அன்புடையீர்,
வணக்கம்.
"யாகாவாராயினும் நாகாக்க" என்றார் வள்ளுவர். ஏனெனில் ஒருவரது சொற்கள்
அவருடன் நின்று விடுவதில்லை. அவை சரியோ, தவறோ இன்னொருவருடைய எண்ணத்தில்
புகுந்து, அவர் மூலம் இன்னொருவருக்குப் பரவக் கூடியவை. அதனால் எண்ணுவதைத்
தீர்க்கமாக ஆராய்ந்து, சொல்வது-யாரையும், எதையும் பாதிக்காவண்ணம் பேசுவது
ஒவ்வொருவருடையக் கடமை ஆகிறது. அதிலும் புகழ் வெளிச்சம் சற்றேனும்
கொண்டவர்கள் மிகக் கவனமாகத் தங்கள் கருத்துக்களை வெளியிடுவது அவசியம்.
புரிந்தோ, புரியாமலோ அவர்களைப் பின்பற்றக் கூடியவர்கள்
சிலரேனும் இருக்கலாம். எனவே அவர்கள் சமூகப் பொறுப்புடனும் செயல்படுவது
இன்றியமையாததாகிறது.
ஓர்
தமிழ் எழுத்தாளர் பிரபல வாரப் பத்திரிகை ஒன்றில் கேள்வி ஒன்றுக்கு பதில்
தந்திருந்தார்: 'குடும்பம் மனிதர்களின் சிறகுகளை வெட்டுகின்றன...... அவரவர்
வாழ்க்கையை அவரவர் வாழ்ந்துகொண்டு, விரும்பும்போது சந்திக்கிற வாழ்க்கை
முறையையே நான் விரும்புகிறேன்......குழந்தை? இது ஒரு பிரச்சனையே இல்லை.
குழந்தை ஒரு பேறு அல்ல; அது ஒரு நிகழ்வு!'
நல்ல
வேளை, அப்பத்திரிக்கை முதல் பக்கத்தில் 'பேட்டிகள் மற்றும் கட்டுரையாளரின்
கருத்துகள் அவர்களின் சொந்தக் கருத்துகளே' என்று குறிப்பிட்டிருந்தது.
இல்லையேல் இந்த அபத்தக் கருத்துக்கு அவர்களையும் சாட வேண்டியிருக்கும்.
மனிதன் பல நூற்றாண்டுகள் இவர் சொல்லும் வகையிலெல்லாம் வாழ்ந்து பார்த்து,
ஓர் கட்டுக் கோப்புக்குள் சமுதாயம் இயங்க, எல்லாரும் தங்கள் கடமைகளைப்
பொறுப்போடு நிறைவேற்ற, எளியோரை வலியோர் தாங்கிப் பிடித்து வழி நடத்த
உண்டாகியது "குடும்பம்" என்னும் அமைப்பு. ஏற்கனவே சுயநலத்தால்,
தனித்தீவுகளாக வாழும் மனநிலையால் கணவன்-மனைவி பிரிவுகளும், வயோதிகர்
இல்லமும், அநாதை ஆசிரமங்களும் பெருகி வரும் நாளில், இது போன்றக் கருத்துகள்
சமூகப் பொறுப்புள்ள ஒருவரால் வெளியிடப்படுமா? இவர் கூறுவதைப் பின்பற்ற
விரும்பும் ஒருத்தி தன் குழந்தையைப் பேணி வளர்ப்பாளா ? அல்லது ஒருவன் தன்
குடும்பத்திற்காக உழைக்கத்தான் முன் வருவானா! ஒரு குழந்தையைப் பெற்று,
அந்த மழலை இன்பத்தை உணர்ந்தவன், அனுபவித்தவன் யாராலும் 'அதன் தோற்றம் ஓர்
நிகழ்வு' என்று கொச்சைப் படுத்த இயலாது.
இவரே
எழுத்தாளர் ஜெயகாந்தன் கதைகள் எழுதுவதை நிறுத்திக் கொள்ளப் போவதாய்
(ஏனெனில் இப்போது நிறுத்தினாலும் மீண்டும் எழுதுவது அவர்
உரிமை) கூறியிருந்ததைப் பற்றி, 'நிறுத்தியது அவருக்கும் நல்லது,
தமிழுக்கும் நல்லது. ஒரு காலத்தில் அவர் 'கர்ஜித்ததாக'ச் சொல்வார்கள்.
அண்மைக்காலத்தில் பல சமயங்களில் 'மியாவ்' என்பதற்கும் மேலாக அவர்
போகவில்லை' என்று கூறியிருக்கிறார். ஓர் சிறந்த எழுத்தாளரைப் பற்றி,
சாகித்திய அகடமி பரிசு, ரஷ்ய விருது, ஞானபீட விருது, பத்ம பூஷன்
பட்டம் வாங்கியவரைப் பற்றி, இதற்கெல்லாம் மேலாக தான் எழுதும் கதைகளில்
பாத்திரங்களின் தன்மை சற்றும் கெடா வண்ணம் உணர்வுகளையும், வாழ்க்கைச்
சிக்கல்களையும் தெளிவுபடுத்தி, சிந்தனையைத் தூண்டிய ஒருவரைப் பற்றி
இவ்விதம் எழுதுவது என்ன நாகரிகமோ! ஒரு வேளை சிங்கத்தின் பலம் எலிக்குத்
தெரியாமல் இருக்கலாம்.
வாயினின்று வெளிப்படும் தேவையற்றச் சொற்கள் வீதியில் எறியும் குப்பைக்கொப்பானவை! அவற்றால் சூழல்தான் கெடும்!!
திருமதி சிமோன்
Aucun commentaire:
Enregistrer un commentaire