பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

dimanche 30 novembre 2014

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம். தனிமை என்பது மிகக் கொடுமையானது என்று சொல்லப்படுகிறது. இதனாலேயே பலர் வெளியே சுற்றுவதும், புடை  சூழ இருப்பதும் பாதுகாப்பானது, தனிமையிலிருந்து காக்கும் வேலி  என எண்ணுகின்றனர். நோயுற்றிருக்கும் போதோ, அன்றி தானியங்க இயலா நிலையிலோ நிச்சயம் யார் உதவியேனும் அவசியம்தான். மேலும் மனித வாழ்வே இன்னொருவர் உதவி இன்றி நகர்த்த இயலாதது. அதனால் இந்தத் தனிமை பற்றி சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆனால் "மனம்" பெரும்பாலும் தனித்து இயங்குகிறது. தனக்கே உரிய எண்ணங்கள், கனவுகள், அனுபவங்கள், விருப்பு-வெறுப்புகள், இவை பற்றிய அலசல்கள் என அது ஓர் தனி உலகம். இதன் வெளிப்பாடுதான் பலர் நடுவிலும் சில வேளைகளில் ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுதல். உணர்வுகள் அதன் வயப்பட்டு விடுவதால் பிறரது உடனிருப்பு கூட அவசியமற்றதாகவோ, இடஞ்சலாகவோ தோன்றிவிடுகிறது. அப்படியானால் பிறரை நாம் நமது வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்கிறோமா?!

சுயநலம் எனக் கொள்ளா விடினும், "நாம்" என்ற உணர்வுக்கு "பிறர்" என்கிற பந்தம் எந்த அளவு அவசியம், "தன்னிருப்பு" என்பதற்கு "இரண்டாமவர்" தேவையா என்ற விளக்கம் இந்தத் "தனிமை" பற்றிய பயத்துக்கு உரிய பதிலாக அமையும். கூடி வாழ்ந்த காலத்தில் சண்டை சச்சரவுகள் இருந்தபோதும், மனித நேயம் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொள்ள வைத்தது. இன்று வாழ்க்கை முறைகளாலும், மன பேதங்களாலும், கடமை உணர்வு குன்றியதாலும் பலர், குறிப்பாகக் குழந்தைகளை ஆளாக்கியப்  பிறகு வரும் நாட்களில்  பெற்றோர் தனிமைப் பட்டுப் போகிறார்கள்.

எந்த வயதில், என்னக் காரணத்துக்காக இருந்தாலும் "தனிமை" வயதால் மாறி விடப் போவதில்லை. "தனியாக வந்தோம்-தனியாகவே செல்வோம். இதில் உறவென்ன, பகை என்ன!" என்று வேதாந்தம் உண்மையைத்தான் அறைந்தாற்போல் உரைக்கிறது. இன்பம் என்றாலும், துன்பம் என்றாலும் ஒவ்வொருவருடைய மன நிலைக்கு ஏற்றாற்போல் "அனுபவித்தல்" தனியே, தனக்குள் மட்டுமே நடக்க முடியும். 'தலை வலியும், வயிற்று வலியும் தனக்கு வந்தால் தெரியும்' என்பது கூட நம் உணர்வுகளை எவ்வகையிலும், யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாது என்பதையே உணர்த்துகிறது.

எனவே "தனிமை" கண்டு பயந்து போவதிலோ, புலம்புவதிலோ எந்த அர்த்தமும் இல்லை. நம் மனதை, எண்ணங்களை, உணர்வுகளை சமன்படுத்த அறிந்து கொண்டால் போதும். ' துக்கத்தில் மூழ்குவது தன்  புண்ணைத் தானே சொரிந்து கொள்வது போன்றது' என்று அபத்தமாகக் கூறுவார்கள். பொங்கி வரும் உணர்வலைகளில் துயரமும் இருக்கும். நிறைவும் இருக்கும். வாழ்வே இரண்டும் கலந்ததாக இருக்கும் போது, ஒன்றை மட்டுமே நினைவில் கொள்வது இயலாதது. வருந்த நேர்ந்தால், அதற்கேற்ற வடிகாலும் உண்டு. கண்ணீரே ஒரு வகை விடுதலை தான்.

