பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 28 février 2015

எண்ணப் பரிமாற்றம்

மனிதன் என்று "கடவுள்" என்ற மாபெரும் சக்தியை நம்பவும், அதனைப் புரிந்து கொள்ளவும், அதோடு இணைய வேண்டும் என்ற தாகம் கொள்ளவும் ஆரம்பித்தானோ அன்று முதல் இந்தத் தேடலும், எது அவசியம் என்ற கேள்வியும் பிறந்து விட்டன. எனவே சர்ச்சையும், கேள்வி-பதிலும், பல கோணங்களில் விவாதமும் கடவுளை ஒவ்வொரு ஆத்மாவும் கண்டடையும் வரைத் தொடரத்தான் செய்யும். அதில் இது ஓர் பார்வை. அவ்வளவே!


இதில் முதலாவதாக நாம் "ஆன்மிகம்" என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியதாகிறது. ஆத்துமம் என்று சொல்லப்படுகிற அறிவு (ஞானம்), அல்லது ஆவி, அதன் இயல்பு பற்றி அறிவது  என அகராதி சொல்கிறது. கடவுள் உருவமற்றவர், எந்த உருவிலும் தன்னை வெளிப்படுத்தும் சக்தி கொண்டவர் என்பதும், புனித ஆவி (esprit Saint) - (Holy Spirit) எனப் போற்றப்படுவதும் இந்த அடிப்படையில்தான்.

ஞானம், ஆவியின் இயல்பு என்னும்போதே அதனைப் புரிந்து கொள்ளக் கண்களோ, உடல் உறுப்புகளோ தேவையற்றவை  என்பது விளங்கி விடுகிறது. மனத்தால் உணர்ந்து, அறிவால் தெளிந்து, ஆவலால் இணையும் மறைபொருள் அது. அவரவர்க்குள் "அவர் அருளால்" ஏற்படும் விழிப்பு, அவரவர்க்கே தெரியும், புரியும். அதனால் தான் ஒருவர் அனுபவம் மற்றொருவரால் முழுமையாக அறிந்துகொள்ள முடியாததும், பின்பற்ற இயலாததுமாகிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாக கடவுள் என்பவர் விளக்கவொண்ணாப் புதிராக இருப்பதும் இக்காரணம் பற்றியே! பின் கோவில், அதில் தெய்வ உருவங்கள், அவர்களைப் போற்றச் சடங்குகள் என்பதெல்லாம் எதற்கு?

நாம் நம் உடலை ஆதாரமாக வைத்தே அனைத்தையும் உணர்கிறோம். நிலவின் அழகு, மலரின் மணம், பறவைகளின் கானம், கனியின் சுவை, தொடுமின்பம் அனைத்துமே நமது உடலைச் சார்ந்தே நமக்குப் புலனாகிறது. ஒரு சாமானியனுக்கு அது வழியாகத்தான் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் கண்ணுக்குத் தெரியும் வண்ணம் உருவும், அந்த உருவிலா சக்தியுடன் உறவாட பல்வேறு சடங்குகளும் ஏற்பட்டன. இறை அனுபவத்தின் முதல் படி இதுதான்.

பலருடைய தூய்மையான எண்ணங்களால் புனிதமானக் கோவிலில், இறைவன் வாசம் புரிகிறார்.  'அங்கே பூசை செய்து, வேதம் படித்து, இறைவனைப் புகழ்ந்து, அவன் நாமம் பாடி, தவமியற்றி, உண்மையாயிருப்போருக்குப் பொறாமையில்லை. காணிக்கையை அன்போடு அளிக்கையில், இச்செயல்கள் பக்தியில் தூய்மையை உருவாக்குகிறது' என்கிறார் திருமூலர். நாளடைவில் கடவுள் மீதான பற்றுத் தீவிரமாகி, எல்லாம் அவரிடமிருந்தே வருகின்றன என்று உணர வைத்து, தன்னைச் சரணடைய வைக்கிறது.

இவ்வாறு சரணடைந்தப் பிறகு அந்த ஆன்மா தனக்குள், தன் வாழ்வின் ஒவ்வொரு       வினாடியிலும்  இறைவனைக் கண்டு மகிழுமே தவிர, அதற்கு புறச்சடங்குகளோ, அல்லது தனி உருவோ தேவையற்றுப் போகிறது. வேண்டுமானால் அவை மகிழ்வுக்கான காரணங்கள் ஆகலாம். இதையே இயேசுபிரான் "தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்" என்கிறார். எல்லா மதங்களும் மனத் தூய்மையைத்தான் வலியுறுத்துகின்றன.

