இந்தியப்பெண்களின் அவலநிலை?!
டீக்கடையில் அமர்ந்திருந்த தியாகுவின் சிந்தனை தன் தங்கை கீதாவை பெண் பார்த்துச் சென்றவர்களின் வார்த்தைகளையே அசைபோட்டுக்கொண்டிருந்தது.
தந்தைக்குப்பின் குடும்பபாரத்தைச் சுமக்கும் தியாகுவுக்கு, தன் இரு தங்கைகளைத் திருமணம் செய்து கொடுத்து விட்டே தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற வைராக்கியம். இதற்காக தன் மனதில் வந்தனாவின் மேல் எழுந்த காதலைக் கூட அவளிடம் தெரிவிக்காது உள்ளத்திலேயே பூட்டி வைத்திருந்தான். பெரிய தங்கையைப் பெண்பார்க்க வந்தவர்கள் வரதட்சணை இல்லாமலே மணந்துகொள்கிறோம் என்று கூறியதும் அவன் மனதில் வந்தனாவின் அழகு முகம் வந்துபோயிற்று. பெரியவளுக்காக சேர்த்து வைத்திருக்கும் பணத்தில் சிறியவளுக்கும் மணமுடித்துவிட்டால், உடனடியாக தன் காதலை அவளிடம் தெரிவித்து விடலாம். பின் ஓராண்டுக்குள் சிக்கனமாயிருந்து பணம் சோ்த்து எளிமையான முறையில் அவளை மணந்துகொண்டுவிடலாம் என்று எண்ணப்பறவை சிறகடிக்க ஏதேதோ நினைத்தான்!
ஆனால் மாப்பிள்ளை வீட்டார் தொடர்ந்து நிபந்தனை போல் அவர்கள் வீட்டுப் பெண்ணை தியாகு மணந்து கொள்ள வேண்டுமென்று கூறியபோது அவனுக்கு அழுவதா சிரிப்பதா என்றே புரியவில்லை! தங்கை, தாய் இருவரின் முகத்தையும் பார்த்த தியாகுவுக்கு இந்த சம்பந்தத்தில் அவர்களுக்கு எத்தனை மகி்ழ்ச்சி என்பது சொல்லாமலே புரிந்தது. எத்தனையோ தியாகங்களை அவர்களுக்காக வாழ்வில் செய்திருந்த அவனுக்கு இன்னொரு தியாகத்திற்கு தயாராவதற்கு வெகு நேரம் ஆகவில்லை!
இந்த பண்டமாற்று முறை பலனளிக்குமா, அந்தப் பணக்காரப் பெண்ணின் மனதில் தனக்கு இடமிருக்குமா, பெண்ணின் உணர்வை மதிக்காமல் நடக்கப்போகும் இந்தத் திருமணம் வெற்றி பெறுமா என்பதுபோன்ற பல கேள்விகள் அவனுள் எழுந்தன. பதில் கூறத்தான் யாருமில்லை! எத்தனை முன்னேற்றம் வந்த போதிலும் இந்தியப்பெண்களின் உரிமைகளைப் பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை . வரதட்சணை, பண்டமாற்று திருமணங்கள் பின் மாமியார் நாத்தனார் கொடுமைகள் என எதுவுமே மாறப்போவதில்லை என நினைத்த தியாகுவுக்கு தானும் இந்த வட்டத்திற்குள் சிக்கி மாட்டிக்கொண்டவன்தானே என்ற எண்ணம் வர இந்திய ஆண்களுக்கும் உரிமைகள் மறுக்கத்தானே படுகின்றன என்ற புதுக்கோணத்தில் சிந்திக்க அவனையறியாமல் ஒரு சோகப் புன்னகை இழையோடியது. எல்லோரும் அவனது சம்மதத்திற்கான அறிகுறியாக அதை எடுத்துக்கொண்டு புன்னகை செய்தனர்.
-- மெலினா
அன்பு எங்கே?
பார்த்தாய் பரவசம் ஆனது
சிரித்தாய் சிந்தை மகிழ்ந்தது
பேசினாய் தேகம் சிலிர்த்தது
அணைத்தாய் இன்பம் பெருகியது
இணைந்தாய் உலகம் மறந்தது
ஊடினாய் உணர்வு நலிந்தது
ஒதுக்கினாய் உள்ளம் மருகியது
ஏசினாய் சினம் தகித்தது
வெறுததாய் வெறி மீறியது
பிரிந்தாய் நிம்மதி பிறந்தது
இதில் அன்பு எங்கே வாழ்ந்தது?!
-- இராசேசுவரி சிமோன்