பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 29 avril 2011

எண்ணப் பரிமாற்றம்

Afficher l'image en taille réelle

அன்புடையீர்,

கர்ம யோகம்: கடமை செய்து இறை உணர்வு பெறுவது.
பக்தி யோகம்: அந்தரங்க உணர்வால் இறைவனை அடைவது.
ராஜ யோகம்: மனத்தைக் கட்டுப்படுத்தி, சிந்தனையை வழிப்படுத்தி இறை உணர்வு பெறுவது.
 ஞானயோகம்: அறிவால் அறிந்து இறைவனை அடைய முற்படுவது. 

இந்த நான்கு வகைகளில் மனிதர் இறைவனோடு ஒன்ற முடியும் என்று பெரியோர் வரையறுத்திருக்கின்றனர். இதுஅல்லாத மற்றுமோர் வழியும் உண்டு. அது இறைவனே முன் வந்து ஆட்கொள்வது.
எது எப்படி ஆயினும் இரண்டாமவர் அறிய வழி இல்லாத தொடர்பு இவை.

முதலில் இறைவன் இருக்கின்றனா என்ற கேள்வி வேறு பலர் மனங்களில் 
அவ்வப்போது -முக்கியமாக உலகின் பல்வேறுபட்ட துன்பங்களையும், அழிவுகளையும் 
காணும் போது உண்டாவதைத் தடுக்க இயல்வதில்லை.

ஆயினும் தனிப்பட்ட மனங்களும் சரி, தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையும்,
பல்வேறுபட்ட மதக் கொள்கைகளும், ஏன், விஞ்ஞானமும் கூட எல்லாவற்றையும்
செயல்படுத்துகின்ற மாபெரும் சக்தி ஒன்று இயக்குவிக்கிறது என்பதை மறுப்ப
தில்லை.

மனித இனத்தின் உலக வாழ்வு இத்துடன் முடிவதாகவே வைத்துக்கொண்டால் 
அதில் பொருளோ அன்றி திருப்தியோ அல்லது நிம்மதியோ, நிறைவோ இல்லை 
என்பதை அவனவனும் வாழும்போதே புரிந்து கொண்டு விடுகிறான். அதனாலேயே 
இறைவன்பால் தன்னால் மனம் திரும்புகிறது.

இங்குதான் மனிதன்  தனக்கென்று ஏற்படுத்திக்கொண்ட கோட்பாடுகள்,அதில் ஆழ்ந்துவிட்ட பிடிவாதம் இவை பேதத்திற்கு வழி வகுத்து, ஒருவர் மற்றவரின் அனுபவங்களை எடை
போடவும், விமர்சிக்கவும், புறக்கணிக்கவும் வைக்கிறது . சாதாரணமான உலக 
ரீதியான விஷயங்களிலேயே ஒருவர் பேச்சையும் செயலையும் அதற்குரிய அர்த்
தத்தில் புரிந்து கொள்ளமுடியாத உறவுதான் இங்கே நிலவுகிறது. இதில் மனம் மட்டுமே
சம்பந்தப்பட்ட உணர்வுகளை எப்படித்தான் எடைபோட முடியும்?

திறந்த மனதோடு பார்த்தால் ஏற்கவும், அதைத் தன்மயமாக்கிக்கொண்டு சிந்திக்கவும் 
பொதுவான ஒரு முடிவுக்கு வரவும் வாய்ப்பிருக்கும். அறிவால் மட்டுமே பார்த்தால்?

இயேசு தன்னை இறைமகன் என்றும், அவர் கூறும் சொல் ஒவ்வொன்றும் கடவுளிடமிருந்தே வருபவை என்றும் கூறினார். அவரைச் சுற்றி இருந்தவர்களோ 
நேற்றுவரை நம்முடன் சுற்றிக்கொண்டிருந்த தச்சன் மகன்தானே இவன் என்றுதான்
நினைத்தார்கள். வள்ளலார் இறைவன் தனக்கு அமுதூட்டியதாகவும், திண்ணையிலிருந்து 
விழும் தருணத்தில் தாங்கிப் பிடித்ததாகவும், தனக்குத் தண்டனை அளித்ததாகவும் 
கூடக் கூறுகிறார். துறவறம் பூண்ட குழந்தை தெரேசா எங்கோ மரண தண்டனை
அடைந்த கைதி ஒருவன் மனம் மாறி மன்னிப்புக் கேட்க வேண்டுமென தான் 
தவம் செய்து அதில் வெற்றி பெற்றதாகவும் கூறுகிறார்கள்.

இவர்கள் அனைவரின் புனிதமும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் 
இச்செய்திகள் நம்பப்படும் அறபுதங்களாகிவிட்டன. ஆனால் கடவுளின் அம்சமான
மனிதத்தில்  சராசரி வாழ்க்கைத தாண்டிய அனுபவங்கள் நேரிடும்போது 
அதை அந்த அனுபவத்திற்கு உரிய மனமே நம்ப மறுக்கிறது. நம்பினாலும் வெளியிடத்
தயங்குகிறது. மற்றவர் இதனை ஆராய்ந்து அதீத உணர்வின் வெளிப்பாடு, வெறும்
கற்பனை, மன அழுத்தத்தின் உச்சம்  என்றெல்லாம் பெயர் சூட்டுவார்கள் என்ற உண்மையால் அவை சமாதி கொள்கின்றன. "கண்டவர் விண்டிலர்"
ஆதலால் இந்தத் தேடலும் யுகயுகமாக நடைப்பெற்றுக் கொண்டே இருக்கிறது.

திருமதி சைமன்      

               

இன்றைய அறிமுகம்


தியாகச் செம்மல்களை நாம் மறந்தும், துறந்தும் வெகு நாட்களாகிவிட்டன. 
அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பையும் தருவதில்லை என்பதற்கு சாட்சியாக தில்லையாடி வள்ளியம்மையின் உருவப்படம் மின்வலையில் கிடைக்கவில்லை!

எனினும் செயற்கரியச் செய்தவர்களை  மனிதசரித்திரத்திலிருந்து அவ்வளவு சுலபத்திலமறைத்துவிடமுடியாது.22-2-1898 இல்  தோன்றி 22-2 -1914   வரையிலான 16 வயதே நிரம்பிய வள்ளியம்மை, தேசப்பிதா அண்ணல் காந்தி அடிகளால் "பலன் கருதாமல் தியாகம் செய்து   வெற்றி கண்ட அவரே எனக்கு விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்" என பாராட்டப்பட்டவர்.

தஞ்சாவூரிலுள்ள தில்லையாடி என்னும் இடத்திலிருந்து பிழைப்புக்காக தென்னப்பிரிக்காவிலுள்ள  ஜோகுன்ச்பர்க் நகரில் குடியேறிய முனுசாமி ஜானகி தம்பதியரின் மகள் வள்ளியம்மை. 1913 இல்    வெள்ளையர் விதித்த தலைவரி தனை எதிர்த்து காந்தியுடன் ஆட்சி எதிர்ப்பு நடத்தினார்.13 டிசம்பர் விடுதலை ஆனாலும் வெளிவர மறுத்து தலைவரி இத்தன பிறகே வெளி வந்தார்.

வெள்ளையர் சர்ச் திருமணம் தவிர வேறெதுவும் சட்டப்படி செல்லாது என அறிவித்ததால் பல இந்தியக் குடும்பங்கள் தங்கள் புனிதத் தன்மையை திடீரென இழந்தன.குழந்தைகள்  தர்ம த்திற்கு புறம்பாக பிறந்தவர்களாகவும், மனைவிகள் உரிமை அற்றவர்களாகவும் ஆகிப் போனார்கள். இதை எதிர்த்து காந்தி அடிகள் அறப்போராட்டம் நடத்திய போது வள்ளியம்மையும் அதில் கலந்து கொண்டு அனுமதி இல்லாமல் நுழையக்கூடாத பாதை வழியே பாத யாத்திரை சென்றார்.கைதி ஆகி மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார்.அப்போது "சொந்தக் கொடி கூட இல்லாத நாட்டிலிருந்து வந்தவர்கள் என்ற கேலிப் பேச்சைப் பொறுக்கமாட்டாது தன் புடவையைக் கிழித்து "இதோ ஏன் நாட்டுக் கொடி" என வீரத்துடன் முழங்கியவர் வள்ளியம்மை.பிற்காலத்தில் காந்தி அவர் புடவையில் இருந்த அதே பச்சை, வெள்ளை, மஞ்சள்  நிறங்களைக் கொண்டு இந்தியக் கொடியை உருவாக்கினார். 

1971 இல் நாகப்பட்டின மாவட்ட தில்லையாடியில் வள்ளியம்மை நினைவு மண்டபம் ஒன்று நிறுவப்பட்டது. காந்திஜியும் ஒரு முறை அங்கு வருகை புரிந்தார்.

அல்வினா       

நினைக்க வேண்டியவை


தியான சமயத்தில் நானாவித எண்ணங்கள் கிளம்புகின்றன. அது நல்லதே. உள்ளே மறைந்து கிடந்தது வெளியானால் ஒழிய அதை அழிப்பது எப்படி?

அறிவு என்பது தன்னை அறிவதுதான். எதையாவது அறிவதாய் இருந்தால் நீ உன்னையே அறிகிறாய்!

உலகத்தை காப்பது உன் வேலை அன்று. சும்மா இருப்பது மாத்திரமே உன் கடமை. அதுவாகவோ, இதுவாகவோ இருப்பது உன் கடமை அல்ல.

ரமண மகரிஷி

உலகத்தில் நீ வாழ்ந்திருக்கும் வரை பிறர் உன்னிடம் அச்சமும், மரியாதையும் கொள்ளும்படி நட.  ஒருவருக்கும் தீங்கு செய்யாமலும் பிறரால் உனக்கு  தீங்கு வராதபடியும் காத்துக்கொள்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் 

தனித்திரு. ஏகாந்தமாய் இறைவனை மனதில் இருத்தி வழிபடு. விழித்திரு. உடலைக் கிடத்தி உறங்குவது சிற்றின்பம் aagum 
இறைச் சிந்தனையில் ஆழ்ந்து பேரின்ப களிப்பில் மூழ்குவதே உண்மை இன்பம். பசித்திரு. அதிக உணவும் அடிக்கடி உண்பதும் நோய்க்கு வித்திடும்.

வள்ளலார்

பிறர் வேண்டுதலால் செய்கிற தர்மத்தை விட உன் மனம் கனிந்து கொடுக்கிற தர்மமே சிறந்தது. சின்னஞ்சிறு விதை மரமாகி கனி கொடுப்பதைப் போல நீ செய்யும் சிறு தர்மமும் வளரும் தன்மை கொண்டது.

மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார்


   

இறைப்புகழ்


அஞ்ஞானத் தாலடியேன் ஆற்றுப்பிழை அன்புடனே 
மெய்ஞ்ஞானத்  தால்போக்கு மேலோனே - தஞ்சமென 
வந்தடைந்தேன்  உன்றிருமுன்  வள்ளலே செந்தூரா
பந்தமறத் தந்தாள் பதம்.

பற்றொன்று மில்லாப் பதடியேன் உன்புகழைக் 
கற்றறியாப் பேதையேன்  காசினியில் - கற்றவர்கள்    
 கண்டேத்து நின்றாளைக்  காண விழைந்திட்டேன் 
உண்டோவப்   பேறு எனக்கும் ஓது.

தத்துவம்முப்  பத்தாறும் தாண்டியதன் மேல்நிலையை 
நித்தியமாப்  பற்றும் நியதிதனைச்  - சித்தத்தே 
ஓதுவிக்கும் நாளின்றே ஓதிடுவாய் செந்தூரா 
மாதுமையாள் செல்வனே வந்து.

நோய்என்னைச்  சாருமுனம்  நொந்துமனம் தேயுமுனம் 
தாயென்ன வந்து தயைகாட்டி - தூயஅருள்
தந்தருள் நாள் எந்நாளோ சண்முகனே உண்முகத்தே
வந்தருள் நாள் எந்நாள் வழங்கு.

புலவர்  வி. அண்ணாமலை                    
           

குடிமைப்பயிற்சி


சட்டத்தின் கீழ் மண்ணில் பிறக்கும் மற்றும் வாழும் எல்லோரும் சுதந்திரமானவர்களே மற்றும் சமமானவர்களே!

1789ஆம்  ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி தீர்மானக்கப்பட்ட மனித மற்றும் பிரஜா சட்டதிட்டங்கள் 

     பிரான்சு நாடு சமமான வாய்ப்புகள் மற்றும் ஒருங்கிணைந்து கொள்ள சந்தர்ப்பங்கள்  வழங்கப்படும் என உறுதி கூறுகிறது.

எல்லோருக்கும் ஒரே சட்டங்கள் மற்றும் எல்லோரும் அதே சட்டங்களை மதிக்க வேண்டும். இதுவே சமத்துவம்.

சட்டம் கீழ்கண்ட சமத்துவங்களுக்கு உறுதி அளிக்கிறது:

-மனித சமத்துவம் அவர் எந்த நாட்டவராக இருந்தாலும் எல்லோரும் சமம்.
-ஆணும் பெண்ணும் சமம்.
-பெற்றவர்களின் கடமைகளை பூர்த்தி செய்ய தாயும் தந்தையும் சமம்.
-பிரான்சு நாட்டிலும் மற்றும் அயல் நாட்டிலும் மனித உரிமைகள் மற்றும் சமூக உரிமைகள் எல்லாம் சமமே.
-சட்டத்தின் முன் எல்லோரும் சமமே. 
-உடல் நல பேணலில் எல்லோரும் சமமே.
-படிப்பதற்காக தரப்படும் வாய்ப்புகள் எல்லோருக்கும் சமமே.
-வேலைக்காக தரப்படும் வாய்ப்புகள் எல்லோருக்கும் சமமே.
-எல்லா குழந்தைகளும் சமமே. திருமணமாகி பிறந்தாலும் திருமணமாகாமலே பிறந்தாலும், எந்தபாலாக  இருந்தாலும் அல்லது குடும்பத்தில் எத்தனையாவது குழந்தையாக இருந்தாலும் எல்லோரும் சமமே.

ஆணும் பெண்ணும் சமம்:

எல்லாத் துறைகளிலும் ஆணுக்கு இருக்கும் அதே உரிமை பெண்ணுக்கும்
இருக்கும் என்று சட்டம் உறுதி செய்கிறது. (1946 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையின்படி).

பிரஞ்சு குடியரசு ஆணும் பெண்ணும் சமம் என்பதை தெரிந்து கொண்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் பலாத்காரங்களை வன்மையாகக் கண்டிக்கின்றது.

எல்லாத் தேர்தலிலும் வாக்களிக்க ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமை உள்ளது.

ஆண், பெண் இருபாலருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப  பிரஞ்சு குடியரசின் எல்லா பொறுப்புகளை வகிக்க சம உரிமை உண்டு.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிகளை வகிக்க பெண்களுக்கும் உரிமை உள்ளது என்பதை அரசியல் அமைப்பில் எழுதப்பட்ட சமத்துவம் தெளிவுபடுத்துகிறது. 
          

dimanche 17 avril 2011

கம்பன் கழக மகளிரணி நடத்தும் மகளிர் விழா

கம்பன் கழக மகளிரணி நடத்தும் 

அன்னை தெரசா நுாற்றாண்டு விழா 

இரண்டாம் ஆண்டு மகளிர் விழா 
நாள்
28-05-2011
சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணி

இடம்
Salle Allende Neruda
allée Jules Ferry
95140 GARGES LES GONESSE