உலகவர்த்தகமானது தரைமார்க்கம், கடல்மார்க்கம்,
ஆகாயமார்க்கம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இவற்றில் கடல்
மார்க்கத்திலான செயற்பாடுகளே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும் . பல்வேறு உத்திகளைக் கையாண்டு
பயணகாலத்தைக் குறைப்பதன் வாயிலாகப் பல நாடுகள் ஆரோக்கியமான கடல்மார்க்க வர்த்தகத்தை மேற்கொள்கின்றன.எடுத்துக்காட்டாக
மத்தியத் தரைக்கடலையும் செங்கடலையும் இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட
கால்வாய் சூயஸ் கால்வாய் இது 1859-ம் ஆண்டு துவங்கி 1867-ல்
கட்டிமுடிக்கப்பட்டது. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கெல்லாம் மாநகரப்
பேருந்துகள் மாதிரி
கப்பல்கள் அடிக்கடி வந்துபோகத் தொடங்கின. ஆப்பிரிக்காவை அணுகுவது
சுலபமானது. மத்தியக்கிழக்கின் வர்த்தகமே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு
சூடு பிடிக்க ஆரம்பித்தது.
பனாமா கால்வாய்:
அமெரிக்கக் கண்டத்தில் பசிபிக் கடலுக்கும் அட்லாண்டிக் கடலுக்கும் இடைப்பட்ட சில மைல் நிலப்பரப்பைக் கடப்பதற்கு சுமார் 18,000
மைல் தூரத்தை கடல்வழியாக கடக்க வேண்டியிருந்தது.அதுவும் அவ்வளவு சுலபமாக
அமைந்துவிடுவதில்லை. பல நேரங்களில் பல விபத்துகளைச் சந்திக்க வேண்டி
இருந்தது.
வட
அமெரிக்கா, தென்னமெரிக்கா ஆகியவற்றின் நடுவில் குறுகிய தளமான [Isthmus]
பனாமா நாட்டின் வழியே, அட்லாண்டிக் பசிபிக் கடல்களை இணைக்கும் செயற்கைக்
கால்வாய்தான் பனாமா கால்வாய் ஆகும்.பதினாறாம் நூற்றாண்டிலேயே
இத்தகைய கால்வாய்க்கான எண்ணம் இருந்தது. 400
ஆண்டுகளாய்த் திட்டங்கள் உருவாகி இடையிடையே பலமுறை கைவிடப் பட்டன!
பனாமா கால்வாய் தோற்றத்தின் வரலாறு:
சுமார் 400 ஆண்டுகளாக
பனாமா நாட்டின் குறுகிய தளப்பரப்பின் வழியே கால்வாய் ஒன்றை அமைத்திட
ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்துத் தலையிட்டு
முயற்சிகள் செய்தன! ஸ்பெயின் ராணுவக் கடல்தீரர் வாஸ்கோ நுனீஸ் தி பல்போவா
[Vasco Nunez de Balboa (1475-1519)] 1513 இல் முதன்முதல் பனாமா நகரை
அடைந்து, குன்று ஒன்றில் ஏறி நின்று பரந்து விரிந்த பசிபிக் கடலைப்
பிரமிப்போடு கண்டு, உலகுக்கு அறிவித்த ஐரோப்பியர்! 1534 இல் ஸ்பெயின்
மன்னர் முதலாம் சார்ல்ஸ், கால்வாய் அமைத்திட பனாமாவின்
சுருங்கிய பீடத்தில் தளஆய்வு [Land Survey] செய்ய உத்தரவிட்டார். ஆனால்
அவரது ஆணைக்குக் கீழ் பணியாற்றிய ஸ்பானிஸ் ஆளுநர் [Spanish Governor] ஓர்
அதிருப்தியான தகவலை அனுப்பியதால், கால்வாய்த் திட்டம் கைவிடப்பட்டது. பல்லாண்டுகளாக ஸ்பானிஸ் கடல்வணிகர் பனாமா நாட்டின் இரண்டு
கடற்கரைகளையும் நீர்வழியாக இணைக்க முயன்று தோல்வியுற்றனர்!
