செய்திகளை அவை தாங்கி வருகின்றன?


சினிமா,சின்னத்திரை பற்றி பேசவே தேவை இல்லை. காதலும், பிரம்மாண்டமும் சண்டைக் காட்சிகளும், தொழில் நுட்பங்களும் போதும் திரைப்படத்திற்கு! சின்னத் திரையோ சினிமா வில்லன்களை வீட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வீட்டிற்குள் இருப்பவர்களை வில்லன்-வில்லிகளாக்கிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் எத்தனை இதயங்களில் விஷ விதைத் தூவப்பட்டிருக்கிறது என்று யோசிப்பாரில்லை!


குழந்தைகளுக்கான வீடியோ விளையாட்டுக்கள் எப்படியெல்லாம் எதிரிலிருப்பவர்களை அழிக்கலாம் என்று கற்றுக்கொடுக்கிறது. இன்றைய கார்ட்டூன் கூட வன்முறையையே சிரிப்பாக மாற்றிக்காட்டுகிறது. பெரியவர்களும் குழந்தைகளுடன் சேர்ந்து இவற்றை விளையாடுவதில் பெருமிதம் கொள்கின்றனர். வேகமாக இயக்குவதும், அந்த நேரத்தில் ஏற்படும் பரபரப்பும் நரம்புக்குக் கேடு என்று ஏதோ ஒரு அறிவியல் கட்டுரையில் வெளி வருவது யார் கவனத்தையும் கவராமல் போகிறது.

இதைவிட, இத்தகு கற்பனை உலக நிகழ்வுகளும், அதில் அடையும் வெற்றியும்  இன்றையத் தலைமுறையை சாதாரண வாழ்க்கையை ரசிக்க முடியாது செய்து விடும் என்பது எத்தனை பயங்கரமானது? ஒரு கார் ரேஸ் பற்றிய விளையாட்டையே எடுத்துக்கொள்வோம்.  எவ்வளவு வேகம் வேண்டுமானாலும் போகலாம், எத்தனைப் பேரை வேண்டுமானாலும் இடித்துவிட்டுப் போகலாம், எத்தனை முறை வேண்டுமானாலும் விபத்துக்குள்ளாகலாம் என்று நூறு முறை விளையாடிவிட்டு, நிஜ வாழ்க்கையில் ,ஊருக்குள் இருபது கிலோ மீட்டர் வேகத்தில், குறுக்கிடும் பத்துப் பேருடைய தடங்கலுக்கிடையே வண்டி ஓட்ட வேண்டும் என்றால்,எந்த இளம் ரத்தம் அதை வரவேற்கும்? விபத்துகள் அதிகமாகி விட்டது என்று நாம் புலம்புகிறோம்!

 மென்மையான நுண்ணுணர்வுகளும் மெல்ல மறைந்து இல்லற இன்பமும் நிறைவடையச் செய்ய இயலாது போய்விடும் என்று சில விஞ்ஞானிகள் உரைப்பது உண்மையாகிவிடுமோ என்பதையே இன்றைய காரணம் அற்ற  விவாக ரத்துகள் அறிவிக்கின்றன. ஊழிக்காலம் என்பது இந்த உருவில்தான் இனி வருமோ என்னவோ! மனித குலத்தை இறைவன் மட்டுமே கப்பாற்ற முடியும் போலிருக்கிறது !

திருமதி சிமோன்

இன்றைய அறிமுகம் - அன்னி பெசன்ட்அந்நியரின்  ஆதிக்கத்தை  எதிர்த்துப் போராடிச் சுதந்திரம் பெற்றுப் பிறருக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது இந்தியா.இந்த விடுதலைக்காகத் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்  பலர். இந்தியர்கள் தம் சொந்த நாட்டுக்காகப் போராடியதில் வியப்பில்லை. அது அவர்களது கடமையாகும். ஆனால் அந்நிய மண்ணிலிருந்து   வந்து  இங்கே குடியேறி,  நம் மக்களை அடிமைகளாய் நடத்திய ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி நம் மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துணை செய்த போராளிகளுள் குறிப்பிடத் தக்கவர் அன்னி பெசன்ட் அம்மையார் ஆவார்.

ஒரு சாதாரண ஐரிஷ் குடும்பத்தில் 01 10 1847 -இல் லண்டனில் பிறந்தார்.  அன்னி 5 வயதில் தந்தையை இழந்தார். அன்னை  ஹரோ நகரில் பாடசாலை நடத்திவந்தார். ஏழைகளின் தொண்டில் ஆர்வம் காட்டிய அன்னியின் அழகில் மயங்கிய ப்ராஸ்பர்ட் பெசன்ட் என்ற பாதிரியார் அவரைக் காதலித்தார்.  பாதிரியாரின் மனைவியானால் அவர் துணையோடு எளியோர்க்கு சேவை செய்ய நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றெண்ணித் தம் 19 -ஆவது வயதில் 1867 -ஆம் ஆண்டு அவரை மணந்தார். திக்பி, மேபெல் என்று இரண்டு குழந்தைகள் இவர்களுக்கு உண்டு.   கக்குவான் என்கிற தொடர் இருமலால் துவண்டு மகள்படும் அவதியைக் கண்டு அன்னி கண்ணீர் வடித்தார். இதனால் அவர் உள்ளம் கடவுள் சிந்தனையில் ஒருமுகப்பட மறுத்தது.  இத்துடன் கணவரின் நிந்தனைகளும் சேர்ந்துகொள்ள வெறுப்பும் விரக்தியும்  கொண்டு தற்கொலைக்குத் துணிந்தார். "உன் சொந்தத் துன்பத்தைத் தாங்கிக்கொள்ள நெஞ்சில் உரமற்ற நீயா ஏழைகளின் துன்பத்தைத் துடைக்க ஆசைப்பட்டாய்?" அவரது அந்தராத்மா இடித்துரைத்தது. வாழ்க்கைப் பாதையில் இனித் தன் பயணத்தைப் பாதியில் நிறுத்துவதில்லை என்று உறுதிகொண்டார். சுதந்திர மனப்போக்குக் கொண்ட அன்னி  1873 -இல் கணவரிடமிருந்து பிரிந்து வாழ  முடிவெடுத்தார்.  26 வயதேயுடைய அன்னி மிகவும் சிரமப்பட்டு இரண்டு குழந்தைகளையும் வளர்த்தார். சிறுவர்களுக்காகப் பல கதைகள் கட்டுரைகள் எழுதினார். அரசியலில் அவருக்கிருந்த நாட்டத்தை அவர் கணவர் விரும்பாததால்  கணவனையும் பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்து லண்டன் சென்று 1880 களில்    லண்டன் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பைத் தொடர்ந்தார். அடிமை நாடுகளுக்கு இங்கிலாந்து அரசு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். 'நேஷனல் ரிபார்மர்' என்ற பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றியபோது  The Secret Doctrine நூலை எழுதிய பிளைவட்ச்கி அம்மையாரைச்  சந்தித்தார். இந்தச் சந்திப்பு அன்னியின் வாழ்க்கையில் பெரும்  மாற்றத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திகப் போக்கை கைவிட்டு ஆத்திகராகிப் பிரும்மஞான சங்கத்தில் உறுப்பினரானார்.1891 -ஆம் ஆண்டு இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ஆங்கில அரசுடன் கடுமையாகப் போராடி அனுமதி பெற்று மத நல்லிணக்கத்தைப்  பரப்பும் நோக்கில் 1893 -ஆம் ஆண்டு நவம்பர் 16  இந்தியா வந்தார். இங்கு வந்ததும் புண்ணிய பூமிக்கு வந்தேன் என்று மகிழ்ந்தார். காசியில் சில காலம் வசித்தபோது கங்கையில் நீராடித் தனது ஐரோப்பிய உடையைத் துறந்து புடவை உடுத்தி, இந்து சமய விளக்கங்களை முறைப்படிக் கற்று இந்துவாகவே வாழலானார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சென்னையில் அடையாரில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார்.அடையாறு  உள்பட நாடெங்கும் பல ஊர்களில்    தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பள்ளிகளை ஆரம்பித்தார். பெண்களுக்காகத் தனிப் பள்ளியைத துவங்கினார்.
அடிமைப் பிடியில் சிக்கிக் கிடக்கும் இந்தியர்களின் உடனடி தேவை சுதந்திரம்    என்பதை உணர்ந்த  இவர் தனது 47 -ஆவது வயதில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இறங்கினார். ஆன்மீகத்தைப் பரப்ப வந்தவர் சுதந்திரத்துக்காகப் போராடுவது கண்டு அதிர்ச்சியடைந்த வெள்ளையர்கள் அன்னிக்கு பல்வேறு இன்னல்கள் தந்தனர். 1913 -இல் காங்கிரசில் இணைந்து கடுமையாகப் போராட  ஆரம்பித்தார். 1917 -ஆம்  ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தெரிவானார். 'இந்தியாவே  விழித்தெழு" என்பதுதான் அவரது சொற்பொழிவின் சாராம்சம். 'நாங்கள் அடிமைகளாக ரயிலில் பயணிப்பதைவிட, சுதந்திர இந்தியனாகக் கட்டை வண்டியில் பயணம் செய்யவே  விரும்புகிறோம்" என்று தன்னுடன் பெண்களைச் சேர்த்துக் கொண்டு குரல் கொடுத்தார். 15 06 1917 அன்று ஏனைய காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னி பெசன்ட்டையும் கைது செய்தது ஆங்கிலேய அரசு. கைதைக் கண்டித்துக் காங்கிரஸ் இயக்கமும் முஸ்லிம் லீகும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் செப்டெம்பரில் இவர்களை விடுதலை செய்தது.  இந்திய ஒற்றுமைக்குத் தடையாக இருந்த பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், தீண்டாமை இவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் பெண்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு பெருக ஆரம்பித்தது.  தங்களைத்  தாங்களே பாதுகாத்துக்கொள்ள    1917 -இல் மாதர் சங்கம் தொடங்கிப் பெண்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்.இன்று பெண்கள் ஓட்டுரிமை பெற்றிருப்பதற்குப்  போராடியது இந்த மாதர் சங்கமே. தனது 82 -ஆவது வயதிலும் ஐரோப்பாவில் 28  நாட்கள் சுற்றுபயணம் செய்து சொற்பொழிவாற்றிச் சாதனை படைத்தார்.

