பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 15 juin 2011

எண்ணப் பரிமாற்றம்

Afficher l'image en taille réelleஅன்புடையீர்,

இன்றைய உலகம் "திரை" எனும் மாய வலையின் கைகளுக்குள்  அடங்கிக் கிடக்கிறது என்றால் அது மிகையானதல்ல. அரங்குகளில் மட்டுமல்ல; வீடு-
களுக்கும் அது வருகை தந்து வெகு காலமாயிற்று.ஒரு கதைப் பின்னல் என ஆரம்பித்து, தொடர் கதையாக மாறி,குழந்தைகளுக்கானபொழுதுபோக்கு என விரிந்து இன்றைய உலகை ஆட்டிப் படைக்கும் பெரும் சக்தியாக மாறி விட்டது.

ஆரம்ப காலத்தில் சமுதாய பிரதிபலிப்பாக இருந்த அது இன்றைய சமூகத்தை ஆட்டிப் படைக்கும் உருவெடுத்துவிட்டது. அன்றையக் கதைகளில் கதாசிரியர்கள் மக்களுக்கு முன்னுதாரணம் தரக்கூடிய பாத்திரங்களைப் படைத்தார்கள்.அன்பும்,காதலும்,பாசமும், விட்டுக்கொடுத்தலும்,தியாகமும் நிரம்பிய அவற்றின் தாக்கம் மனித வாழ்வுக்கு உரம் சேர்த்தது.

சுவை சேர்க்கவும், சமுதாயச் சீரழிவுகளைக் காட்டுகிறோம் என்ற போர்வையில் தரமற்றவைகளையும் எந்த சீர்திருத்த நோக்கமும் இன்றி
அப்பட்டமாகக் காட்டுவதன் பலன் சிந்திக்க நேரமின்றி அவற்றை
தங்களுக்குள் இறக்குமதி செய்யும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள்.

நேருக்கு நேர் நின்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் அந்தக் காலத்திய
அமெரிக்க பகை உணர்வு, திரைப்படங்கள் மூலம் இன்றைய உலக நியதி
ஆகிவிட்டது. ஒருவரைப் பிடிக்கவில்லையா, அவரை அழித்தே விடலாம்.
இதனை நிறைவேற்ற உனக்குத் திறனோ அன்றி வகையோ இல்லை என்றால்
கவலையே இல்லை. கூலிப் படைகள் ஆயிரம் உண்டு.

கதா நாயகர் 'சிகரெட்' பிடிப்பது பல கோணங்களில் அழகாகக் கவர்ச்சியாக
இருக்கலாம். ஆனால் இன்றைய இளைஞர் அதன் தாக்கத்தால் புற்று நோயை-
யும், காசத்தையும் விலை கொடுத்து வாங்குகிறார்கள். பிறர் முன் மது
அருந்த வெட்கப்படும் மன நிலை போய், பலர் கூடி மகிழ்வது என்றாலே மது
அருந்துவது என்றாகிவிட்டது.

சுய நலமும், வக்கிர புத்தியும் கொண்டவர்களை 'வில்லன்' என்று அறிமுகப்
படுத்தியது போக, இன்றையப் படங்களில் கதாநாயகர், நாயகி மட்டுமல்லாமல்
தாய் கூட வன்முறையும் கேடு நினைக்கும் கெடுமதியும் கொண்டவளாகச்
சித்தரிக்கப் படுகிறாள்.

குழந்தைகளுக்கான விளையாட்டுகளில் காட்டப்படும் வன்முறையின்
விளைவு பற்றிய ஆராய்ச்சி ஒன்று "சின்னஞ் சிறுவர் இம்மாதிரி உணர்ச்சியின்
போது ஏற்படும் கிளர்ச்சிக்கு பழகிய பிறகு, அவர்களுக்கு சாதாரண நிகழ்வுகள்
திருப்தியைத் தருவதில்லை. பாலுணர்வு கூட வன்முறையில் தான் அவர்-
களுக்கு இன்பமூட்டும்!" என்கிறது. இன்றைய பலாத்காரக் கொடுமைகளின்
விளக்கமாக இது தோன்றுகிறது. இனி நாளைய இளைஞர்களின் நிலை
என்னவோ!

அரசுகள் இப்படிப்பட்ட சமுதாய அழிவைப் போக்க ஆவன செய்ய வேண்டும்.
ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பது இத்தனை ஆண்டுகளால்
ஏற்பட்ட அனுபவம். நல்ல மனமும்,சமூகம் நல்வழியில் நடக்க வேண்டும்
என்ற ஆர்வமும் உடையவர்கள்தான் முன் வந்து இந்தப் பேரழிவிலிருந்து
மனித குலத்தைக் காக்க வேண்டும்.

திருமதி சிமோன்
கே.பி.சுந்தராம்பாள்


தென்னக மேடைக் கலைஞர்.இந்தியநாடகராணி. இசைவாணி.சுதந்திர போராட்ட முதல் கலையுலகப் பிரஜை. தமிழ்த் திரை உலகில் முதன் முதல் ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை - இப்படிப் பல சிறப்புகளையும் ஒருங்கே பெற்றவர் திருமதி சுந்தராம்பாள்.

கொடுமுடி சுந்தரம் என்றழைக்கப்பட்ட இவர் 1908 இல் பிறந்தார். சிறு வயதிலேயே நல்ல குரல் வளம் கொண்டிருந்ததால் அனைவரும் இவரைப் பாடச் சொல்லிக் கேட்பது வழக்கம்.பத்து வயதில் ஏழ்மைக் காரணமாக
ரயிலில் பாடி சம்பாதித்தார். ஊர்மக்கள் கோவிலிலும் பாடச் சொல்லிக்
கேட்பது உண்டு.

நடேச ஐயர் என்ற நாடக நடிகர், தயாரிப்பாளர், பின்னர் முனிசிபல் சேர்மன்
என்பவரும், போலீசில் வேலைபார்த்த கிருஷ்ணசாமி என்பவரும் சுந்தரத்-
திற்கு மிகவும் உதவ, சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு வேலு
நாயர் கும்பகோணம் அழைத்துச் சென்று தன் நாடகக் கம்பெனியில் நடிக்க
வைத்தார்.சிறுமி தன் பாட்டாலும், நடிப்பாலும் எல்லோரையும் கவர்ந்தாள்.

1927 இல் தன்னுடன் நடித்த எஸ்.ஜி.கிட்டப்பாவை மணந்து கொண்டார்.
இவர்கள் நடித்த 'வள்ளி திருமணம்', 'பவளக்கொடி', ஹரிச்சந்திரா' பெரும்
வெற்றியைத் தந்தன. 1931 ஆம் ஆண்டு தமிழின் முதல் பேசும் படமான
'மஹா கவி காளிதாஸ்'  மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இருவரும் காங்கிரஸ் அபிமானிகள் என்பதால், நாடக மேடையில் காதி உடுத்தி
சுதந்திர எழுச்சிப் பாடல்கள் பாடி மக்களுக்கு விழிப்பு ஊட்டினர்.

துரதிர்ஷ்டவசமாக கிட்டப்பா 1933 இல் மரணமடைந்தார். நடிப்பதை விட்டு
விட்டு சோகத்தில் இருந்தவரை, காந்தி அடிகள் நேரில் சென்று தேசப்பாடல்கள் பாட அழைத்தார். அதனால் மீண்டும் நடிக்க வந்த அவர்
செய்த சாதனைகள் அதிகம்.

அவர் நடித்த திருவிளையாடல்,அவ்வையார்,நந்தனார்,மணிமேகலை,
காரைக்கால் அம்மையார், கந்தன் கருணை,வீர சுந்தரி, பூம்புகார்,சக்தி லீலை, திருமலை தெய்வம், உயிர்மேல் ஆணை, துணைவன் படங்கள்
அவர் பாடிய பாடல்களால் ஓடியது என்றால் அது மிகையல்ல. பல பாடல்களின் இனிமை எல்லோரையும் பாட வைத்தது.

