வணக்கம். நெறிப்படுத்தும் சிந்தனைகள், உயர்ந்த குறிக்கோள்கள், ஆன்மீக உணர்வு என்று வாழ்வை மேம்படுத்தும் எத்தனையோ இருந்தபோதிலும், ஒரு சராசரி மனிதனால் எந்நேரமும் அவற்றைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க இயலுவதில்லை. அவனது நிலைக்கேற்ற பொழுதுபோக்கு அம்சங்கள், இறுக்கம் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை இலகுவாக்குகின்றன. இதையறிந்த தமிழர் பலவகைகளில் எளிய முறையில் சிறந்த கருத்துக்களைக்கூட விளையாட்டாகத் தந்துள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
மார்ச் எட்டாம் தேதி “உலக மகளிர் தினம்”. சாதாரணமாக நினைவு கூறத்தக்கவர்களை கால ஓட்டத்தில் மறந்துவிட வாய்ப்பிருக்கிறது என்பதால் இப்படி ஒரு நாளை நிர்ணயித்து அவர்கள் இச்சமூகத்துக்காக செய்தவைகளை நன்றி உணர்வுடன் நினைவுறுத்துவது வழக்கம். இந்த நாளும் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன் நியுயார்க் பஞ்சாலை தொழிலாளிப் பெண்கள் தங்கள் வேலை நேரத்தை 12 மணியிலிருந்து 8 மணியாகக் குறைக்கப் போராடியதை குறிப்பதுதான். ஒரு வகையில் அவர்கள் தங்கள் உரிமையைக் கோரிய போராட்டம். இன்னும் பலவிதங்களில், பலவற்றுக்காக போராடிய வண்ணமே வாழும் உலக சனத்தொகையில் பாதியான, ஆணின் சரிபங்கு உரிமையான, உலக சுழற்சிக்கு அடிப்படையான பெண்ணுக்கு ஒரு நாளைக் குறிப்பிட்டு “இவர்களுக்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” என்று நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது என்றால், அது நமது சமூகம் இருக்கிற அவல நிலையை எடுத்துக்காட்டுவதாகத்தான் கொள்ளவேண்டியிருக்கிறது. இன்னும் “தாய், தந்தை, பாட்டி” ( இந்தப் பட்டியலில் தாத்தா சேர்க்கப்படவில்லை!) இவர்களுக்கெல்லாம் கூட “நினைவு நாள்” கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன! இத்தனை இருந்துங்கூட இவற்றை சட்டைசெய்யாதவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்! சிந்தித்துப் பார்த்தால் “நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?” எனினும் பெண்மையைப் போற்ற வேண்டுமென்று எண்ணி முயன்ற அந்த நல்லுள்ளங்களுக்கு பெண்ணினத்தின் சார்பில் “இதயங் கனிந்த நன்றிகள்”
--இராசேசுவரி சிமோன்