பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 31 octobre 2014

இன்றைய அறிமுகம்

கைலாஷ் சத்யார்த்தி


2014 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலரான 60 வயது கைலாஷ் சத்யார்த்திக்கும், 17 வயது பாகிஸ்தானிய சிறுமி மலாலாவுக்கும் கூட்டாக வழங்குவதாக  நோபல் பரிசுக் கமிட்டி அறிவித்துள்ளது. .இந்த பரிசு வருகிற டிசம்பர் மாதம் 10-ந் தேதி ஆஸ்லோ நகரில் நடைபெறும் விழாவில் இருவருக்கும் வழங்கப்படும்.
கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெறும் 7-வது இந்தியர் ஆவார்.  அன்னை தெரசாவுக்கு அடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இரண்டாவது இந்தியர், அமைதிக்கான நோபல் பரிசைப் பெறும் இந்தியாவில் பிறந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
இவர்  மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில் 1954-ஆம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி பிறந்தார்.எலெக்ட்ரிகல் என்ஜினீயரான இவர் தற்போது தெற்கு டெல்லியில் உள்ள அலக்னந்தா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.இவருக்கு  ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
1980–ஆம் ஆண்டு ருக்மார்க் (தற்போது குட்வீவ்) என்னும் அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு குழந்தை தொழிலாளர்களால் தயாரிக்கப்படும் பொருட்களை நுகர்வோர் புறக்கணிக்க வேண்டும் என்ற பிரசாரத்தை மேற்கொண்டது.

அதன் பின்னர் 1983–ஆம் ஆண்டு குழந்தை பருவத்தைக்  காக்கும் இயக்கம் (பச்சன்  பச்சோ அந்தோலன்) என்னும் தன்னார்வத்  தொண்டு நிறுவனத்தைக்  கைலாஷ் சத்யார்த்தி தொடங்கினார். 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்து, அவர்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தந்து கல்வி பயில ஏற்பாடு செய்தார். குழந்தைகளுக்குக்  கல்வி இலவசமாக்கப்படவும்  குழந்தைகள் கடத்தப்படுவதற்கு எதிராகவும், இவ்வியக்கம்  தீவிரமாகப்  போராடி வருகிறது.   இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து உலக நாடுகளில் குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வை. - பணத் தேவைக்காக அவர்களின் குழந்தைப் பருவம், கல்வி போன்றவை சுரண்டப்படுவதை குறித்துத் தனது போராட்டங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு செயல்பாடுகள் தவிர, வறுமை, வேலைவாய்ப்பின்மை, கல்வியறிவின்மை, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.
குழந்தைகளின் கல்வி மற்றும் விடுதலைக்காகப் போராடிய இவர் பலமுறை பணமுதலைகளாலும் தொழிலதிபர்களாலும் தாக்கப்பட்டார்.அவரது மனைவி சுமேதா இவர்  எடுக்கும் முடிவுகள், முனைப்புகள், முயற்சிகள் அனைத்துக்கும் உறுதுணையாக இருந்துள்ளார்.

  இவர் பெற்ற விருதுகள்:
  • ஆக்சனர்  அமைதி விருது  1994(ஜெர்மனி)
  • கென்னடி சர்வதேச  மனித உரிமைகள் விருது 1995(அமெரிக்கா )
  • பிரெட்ரிக் எபெர்ட் சர்வதேச மனித உரிமைகள் விருது 1999 (ஜெர்மனி)
  • இத்தாலிய பாராளுமன்ற விருது 2007
  • அல்போன்சோ கோமின் சர்வதேச விருது 2008 ( ஸ்பெயின்)
  •  ஜனநாயக விருது 2009 (அமெரிக்கா )
நோபல் பரிசு பெற்றது குறித்து" குழந்தைகளின் உரிமைக்காகப்  போராடி வருபவர்களுக்குக்  கிடைத்த அங்கீகாரம் எனக்கு அளிக்கப்பட்ட இந்த விருது, இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைத்த மரியாதையாகக்  கருதுகிறேன். சிறுவர்களின் நலனுக்கான எனது போராட்டம் தொடரும்"  இவ்வாறு சத்யார்த்தி தெரிவித்தார்.

லூசியா லெபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire