இணைய இதழ்களுக்கு போட்டியாக இணையத்தில் உலாவரும் வலைப் பூக்கள் பற்றி பார்க்கலாமா தோழிகளே?
வலைப்பதிவு என்றால் என்ன?
தன் படைப்புகளை தானே இணையத்தில் பதிப்பிக்கும் வசதி ஆங்கிலத்தில் ப்ளாக்கிங் (blogging) என்றழைக்கப்படும். Weblog என்ற பெயர் முதன் முதலில் 17 12 1997இல் ஜாண் பார்சர் என்பவரால் உருவாக்கப்பட்டது. இச்சொல் பிறகு இரண்டாக உடைக்கப்பட்டு we blog என்று மாறி பயன்பாட்டுக்கு வந்தது.
வலைப்பூவா வலைப்பதிவா ?
ஆரம்ப பதிவர்கள் பிளாக்குகளை தமிழில் வலைப்பூ என்று அழைத்தனர். பின்னர் பெரும்பாலானவர்கள் வலைப்பதிவு என்ற பெயரையே பயன் படுத்தியதால் அந்த பெயரே நிலைத்துவிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி நாள் (31.08) அன்று உலக வலைப்பதிவாளர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
தாய்மொழியாம் தமிழில் தம் எண்ணங்களை, படைப்புகளைப் மின்குதிரை மேலேற்றி உலகம் முழுமைக்கும் கொண்டு செல்ல உதவும் ஊடகமே வலைப்பதிவு. மிக அடிப்படையான கணினி அறிவு, இணையத்தொடர்பு வசதி இருந்தால் நம் எழுத்துக்களை மின்னெழுத்துக்களால் பதிக்க முடியும். ஆர்வமும் உழைப்பும் மட்டும் இருந்தால் போதும்.
அயல் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் தமிழ் ஆர்வத்திற்கு ஒரு வடிகாலாகவே வலைப்பதிவுகளை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
வலைப்பதிவில் என்ன எழுதப் படுகிறது?
வலைப்பதிவில் டைரிக்குறிப்பு போல அன்றாட அனுபவங்களை எழுதலாம். என்னவெல்லாம் நம் உள்ளத்துக்கு வெளியே கொட்ட விரும்புகிறோமோ, நம் கருத்துக்கள் எதையெல்லாம் பகிர்ந்துகொண்டால் நமக்கும் வாசிப்பவருக்கும் பயன்தருமோ அதை எல்லாம் எழுதலாம். தாம் சார்ந்த துறையைப்பற்றி எழுதலாம். அறிவியல், தொழில்நுட்பம் பற்றி எழுதலாம். கதை, கவிதை,கட்டுரை போன்ற தங்கள் படைப்பாக்கமும் செய்யலாம். நிகழ்வுச் செய்திகளைப் பற்றி விவாதிக்கலாம், சுவையான சமையல் குறிப்புகூட தந்து அசத்தலாம். திரைப்பட விமர்சனங்கள் செய்யலாம். எழுத்தில் எழுதக் கூடிய எதையும் எழுதலாம். இதனால் தமிழில் எழுதும் ஆர்வமும் திறமையும் வளர்கிறது. பலருடைய திறமைகளை, கருத்துக்களை, எண்ணங்களை அறியும் வாய்ப்பு கிடைக்கிறது. தங்கள் சொந்த பெயரால் எழுத விருப்பமில்லாதவர்கள் புனைபெயரால் பதிவு செய்யலாம். தனிப்பட்ட தகவல்களை பொதுவில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
வலைப்பதிவு என்பது இணையதளத்தைப் போலன்றி நேரடியாக வாசகரையும் எழுதுபவரையும் உடனுக்குடன் தொடர்புறுத்தும் ஒரு ஊடகம்.
வலைப்பதிவை வாசிப்பவர் உடனே அந்த படைப்புக்கான விமர்சனத்தை தெரிவிக்க முடியும். எனவே வாசகரும் வலைப்பதிவரும் நேரடித் தொடர்பில் இருக்கின்றனர். இதனால் வாசகரே விரைவில் வலைபதிவராகும் வாய்ப்பும் உண்டு.
இதுதவிர இணைய வளர்ச்சியால் வலைப்பதிவுகளில் ஒலி, ஒளிக் காட்சிகளையும் காட்சிப் படுத்த முடிகிறது. இதனால் எழுத்துப் படைப்புகள் தவிர புகைப்படப் பதிவுகள், குரல் பதிவுகள், திரைப்பதிவுகள் என வலைப்பதிவுகளில் பன்முகத் திறமைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது.
. இடுகையின் வாழ்நாள் :
ஒரு இடுகையின் வாழ்நாள் அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதைப் பொருத்தது. இதைத்தான் எழுதலாம். என்ற எல்லை இல்லாத ஊடகம் என்பதால் எதை வேண்டுமானாலும் எழுதினால் வாசகர்களை பெற இயலாது. வலைப்பதிவை நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் தினச் செய்திகளையோ, மற்றவர்கள் பதிவுகளில் வெளியான கருத்துக்களையோ தன் பதிவில் பதிவு செய்து இடத்தையும் நேரத்தையும் வீணடிப்பவர்கள் சிலர். எதையோ நினைத்து தேடப்போய் எதையோ வாசிக்க நேர்ந்து விடுவதால் நேரவிரயம் ஆகிறது. பிறந்ததும் இறந்துவிடும் பதிவுகள் தேவையா?
நுட்பம், துறைசார் பதிவுகளுக்கு வருகையாளர்கள் குறைவு. போதிய ஊக்கமும் வரவேற்பும் கிடைப்பதில்லை.
நமது வலைப்பதிவுகள் நிலைத்து இருக்க வேண்டுமானால் நாம் தரும் தகவல் செறிவுடன் சுவையாக எழுதப்பட வேண்டும். பார்வையாளர்களின் எண்ணிக்கை பெரிதல்ல சரியான பார்வையாளர்களை அடைவதுதான் முக்கியம்.
நம் எழுத்து பலரையும் ஈர்க்கும் ஒன்றாக இருந்தால் நம் வலைப்பதிவில் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்பு இருக்கிறது.
பின்னூட்டம் என்பது ஒரு பொழுதுபோக்காக, போதையாக தற்போது மாறிவருவது வருந்தத்தக்கது..
மற்றவை மறு சந்திப்பில் பார்ப்போமா?
- லூசியா லெபோ