அன்புச் சகோதரிகளே, இந்த முறை தாயகம் சென்றபோது தமிழக முதல்வர் நடத்திய செம்மொழி மாநாட்டிலும் அதனுடன் இணைத்து உத்தமம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இணைய மாநாட்டிலும் பங்கு பெறும் வாய்ப்பு கிட்டியது. இணைய மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் படித்த சிலரையும் வலைப்பூக்கள் , இணையதள அமைப்பாளர்கள் சிலரையும் சந்தித்துப் பேசியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
கணிணியின் பயன்பாடுகளில் முக்கியமானது இணையவலை, இணையதளமாகும்..
கல்வி, உலக நடப்புகள், அறிவியல், அரசியல், பொருளாதாரம், மொழி, வரலாறு, ஆன்மீகம், மருத்துவம், சமையல், விளையாட்டு, பொழுதுபோக்கு, வங்கிக் கணக்குகளைக் கையாள்வது, கடிதப் போக்குவரத்து, கருத்துப் பரிமாற்றம், பொருட்களை வாங்குவது... என்று இதில் பேசப்படாத செய்திகளே இல்லையெனலாம். எனவே, உலகமே குக்கிராமமாகக் காட்சியளிக்கிறது.
இந்த இணையத்தின் பயன்பாடுகளில் சிலவற்றை உங்களுக்குத் தொகுத்துத் தொடராகத் தரலாம் என நினைக்கிறேன்.
முதலில் என் நினைவிற்கு வந்தது இணைய இதழ்கள் - மின்னிதழ்கள்.
காரணம், என் மனத்திரையில் ஓடிய பசுமையான காட்சி :
என் இளவயதில், தமக்கையின் நச்சரிப்பும் கெஞ்சலும் கொஞ்சலும் பொறுக்காமல் எதிர் வீட்டு மாமியிடமிருந்து ஆனந்தவிகடன், குமுதம், பேசும்படம் (இவ்விதழ்களுக்குத் தடா எங்கள் வீட்டில்) இவற்றைக் கடனாக வாங்கி என் தந்தையின் கண்ணில் படாதவாறு அவர்களுக்குத் தருவது. இந்த அனுபவம் உங்களில் சிலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இன்றோ நான் அந்த இதழ்களைப்பெற எவர் தயவையும் நாடுவதில்லை. அதிகப் பைசாவும் செலவு செய்வதில்லை. மாறாக இணையத்தில் வெளிவரும் இணைய இதழ்கள் - மின்னிதழ்களைப் படிக்கிறேன்.
இணைய இதழ்கள் மின்னிதழ்கள் என்றால் என்ன?
இந்த அவசர உலகில் ,அதுவும் கணவன் மனைவி இருவரும் பணிக்கு ஓடும் காலை வேளையில் பொழுது ஏது பத்திரிகை, புத்தகங்களைப் பார்க்க, படிக்க. உள்ளுர்த் தொலைக்காட்சிகள், தேசியத் தொலைக்காட்சிகள் ஆகியவற்றுக்கு அடுத்து இணையத்தின் மூலமாகவே செய்திகளை அறிவதாக அமெரிக்கர்கள் கூறுகிறார்கள். எனவே, அங்கு செய்தித் தளங்கள் வரிசையில் இணையம் 3 ஆம் இடத்திலுள்ளது.
வளர்ந்துவரும் கணிணி, தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தால் இன்று தினத்தந்தி, தினகரன், தினமலர், தினமணி, தமிழ் முரசு, மாலைமலர்;. . . மின்தாள் வடிவில் வருகின்றன. அதாவது அச்சில் எப்படி இருக்குமோ அதைப் போலவே(ஒரு சில பத்திரிகைகள்) அந்தந்தப் பக்கங்களின் லே-அவுட் மாறாமல், விளம்பரங்கள் மாறாமல் வெளிவருகின்றன. இதனால் காகித இதழ் போலவே உணர்வு ஏற்படுகிறது. இணைய இதழ்களை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று நாளேடுகள் (செய்தித் தாள்கள்), மற்றது, வார, மாதத் தமிழ் இதழ்கள். (உ.ம்) திண்ணை, கீற்று, விகடன், குமுதம், பதிவுகள் . . . .
முதலில் இணைய இதழ்கள் ஒவ்வொன்றுமே தமக்கு உரித்தான எழுத்துரு (font) ஒன்றைப் பயன்படுத்தின. தற்பொழுது பெரும்பாலும் இதழ்கள் யுனிகோட்( ஒருங்குறி) எழுத்துருவிலேயே வருகின்றன.
யுனிகோட் என்றால் என்ன?
உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொதுவான குறியீட்டுமுறை. மொழி என்னும் தடையைத் தொழில்நுட்பம் தகர்த்தெறிந்து கண்டறிந்த முறை. தனித்தனி மென்பொருள் தேவையில்லை. கணிணியில் தற்காலிகமாகச் சில மாற்றங்கள் செய்தால்போதும்.
கணிணியைப் பயன்படுத்தத் தெரிந்த எவரும் இந்த இணைய இதழ்களைப் படிக்க இயலும். பணி, வேலைகளுக்கிடையே சலிப்பு, சோர்வு ஏற்படும்போது ஒரு மாற்றத்துக்கு இணைய இதழ்களைப் புரட்டுபவர்களும் உள்ளனா்.
இந்தத் தமிழ் இணைய இதழ்கள் பல சுவையான செய்திகளைப் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குத் தந்து கொண்டிருக்கின்றன. மேலும் மலேசியா, சிங்கபூர் , கனடா, அமெரிக்கா , இங்கிலாந்து, ஆத்திரேலியா, சீனா, சப்பான் ஆகிய நாடுகளில் நடைபெறும் செய்திகளை அந்தந்த நாட்டிலிருக்கும் செய்தியாளர்களே திரட்டி அனுப்புகிறார்கள்.
தன்மை:
பெரும்பாலும் தமிழ் இணைய இதழ்கள் பொழுதுபோக்கு நோக்கத்துக்காகவே உள்ளன.
ஆழமான பொருள் நிறைந்த உள்ளடக்கங்கள் கொண்ட உயர்தர இதழ்களும் உண்டு. இத்தகைய இதழ்கள் எண்ணிக்கையில் குறைவு.
படிப்பவர்களின் மனத்தில் தீய எண்ணங்களை உருவாக்கும் படம், கதை, கட்டுரை, செய்திகளைக் கொண்ட இதழ்களும் உண்டு. சமூகச் சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் இணைய இதழ்களைத் தவிர்க்க வேண்டும். அதற்காக ஆவண செய்ய வேண்டும் குறிப்பாக நம் இளைய தலைமுறை இணையத்தில் உலவும் போது விழிப்பாக இருக்க வேண்டும்.
இணைய இதழ்களால் என்னென்ன வசதிகள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போமா தோழிகளே.
- லூசியா லெபோ