அன்புடையீர்,
கலிகாலத்தில் உலகம் அழியுமென்பார்கள். கடந்த சில வருடங்களாக உலகில் ஏற்பட்டு வரும் அழிவுகளும், நோய்களும் அதற்கு முன்னோடியோ எனத் தோன்றுகிறது. செய்தித்தாள்களிலும், தொலைக் காட்சிகளிலும் தினம் காணும் செய்திகள் அந்நாட்களில் ஏதோ ஒரு நேரத்தில் நடக்கும் அசம்பாவிதங்கள். மனிதனும் தன்னால் இயன்ற அளவு தனிமனித வாழ்க்கையையும், குடும்பச் சூழலையும், சமூகத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான்!
ஆனாலும் கடைசி மனிதன் வாழும்வரை, வாழ்வு மீது பற்றும், அதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும், அதற்கான செயல்பாடுகளும் தொடரத்தான் செய்யும். இது கடவுளுக்கும் அல்லது இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே நடக்கிற போராட்டம். தோல்வி மனிதகுலத்திற்கே என்று திட்டவட்டமாகத் தெரிந்தாலும்கூட அவனது முயற்சி முடங்காது.
தமிழுக்குச் சமீபகாலமாக ஏற்படும் சரிவினைப் போக்க, அதன் பழம்பெருமை குன்றாது நிலைக்க வைக்க தமிழ் ஆர்வலர் நடத்துகிற போராட்டமும் இத்தகையதே! குடும்ப அமைதிக்காகச் சில விட்டுக் கொடுத்தல்களும், சமூக நலனுக்காகச் சில தியாகங்களும் எத்துணை அவசியமோ அந்த அளவுக்கு இங்கே பொறுமையும், இடைவிடா உழைப்பும் தேவை. மொழி, இனம் பற்றிய எண்ணமே ஏற்படாத அளவு பணம் பண்ணும் கலை வளர்ந்துவிட்ட நாளில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையை ஒரு சிலரே செய்தாக வேண்டிய சூழல்.
கம்பன் கழகம் அந்த ஒரு சிலரில் ஒன்றாகத் தன் தமிழ்ப் பணியை இன்னொரு கோணத்தில் அணுக ஆரம்பித்துள்ளது. “ வளரும் தலைமுறைக்குத் தமிழை அறிமுகப்படுத்துங்கள், தமிழில் பேசுங்கள், தமிழ் கற்றுக் கொடுங்கள், நமது பாரம்பரியக் கலாச்சாரத்தைச் சொல்லிக் கொடுங்கள்” என்று மேடைக்கு மேடை கூறியாயிற்று. ஏற்கனவே ஒரு தலைமுறை இந்த வட்டத்திலிருந்து சற்றே விலகிவிட்ட காரணத்தால், அவர்களுக்கு விருப்பம் இருந்தபோதும் செயலாற்ற இயலவில்லை. எனவே அந்தப் பொறுப்பை நாங்கள் எடுத்துக் கொண்டுள்ளோம்.
ஒவ்வொரு மாதக் கடைசி சனிக்கிழமையன்றும் இளையோருக்குத் திருக்குறளைப் பிரெஞ்சு, தமிழ் மொழிகளில் விளக்க உத்தேசித்துள்ளோம். இதன் மூலம் உலகப் பொதுமறையான வாழ்வியல், தமிழர் பண்பாடு, தமிழ் மூன்றும் வளர வாய்ப்பு உள்ளது. இலவசமாகக் கிடைக்கும் இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி, இளைஞர் மனதில் தமிழெனும் ஒளியேற்ற வேண்டுகிறோம். நன்றி
இராசேசுவரி சிமோன்