புத்தர் பெருமான், "உலக வாழ்க்கைத் துன்பங்களுக்குக் காரணம் ஆசையே! ஆசையை ஒழித்துவிட்டால் துன்பங்களை நீக்கி மன அமைதியும் ஆனந்தமும் அடைய முடியும் . தீமைகளைத் தவிர்த்து , நன்மைகளைச் செய்துவந்தால் ஆசை அகன்று விடும் " என்னும் தத்துவத்தைப் போதித்தவர் .இவர் போதனைகளைப் பின்பற்றுவோர் "பௌத்தர்கள் " என்று அழைக்கப்படுகின்றனர்.
புத்தர் , நேபாளத்தில் கபிலவஸ்து அருகில் 'லும்பினிக் ' நகரில் கி .மு566 இல் மேத்திங்கள் முழுமதி நாளில் சாக்கிய நாட்டு மன்னர் 'சுத்தோதனார்'- மாயாதேவி' தம்பதியினருக்கு மகனாய் உதித்தார் . பெற்றோர் இவருக்கு "சித்தார்த்தர் " எனப் பெயரிட்டனர் . யசோதரை என்னும் இளவரசியை மணந்து , இராகுலன் என்ற மகனைப் பெற்ற அவரது வாழ்க்கை அவருடைய 29 ஆம் அகவையில் பெரும் மாற்றம் கண்டது.
நகர் உலா சென்ற ஒரு நாளில் வயது முதிர்ந்த ஒருவரையும், நோயாளி ஒருவரையும் பிணம் ஒன்றையும் காண நேர்ந்த சித்தார்த்தர், மனித வாழ்க்கையின் பிணி, மூப்பு, சாக்காடு, துன்பம் இவற்றைப் பற்றியும் அதன் காரணங்களைப் பற்றியும் ஆராயத் தொடங்கினார்.துறவறம் பூண்டார் . வைசாலி-அலாரா, இராஜ கிரகம் உருத்திரிகா ஆகியோரிடம் பாடம் கேட்டார் . 'உருவேலா' என்னும் இடத்தில் தவம் மேற்கொண்டார் .
தனது 36 ஆம் வயதில் "நைரஞ்சனா" ஆற்றுக் கால்வாயில் புனித நீராடி , "கயா" என்னும் இடத்தில "போதி" மரத்தடியில் (அரசமரம் ) அமர்ந்து கடும் தவம் புரிந்தார். அங்கு அவருக்கு "ஞானப் புத்தொளி " தோன்றியது . அன்று முதல் அவர் "புத்தர் " (ஒளி பெற்றவர்), "ததாகதர் " (உண்மையை அறிந்தவர் ), "சாக்கிய முனிவர் " என்று அழைக்கப்பட்டார் . தன் ஆசையையும், தான் , தனது என்ற அகந்தையையும் வென்ற "நிர்வாண நிலை"யை அடைந்தார்.
45 ஆண்டுகள் தன் கொள்கையைப் போதித்த புத்தர் தமது 80 ஆவது வயதில் இந்தியாவில் உத்திரப்பிரதேசம் 'குஷி' நகரில் இறைவன் திருவடி சேர்ந்தார் . அவர் தன்னை ஒரு தேவன் என்றோ , கடவுளின் அவதாரம் என்றோ கூறிக்கொண்டதில்லை . தான் 'புத்த நிலையை அடைந்த மனிதன்' என்றும், மானிடர் அனைவரும் அந்நிலையை அடைய முடியும் என்றும் தெளிவாக வலியுறுத்தினார் . பௌத்த சமயம் இந்தியா , நேபாளம் ,திபெத் , ஸ்ரீலங்கா , சீனா, ஜப்பான்,தாய்லாந்து மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் பரவியது.
"அட்டசீலம்" (எண்வகை வழிகள் ) மூலம் ஆசைகளை ஒழித்து, துன்பத்திலிருந்து விடுபடலாம் என்றார் புத்தர்.
- நல்ல நம்பிக்கை: ஏழ்மை , நோய், மூப்பு, இறப்பு ஆகியவற்றிளிந்து விடுபடல் வேண்டும் என்ற நம்பிக்கை கொளல்.
- நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டு ஒழிக்கவும், சினத்தை அகற்றவும் ஒருவருக்கும் தீமை செய்யாமல் இருக்கவும் தீர்மானித்தல்.
- நல்ல வாய்மை: பயனற்றதும், கடுமையானதும் , பொய்யானதுமான சொற்களைக் கூறாதிருத்தல்
- நற்செய்கை : பிறரைத் துன்புறுத்தாமலும் (அஹிம்சை) , களவாடாமலும், நன்னெறி தவறாது இருத்தல்.
- நல்வாழ்கை: பிச்சை எடுத்து வாழ்தல்.
- நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.
- நற்சாட்சி: சிற்றின்ப ஆசையையும் , துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடன் இருத்தல்.
- நல்ல தியானம்: குறிக்கோளை அடைய மனம் ஒருவழிப்பட்டு சிந்தித்தல் .