அன்புடையீர்,
2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கம்பன் கழக மகளிரணி, எங்கள் செயற்குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த , கரம் கோத்த உழைப்பினாலும் அறிவார்ந்த செயல்பாடுகளாலும் இன்று தனது இரண்டு ஆண்டுகளுக்கு மேலான ஆக்கப்பூர்வமான நிகழ்வுகளை நிறைந்த மனதோடு நினைவு கூறுகிறது. நாங்கள் ஆர்வத்தோடு நட்ட தளிர் வேரூன்றி விட்டதை மகிழ்வோடு கண்டு களிக்கிறோம்.
கடந்த 28 -5 -2011 அன்று நாங்கள் நடத்திய "மகளிர் விழா" வின் பூரண வெற்றி எங்கள் உற்சாகத்திற்கு மேலும் நீர் வார்த்திருக்கிறது . அரங்கம் நிரம்பி , மக்களுக்கு வெளியே நிற்கும் நிலை ஏற்பட்டதற்கு வருந்தினாலும் , அவர்களது ஆதரவினைப் பெற்றுவிட்ட ஆனந்தம் எங்களை சூழ்ந்திருகிறது . குழந்தைகளையும் , பெண்டிரையும் கருத்தில் நிறுத்தி அவர்கள் திறமைகளை வெளிக்கொணரவும் , சமுதாயப் பிரச்சனைகளை பல்வேறு கோணத்தில் ஆராய்ந்து மக்கள் முன் படைக்கவும் நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளே இந்த வெற்றியைத் தந்திருக்கிறது என்றால்அது மிகை அல்ல.
இந்தக் குறிக்கோளுக்காக எங்களோடு ஒத்துழைத்த அனைவரையும் நாங்கள் நன்றியோடு நினைவு கூறுகிறோம் . இனி வரும் காலங்களிலும் அவர்களது ஒத்துழைப்பு நிச்சயம் எங்களுக்கு உண்டு என்றும் நம்புகிறோம் . அதையே வேண்டுகிறோம்.
"அன்னை தெரேசா "வை எங்கள் இலட்சிய நாயகியாகக் கொண்டுள்ள மகளிரணி , அவர்களது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய இந்த வேளையில், அவர்கள் பாதையில் சேவை புரியவும் முடிவெடுத்திருக்கிறது என்பதை களிப்போடு தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் மீது நம்பிக்கையும் , அன்பும் கொண்டவர்களின் உதவியால் இந்த எண்ணம் நிச்சயம் செயலாக உருப்பெறும் என்பதில் ஐயமேதும் இல்லை .
நன்றி.
திருமதி. சிமோன்