பொறுப்பாளர்கள்
கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்
mardi 16 novembre 2010
எண்ணப்பரிமாற்றம்
அன்புடையீர்,
31 10 2010 அன்று பிரான்சு கம்பன் கழகம் தன் 9 -ஆம் ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி அனைவர் பாராட்டுதல்களையும் பெற்றது. கம்பன் கழகத் தலைவர் திரு. பாரதிதாசனின் மரபுக் கவிதை பயிற்சிப் பட்டறையில் தன்னைத் தயாரித்துக் கொண்ட திருமதி அருணா செல்வம் அவர்களின் கவிதைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது விழாவின் சிறப்பம்சம் ஆகும்.
'தீமையால் பெரிதும் திகைக்கச் செய்பவர் கூனியே, சூர்ப்பணகையே, இராவணனே” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றம் விழாவின் முத்தாய்ப்பாய் அமைந்ததில் ஐயமில்லை. அடுத்த ஆண்டு எதிர்கொள்ள இருக்கும் 10 -ஆம் ஆண்டு விழாவை நிறைவாக நடத்திட அனைவரும் தோள் கொடுப்போம்.
நவம்பர் 14 இந்தியாவில் குழந்தைகள் தினம். நவம்பர் 20, உலகக் குழந்தைகள் தினம்.
இந்த இரு பெரும் விழாக்களைக் கொண்டாடும் நேரத்தில் நமது தமிழகத்தில் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளை நினைத்து உள்ளம் கொதிக்கிறது. குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைத் தட்டிக்கேட்க - அவற்றைக் களைய நாம் ஏதாவது முயற்சி செய்கிறோமா?
வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான்.
நல்ல சமுகம் அமைக்க வேண்டுமானால், நாளைய இந்தியாவுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டுமானால் குழந்தைகள் குறித்தான விழிப்புணர்வு வருவது காலத்தின் கட்டாயமாக இன்று இருக்கிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தை பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்களே அவர்களது எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். எனவே குழந்தை பருவம் முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உண்டு. தங்களது குழந்தைகள், மற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மற்றும் அன்புடன் பழகுவதற்கும் நாம் கற்றுக்கொடுக்க வேண்டும்.
நம் வீட்டுக் குழந்தைகளைக் கண்ணை இமை காப்பது போலக் காக்கும் நாம் அண்டை வீட்டுக் குழந்தையின் நலனிலும் கொஞ்சம் அக்கறை செலுத்தலாம் அல்லவா..
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழிக்கேற்ப நம் சுற்றுப் புறத்திலுள்ள அனைத்துக் குழந்தைகளின் நலனிலும் அக்கறை செலுத்த முற்படுவோம். அப்போதுதான் குழந்தைகள் வளமான வாழ்வு வாழும் சூழ்நிலை ஏற்படும். நேரு கண்ட கனவும் பலிக்கும்.
லூசியா லெபோ