துயரப்படும் மனதுக்கு உரமூட்டவும், நம்பிக்கை இழந்த நிலையில் பிடிப்பேற்படுத்தவும் அறிந்து கொள்ள வேண்டும். தனக்குத் தானே இயலாவிட்டால்  புத்தகங்களோ, பாடல்களோ உணர்வுகளை மாற்றலாம். செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் இயங்கினால் தன்னை மறக்கலாம். வாழ்வின் உண்மையான "நிலையாமை" புரிந்து விட்டாலே அமைதி உண்டாகி விடும். இறை நம்பிக்கை இதற்கு வலுவூட்டும். பாரத்தை "சரணாகதி" அடைந்து விட்டால் இறக்கி விடலாம். பிறகு "தனிமை" "இனிமை" ஆகவே மாறிவிடும்!

திருமதி சிமோன்


தனிமை போக்கும் நினைவுகள் விண்ணில் மிதக்கும் விண்முகில்போல்

    விரைவில் மறையும் நீர்க்குமிழ்போல் 

கண்ணின் பார்வை தொலைநோக்கக் 

   காணும்   உலகம்  விரிந்தோடத்

தண்ணீர்  மீதின்  காட்சிகள்போல் 

   தளிர்ந்து  மனத்தில் சஞ்சரிக்க 

என்னுள்  வாழ்ந்து  எழுச்சியுறும்

     இறந்த  கால   நினைவுகளே !


பள்ளிப்  பருவ  நாளங்கே  !

   பாடித்  திரியும்  நண்பரங்கே !

சொல்ல இயலாச் சிரிப்பங்கே !

   துயரம்  தாளா  மனதங்கே !

செல்லம் கொடுக்கத்  தாயங்கே !

 சிந்தை ஊக்கும் தந்தையங்கே !

உள்ளம் என்னும் உலகினிலே 

   உலவித் திரியும் நினைவுகளே !


இன்ப துன்ப நினைவெல்லாம் 

    இறந்த  கால மனச்சின்னம் !

இன்று நடக்கும் நிகழ்ச்சிகளை  

     எளிதாய்  முடிக்க வழிக்காட்டி !

என்றும்  வாழ்வுப் பயணத்தில்  

     இணைந்துச்  செல்லும் வழித்தோழன் !

இன்றுச்  செய்யும் செயல்கள்தான்

     இனிமேல்  மாறும்  நினைவுகளாய் !


வாழ்க்கைப் பயணம் உள்ளவரை 

   வாழும் நினைவோ  பலகோடி !

சூழும் நினைவில் தத்தளித்துச் 

    சுழன்று தவிக்கும் நம்மனது !

வீழ்த்தும் துன்ப நினைவுகளும் 

   விரும்பும் இன்ப நினைவுகளும் 

ஆழ்த்தும் நம்மைக் கனவுலகில் !

     ஆழ்ந்துப்  பார்த்தால்  மாயுலகம்  !


- தணிகா சமரசம்  


காலமோ மாறி ஓடும்
  கற்பனை, சுவையும் மாறும் !
ஞாலமோ சுமையை வாழ்வில்
  நாளுமே ஏற்றி வைக்கும் !
பாலமாய் நின்று தாங்கும்
  பாசமும் மறைந்து போகும் !
தூலகம் (விடம்) நிறைந்த போதில்
  தூததும் நினைவே அன்றோ !


எண்ணும் பொழுதில் விளையாடும்
  இளையோர் நினைவும் அதிலன்றோ !
வண்ணம் மின்னும் காதலதும்
  வாழ்வில் மாந்தர் நினைவன்றோ !
திண்ணம் முதியோா் கனவெல்லாம்
  தேடும் வம்ச வளமன்றோ !
சுண்ணம் (தூசு) போன்று மறைந்தேகி
  தொடரும் கடிதோர் நாளன்றோ !