காங்கிரெஸ் தலைவர் சத்தியமூர்த்தியும்,காமராஜரும் அரசியலுக்கு அழைக்க, 1951  ஆம் ஆண்டு சென்னை சட்ட மன்ற மேல் சபை உறுப்பினர் ஆனார்.

பாட்டிற்காக இரு முறை தேசிய விருது பெற்றுள்ளார். 1964 இல் இசைச் சங்கம் 
"தமிழிசை பேரறிஞர்" என கௌரவித்தது.'70 இல்இந்திய அரசு கலைத் துறை-யில் 'பத்ம ஸ்ரீ' பட்டம் அளித்தது.

இன்று வரை இவர் பாடிய "பழம் நீ அப்பா", "வாழ்க்கை என்னும் ஓடம்",
சிறைச்சாலை என்ன செய்யும்" போன்ற பாடல்கள் செவிகளைக் குளிர
வைக்கின்றன. 

தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர்

சிவாஜி கணேசன் : 1960 எகிப்து தலைநகரான கைரோவில் ஆசிய-ஆப்பிரிக்க பட விழாவில் வெளியான முதல் டெக்னிக் கலர் படம்,
வீரபாண்டிய கட்டபொம்மன். இதில் சிறந்த நடிகர் என்ற விருதைப் பெற்றார்.(இந்திய அரசு பிராந்திய சான்றிதழ் அளித்தது) சிவாஜியும் இசை
அமைப்பாளர் ஜி.ராமநாதனும் 'வெள்ளி பருந்து' பரிசு பெற்றனர்.

பிரான்சு 'செவாலியர்' விருது கொடுத்து சிவாஜியை கௌரவித்தது. மத்திய அரசு 45 வருட சாதனைக்காக 'தாதா சாகேப் பால்கே' விருதளித்தது.
தங்கத் தாமரையுடன் ஒரு லட்சம் ரொக்கப்பரிசு ஜனாதிபதி வழங்கினார்.
இதல்லாமல் மத்திய அரசு 'பத்ம ஸ்ரீ', 'பத்ம பூஷன்' பட்டங்களும் அளித்தது.

எம்.ஜி.ஆர்.: மத்திய அரசின் 'பாரத்', 'பாரத ரத்னா' விருதுகளைப் பெற்றார்.

கமல் ஹாசன்: இந்திய அரசின் 'பத்ம ஸ்ரீ' விருது பெற்றவர்.முதல் படத்திற்கே தேசிய விருது. பிலிம் பேர் விருது 18 முறை. 'மையம்' என்ற இலக்கிய பத்திரிகை சிறிது காலம் நடத்தினார்.நடன இயக்குனராகப்
பணி புரிந்தார். 'சிவாலயா' என்ற நடனக்குழு நடத்தினார். தமிழ்,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி,பெங்காலி மொழிகளில் நடித்துள்ளார்.
தன் உடலைத் தானம் செய்துள்ளார். 'ஹே ராம்' பட இயக்குனர். ஆங்கிலம்,
பிரெஞ்சு உட்பட எண் மொழி வித்தகர். கவிதை எழுதுவார். திரைக்கதை
பயிற்சிப் பட்டறை நடத்துகிறார்.

ரஹ்மான்: ஆஸ்கர் கமிட்டியின் 80 வருட சரித்திரத்தில் 2 ஆஸ்கர் ஒரே
நேரத்தில் வென்ற ஒரே இந்தியர்.உலக சுகாதார கழக டி.பி. நோய் எதிர்ப்பு
பிரசாரத்தின் உலக தூதுவர் பதவி அளிக்கப்பட்டது.'சேவ் தி சில்ட்ரன்'
அமைப்பில் இணைந்து பணி ஆற்றுகிறார்.இந்தோனேசியா சுனாமி நிவாரண நிதி, தி பாணியன், ப்ரீ ஹக்ஸ் காம்பைன் போன்றவற்றுக்கு
நிதி திரட்டித் தருகிறார். ஏழைக் குழந்தைகளின் இலவசக் கல்விக்கு
'ரஹ்மான் பௌண்டேஷன்' ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.விஸ்வநாதன்:பல்லவி-அனுபல்லவி-சரணம் என்றிருந்த தமிழ்
திரைப் பாடல்களை பல்லவி-சரணம்-சரணம் என மாற்றியவர்.

