அன்புடையீர்,
இன்றைய உலகம் "திரை" எனும் மாய வலையின் கைகளுக்குள் அடங்கிக் கிடக்கிறது என்றால் அது மிகையானதல்ல. அரங்குகளில் மட்டுமல்ல; வீடு-
களுக்கும் அது வருகை தந்து வெகு காலமாயிற்று.ஒரு கதைப் பின்னல் என ஆரம்பித்து, தொடர் கதையாக மாறி,குழந்தைகளுக்கானபொழுதுபோக்கு என விரிந்து இன்றைய உலகை ஆட்டிப் படைக்கும் பெரும் சக்தியாக மாறி விட்டது.
ஆரம்ப காலத்தில் சமுதாய பிரதிபலிப்பாக இருந்த அது இன்றைய சமூகத்தை ஆட்டிப் படைக்கும் உருவெடுத்துவிட்டது. அன்றையக் கதைகளில் கதாசிரியர்கள் மக்களுக்கு முன்னுதாரணம் தரக்கூடிய பாத்திரங்களைப் படைத்தார்கள்.அன்பும்,காதலும்,பாசமும், விட்டுக்கொடுத்தலும்,தியாகமும் நிரம்பிய அவற்றின் தாக்கம் மனித வாழ்வுக்கு உரம் சேர்த்தது.
சுவை சேர்க்கவும், சமுதாயச் சீரழிவுகளைக் காட்டுகிறோம் என்ற போர்வையில் தரமற்றவைகளையும் எந்த சீர்திருத்த நோக்கமும் இன்றி
அப்பட்டமாகக் காட்டுவதன் பலன் சிந்திக்க நேரமின்றி அவற்றை
தங்களுக்குள் இறக்குமதி செய்யும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள்.
நேருக்கு நேர் நின்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் அந்தக் காலத்திய
அமெரிக்க பகை உணர்வு, திரைப்படங்கள் மூலம் இன்றைய உலக நியதி
ஆகிவிட்டது. ஒருவரைப் பிடிக்கவில்லையா, அவரை அழித்தே விடலாம்.
இதனை நிறைவேற்ற உனக்குத் திறனோ அன்றி வகையோ இல்லை என்றால்
கவலையே இல்லை. கூலிப் படைகள் ஆயிரம் உண்டு.
கதா நாயகர் 'சிகரெட்' பிடிப்பது பல கோணங்களில் அழகாகக் கவர்ச்சியாக
இருக்கலாம். ஆனால் இன்றைய இளைஞர் அதன் தாக்கத்தால் புற்று நோயை-
யும், காசத்தையும் விலை கொடுத்து வாங்குகிறார்கள். பிறர் முன் மது
அருந்த வெட்கப்படும் மன நிலை போய், பலர் கூடி மகிழ்வது என்றாலே மது
அருந்துவது என்றாகிவிட்டது.
சுய நலமும், வக்கிர புத்தியும் கொண்டவர்களை 'வில்லன்' என்று அறிமுகப்
படுத்தியது போக, இன்றையப் படங்களில் கதாநாயகர், நாயகி மட்டுமல்லாமல்
தாய் கூட வன்முறையும் கேடு நினைக்கும் கெடுமதியும் கொண்டவளாகச்
சித்தரிக்கப் படுகிறாள்.
குழந்தைகளுக்கான விளையாட்டுகளில் காட்டப்படும் வன்முறையின்
விளைவு பற்றிய ஆராய்ச்சி ஒன்று "சின்னஞ் சிறுவர் இம்மாதிரி உணர்ச்சியின்
போது ஏற்படும் கிளர்ச்சிக்கு பழகிய பிறகு, அவர்களுக்கு சாதாரண நிகழ்வுகள்
திருப்தியைத் தருவதில்லை. பாலுணர்வு கூட வன்முறையில் தான் அவர்-
களுக்கு இன்பமூட்டும்!" என்கிறது. இன்றைய பலாத்காரக் கொடுமைகளின்
விளக்கமாக இது தோன்றுகிறது. இனி நாளைய இளைஞர்களின் நிலை
என்னவோ!
அரசுகள் இப்படிப்பட்ட சமுதாய அழிவைப் போக்க ஆவன செய்ய வேண்டும்.
ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பது இத்தனை ஆண்டுகளால்
ஏற்பட்ட அனுபவம். நல்ல மனமும்,சமூகம் நல்வழியில் நடக்க வேண்டும்
என்ற ஆர்வமும் உடையவர்கள்தான் முன் வந்து இந்தப் பேரழிவிலிருந்து
மனித குலத்தைக் காக்க வேண்டும்.
திருமதி சிமோன்