பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

lundi 30 mai 2011

சிறு கதை

                                        
 அறிந்தும் அறியாமலும் 

"டேய் முரளி. .உன் சித்தி போன் பண்ணினா . .  அவளோட வண்டி நடக்கலை. உன்னை கொஞ்சம் அனுப்ப சொன்னா. . நானும் சரின்னுட்டேன் . போய் கொஞ்சம் பார்த்திட்டு வாடா" இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கும்மகனை எழுப்பினாள் கமலம்.

"ஏம்மா, அந்த சிடுமூஞ்சி சித்திய பாத்தாலே எனக்கு புடிக்காதுன்னு தெரியுமில்லே ? நான் வீட்லே இல்லேன்னு சொல்ல வேண்டியதுதானே!நான் போவமாட்டேன் போ!" மேலும் இழுத்துப் போர்த்திக்கொண்டான் முரளி! 
"டே,அவளேப்பத்தித்   தெரியுமில்லே ? நீ வெளியே போயிருக்கேன்னா. . புள்ளைங்களை வளக்கிற லட்சணம் இதுதானா? காலைலே எங்க ஊர சுத்தப் போயிட்டான்னு என்கிட்ட கத்துவாடா !நீ போய் என்னதான்னு பாத்திட்டு வந்திடு . என்  தங்கமில்லே . .     போர்வையை இழுத்தவாறே மகனிடம் கெஞ்சினாள் கமலம்.       
"இதுங்களுக்கு வேற வேலையே இல்ல . . வண்டி ஒடலேன்னா ஆட்டோவுல போவ வேண்டியதுதானே! எல்லாத்துக்கும் நான் போவணும். அதுவும் அந்த சித்தியை  பாத்தாலே எனக்கு  புடிக்கலே . எல்லாரையும் ஏதாவது  கொறை சொல்லிக்கினே திரியும். இருவத்தொன்னாம் நுற்றாண்டில் பொறந்து வந்த பட்டிக்காடு. எந்தப்பொண்ணும் எந்த ஆம்பிளயோடும் பேசக்கூடாது. ஆம்பிளையை பாத்தாக்கூட அவ தப்பான பொண்ணுன்னு முடிவு பண்ணிடறது. தவறிப்போய் ஏன் ப்ரெண்டுங்க யாராவது ஒரு அலோ  சொல்லிடட்டுமே . . அவ்வளவுதான். என் தலையும் அந்தப்பொண்ணோட தலையும் ஒண்ணா சேர்த்து உருட்டப்படும். அது மட்டுமா? அன்னைக்கு முழுசும் எனக்கு அறம் பாடப்படும். சரியான பட்டிக்காடு. சந்தேகப்பிராணி . பாவம் சித்தப்பா. இந்தச்  சித்திக் கொடுமையினாலே குனிஞ்ச தல நிமிராத பொண்ணுமாதிரி ஆயிட்டார்.   அவருக்காகத்தான் எல்லாத்தையும் பொருத்துக்கிறேன். அவன் பாட்டுக்கு சித்தியை திட்டிக்கொண்டே  கிளம்பினான்.      
"வா முரளி. காலைலே ஒன்பது மணிக்கு போன் பண்ணினேன் .நாலு தெரு தள்ளியிருக்கிற வீட்டிலிரிந்து வர ஒனக்கு ஒரு மணி நேரும் ஆயிருக்கு. என் வண்டிய மெக்கானிக் எடுத்துக்கிட்டு போயிட்டான். இன்னைக்கு சண்டே . நாளான்னிக்கு சௌமியாவுக்கு பிறந்த நாள் . அவளுக்கு துணி எடுக்கணும். கிப்ட் வாங்கணும் . பத்து வயதாகிறதா? அவ எல்ல பிரேண்டையும் கூப்பிடணுமாம். ஒன் சித்தப்பா அவர் தங்கச்சி வீட்டுக்கு போயிருக்கிறார். ஏதோ பிரச்சனையாம். காலையிலேயே போன் பண்ணிட்டா. நெறைய வேலையிருக்கு வா, ஒன் வண்டிலேயே போயிடலாம்.    
சித்தி பேசிக்கொண்டே வண்டியில் ஏறி உட்கார்ந்தாள் . முரளி வாய்திறக்காமல் வண்டியைக்  கிளப்பினான். நாலைந்து கடை ஏறி இறங்கி குழந்தைக்குத் துணி எடுத்தாள், மளிகைப் பொருட்கள் வாங்கினாள்.