கி.பி.1800 இறுதியில் பிரான்ஸ், சூயஸ் கால்வாயை வெட்டிமுடித்த நம்பிக்கையில் தென் அமெரிக்காவையும், வட அமெரிக்காவையும் இணைத்துக் கொண்டிருந்த பனாமா பகுதியில் கடல்மட்டக் கால்வாயைத் தோண்ட முடிவு செய்தது. 1855 இல் அமைத்த பனாமா ரயில் பாதையை ஒட்டியே, கால்வாயும் வெட்டத்
திட்டமிடப் பட்டது.பனாமா கால்வாய் அமைக்கப்படவுள்ள பகுதி உலகில் மிக அதிக மழை வீழ்ச்சியும் அடர்
காடுகளையும் மலைகளையும் கொண்ட கரடு முரடான பகுதி. அபாயகரமான விஷஜந்துகள்,
ஊர்வன என்பவற்றின் புகலிடமாகவும் உள்ள பிரதேசமாகும்.
1869 இல் வெற்றிகரமாக சூயஸ் கால்வாயைக் கட்டி
முடித்து 'சூயஸ் கால்வாய் தீரர் ' [The Hero of Suez] எனப் பெயர் பெற்ற
ஃபெர்டினட் தி லெஸ்ஸெப்ஸ் [Ferdinand De Lesseps], சில ஆண்டுகளுக்குப்
பிறகு, 74 ஆம் வயதில் பனாமா கால்வாயை அமைக்க நியமனம் ஆனார்!
இங்கு நிலவிய கடுமையான வெப்பம், மஞ்சள் காமாலை, காலரா, காச நோய், டிப்திரியா, அம்மை, பிளேக் போன்ற கொடிய நோய்களால் இக் காலக்கட்டத்தில் சுமார் 25,000 தொழிலாளர்கள் உயிரிழப்பு ஆகிய காரணங்களால் ஃபெர்டினட்
லெஸ்ஸெப்ஸ் ஏழு வருடங்கள் கடுமையாக முயன்றும் திட்டம் நிறைவேறாமல் போனது. இதனால், ஏற்பட்ட பேரிழப்பினால் பிரெஞ்சு அரசாங்கம் தவித்துக்கொண்டிருந்தது. மேலும், பொருள் முதலீடு செய்ய மனமில்லாமல் திட்டத்தைக் கைவிட்டது!
பின்னர் அமெரிக்க அரசு 1904 -
ஆம் ஆண்டு கால்வாய்த் திட்டத்தை வாங்கியது. பல கால்வாய்த் திட்டங்களில் அனுபவம் பெற்ற அமெரிக்க எஞ்சினியர் மேஜர்
ஜெனரல் கோதல்ஸ் (1828-1928) பனாமா திட்டத்திற்குப் பிரதம எஞ்சினியராக
நியமனம் ஆனார். பிரெஞ்சு முயற்சியின் தோல்விக்கான காரணங்களைப் பாடமாக எடுத்துக்கொண்டு செயல்பட்டனர். சூயஸ்
கால்வாய் போன்று கடல்மட்டக் கால்வாயை அட்லாண்டிக், பசிபிக் கடல்களுக்கும்
நேரடியாக அமைக்க முதலில் திட்டம் உருவானது! அவ்விதம் கால்வாய்
படைப்பதற்குப் பல மைல் நீளமுள்ள மலைகளையும், பாறைகளையும் வெடிமருந்தால்
பிளக்கத் தேவையான ஏராளமான நிதிச் செலவுக்கும், கால நீடிப்புக்கும் அமெரிக்க
அரசு தயாராக இல்லை!! மேலும் கடல்மட்ட கால்வாய் திட்டம் மனிதனால் சாதிக்கப்படமுடியாத ஒன்று என்பது
கடந்தகால தோல்விகளும் அனுபவங்களும் தெளிவுப் படுத்தின. இந்த நிலையில்
நீர்த்தேக்கிகள் மூலமான மூடித்திறக்கும் வழி மூலம் கப்பல்களை ஏற்றி
இறக்கும் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது. அதாவது மூவடுக்குத் தடாகப் படிகள் கொண்ட,
'நீரழுத்த புனைத் தொட்டிகள் ஏற்பாட்டுத் ' [Three Stage Hydraulic Locks
System] திட்டம் ஒன்று ஒப்புக் கொள்ளப் பட்டது. இத்திட்டம் நிதிச்
செலவையும், கட்டும் நேரத்தையும் பெருமளவில் குறைத்தது.
