பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 15 mars 2010

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

     வணக்கம். நெறிப்படுத்தும் சிந்தனைகள், உயர்ந்த குறிக்கோள்கள், ஆன்மீக உணர்வு என்று வாழ்வை மேம்படுத்தும் எத்தனையோ இருந்தபோதிலும், ஒரு சராசரி மனிதனால் எந்நேரமும் அவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க இயலுவதில்லை. அவனது நிலைக்கேற்ற பொழுதுபோக்கு அம்சங்கள், இறுக்கம் நிறைந்த  வாழ்க்கைப் பயணத்தை இலகுவாக்குகின்றன. இதையறிந்த தமிழர் பலவகைகளில் எளிய முறையில் சிறந்த கருத்துக்களைக்கூட விளையாட்டாகத் தந்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

     மார்ச் எட்டாம் தேதி “உலக மகளிர் தினம்”.  சாதாரணமாக நினைவு கூறத்தக்கவர்களை கால ஓட்டத்தில் மறந்துவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் இப்படி ஒரு நாளை நிர்ணயித்து அவர்கள் இச்சமூகத்துக்காக செய்தவைகளை நன்றி உணர்வுடன் நினைவுறுத்துவது வழக்கம். இந்த நாளும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன் நியுயார்க் பஞ்சாலை தொழிலாளிப் பெண்கள்  தங்கள் வேலை நேரத்தை 12 மணியிலிருந்து 8 மணியாகக் குறைக்கப் போராடியதை குறிப்பதுதான்.  ஒரு வகையில் அவர்கள் தங்கள் உரிமையைக் கோரிய போராட்டம். இன்னும் பலவிதங்களில், பலவற்றுக்காக போராடிய வண்ணமே வாழும் உலக  சனத்தொகையில் பாதியான, ஆணின் சரிபங்கு உரிமையான, உலக சுழற்சிக்கு அடிப்படையான பெண்ணுக்கு ஒரு நாளைக் குறிப்பிட்டு “இவர்களுக்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” என்று நினைவுபடுத்த  வேண்டியிருக்கிறது என்றால், அது நமது சமூகம் இருக்கிற அவல நிலையை  எடுத்துக்காட்டுவதாகத்தான் கொள்ளவேண்டியிருக்கிறது. இன்னும் “தாய், தந்தை, பாட்டி” ( இந்தப் பட்டியலில் தாத்தா சேர்க்கப்படவில்லை!) இவர்களுக்கெல்லாம் கூட “நினைவு நாள்” கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன! இத்தனை இருந்துங்கூட இவற்றை சட்டைசெய்யாதவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்! சிந்தித்துப் பார்த்தால் “நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?” எனினும் பெண்மையைப் போற்ற வேண்டுமென்று எண்ணி முயன்ற அந்த நல்லுள்ளங்களுக்கு பெண்ணினத்தின் சார்பில் “இதயங் கனிந்த நன்றிகள்”

                                                           --இராசேசுவரி சிமோன்

இன்றைய அறிமுகம் -- ஔவையார்

     ஔவையார் என்ற பெயரில் ஐவர் குறிப்பிடப்படுகின்றனர். பழந்தமிழ் அகராதிப்படி ஔவை என்ற சொல்லுக்கு மூதாட்டி-தவப்பெண் என அர்த்தம் கொள்ளப்படுகிறது. கால வேறுபாடுகள் இருந்தபோதிலும், அந்தந்த சமகால ஆண் புலவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தும், இவர்கள் பெயர்கள் மறக்கவோ, மறைக்கவோ பட்டிருக்கின்றன.

     வள்ளுவர், நக்கீரர் வாழ்ந்த கடைச்சங்க காலத்து ஔவைக் குழந்தை பாடியதாக ஒரு பாடல். அதற்குக் கர்ணபரம்பரைக் கதையாக ஏதோ சொல்லப்பட்டாலும் அப்பாடலின் உள்ளார்ந்த சோகம் கவனிக்கத்தக்கது.

  “இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி
     விட்டசிவ னும்செத்து விட்டானோ - முட்டமுட்ட
      பஞ்சமே யானாலும் பாரம் அவனுக்கன்னாய்
       நெஞ்சமே யஞ்சாதே நீ!”

     பாரி, மூவேந்தர்களை தன் தமிழால் கவர்ந்தவர் இவர். அதியமான் நேடுமான் அஞ்சி மீது குறுநில மன்னர்கள் படையெடுத்தபோது தன்பாடல்கள் மூலம் அவர்கள் மனதை மாற்றினார். இவரது 59 பாடல்கள் குறுந்தொகை, நற்றிணை, அகநானுாறு, புறநானுாறு நுால்களில் உள்ளன.

     8 அல்லது 9ஆம் நுாற்றாண்டு பக்தி இலக்கிய புலவர்களான சுந்தர மூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் காலத்து ஔவை பிள்ளையார், முருகன் மீது மாறா பக்தி கொண்டவர். நாயனார் இருவரும் முறையே கரியிலும்(யானை), பரியிலும் (குதிரை) கயிலைக்குச் செல்ல,  அவர்களோடு தானும் கயிலை செல்ல விரும்பி அவசரமாக பிள்ளையாருக்குப் பூஜை செய்ய, பிள்ளையார் அவர் முன் தோன்றி “நான் உன்னை அழைத்துச் செல்கிறேன்” என்று வாக்களிக்க, மகிழ்ந்து விநாயகர் அகவல் பாடினார் என்பர்.  “சுட்ட பழம்” மூலம் விளையாடிய முருகனிடம் தோற்றது பற்றிய ஔவையின் பாடல் கீழே-

  “ கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி
     இருங்கதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்
      காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றேன்
       ஈரிரவும் துஞ்சாதென் கண்”.

     அடுத்து கம்பர், செயங்கொண்டார், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், சேக்கிழார் போன்றவர்கள் காலத்தில் இருந்த ஔவை. 2ஆம் குலோத்துங்க சோழன் காலம். பந்தன் அந்தாதி, அசதிக்கோவை, பல தனி நிலை செய்யுள்களை இவர் இயற்றியதாகக் கூறுவர். அரசவையில் கம்பன் ஆடம்பரமாக, செருக்குடன் இருந்ததைக் கண்டு ஔவை பாடியதாகக் கூறப்படும் செய்யுள்கள் அனுபவிக்கத் தக்கவை.

  “விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
     விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
      பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
       நஞ்சேனும் வேம்பேனும் நன்று”

   “வான்குருவி யின்கூடு வல்லார்க்குத் தொல்கரையான்
      தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
      வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்கான்
       எல்லோர்க்கும் ஒவ்வொன் றெளிது.”

     ஒருமுறை கம்பர் ஆரைக்கீரைக்கு ஔவையை ஒப்பிட்டு சிலேடையாக “1 காலடி, நாலிலைப் பந்தலடி” எனப்பாடினாராம். அதற்குப் பதிலடியாக ஔவை பாடியது அவரது கவிதைத் திறனை மட்டுமல்லாது அஞ்சாநெஞ்சையும் காட்டுகிறது--

     “எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
        மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமேற்
         கூரையில்லா வீடே குலராமன் துாதுவனே
          ஆரையடா சொன்னா யது!”

அ என்பதற்கு தமிழ் எண் - எட்டு, வ என்பது - கால் அதாவது எட்டேகால் என்பது “அவ” என அர்த்தமாகும்.  பெரியம்மை - மூதேவி, கூரையில்லா - குட்டிச்சுவர்,  குலராமன் துாதுவன் - குரங்கு.

     14-15ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த ஔவை ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது ஆகியவற்றை இயற்றதாகவும், 18ஆம் நுாற்றாண்டில் ஒருவர்  “ஔவைக் குறள்” எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.

                                                     -- இராசேசுவரி சிமோன்

சிறு கதை

இந்தியப்பெண்களின் அவலநிலை?!

      டீக்கடையில் அமர்ந்திருந்த தியாகுவின் சிந்தனை தன் தங்கை கீதாவை பெண் பார்த்துச் சென்றவர்களின் வார்த்தைகளையே அசைபோட்டுக்கொண்டிருந்தது.

