பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 21 mai 2010

நடிப்பு

துணை இயக்குனர் முதல் லைட்பாய் வரை பாராட்டியது கோகுலுக்கு மேகத்தில் பறப்பது போல் இருந்தது. அதுமட்டுமல்லாமல் படத்தின் இயக்குனர் அவனிடம் பேச வேண்டும் என்று சொல்லி ஆள் அனுப்பியதும் இறக்கை மேலும் பெரியதாகியது.

'கோகுல் நீ இன்னைக்கி நடிச்சது ஒன்னும் பிரமாதம் இல்ல. அடுத்த திங்கக்கெழம தேவன் சாருகூட நடிக்கறது தான் பெரிய விசயம். அது இந்த மாதிரி சாதாரணம் கெடையாது. அவர் பெரிய நடிகர். இந்த மாதிரி சான்ஸ் எல்லாருக்கும் கெடைக்காது. அதனால ஒழுங்கா நடி. நீ செய்யிற தப்பால் அவர் டென்ஸனா ஆயிடக்கூடாது. இன்னும் நாலுநாள் தான் இருக்கு. நல்லா நடிச்சி பார். ஒரே டேக்குல ஓ கே ஆயிடனும் என்ன . . டேக்கேர் பாய். .”
சென்றுவிட்டார்.

கோகுலன் வானத்திலிருந்து இன்னும் கீழே இறங்கவில்லை.
தேவன் சார்கூட நடிக்க போறேனா? தமிழுலகத்தின் தலைசிறந்த நடிகர் தேவன்சாருடனா. . அவனால் நம்ப முடியவில்லை. துணை இயக்குனரிடம் ஓடினான். அவர் காட்சியை விளக்கிச் சொன்னார்.
'கோகுல் நீ காதல்ல தோல்வி அடைஞ்சிட்ட. நாலுநாளா சாப்பிடாம தூங்காம மனசாலும் ஒடம்பாலும் தெம்பு இல்லாம இருக்கிற. அந்த எபெக்ட நீ நல்லா காட்டி நடிக்கணும். அப்போ தேவன் சார் உன்ன பாத்துட்டு ஒனக்கு புத்தி சொல்லுவாரு. இதுதான் சீன். டயலாக்கு இந்த தாளுல இருக்குது. இத நீ சரியா நடிச்சிட்டா ஒனக்கு நல்ல பேர் கெடைக்கும். வாழ்த்துக்கள்.”
அவர் கொடுத்த ஸ்கிரிப்டை வாங்கியதும் கோகுல் ஒரு முடிவெடுத்தான்.
இத்தனைப் பேரிடம் பெற்ற பாராட்டு ஒன்றும் பெரிய விசயமில்லை. பெரிய நடிகர் தேவன். நம் நடிப்பைப் பார்த்து அவர் பாராட்ட வேண்டும்.
இந்த சீன் ஒரிஸனலாய் வரணும். அவர் மனமாறப் பாராட்ட வேண்டுமென்றால் நாம் கதையில் வரும் கேரக்டராகவே மாறிட வேண்டும்.
முடிவெடுத்தான். நான்கு நாட்களாகச் சாப்பிடவில்லை. முகம் கருத்தது. கண்கள் குழிவிழுந்தன. முகத்தை தாடி மூடியது. ஸ்கிரிப்டை நன்கு பேசிப் பார்த்து வைத்துக் கொண்டான்.
நான்காம் நாள் ஸ்டுடியோவில் பார்த்தவர்கள் என்னாச்சி? ஏதாச்சி என்று அவனை நலம் விசாரித்தார்கள். அவன் தான் எடுத்த சபதத்தைச் சொன்னான். அதைக்கேட்டு அவன் நடிப்பதற்கு முன்னே அவனைப் பாராட்டினார்கள்.

சரியான நேரத்தில் பிரபல நடிகர் தேவன் வந்ததும் ஸ்பார்ட் சுறுசுறுப்பாகியது. டைரக்டர் ஸ்டார்ட் சொல்ல தேவனுடன் கோகுல் சொன்னபடி நடித்தான். சீன் அவன் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே முடிந்தது. தேவனைத் தவிர அனைவரும் அவனைப் பாராட்டினார்கள். தேவன் பாராட்டாதது கோகுலனைப் பாதித்தது. சீன்கள் முடிந்ததும் தேவன் தயாராகிக் கிளம்பினார்.

கோகுலனுக்கு இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவரிடம் ஓடினான். 'என் நடிப்பு எப்படிசார் இருந்தது” என்று வாய்விட்டு கேட்டான்.

அவர் அவனைத் தீர்க்கமாகப் பார்த்தார். 'உன்னைப் பத்தி டைரக்டர் சொன்னார். இந்தக் காட்சிக்காக நாலு நாளாய்ச் சாப்பிடாமல் இருந்துதான் நடிச்சியாம். தப்புப்பா. இது இல்ல நடிப்பு! ஒருத்தன் எப்போதும் போலவே இருந்து கொண்டு நடிப்புத் திறத்தை ரத்தத்துல ஊறவச்சி உணர்ச்சியில புழிஞ்சி மொகத்துல பாவனையைக் கொண்டு வருவதுதான் உண்மையான நடிப்பு. விஸம் குடிச்சவன் போல நடிக்கணும்ன்னா வெஸம் குடிச்சிட்டு வந்து நடிப்பியா? இனிமேல இப்படி செய்யாதே. நடிப்பு என்றும் நடிப்பாக மட்டுந்தான் இருக்கணும். நடிப்பை வாழ்க்கையாக்காதே. அடுத்த முறை சரியா நடி. பார்க்கலாம்.”

கிளம்பிவிட்டார். நடிப்பின் உச்ச நடிகர் தான் நரம்பில் ஊறிய நடிப்புத் திறத்தை ஓதிவிட்டுச் சென்றது கோகுலனுக்கு மட்டுமல்லாமல் அங்கே கூடியிருந்த அனைவருக்கும் புரிந்தது.

-- அருணா செல்வம்