இதற்கு இரண்டு திட்டங்கள்
பரிந்துரைக்கப்பட்டன.ஒன்று பனாமா நாட்டின் வழியாக, மற்றொன்று நிக்கரகொவா
நாட்டின் வழியாக.
அப்பொழுது பனாமா தனிநாடாக
இல்லை.கொலம்பியாவின் ஆதிக்கத்தில்
இருந்தது.பனாமாவுக்குக் குறுக்கே கால்வாய் வெட்ட கொலம்பியாவிடம் அனுமதி
கேட்கிறார் ரூஸ்வெல்ட், அப்பொழுதைய அமெரிக்க ஜனாதிபதி.கொலம்பிய அரசு அனுமதி
மறுக்கிறது.பனாமா நாட்டின் "சுதந்திர போராட்ட அமைப்புக்கு" நிதி உதவி
செய்தார்.ஆயுதம் கொடுத்தார் ரூஸ்வெல்ட்..புரட்சியை அடக்க வந்த கொலம்பிய படை,
துறைமுகத்தில் அமெரிக்க போர்கப்பல்கள் நிற்பதை கண்டு பின்வாங்கின. துளி
ரத்தம் சிந்தாமல் பனாமா என்ற நாடு புதிதாக பிறந்தது.நாட்டின் இரு முனைகளில் இருந்த கொலான் [Colon],
பனாமா நகரங்கள் நவீன முறையில் புதுப்பிக்கப் பட்டன. அடுத்து கால்வாய் அமைப்பில் அமெரிக்கா ஈடுபட்டது.
அமெரிக்க பனாமா பூர்வ ஒப்பந்தம், கால்வாய்த் திட்டம்:
பனாமா நாடு 1900 ஆண்டுகளில் கொலம்பியா அரசின் ஆணைக்குக் கீழிருந்தது. முதல்
ஒப்பந்தப்படி [Hay-Herran Treaty], அமெரிக்கா கொலம்பியாவுக்கு முன்பணம்
ஒரு மில்லியன் டாலரும், ஆண்டு தோறும் 250,000 டாலரும் அளிக்க வேண்டும்.
கொலம்பியா நூறாண்டுகளுக்கு கால்வாயை நெருங்கிய ஆறு மைல் அகற்சி
நிலப்பகுதியை அமெரிக்காவுக்கு ஒப்பந்த வாடகைக்கு விட வேண்டும். டிசம்பர்
31, 1999 இல் அமெரிக்கா பனாமா கால்வாயை, பனாமா நாட்டுக்கு முடிவில்
ஒப்படைத்து விட வேண்டும். கொலம்பியா அந்த உடன்படிக்கைக்கு ஒப்புக் கொள்ளா
விட்டாலும், பனாமா அரசு நில உரிமையை அமெரிக்காவுக்கு விற்க விழைந்தது.
நீராவியால்
இயங்கும் இயந்திரங்களின் கண்டுபிடிப்பு,உயர் காற்று அழுத்தத்தில் இயங்கும்
துளையிடும் சாதனங்கள், பெருமளவிலான வெடிமருந்துகளின்(dynamite)
பிரயோகம்............கால்வாய் கட்டுமானத்தினை பூர்த்திசெய்ய முக்கிய
அம்சங்களாகும்.