ஆன்மா இவ்வுடலில் இருக்கும் வரை, இவ்வுடலுக்குரியக் கடமைகளை அது நிறைவேற்றத்தான் வேண்டும். பக்தியின் பொருட்டு, கடமைகளை உதறுவது இறைவனின் விருப்பையே அவமதிப்பதாகும். ஏனெனில் இங்குள்ள சுக துக்கங்களையும், உறவுகளால் ஏற்படும் இன்ப துன்பங்களையும் அனுபவிக்கும் நேரத்தில் நாம் அவற்றைக் கைக்கொள்ளும் முறையில் மட்டுமே நாம் நீதிமான்களாக, வாழ்க்கையை நெறியோடு நடத்துகிறோமா என்பது விளங்கும். அதனால்தான் இயேசு "நீதியின் பொருட்டுத் துன்புறுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது" என்கிறார். 'கடமையைச் செய். பலனை எதிர் பார்க்காதே' என்கிறது கீதை.

அடுத்து கடமை என்பது எது, அதற்கும், பக்திக்கும் எவ்வகைத் தொடர்பு என சிந்தித்தல் நலம். ஒவ்வொருவர் சூழ்நிலைக்கேற்ப கடமைகள் மாறுபடும். பெற்றோருக்கு அடங்குதலும், கல்வி கற்றலும் குழந்தைகள் கடமை என்றால், அவர்களைப் பேணுவதும், நல்வழியில் வளர்ப்பதும் பெற்றோர் கடமை ஆகிறது. இதில் ஏற்படும் தொய்வுகள், பிரச்சனைகள் தீர இறைவனை நாடுவது அமைதியையும், மன பலத்தையும் அளிக்குமென்றாலும் அது "அவரை" நேசிப்பதற்கு சம்பந்தமில்லாதது என்பது புரியக்கூடிய ஒன்று.

பொது வாழ்வில் ஈடுபட்டவர்களுக்கு சமூக நலனும், துறவிகளுக்கு மக்கள் ஆன்ம நலனும் கடமை என்றால் அது வழியே அவர்கள் இறைவனை இன்னும் விரைவாக, எளிதாக அடைய வாய்ப்பிருக்கிறது என்பதுதான் உண்மையே தவிர 'அந்நிலையே' கடவுளைக் கண்டதாகி விடாது.

கடமைகளை நிறைவேற்றும்போது அவற்றில் முழுமையாக ஈடுபட்டால்தான் வெற்றி காண முடியும்.  எனவே சிந்தனையும், திறனும், காலமும் அதிலேயே மூழ்கித்தான் இருக்க முடியும்.  அப்படியானால் அது கடவுளை நெருங்கத் தடையானதா?! நிச்சயம் இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்டச் சூழ்நிலையில் நம்மைப் படைத்து, நமக்கெனச் சிலப் பொறுப்புக்களை அளித்த இறைவன், அவற்றை நாம் சரிவர நிறைவேற்றுவதை எங்ஙனம் மறுப்பார்?

அப்படியாயின் கடமைகளைப்  பூரணமாக நிறைவேற்றிக் கொண்டே, இறைசன்னிதியை உணர்வது எங்ஙனம்! அறியாமை நிறைந்த மனம் முதலில் தான் இருக்கும் சூழலும், தன் அனுபவங்களும் மட்டுமே எல்லாம் என எண்ணி அதிலேயே மூழ்கித்தான் கிடக்கும். அவ்வப்போது அதில் ஏற்படும் சங்கடங்கள் அதை விட்டு அப்பால் யோசிக்க வைக்கும்போது, மனம் பூரணத்துவத்தை நாடி தன்னையே பரிசீலிக்க வைக்கும். தன் குறைகள் தனக்கே விளங்கி, அதிலிருந்து மீளும். தாமரை இலைத் தண்ணீராக வாழ்வோடு ஒட்டாமல்  இந்த முழுமைக் காண விழையும் தாகம் தன்னையே எளிமையாக்கி, தன்னிலும் முழுமையான ஓர் சக்தியை நாடும்போது அங்கே இறைவன் குடி கொள்கிறார்!

"வழி மிக இடுக்கலானது" என்பது இச்சிக்கல்களைக் குறித்துச் சொல்லப்பட்டதே. இப்படி அனுபவத்தால் உயரும் ஆன்மா, ஒன்றுமில்லாது தன்னையே இழந்தபின், அங்கே இறை விருப்பே வாழ்வாகிறது. ஆனால் இந்த "ஏழை உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது"! உள்ளத்தால் ஏழையாகி எளிமை சுமக்கும் இதயம் "மகாத்மா" ஆகும்! 

திருமதி சிமோன்  

Aucun commentaire:

Enregistrer un commentaire