இணைய இதழ்களால் என்னென்ன வசதிகள் என்று பார்ப்போமா?
உலகின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளையும், செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது. சில பத்திரிகைகள் முக்கியமான நேரங்களில், உதாரணமாக தேர்வு, தேர்தல், இயற்கைகேடுகள் முதலானவற்றை வெளியிடுவதால் உடனுக்குடன் செய்தியை தெரிந்துகொள்ள முடிகிறது.
நாளிதழ்களில் ஒருநாள் வெளியான தகவல் அன்றைய நாளிதழ் கிடைக்கவில்லை என்றால் தேடிப்பெறுவது சிரமம். ஆனால் இணைய இதழ்களில் தகவல்களைச் சேமித்து வைக்கலாம் அல்லது தேவைப்படும்பொழுது தேடிக் கண்டுபிடிக்கலாம். - சுலபமாக பக்கங்கள் தாவவும் முந்தைய நாள் இதழ்களைப் பார்க்கவும், மற்றவர்களுக்குச் செய்திகளை அனுப்பவும் வசதிகள் இருக்கின்றன.
பாதுகாத்து வைக்கும்போது அச்சேற்றப்பட்ட இதழ்கள் நாளடைவில் பழுப்பாகி எழுத்துக்கள் மங்கிவிடுகின்றன. பழைய இதழ்களை சேர்த்துவைக்க இடவசதியும் தேவை. இணைய இதழ்களில் இந்தச் சிரமங்கள் இல்லை.
ஒரு நாளிதழை உருவாக்க ஏற்படும் இடப்பற்றாக்குறை, நியுஸ் பிரிண்ட் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் இணைய இதழில் கிடையாது.
அச்சு ஊடங்கங்களுக்கு இருக்கும் நிர்பந்தங்கள் ஏதும் இதற்கு இல்லை.
அச்சு இதழ்களை எத்தனை பேர் வாசிக்கிறார்கள் என்ற கணக்கு தோராயமாகத்தான் இருக்கும்.
இணைய இதழ்களை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதை மிகத்துல்லியமாக கணக்கிட்டு சொல்லும் வகையில் தொழில்நுட்பம் இருக்கிறது. உதாரணமாக 27 .11. 2008 தினமலர் இணையத்தில் மும்பை பயங்கர செய்தி 12 மணி நேரத்தில் 5 இலட்சம் பேர் படித்தனர் என்று இந்த புள்ளி விபரம் சொல்கிறது.
மேலும் இணைய இதழை தினமும் எத்தனை பேர், எந்தெந்த நாடுகளிலிருந்து வாசிக்கிறார்கள், ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எத்தனை பேர் வாசித்தார்கள், எந்த பகுதியை அதிகம் விரும்பி படிக்கிறார்கள் என்றும் கூறமுடியும். இந்தக் கணக்கு, விளம்பரங்கள் பெற உதவியாக இருக்கும். இந்தப் புள்ளி விபரங்களை வைத்துத்தான் விளம்பரத் தொகையும் நிர்ணயம் செய்கிறார்கள்.
படைப்பாளியே தன் படைப்பு வெளிவந்ததா என்று அறிய பத்திரிக்கை அல்லது இதழை காசு கொடுத்து வாங்கித்தான் பார்க்க வேண்டியுள்ளது. இணைய இதழில் இந்தச் சிக்கல் இல்லை.
வளரும் பருவத்தினர் கைப்பேசிக்காக (மொபைல்), செலவிடும் அளவுக்கு புத்தகத்துக்கோ பத்திரிக்கைகளுக்கோ செலவழிக்க விரும்புவதில்லை.
பழைய புத்தகங்களையோ, வாடகை நூல்களையோ பயன்படுத்துகின்றனர் அல்லது இணைய இதழை வாசிக்கவே விரும்புகின்றனர்.
காசு கொடுத்து பல இதழ்களை வாங்கிப் படிக்க முடியாது. இணைய இதழ்கள் வருவதால்தான் இன்று நம்மால் பல்வேறு இதழ்களையும் படிக்க முடிகிறது
தமிழ் இணைய இதழ்களில் பிரபலமானவர்களது படைப்புகள் இல்லாமல் புதியவர்கள் படைப்புகள் அதிக அளவில் இடம் பெறுகிறது.
இணைய இதழால் மிக இலகுவாக, விரைவாக படைப்பாளிகள், ஆர்வலர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
ஆசிரியர் கடிதம், மக்களின் கருத்துக்கள், உணர்வுகள், பிரதிபலிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முடியும். பின்னூட்டம் (மின்னூட்டம்) இதற்கு வழிவகுக்கிறது. (பலர் பின்னூட்டம் கொடுக்க விரும்பினாலும் அதைச் செயல்படுத்தும் வழி அறியாது இருக்கிறார்கள். தமிழ் எழுத்துரு இல்லாவிட்டாலும் ஜி மெயிலில் தமிழில் டைப் செய்யும் வசதி இருக்கிறது.)
சில மின்னிதழ்கள் பிற இணைய தளங்கள் மற்றும் மின்னிதழ்களுக்குச் செல்ல இணைப்பு வழங்குகின்றன.
காசு செலவு செய்யாமல் இணைய இதழை நடத்தும் வாய்ப்பை இணைய நிறுவனங்கள் தர முன்வந்துள்ளன. இதனால் நிறைய செலவு செய்து கொஞ்ச வாசகர்களை அச்சு மூலம் அடைவதைவிட, சில ஆயிரம் வாசகர்களைச் செலவே இல்லாமல் அடைந்துவிட முடியும்.
இணைய இதழ்களால் பல நன்மைகள் இருந்தாலும் முற்றிலுமாக அச்சில் வரும் இதழ்களைப் புறக்கணிக்க முடியாது.
இணையத்தொடர்பு, சாதாரண மக்களையும் மிகவும் குறைந்த செலவில் அடையும் வாய்ப்பு ஏற்படுமாயின் அச்சு ஊடகம் பாதிக்கப்படும். அதற்கு வெகுகாலம் பிடிக்கும். அதுவரை அச்சு ஊடகங்களின் தேவையும் இருந்து கொண்டிருக்கும்.
‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்’ என்றார் பாரதி. இணையத்திற்குச் சென்றாலே பன்னாட்டு கலைச்செல்வங்களைப் பற்றிய அறிவு நமக்கு கிட்டும்.
தோழிகளே, இணைய இதழ்கள் சிலவற்றை அடுத்தமுறை உங்களுக்கு
அறிமுகபடுத்தலாம் என்றிருக்கிறேன்.
- லூசியா லெபோ