1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூர்த்தியான பனாமா கால்வாய் 50 மைல் நீளம்
கொண்டது. இருபதாம் நூற்றாண்டின் உன்னதப் பொறியியல் படைப்புகளில் ஒன்றாகப்
பனாமா கால்வாய் கருதப்படுகிறது.
கால்வாயின் அமைப்பு:
பனாமா
நாட்டின் குறுக்கு வழியில் அட்லாண்டிக் கடலிலிருந்து ஐம்பது மைல் தூரத்தைக்
கடந்து பசிபிக் கடலை அடைவது அத்தனை எளிதான பயணம் அன்று! இந்தப் பயணத்தின் துவக்கத்தில் கப்பலானது முதல் 20
மைல் தூரம் கடல் மட்டத்திலேயே செல்கிறது. பின் கப்பலை தூக்கி மறு
புறத்தில் இறக்குகின்றனர். காரணம் இடையில் அமைந்துள்ள மலைப் பகுதியாகும். மலை மீது
செயற்கையாக உண்டாக்கப் பட்ட 90 அடி உயர ஏரியின் நீர் மட்டத்துக்கு முதலில்
கப்பல் ஏறிப் பின்னால், 90 அடி உயரத்துக்குக் கீழிறங்கிக் கடல்
மட்டத்துக்கு வர வேண்டும்! இந்தக் கால்வாயில் மூன்று பெரிய பிரிவுகள் இருக்கின்றன , எனவே எல்லா
இடங்களிலும் ஒரே அகலம் , ஆழம் இல்லை.
கொலானுக்கும், பனாமா நகருக்கும் இடையே உள்ள மலைப் பிரதேசத்தில், அணைகள்
கட்டப்பட்டு மழைநீர் சேமிக்கப்பட்டது. மூன்று அணைகள் கட்டப் பட்டு, மூன்று
ஏரிகள் செயற்கையாக அமைக்கப் பட்டன. அவற்றில் காட்டுன் ஏரி [Gatun Lake]
என்று பெயர் பெற்றது மனிதன் அமைத்த உலகப் பெரும் ஏரியாகக் கருதப்படுகிறது!
அதன் நீளம் 1.5 மைல், அகலம் அரை மைல், ஆழம் 80 அடி! கடல்மட்டத்திற்குச்
சுமார் 90 அடி மேலுள்ள அந்த செயற்கை ஏரியில் வேனிற் கால மழை
எப்போதும் பெய்து, நீரை நிரப்பிக் கொண்டே வருகிறது. பனாமா கால்வாயில்
செல்லும் கப்பல் முதல் 7 மைல் தூரம் கடல்மட்டத்தில் கடந்து, ஏரியை
நெருங்கும் போது மூவடுக்குப் புனைத் தொட்டிகளில் ஒவ்வொரு படிக்கட்டிலும் 30
அடி வீதம் நீரால் தூக்கப்பட்டு 90 அடி உயரத்தில் உள்ள காட்டுன் ஏரியில்
பயணத்தைத் தொடர்கிறது. பிறகு பனாமா நகரை நெருங்கும் போது மறுபடியும்
மூவடுக்குப் புனைத் தொட்டிகளில் ஒவ்வொரு படிக்கட்டிலும் 30 அடி வீதம்
தணிந்து, முடிவில் 90 அடி இறங்கி மீண்டும் கடல்மட்டக் கால்வாயில்
தொடர்கிறது. அத்தகைய அதிசயப் பொறியியல் நூதனப் பனாமா கால்வாய் 1914 ஆகஸ்டு
மாதம் கட்டி முடிக்கப் பட்டது.
இங்குக் கப்பலை ஏற்றி,
இறக்க கையாளப்படும் முறை மிக எளிதானது. அடைப்பை அடையும் கப்பலை
உள்பகுதியில் நிறுத்தி அடைப்பை அடைத்து விடுகின்றனர். பின் அதில் நீர்
நிரப்பப்பட்டு கப்பல் தேவையான அளவு தூக்கப்படுகிறது. பின்பு மறுபுறம்
திறக்கப்பட்டு கப்பல் உள் செல்கிறது. இதே போன்று கப்பலை இறக்குவதற்கும்
கப்பலை அடைப்பிற்குள் விட்டுப் பின் பகுதியை அடைத்துவிட்டு மறுபுறம் அடைப்பு
திறக்கப்பட்டுக் கப்பல் கடல் மட்டத்தை அடையும்படிச் செய்கின்றனர்.