விவேக் : 'பத்ம ஸ்ரீ' வாங்கியவர்.

நாகி ரெட்டி: 'பல்கே' விருது பெற்றார்.

மனோரமா: ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னசில் இடம் பெற்றார்.

பிரேம் நசீர்: நானூறு படங்களுக்கு மேல் கதா நாயகனாகவே நடித்து
கின்னசில் இடம் பெற்றவர்.

கண்ணதாசன்:தமிழ் நாடு அரசவைக் கவிஞர். திரைப்படங்களுக்கு ஐந்து
ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்கள் எழுதி இன்று வரை மக்கள் மனதில்
நிலைத்திருப்பவர்.பெங்களூரின் வேத பண்டிதர்களை வரவழைத்து சூரிய
பகவான் பற்றிய மந்திரங்களையும், அர்த்தங்களையும் தெரிந்துகொண்டு
'கர்ணன்' படப் பாடல்களை எழுதினார்.

வட இந்தியர் எனினும்  'இந்திய திரைப்பட உலகின் தந்தை' எனப் பெயர்
பெற்ற இயக்குனர் வி. சாந்தாராம், சர்வ தேச தரத்திற்கு படங்களை தயாரித்து
உலகில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திய வங்க இயக்குனர் சத்தியஜித் ரே
இருவரையும் நினைவு கூறுதல் அவசியம். ஏனெனில் பொதுவாகவே இந்தியப்
படங்கள் இந்த இருவரிடம் இருந்தும்   பெற்ற நன்மைகள் ஏராளம்.

'பட்டணத்தில் பூதம்' என்ற படத்தில் கண்ணதாசன் எழுதிய அருமையான
பாடல் ஒன்று:

உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுத்து
தொல்லை தனக்கென்றும் சுகமெல்லாம் மகற்கென்றும்
பண்பு தெரியா மிருகம் பிறந்தாலும்
பசித்த முகம் பார்த்துப் பதறும் நிலை பார்த்து
இருக்கும் பிடி சோறு தனக்கென்று எண்ணாமல்
துடிக்கும் உயிர் கண்டு தோளில் இடம் தந்து
அள்ளி இடும்போதெல்லாம் அன்பையே சேர்த்தெடுத்து
சொல்லாமல் சொல்லியிடும் தேவதையின் கோயிலது
பால்தரும் கருணை அது பழம் தரும் சோலை அது
கொடுக்கின்ற கோவில் அது அணைக்கின்ற தெய்வம் அது! 

தமிழ் சினிமாவின் சாதனைகள்

அதிக நாள் ஓடிய படம்: 1944 ஆம் வருடம் வெளியான ஹரிதாஸ். ராயல் டாக்கீஸ் வெளியீடு. தியாகராஜ பாகவதர் நடித்தது. 16 -10 -1944  முதல் 
22 11 1946  வரை (110  வாரங்கள்) சென்னை ப்ரோட்வே திரை அரங்கில் மூன்று  
தீபாவளி தினம் கண்டது.


சாதனை படைத்த  படம்: இரண்டு லட்சம் செலவில் படங்கள் தயாரிக்கப்
பட்ட அந்தக் காலத்தில், 35 லட்சம்செலவில் எஸ்.எஸ். வாசன் 'சந்திரலேகா'
வை எடுத்து ஒரே நேரத்தில் 120 திரை அரங்குகளில் வெளியிட்டார்.
இப்படம் ஒன்றே கால் கோடி வசூல் செய்து சாதனைப் புரிந்தது.