      தந்தைக்குப்பின் குடும்பபாரத்தைச் சுமக்கும் தியாகுவுக்கு,  தன் இரு தங்கைகளைத் திருமணம் செய்து கொடுத்து விட்டே தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற வைராக்கியம்.  இதற்காக தன் மனதில் வந்தனாவின் மேல் எழுந்த காதலைக் கூட அவளிடம் தெரிவிக்காது உள்ளத்திலேயே பூட்டி வைத்திருந்தான். பெரிய தங்கையைப் பெண்பார்க்க வந்தவர்கள்  வரதட்சணை இல்லாமலே மணந்துகொள்கிறோம் என்று கூறியதும் அவன் மனதில் வந்தனாவின் அழகு முகம் வந்துபோயிற்று. பெரியவளுக்காக சேர்த்து வைத்திருக்கும் பணத்தில் சிறியவளுக்கும் மணமுடித்துவிட்டால், உடனடியாக தன் காதலை அவளிடம் தெரிவித்து விடலாம். பின் ஓராண்டுக்குள் சிக்கனமாயிருந்து பணம் சோ்த்து எளிமையான முறையில் அவளை மணந்துகொண்டுவிடலாம் என்று எண்ணப்பறவை சிறகடிக்க ஏதேதோ நினைத்தான்!

      ஆனால் மாப்பிள்ளை வீட்டார் தொடர்ந்து நிபந்தனை போல் அவர்கள் வீட்டுப் பெண்ணை தியாகு மணந்து கொள்ள வேண்டுமென்று கூறியபோது அவனுக்கு அழுவதா சிரிப்பதா என்றே புரியவில்லை! தங்கை, தாய் இருவரின் முகத்தையும் பார்த்த தியாகுவுக்கு இந்த சம்பந்தத்தில் அவர்களுக்கு எத்தனை மகி்ழ்ச்சி என்பது சொல்லாமலே புரிந்தது. எத்தனையோ தியாகங்களை அவர்களுக்காக வாழ்வில் செய்திருந்த அவனுக்கு இன்னொரு தியாகத்திற்கு தயாராவதற்கு வெகு நேரம் ஆகவில்லை!

      இந்த பண்டமாற்று முறை பலனளிக்குமா, அந்தப் பணக்காரப் பெண்ணின் மனதில் தனக்கு இடமிருக்குமா, பெண்ணின் உணர்வை மதிக்காமல் நடக்கப்போகும் இந்தத் திருமணம் வெற்றி பெறுமா என்பதுபோன்ற பல கேள்விகள் அவனுள் எழுந்தன. பதில் கூறத்தான் யாருமில்லை! எத்தனை முன்னேற்றம் வந்த போதிலும் இந்தியப்பெண்களின் உரிமைகளைப் பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை . வரதட்சணை, பண்டமாற்று திருமணங்கள் பின் மாமியார் நாத்தனார் கொடுமைகள் என எதுவுமே மாறப்போவதில்லை என நினைத்த தியாகுவுக்கு தானும் இந்த வட்டத்திற்குள் சிக்கி மாட்டிக்கொண்டவன்தானே என்ற எண்ணம் வர இந்திய ஆண்களுக்கும் உரிமைகள் மறுக்கத்தானே படுகின்றன என்ற புதுக்கோணத்தில் சிந்திக்க அவனையறியாமல் ஒரு சோகப் புன்னகை இழையோடியது. எல்லோரும் அவனது சம்மதத்திற்கான அறிகுறியாக அதை எடுத்துக்கொண்டு புன்னகை செய்தனர்.

-- மெலினா

அன்பு எங்கே?

                    பார்த்தாய்               பரவசம் ஆனது
                    சிரித்தாய்               சிந்தை மகிழ்ந்தது
                    பேசினாய்               தேகம் சிலிர்த்தது
                    அணைத்தாய்        இன்பம் பெருகியது
                    இணைந்தாய்         உலகம் மறந்தது

                    ஊடினாய்                உணர்வு நலிந்தது
                    ஒதுக்கினாய்         உள்ளம் மருகியது
                    ஏசினாய்                  சினம் தகித்தது
                    வெறுததாய்           வெறி மீறியது
                    பிரிந்தாய்                நிம்மதி பிறந்தது

                    இதில் அன்பு எங்கே வாழ்ந்தது?!

