பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 15 avril 2010

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

வணக்கம். மன நிறைவுடனும், மகிழ்வுடனும் உங்களைச் சந்திக்கின்றேன். பல நாள், தொடர்ந்த பலரது உழைப்பால், கடந்த ஞாயிறு 11.04.2010 அன்று கம்பன் கழக மகளிரணியின் “மகளிர் விழா” இனிதே நடந்தேறியது. மலர்ந்த முகங்கள், வார்த்தைகளின்றி, விழாவின் வெற்றியைப் பறைசாற்றின. பங்கு பெற்ற, வருகை புரிந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!

“சுவரை வைத்து சித்திரம் வரைய வேண்டும்” என்பது பழமொழி. அடித்தளமிட்டே எதையும் கட்டமுடியும். நமது உடல் எந்த அளவு திடமானதாகத் தோன்றுகிறதோ, அந்த அளவு நளினமானதும் கூட. எந்தவொரு சிறு நலக்குறைவும் முழு உடலையும், மனதையும் பாதிக்கும். அந்நிலையில், எதையுமே அனுபவிக்க இயலாமல் துவண்டு போகிறோம்.

நொந்த உடலும் நலிந்த மனமுமோர்
 வெந்த இரணத்தின் வேதனை சோகமும்
 சொந்த மெனினும் சுகமாய் இருந்திடும்
 பந்தம் அறியார் பகர்!

நோய் வந்த பின் மருந்துகளோடு மல்லாடுவதைவிட, வருமுன் காப்பது மேல். அந்த நோக்கில், எளிமையான, செய்யக் கூடிய ஒரு சில குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

-- இராசேசுவரி சிமோன்

நலம் காக்க எளிய வழிகள்


 1. கண்களில் துாசி விழுந்தால் கண்களைக் கசக்க வேண்டாம். வலது கண்ணில் என்றால் இடது கால் பெருவிரல் நகத்தையும், இடது கண்ணில் என்றால் வலது கால் பெருவிரல் நகத்தையும் சிறிது நேரம் நன்றாக அழுத்தித் தேய்த்தால் துாசி கண் ஓரத்தில் ஒதுங்கிவிடும்.

 2. தீக்காயம் அல்லது சூடுபட்டால் அந்த இடத்தில் சமையல் எண்ணையைத் தடவி, அதன் மேல் பொடி உப்பைத் துாவி மெல்லத் தடவி விட்டால் புண்ணாகாது.

 3. வயிற்றுப் புண்ணுக்குத் தினமும் காலையில், வெறும் வயிற்றில்,  5 முழுமிளகை வாயில் போட்டுத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 4. கழுத்து வலி உள்ளவர்கள் உறங்கும் போது தலையணையைத் தவிர்ப்பது நல்லது.

 5. முகம் வழுவழுப்பாக, தினமும், தக்காளிக் கூழும் அரைத் தேக்கரண்டி தயிரும் முகத்தி்ல் பூசி ஐந்து நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும்.

 6. இளைப்பதற்கு, கொள்ளை (லான்த்தீய்) வேகவைத்து, அந்த நீரைப் பருகிவரவும்.

 7. முகச் சுருக்கம் போக, கடலை மாவுடன் தயிர் கலந்து தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

 8. வெயிலில் முகம் கருக்காமலிருக்க, தினமும், சிறிது பாலில் குளிர் நீர் கலந்து தடவவும். தானே காய்ந்த பின் கழுவ வேண்டும்.

 9. கால் பித்த வெடிப்புக் குறைய, குளிப்பதற்கு முன், வெது நீரில் 10 நிமிடம் காலை வைத்திருக்க வேண்டும்.

 10. களைப்பு நீங்க, சாக்லேட் சாப்பிடலாம். மூளையின் நுண்ணறிவுத் திறனை அது மேம்படுத்துவதால், உடன் சுறுசுறுப்பு ஏற்படும்.