ஒரு நாளில் எடுக்கப்பட்ட படம்: 11 இயக்குனர்கள், 12  கதாநாயகர், 8  நாயகியர் 
கொண்டு கின்னசில் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்ட "சுயம்வரம்".

அதிக பாடல் நிறைந்த படம்: 1934 இல் வெளியான ஸ்ரீ கிருஷ்ணா லீலா - 62   பாடல்கள்.

ஒரே செட்டில் எடுக்கப்பட்ட படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்.

70 எம்.எம். திரைப்படம்: 1986 வெளிவந்த மாவீரன்-ரஜினி அம்பிகா நடித்தது.

தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட முதல் படம்: 1943 இல் வெளியான 
கன்னட அரிச்சந்திரா .

வெளி நாட்டு படபிடிப்பில் முதல் தமிழ்ப்படம்: 1937 இல் லண்டனில் 'நவ யுவன்' எடுக்கப்பட்டது.

முதல் சினிமாஸ்கோப்:1973 இல் ஆனந்த் மூவிஸ் ராஜ ராஜ சோழன் வண்ணப்படத்தை வெளியிட்டது.சிவாஜி,முத்துராமன்,சிவக்குமார்,லட்சுமி நடித்தது.

முதல் தமிழ் வண்ணப்படம்:அலிபாபாவும் 40 திருடர்களும்-கேவா கலர்

முதல் தமிழ் ஈஸ்ட்மென் கலர்ப்படம்: 1964 - காதலிக்க நேரமில்லை.

முதல் இரட்டை வேடம் கொண்ட படம்: 1940 - உத்தமபுத்திரன் - நடிகர்
பி.யு. சின்னப்பா.

10 வேடங்கள் கொண்ட  படம்: 'தசாவதாரம்' - கமல் ஹாசன்.

ஆடல்-பாடல் இல்லாதத் தமிழ்ப்படம்: 1954 - ஏவிஎம் தயாரிப்பு - இயக்குனர்
பாலச்சந்தர்-"அந்த நாள்"

மத்திய அரசின் தங்கப் பதக்கம் பெற்ற படம்:ஏவிஎம் தயாரிப்பான
'சம்சாரம் அது மின்சாரம்'.

ஆறு மொழிகளில் வெளிவந்து இந்திய அரசின் வெள்ளிப் பதக்கம் பெற்ற
முதல் தமிழ்ப் படம்: எஸ் எம் ஸ்ரீ ராமுலு நாயுடு தயாரிப்பில் எம்ஜியார்
பானுமதி நடித்த 'மலைக் கள்ளன்'. நாமக்கல் வே. ராமலிங்கம் பிள்ளையின்
நாவல். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,இந்தி, சிங்களம் ஆகிய
மொழிகளில் வெளிவந்தது.

குடிமைப்பயிற்சி

தேசிய அந்தஸ்து ஒருவனை அந்த நாட்டுடன் இணைக்கின்றது. அதன் மூலம் அவன் நாட்டின் பிரஜை ஆகுகிறான்.

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வரலாற்றைகொண்டிருக்கும். அந்த நாட்டின் குடிமகனாக இருக்க அதனுடைய சட்டங்களைத் தெரிந்து மதித்து நடக்க வேண்டும்.

ஒவ்வொரு பிரஞ்சு நாட்டவர்க்கும் பலக் கடமைகள் மற்றும் சட்டங்கள் உள்ளன. அதேபோன்று பிரான்சு நாட்டில் தங்க விரும்பும் வெளிநாட்டவர்களுக்கும் பலக் கடமைகள் மற்றும் சட்டங்கள் உள்ளது.

அவர்கள் விருப்பப்பட்டு சில விதிமுறைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில் அவர்கள் பிரஞ்சு பிரஜை ஆகலாம்.

