என் கணவர் குடும்பம் பெரியது.
என்னவர்தான் கடைசி. நிறைய அக்காக்கள். ஆக அழைக்க அத்தாச்சிகள்
அதிகம்(அதாவது நாத்தனார்கள்). அவர்கள் பிள்ளைகள் அனைவருக்கும் என்னவர்
குட்டி மாமா என்பதால் வாய்நிறைய அத்தை என்று கூப்பிட பெரிய குட்டீஸ்
பட்டாளமே உண்டு.அதனால் அன்பு தொல்லைகளும் அதிகம். இன்று அவர்களில் பலர்
பேரப்பிள்ளைகள் எடுத்துவிட்டாலும் அத்தை மாமா என்ற அன்பு உறவு
தொடர்கிறது.இன்றோ ஒரே குழந்தை என்று குடும்பம் சுருங்கி விட்டது.நம்
பிள்ளைகளுக்கு உறவுமுறை பெயர்கள்கூடத் தெரிவதில்லை.வயதுவந்த ஆண்களை
அங்கிள் என்றும் பெண்களை ஆண்ட்டி என்றும் பொத்தாம் பொதுவாக அழைக்கிறார்கள்.
இது ஆங்கிலேயர்களின் வரவால், ஆங்கிலக் கல்விமுறையால் வந்த தாக்கம் என்று சொல்லலாம்.
என் அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.பிரான்ஸ் நாட்டின் காலணியாகிய ழிபுத்தி என்ற இடத்தில் (ஆப்பிரிக்காவில் உள்ளது) நாங்கள் குடும்பத்துடன் வசித்து வந்த காலம் அது.எனக்குப் பிரெஞ்சு மொழி கொஞ்சம்தான் தெரியும்.என் பக்கத்து வீட்டிலுள்ள சிறுமியும் சிறுவனும் பெற்றோருடன் வந்திருந்தனர். தன்னுடன் வந்த பெண்ணை தன்னுடைய பேல் மேர் ( belle-mère ) என்று அந்தச் சிறுமியும் தன்னுடன் வந்த ஆணைத் தன் போ பேர் (beau-père) என்றும் அறிமுகப்படுத்தினர்.எனக்கு ஒன்றும் புரிய வில்லை. உங்களுக்கும்தானே! பிரெஞ்சு மொழியில் மாமியாரை பேல் மேர் என்றும் மாமனாரை போ பேர் என்றும் அழைப்பர் என்பது மட்டுமே நான் அறிந்தது.மாற்றந்தாய், மாற்றந்தகப்பன் - இந்த உறவு முறைகளையும் இதே சொல்லால்தான் அழைப்பார்களாம். இதனால் வந்த குழப்பம்தான் இது.
நண்பர் வீட்டு விழாவுக்குச் சென்றிந்தோம். என் நண்பி ஒரு பெண்ணைக் காட்டிப் பெல் ப்வீ (belle-fille) என்றாள். இந்தப் பிரெஞ்சுச் சொல்லுக்கு அழகிய பெண் என்று பொருளும் உண்டு. உண்மையாகவே அந்தப் பெண் அழகாக இலட்சணமாக இருந்தாள். இவள் அத்தை என்று என் நண்பியைக் கூப்பிட அவர்களின் உறவுமுறை என் மண்டைக்குப் புலனாயிற்று. அதுதான் - நண்பியின் மருமகள் அவள்.
உறவுமுறைகளைக் குறிப்பிடப் பயன்படும் சொற்கள் எல்லா மொழிகளிலும் உள்ளன எனினும், அச் சொற்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள பண்பாட்டு அம்சங்கள், மொழிக்கு மொழி, சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபடுகின்றன.
உலகில் காணப்படும் உறவுமுறைப் பெயரிடல் முறைமைகளை மானிடவியலாளர் ஆறு வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவர்கள் ஆய்வு மேற்கொண்ட சமுதாயங்களின் பெயர்களாலேயே அவை அழைக்கப்படுகின்றன.
