பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 30 août 2012

நாடகச் சிந்தனைகள் 


mercredi 29 août 2012

எண்ணப் பரிமாற்றம்

                                                    

அன்புடையீர்,

வணக்கம். 'உலகமே ஒரு நாடக மேடை', நாமனைவரும் அவரவர் பாத்திரங்களை 'ஆட்டுவிப்பவன் ' விரும்பியவண்ணம் ஏற்றுக்  குறைவற நடித்து முடிக்கிறோம் என்பது யதார்த்தமான உண்மை . ஒரு வேளை, நாம் விரும்புகிற வகையில் அது இல்லாது போகும் ஏக்கமோ, அல்லது அந்த ஏக்கத்தைக் கற்பனையிலாவது போக்கிக் கொள்ள விழையும் தாகமோ, மனிதன் பெரும்பாலும் கலைகள் மூலம் தன்னையும் 'படைப்பவன்' ஆக்கிக்கொண்டு  நிறைவு காண   விரும்புகிறான்  என்று தோன்றுகிறது.

ஏனெனில் பொழுது போக்கிற்கென அவன் படைத்த இசையாகட்டும், அன்றி நாட்டியமாகட்டும் உள்ளார்ந்த சோகத்தையும், அந்த வலியையும் சில வேளைகளில் பிரதிபலிக்கவேச்  செய்கிறது. கதைகளும், நாடகங்களுமோ  வாழ்க்கைப் பிரச்சனைகளையும், குணக்கேடுகளையும் அதனால் விளையும் துன்பங்களையும் அலசாமல் இருப்பதில்லை ! ஆனால் முடிவு மட்டும் 'சுபம்' என்றே இருக்கும். ஒரு சில நிதர்சனவாதிகள் முடிவையும் துயரமாகவே காட்டுவதுண்டு. உண்மையில் வாழ்க்கையும் அவ்வாறே சில கேள்விகளுக்கு பதில் தராது, சில குழப்பங்களுக்கு விளக்கம் தராது சடுதியில் முடிந்துவிடும் புதிராகத்தான் உள்ளது.

ஆனால் கால மாற்றம் தற்போதுள்ள சூழலை இலக்கின்றி, இன்னும் சொல்லப்போனால் கவலைதரும் வகையில் நிறுத்தி இருக்கிறதோ என்ற எண்ணம்  சிந்திக்கும் எல்லோருக்கும் உண்டாவதைத் தடுக்க இயலாது. கதைகள் - ஒரு பக்கம், அரைப் பக்கம், இரண்டு வரிகள் எனக் குறைந்து கொண்டு வருகின்றன. அதற்கு மேல் படிப்பதற்கு பொறுமை இருக்காது என்று முடிவு கட்டி விட்டார்கள் போலும் ! திரைப்படங்கள் கவர்ச்சியையும் அர்த்தமற்ற நகைச்சுவையையும் புரியாத பாடல்களையும் சத்தம் மிகுந்த இசையையும் இட்டு சில சண்டைக் காட்சிகளுடன் நிறைவு கொள்கிறது. இதில் பல படங்கள் முடங்கிக் கிடக்கின்றன என்று பொருமுகிறார்கள். தொலைகாட்சி, தன் தொடர்களில் பெண்களை, முக்கியமாகத் தாயையும், இளம் பெண்களையும்  பயங்கரமான கொடுமைக்காரிகளாகச் சித்தரிக்கிறது. சமூகத்தில் மட்டும் பெண்களைத் தெய்வமாக மதிக்க வேண்டும் என்றால் , யார் முன் வருவார் ?  கால் மணி நேரப் படத்தில் எவனாவது போதையில் தள்ளாடும் காட்சி வராமல் இருக்காது. பத்திரிக்கைகள் ஜனரஞ்சகம் என்ற பெயரில் சினிமாச் செய்திகள், யாருக்கும் உதவாத நடிகர்களின் பேட்டிகளால் நிரப்புவதையும் தனக்கே உரித்தானத் தமிழில், (உ ம் . இப்படி அதிரி புதிரி ஹிட்டாக  அதுக்கான உழைப்பையும் பெருக்கினோம் .)  இதைத் தமிழ் என்று சொல்லலாமா என்று கூடத் தெரியவில்லை, தருகின்றன.   இந்த நிலையில் தற்போதைய நாடகங்கள் எப்படி உள்ளன, நாடகத்தின் வருங்காலம் என்னவாகும் என்று புரியவில்லை .