-- இராசேசுவரி சிமோன்

சிலேடை

இரண்டு பொருள்படக் கூறுதல் சிலேடை எனப்படும். தமிழில் “இரட்டுற மொழிதல்” என வழங்குகிறோம்.

வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும்
போரில் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல மேனித் திருமலை ராயன்வரையில்
வைக்கோலும் மால்யானை ஆம்.
                                                    காளமேகப்புலவர்

(போர்க்களத்தில் பகைவரை வாரிக் கொன்று போரில் சிறந்து விளங்கும் யானை கோட்டைக்குள் புகுவது போல், நெற்களத்தில் கதிர்கள் வாரி அடிக்கப்பட்டு பின் நெற்கோட்டையில் போராய் பொலிவுற்று விளங்குவதால் வைக்கோல் யானைக்கு ஒப்பாகும்)

பழமொழி

 1. முன்னை யுடையது காவா திகந்திருந்து
  பின்னையஃ தாராய்ந்து கொள்குறுதல் - இன்னியல்
  மைத்தடங்கண் மாதராய்! அஃதாதல் வெண்ணெய்மேல்
  வைத்து மயில்கொள்ளு மாறு.
                                  பழமொழி நானுாறு
(கைப்பொருளை இழந்த பின் அதனைத் தேடுவது, மயிலின் தலையில் வெண்ணெய் வைத்து அஃது உருகி அதன் கண்ணை மறைக்கும் போது அதனைப் பிடிப்பது போலாகும்)

     2.   பொறுத்தல் கசப்பெனினும், பொறுக்க பொறுக்க தித்திப்பு.

     3.   பலனில்லா பலநாளில், அறம் செய்யும் ஒரு நாள் பெரிது.

     4.   ஆசை இருக்கு யானை மேல ஏற, எம்பி எழ தெம்பில்லெ!

விடுகதை

 1. உனக்கு உடமையானாலும் ஊரார்க்கே பயன்படும். அது என்ன?
    2.   கூடவே வாழ்ந்தாலும் கடைசி வரை தீண்டாத இருவர், யார்?

(விடை அடுத்த மாதம்)

மனக் கணக்கு

1 ஒன்று முதல் எட்டு வரையிலான எண்களை, அருகருகே வரிசையாக வராமல் கீழ்க் கண்ட கட்டங்களில் நிரப்ப வேண்டும்.2   ஒரு பாட்டி நிறைய வடை சுட்டு தன் மூன்று பேரன்களையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளச் சொன்னாள். முதலாமவன் பகிர்ந்து, தன் பங்கை எடுத்துக் கொண்டு மீதியைக் காக்கைக்குப் போட்டு விட்டான். இரண்டாமவனும், மூன்றாமவனும் அப்படியே செய்தனர். பாட்டி சுட்டது எத்தனை வடை?

3    மூன்று அம்மாக்கள் தங்கள் இரண்டு இரண்டு பிள்ளைகளுடன், ஏழு நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டார்கள். எப்படி?
  (விடை அடுத்த மாதம்)

  நகைச் சுவை

  1. இந்த நெக்லசைப் போட்டுக்கிட்டா, 10 வயசு இளமையாத் தெரிவீங்க!

   அப்ப வேண்டாம்பா! இதை அவுத்த ஒடனே 10 வயசு கூடுதலாத் தெரியுமே!
  2. கேடி கபாலி ஒரே ஒரு பிளேடை வைத்து தொழிலை ஆரம்பிச்சான். இப்ப கோடிக் கணக்கில சோ்த்திட்டான்.

   அவ்வளவு பிளேடை வச்சிக்கிட்டு என்ன செய்வான்?
  3. திருட்டு மாட்டை விலைக்கு வாங்கினாயாமே?

   மாடு எங்கே திருடுச்சின்னு எனக்கென்னங்க தெரியும்?
  4. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன, சரி பின்ன நரகத்தில எது நிச்சயிக்கப்படுது?

   வேறென்ன, திருமணத்துக்குப் பின் வரும் நாட்கள் தான்!
  5. தபால் போடுகிறவர் தபால்காரர், பேப்பர் போடுகிறவர் பேப்பர்காரர், பால் பாக்கெட் போடுகிறவர் பால்காரர். அப்போ பிச்சை போடுகிறவர்?