 11. இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காலையில் திடுமென படுக்கையை விட்டு எழாது, பக்கவாட்டில் படுத்து சிறிது நேரமும், கட்டிலில் உட்கார்ந்து சிறிது நேரமும் இருந்தால் தலை சுற்றல் இருக்காது.
 12. மலச்சிக்கலுக்கு வாழைப்பழம் நல்ல பலன் தரும். ஊட்டச்சத்து நிறைந்த இது, நோய்த்தடுப்பு மருந்தும் ஆகும்.
 13. பசியைத் தோற்றுவிக்க இஞ்சி உதவும்.  நாக்கில் ருசி தெரியாக் குறையைப் போக்கும்.
 14. தினசரி தேன் சாப்பிட நரம்புத் தளர்ச்சி குறையும். பாலை விட தேன் ஆறு மடங்கு சக்தியானது.
 15. நீரிழிவு நோயுள்ளவர்கள் இன்சுலின் நிறைந்த சின்ன வெங்காயத்தைத் தாராளமாக உபயோகிக்கலாம்.

இன்றைய அறிமுகம் -- ஸ்ரீஆண்டாள்

பத்தாம் நுாற்றாண்டில் வாழ்ந்த வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில், பெண் குலத்தைச் சார்ந்தவர் ஆண்டாள் மட்டுமே.

ஸ்ரீவில்லிப்புத்துாரில் வாழ்ந்த திருமால் பக்தர் விஷ்ணு சித்தரின் (பெரியாழ்வார்) வளர்ப்பு மகள் கோதை. சிறுவயதிலேயே, கிருஷ்ண பரமாத்மாவிடம் அளவுகடந்த அன்பு கொண்டு, பின் அவரைத் தவிர வேறு யாரையும் மணப்பதில்லை என உறுதி பூண்டவள்.

இறைவனுக்குச் சாற்றக் கட்டிய மாலையைத் தானே அணிந்து அழகு பார்த்த பின்பு, கோயிலுக்கு அனுப்புவது அவள் வழக்கம். இதை அறிந்து அவள் தந்தை வருந்த, இறைவனே அவர் கனவில் தோன்றி “அவள் அணிந்த மாலையே தனக்கு ஏற்புடைத்தது” என்று அறிவிக்க, இறைவனையே ஆண்டதால் “ஆண்டாள்” எனும் பெயர் பெற்றார். இறுதியில், ஸ்ரீரங்கர் கோயிலுக்குச் சென்று, அங்கு தான் விரும்பிய மணவாளனுடன் கலந்து மறைந்து விட்டார், இந்தச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி!

ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இலக்கிய நயமும், தத்துவமும், பக்தியும் நிறைந்த படைப்புக்களில், திருப்பாவையின் 30 பாடல்களும்ஆயர்பாடி கோபிகையாகத் தன்னையெண்ணி ஆண்டாள் திருமாலின் பெருமையைக் குறிப்பவை. முதல் ஐந்து பாடல்கள், மனமார வழிபட்டால் பாவங்கள் தீருமென்பதையும் - அடுத்த பதினைந்து பாடல்கள், சமுதாயம் பக்தியுணர்வில் இணைந்து பங்குகொள்ள வேண்டுமென்பதையும் - கடைசி பத்து பாடல்கள், இறைவனின் புகழ் ஆசீர் பற்றியும் எடுத்துரைக்கின்றன.

நாச்சியார் திருமொழியின் 143 பாடல்களும் கண்ணனைச் சேரும் முயற்சி பற்றியவை. நீரிலிருந்து வெளிவந்த மீன் எப்படி நீருக்காகத் துடிக்குமோ அப்படி ஆன்மா பரமாத்வாவை நாட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன.

திருப்பாவை பாடல்கள் மார்கழி மாதத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம். இந்தி என்று பல மொழிகளில் இந்தியா முழுவதும் பாடப்படுகின்றன. ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அவற்றின் பெருமை எங்கும் பரந்துள்ளது.