கப்பல் ஒன்று அட்லாண்டிக்
கடலிலிருந்து, இரண்டு முறை மூவடுக்குப் புனல் தொட்டிகளில் ஏறி இறங்கிக்
கால்வாய் வழியாக 50 மைலைக் கடந்து, பசிபிக் கடலை அடைய குறைந்தது 23 மணி
முதல் 30 மணி நேரமாகிறது! புனல் தொட்டியைக் கப்பல் நெருங்குவதும்,
தொட்டிக்குள் கப்பல் நகர்வதும், நீர்மட்டம் ஏறி இறங்குவதும், கதவுகளைத்
திறந்து மூடிக் கப்பலை விடுவிப்பதும், கால்வாய் அதிபதிகள் கவனிப்பாக
மின்சார ரயில்களைக் கையாண்டு, கண்காணிப்பாகச் செய்ய வேண்டி யிருப்பதால்,
அதிக காலதாமதம் அங்குதான் நேரிடுகிறது. நீர் உயரம் சீராக மட்டமாக
ஆகாவிட்டால், கதவுகளைத் திறக்க சுயத்தடுப்பு இயக்கிகள் தடை செய்யும்!
முதல் முறையாக யு.எஸ்.எஸ்.மிசௌரி என்ற யுத்தக்கப்பல் இந்த கால்வாயில் தனது பயணத்தைத் தொடங்கியது.கால்வாய் 1914 ல்
திறக்கப்படும்போது சுமார் 1,000 ஆக இருந்த கப்பல் போக்குவரத்து 2008 ல்
14,702 கப்பல்களாக உயர்ந்துள்ளது.2008 ஆண்டு வரை 815.000க்கும் மேற்பட்ட
கப்பல்கள் கால்வாய் வழியாகக் கடந்துள்ளன.
உலக வணிகப் பணிகளுக்குக் கடல் மார்க்கக் கதவுகளைத்
திறந்து விட்ட பனாமா கால்வாய், கடந்த 100 ஆண்டுகளாக கோடான கோடி டாலர்
மதிப்புள்ள வாணிபப் பண்டங்களையும், கார் வாகனங்களையும் இருபுறமும் பரிமாறி
வந்துள்ளது! அனுதினமும் கடக்கும் சுமார் 32 கப்பல்கள் சராசரி ஒவ்வொன்றும்
28,000 டாலர் பயணக் கட்டணம் செலுத்துகின்றன!
பூத வடிவான சில பயணக் கப்பல்கள் ஒற்றைவழிக் கட்டணமாக 100,000 டாலர்
கொடுக்கின்றன! இதுவரை மிகையான தொகை தந்தது, பிரிட்டனின் மாளிகைக் கப்பல்
'ராணி எலிஸபெத் II ' தொகை 150,000 டாலர்!
முதன்முறையாக 1989-ம் ஆண்டு சிலகாலம் கால்வாய்மூடப்பட்டது. 21
ஆண்டுகளுக்குப் பிறகு 2010 டிசம்பரில் கனமழை காரணமாக பசிபிக் கடல்,
அட்லாண்டிக் கடல்பகுதிகளை இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பனாமா
கால்வாயில்
தற்காலிகமாக கப்பல் போக்கவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பனாமாக்
கால்வாய் நிர்வாக ஆணையம்
அறிவித்தது.
