பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mardi 31 mars 2015

இன்றைய அறிமுகம்



                  கோபால்சாமி துரைசாமி நாயுடு ( 23 03 1893 - 04 01 1974)  ஜி.டி. நாயுடு என்று அழைக்கப்பட்ட இவர் தமிழகம் தந்த அறிவியல் மேதைகளுள் ஒருவர்.  கோயம்புத்தூர் மாவட்டம், கலங்கல்  கிராமத்தில்  சாதாரண குடும்பத்தில்  இவர் பிறந்தார்.எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கிப் படித்துத் தன் அறிவுத் திறனை வளர்த்துக்கொண்டார்.தன்  பேரறிவாலும் உழைப்பாலும் எண்ணற்ற சாதனைகளைப் புரிந்ததால் 'இந்தியாவின் எடிசன்' என்று அழைக்கப்பட்டார்.

உயர்ந்த படிப்பு இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்று நம்மில் பலர் நினைப்பதுண்டு, ஓயாத உழைப்பினாலும் உயர்ந்த இடத்தை அடையலாம் என்பதை  ஜி.டி.நாயுடுவின்  வாழ்க்கை நமக்குக் கற்றுத் தருகிறது.ஏழைகளிடம் அன்பும்  இரக்கமும் கொண்ட இவர் அவர்கள் நலனுக்காகப் பாடுபட்டார்.

டெக்னாலஜி என்பது எளியவனுக்கு எட்டாத உயரம் என்பதை மாற்றி எளிமைப்படுத்தியதுதான் உயர்திரு.ஜி.டி. நாயுடுவின் சாதனை. வெளி நாட்டுப் பொருள்கள்தான் தரமானவை, இந்தியத் தயாரிப்புகள் தரமற்றவை என்னும் எண்ணத்தை மாற்றியது மட்டுமல்லாமல் உலக விஞ்ஞானிகள் வரிசையில் இந்தியர்களும் இடம் பெற முடியும் என்பதை நிரூபித்தவர் ஜி.டி.நாயுடு.இவரைக் ககண்டு வெள்ளையர்கள்  வியந்தார்கள்! உலக அரங்கில் தமிழனைத் தலை நிமிர வைத்தார்.

பாராட்டுகள்:

‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார்.
‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள்  அளப்பரியா மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் அறிஞர் அண்ணா.
'கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் சர். சி.வி.ராமன்.

இவர் தொடக்கத்தில்  சிறிது காலம் பருத்தி வணிகம் செய்துவந்தார். அதில்   இழப்பு ஏற்பட்டதால்  அப்போது மோட்டார், லாரி, பேருந்து போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த வெள்ளைக்காரான் ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்குச் சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி அறிந்திருந்ததால்   பேருந்து ஒன்றைக்  கடனாகக் கொடுத்துத் தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியைத் தனக்கு அளிக்க வேண்டும் என்றார். முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன்முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கினார் நாயுடு. தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு, வேறு சிலரையும் சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் (UNS)  என்ற நிறுவனத்தைத் துவக்கினார். அந்நாளிலேயே பயணிகளுக்கான வசதிகள், ஓட்டுநர்களுக்குத் தங்கும் இடம் போன்றற வசதிகள் செய்யப்பட்டிருந்தன.  அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்துப் பேருந்து நிலையங்களில் வைத்துச் சாதனை படைத்தார். பயணச் சீட்டுத் தரும் தானியங்கி , ரேடியேட்டர் அதிர்வுக் கருவி, பேருந்து வழித்தடக் கருவி என வியத்தகு இயந்திரங்களைக் கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்திப் பெருமை சேர்த்தார்.

1938 -ஆம் ஆண்டு, பதினெட்டு லட்சம் உரூபாக்கள் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்துகளைக் கோவை வட்டாரக் கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.

தொழில் துறையைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்துடன் ஜி.டி.நாயுடு 1932 -இல் முதன்முறையாகச்  செர்மனிக்குச் சென்றார். அங்கு ஹெயில்ப்ரோன் எனும் நகரில் உள்ள தொழிற்சாலைக்குச் சென்று பார்வையிட்டார். தொழிற்சாலை நிர்வாகியை அணுகி, தமது ஆராய்ச்சிக்கு வாய்ப்புத் தரும்படி கேட்டுக் கொண்டார். நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்கவே, பிளேடு செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் கண்டார்.
இவரது கண்டுபிடிப்பான அந்த பிளேடு, 1/200 குறுக்களவே கொண்டது. அதை இரண்டு வருடங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். 200 தடவை அதன் மூலம் சவரம் செய்து கொள்ளலாம். உலகில் நடந்த பல கண்காட்சிகளில், இவரது கண்டுபிடிப்பு முதல் பரிசைத் தட்டிச் சென்றது. 1936 -ஆம் ஆண்டு செர்மனியில் நடந்த பொருட்காட்சியில், ஜி.டி.நாயுடுவிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மேலும், அமெரிக்கா, யப்பான் போன்ற மேலை நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்.
நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் காப்புரிமத்தை  ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படிக் கேட்டும் அவர் மறுத்துவிட்டார். தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வேயிலிருந்து    தருவிக்கப் பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அவரது முயற்சி கைகூடவில்லை.

