பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 31 mars 2014

சிந்திப்போம்! செயல்படுவோம்!

"எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை" என்னும் பாரதியின் கூற்று என்றைக்குமே பெண்களால் மெய்ப்பிக்கப் பட்டிருக்கின்றது; மெய்ப்பிக்கப் பட்டுக் கொண்டும் இருக்கின்றது என்பது கண்கூடு.ஆனால்,அன்று தொட்டு இன்றுவரை ஏனோ ஆண் சமுதாயம், பெண்ணை ஒரு நுகர் பொருளாகவே வைத்திருப்பதற்கு வேண்டிய வழிமுறைகளை வகுத்துச்  செயலாற்றிக் கொண்டே இருக்கின்றது. அதனுடைய நோக்கத்திற்குத் தெரிந்தோ தெரியாமலோ, பெண்ணினமும் ஆட்பட்டுக் கிடக்கின்றது என்பதையும் மறுக்க முடியாது. அன்றைய காலகட்டங்களில் பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்க வேண்டும் என்ற காரணத்தினால், அவர்களுக்குக் கல்வி போன்ற அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டன. ஆணின் தேவைகளைப் பூர்த்தி செய்து, வெறும் பிள்ளை பெற்றுத்தரும் கருவியாகவே பயன்படுத்தப் பட்டு வந்ததால் . அவளுடைய  உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் உரிய  மதிப்பும் அளிக்கப் படவில்லை. இன்று. எத்தனையோ பெண்கள் கல்வி, அரசியல், பொருளாதாரம், போன்ற பல்வேறு துறைகளிலும் வியத்தகு முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். அதற்காகப் போராடிய எத்தனையோ ஆண்களும் உண்டு. அவர்களெல்லாம் வணக்கத்திற்குரியவர்களே; என்னதான் பெண்கள் முன்னேற்றம் பற்றி ஒருபக்கத்தில்  பேசிக்கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பெண்மையை இழிவு படுத்தும் நிகழ்ச்சிகளும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

பெண்களின் பாதுகாப்பற்ற இன்றைய நிலைக்கு என்ன காரணம் என்று பல்வேறு கோணங்களில் கருத்துக் கணிப்புச் செய்து பார்த்த போது, அதில், முக்கியமாகப் பெண்கள் அணியும்  அரைகுறை உடை என்னும் பதிலே முதலாவதாக வருகின்றது. இந்த உண்மையை மறுப்பதற்கோ ஐயப் படுவதற்கோ ஏதுமில்லை . இன்றைய நாகரிகம், சுதந்திரம் என்னும் பெயரால் பெண்களின் 'உடை' கலாச்சாரம் இருக்கின்றது என்பதையும்  நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். நாம் வாழ்கின்ற இடத்திற்குப் பொருந்தக் கூடிய உடைகளே நமக்குப் பாதுகாப்பானது என்பதைப் பெண்கள் உணர வேண்டும். மற்ற நடவடிக்கைகளும் அப்படியே. மேல்நாட்டு நாகரிகம் என்ற பெயரால் இன்று நம் நாட்டில் புகுந்துள்ள பல கலாச்சாரச் சீரழிவுகளே எல்லா கேடுகளுக்கும் காரணம். மேல்நாட்டினரைப் பார்த்துப் பின்பற்ற வேண்டிய, காலம் தவறாமை, தூய்மை,சுற்றுப்புறச் சூழல் போன்று எத்தனையோ ஆரோக்கியமான பண்புகள் இருக்கும்போது, குளிர்  நாடுகளில் வாழும் அவர்களைப்போல் உடையணிவதும் கொண்டாட்டங்கள் செய்வதும் நம் சமுதாயத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கின்றன. ஆண் பெண் யாராக இருந்தாலும் அவரவர் மனம்போல் வாழலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பண்பாடு, கற்பொழுக்கம் என்பதெல்லாம் மேல்நாட்டவருக்குப் பெரிதில்லை. அதனால் உடை விஷயத்திலும் அவர்கள் அப்படியே. ஆனால்  நாம் ஒரு கட்டுக்கோப்பான கலாச்சாரத்தைச் கொண்டிருப்பதனால் பெண்மைக்குக் களங்கம் ஏற்படுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆண்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதுபோல் உடையணிவதும், சுதந்திரம் என்ற பெயரில் நேரம் கேட்ட நேரங்களில் வெளியில் சுற்றித் திரிவதும் நல்லதல்ல.
உலகில்  இன்று எல்லாப் பொருட்களும் பெண்களை விளம்பரப் படுத்தியே சந்தைப் படுத்தப் படுகின்றன. அரைகுறை ஆடையோடு பெண்களின் அங்கங்களைக் காட்டினால்தான் விளம்பரங்கள் கூடப் பார்க்கப்படும் அவல நிலைதான் நிலவுகின்றது. அன்று பெண்களை அடக்கி, அடைத்து வைத்த சமுதாயம், இன்று,பெண்களுக்குச் சுதந்திரம் உரிமை என்ற பெயரால் மூளைச் சலவை செய்து,அவளின் அங்கங்களை ஆபாசமாக விளம்பரப் படுத்திப் பணம் பண்ணும் செயலில் வெற்றி கண்டுள்ளது. எப்படி இருந்தாலும் பெண் என்பவள் எதோ ஒரு வகையில் ஆணின் அனுபவப் பொருளாகவே இருக்க வேண்டும் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமிருப்பதாகத் தெரியவில்லை. பெண்கள் இதை ஒருநொடி சிந்தித்துத் தமக்குத் தாமே சில வரைமுறைகளை வகுத்துக் கொண்டு எப்போதும் செயல்பட வேண்டும்.  விபத்து எதிர்பாராமல் எப்போதோ  நடப்பது. நாமே தேடிச் செல்வதல்ல. அரசாங்கம் ஆயிரம் பாதுகாப்புத் தந்தாலும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது  நமது கடமை!
திருமதி .சரோசா தேவராசு

Aucun commentaire:

Enregistrer un commentaire