தொன்னூறு ஆண்டுகளாகப் [2004] பணியாற்றும் பனாகா கால்வாயின் நீர்க்
கணவாயும், புனல் கதவுகளும் பழமையாகி, முழுவதும் மாற்ற வேண்டிய காலம்
நெருங்கி விட்டது! மழைப் பொழிவுகளால் நேரும் நிலச் சரிவுகளால், கால்வாயில்
சகதி மண்டி அடிக்கடி நீக்க வேண்டிய கட்டாயம் நேருகிறது. புதிதாய் ஆக்கப்
படும் கப்பல்களின் நீட்சி, அகலம் மிக நீண்டு விட்டதால், கால்வாயின் அகலம்,
புனல் தொட்டிகளின் நீள, அகலம் அதிகமாக்க வேண்டிய எதிர்காலச் செம்மைப்பாடு
தேவையாகி விட்டது! தற்போது 106 அடி அகலமுள்ள கப்பல்கள்தான் பனமா
கால்வாயில் பயணம் செய்ய முடியும்! கப்பலின் சுமைதாங்கிப் பாரத் திறம்
65,000 டன்னிலிருந்து, 300,000 டன்னாக இப்போது பெருகி விட்டது! கெய்லார்டு
குறுகிய நீர்க் கணவாய் 500 அடி அகலத்திலிருந்து 730 அடி அகலத்துத்
தோண்டப்பட்டு, இரட்டைப் போக்குவரத்து [Two-Way Passage] அமைக்கப் பட
வேண்டும்! பனாமா கால்வாயை எதிர்காலத்தில் திருத்தங்கள் செய்யத் தேவைப்
படுவது ஒரு பில்லியன் டாலர் என்று கணிக்கப் படுகிறது!
ஐம்பது மைலைக் கப்பல் கடக்க ஆகும் சராசரி 30 மணி நேரத்தைக் [காத்திருக்கும்
6 மணி நேரம் உள்பட] குறைக்க புது முறைகள் வழிகள் கையாளப்பட வேண்டும்!
அட்லாண்டிக் பசிபிக் கடல்களை வேறு வழிகளில் இணைக்க, அமெரிக்கா தயாரித்த
மூன்று விதப் புதுத் திட்டங்கள் பனாமா குடியரசுக் கைவசம் உள்ளன. 1.
கொலம்பியா 2. மெக்ஸிகோ 3. நிகராகுவா ஆகிய மூன்று கடற் பாதைத் திட்டங்கள்.
மெக்ஸிகோ, கொலம்பியா வழியாகச் செல்லும் கால்வாய், கடல் மட்டக் கால்வாய்கள்.
நிகராகுவா தேர்ந்தெடுக்கப் பட்டால், புனல் தொட்டி ஏற்பாடுகள்
தேவைப்படும். இம்மூன்றில் ஒரு புதிய கால்வாய் எதிர்காலத்தில் அமைக்கப்
பட்டால், பனாமா குடியரசில் தற்போது பணிபுரியும் 14,000 நபர்களின்
பிழைப்பில் பெரும் பாதகம் விளையும்! அவர்களில் பணிபுரியும் 4000 பேர்கள்
பனாமா குடிமக்கள்!
2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பனாமா கால்வாய் திறக்கப்பட்டதின்
நூற்றாண்டு விழாவையொட்டி பனாமா சிட்டியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்
நடந்தன. பனாமாவின் பாரம்பரிய எண்ணான 13 அடிக்கு சாக்லேட், கேக்குடன்
கொண்டாடப்பட்டது.
பல நூறு வருடங்களாக மனிதன்
இயற்கையுடன் போராடி வெற்றி கொண்டதன் சின்னம் பனாமா கால்வாய் மனித
வரலாற்றிலே விடாமுயற்சி வெற்றிதரும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் பனாமா
கால்வாய் . அமெரிக்க ஏகாதிபத்தின் அடையாளம் பனாமா கால்வாய். தற்போது எட்டு
மைல்நீளத்துக்கு மட்டுமே இருவழிப் பாதை உள்ளது. இதனை நீடிக்கும் திட்டமும்
உண்டு.விஞ்ஞானத்தில் இது சாத்தியம் ஆகும் நாள் தொலைவில் இல்லை!
தொகுப்பு: லூசியா லெபோ.