பல்துறை வல்லுநரான இவர், கோவை மாநகரின் இன்றைய கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் என்றால் மிகையாகாது.தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்குப் பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்குத் தன்னால் இயன்ற அளவுக்குப் பொருளுதவி செய்தது மட்டுமல்லாது தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை அவர்களுக்கு  அறிவுறுத்தினார்.தொழில்நுட்பக் கல்வி மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த நாயுடு, 1945 -இல் இந்தியாவில் முதல்முறையாக, முறைப்படுத்தப்பட்ட தொழில்நுட்பப் (பாலிடெக்னிக்) பயிலகத்தைத் தொடங்கி, அதன் முதல்வராகச் செயல்பட்டார்.அதே ஆண்டில் சர் ஆர்தேர் ஹோப் பொறியியல் கல்லூரியை ஆரம்பித்தார்.அக்கல்லூரிதான்  இன்றைய அரசினர் பொறியியல் கல்லூரியாகும்.அவர் உருவாக்கிய பாலிடெக்னிக்கில் 45 நாட்களில் ஆட்டோ மொபைல் இன்ஜினியர்களையும், 42 நாட்களில் ரேடியோ இன்ஜினியர்களையும் உருவாக்கிக் காட்டினார்.நாயுடுவின் வெளிநாட்டுப்  பயணத்தின்போது பல நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன.

கோவையைச் சேர்ந்த தொழில் அதிபராக விளங்கிய இவர் தன்   அயராத உழைப்பால் பல அரிய பொருட்களை கண்டுபிடித்து இவ்வுலகிற்கு வழங்கினார்.1937 -இல்  தமது நண்பருடன் சேர்ந்து இந்தியாவின்முதல் மின்சார மோட்டாரை உருவாக்கினார். மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இந்தியாவில் கோவையிலேதான் முதலில் துவக்கப்பட்டது இப்  பெருமை அவரையே சாரும்.
ஐந்து வால்வுகள் கொண்ட ரேடியோ, ஓட்டுப் பதிவு எந்திரம், மண்ணெண்ணெயால் இயக்கப்படும் காற்றாடி, பழரசம் பிழியும் கருவி, திரைப்படக் காமிராக்களில் தூரங்களுக்கேற்ப சரி செய்து கொள்ளும் கருவி எனப்  பட்டியல் நீளும்.
இரண்டு இருக்கைகள் உள்ள சிறிய ரகக் கார் ஒன்றை 2,000 ரூபாய்க்குத் தயாரிக்க முடிவு செய்து 1952 -இல் அதன் புளு பிரிண்டையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். இதற்கு  மத்திய அரசு ஆதரவும் அனுமதியும் கொடுத்திருந்தால் நானோ காருக்கு முன்பு நாயுடு கார் வந்திருக்கும்.


விவசாயத்தில்  எண்ணற்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல புதிய ஒட்டு இரகங்களை (hybrid) உருவாக்கினார்.வழக்கத்தைவிட நீண்ட இழைகள் தரும் பருத்தியைக் கண்டுப்பித்து அதன் விதைகளைப் பத்து  10 உரூபாக்களுக்கு விற்றார்.செர்மானியர்கள் இதனை வாங்கிக் கலப்பினம் தயார் செய்து அதற்கு "நாயுடு காட்டன்" எனப் பெயரிட்டனர். நாயுடு கண்டுபிடித்த பப்பாளி விதைகள் உலகம் முழுவதும் அனுப்பபட்டன. அவர் கண்டுபிடித்த பப்பாளி மரங்கள், பூசணிக் காய் அளவுள்ள பப்பாளிக் காய்களைக் கொடுத்தன. அதோடு அவர் கண்டு பிடித்த அவரைச் செடி, மரம் போல் வளர்ந்து நல்ல பலனைத் தந்தது.
விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சுப் பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு அவை வளர்ந்தன. சாதாரண சோளச் செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருக்கும். ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள் இருந்தன!