பேச்சாற்றல் மட்டுமின்றி எழுத்தாற்றலிலும்  சிறந்து விளங்கினார். 1913 -இல் "பொதுநலம்" என்ற வார இதழையும் 1914 - "New India" என்ற நாளேட்டையும் நடத்தினார். சுதந்திர வேட்கையை மக்களிடம் தூண்டுவதற்காக அவர் நடத்திய பத்திரிகைகளின் எண்ணிக்கை 18. இராமாயணம், மகாபாரதம், இதிகாசங்கள்,வீரர்கள், பெண்கள் போன்ற தலைப்புகளில் அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 362 க்கு மேல்."லிங்க்" என்ற பெயரில் பத்திரிகை தொடங்கி இந்தியாவிலும் அயர்லாந்திலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தன் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

 அன்னி பெசன்ட் அம்மையார் மதம்,மதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி, சமூகச் சீர்திருத்தம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் ஈடுபட்டு   உழைத்தார்.   தனது 81 -ஆவது வயதில் தீவிர அரசியலில் இருந்து விலகினார். இறுதிக் காலங்களில் இந்திய மெய்யியலாளர் திரு ஜிட்டு கிருஷ்ண மூர்த்தியுடன் சேர்ந்து பிரம்மஞான சங்கத்தின் முனைற்றத்துக்காக உழைத்தார்.
 ஐம்பது ஆண்டுகள் இந்திய  மக்களுக்காகவே உழைத்த இவர் தனது 86 -ஆவது வயதில்  20 09 1933 அன்று    இயற்கை எய்தினார். ஒரு தீர்க்கதரிசியைப் போல் அவர் சொல்லிய பல திட்டங்கள் - ஏழை குழந்தைகளுக்குப் பள்ளியிலேயே இலவச உணவு வழங்குதல், கிராம பஞ்சாயத்து போர்டுகளைத் தொடங்குவது - இவை இன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.  

அவருக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பு மறக்க இயலாதது. சென்னையில் நீண்ட காலம் தங்கி இருந்தார்.ஆரம்பத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அடையாற்றின் தெற்குக் கரையில் ஆரம்பிக்கப்பட்ட பிரம்மஞான சங்கம் (Thiophycal Society) பிறகு   270 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்தது. இங்கு  அனைத்து மதத்தினரும் ஒன்று கூடி  வழிபாடு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 400 வயதைத் தாண்டிய ஆலமரமும் இங்குதான் உள்ளது.   06 01 1936 இல் இந்த இடத்தில் கலாஷேத்திரம் ருக்மணி தேவி அருண்டேல் அவரது கணவர் ஜார்ஜ் அருண்டேல் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் உருவாக்கத்துக்கு அன்னி பெசன்ட்,  டாக்டர் ஜேம்ஸ், டாக்டர் சி.பி.ராமஸ்வாமி ஐயர், ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்த்திரி போன்றோர் உறுதுணையாக இருந்தனர். சென்னையின் ஒரு பகுதி இந்த அம்மையாரின்  பெயரை இன்றும் தாங்கி இருக்கிறது. 

லூசியா லெபோ

எளியோரின் வலிமை

உலகை மாற்ற, கல்வி கற்றவர்களால், உயர் பரம்பரையில் வந்தவர்களால், தெய்வீக சிந்தனை உள்ளவர்களால் மட்டுமே முடியும் என்பதான மயக்கம் நம் எல்லோருக்கும் உண்டு. அதனால் நாம் எளியோரின் வாழ்க்கையை, அவர்களது எண்ணங்களை , அவர்கள் செயல்களை கவனித்துப் பார்ப்பதில்லை.ஆனால் சமூக நலனில் நாட்டம் கொண்டு அவர்கள் எத்தனை மகத்தானக் காரியங்களை மிக அமைதியாக செய்துவிட்டு அதற்கான அங்கீகாரம் இன்றி இருந்தாலும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறார்கள் என்று அறிந்தால், அவர்களைப் பற்றிய பெருமிதமும், நம் மீது குற்ற உணர்வும் ஒருசேர எழுவதைத் தடுக்க முடியாது.

 இருபத்தியிரண்டு வயதில் கார் விபத்தால் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்ட ஷிவானி குப்தா, சக்கர நாற்காலியில் இருந்தவாறே "அக்சஸ் எபிலிட்டி" என்ற அமைப்பைத் தொடங்கி, ஊனமுற்றோர் சமூகத்தில் எளிதாக நடமாட உரிமைக்குரல் கொடுத்து வருகிறார்.

திருமணம் செய்துகொள்ளாமல் தானம், கோவில்-சமூகத் திருப்பணியில் நிறைவைக் காண்கிறார் எம்.டி. கண்ணா (பெண்)

பத்மா ஸ்ரீநிவாசன் 'பிட்சா ஹெவென்' நடத்தி,லாபத்தில் முதியோர் இல்லம் அமைக்கிறார்.

சுனாமியில் தன் மூன்று குழந்தைகளையும் பறிகொடுத்த சூடாமணி பரமேஸ்வரன், சுனாமியால் அனாதைகளான இருபது குழந்தைகளுக்கு 'நம்பிக்கை' எனும் அமைப்பை நிறுவி ஆதரவு தருகிறார்.

