காணொளி உரையாடல்
வெளி நாட்டில் இருக்கும் நம் சொந்தங்களின் குரலைக் கேட்பது மட்டுமல்ல அவர்களை நாம் பார்த்துக்கொண்டே பேசலாம். இதுவரை முகம் பார்க்காமல் நட்பு வளர்த்தவர்கள் இனி ஒருவரை ஒருவர் பார்த்தபடி சாட் செய்யலாம். எந்த விளம்பர இடைஞ்சலும் இல்லாமல் வேகமாகவும் நேரடியாகவும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதற்கு வீடியோ வழி சாட்டிங் துணை செய்கிறது. இது காணொளி உரையாடல் என்றும் அழைக்கப் படுகிறது. இதற்கு அதிகம் பயன் படுத்தப் படுவது Skype என்ற மென்பொருள். ஒரு நேரத்தில் ஒரு பயனர் கணக்கைத்தான் பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் பல Skype கணக்குகளில் தொடர்புக் கொள்ள விருப்பம் என்றால் Multi Skype Launcher என்ற மென் பொருளைப் பயன்படுத்த வேண்டும். ஆறு வழி வீடியோ சாட்டிங் செய்யும் வசதியை ஓவூ என்ற மற்றொரு மென்பொருளும் தருகிறது. முன்னணி வகிக்கும் சமூக இணைப்பு இணைய தளமான பேஸ்புக, Skype தொழில் நுட்பத்துடன் இணைந்து இந்த வீடியோ சாட் செய்யும் முறையை அறிமுகப் படுத்தியுள்ளது. இவை அனைத்துமே இலவசச் சேவைகளே.
நட்பு, குடும்ப உறவு இவற்றை மேம்படுத்தும் இந்த தொழில் நுட்பம் பள்ளிகளில், கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.- இந்தத் தொழில் நுட்பத்தால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்ட பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் பாடத்திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடலாம்.
- வெளிநாட்டுப் பள்ளிகளுடன் இணைப்பு இருந்தால் அவரவர் கலாச்சாரம், மொழி மற்றும் பல செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
- தாங்கள் படித்த புத்தகத்தின் ஆசிரியருடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
- பயிற்சி முகாம்களில் பங்கேற்க முடியாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பயனைப் பெறலாம்.
- பிற மொழிகளைக் கற்க நல்ல சாதனம் இந்தத் தொழில் நுட்பம் .
- படிப்பில் பின்தங்கி இருக்கும் பிள்ளைகள் பள்ளி நேரத்துக்குப் பிறகு பள்ளியிலோ தங்கள் விட்டிலோ tutors என்ற ஆசிரியர்களின் உதவியை பெறலாம்.
- வெளி ஊரில் அல்லது வெளி நாட்டில் உள்ள ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் சிறப்பு உரை ஆற்ற பள்ளிகள் ஏற்பாடு செய்யலாம் .
வளர்ந்து வரும் கண்ணினி நுட்பத்தால் வணிகத்துறை, அரசுத்துறைகள், தனியார் நிறுவனங்களில் கலந்துரையாடல், கருத்தரங்கு, பேட்டி காணுதல், பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் நேர்முக பேட்டி- interview- இவற்றிற்கு இந்தக் காணொளி உரையாடல் பயன் படுத்தப் படுகிறது.
உங்களிடம் கணினி வசதி இருந்தால் ஒரு சிறு காமிரா, மேற்குறிப்பிட்ட மென் பொருட்களில் ஏதாகிலும் ஒன்றைத் தெரிவு செய்து உங்கள் உறவுகள், பேரப் பிள்ளைகள், நண்பர்களுடன் அளவளாவி மகிழுங்கள். (எதிர் திசையில் இருப்பவர்களுக்கும் இந்த இணைப்பு வசதி இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்துங்கள்).
திருமதி லூசியா லெபோ