-- சுகுணா தணிகா

எழுதிப் பார்க்க - குறுக்கெழுத்து

குறுக்கெழுத்து 2 உக்கான  விடை :
  விடை அடுத்த முறை காண்க 


இடமிருந்து வலம :
1 உலக அளவில் வழங்கப் படும் மிக உயர்ந்த பரிசு.
5 ஊர்தி, வண்டி
6 பள்ளம் 
8 ஐயர் தலையில் இருப்பது
11 இது இல்லாவிட்டால் ரயில் ஓடாது 
13 N.S. கிருஷ்ணன் மனைவியின் பெயர்

வலமிருந்து இடம்
7 மரங்கள் அடர்ந்த பகுதி
10 மது வகை

மேலிருந்து கீழ் :
1 பிரளையத்தின் போது உயிரினங்களைக் காக்கப் பெட்டகம் செய்தவர் 
2 இரவுக்கு எதிர்ப் பதம்
3 நாடகத் தந்தையின் ஊர் 
4 தத்து எடுத்தல் 
5 வாழ்த்து - வியங்கோள் வினை முற்று

கீழிருந்து மேல் :
8 பள்ளத்தின் மறு பெயர்
9 வானில் ஒளிருவது ; மேகங்களில் பிறப்பது
12 விலங்குகளுக்கு உண்டு ; மனிதர்களுக்கு இல்லை
13 வெள்ளத்தைத் தடுத்து நிறுத்துவது
14 இதனைப  போடவும் செய்யலாம் போர்த்தவும் செய்யலாம்
15 தோல் இசைக் கருவி

--  லூசியா லெபோ
சென்ற மாத குறுக்கெழுத்து விளையாட்டுக்கு விடை --

விடுகதை - மனக்கணக்கு விடைகள்

சென்ற மாத விடைகள் -

பாட்டி சுட்ட வடைகள் 25.  முதலாமவன் பகிர்ந்து தன் பங்கான 8 வடைகளை எடுத்துக் கொண்டு மீதி ஒன்றை காக்கைக்குப் போட்டுவிட்டான். 2மவனும் பகிர்ந்து தன் பங்கான 5 வடைகளை எடுத்துக்கொண்டு மீதி ஒன்றை காக்கைக்குப் போட 3மவன் பகிர்ந்து தன் பங்கான 3 வடைகளை எடுத்துக் கொண்டு மீதியைக் காக்கைக்குப் போட்டான்.

1 பாட்டி, அவரது 2 பெண்கள், அவர்களது 2 பெண்கள் என ஏழு போ் ஏழு நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.

அவரவர் சொந்தப் பெயர். ஆனால் அதை மற்றவர்தான் உபயோகிப்பர்.

அருகிலேயே இருந்தாலும் நெருங்காதவை ரயில் தண்டவாளங்கள்.

பிரான்சு கம்பன் மகளிரணி விழா - வருணனை

மங்கையர் உள்ளங்களில் எல்லாம் பொங்கும் பூம்புனலாய் மகிழ்ச்சி வெள்ளம்!

இருக்காதா பின்னே! பரி நகரின் புற நகராம் கார்ழ் லே கொநேசு (Garges-lès- Gonesse) நகரில், 11.04.2010 ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கிய பிரான்சு கம்பன் மகளிரணி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றதே!

இந்தியத் தூதரக அதிகாரி திரு நாராயணன் அவர்தம் துணைவியார் திருமதி பிரியா நாராயணன், தலைமை தாங்க வந்த திருமதி லலிதா பத்ரிநாத் (தலை சிறந்த சமூகச் சேவையாளர்)... எனப் பலரும் சரியாக 3 மணி அளவில் வந்து இறங்கினர். வரவேற்பு, நலம் விசாரிப்புக்குப் .. பிறகு நாராயணன் இணையர் மங்கல விளக்குக்கு ஒளி ஊட்ட, விழா களை கட்டியது.

பிரான்சு கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி பாரதிதாசன் இறைவேட்டலைப் பாடினார். அடுத்து, . ஆடை கட்டிய நிலவொன்று மேடையிலே தோன்றியது! தமிழ்த் தாய் வாழ்த்து பாடியது. தேனாறு அவையிலே ஓடியது! பாவேந்தர் பாடல் வரிகளை மென்று விழுங்காமல் கனியனைய குரலெடுத்து அழகாக ஒலித்துப் பாடிய தேவதைக்குப் பெயர் செல்வி சக்தி பார்த்தசாரதி. மிக இளம் வயது ஆனாலும் வளமான குரல்!

