பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 30 novembre 2013

எண்ணப் பரிமாற்றம்

                                                       

அன்புடையீர்,

வணக்கம். உலகம் முன் போல் இல்லை என்ற புலம்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழை இல்லை, சுத்தக் காற்று இல்லை, நல்ல விளைச்சல் இல்லை என்பது போன்ற பல 'இல்லை'களும், சுத்தம் வேண்டும், பாதுகாப்பு வேண்டும், சுதந்திரம் வேண்டும் போன்ற பல 'வேண்டும்'களும் எங்கு பார்த்தாலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

வாழ்வதற்கு எப்படிப்  பிறப்பெடுத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறதோ, அதேபோல  கடமையும் இருக்கிறது. பெரிதாக சேவை எதுவும் செய்யாவிட்டாலும், நம்மைச் சுற்றி, நம் வீட்டில், நமது எல்லைக்குள் வாழ வேண்டிய முறைப்படி வாழ்ந்தாலே போதும். இயற்கை இதற்கு மேல் எந்தத் தியாகத்தையும் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை.

உலக நடப்பை எங்கும் பணம் படைத்தவர்களும், அவர்களால் நிரம்பிய அரசாங்கமும் தான் நிர்ணயிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தங்கள் பைகளை நிரப்ப, ஆயுதங்களை உற்பத்தி செய்து 'வன்முறை கூடாது' என்று சொல்லவும், சிகரெட், மது இவைகளை விற்கும்போது  அவற்றின் மேல் 'மது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு', 'குடி குடியைக் கெடுக்கும்', 'புகை உயிரைக் குடிக்கும்' என்றெல்லாம் எழுதவும்தான் முடியும்.

அவரவர் உடலையும், உள்ளத்தையும்,எண்ணத்தையும், செயல்களையும் சீருடன் காப்பது அவரவர் பொறுப்பே! இதை உணர்ந்து இப்போது மவுனமாக ஓர் பெரும் புரட்சி பரவி வருகிறது. புதிதான எதுவும் இல்லை! அந்தக் காலத்தில் தோட்டம், துரவு என்று தமக்கானதை தாங்களே உற்பத்தி செய்து தன்னிறைவும், பகிர்ந்துண்டு வாழும் மனமும் கொண்டக் காலத்தைத் திரும்பவும் நிலை நிறுத்துவதற்கான முயற்சி.

உலக முழுவதிலும் பெயர் பெற்ற நிறுவனங்களையும், அவற்றின் ஆதிக்கத்தையும்  எதிர்க்க இயலாத சாமான்யர்கள், அதே வேளையில் சமூக நலன் பற்றிய அக்கறை கொண்டவர்கள் இச்செயலின் ஆழத்தை மக்களுக்கு விளக்கி, தாங்களே இயற்கை முறையில் பயிரிட்டு, இலவசமாக நல்ல விதைகளை அளித்து, எல்லோரையும் அதில் ஈடுபட ஊக்குவிக்கிறார்கள்.

சிறிய தோட்டம் ஆயினும் அதில், தோட்டமே இல்லாவிடினும் தொட்டிகளில் நச்சு கலந்த எருவின்றி, காய்கறிகளைப் பயிரிட்டு, தங்களுக்குப் போக மிகுதியை மற்றவர்க்களித்து, மன நிறைவோ அல்லது சிறு வருமானமோ பெரும் வழி. பரந்த வெளியைப் பலர் குறைந்த  வாடகைக்கு எடுத்துப் பயிரிட்டு, அந்தந்த பகுதி மக்கள் அருகில் சத்தானக் காய்களும், கனிகளும் பெற இடமளிக்கும் வசதி.

பரவி வரும் இத்தொண்டு, சரியான முறையில் எல்லோராலும் பின்பற்றப் பட்டால், நாளை விற்பனை ஆதிக்கம்  ஒழிந்து போகும்.  உடல் நலன் ஓங்கும்.
காற்று சுத்தம் ஆகும். பூமி மீண்டும் பசுமைக் கோலம் பூணும்.