அலைபாயும் நினைவுகளோ ஆயிரங்காண் ! ஆங்கே
  அலைக்கழியும் மனமதிலே அடுக்கடுக்காய் முற்றும்
கலையாத கனவுகளும், காணுகின்ற உறவும்,
  கண்டுவிட்ட பிரிவினிலே கனக்கின்ற உணர்வும்
நிலையாக நின்றாடி நிம்மதியைத் தொலைக்கும் !
  நீக்கமற நிறைந்துவிடும் நினைவுக்கே என்றும்
விலையாகக் காலமதை வீணுக்கு இறைத்தே
  விரைகின்ற வாழ்வினிலே வரவொன்றும் இலையே !

திருமதி சிமோன் 


பரி நகரின் பாதாளச் சாய்க்கடைகள்!நாகரிக முன்னேற்றத்தைக் குறிப்பிட எத்தனையோ அறிகுறிகள்! அவற்றுள் ஒன்று  'சாய்க்கடை வடிவமைப்புஎன்றால் நம்புவீர்களா? உண்மை இது! சிந்து சமவெளியில் அகழ்வாய்வு  மேற்கொண்ட ஆய்வாளர்கள் அசந்து போனார்கள்: ஆழப் புதைந்து கிடந்த இடிபாடுகளுக்கு இடையில் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்ட நகரத்தின் சிதிலங்கள் சிதறிக் கிடந்தனவாம். மேலும் அந்த நகரின் சாக்கடைகள், பாதாளச் சாய்க்கடைகள் அவ்வளவு  சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தனவாம்! ஆகவே சிறப்பான நாகரிகத்துக்கு  உள்ள அறிகுறிகளில் ஒன்றாகச் சிறப்பான சாய்க்கடை வடிவமைப்பும் இடம் பெற்றது.

இந்த அடிப்படையில் பார்த்தால் இக்கால நாகரிகத்துக்கு எடுத்துகாட்டாகப்  பரி நகரம் விளங்குகிறது. ஆம் பரி நகரத்தின் பாதாளச் சாய்க்கடைச் சிறப்புகளைக்  கேட்டால் அப்படியே சொக்கிப் போவீர்கள். வருகிறீகளா, ஒரு சுற்று அடித்து வருவோம்.
பரி பாதாளச் சாய்க்கடைகளைப் பார்க்க முடியுமா என்ற சந்தேகமா? கவலையே வேண்டாம்! குறிப்பிட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்க்க அனுமதி உண்டு. அதன் நுழை வாயில் அல்மா பாலத்துக்கு அருகில் (Pont d'Alma) உள்ளது. ஆண்டுக்கு 95 000  பேர்கள் சுற்றிப் பார்க்கிறார்கள்!

பரி நகரின் பாதாளச் சாய்க்கடை அமைப்புகள் இன்று நேற்று உருவானவை அல்ல! 1370 ஆம் ஆண்டு மொன்மார்த்ர் தெருவின்  (Rue Montmartre) கீழ் அமைக்கப்பட்ட பாதாளச் சாய்க்கடைத்  திட்டம் பலவேறு பிரஞ்சு அரசுகளால் தொடரப்பட்டு நகர் முழுவதும் பரவலாக்கப்பட்டது.
இடைக்காலம் வரை பரி நகரின் குடி நீர்த் தேவையைச செய்ன் நதி நீர் பார்த்துக்கொண்டது.பயன்படுத்தப்பட்டு மாசடைந்த நீரை விளை  நிலங்களிலோ தளம் பாவப் படாத தெருக்களிலோ கொட்டினார்கள்.அதன் பின் அந்த நீர் மறுபடி செய்ன்  நதிக்கே திருப்பிவிடப்பட்டது.ஏறக்குறைய 1200 ஆண்டுகளில் பிலிப் ஒகுஸ்ட் (Philippe Auguste) அரசர் பரி தெருக்களில் கற்களைப் பதித்துத் தளம் பாவினார். அவற்றின் அடியில் மாசடைந்த நீர் பாய்ந்தோடப் பாதாளச் சாய்க்கடை அமைக்கப்பட்டது.1370 -இல் 'Hugues Aubriot' என்பவர் மொன்மர்த்ர்  தெருவின் கீழ் நிலவறை  கல்லால் கட்டினார் ; இதில் சேகரிக்கப்பட்ட அழுக்கு நீர்  'Menilmontant' ஓடைக்குக்கொண்டுபோகப்பட்டது. 14 -ஆம் லூயி மன்னர் காலத்தில் செய்ன்  நதி இடக் கரைப் பக்கம் சாய்க்கடை வட்டத் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டது.1855 -இல் 3 -ஆம் நெப்போலியன் , பரி நகரின் சுகாதாரம், போக்குவரத்துகளையும்  மேம்படுத்த  முனைந்தார். விளைவாகப் புத்தம் புதிய பெருஞ்சாலைகள், நீர்வழிப் பாதைகள்,
சாய்க் கடைகள் முளைத்தன.அவரிடம் பணியாற்றிய  ஒஸ்மான் பிரபு (Baron Haussmann), பொறிஞர் யுஜின் பெல்கிரான்  (Eugène Belgrand) இப்போதுள்ள பரி சாய்க்க்கடைகள், நீர் வழங்கு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார்கள். குடி நீர் , குடி நீர் அல்லாத பொதுப் பயனாகும் நீர் என இருவகை நீர் வழங்கவும் 600 மீட்டர்  நீளச் சாய்க்கடைகள் அமைக்கவும் அவர்கள் பெரிதும் உதவினர்.