இவருக்குச் சித்த வைத்தியத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. நாயுடு தயாரித்த நீரிழிவு,ஆஸ்துமா,வெள்ளை படுதல் போன்ற நோய்களுக்கான மருந்தை அமெரிக்க நிறுவனமான ஸ்பைசர் பெற்றுக்கொண்டது.

ஜி.டி.நாயுடு  ஒளிப்படக் (போட்டோ) கலையில் அதிக விருப்பம் உள்ளவர். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில், மேல் நாட்டு வகையைச் சேர்ந்த சிறிய காமிராவால், அவரே படம் எடுத்து விடுவார்.  1935  -இல் லண்டனில் நடைபெற்ற மன்னர் 5 -ஆம் ஜார்ஜ் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுப் படம் பிடித்தார்.பெரும் தலைவர்களான மகாத்மா காந்தி, சவகர்லால் நேரு,சந்திர போஸசு இவர்களையும் படம்பிடித்து இருக்கிறார்.

தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவை எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றைத் தன் பெயரில் பதிவு செய்துகொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாகப் பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.
இந்திய அரசாங்கம் அவரைக் கண்டுகொள்ளவேயில்லை.

நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்குப் பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.மனம் உடைந்து போன நாயுடு அரசாங்கத்துக்குக் கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.
பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்குச் செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்து போன நாயுடு அமெரிக்க நிறுவனம் ஒன்று அவருடைய கண்டுபிடிப்பிற்குப் பத்து லட்சம் டாலர் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்.

கோவைத் தொழில் வர்த்தக சபைக் கட்டிடம் கட்டுவதற்கு 5000 சதுர அடி இடத்தை இலவசமாக அளித்துள்ளார்.மேலும் சிறு தொழில்கள் சங்கம் செயல்பட இலவசமாக இடம் கொடுத்தார்.அதனால்தான் தற்பொழுது கோவை மாவட்டச் சிறு தொழில்கள் சங்கம்(கொடிசியா -CODISIA) அவர் பெயர்தாங்கி நிற்கின்றது.

ஜி.டி.நாயுடுவுக்குச் செல்லம்மாள், ரெங்கநாயகி என்று 2 மனைவிகள். முதல் மனைவிக்குக் கிட்டம்மாள், சரோசினி என்ற 2 மகள்களும்,  2 -ஆவது மனைவிக்குக் கோபால் என்ற   மகனும் உண்டு.தன் மகனைக் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார்.  தன் தந்தை உருவாக்கிய தொழில் நிறுவனங்களைத் தற்போது இவர்தான் கவனித்துக் கொள்கிறார்.

1973 -ஆம் ஆண்டு இறுதியில் 80 வயது ஆனபோது ஜி.டி.நாயுடுவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.  வேலூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் சிகிச்சை பெற்றார். அதன் பிறகு கோவைக்கு திரும்பி வந்து வீட்டில் இருந்தவாரே சிகிச்சை பெற்றார். அப்போதைய  ஜனாதிபதி வி.வி.கிரி, மனைவி சரசுவதி அம்மாளுடன் கோவைக்கு வந்து அவரை பார்த்து உடல் நலம் விசாரித்தார்.
1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் நாள் அன்று அதிகாலையில் ஜி.டி.நாயுடு உடல் நிலை மோசம் அடைந்தது.  தீவிர சிகிச்சை அளித்தும்  சிகிச்சை பலன் இன்றி ஜி.டி.நாயுடு மரணம் அடைந்தார்.அரசியல் தலைவர்கள்,

தொழில் அதிபர்கள், முக்கிய
பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.


வாய்ப்புக் கிடைத்தால் அவரின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அருங்காட்சியகத்திற்குச் சென்று வாருங்கள். இது 1967 -ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.அவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள  இந்த நிரந்தர பொருட்காட்சி  அவருடைய அறிவுத்திறனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது !

தாங்கள் கண்ட வெற்றியைப் பிற்காலச் சமூகமும் பெற வேண்டும் என்று எண்ணி அதற்காக முயற்சிகள் மேற்கொள்பவர்கள் வெகு சிலரே. ஜி.டி.நாயுடு அந்த வெகு சிலரில் ஒருவர்.

1985  -ஆம்ஆண்டு "அப்பா" என்ற நூலாக இவரின் வாழ்க்கை அனுபவம் பதிவாகியது. ஜி.டி.நாயுடுவோடு பழகியவர்கள்,  சேகரித்த விபரங்கள் என்று மூன்று வருட முனைப்பில் இந்நூலை  சிவசங்கரி எழுதியுள்ளார்.
தொகுப்பு:

திருமதி.லூசியா லெபோ.

Aucun commentaire:

Enregistrer un commentaire