வனிதா மோகன், தொழிலதிபராக இருந்துகொண்டே 'சிறு துளி' எனும் அமைப்பின் மூலம் கோவையின் நீர் ஆதாரங்களை வளப்படுத்துகிறார்.

ஓடந்துறை பஞ்சாயத்துத் தலைவி லிங்கம்மா. கோவை மாவட்ட பதினொரு குக்கிராமங்களில் 6500  மக்களுக்காக ஒரு உயர்நிலைப் பள்ளி, மூன்று தொடக்கப் பள்ளிகள், பஞ்சாயத்து நிதியிலிருந்து கட்டடங்கள் உருவாக்கியுள்ளார். பதவிக்கு வந்தபோது  வரவு 20000  இருந்ததை ஐந்து லட்சமாக்கியுள்ளார். தமிழகத்து ஊராட்சித் தலைவர்கள் சென்று பார்வையிடும்படி அரசாணை பிறப்பிக்குமளவு ஆட்சி செய்கிறார். இதுவரை 600  தலைவர்கள் பார்வை இட்டுள்ளனர்.


சாலு மரத திம்மக்கா கர்னாடக தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கூதூர் கிராமம் வரை (20  கிலோ மீட்டர் ) ஆயிரம் ஆலமரங்களை கணவரின் உதவியுடன்  நட்டு சாதனைப் படைத்திருக்கிறார். சிறந்த தேசிய குடிமகள் விருது உட்பட எண்ணிலடங்காப் பரிசுகள் குவிந்த போதும், அரசு கொடுத்த வீட்டைக் கூட புறக்கணித்துவிட்டு தனியே வாழ்கிறார்.

கோயம்பேடு மாநகராட்சி மிடில் ஸ்கூலில் தீப்பிடித்தபோது 400  குழந்தைகளுக்கு மேல் தன் உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் காப்பாற்றி உள்ளார் லூர்து ராணி . தன்னை மறந்து குழந்தைகள் நலனே பெரிதாக மதிக்கும் இந்த ஆசிரியைக்கு உதவும் அவரது கணவரும் பாராட்டுக்குரியவரே !


மேற்கு வங்க பெர்ஹாம்பூரில் வசிக்கும் பாபர் அலி என்ற 16  வயது இளைஞன் மாலையில் ஏழைக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்துகிறான். எண்ணிக்கைக் குறைய வறுமையே காரணம் என உணர்ந்து, இலவச அரிசியும் வழங்க ஆரம்பித்தான். தற்போது சில அரசு அதிகாரிகள் அவனுக்கு உதவ முன் வந்திருக்கிறார்கள்.


தன் ஏழ்மை, திருமண தோல்விக்கிடையே சி.மகாலட்சுமி அயராது உழைத்து,"சிறந்த கிராம சுகாதார செவிலி", இந்திய அரசின் குடும்ப நலத்துறை அமைச்சகம் வழங்கும் "ப்ளோரன்ஸ் நைன்டிங்கேல் விருது" பெற்றிருக்கிறார்.

தொகுப்பு: திருமதி சிமோன்

முதன்மைப் பெண்கள்


பெண்கள் எந்தவொரு புதிய இடத்திலும் சூழ்நிலைக் கேற்றவாறு தன்னைத் தயார்படுத்திக் கொள்வர். புரிந்து கொள்ளும் திறன் பெண்களிடம் அதிகமாக உள்ளது. பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள் மட்டுமல்ல, ஆண்களைவிடத் திறமையாக நிருவாகம் செய்யும் வலிமையும் உடையவர்கள். தங்கள் பொது வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் தங்களுக்குக் குறுக்கீடாக வந்த பல பல சோதனைகளையும் வேதனைகளையும் வென்று அவற்றைப் படிக்கற்களாக மாற்றிச் சாதனை படைத்துள்ளனர். அவர்களுள் முதன்மை இடத்தைப் பெற்ற ஒரு சிலரையாவது(இந்தியரை)  தெரிந்து கொள்வோமே!  
 •  ஆங்கிலக் கால்வாயைக் கடந்த முதல் பெண் - ஆர்த்தி சகா.
 • எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை கால்பதித்த முதல் இந்தியப் பெண்- - சந்தோஷ் யாதவ்.
 • உலகத்தை கப்பலில் சுற்றி வந்த முதல் பெண் - உஜ்ஜாலா ராய்.
 • முதல் பெண் கணித மேதை - சகுந்தலா தேவி.
 • மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி - சுஷ்மிதா சென்.
 • ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய முதல் இந்தியப் பெண் - கர்ணம் மல்லேஸ்வரி (2000-வது ஆண்டில், பளுதூக்குதல் பிரிவில் வெண்கலப் பதக்கம்)
 • முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி.
 • சட்டமன்ற உறுப்பினரான முதல் பெண் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
 • முதல் பெண் வக்கீல் - கர்னிலியா சொராப்ஜி.
 • முதல் பெண் மத்திய அமைச்சர் - ராஜகுமாரி அம்ரித் கவுர்.
 • விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் - கல்பனா சாவ்லா.
 • புக்கர் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர்  - அருந்ததிராய்.
 •  நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண் - அன்னை தெரசா.
 • முதல் பெண் குடியரசுத் தலைவர் -  பிரதீபா பாட்டீல்.
 • முதல் பெண் விமானி - காப்டன்  துர்கா பானர்ஜி 
 • முதல் பெண் ஓட்டுனர் - வசந்தகுமாரி
 •   பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக் கலைஞர் - எம்.எஸ்.சுப்புலட்சுமி   

தொகுப்பு: லூசியா லெபோ 

கவிதையில் பெண்கள்


                           பெண்ணின் பெருமை 

அன்பும், அழகும், அறநெறியும், இன்மொழிப் 
பண்பும், இரக்கமும், பாசமும், வீரமுடன்
திண்ணிய கற்பும், தெளிந்தநற்   சிந்தனையும்
பெண்ணின் பெருமைஎனப் பேசு!


                                                      
தையலர் பிறவியில் பெற்ற பேறு

தன்னைத்தான் கற்புநெறி காக்கும் திண்மை,
     தகையுறவே பெரியோரைப் பேணும் பண்பு ,
  தன்குடும்பம் சீர்பெறவே உழைக்கும் ஊக்கம், 
  தன்பிள்ளை நலம்நாடி உயர்த்தும் வன்மை,
பின்தொடரும் எவ்விடரும் எதிர்க்கும் தீரம், 
பீடுறவே செல்வத்தைச் சேர்க்கும் பெற்றி,
   தன்னுயிரின் உயர்மானம் போற்றும் திட்பம் ,
தையலர்தாம் பிறவியிலே பெற்ற பேறே!


பெண்மை என்றும் பெருமை சேர்க்கும் 

தாயாயைத் தாரமாய்த் தமக்கையாய்த் தங்கையாய்ச்
 சேயாய்   மருகியாய்ச் செவிலியாய் மாமியாய்ப்
பாட்டியாய்த் திகழும் பன்முகப் பெண்டிர்
வீட்டை உயர்த்தும் வியத்தகு சக்தியாம்!
பிறந்த வீட்டின் பெயரை நிறுத்தியே,
பிறவி பயனாம் பேறுகள் பெற்றே
வாழ்க்கைத் துணையாய் வாழ்வில் சிறக்கும்
வாழ்க்கை நலன்கள் வளங்கள் சேர்க்கும்
பெண்ணினை மணக்கப் பெரும்பொருள் கேட்டிடும்
கண்ணிய மில்லா கயவரை மறுப்பீர்!
பெண்ணெனப் பிறந்ததால் பெருமிதம் கொள்வீர்!
பெண்மை என்றும் பெருமை சேர்க்குமே!         


கவிஞர் வே. தேவராசு