உலகுக்காக என்றில்லா விட்டாலும், நமது உடல் நலத்துக்காக, நமது சந்ததிகளின் நலத்துக்காக, இச்சிறு முயற்சியை செய்துதான் பார்ப்போமே!

திருமதி சிமோன் 

இயற்கையின் வேண்டுதல்

                                                     

இந்தக் கண்கொள்ளாக் காட்சியைத்தான் நாம் இல்லாததாக்கி வருகிறோம். ஒரு சில விபரங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. இதற்கு நமக்கு உரிமை இருக்க வாய்ப்பே இல்லை. ' வாடியப்  பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறிய வள்ளலார் போன்ற அன்பு உள்ளங்களின் சேவைக்காக இயற்கைத் தவம் செய்து கொண்டிருக்கிறது.

மக்களின் வாழ்க்கை மரங்களில் தான் இருக்கிறதாம்.இந்த நூற்றாண்டின் விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ் கூறுகிறார். ஏனெனில் அணைகள் கூடத் தேவையின்றி மரங்கள் தண்ணீரை தேக்கி வைக்கின்றன.

1. ஒரு ஹெக்டேர் நிலப் பரப்பில் விளையும் ஆப்பிள்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்ப 10 ஹெக்டேர் நிலத்து மரங்கள் வெட்டப்படுகின்றன. இதே ரீதியில் இன்னும் 10 வருடங்களில் ஆந்திரா, உத்திரப் பிரதேசம்,இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகியப் பகுதிகளில் காடுகளே இல்லாதொழியும்.

2. உலகில் வெட்டப்படும் மரங்களில் 12% சிகரெட் தயாரிப்புக்கு உபயோகிக்கப் படுகிறது.  

3. ஒரு மரத்தை வெட்டினால் இழப்பு 99.7% இலாபம் 0.3%

4. 50 டன் எடை, 50 வயதுள்ள மரம் ஒன்றை இன்னும் 50 வருடங்களுக்கு வெட்டாமல் இருந்தால், அந்த மரத்தால் ஈட்டக் கூடியத் தொகை 15 லச்சத்து 70 ஆயிரம் ரூபாய். ஒரு வருடத்திற்கு 1,000 கிலோ ஆக்சிஜனை அது தயாரிக்கிறது. ஒரு கிலோ 5 ரூபாய் என்றாலும் 50 வருடங்களுக்கு 2லட்சத்து 50 ஆயிரம். இன்னும் தண்ணீரைச் சேமிப்பது, மண் அரிப்பைத் தடுப்பது என்று ஒவ்வொன்றுக்கும் விலை நிர்ணயிக்கலாம்.

தற்கால வாழ்வில் பிளாஸ்டிக் இல்லையேல் வாழ்க்கை நகராது போல் தோன்றுகிறது. ஆனால் அது மக்கிப்போக எத்தனைக் காலம் ஆகும் என்றறிந்தால்  அறிவே நகராது நின்று போகும்:

வாழைப்பழத் தோல் - 2 முதல் 10 நாட்கள்
காகிதப் பை - 1 மாதம்
பஞ்சுக் கழிவு - 1 முதல் 5 மாதங்கள்
துணி - 5 மாதங்கள்
கயிறு - 3 முதல் 14 மாதங்கள்
டெட்ரோ  பாக்  - 5 ஆண்டுகள்
மரம் - 10 முதல் 15 ஆண்டுகள்
தோல் காலணி - 25 முதல் 40 ஆண்டுகள்
நைலான் - 30 முதல் 40 ஆண்டுகள்

பிளாஸ்டிக் - 10 லட்சம் ஆண்டுகள்!