பிரஞ்சு பிரஜையாக இருப்பது அல்லது ஆகுவது:

பிறப்பால் பிரஞ்சு பிரஜை: வம்சாவழியினால், உங்கள் பெற்றோரில் ஏதேனும் ஒருவர் அல்லது இருவரும் பிரஞ்சு நாட்டின் தேசிய அந்தஸ்து பெற்றவராக இருப்பின் நீங்கள் எங்கு பிறந்திருந்தாலும், தங்கள் பெற்றோர் கல்யாணம் செய்துகொண்டிருந்தாலும், செய்துகொண்டிருக்காவிட்டாலும் 
"மண்ணின் இரட்டைச் சட்டத்தினால்" பிரான்சு நாட்டில், பிரான்சு நாட்டில் பிறந்த அயல் நாட்டு பெற்றோர்களுக்கு பிறந்தவராக இருந்தால்.

அயல்நாட்டு பெற்றோர்களுக்கு பிரான்சு நாட்டில் பிறந்தவராக இருந்து, கடந்த 5 வருடமாக பிரான்சு நாட்டில் வசிக்கும் பட்சத்தில் உங்களின் 18 -வது வயதில் பிரான்சு நாட்டின் பிரஜை ஆவீர்கள். மேற்கூறியவற்றை பூர்த்தி செய்யும் பட்சத்தில் மாவட்டத்தின் உயர்நீதிமன்றத்தில் உள்ள பதிவாளரிடம் தேசிய அந்தஸ்த்திற்கான சான்றிதழைப் பெறக் கோரிக்கை மனு விடுக்க வேண்டும்.

16  அல்லது 17 -வது வயதிலேயே (இளைஞர்களால் விடுக்கப்படும் கோரிக்கையின் மூலம்) அல்லது 13  அல்லது 14 -வது வயதிலேயே (குழந்தையின் ஒருமித்த சம்மதத்துடன் சட்டபூர்வ பாதுகாவலரால் விடுக்கப்படும் கோரிக்கையின் மூலம்) முன்கூட்டியே பிரெஞ்சு நாட்டின் தேசிய அந்தஸ்த்தைப் பெறலாம். இதற்காக நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியிடம் உங்கள் கோரிக்கையை பதிவு செய்ய வேண்டும்.

திருமணத்தின் மூலம் தேசிய அந்தஸ்தைப் பெறலாம்.

ஒரு வெளிநாட்டவர் பிரஞ்சு நாட்டவரை மணந்திருக்கும் பட்சத்தில் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியிடம் திருமணம் நடந்ததிலிருந்து திருமண வாழ்க்கை நல்லபடியாகத தொடர்ந்து நடந்திருந்தால், திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி கோரிக்கையை பதிவு செய்யலாம்.

நீங்கள் 5  வருடம் தொடர்ந்து முறையாக பிரான்சு நாட்டில் வசித்திருக்கும் பட்சத்தில் உங்களுக்கு பிரஜா உரிமை தருமாறு பிரதம மந்திரியைக் கேட்டுக்கொள்ளலாம். அதற்கான மனுவை நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

முற்றிற்று

இணையமெனும் இனியவலைஇணைய உரையாடல் - மின் உரையாடல் (சாட்)

மின் இதழ்கள் , மின்னஞ்சல்  போன்ற இணைய  செயல்பாடுகள் பற்றி இதுவரை பார்த்தோம். இணைய உரையாடல் பற்றித்  தெரிந்துக்கொள்வோம் . இணைய இணைப்பின் வழியாக எழுத்து, பேச்சு மூலமாக உரையாட முடியும். மின்னஞ்சல் போன்று அல்லாமல் உடனடியாக எதிர் முனையில் இருப்பவரின்  மறுமொழியைப் பார்த்தே உரையாட ஏதுவாக  இருப்பதால் அனைவரும் இதை விரும்பிப் பயன்படுத்துகின்றனர்.