வெயில் கொளுத்தியது.ஏதாவது ஜூஸ் குடிக்கலாம் என்று ஒரு ஓட்டலுக்குள் நுழைந்து அமர்ந்த பிறகுதான் பார்த்தாள்,எதிர் வரிசையில் அவள் ஆபிசில் வேலை செய்யும் கோகுலன் ஒரு பெண்ணுடன் சிரித்து பேசியவண்ணம் ஐஸ் கிரீம் சாப்பிடுவதை!   

அந்தப்  பெண்ணை உற்று நோக்கினாள். அவள் அவன் மனைவி கிடையாது. ஆனால் அவன் மனைவியைவிட இளமையாக அழகாக இருந்தாள்.அவள் அவனுடன் பேசிச் சிரித்தது இவள் காதில்   ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது  போல இருந்தது. அதைப் பொறுக்க முடியாமல் சட்டென்று எழுந்து "வா நாம இளநீர் குடிக்கலாம்" என்று அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வெளியே நடந்தாள்.  

முரளி கோபத்துடன் அவளைப் பின்தொடர்ந்த்தான். அவனும் தன் சித்தி எதிர் வரிசையில் இருந்தவர்களைப் பார்த்து முகம் சுருக்கியதைக் கவனித்தான். இன்றைக்கு சித்தி வைக்கு அவலாக இவர்கள் கிடைத்துவிட்டார்கள் என்று அவனுக்கு அப்போதே புரிந்து போயிற்று.  

அவ நினைத்ததைப் போலவே கையில் இளநீரை வைத்துக்கொண்டு, அதைக் குடிக்காமல் அவர்களைத் திட்டித் தீர்த்தாள். "ஏன் இப்படி நாடு  கெட்டுப் போய்விட்டது? பெண்கள் ஏன் அடுத்தவள் புருஷன் மேல் ஆசைப்படுகிறார்கள்?ஆண்கள் புத்தி சபலம் கொண்டது என்று தெரிந்தும் அவர்களைக் கெடுப்பதே இந்தப் பெண்கள்தான். . பெண்ணுக்கு பெண்தான்எதிரியே. ஆண்கள் நல்லவர்களாக வாழ நினைத்தாலும் பெண்கள்தான்  அவர்களை மயக்கி விடுகிறார்கள் "   




அவள் அவர்களைத் திட்டத்திட்ட இளநீரே சூடாகி இருக்கும். முரளி எதுவும் பேசாமல் குடித்தான். பிறகு எப்படியோ வண்டியில் ஏறி அமர்ந்தாள். கையில் துணிக்கடைப் பைகள், மளிகைச் சாமான் பைகள்,
காய்கறிப் பை என்று ஏகப்பட்டது இருந்தது. எல்லாவற்றையும் பிடித்துக்
கொண்டு, கட்டியிருந்த சிபான் புடைவையும் வழுக்கிவிடாதவாறு யமகா
வில் எது எங்கே விழுந்து விடுமோ என்று பார்த்துப் பார்த்துப் பிடித்துக்
கொண்டு வீடு வந்து சேரவே போதும் போதும் என்றாகிவிட்டது மஞ்சுளா
விற்கு. வீடு வந்ததும் முரளிக்கு வாங்கிய டீசர்டைக் கொடுத்ததும் அவன்
விட்டது போதுமடா சாமி என்று வீட்டிற்கு ஓடினான்.

அன்று நாள் முழுவதும் தன் கணவனிடம் இதே பேச்சு!  காலையில் அந்தாளைப் பார்த்தால் வணக்கம் கூட சொல்லக்கூடாது. அழகான பெண்கள் கிடைத்தால் உடனே கட்டிய மனைவியை மறந்து விட எப்படித்
தான் இந்த ஆண்களுக்கு எண்ணம் வருகிறதோ... இந்த பொம்பளைங்களையும் சும்மா சொல்லக்கூடாது. ஆண்களிடம் எப்படிப்
பழக வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல்...ச்சே! என்ன சென்மங்களோ!

