அன்னை தெரசாவின் வழியில் இறைவனின் முகத்தை ஏழைகளின் சிரிப்பில் கண்டவர். 16-11-1908 ஆம் ஆண்டு பெல்ஜியம் தலைநகரான புருக்சேலில் பிறந்து, சிறு வயதில் தந்தையை இழந்து மனதால் வெறுமையுற்ற மதலேன் சென்கின், வளர்ந்த பிறகு மடத்தில் சேர்ந்து, துா்ப்பாக்கிய நிலையில் உள்ள குழந்தைகளுக்குச் சேவை செய்ய எண்ணினார்.
அருட்சகோதரியாக எம்மானுவெல் என்று பெயர் மாற்றம் பெற்றவர், இலக்கிய, தத்துவப் பேராசியராகத் துனீசியா, துருக்கி, எகிப்து நாடுகளில் பணியாற்றினார்.
1971இல், பணி ஓய்வுக்குப் பிறகு, தன் வாழ்வை அழுக்கு, நோய், ஏழ்மை நிரம்பியச் சேரிகளில்-ஏழைகளுக்கு உதவுவதில் உள்ள இன்பத்தை உணர்ந்தவராய்க்-கழித்தார். பழைய செருப்பும், உடையும், புன்னகையும் அணிந்து அஞ்சாநெஞ்சத்துடன் உழைத்து ஆதரவற்றவர்களுக்கு வீடும், பள்ளியும், மருத்துவ நிலையமும் ஏற்படுத்தித் தந்த அவரது அன்பு பலரது வாழ்வை மலர்வித்தது. இவ்வாறு 22 வருடங்கள் ஓயாது உழைத்து, 85% குழந்தைகளுக்குக் கல்வியறிவு அளித்து, வன்முறையைக் குறையச் செய்து பெண்களின் விடுதலைக்கு வழியும் வகுத்தார்.
தனது 74 ஆம் வயதில், “மீண்டும் பூஜ்யத்தில் ஆரம்பித்தல்” என்ற கொள்கையோடு அவா் உருவாக்கிய இயக்கம் உலகெங்கும் பரந்து எகிப்து, லிபான், பிலிப்பைன்சு, சூடான் ... என 60,000 குழந்தைகளுக்கு மேல் பராமரிக்கிறது.
1993 இல் கிட்டத்தட்ட தன்னுடைய 30 ஆண்டு சேவைக்குப்பின் பிரான்சு திரும்பிய அவர், “நீ வாழ வேண்டுமானால் பிறரை நேசித்தே ஆக வேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தி, கோவில்கள் தங்கள் செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டுமெனக் கோரினார்.
தனது அயரா உழைப்புக்கிடையில், பல நுால்களை எழுதினார்.
தன் 99 ஆம் வயதுவரை அளப்பரியாச் சக்தியுடன் செயல்பட்ட இந்த அம்மையார், “என்றும் முன்னேற்றம்” என்ற தாரக மந்திரத்துடன் கடமையை ஆற்றி 20-10-2008 இல் இறையடி எய்தினார்.
எகிப்து தன் குடியுரிமையை அளித்து நன்றி பாராட்டியது. பெல்ஜியக் கத்தோலிக்கப் பல்கலைக் கழகம் முனைவர் பட்டம் வழங்கி மகிழ்ந்தது. பிரான்சு மருத்துவக் கல்விக் கழகம் தங்கப் பதக்கம் கொடுத்து கௌரவித்தது.
பெல்ஜிய நாட்டின் அதி உயர் விருதுகள் இரண்டும், பிரான்சு நாட்டின் மிக உயா்ந்த விருதுகள் மூன்றும் இவர் பெருமைக்குப் பெருமை சேர்ப்பவை.
--தமிழரசி--