பின், மகளிரணித் தலைவி திருமதி இராசேசுவரி சிமோன் அனைவரையும் வரவேற்றார். மகளிரணி தொடங்குக என வித்திட்டு அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் கவிஞர் கி. பாரதிதாசன், மகளிரணிக்கு எனத் தனி வலைப் பூவொன்று அழகாக அமைத்துத் தந்து அதன் தொழிநுட்பப் பொறுப்பையும் ஏற்றிருக்கும் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ என இருவருக்கும் தன் நன்றிகளைத் தெரிவித்த போது அவை, கை தட்டி ஆரவாரித்தது.

நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தரும் பணியை ஏற்றவர் திருமதி பிரபா அசோகன். இவர் மேடை ஏறுவது இதுதான் முதல் முறை! என்றாலும் இவர் தொகுத்துத் தந்த சிறப்பும், அவ்வப்போது வெடிக்கும் பட்டாசாய் அவர் அடித்த துணுக்கு வெடிகளும் பலே!

செல்விகள் சார்ச ரவீந்திரநாதன், கிளமேன்சி இரமேசு, சான்சி இரமேசு மூவரும் அழகிய நடனம் தந்தனர்.

தலைமை தாங்கிய திருமதி லலிதா பத்ரிநாத் மகளிரணிக்குத் தன் பாராட்டுகளைத் தெரிவித்துகொண்டார். ஊனமுற்றவர்களுக்குத் தான் செய்துவரும் தொண்டுகள் பற்றிக் குறிப்பிட்டார்.

ஆன்மீகச் செம்மல் அரவிந்தர் பற்றி வெண்பா நலம் கனியக் கனிய வெண்பா பாடிய பெண்பால் புலவர் திருமதி அருணா செல்வம், முழு நீள நாவல்கள், பலப்பலச் சிறு கதைகள்...மரபுப் பாடல்கள் என எழுதிக் குவிக்கும் படைப்பாளி. தொடர்ந்து, திருமதி சில்பா பாலகிருட்டிணன் பரத நாட்டிய நடனங்கள் வழங்கித் தம் கலை நயத்தால் அனைவரையும் கவர்ந்தார்.

மகளிரணித் தலைவி திருமதி இராசேசுவரி சிமோன் நடுவராய் அமர மகளிர் சிலர் சொற்போர் அரங்கத்துக்குப் போர் முரசு கொட்டினர். 'இன்று வரை ஆணாதிக்கம் தொடர்வது பெண்களால்தான்' எனப் பெண்களைச் சாடிக் குட்டிக் கதைகள் சில கூறி அமர்ந்தவர் திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால். ஒலிவாங்கியை அடுத்துப் பிடித்த திருமதி கோமதி அரி, 'ஆணாதிக்கம் தொடர்வது ஆண்களால்தான்' என்று நகையும் சுவையுமாக ஆண்களைத் தாளித்துக் கொட்ட அவையில் இருந்த (அடியேன் உட்பட) ஆண்கள் அத்தனை பெரும் கப்சிப் ஆயினர்! ஆணாதிக்கம் தொடர்வது பெண்களாலும் இல்லை ஆண்களாலும் இல்லை, சமூகத்தால்தான் என்று
ஆராய்ச்சி பூர்வமாக விளக்கிய திருமதி சுகுணா சமரசம் பேச்சை கேட்டு மக்கள் மலைத்துப் போனார்கள். திருமதி லினோதினி சண்முகநாதன் ஒரு படி மேலே போய், சிலப்பதிகாரத்தில் பல மேற்கோள்கள் காட்டி, ஆணாதிக்கம் தொடர்வது இலக்கியத்தால்தான் என்று (அடிக்காத குறையாகப்) பேசி முடித்தார்!  இறுதியாகப் பேச வந்த திருமதி தனசெல்வி தம்பி, ''எல்லாமே மாயை அதிலும் ஆணாதிக்கம் என்பது வெறும் பெரும் மாயைதான்'' என்று உரத்துக் கூறியபோது ஏகப்பட்ட வரவேற்பு - வேறு யாரிடமிருந்து ? எல்லாம் ஆண் மக்களிடமிருந்துதான்!

