பெண்ணின் பெருமை
அன்பும், அழகும், அறநெறியும், இன்மொழிப்
பண்பும், இரக்கமும், பாசமும், வீரமுடன்
திண்ணிய கற்பும், தெளிந்தநற் சிந்தனையும்
பெண்ணின் பெருமைஎனப் பேசு!
தையலர் பிறவியில் பெற்ற பேறு
தன்னைத்தான் கற்புநெறி காக்கும் திண்மை,
தகையுறவே பெரியோரைப் பேணும் பண்பு ,
தன்குடும்பம் சீர்பெறவே உழைக்கும் ஊக்கம்,
தன்பிள்ளை நலம்நாடி உயர்த்தும் வன்மை,
பின்தொடரும் எவ்விடரும் எதிர்க்கும் தீரம்,
பீடுறவே செல்வத்தைச் சேர்க்கும் பெற்றி,
தன்னுயிரின் உயர்மானம் போற்றும் திட்பம் ,
தையலர்தாம் பிறவியிலே பெற்ற பேறே!
பெண்மை என்றும் பெருமை சேர்க்கும்
சேயாய் மருகியாய்ச் செவிலியாய் மாமியாய்ப்
பாட்டியாய்த் திகழும் பன்முகப் பெண்டிர்
வீட்டை உயர்த்தும் வியத்தகு சக்தியாம்!
பிறந்த வீட்டின் பெயரை நிறுத்தியே,
பிறவி பயனாம் பேறுகள் பெற்றே
வாழ்க்கைத் துணையாய் வாழ்வில் சிறக்கும்
வாழ்க்கை நலன்கள் வளங்கள் சேர்க்கும்
பெண்ணினை மணக்கப் பெரும்பொருள் கேட்டிடும்
கண்ணிய மில்லா கயவரை மறுப்பீர்!
பெண்ணெனப் பிறந்ததால் பெருமிதம் கொள்வீர்!
பெண்மை என்றும் பெருமை சேர்க்குமே!
கவிஞர் வே. தேவராசு