ஏனெனில் கச்சா எண்ணையிலிருந்து பிரித்த நாப்தா என்ற பெட்ரோலியக் கழிவிலிருந்து பிளாஸ்டிக் தயாரிக்கப் படுகிறது. (கலர் பிளாஸ்டிக் பாட்டில்களில் சூரிய ஒளி படும்போது அதிலுள்ள ரசாயனங்கள் நீருள் ஊடுருவுகின்றன. இதனால் புற்று நோய், மலட்டுத் தன்மை உள்ளிட்டப் பிரச்சனைகள் ஏற்படலாம்)


இயற்கையால் உடல் நலம்

                                                         
எந்நாட்டவரும் உணவில் சேர்த்துக்கொள்ளும் ஓர் காரம் மிளகு. இயற்கை உடல் நலம் பேண நமக்களித்த ஒரு கொடை என்று கூடச் சொல்லலாம். பசியைத் தூண்ட, உணவைச் செரிக்க, உமிழ் நீரைச் சுரக்க, சுவாசக் கோளாறுகளை நீக்க, சிறு நீரைப் பெருக்க, சளியைப் போக்க என்று இதன் வேலைகள் உடலில் பலவாகும்.

மங்கனீஸ், விட்டமின் கே, இரும்புச் சத்து, நார்ச்சத்து நான்கும் இதில் நிறைந்துள்ளன.

பல்வலி: மிளகுடன் சிறிது நீரும், உப்பும் கலந்து பற்குழிக்குள் வைத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இருமல்: இரண்டு மூன்று மிளகை மென்று சாரை விழுங்கினால் போதும். காரம் தாங்காதவர்கள் பாலில் தூளாகக் கலந்து அருந்தலாம்.

வயிற்றுக்  கோளாறு: தண்ணீரில் மிளகுத்தூளைக்  காய்ச்சிச் சண்ட வைத்து குடிக்கலாம்.

வயிற்றுப் போக்கு: சாதத்தில் நல்லெண்ணையுடன் மிளகு கலந்து சாப்பிடலாம்.

சளி,தலைவலி: ஒரு மிளகை ஊசியில் குத்தி அதை அனலில் சுட்டு, வரும் புகையை நுகர வேண்டும்.

சிறு நீர் தொல்லை: அப்பகுதியில் எரிச்சல் இருந்தால், பாலில் வால்  மிளகை ஊற வைத்து, அரைத்து, அதே பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.

மூலம்: ஆரம்பக் கட்டத்தில் மிளகு ஒரு பங்கு, பெருஞ்சீரகம் இரண்டு பங்கு கலந்து பொடியாக்கி, இரண்டு பங்கு வெல்லத்தூள் சேர்த்து தினம் இரண்டு வேளை  ஒரு டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.


புதிய சாதனங்கள்

இதயதுடிப்பு கால்குலேட்டர்

இதயதுடிப்பு கால்குலேட்டர்நமது இதயமானது ஒரு நாளைக்கு 100,000 முறை துடிக்கும். ஆனால் இந்த கால்குலேட்டர், நாம் பிறந்ததிலிருந்து இதுவரை எத்தனை முறை நமது இதயம் துடித்துள்ளது என்பதை பார்க்க உதவுகிறது.
(நன்றி ஒன் இந்தியா )

எழுத்து பிழை இல்லாமல் எழுத வருகிறது ‘ஸ்மார்ட் பேனா’

  
pencorrection
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் எழுத்துப்பிழைகள் என்பது மிகவும் சாதாரணமாகவே வருகிறது. இம்மாதிரியான செயல்கள் சிலநேரங்களில் அபத்தமானதாகவே முடிகிறது.
வேறு மொழிகளில் எழுத்துப்பிழை ஏற்பட்டால்கூட ஏற்புடையதாக இருக்கும். ஆனால் அவரவர் தாய்மொழியிலேயே பிழைகளுடன் எழுதுவது வருத்தத்திற்குரியது.
ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அதிநவீன பேனா ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த அதிநவீன பேனாவானது நீங்கள் எழுதும்பொழுது ஏதாவது பிழையுடன் காணப்பட்டால் உங்களுக்கு ஒரு அதிர்வின் மூலமாக சரிபடுத்தச்சொல்லும்.
இந்த பேனாவின் மூலமாக இலக்கணப்பிழைகளை மட்டுமே அறிய முடியும். அதுவும் இந்த பேனாவானது தற்சமயம் ஆங்கில மொழியை மட்டும் சப்போர்ட் செய்கிறதாம்