1914 முதல் 1977 வரை 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட சாய்க்கடைகள்  உருவாக்கப்பட்டன. 1935 முதல் எவ்லின் பகுதியில் உள்ள Achères அழுக்கு நீர் தூய்மை படுத்தும் நிலையம் உருவாக்கப்பட்டது.

பரி நகரில் இருப்பது போன்ற சிறப்பான சாய்க்கடை அமைப்பு  வேறு எந்த நகரத்திலும் இல்லை! 2100 கிலோமீட்டர் நீளமான நிலவறைகள்  ஊடாக (tunnels), சாய்க்கடைகள்  அமைந்துள்ளன ; இவற்றில் ஓடுவது வெறும் அழுக்கு நீர் என்று கருத வேண்டா! ஆம்;, இவற்றின் ஊடாக நன்னீர்க் குழாய்கள், குடி நீர் அல்லாத நீர்க் குழாய்கள், தொலை தொடர்புக்கு உதவும் கம்பிகள், போக்குவரத்துக்கு உதவும்  விளக்குகளைக் கட்டுப்படுத்தும் மின் கம்பிகள்...எனப் பலவற்றையும்  இவை தம்முள் அடக்கி உள்ளன! ஒவ்வொரு நாளும் வெளியேற்றப்படும் அழுக்கு நீரின் அளவு என்ன தெரியுமா? 1.2 மில்லியன்  க்யுபிக் மீட்டர் !ஒவ்வோர் ஆண்டும் 15 000 க்யுபிக்  மீட்டர் அழுக்குகள் அகற்றப்படுகின்றன! மலைப்பாக  இல்லையா !

பரி நகரச் சாய்க்கடைகளுக்கு என்றே தனி காட்சியகம் உண்டு தெரியுமோ!1800 முதல் கொண்டே சாய்க்கடைச் சுற்றுலா புகழ் பெறத் தொடங்கிவிட்டது. கீழே  சாய்க்கடைகள் ஓட கொஞ்சம் மேலே நடை பாதைகள்  அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுற்றுலா போகலாம்.

இச்சுற்றுலா ஒரு மணி நேரம் நீடிக்கும். வழி நெடுக சாய்க்கடைகள்  வரலாறு விவரிக்கப்படும். அக்கால இக்கால எந்திரங்கள், கருவிகள்...முதலியவற்றைக் காணலாம்.

சுற்றுலா நேரம் : வியாழன், வெள்ளி விடுமுறை

சனிக்கிழமை முதல் புதன் கிழமை வரை காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை.

கட்டணம்பெரியவர்கள் : 4.40 யூரோக்கள்

சிறப்புக்  கட்டணம் : 3,60 யூரோக்கள் (10 பேர் கொண்ட குழு ; மாணவர்கள், 6 முதல் 16 வயது உள்ளவர்கள், சீருடையில் வரும் படை வீரர்கள், famille nombreus, Paris-famille , améthyste et émeraude... cartes வைத்திருப்பவர்கள்).


