கடம்பு:
கடம்பு மரத்திலான கட்டிலில் படுத்துறங்கினால், உடல்வலி, குளிர் சுரம், மூட்டுப் பிடிப்பு, கண்ணோய், தொண்டைப் புண், வயிற்றுவலி, மனச்சோர்வு ஆகியன குணமாகும். ஆகவே 'உடம்பை முறித்துக் கடம்பில் போடு” என்னும் பழமொழி உருவாயிற்று.
வெங்காயம்:
'வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை” என்றொரு பழமொழியுண்டு
இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
சிறுநீர்ப் பெருக்கும்; கோழையை நீக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் ஆற்றல் அதிகம் உண்டு. இதனால்தான் வெங்காயத்தை, அனைத்து உணவு வகைகளைச் செய்கின்றபோதும் அதிகம் பயன்படுத்துகிறோம். வெங்காயத்தின் பூ, தாள், கிழங்கு, விதை ஆகிய எல்லாமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.
வல்லாரை:
வல்லாரையை உண்டால் நினைவாற்றல் பெருகும் என்பர். இது வாய்ப்புண், கழிச்சல், குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, சுரம், இளைப்பு, தொண்டைக் கம்மல், யானைக் கால், விரைவீக்கம், நெரிகட்டி, மேகப்புண், நரம்பு நோய் போன்ற பல நோய்களுக்கு மருந்தாகும். 'வல்லாரை இருக்க எல்லாரும் சாவதேன்” என்னும் பழமொழி இதன் மருத்துவச் சிறப்பைக் குறிக்கிறது.
ஆவாரை:
பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாட்டை நீக்கும். உடல் சூட்டைத் தணித்து, மேனியைப் பொன்னிறமாக மாற்றும். மேலும் நீரழிவு நோயை ஆவாரையின் பு+ கட்டுபடுத்தும். இதன் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் 'ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ?” என்று கூறியிருக்கிறார்கள்.
சுக்கு:
நமது பெரியோர்கள் 'சுக்கிற்கு மிஞ்சின மருந்துமில்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சின கடவுளும் இல்லை” எனப் பழமொழியில் இதன் சிறப்பை எடுத்துரைத்துள்ளனர்.பித்தம், வாயு, வயிற்றுப் பொருமல், அஜீரணம், வாந்தி, மயக்கம், தலைசுற்றல் போன்ற நோய்களை முற்றிலும் விரட்டும் தன்மை கொண்டது சுக்கு. நோய்கள் உடலைத் தாக்கா வண்ணம் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலுக்கு அளிக்கும் குணம் சுக்கிற்கு உண்டு.
மிளகு:
'பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட விருந்து உண்ணலாம்”-
மிளகு உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்குவதில் சிறந்தது. பகைவன் வீட்டில், நஞ்சு கலந்த உணவை அளித்தாலும்; உணவிலுள்ள நச்சுகளைப் போக்கும் என்பதே இப்பழமொழியின் பொருள். பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கு மிளகு பயன்படுகிறது. பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர்.