- சூடானிய முறை (Sudanese System)
- ஹவாய் முறை (Hawaiian System)
- எஸ்கிமோ முறை (Eskimo System)
- இரோகுவாயிஸ் முறை (Iroquois System)
- ஒமாஹோ முறை (Omaha System)
- குரோ முறை (Crow System)
ஆங்கிலேயர்
உட்படப் பல ஐரோப்பிய இனங்கள் மத்தியிலும், பெரும்பான்மையான
அமெரிக்கர்களிடத்திலும் எஸ்கிமோ உறவுமுறைப் பெயரிடல் புழக்கத்தில் உள்ளது.
இம்முறையில் நேரடி உறவினர்கள் மட்டுமே தனிச் சொற்களால்
குறிப்பிடப்படுகின்றனர்.மற்றவர் களைத் தொடர்பு படுத்தியோ பொதுவாகவோ குறிப்பிடுகின்றனர்.அதனால்தான் இந்த முறையில் உறவுச் சொற்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
தமிழர்
உறவு முறையும் ஏனைய திராவிட இனத்தவர் உறவு முறைகளும் இரோகுவோயிஸ் முறையைச்
சேர்ந்தவை. தெனிந்தியா, இலங்கை, பிஜித்தீவுகள், ஆப்பிரிக்காவின் சில
பகுதிகள் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த முறை
பின்பற்றப்படுகிறது.
தமிழர் உறவுமுறை பெயர்கள் காரணத்தோடும் அனைவரும் புரிந்துக்கொள்ளும்
வகையிலும் இருக்கும் என்பதை நம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
உடன்பிறந்தவர்களைச் சகோதரன், சகோதரி (brother, sister; frère, soeur) என்று பொதுவாகக் குறிப்பிடுவது எல்லா சமூகத்திலும் உள்ளது. அவர்கள் நம்மைக் காட்டிலும் இளையவரா அல்லது மூத்தவரா என்பதைக் காட்ட நம் முறையில் உள்ளது போலவே younger, elder/ petit, grand என்ற அடை மொழிகளால் குறிப்பிடுகின்றனர். ஆனால் நம் தமிழ் மொழயில் மட்டும்தான் அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை என்ற விளிக்கும் சொற்கள் உள்ளன.இதனால் ஒருவருக்கும் குழப்பமும் வராது.மிகவும் தெளிவாக உறவுமுறை புரியும்.
திருமணத்தால் உண்டாகும் உறவு முறைகள்
அனைத்திற்கும் ஆங்கிலையர் சட்டப்படி அதாவது in- law என்று இணைத்துச்
சொல்வார்கள். (உ.ம் father-in-law; mother-in-law; son-in-law;
daughter-in-law. in-laws). திருமணத்தால் நம் குடும்பத்தில் ஒருவராகும்
பிள்ளைகளை மற்றொரு மகளாகவும்(மருமகள்), மற்றொரு மகனாகவும்(மருமகன்)
முறைகூறி அழைப்பதால் சட்டபூர்வமாக அல்ல உணர்வூபூர்வமாக என்கிறோம் என்பது
தெளிவு. சம்பந்தி என்னும் உறவுமுறை சொல் மற்ற நாட்டு மொழிகளில் இருக்காது
என்று நினைக்கிறேன்.
பெற்றோருடைய பெற்றோரைப் பாட்டன்,
பாட்டி என்று தந்தை வழி தாய் வழி வேறுபாடின்றி அழைப்பதுண்டு. ஆஞிமா,
அம்மாச்சி என்று பாட்டியை அழைக்கும் வழக்கம் சில குடும்பங்களில்
உண்டு.இக்காலத்தில் தாயின் பெற்றோரை அம்மம்மா, அம்மப்பா என்றும்,
தந்தையின் பெற்றோரை அப்பம்மா, அப்பப்பா என்றும் அழைப்பதும் உண்டு.
மூத்த (பழந்)தலைமுறையினரை
(ஆண்) குறிக்கப் பாட்டன், பூட்டன் (கொள்ளுப் பாட்டன், கொள்ளுத்
தாத்தா), ஓட்டன் (எள்ளுத் தாத்தா , எள்ளுப் பாட்டன் ) பரன் போன்ற
பெயர்களும்
பெண்களைக் குறிக்கப் பாட்டி, பூட்டி(கொள்ளுப் பாட்டி), ஓட்டி, பரை போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.
இளந்தலைமுறையினரைப் பேரன்,பேத்தி; கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்தி; எள்ளுப்பேரன், எள்ளுப் பேத்தி என்றும் அழைக்கின்றனர்.
ஒரு
பெண்ணிற்கு அவள் கணவனின் சகோதரன் மனைவி ஓரகத்தி ஆவாள்.கூட்டுக்
குடும்பமாக இருந்த காலத்தில் ஒரே அகத்தில் அனைவரும் வசித்ததால் வந்த
பெயரோ!!
( வேறு பெயர்கள்: ஓர்ப்படி, ஓர்ப்படியாள்)
ஒரு பெண்ணிற்கு அவள் கணவனின் மூத்த சகோதரன் மூத்தார் ஆவார்.ஒரு பெண்ணிற்கு அவள் கணவனின் இளைய சகோதரன் கொழுந்தன் ஆவார்.(ஆங்கிலத்தில் பிரதர் இன்- லா என்பார்கள். மூத்தவாரா? இளையவரா என்று குழம்ப வேண்டி இருக்கும். மேலும்மனைவியின் உடன்பிறந்தாள் கணவனையும் இப்படியே அழைப்பர்). நம் வீடுகளில் அவரைச் சகலன், சகலபாடி என்று கூறுவார்கள்.
ஒரு பெண்ணிற்கு அவள் கணவனின் மூத்த சகோதரன் மூத்தார் ஆவார்.ஒரு பெண்ணிற்கு அவள் கணவனின் இளைய சகோதரன் கொழுந்தன் ஆவார்.(ஆங்கிலத்தில் பிரதர் இன்- லா என்பார்கள். மூத்தவாரா? இளையவரா என்று குழம்ப வேண்டி இருக்கும். மேலும்மனைவியின் உடன்பிறந்தாள் கணவனையும் இப்படியே அழைப்பர்). நம் வீடுகளில் அவரைச் சகலன், சகலபாடி என்று கூறுவார்கள்.
ஓர் ஆணிற்கு அவன் மனைவியின் சகோதரி மைத்துனி ஆவார்.
வேறு பெயர்: மச்சினி அல்லது மச்சினிச்சி.
ஓர் ஆணிற்கு அவன் மனைவியின் இளைய சகோதரி கொழுந்தியா(ள்) ஆவார்.
நாத்தனார், மைத்துனன், தாய் மாமன் போன்ற உறவு முறைகளுக்கு மவுசு அதிகம்.
மூத்தாள், பாரியை,கனிட்டை, வைமாத்திரேயன்(மாற்றான் சகோதரன்) போன்ற பல உறவுமுறைப் பெயர்கள் உள்ளன.
மூத்தாள், பாரியை,கனிட்டை, வைமாத்திரேயன்(மாற்றான் சகோதரன்) போன்ற பல உறவுமுறைப் பெயர்கள் உள்ளன.
பங்காளிகள் என்போர் தந்தை வழியில் உறவுமுறையினர் ஆவர். இவர்கள் திருமணம் முதலான மங்கல நிகழ்ச்சிகளிலும், இறப்பு முதலான துயர நிகழ்ச்சிகளிலும் முக்கிய இடம் பெறுகின்றனர். இவர்கள் இன்றி எந்நிகழ்வும் சில குடும்பங்களில் நடைபெறாது.
குழந்தைப்
பேற்றை அடைய இயலாத தம்பதியர் முன்பெல்லாம் தம் விதியை நினைத்து
வருந்துவர். ஒருசிலர் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்ப்பார்கள்.
விஞ்ஞான, மருத்துவ துறைகள் கண்டுள்ள வளர்ச்சியால் தற்பொழுது வாடகைத் தாய்
என்னும் புது உறவு முறையை ஏற்படுத்தி குழந்தை பாக்கியத்தைப்
பெறுகிறார்கள். வரவேற்க வேண்டியதுதான்!! ஆனால் குழந்தை ஊனமுற்று பிறந்தாலோ
வேறு ஏதோ காரணத்தால் சொந்த பெற்றோரால் மறுக்கப்படும் பொழுதோ பெற்ற
அந்தத் தாய்க்கும் அந்தக் குழந்தைக்கும் உள்ள உறவுக்குப் பெயர் என்ன???
லூசியா லெபோ
Aucun commentaire:
Enregistrer un commentaire