குறும்படம் காண இங்கே அழுத்துக : Visitez les égouts de Paris
தகவல் :எழிலன் 

உறவு முறைப் பெயர்கள்என்  கணவர் குடும்பம் பெரியது. என்னவர்தான் கடைசி. நிறைய அக்காக்கள். ஆக  அழைக்க அத்தாச்சிகள் அதிகம்(அதாவது நாத்தனார்கள்). அவர்கள் பிள்ளைகள் அனைவருக்கும் என்னவர் குட்டி மாமா என்பதால் வாய்நிறைய அத்தை என்று கூப்பிட பெரிய குட்டீஸ் பட்டாளமே உண்டு.அதனால் அன்பு தொல்லைகளும் அதிகம். இன்று அவர்களில் பலர் பேரப்பிள்ளைகள் எடுத்துவிட்டாலும் அத்தை மாமா என்ற  அன்பு உறவு தொடர்கிறது.இன்றோ  ஒரே குழந்தை என்று  குடும்பம் சுருங்கி விட்டது.நம் பிள்ளைகளுக்கு உறவுமுறை பெயர்கள்கூடத் தெரிவதில்லை.வயதுவந்த ஆண்களை அங்கிள் என்றும் பெண்களை ஆண்ட்டி என்றும் பொத்தாம் பொதுவாக அழைக்கிறார்கள். இது ஆங்கிலேயர்களின்  வரவால், ஆங்கிலக்  கல்விமுறையால் வந்த தாக்கம் என்று சொல்லலாம்.

என்  அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.பிரான்ஸ் நாட்டின் காலணியாகிய ழிபுத்தி என்ற இடத்தில் (ஆப்பிரிக்காவில் உள்ளது) நாங்கள் குடும்பத்துடன் வசித்து வந்த காலம் அது.எனக்குப்  பிரெஞ்சு மொழி கொஞ்சம்தான் தெரியும்.என்  பக்கத்து வீட்டிலுள்ள சிறுமியும் சிறுவனும் பெற்றோருடன் வந்திருந்தனர்.  தன்னுடன் வந்த  பெண்ணை தன்னுடைய பேல் மேர் ( belle-mère ) என்று அந்தச்  சிறுமியும் தன்னுடன் வந்த ஆணைத்  தன் போ பேர் (beau-père) என்றும்  அறிமுகப்படுத்தினர்.எனக்கு ஒன்றும் புரிய வில்லை. உங்களுக்கும்தானே! பிரெஞ்சு மொழியில் மாமியாரை பேல் மேர் என்றும் மாமனாரை போ பேர் என்றும் அழைப்பர் என்பது மட்டுமே நான் அறிந்தது.மாற்றந்தாய், மாற்றந்தகப்பன் - இந்த உறவு முறைகளையும் இதே சொல்லால்தான் அழைப்பார்களாம். இதனால் வந்த குழப்பம்தான் இது.
  நண்பர் வீட்டு விழாவுக்குச்  சென்றிந்தோம். என்  நண்பி ஒரு பெண்ணைக்  காட்டிப்   பெல் ப்வீ (belle-fille) என்றாள். இந்தப்  பிரெஞ்சுச்  சொல்லுக்கு அழகிய  பெண் என்று பொருளும் உண்டு. உண்மையாகவே அந்தப்  பெண் அழகாக இலட்சணமாக இருந்தாள். இவள் அத்தை என்று என்  நண்பியைக்  கூப்பிட அவர்களின் உறவுமுறை என் மண்டைக்குப் புலனாயிற்று.  அதுதான் - நண்பியின்  மருமகள் அவள்.

