1950லிருந்து 1980 வரை தமிழ் நாடகம் ஒளி மயமாகத் திகழ்ந்தது எனலாம். தொழில் முறை நாடகச் சபாக்கள், நாடகக் கம்பெனிகள் ஓய்ந்த பிறகு அமெச்சூர் நாடகக் கம்பெனிகள் பல தோன்றின. நாடகம் பொழுதுபோக்கிற்கு மட்டுமன்றிச் சமூகத்திற்கு உதவுவதும் ஆகும் என்ற உணர்வு சமூக நாடகங்களின் வளர்ச்சிக்கு வழிகோலியது.சமூகப் பிரச்சனைகளான வரதட்சணைக் கொடுமை, பொருந்தா மணக்கொடுமை , பெண்களின் நிலை, அலுவலகங்களின் சீர்க்கேடுகள், வேலையில்லாத் திண்டாட்டம், கிராமப்புறப் பிரச்சனைகள் , சாதி எதிர்ப்பு, போன்ற வாழ்க்கைச் சிக்கல்களுக்கு விடை கூறவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சமூக நாடகங்கள் பாலச்சந்தர், விசு,மௌலி ஆகியோரால் படைக்கப்பட்டன. மன்றம், அகாதமி , சபா, கிளப் போன்ற பல பெயர்களில் செயல்படும் நாடகக்குழுக்கள் இந்நாடகங்களை மேடையேற்றின. 'சோ' வின் விவேகா பைன் ஆர்ட்ஸ் , கே.பாலச்சந்தரின் ராகினி ரிக்ரியேசன்ஸ் போன்ற குழுக்கள் குறிப்பிடத் தக்கவை.
கே.பாலச்சந்தர்: (கே.பி)
பள்ளிப் பருவத்திலேயே தெரு நண்பர்களைக் கூட்டி நாடகங்கள் போடுவார். கல்லூரியில் படிக்கும் பொழுதும் ஆசிரியராக இருந்த பொழுதும் சிறு சிறு நாடகங்கள், எழுதி அரங்கேற்றி இருக்கிறார்.1950 -இல் ஏ.ஜி.எஸ். ஆபீசில் பணிபுரியும் பொழுது 'சினிமா விசிறி' என்ற நாடகத்தை எழுதி எல்லாக் கேரக்டர்களையும்(mono acting) தான் ஒருவனே நடித்துக் காட்டினார். அதுமுதல் அவர் நாடகத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.தனக்கென்று சொந்தமாக 'ராகினி ரேக்ரியேசன்ஸ்" என்ற நாடகக் குழுவை ஏற்படுத்தினார். கவுரி கல்யாணம், நாணல், மேஜர் சந்திரகாந்த் போன்ற நாடகங்களை அரங்கேற்றினார். பின்னதில் பல மேடைப் புதுமைகளை புகுத்தினார். இந்த நாடகம் வேறு பல சபாக்களிலும் நடத்தப்பட்டது. நடிகர் நாகேஷுக்காகவே சர்வர் சுந்தரம் எழுதப்பட்டு 25 முறை மேடையேறியது. இவர் நாடகங்கள் பல பிற்காலத்தில் வெள்ளித்திரைப் படங்கள் ஆயின. கே. பி. யின் மெழுகுவர்த்தி என்ற நாடகத்துக்குத் தலைமை தாங்கிய எம். ஜி. ஆர். தெய்வத்தாய் படத்துக்கு வசனமெழுதும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். நீர்க்குமிழி, பாமா விஜயம், அனுபவி ராஜ அனுபவி, எதிர் நீச்சல், இரு கோடுகள்,அரங்கேற்றம் , சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு போன்ற எண்ணற்ற வெற்றி படங்களை அளித்து திரையுலகிலும் மக்கள் நெஞ்சங்களிலும் மிக உன்னத இடத்தை பிடித்துக் கொண்டார். பல பிரபல நடிகர் நடிகைகள் இவரின் அறிமுகங்கள்தான்.கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களிலும் இவர் முத்திரைகள் ஏராளம். தேசிய, மாநில, தனியார் விருதுகள் பல பெற்றாலும் மிகவும் தன்னடக்கம் கொண்டவர். பல திரைப்பட இயக்குனர்களையும் உருவாக்கியுள்ளார். சின்னத்திரையிலும் கால் பதித்தவர். நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றி இருந்தாலும் எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை.
விசு:
இவர் டி.வி.எஸ். பணியாளர்.30 மேடை நாடகங்கள் எழுதி இயக்கி இருக்கிறார்.இவை 3000 மேடை கண்டவை.இவரின் நாடகப் பணி குறிப்பிடத் தக்கதாகும். பட்டணப்பிரவேசம், ஆண்டாள் அவள் ஆண்டாள், மணல் கயிறு இவர் தந்த சிறந்த நாடகங்கள். பி.ஆர். கோவிந்தராஜ் மூலமாக டைரக்டர் கே.பாலச்சந்தரை சந்தித்த பிறகே தனக்கு சினிமா வெளிச்சம் கிடைத்தது என்கிறார். மணல் கயிறு, சம்சாரம் மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி - வெற்றிப் படங்களை தந்தவர்.இவர் நடிகரும்கூட.விசு, எஸ்.வி.சேகர்,மௌலி, காத்தாடி ராமமூர்த்தி இணைந்த அருமையான கூட்டமைப்பு 'ப்ளைட் நெம்பர் 420' என்ற நீண்ட நகைச் சுவை நாடகத்தை அளித்தது. சன் டிவியில் அரட்டை அரங்கம் என்ற நிகழ்ச்சியை நடத்தத் தொடங்கினார். இந்நிகழ்ச்சி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் நடுவில் புகழ் பெற்றது.
மௌலி :
சென்னைத் தொலைகாட்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்ட முதல் நாடகம் நேற்று இன்று நாளை. இதன் ஆசிரியர் மௌலி. தற்கால எதிர்கால இளைஞர்களின் நடையுடை பாவனைகளை இந்நாடகம் சித்தரிக்கிறது.ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது, அம்மி மிதிக்கப் போலிஸ் வந்தது, மற்றவை நேரில், மத்தாப்பு வாங்க காசு வந்தாச்சு இவர் எழுதிய நாடகங்கள். மௌலி பல நாடகங்களை எழுதி இயக்கி நடித்துள்ளார்.ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது திரைப்படமாக எடுக்கப்பட்டது.தமிழைக் காட்டிலும் தெலுங்கு மொழியில் பல நாடகங்கள் எழுதிப் புகழ் பெற்றவர் இவர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire