அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிச் சுதந்திரம் பெற்றுப் பிறருக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது இந்தியா.இந்த விடுதலைக்காகத் தங்கள் வாழ்வைத் தியாகம் செய்தவர்கள் பலர். இந்தியர்கள் தம் சொந்த நாட்டுக்காகப் போராடியதில் வியப்பில்லை. அது அவர்களது கடமையாகும். ஆனால் அந்நிய மண்ணிலிருந்து வந்து இங்கே குடியேறி, நம் மக்களை அடிமைகளாய் நடத்திய ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி நம் மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துணை செய்த போராளிகளுள் குறிப்பிடத் தக்கவர் அன்னி பெசன்ட் அம்மையார் ஆவார்.
ஒரு சாதாரண ஐரிஷ் குடும்பத்தில் 01 10 1847 -இல் லண்டனில் பிறந்தார். அன்னி 5 வயதில் தந்தையை இழந்தார். அன்னை ஹரோ நகரில் பாடசாலை நடத்திவந்தார். ஏழைகளின் தொண்டில் ஆர்வம் காட்டிய அன்னியின் அழகில் மயங்கிய ப்ராஸ்பர்ட் பெசன்ட் என்ற பாதிரியார் அவரைக் காதலித்தார். பாதிரியாரின் மனைவியானால் அவர் துணையோடு எளியோர்க்கு சேவை செய்ய நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றெண்ணித் தம் 19 -ஆவது வயதில் 1867 -ஆம் ஆண்டு அவரை மணந்தார். திக்பி, மேபெல் என்று இரண்டு குழந்தைகள் இவர்களுக்கு உண்டு. கக்குவான் என்கிற தொடர் இருமலால் துவண்டு மகள்படும் அவதியைக் கண்டு அன்னி கண்ணீர் வடித்தார். இதனால் அவர் உள்ளம் கடவுள் சிந்தனையில் ஒருமுகப்பட மறுத்தது. இத்துடன் கணவரின் நிந்தனைகளும் சேர்ந்துகொள்ள வெறுப்பும் விரக்தியும் கொண்டு தற்கொலைக்குத் துணிந்தார். "உன் சொந்தத் துன்பத்தைத் தாங்கிக்கொள்ள நெஞ்சில் உரமற்ற நீயா ஏழைகளின் துன்பத்தைத் துடைக்க ஆசைப்பட்டாய்?" அவரது அந்தராத்மா இடித்துரைத்தது. வாழ்க்கைப் பாதையில் இனித் தன் பயணத்தைப் பாதியில் நிறுத்துவதில்லை என்று உறுதிகொண்டார். சுதந்திர மனப்போக்குக் கொண்ட அன்னி 1873 -இல் கணவரிடமிருந்து பிரிந்து வாழ முடிவெடுத்தார். 26 வயதேயுடைய அன்னி மிகவும் சிரமப்பட்டு இரண்டு குழந்தைகளையும் வளர்த்தார். சிறுவர்களுக்காகப் பல கதைகள் கட்டுரைகள் எழுதினார். அரசியலில் அவருக்கிருந்த நாட்டத்தை அவர் கணவர் விரும்பாததால் கணவனையும் பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்து லண்டன் சென்று 1880 களில் லண்டன் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பைத் தொடர்ந்தார். அடிமை நாடுகளுக்கு இங்கிலாந்து அரசு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். 'நேஷனல் ரிபார்மர்' என்ற பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றியபோது The Secret Doctrine நூலை எழுதிய பிளைவட்ச்கி அம்மையாரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு அன்னியின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய நாத்திகப் போக்கை கைவிட்டு ஆத்திகராகிப் பிரும்மஞான சங்கத்தில் உறுப்பினரானார்.1891 -ஆம் ஆண்டு இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ஆங்கில அரசுடன் கடுமையாகப் போராடி அனுமதி பெற்று மத நல்லிணக்கத்தைப் பரப்பும் நோக்கில் 1893 -ஆம் ஆண்டு நவம்பர் 16 இந்தியா வந்தார். இங்கு வந்ததும் புண்ணிய பூமிக்கு வந்தேன் என்று மகிழ்ந்தார். காசியில் சில காலம் வசித்தபோது கங்கையில் நீராடித் தனது ஐரோப்பிய உடையைத் துறந்து புடவை உடுத்தி, இந்து சமய விளக்கங்களை முறைப்படிக் கற்று இந்துவாகவே வாழலானார். பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சென்னையில் அடையாரில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார்.அடையாறு உள்பட நாடெங்கும் பல ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பள்ளிகளை ஆரம்பித்தார். பெண்களுக்காகத் தனிப் பள்ளியைத துவங்கினார்.
அடிமைப் பிடியில் சிக்கிக் கிடக்கும் இந்தியர்களின் உடனடி தேவை சுதந்திரம் என்பதை உணர்ந்த இவர் தனது 47 -ஆவது வயதில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இறங்கினார். ஆன்மீகத்தைப் பரப்ப வந்தவர் சுதந்திரத்துக்காகப் போராடுவது கண்டு அதிர்ச்சியடைந்த வெள்ளையர்கள் அன்னிக்கு பல்வேறு இன்னல்கள் தந்தனர். 1913 -இல் காங்கிரசில் இணைந்து கடுமையாகப் போராட ஆரம்பித்தார். 1917 -ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தெரிவானார். 'இந்தியாவே விழித்தெழு" என்பதுதான் அவரது சொற்பொழிவின் சாராம்சம். 'நாங்கள் அடிமைகளாக ரயிலில் பயணிப்பதைவிட, சுதந்திர இந்தியனாகக் கட்டை வண்டியில் பயணம் செய்யவே விரும்புகிறோம்" என்று தன்னுடன் பெண்களைச் சேர்த்துக் கொண்டு குரல் கொடுத்தார். 15 06 1917 அன்று ஏனைய காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னி பெசன்ட்டையும் கைது செய்தது ஆங்கிலேய அரசு. கைதைக் கண்டித்துக் காங்கிரஸ் இயக்கமும் முஸ்லிம் லீகும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் செப்டெம்பரில் இவர்களை விடுதலை செய்தது. இந்திய ஒற்றுமைக்குத் தடையாக இருந்த பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், தீண்டாமை இவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் பெண்கள் மத்தியில் இவருக்கு ஆதரவு பெருக ஆரம்பித்தது. தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள 1917 -இல் மாதர் சங்கம் தொடங்கிப் பெண்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்.இன்று பெண்கள் ஓட்டுரிமை பெற்றிருப்பதற்குப் போராடியது இந்த மாதர் சங்கமே. தனது 82 -ஆவது வயதிலும் ஐரோப்பாவில் 28 நாட்கள் சுற்றுபயணம் செய்து சொற்பொழிவாற்றிச் சாதனை படைத்தார்.
பேச்சாற்றல் மட்டுமின்றி எழுத்தாற்றலிலும் சிறந்து விளங்கினார். 1913 -இல் "பொதுநலம்" என்ற வார இதழையும் 1914 - "New India" என்ற நாளேட்டையும் நடத்தினார். சுதந்திர வேட்கையை மக்களிடம் தூண்டுவதற்காக அவர் நடத்திய பத்திரிகைகளின் எண்ணிக்கை 18. இராமாயணம், மகாபாரதம், இதிகாசங்கள்,வீரர்கள், பெண்கள் போன்ற தலைப்புகளில் அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 362 க்கு மேல்."லிங்க்" என்ற பெயரில் பத்திரிகை தொடங்கி இந்தியாவிலும் அயர்லாந்திலும் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக எழுதினார். பெண்கள் விடுதலை, தொழிலாளர் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு போன்ற பலவற்றிலும் தன் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
அன்னி பெசன்ட் அம்மையார் மதம்,மதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி, சமூகச் சீர்திருத்தம், அரசியல் ஆகிய நான்கு துறைகளில் ஈடுபட்டு உழைத்தார். தனது 81 -ஆவது வயதில் தீவிர அரசியலில் இருந்து விலகினார். இறுதிக் காலங்களில் இந்திய மெய்யியலாளர் திரு ஜிட்டு கிருஷ்ண மூர்த்தியுடன் சேர்ந்து பிரம்மஞான சங்கத்தின் முனைற்றத்துக்காக உழைத்தார்.
ஐம்பது ஆண்டுகள் இந்திய மக்களுக்காகவே உழைத்த இவர் தனது 86 -ஆவது வயதில் 20 09 1933 அன்று இயற்கை எய்தினார். ஒரு தீர்க்கதரிசியைப் போல் அவர் சொல்லிய பல திட்டங்கள் - ஏழை குழந்தைகளுக்குப் பள்ளியிலேயே இலவச உணவு வழங்குதல், கிராம பஞ்சாயத்து போர்டுகளைத் தொடங்குவது - இவை இன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பு மறக்க இயலாதது. சென்னையில் நீண்ட காலம் தங்கி இருந்தார்.ஆரம்பத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் அடையாற்றின் தெற்குக் கரையில் ஆரம்பிக்கப்பட்ட பிரம்மஞான சங்கம் (Thiophycal Society) பிறகு 270 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்தது. இங்கு அனைத்து மதத்தினரும் ஒன்று கூடி வழிபாடு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 400 வயதைத் தாண்டிய ஆலமரமும் இங்குதான் உள்ளது. 06 01 1936 இல் இந்த இடத்தில் கலாஷேத்திரம் ருக்மணி தேவி அருண்டேல் அவரது கணவர் ஜார்ஜ் அருண்டேல் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் உருவாக்கத்துக்கு அன்னி பெசன்ட், டாக்டர் ஜேம்ஸ், டாக்டர் சி.பி.ராமஸ்வாமி ஐயர், ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்த்திரி போன்றோர் உறுதுணையாக இருந்தனர். சென்னையின் ஒரு பகுதி இந்த அம்மையாரின் பெயரை இன்றும் தாங்கி இருக்கிறது.
லூசியா லெபோ