உறவுமுறைகளைக் குறிப்பிடப் பயன்படும் சொற்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன எனினும், அச் சொற்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள பண்பாட்டு அம்சங்கள், மொழிக்கு மொழி, சமுதாயத்துக்குச் சமுதாயம்  வேறுபடுகின்றன.
உலகில் காணப்படும் உறவுமுறைப்  பெயரிடல் முறைமைகளை மானிடவியலாளர் ஆறு வகைகளாகப்  பிரித்திருக்கிறார்கள். அவர்கள் ஆய்வு மேற்கொண்ட  சமுதாயங்களின் பெயர்களாலேயே அவை அழைக்கப்படுகின்றன.
  1. சூடானிய முறை (Sudanese System)
  2. ஹவாய் முறை (Hawaiian System)
  3. எஸ்கிமோ முறை (Eskimo System)
  4. இரோகுவாயிஸ் முறை (Iroquois System)
  5. ஒமாஹோ முறை (Omaha System)
  6. குரோ முறை (Crow System)
ஆங்கிலேயர் உட்படப் பல ஐரோப்பிய இனங்கள் மத்தியிலும், பெரும்பான்மையான அமெரிக்கர்களிடத்திலும் எஸ்கிமோ உறவுமுறைப் பெயரிடல் புழக்கத்தில் உள்ளது. இம்முறையில் நேரடி உறவினர்கள் மட்டுமே தனிச் சொற்களால் குறிப்பிடப்படுகின்றனர்.மற்றவர்களைத்  தொடர்பு படுத்தியோ பொதுவாகவோ  குறிப்பிடுகின்றனர்.அதனால்தான் இந்த முறையில் உறவுச் சொற்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 
தமிழர் உறவு முறையும் ஏனைய திராவிட இனத்தவர் உறவு முறைகளும் இரோகுவோயிஸ் முறையைச் சேர்ந்தவை. தெனிந்தியா, இலங்கை, பிஜித்தீவுகள்,  ஆப்பிரிக்காவின்  சில பகுதிகள் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது.

தமிழர் உறவுமுறை பெயர்கள் காரணத்தோடும் அனைவரும் புரிந்துக்கொள்ளும் வகையிலும் இருக்கும் என்பதை நம் பிள்ளைகளுக்கு  எடுத்துச்  சொல்ல வேண்டும்.

உடன்பிறந்தவர்களைச்  சகோதரன், சகோதரி (brother, sister; frère, soeur) என்று பொதுவாகக்  குறிப்பிடுவது எல்லா சமூகத்திலும் உள்ளது. அவர்கள் நம்மைக் காட்டிலும் இளையவரா அல்லது மூத்தவரா என்பதைக்  காட்ட நம் முறையில் உள்ளது போலவே younger, elder/ petit, grand என்ற அடை மொழிகளால் குறிப்பிடுகின்றனர். ஆனால் நம் தமிழ் மொழயில் மட்டும்தான் அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை என்ற விளிக்கும் சொற்கள் உள்ளன.இதனால் ஒருவருக்கும் குழப்பமும் வராது.மிகவும் தெளிவாக உறவுமுறை புரியும்.

திருமணத்தால் உண்டாகும் உறவு முறைகள் அனைத்திற்கும் ஆங்கிலையர் சட்டப்படி அதாவது in- law என்று இணைத்துச்  சொல்வார்கள். (உ.ம் father-in-law; mother-in-law; son-in-law; daughter-in-law. in-laws). திருமணத்தால் நம் குடும்பத்தில் ஒருவராகும் பிள்ளைகளை மற்றொரு மகளாகவும்(மருமகள்), மற்றொரு மகனாகவும்(மருமகன்)  முறைகூறி அழைப்பதால்  சட்டபூர்வமாக அல்ல உணர்வூபூர்வமாக என்கிறோம் என்பது  தெளிவு. சம்பந்தி என்னும் உறவுமுறை சொல் மற்ற நாட்டு மொழிகளில் இருக்காது என்று நினைக்கிறேன்.
பெற்றோருடைய பெற்றோரைப்  பாட்டன், பாட்டி என்று தந்தை வழி தாய் வழி வேறுபாடின்றி அழைப்பதுண்டு. ஆஞிமா, அம்மாச்சி என்று பாட்டியை அழைக்கும் வழக்கம் சில குடும்பங்களில் உண்டு.இக்காலத்தில் தாயின் பெற்றோரை அம்மம்மா, அம்மப்பா என்றும், தந்தையின் பெற்றோரை அப்பம்மா, அப்பப்பா என்றும்  அழைப்பதும் உண்டு.