கடைசியாக, 'இனியேனும் ஆணாதிக்கத்தைக் குறைக்க முயல்வோம்' என்று ஒரு வரியில் தன் தீர்ப்பை எழுதினார் மகளிரணித் தலைவியும் நடுவருமான திருமதி இராசேசுவரி சிமோன். இதில் ஒரு வேடிக்கை : இதில் பங்கு கொண்ட பெண்கள் பலரும், தத்தம் கணவர்கள் தமக்கு உறுதுணையாக இருப்பதாக அறிக்கை இட்டதுதான்.

செல்வி முத்து லிசா செயசிறீ, செல்வன் ச்தாலன் அசுவின் என்ற சிறுசுகள் இருவர் பிசிறில்லாத வயலின் இசையை வாரி வழங்கினர். நம் இளைய தலைமுறையிடம் மறைந்து கிடக்கும் கலை ஆற்றலை என்னென்பது!

திருமதி சரோசா தேவராசு, திருமதி பூங்குழலி பெருமாள் & குழுவினர் அளித்த வில்லுப் பாட்டு மகளிரணி விழா மகுடத்தில் பதித்த வைரம்!
குடும்பம் ஒரு கோவில் என்ற தலைப்பில் மல்லுக் கட்டிய வில்லுப்பாட்டில் வந்து விழுந்த கருத்துக் கொட்டும் சொற்கட்டும் பலவகை மெட்டும்... அடடா அந்த வானத்தையே எட்டும்! எழுதியவருக்கும் (திருமதி சரோசா தேவராசு) பாடியவர்களுக்கும் பக்காவாகப் பக்க வாத்தியம் வாசித்தவர்களுக்கும் பாராட்டுகள்.

மோ நகரப் பூக்கள் கழகக் கண்மணிகள் டிக் சந்தியா, ராசி செல்வதாரிணி, சக்ரசு பெரோட்டா, பிரிதா பெரோட்டா அளித்த கண்ணுக்கினிய கோலாட்ட நடனம் அனைவரையும் கவர்ந்தது.

முத்தாய்ப்பாக நடைபெற்ற வினா - விடைப் போட்டி, முத்தான நிகழ்ச்சியாகவும் அமைந்திருந்தது. வினாக்களையும் விடைகளையும் தயார் செய்திருந்தவர் திருமதி லூசியா லெபோ. அவரோடு சேர்ந்து திருமதி பிரபா அசோகன் கேள்விகளைப் பகிர்ந்துகொண்டு கேட்க, பங்கெடுக்க வந்திருந்த மகளிர் பத்துப் பேர் உற்சாகமாகப் பதில் தந்தனர். திருமதி லூசியா லெபோ சில பல துணைக் கேள்விகளைக் கேட்டு மேலதிகத் தகவல்களைத் தந்தது சிறப்பாக இருந்தது.

பங்கெடுத்த அனைவருக்கும் பொன்னாடை, பரிசுகள் வழங்கி மகிழ்ந்தது மகளிரணி. வந்தவர்களுக்குச் சுவையான சிற்றுண்டி வழங்கும் பொறுப்பை ஏற்றுச் சிறப்பாகச் செயல் பட்ட திருமதி குணசுந்தரி பாரதிதாசன் பாராட்டுக்கு உரியவர். இடையே, பிரான்சு கம்பன் கழகத்தின் பொதுச் செயலர் செவாலியே யூபர்ட் சிமோன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் கையாலேயே கேக்கை வெட்டிப் பரிமாறிய நிகழ்ச்சியும் சிறப்பாக நிறைவேறியது. இறுதியாகத் திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால் நன்றி உரை கூற பிரான்சு மகளிரணி விழா இனிதே நிறைவுற்றது.

முதல் நிகழ்ச்சியைச் சிறப்பாகத் தயாரித்து நல்ல படி நடத்திய பிரான்சு கம்பன் மகளிரணிக்கு ஒ போடுவோம்! (பின்னாடி நின்று ஆதரவு கொடுத்தது ஆண்களாகிய நாமாக இருந்தாலும்!)

-- புதுவை எழில்