இரு நாட்டு அரசர்களுக்கிடையே தூது செல்லத் தூதுவர்கள் இருப்பது போலவே இங்கு இருவரிடம் உரையாடலை நிகழ்த்த  மென்பொருள் உதவுகிறது.  இந்த மென்பொருளைத்    தூதுவர்  என்றே அழைக்கிறார்கள். எம்.எஸ்.எம் மெசெஞ்சர்   , ஸ்கைப் , யாஹூ மெசெஞ்சர் குறிபிடத்தக்கவை.
மேலே குறிப்பிட்ட ஏதாவது  ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி  ஒருவர் அல்லது பலருடன்  உரையாடலாம்.  உரையாடல் பெரும்பாலும் செய்திகளைத் தட்டச்சு செய்வதன் மூலம் நடைபெறுகிறது . துரிதமாகத் தட்டச்சு செய்வது அவசியம். இணைய சுருக்கச் சொற்களைப் பயன்படுத்தலாம். உணர்ச்சிச் சின்னங்களை (சிம்பல்) பயன்படுத்துவது வரவேற்கத் தக்கது.

உலகின் பெரும்பாலான மொழிகளை ஆதரிக்கும் ஒருங்குறி  முறையைப் பயன்படுத்துவதால் உலகின் எப்பகுதியில்   இருந்தாலும் இலவசமாக உரையாடக் கூடும். பொழுது போக்குக்காகவும் பல்வேறு செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும் உருவாக்கப்பட்டது. இந்த எண்ணப்பரிமாற்றங்களைத்      தங்கள் சொந்தப் பெயரிலோ புனை பெயரிலோ நடத்தலாம்.

பலருடன் உரையாடுவதால் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.புதிய நண்பர் வட்டம் உருவாகும். ஒரே வயதினராக இருந்தால் பள்ளிப் பாடங்களைப்பற்றி விவாதிக்க, புரியாதவற்றைத் தெளிவு  செய்துகொள்ள முடியும். பல நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் நாடு, பண்பாடு, உணவு போன்ற செய்திகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.  அரட்டையில் மூழ்கி இளைஞர்கள் பல மணி நேரத்தை விரயம் செய்யும் ஆபத்தும் உண்டு. புகைத்தல், மது அருந்துதல், போதை பொருட்களுக்கு அடிமையாதல் போல இணையமும்  அடிமைப்படுத்தும் சாதனமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இணைய அரட்டை மூலம் தூரத்தில் இருப்பவர்களைச் சந்தித்து மகிழ்பவர்கள் அருகில் இருக்கும் நண்பர்களைச் சந்திப்பதைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்ற குறைபாடும் உண்டு.  

இணையம் வழி உரையாடல் செய்யும்போது மறு முனையில் இருப்பவர் எப்படிப்பட்டவர், ஆணா பெண்ணா  வயதானவரா போன்ற தகவல்கள் எதுவும் தெரியாது.இணையத்தில் சாட்டிங் மூலம் அறிமுகமாகி நண்பர்களாகிக் காதலர்கள்  ஆனவர்களும் தம்பதியானவர்களும் உண்டு. இதில் சிக்கிவிட்டு விடுபட முடியாமல் பணம்,பெயர்,நிம்மதியை இழந்து, பெரும் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே .

சில எச்சரிக்கை வழிகளைப் பின்பற்றினால் மோசமான விளைவுகளைத் தவிர்க்கலாம். இணையத்தில் உரையாடும் போது  மரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள் ; பிறர் மனம் புண் படாதவாறு நடந்துகொள்ளுங்கள். வீணான பேச்சுக்கள்,    தேவையில்லாத விடயங்கள், விவாதங்களைத் தவிர்க்கவும். எந்த நிலையிலும் சொந்த (பர்சனல்)  தகவல்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள் . உங்கள்  படத்தை ஒருபோதும் அனுப்பாதீர்கள் .உங்களை நேரில் சந்திக்க விரும்பினால் தவிர்த்துவிடுங்கள். உங்கள் படிப்பு, வேலை சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு உதவியாகவும் நம்பகமானவர்களகவும்  இருப்பார்கள் என்றால் பலர் கூடும் இடங்களில் அல்லது உங்களின் உற்ற நண்பர்கள் மத்தியில் சந்திப்பை வைத்துக் கொள்ளுங்கள். இன்று நடக்கும் பாலியல் மோசடிகள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு  செயல்படவும். இதில் மிகவும்  எச்சரிக்கை அவசியம்.
அறிமுகம் இல்லாத புதிய நபர்களுடன் குறிப்பாக எதிர் பாலினத்தாருடன்    சாட் பண்ணுவதை தவிர்ப்பது நல்லது.    காலம் தாழ்த்தி இரவு நேரங்களில் உரையாடல் வேண்டாம். தற்பொழுது ஆண்களைவிடப் பெண்கள் இந்த உரையாடலில் அதிகம் ஈடுபடுவதாக ஆய்வு  ஒன்று தெரிவிக்கிறது.சாட் பண்ணுவது நேர் முகமாக அல்லாமல் மறைமுகமாக  ஆணும் பெண்ணும் தனிமையில் இருப்பது போன்றதே. ஒருவர் நல்லவர் என்று நினைக்கும் அதே நேரத்தில் அவர் கெட்டவராகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.     
நேரிடையாக பாலியல் தவறுகளில் ஈடுபடாமல் இணையத்தில் உரையாடல்களிலும் சிற்றின்பப் பேச்சுகளிலும் சிக்கிக் கொள்கின்றனர்.அவற்றிக்கு அடிமையகிவிடுகின்றனர்.      விடலைப் பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் - பாலியல் ஈர்ப்பு பற்றிக்கொள்ளும் இந்த வயதினர் எதிர் தரப்பில் உரையாடும் நபர் குறித்து மனத்துக்குள் கற்பனையில் ஓர் உருவத்தை வரைந்து பாலியல் உரையாடல்களில் இலயித்துப் பொழுதையும் உடல்  நலத்தையும்  கெடுத்துக் கொள்கிறார்கள். பெற்றோர்கள் இது குறித்து மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். குடும்ப உரையாடல்களை அதிகப் படுத்தவேண்டும்.செய்திகளை, தங்கள் அனுபவங்களை, நேரத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். நல்ல நண்பர்களை வீட்டுக்கு அழைத்து உரையாடல்களை ஊக்குவிக்கலாம் . தேவையற்ற இணைய தளங்களை தடுக்கக்கூடிய மென் பொருட்களைக் கணினியில் பொருத்தலாம்.

இணையம் தரும் போலியான தைரியத்தால் தாழ்வு மனப்பான்மை உடைய சில ஆண்களும் பெண்களும் முகம் தெரியாத பலருடன் உரையாடித் தங்களை ஹிரோவாக நினைத்துக்  கொள்கிறார்கள். இவர்கள் தங்கள் சராசரி வாழ்கைக்குத் திரும்ப விரும்புவதே கிடையாது. கற்பனை உலகிலேயே சஞ்சரித்துத் தங்கள் வாழ்க்கையையும் பிறருடைய வாழ்க்கையையும் கெடுத்து விடுகிறார்கள்.
திருமணமான சிலரும் இத்தகைய உரையாடலில் ஈடுபடுகிறார்கள் .இணையத்தில் ஒரு துணையை வைத்துக்கொண்டு உரையாடல்களைத் தொடர்பவர்கள் மனத்தளவில் வாழ்க்கைத்  துணைக்குத்   துரோகம் இழைப்பவர்களே. இதை மறைக்கப் பொய் பேசுவது . . . எனக் குடும்ப வாழ்க்கையின் மதிப்பீடுகள் சிதைவடைகின்றன. உரையாடல்களைச் சேமித்து வைக்கும் வசதியும் உண்டு. பின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு தேவையானதை மட்டும் சேமிப்பது நல்லது.
 என்ன உரையாட நண்பர்களைத் தேடுகிறீர்களா ?!

அடுத்த முறை சந்திக்கும்  வரை

திருமதி லூசியா லெபோ.