ஒரு சாதாரண சாமான்யனுக்குத் தோன்றும் இந்த உண்மைகளை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து பரிகாரம் ஏதாவது செய்ய மாட்டார்களா என்று ஆசைப்படுவதைத் தவிர நம்மால் என்ன செய்ய முடியும்?

திருமதி சிமோன்
நாடக வரலாறு

                                                      

கிட்டத்தட்ட 2000 வருடங்களாக "நாடகம் "  என்றவோர்  கலை மக்களை மகிழ்வித்து வருகிறது. உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழில் இது "கூத்து " எனப்பட்டது . ரசிகர் முன் நேருக்குநேர், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட    கதை , பாத்திரங்கள்-அவர்கள் உரையாடல் இவற்றோடு பாடல் , நடனம் ஆகியவற்றின் கலவையே நாடகம். அன்றைய "தெருக்கூத்து" வீதியில் நடத்தப்  பட்டே அப்பெயர் பெற்றது. (இன்றும் கிராமங்களில் இது நடைபெறுகிறது )பின்னர் மேடைகளில் நடிக்கப்பட்டது . அன்று முதல் இன்று வரை பொழுது போக்கு என்றாலும் புத்துணர்ச்சி தருவதாக, நடிப்பவர் - ரசிகர் இருவருக்கும் இடையில் உயிரோட்டம் தருவதாக நாடகங்கள் விளங்குகின்றன .  கலாச்சாரம் , அரசியல் , சோகம் , துக்கம் என கதைக்களன்      எதுவாக இருந்தாலும் உடனடி பலனைக் கண்கூடாக அறிந்து விடலாம் என்பதே இதன் சிறப்பு .

இந்தியாவில் கி .மு . 300 களிலேயே நாடகம் இருந்ததாகக் கூறப்படுகிறது . ரிக் வேத காலத்தில் ஊர்வசி , இந்திரன் -ராணி நாடகக் கலைஞர்களாக  காட்டப்பட்டனர்  முதலில் சமஸ்கிருதத்தில் இருந்து , பின்னர் ஹிந்தி ,மராத்தி பெங்காலி மொழிகளிலும் நாடகம் நடத்தப்பட்டது . ராமாயணம் , மகாபாரதம் , அர்த்த சாஸ்த்திரங்கள் நாடக உத்தியைக் கொண்டவை என்கிறார்கள் .பரத முனி இந்திய நாடகத் தந்தை என்றழைக்கப்படுகிறார் . இவரே பேச்சு , பாடல் , இசை , நாட்டியம் இவற்றை நாடகத்தின் அடிப்படையாக உருவாக்கினாராம் ! கி .பி . 15 வரை இந்தியாவில் தமிழ் கேரளம் ,கன்னடம், ஆந்திர -உத்திரப் பிரதேசங்கள் , குஜராத் என  நாடகங்கள் இதே பாணியில் நடத்தப்பட்டன .

அன்னியர் வரவினால் மாற்றங்கள் ஏற்பட , ஒவ்வொரு பகுதியும் தனக்கென ஒரு பாணியைப் பின்பற்ற ஆரம்பித்தனர் .  1765 இல் இரண்டு ஆங்கில 'காமெடி' நாடகங்கள் மேடையேறின . 1789 இல் காளிதாசரின் "சகுந்தலா " மொழி  பெயர்க்கப்பட்டது . பிறகு போர்ச்சுக்கல் நாட்டினர் பல ஆங்கில நாடகங்கள் மேடையேற வழி வகுத்தனர். விடுதலைக்குப் பின் இன்றைய நாடகங்கள் உருவாயின . திறந்தவெளி நாடகங்களை இந்தியாவில் பிரபலமாக்கியவர் பாதல் சர்க்கார்.  முக்கியமாக நாடகம் நிகழ்த்தப்படும் இடம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உடைத்தார். இவருக்கு  1972 இலேயே நாடகத்திற்காக பத்மஸ்ரீ விருது அளித்தது மத்திய அரசு.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கிபி 1246 முதல் '72 வரை 3 ஆம் இராசேந்திர சோழன்  நாடகக் கலையைப் பெரிதும் வளர்த்தான் . 17 ஆம் நூற்றாண்டில் அரண்மனை, கோவில்களில் மட்டுமே நடந்துவந்த நாடகங்கள் மக்கள் மன்றத்துக்கு வந்தன . 19ஆம் நூற்றாண்டில் தெருக்கூத்து கோவிந்தசாமிராவ் இக்கால நாடக முறைக்கு மாற்றினார் .

நாடகத்திற்கு உயிரூட்டியவர்கள் :

பம்மல் சம்பந்த முதலியார் : 1891 இலேயே தமிழ் உரைநடை நாடகங்கள் 100 க்கு மேல் நடத்தியதுமன்றி, நாடக ஆராய்ச்சி நூலும் வெளியிட்டார் .

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் : நடிகர் , இயக்குனர் ஆன இவர் தெருக்கூத்துகளைப் புதுப்பித்து 50க்கு மேற்பட்ட நாடகங்களை நடத்தினார் . நாடகத்தில் திருக்குறள்களைப் புகுத்தினார் . இவரது வள்ளித் திருமணம், பவளக்கொடி , சத்தியவான்சாவித்திரி , நல்லதங்காள் போன்றவை தமிழகத்தில் இன்றும் நடைபெறுகின்றன .

சிசின்னையா : கிருஷ்ண வினோத சபா மூலம் மின் விளக்கொளி, காட்சி அமைப்பு ,வண்ணத்திரை போன்றவற்றை அறிமுகப்படுத்தியதோடு, மேடையில்  மான், பசு ஆகியவற்றையும் நடிக்க வைத்தார் .

உர மளித்தவர்கள் : 

நவாப் இராசமாணிக்கம் :    இவரது நாடகமொன்று 8000 முறை மேடை ஏறியதாம் .

20ஆம் நூற்றாண்டில் 50 ஆண்டுகள் சீரான வளர்ச்சியினை நாடகம் கொண்டது.

சிவ சண்முகம் பிள்ளை 'சம்பூர்ண ராமாயணம் , அரிச்சந்திரா ', போன்றவற்றையும் ,
திக சண்முகம் திக பகவதி போன்றோர் புராணம் ,வரலாறு ,சமூகம் ,விடுதலை  போன்றக் கருத்துகளில் கிட்டத்தட்ட 75 நாடகங்கள்,   'ராஜ ராஜ சோழன் உட்பட அளித்தனர் .

1922இல் கிருஷ்ணசாமி பாவலர் தி .கே .எஸ் . சகோதரர்களுடன் இணைந்து பல தேசியப் படைப்புகள், கதர் வெற்றி உள்ளிட்டு அளித்தனர் .

மனோகர் 'இலங்கேஸ்வரன் ' முதலான நாடகங்களைத் தந்தார் . என்  எஸ் கிருஷ்ணன் நகைச்சுவையும் சமூகசீர்திருத்தமும் கலந்தளித்தார் .

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி மூலம் எம் ஜி ஆர்,  பி யு சின்னப்பா  போன்றவர்களும், மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத சபா மூலம் எம் ஆர் ராதா , சிதம்பரம் ஜெயராமன் போன்றோரும் பிரபலமடைந்தனர் .

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பெண்கள் நாடகங்களில் பங்கு கொள்ள ஆரம்பித்தனர் . எனினும் அப்போதிருந்த 69 சபைகளில் 6 சபைகளை பெண்களே நடத்தினர் !

பிறகு விடுதலை இயக்க நாடகங்கள் , நாவல்களை நடித்தல், திராவிட இயக்கங்கள் தங்கள் கருத்துக்களைப் பரப்புதல் என  போக்கு மாறியது .

பாவேந்தர் 50 நாடகங்கள் போல் எழுதினார் .அண்ணா, கருணாநிதி , பாலச்சந்தர் , சோ,மவுலி, விசு எனப் பலர் நாடகத்திலிருந்து திரைக்கு மாறினார்கள் .

சிவாஜி கணேசனைப் பற்றித்தனியே  தான் கூற வேண்டும் .ஏனெனில் அவர்  எங்கிருந்தாலும் , நடிப்புத்தான்  அவரைத் தேடி வரும் ! சிறு வயதிலிருந்தே  நடிக்க ஆரம்பித்த இவர் அண்ணாவின் 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜியம் ' நாடகத்தின் போது 'சத்ரபதி சிவாஜி' ஆகவே மாறிவிட்டதைக் கண்ட ஈவே ராமசாமி புகழ்ந்தது முதல் , அவர் பெயரே சிவாஜி ஆகி விட்டது. தற்காலம் போலன்றி, வாசகர் ஒருவர் கொடுத்தப் பட்டப்பெயரே "நடிகர் திலகம்". இவர் பெற்ற கவுரவப் பட்டங்கள்: பத்ம பூஷன் , தாதா சாஹேப் , என்டிஆர் நேஷனல் அவார்ட் ,செவாலியே (ordre de merit-art & lettres), இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலின் சிறந்த நடிகர் , ஆப்ரோ-ஆசியன் பிலிம் பெஸ்டிவல் (Cairo, Egypt) சிறந்த நடிகர், பிரசிடென்ட் அவார்ட் 12 (மொத்தம் நடித்தத் திரைப்படங்கள்:300)

வானொலியும் நாடகங்களைப் பரப்புவதில் பங்கெடுத்துக் கொண்டது . தேசிய நாடகப்பள்ளி    நாடகப்போட்டி , கலை இரவுகள் , பிரச்சாரங்கள் நடத்துகிறது. நாடகக் கல்வியும் தரப்படுகிறது .நாடக இலக்கண நூல்களும் உருவாக்கப்படுகின்றன . ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன

தொலைக் காட்சி, திரைப் படங்களால் இனி வருங்காலம் நாடகத்திற்கு எப்படி அமையுமோ காலம் தான் பதில் சொல்ல வேண்டும் !.

திருமதி சிமோன்
இன்றைய அறிமுகம் - பம்மல் சம்பந்த முதலியார்


வழக்கறிஞர், நீதியரசர், எழுத்தாளர், நாடகாசிரியர், மேடை நாடாக நடிகர், நாடக இயக்குனர் என்று பல பதவிகளில் இருந்து திறமையாகச் செயல்பட்டு வெற்றி கண்டவர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள். தமிழ் நாடக வரலாற்றில் சங்கரதாஸ் சுவாமிகள் குறிப்பிடத்தக்கவர். இவரைப் பின்பற்றி அதே கால கட்டத்தில் உருவானவர்தான் பம்மல் சம்பந்த முதலியார்.
சென்னையில் பம்மல் என்ற கிராமத்தில் 1873  -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  பிறந்தார்.விசயரங்க முதலியார், மாணிக்கவேலு அம்மாள் இவர் பெற்றோர். இவர் தந்தை தமிழ் ஆசிரியராகவும் பின்னர் பள்ளிகளின் மேற்பார்வையாளராகவும் இருந்தவர். அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள் இருந்தன.அதனால் சிறு வயதிலிருந்தே புத்தகங்களைப் படிக்கும் பழக்கமும் ஆர்வமும் சம்பந்தம் கொண்டிருந்தார். அவரது தாயார் உணவு ஊட்டும்போது ராமாயணம், மகா பாரதம், பெரிய புராணம் போன்ற இதிகாசங்களிலிருந்து பல  கதைகளைச் சொல்லி வந்தார். தான் நாடாக ஆசிரியன் ஆனதற்கு  இவையே காரணங்கள் என்று நினைவு கூறுகிறார் சம்பந்தம் தனது
நாடக மேடை நினைவுகள் என்ற புத்தகத்தில்.

மாநிலக்கல்லூரியிலும் பின்னர் சட்டக் கல்லூரியிலும் படித்து  பி.ஏ.,பி.எல். பட்டங்கள் பெற்று வழக்கறிஞராகவும் நீதியரசராகவும் பணியாற்றினார். ஆந்திர மாநிலம் பல்லாரியைச்  சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி    என்பவர் சென்னைக்கு வந்து விக்டோரியா மெமோரியல் மண்டபத்தில் தெலுங்கில் நான்கைந்து நாடகங்கள் நடத்தினார். அவை இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தன .இதை போலவே நாடக சபை ஒன்றை நிறுவிச் சென்னையில் தமிழ் நாடகங்களை நடத்த வேண்டும் என்ற சம்பந்தனாரின் ஆவலுக்கு தூண்டுதலாக   அவர் நண்பர்கள் இருந்தனர்.விளைவு  1897 -இல் சுகுண விலாச சபை  உருவானது. இதுவே தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட முதல் பயில்முறை நாடகச் சபையாகும்.


நாடகம் பார்ப்பது நல்ல குடும்பத்தார்க்கு அழகன்று என்ற பிற்போக்கான நிலையை  இவர்  மாற்றினார்.

நாடக மேடை நடிகர்களைக் கூத்தாடிகள் என்றழைக்கப்பட்ட பழக்கத்தை மாற்றி அவர்களைக் கலைஞர்கள் என்ற சிறப்பான நிலைக்கு உயர்த்தியவர் இவர்.
அக்காலத்தில் நடைபெற்ற நாடகங்கள் எல்லாம் மங்கலமாகவே முடியும். இந்தப் போக்கை மாற்றி இன்பமும் துன்பமும் கொண்ட முடிவுகளுடன் நாடகங்கள் எழுதினார்.
இரவு முழுவதும் நடைபெற்ற நாடகங்களை மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்குள் முடிக்கும் பழக்கத்தைக் கொண்டுவந்தார்.
உரையாடல்களுக்கு முதன்மை கொடுத்தார். நடைமுறை உலகியலோடு நிகழ்ச்சியை அமைத்துப்  பேசும் மொழி நடையைக் கையாண்டார்.
வடமொழி, ஆங்கிலம்(As you like it, Macbeth, The merchant of Venice ஆகிய ஷேக்ஸ்பியரின் நாடகங்களை முறையே விரும்பிய விதமே, மகபதி, வாணிபுற வணிகன் என்ற பெயர்களில் தமிழாக்கம் செய்துள்ளார்),   பிரெஞ்சு ( தி நேவரி ஆப் ஸ்கால்பின் என்ற மோலியருடைய நாடகத்தை காளப்பன் கள்ளத்தனம் என்ற பெயரில் தழுவலாக எழுதியுள்ளார்), செர்மன்  நாடகங்கள் அவரால் தமிழ் வடிவம் பெற்றன. 


நாடகக் கலையை மிகக் கவனத்தோடு வளர்த்தார்.  கதைக்கேற்ற பாத்திரங்களைத் தேர்வு செய்வது, பயிற்சி அளிப்பது, காட்சிகள் அமைப்பது என நாடகத்தின்  ஒவ்வொரு நிலையிலும் மிகவும் நுணுக்கத்துடன் ஈடுபட்டார். இவைதான் இவர் நாடகங்களை வெற்றி பெறச் செய்து மக்களின் கரவொலியையும்  பாராட்டுதலையும் பெற்றுத்தந்தன.
அவர் எழுதிய நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையாக இருந்தாலும் மிகவும் புகழ்பெற்ற நாடகம் 'மனோகரா'. இந்த நாடகத்தின் முதல் காட்சியை  எழுதி முடிப்பதற்குள் அவரது தந்தை காலமானார்.மறுநாளே நாடகத்தின் இரண்டாம் பகுதியை எழுதினாராம். அவருடைய தாயும் மனைவியும் இறந்தபோதும் ' என் துக்கத்தை மறக்க, நாடகம்தான் சிறந்த மருந்து" எனக் கூறித் தன் வேலையைத் தொடர்வாராம்.   நாடகம் அவருடைய இலட்சியமாக, உயிராக விளங்கியது.


சுகுணவிலாச சபையின் நாடகங்களில் (1895 - 1923 வரை) சம்பந்தம் ஹீரோ - ரங்கவடிவேலு ஹீரோயின் வேடம் ஏற்று நடித்தனர். சம்பந்தம் 109 வெவ்வேறு நாடகப் பாத்திரங்கள் ஏற்று 500-க்கும் மேற்பட்ட முறை நாடக மேடையில் நடித்திருக்கிறார்.  இவருடைய நாடகங்கள் மற்ற சபைகளாலும் மேடையேற்றப் பட்டுள்ளன. சில நாடகங்கள் வெள்ளித் திரையிலும் வெளிவந்துள்ளன.
சம்பந்தனார் எழுதிய நாடகங்கள் 94. புஷ்பவல்லி(இவருடைய முதல் நாடகம்), மனோகரா(பல சபைகளிலும் 859 முறை நடத்தப்  பட்டது), லீலாவதி,  சதி சுலோச்சனா, சபாபதி, சாரங்கதாரா(198 முறை நடிக்கப் பட்டது) , உத்தம பத்தினி போன்றவை குறிப்பிடத்தக்கன. இவர் எழுதிய நாடகங்கள் பெரும்பான்மையானவை அச்சு வடிவம் பெற்றுவிட்டன.


நாடகத் தமிழ், நாடகமேடை நினைவுகள், பேசும்பட அனுபவங்கள் என்பன நாடகம் தொடர்பாக இவர் எழுதிய நூல்களாகும். இந்திய நாடக மேடை என்ற இதழையும் இவர் வெளியிட்டார். பல இணையற்ற நாடக நடிகர்களையும்  நாடக ஆசிரியர்களையும் (எம்.கந்தசாமி முதலியார், வி.சி.கோபாலரத்தினம்) ஆகியோரைக் கலை உலகிற்குத் தந்த பெருமை பம்மல் சம்பந்த முதலியாரையே சாரும்.
இவர் பெற்ற விருதுகள்:
1916 ஆம் ஆண்டு ராவ்  பகதூர் பட்டத்தை ஆங்கில அரசு வழங்கியது.
1959- இல் பாரத அரசு பத்மபூஷன்  விருதை வழங்கிச் சிறப்பித்தது.  
91-வது வயதில், 1964 -ஆம் ஆண்டு செப்டெம்பர் 24-ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்.
நாடகக் கலைக்கு சிறப்பும் மரியாதையும் ஏற்படுத்திய 'நாடகத் தந்தை", 'நாடகப் பிதாமகன்" என்ற பம்மல் சம்பந்த முதலியார் நினைவு என்றும் நிலைத்து நிற்கும்.

லூசியா  லெபோ


சமூக நாடகங்கள்


1950லிருந்து 1980 வரை தமிழ் நாடகம் ஒளி மயமாகத் திகழ்ந்தது எனலாம். தொழில் முறை நாடகச்  சபாக்கள், நாடகக் கம்பெனிகள் ஓய்ந்த பிறகு அமெச்சூர் நாடகக் கம்பெனிகள் பல  தோன்றின. நாடகம் பொழுதுபோக்கிற்கு மட்டுமன்றிச்  சமூகத்திற்கு உதவுவதும் ஆகும் என்ற உணர்வு சமூக நாடகங்களின் வளர்ச்சிக்கு வழிகோலியது.சமூகப் பிரச்சனைகளான   வரதட்சணைக் கொடுமை, பொருந்தா மணக்கொடுமை , பெண்களின் நிலை, அலுவலகங்களின் சீர்க்கேடுகள், வேலையில்லாத் திண்டாட்டம், கிராமப்புறப்  பிரச்சனைகள் , சாதி எதிர்ப்பு, போன்ற வாழ்க்கைச் சிக்கல்களுக்கு விடை  கூறவும்  விழிப்புணர்வு ஏற்படுத்தவும்    சமூக நாடகங்கள் பாலச்சந்தர்,  விசு,மௌலி ஆகியோரால் படைக்கப்பட்டன. மன்றம், அகாதமி ,  சபா, கிளப்  போன்ற பல பெயர்களில் செயல்படும் நாடகக்குழுக்கள் இந்நாடகங்களை மேடையேற்றின. 'சோ' வின் விவேகா பைன் ஆர்ட்ஸ் , கே.பாலச்சந்தரின் ராகினி ரிக்ரியேசன்ஸ் போன்ற குழுக்கள் குறிப்பிடத் தக்கவை.


கே.பாலச்சந்தர்: (கே.பி)
பள்ளிப் பருவத்திலேயே தெரு நண்பர்களைக் கூட்டி நாடகங்கள் போடுவார். கல்லூரியில் படிக்கும் பொழுதும் ஆசிரியராக இருந்த பொழுதும் சிறு சிறு நாடகங்கள், எழுதி அரங்கேற்றி இருக்கிறார்.1950 -இல் ஏ.ஜி.எஸ். ஆபீசில் பணிபுரியும் பொழுது 'சினிமா விசிறி' என்ற நாடகத்தை எழுதி எல்லாக் கேரக்டர்களையும்(mono acting) தான் ஒருவனே நடித்துக் காட்டினார். அதுமுதல் அவர் நாடகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.தனக்கென்று சொந்தமாக 'ராகினி ரேக்ரியேசன்ஸ்" என்ற நாடகக் குழுவை  ஏற்படுத்தினார்.  கவுரி கல்யாணம், நாணல், மேஜர் சந்திரகாந்த் போன்ற நாடகங்களை அரங்கேற்றினார்.   பின்னதில் பல மேடைப் புதுமைகளை புகுத்தினார். இந்த நாடகம் வேறு பல சபாக்களிலும் நடத்தப்பட்டது.      நடிகர் நாகேஷுக்காகவே சர்வர் சுந்தரம் எழுதப்பட்டு 25 முறை மேடையேறியது.  இவர் நாடகங்கள் பல பிற்காலத்தில் வெள்ளித்திரைப் படங்கள் ஆயின. கே. பி. யின் மெழுகுவர்த்தி என்ற நாடகத்துக்குத் தலைமை தாங்கிய எம். ஜி. ஆர். தெய்வத்தாய் படத்துக்கு வசனமெழுதும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.     நீர்க்குமிழி, பாமா விஜயம், அனுபவி ராஜ அனுபவி, எதிர் நீச்சல், இரு கோடுகள்,அரங்கேற்றம் ,  சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு  போன்ற எண்ணற்ற வெற்றி படங்களை அளித்து திரையுலகிலும் மக்கள் நெஞ்சங்களிலும்  மிக உன்னத இடத்தை பிடித்துக்  கொண்டார். பல பிரபல நடிகர் நடிகைகள் இவரின்  அறிமுகங்கள்தான்.கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களிலும் இவர் முத்திரைகள் ஏராளம். தேசிய, மாநில, தனியார் விருதுகள் பல பெற்றாலும் மிகவும் தன்னடக்கம் கொண்டவர். பல திரைப்பட இயக்குனர்களையும் உருவாக்கியுள்ளார். சின்னத்திரையிலும் கால் பதித்தவர். நூறு படங்களுக்கும்  மேலாக இயக்குனராகப் பணியாற்றி இருந்தாலும் எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை.விசு:
இவர் டி.வி.எஸ். பணியாளர்.30 மேடை நாடகங்கள் எழுதி இயக்கி இருக்கிறார்.இவை 3000 மேடை கண்டவை.இவரின் நாடகப் பணி குறிப்பிடத் தக்கதாகும். பட்டணப்பிரவேசம்,  ஆண்டாள் அவள் ஆண்டாள், மணல் கயிறு இவர் தந்த சிறந்த நாடகங்கள்.  பி.ஆர். கோவிந்தராஜ் மூலமாக டைரக்டர் கே.பாலச்சந்தரை சந்தித்த பிறகே தனக்கு சினிமா வெளிச்சம் கிடைத்தது என்கிறார். மணல் கயிறு, சம்சாரம் மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி -  வெற்றிப் படங்களை தந்தவர்.இவர் நடிகரும்கூட.விசு, எஸ்.வி.சேகர்,மௌலி, காத்தாடி ராமமூர்த்தி இணைந்த அருமையான கூட்டமைப்பு 'ப்ளைட் நெம்பர் 420' என்ற  நீண்ட நகைச் சுவை நாடகத்தை அளித்தது.    சன் டிவியில்    அரட்டை அரங்கம் என்ற நிகழ்ச்சியை நடத்தத் தொடங்கினார். இந்நிகழ்ச்சி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நடுவில் புகழ் பெற்றது.

மௌலி    :
சென்னைத் தொலைகாட்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்ட முதல் நாடகம் நேற்று இன்று நாளை. இதன் ஆசிரியர் மௌலி. தற்கால எதிர்கால இளைஞர்களின் நடையுடை பாவனைகளை இந்நாடகம் சித்தரிக்கிறது.ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது, அம்மி மிதிக்கப் போலிஸ் வந்தது, மற்றவை நேரில், மத்தாப்பு வாங்க காசு வந்தாச்சு இவர் எழுதிய நாடகங்கள். மௌலி பல நாடகங்களை எழுதி இயக்கி நடித்துள்ளார்.ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது திரைப்படமாக எடுக்கப்பட்டது.தமிழைக் காட்டிலும் தெலுங்கு மொழியில் பல நாடகங்கள் எழுதிப் புகழ் பெற்றவர் இவர்.
                                
லூசியா லெபோ

நாடகத்தில் நகைச்சுவை

                                                      

பொழுது போக்கிற்கென உள்ளக் கலைகளில் நகைச்சுவை இன்றியமையாதது. அதுவும் நேர்காணல் முறையில் அதற்குள்ள வரவேற்பும் பாராட்டும் அளவிட முடியாதது . வாழ்க்கையில்தான் பலத் துயர்களை அனுபவிக்கிறோம், பொழுதுபோக்கிலாவது சிரித்துவிட்டு வருவோம் என்று  எண்ணுபவர்களுக்கு அது ஒரு பெரிய வரம் . அவர்கள் மனதை இலேசாக்கி மகிழ்ச்சியோடு வீடு திரும்ப வைக்கும் கலைஞர்கள் ஒரு வகையில் சமூக சேவையே செய்கிறார்கள் ! அவர்களுள் ஒரு சில குறிப்பிடத்தக்கவர்கள் :

                                                        

எஸ் .வி . சேகர் : 1974 இல் முதல் மேடை ஏறினார் . மைலாப்பூர் பாயிஸ் நாடகக் குழு மூலம் இவரது திறமை பளிச்சிட்டது . 50 (play)நாடகங்கள், 100 நாடகத் தொகுப்புகள்  (skript), 96 தமிழ்ப்படங்கள்  ,டிவி நிகழ்ச்சிகள் இவற்றோடு  நல்லப் புகைப்படக் கலைஞர்  என்ற பெயரும் இவரைச் சேரும் . 'நாடகப்ப்ரியா' என்ற அமைப்பை  1973 இல் ஆரம்பித்து 24 நாடகங்களை 4000 முறை வெளிநாடுகள் உட்பட நடத்தியுள்ளார் . 8 முழு நீள நாடகங்களைத்தொடர்ந்து ஒரே நாளில் நடத்தி  "லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" இல் 1985இல் இடம் பெற்றார்.

'பெஸ்ட் ஆல் இந்திய அவார்ட்'  நான்கு முறை இவரை அடைந்தது .'மைலாப்பூர் அகாடமி' 3 வருடம் இவரை 'சிறந்த சிரிப்பு நடிகர் ' ஆகத் தேர்ந்தேடுத்தது. 'விஸ்டம்' என்ற இதழ் 1990 இன் சிறந்த சிரிப்பு நடிகர் பட்டத்தை அளித்தது .  இன்னும் 'கலை மாமணி', 'கலைவாணர் அவார்ட் ', 'பெஸ்ட் டிராமா  ட்ரூப் அவார்ட்' பெற்ற இவர் 2006  அதிமுகவில்  இணைந்தார் .

ஒரு முறை நாடகத்தின்போது கரண்ட் நின்று விட்டதாம். கதைப்படி பெண்பார்க்கச் சென்றிருந்த சேகர், கரண்ட் வந்ததும் 'இந்தப்பெண் ராசியில்லை-எனக்கு வேண்டாம்'  என்று பொருத்தமாகச் சொல்லி எல்லோர் டெண்சனையும்  குறைத்து சிரிக்க வைத்தாராம் !

                                                      
                                                           

ஒய்.ஜி . மகேந்திரன்: நடிகர் ,பாடகர் ,கதைவசன  நாடக கர்த்தா, காமெடி ஆர்டிஸ்ட் என பன்முகம் கொண்டவர் .200 படங்கள் போல் நடித்தவர் . 1982 இல்      industrial ceramics  தொழில் ஆரம்பித்து 2001 இல் விற்று விட்டார் .

தந்தை ஒய் .ஜி.பார்த்தசாரதி "தமிழ் நாடகத்தூண்" என அழைக்கப்பட்டவர் . அவர் ' united amateur artists' என்ற நாடகக் கம்பெனியை  1952 இல் ஆரம்பித்ததால்  சிறு வயதிலேயே மகேந்திரனுக்கு நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது . அம்மா ராஜலட்சுமி 'பத்மா சேஷாத்திரி பாலபவன்' நிறுவனர் . வைஜயந்தி மாலா, லதா ரஜினி, சாவித்திரி போன்றத் திரையுலக உறவினர்களைக் கொண்டவர் . கமல் ,ரஜினி போன்றோரின் நண்பர் .


                                                               

கிரேசி மோகன் : 'தமிழ் மன்றம்' தலைவரான நண்பன் மூலம் நாடக உலகிற்கு வந்தவர் . 1973 ஆம் வருடம்  சொந்தப்  பெயரிலேயே கம்பெனி ஆரம்பித்தார். பல பெயர்களில் 1994 வரை பலரோடு நடைபெற்ற அது கலைக்கப்பட்டாலும்  இன்னும் நாடகங்கள் நடைபெறுகின்றன . 200 நகைச்சுவை நாடகங்கள், தொலைக்காட்சி , சினிமா என்று சுற்றி வந்தவர் . இவரது சகோதரர் 'மாது பாலாஜி' இவர் நாடகங்களின் கதா நாயகர் .

திருமதி சிமோன்