மறு நாள் அலுவலகத்தில்...  "குட் மோர்னிங் மேடம்" என்ற கோகுலனுக்கு
பதில் வணக்கம் சொல்ல மனம் வரவில்லை மஞ்சுளாவிற்கு. பேசாமல்
முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றாள். இவள் குணம் ஓரளவு தெரிந்ததால்
அவன் யோசனையுடன் நகர்ந்தான்."குட் மோர்னிங் மஞ்சு, எப்படி இருக்கிறீங்க  
நேத்து ஷாப்பிங் வந்தீங்களா! நான் உங்களைப் பார்த்தேன், ஆனால் நீங்க
என்னைக் கவனிக்கலை". உடன் வேலை செய்யும் மேனகா சிரித்தபடி
சொன்னாள். "ம்" என்று தலையை மட்டும் ஆட்டிவிட்டு தன வேலையை
கவனிக்க ஆரம்பித்தாள் மஞ்சுளா. அவளுக்கு எல்லோரிடமும் சிரித்து
கலகலப்பாகப் பேசும் மேனகாவைக் கண்டாலே பிடிக்காது." சிரிப்பைக் காட்டி எத்தனைப் பேரை வளைத்துப் போட்டாளோ! இவளிடம் என்ன
பேச்சு வேண்டி இருக்கிறது!"

"என்ன மேனகா, உங்களுக்கும் குட் மோர்னிங் சொல்லலையா? ரொம்ப
களைப்பா இருக்கும். நேற்று பூரா அந்தச் சின்னப் பையன் கூட ஓட்டம்
இல்லையா?" கோகிலன் சொல்லவும், "வாயை மூடுங்க சார், என்ன பேச்சு
பேசுறீங்க!" என்றால் மேனகா கோபத்துடன்.

"ஏன்? நான் உண்மையைத்தான் சொல்றேன்! நேத்து என்னோட திருமண
நாள். ஏன் மனைவி, தங்கைகள் என்று குடும்பத்தோட ஓட்டலுக்கு போயிருந்தோம். அப்போ அவங்களும் அந்தப் பையனும் வந்தார்கள்.
என்னைப் பார்த்ததும் அச்சப்பட்டுக்கொண்டு பார்க்காதது போல போய்விட்டார்கள். அந்தப் பையனோடு வண்டியிலே என்னம்மா ஒட்டி
ஒரசிக்கிட்டு...சேச்சே!  என் மனைவி அதைப் பார்த்திட்டு இனிமே அவகூட
பேச்சே வச்சிக்காதீங்கன்னு சொன்னா! இவ என்னமோ பத்தினி வேஷம்
போடுறா!"

"கோகுலன் வாய மூடுங்கள். அவன் அவங்களோட அக்கா பையன். அவனோடயா சேர்த்து வச்சி பேசுவீங்க? ஒருத்தரை சந்தேகப்பட ஒரு
வரைமுறை இல்லையா? மேனகாவின் வார்த்தையில் கோபம் கொப்பளித்தது.

"ஏன் அவங்க எல்லோரையும் வரைமுறை பார்த்தா சந்தேகப்படறாங்க?

 அவன் அவங்க அக்கா பையன்னு நீங்க சொன்னதால தெரியுது. எல்லாருக்கும் தெரியுமா? அவங்க எல்லாரையும் விஷம் கலந்து பார்க்கும்
போது அவங்க செய்யறத மட்டும் மற்றவங்க நல்ல கண்ணோட்டத்தோட
பார்ப்பாங்களா?"

கோகுலன் பைலை எடுத்துக்கொண்டு நகர்ந்தார், அங்கே நின்று கொண்டிருந்த மஞ்சுளாவைப் பார்த்தும் பார்க்காதவர் மாதிரி. மேனகா
மஞ்சுளாவைக் கண்டதும் என்ன செய்வதென்று தெரியாமல் அசட்டுச்
சிரிப்புடன் நெளிந்தாள். தன் தவறை முதன் முறையாக உணர்ந்த
மஞ்சுளா அவளைப் பார்த்து சிநேகமாய் புன்முறுவல் பூத்தாள்.

அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் தவறென்பது தவறுதான்.
எதுவுமே தனக்கென்று வரும்போதுதான் நன்மைகளும், தீமைகளும்
விளங்கும்.

அருணா செல்வம்