பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 15 avril 2010

இன்றைய அறிமுகம் -- ஸ்ரீஆண்டாள்

பத்தாம் நுாற்றாண்டில் வாழ்ந்த வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில், பெண் குலத்தைச் சார்ந்தவர் ஆண்டாள் மட்டுமே.

ஸ்ரீவில்லிப்புத்துாரில் வாழ்ந்த திருமால் பக்தர் விஷ்ணு சித்தரின் (பெரியாழ்வார்) வளர்ப்பு மகள் கோதை. சிறுவயதிலேயே, கிருஷ்ண பரமாத்மாவிடம் அளவுகடந்த அன்பு கொண்டு, பின் அவரைத் தவிர வேறு யாரையும் மணப்பதில்லை என உறுதி பூண்டவள்.

இறைவனுக்குச் சாற்றக் கட்டிய மாலையைத் தானே அணிந்து அழகு பார்த்த பின்பு, கோயிலுக்கு அனுப்புவது அவள் வழக்கம். இதை அறிந்து அவள் தந்தை வருந்த, இறைவனே அவர் கனவில் தோன்றி “அவள் அணிந்த மாலையே தனக்கு ஏற்புடைத்தது” என்று அறிவிக்க, இறைவனையே ஆண்டதால் “ஆண்டாள்” எனும் பெயர் பெற்றார். இறுதியில், ஸ்ரீரங்கர் கோயிலுக்குச் சென்று, அங்கு தான் விரும்பிய மணவாளனுடன் கலந்து மறைந்து விட்டார், இந்தச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி!

ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இலக்கிய நயமும், தத்துவமும், பக்தியும் நிறைந்த படைப்புக்களில், திருப்பாவையின் 30 பாடல்களும்ஆயர்பாடி கோபிகையாகத் தன்னையெண்ணி ஆண்டாள் திருமாலின் பெருமையைக் குறிப்பவை. முதல் ஐந்து பாடல்கள், மனமார வழிபட்டால் பாவங்கள் தீருமென்பதையும் - அடுத்த பதினைந்து பாடல்கள், சமுதாயம் பக்தியுணர்வில் இணைந்து பங்குகொள்ள வேண்டுமென்பதையும் - கடைசி பத்து பாடல்கள், இறைவனின் புகழ் ஆசீர் பற்றியும் எடுத்துரைக்கின்றன.

நாச்சியார் திருமொழியின் 143 பாடல்களும் கண்ணனைச் சேரும் முயற்சி பற்றியவை. நீரிலிருந்து வெளிவந்த மீன் எப்படி நீருக்காகத் துடிக்குமோ அப்படி ஆன்மா பரமாத்வாவை நாட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன.

திருப்பாவை பாடல்கள் மார்கழி மாதத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம். இந்தி என்று பல மொழிகளில் இந்தியா முழுவதும் பாடப்படுகின்றன. ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அவற்றின் பெருமை எங்கும் பரந்துள்ளது.

-- சுகுணா தணிகா