மூத்த (பழந்)தலைமுறையினரை (ஆண்) குறிக்கப்  பாட்டன், பூட்டன் (கொள்ளுப்  பாட்டன், கொள்ளுத்  தாத்தா), ஓட்டன் (எள்ளுத் தாத்தா , எள்ளுப் பாட்டன் ) பரன் போன்ற பெயர்களும்
பெண்களைக் குறிக்கப்  பாட்டி, பூட்டி(கொள்ளுப் பாட்டி), ஓட்டி, பரை போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.
இளந்தலைமுறையினரைப்  பேரன்,பேத்தி; கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்தி; எள்ளுப்பேரன், எள்ளுப் பேத்தி என்றும் அழைக்கின்றனர்.

ஒரு பெண்ணிற்கு அவள் கணவனின் சகோதரன் மனைவி ஓரகத்தி ஆவாள்.கூட்டுக்  குடும்பமாக இருந்த காலத்தில் ஒரே அகத்தில் அனைவரும் வசித்ததால் வந்த பெயரோ!!  ( வேறு பெயர்கள்: ஓர்ப்படி, ஓர்ப்படியாள்)
ஒரு பெண்ணிற்கு அவள் கணவனின் மூத்த சகோதரன் மூத்தார் ஆவார்.ஒரு பெண்ணிற்கு அவள் கணவனின் இளைய சகோதரன் கொழுந்தன் ஆவார்.(ஆங்கிலத்தில் பிரதர் இன்- லா என்பார்கள். மூத்தவாரா? இளையவரா என்று குழம்ப வேண்டி இருக்கும். மேலும்மனைவியின் உடன்பிறந்தாள் கணவனையும் இப்படியே அழைப்பர்). நம் வீடுகளில் அவரைச்  சகலன், சகலபாடி என்று கூறுவார்கள்.

ஓர்  ஆணிற்கு அவன் மனைவியின் சகோதரி மைத்துனி ஆவார்.
வேறு பெயர்: மச்சினி அல்லது மச்சினிச்சி.
ஓர்  ஆணிற்கு அவன்  மனைவியின் இளைய சகோதரி கொழுந்தியா(ள்) ஆவார்.
நாத்தனார், மைத்துனன், தாய் மாமன் போன்ற உறவு முறைகளுக்கு மவுசு  அதிகம்.
மூத்தாள், பாரியை,கனிட்டை, வைமாத்திரேயன்(மாற்றான் சகோதரன்) போன்ற பல உறவுமுறைப்  பெயர்கள் உள்ளன.

பங்காளிகள் என்போர் தந்தை வழியில் உறவுமுறையினர் ஆவர். இவர்கள் திருமணம் முதலான மங்கல நிகழ்ச்சிகளிலும், இறப்பு முதலான துயர நிகழ்ச்சிகளிலும் முக்கிய இடம் பெறுகின்றனர். இவர்கள் இன்றி எந்நிகழ்வும் சில குடும்பங்களில் நடைபெறாது.

குழந்தைப் பேற்றை அடைய இயலாத தம்பதியர் முன்பெல்லாம் தம் விதியை நினைத்து வருந்துவர். ஒருசிலர் குழந்தைகளைத்  தத்து எடுத்து வளர்ப்பார்கள்.  விஞ்ஞான, மருத்துவ துறைகள்  கண்டுள்ள வளர்ச்சியால் தற்பொழுது வாடகைத் தாய்  என்னும்  புது உறவு முறையை ஏற்படுத்தி குழந்தை பாக்கியத்தைப்  பெறுகிறார்கள். வரவேற்க வேண்டியதுதான்!! ஆனால் குழந்தை ஊனமுற்று பிறந்தாலோ  வேறு ஏதோ காரணத்தால் சொந்த பெற்றோரால் மறுக்கப்படும் பொழுதோ   பெற்ற அந்தத் தாய்க்கும் அந்தக்  குழந்தைக்கும்  உள்ள உறவுக்குப் பெயர் என்ன???

லூசியா லெபோ