பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 31 mars 2015

எண்ணப் பரிமாற்றம்


அன்புடையீர்,

வணக்கம். "மனச் சோர்வு" (Depression) - இன்றைய யுகத்தின் தவிர்க்க இயலாத சொற்றொடர்! ஆண்-பெண் பேதமின்றி, வயது வித்தியாசமின்றி எல்லாரையும் ஆட்டிப் படைக்கிறது. மருத்துவ உலகில் வெகு சாதாரணமாக, சுலபமாக சூட்டப்படும் ஓர் நோயற்ற, பயங்கரமான விளைவுகளை அளிக்கக் கூடிய நிலை! இதனால் பாதிக்கப்பட்டோர் உடலால் வலியையோ, துன்பத்தையோ உணர்வதில்லை. மன வலிமையற்று, இடர்களைத் தாங்கவொண்ணாமல் துவண்டு போகிறார்கள். இவர்களுக்கு மருந்தே தன்னம்பிக்கையும், உற்சாகமும்தான்.

இன்றையக் காலச் சூழல், படிப்பிலும், வேலையிலும் போட்டியிட்டு வெற்றி காண்பதில் மட்டுமே அடங்கி உள்ளது. அவை இரண்டிலும் வாகை பெற வெறும் அறிவும், உழைப்பும் மட்டுமே இருந்தால் போதாது. இவை பிரகாசிக்க, சந்தர்ப்பமும் கிட்ட வேண்டும். அது எல்லாருக்கும் கிடைத்துவிடும் என்பதற்கு உத்தரவாதமில்லை. 

முன்பும் இவ்வாறு படிக்க விரும்பியும் முடியாமல், ஆசைப்பட்ட வேலை கிடைக்காது கிடைத்த வேலையில் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்! அவர்கள் அனைவரும் எப்படி இந்த மனச்சோர்விலிருந்து தப்பித்தார்கள்?

ஏனெனில் போதுமென்ற மனதை, உறவுகளுக்காக விட்டுக் கொடுத்து தியாகம் செய்யும் பண்பை, சூழ்நிலை மாறினால் அதற்கேற்பத் தன்னைப் பக்குவப் படுத்திக் கொள்ளும் திடத்தை, காத்திருக்கும் பொறுமையை, அறிவு சார்ந்து முடிவெடுக்கும் நேர்மையை அவர்கள் கொண்டிருந்தார்கள்.

இன்று வீடுகளில் இவற்றைப் போதிக்க, பெற்றோருக்கு நேரமில்லை. பள்ளிகளில் விஞ்ஞானத்திற்கும், கணிதத்திற்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம், நற்போதனைகளுக்கில்லை. சமூகத்தில் ஓர் இலட்சியவாதியாக உலவ, உதாரணங்கள் இல்லை. வரலாற்றைப் படிக்கவோ, ஓர் புத்தனை, காந்தியை, இயேசுவை பிரதிபலிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தூண்டவோ கூட இங்கே யாருக்கும் நேரமோ, அது பற்றிய சிந்தனையோ இல்லை.

சிறு வயது முதல் இங்கே ஓர் குழந்தை காண்பது - சம்பாதித்து பணம் சேர்த்து, சுய நலமாய் தங்கள் தேவைகளை வளர்த்து நிறைவேற்றிக் கொள்வதைத்தான். விளையாட்டு முதற்கொண்டு அவர்கள் அறிவது மற்றவர்களைப் பின்தள்ளி விட்டு, முன்னேறுவதை மட்டும்தான். உலகப்  பரிமாண வளர்ச்சியில் வெற்றி பெறும் இனமே நிலைக்க முடியும் என்கிற எண்ணம் மட்டுமே விதைக்கப்படுகிறது.

இதன் பலன், எதைச் செய்தாவது உச்ச நிலை அடைய வேண்டும் என்ற வெறி, கூடக்குறைய எல்லார் மனங்களிலும் நிரம்பி இருக்கிறது. அதில் தோல்வியுறும்போது ஒன்று சுய கழிவிரக்கத்தையோ அல்லது அதற்குக் காரணமானவர்களைத் துன்புறுத்தும் வன்மத்தையோ பெறுகிறார்கள். தேர்வில் தோற்றவன் தற்கொலை செய்து கொள்கிறான். தன்னை ஒருத்தி ஏற்கவில்லை என்பதற்காக அவளையே அழிக்கிறான். இதற்கு முன்னேற வழியின்றித்  தன்  வாழ்வை முடித்துக் கொண்டான் என்று   பரிதாபப்படுவதிலோ அன்றி காதலித்தவள் (அவன் கொண்டது காதலே அல்ல. ஒருத்தியை உளமார நேசித்திருந்தால், அவளையே நசித்தழிக்க எப்படி மனம் வரும்?) கிடைக்காத ஏக்கத்தில் புத்தி பேதலித்து விட்டான் எனச்  சமாதானம் சொல்வதிலோ அர்த்தமும் இல்லை, நியாயமும் இல்லை. 

"பெரிய பாறை மீது யாரும் மோதிக்கொள்வதில்லை. சிறிய கற்களே இடற வைக்கின்றன" என்றார் அபிரகாம் லிங்கன். வாழ்க்கையில்  வெயிலும், மழையும் எவ்வளவு இயற்கையானதோ அவ்வளவு வெற்றி தோல்வியும், இன்ப துன்பமும் இயற்கையானது. அவற்றை எதிர்கொள்ளும் பக்குவத்தில்தான் தரமும், உயர்வும் உள்ளன. சில நேரங்களில் உள்ளமே உடைந்தது போன்ற  நிலை வரலாம். அவ்வேளைகளில் நிதானமாக பிரச்னையை அணுகி, பல கோணங்களில் அதை  ஆராய்ந்து, நம்மால் செய்யக்கூடியது ஏதேனும் இருந்தால் உடனடியாகச் செய்து அதிலிருந்து மீளலாம். செய்வதற்கு எதுவுமே இல்லாதபோது அதை காலத்தின் அல்லது கடவுளின் கைகளில் விட்டு விட்டு மன அமைதியைத் தேடுவதே சிறந்தது.

சிக்கல்களை தீர்வு காணாமல் புறந்தள்ளுவதோ, அவைகளை சுமந்த வண்ணம் வாழ முயல்வதோ மன பாரத்தைத்தான் ஏற்றும். அடிபட்ட வேதனையில் மருந்திடாமலோ, நடக்க முயற்சிக்காமலோ புலம்பிக்கொண்டிருப்பது எந்த வகையில் உதவும்? காலே இல்லாதவன் என்ன செய்வான்!?

மனதை  வசத்தில் வைத்திருப்பது ஞானிகளின் வேலை மட்டுமல்ல. நமது வாழ்க்கையை நமக்கோ அல்லது பிறருக்கோ பயனுள்ள முறையில் நடத்திச் செல்ல வேண்டுமென்றால், மனதையும், அதில் தோன்றும் எண்ணங்களையும், அனுபவங்களால் ஏற்படும் உணர்வலைகளையும் ஓர் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

இப்படி நம்மை நாமே வென்று விட்டால் சிதையும் மனமும் சீராகும்! எதற்கும் அஞ்சாதத் திடமும் கைகூடும். உறுதியடைந்துவிட்ட  உள்ளத்தில் பிறக்கும் அமைதியும், பெருமிதமும், இன்பமும், உலகைத் தனதாக நோக்கும் ஆண்மையும் வாய்த்தப்  பிறகு இங்கு நம்மை வெல்ல யாருமில்லை!

திருமதி சிமோன்

Aucun commentaire:

Enregistrer un commentaire